Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #9 – மதில்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #9 – மதில்கள்

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘கலைமகள்’ மாத இதழ், தொடக்கத்தில் தேசிய நோக்கையும் மரபான பண்பாட்டுப் பார்வையையும் வெளிப்படுத்தும் படைப்புகளோடு வெளிவந்தது. அப்போது, உ.வே.சா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, டி.கே.சிதம்பரநாத முதலியார், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எனப் பல எழுத்தாளர்கள் கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர். பிறகு, கலைமகள் படிப்படியாக தன்னைக் குடும்ப இதழாகத் தகவமைத்துக்கொண்டது. அந்தக் காலகட்டத்தில் அநுத்தமா, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், விந்தியா, சி.ஆர்.ராஜம்மா போன்ற பல எழுத்தாளர்கள் கலைமகளில் எழுதத் தொடங்கி, ‘கலைமகள் எழுத்தாளர்கள்’ எனக் குறிப்பிடத்தக்க அளவில் கலைமகளுக்குப் பெருமை சேர்த்தனர். இவர்களில் முக்கியமானவர் அநுத்தமா.

அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி. நெல்லூரில் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் தெலுங்கு வழியாகப் பயின்றார். சொந்த முயற்சியால் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். திருமணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று வெற்றியடைந்தார். இவருடைய எழுத்தார்வத்தைக் கண்டறிந்து தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்தவர் அவர் மாமனார். அநுத்தமா என்னும் புனைபெயரைச் சூட்டியதும் அவரே. 1949இல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் அநுத்தமா எழுதிய ‘மணல்வீடு’ என்னும் நாவல் முதல் பரிசு பெற்று வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கலைமகளில் அவர் ஏராளமான படைப்புகளை எழுதி வெளியிட்டார்.

குடும்ப உறவுகளின் சிக்கல்களை உளவியல் பார்வையோடு வெளிப்படுத்தியதில் அநுத்தமாவுடைய படைப்புகள் முக்கியமான பங்கு வகித்தன. அநுத்தமா கொண்டிருந்த உளவியல் ஆய்வுப்பார்வை, கதைப் பாத்திரங்களின் சார்பாக நின்று பேசாமல், கதைத் தருணத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சார்பற்றுச் சித்தரிக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியது. இது அவருடைய படைப்பின் மிகமுக்கியமான இலக்கியத்தகுதி. அநுத்தமா எழுதி வெளிவந்த இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் ‘ஒரே ஒரு வார்த்தை’ மிகவும் முக்கியமான நாவல். அந்த நாவலை 1950ஆம் ஆண்டில் அமுதநிலையம் பதிப்பகம் வெளியிட்டது.

0

ஒரு திருமண மண்டபத்திலிருந்து நாவலின் கதை தொடங்குகிறது. சென்னையில் கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த சந்திரசேகர் என்னும் இளைஞனுக்கும் இன்டர்மீடியட் படித்த சரோஜா என்னும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. சீதாராமையர்–பாகீரதி அம்மாள் இணையரின் மகன் சந்திரசேகர். சாமிநாத ஐயர்–சாவித்திரி அம்மாள் இணையரின் மகள் சரோஜா. சந்திரசேகருக்கு லட்சுமி என்கிற அக்கா இருக்கிறாள். திருமணமானவள். திருமண வயதில் அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் நளினி. சரோஜாவுக்கு சின்னு என்றொரு தம்பியும் சிவராமன் என்கிற அண்ணனும் இருக்கிறார்கள். அண்ணன் திருமணமானவன். அவன் மனைவியின் பெயர் சரஸ்வதி.

சொந்தபந்தங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க, மிகுந்த உற்சாக ஆரவாரத்துடன் திருமணம் இனிதே நடைபெறுகிறது. மண்டபத்தில் நிறைந்திருந்த எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சிகளைப் பரவியிருக்கிறது. ஆனால் ஒரே ஒருவருக்கு மட்டும் அத்திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை. அவர் சந்திரசேகரின் அக்கா லட்சுமி. ஒருகணம் மணமேடையின் பக்கம் பார்ப்பதும் மறுகணமே பொறாமையுடன் பெருமூச்சு வாங்கியபடி முகத்தைத் திருப்பிக்கொள்வதுமாக நின்றிருக்கிறாள் அவள்.

தன் மகள் நளினி உட்கார்ந்திருக்க வேண்டிய மணமேடையில் இன்னொருத்தி உட்கார்ந்திருப்பதை அவள் மனம் ஏற்க மறுக்கிறது. தன் மகளை தன் தம்பிக்கு மனைவியாக்கி, தன் அம்மாவுக்கு சம்பந்தியாக வாழலாம் என அவள் கொண்டிருந்த நம்பிக்கை கண்முன்னாலேயே சரிந்துபோவதை அவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. தன் கனவுக்கோட்டை இடிந்து விழுவதை ஒருவித ஆத்திரத்துடன் பார்க்கிறாள்.

நளினியைத் திருமணம் செய்துகொள்வதைப்பற்றி சந்திரசேகருடன் நேரிடையாகவே சாதாரணமான குடும்ப உரையாடலின் போக்கில் லட்சுமி தெரிவித்திருக்கிறாள். ஆனால் பிறந்ததுமுதல் ஒரு தங்கையைப்போல நினைத்து ஒரே வீட்டில் பழகிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள தன் மனம் இடம் தரவில்லை என அவன் வெளிப்படையாகவே கூறிவிடுகிறான். அத்தருணத்தை மீண்டும் மீண்டும் நினைத்து பொறாமையிலும் வேதனையிலும் மனம் கொதிக்கிறாள் லட்சுமி. இரையை இழந்த புலியைப்போல உள்ளூரப் பொருமத் தொடங்குகிறாள்.

0

மாப்பிள்ளை விருந்துக்காக சரோஜாவின் வீட்டில் தங்கியிருக்கும் சந்திரசேகர், அக்குடும்பத்தில் வசிக்கும் அனைவரும் வயது வித்தியாசமின்றி அன்போடு நெருங்கி உரையாடுவதையும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறான். அந்த வீட்டு நிலையையும் தன்னுடைய வீட்டு நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமூச்சு விடுகிறான். ‘இந்த வீட்டில் இருப்பதுபோல அந்த வீட்டின் நிலைமை இருக்காது’ என்று வெளிப்படையாகவே சரோஜாவிடம் எடுத்துச் சொல்கிறான் அவன். தன் பொறுமையாலும் விட்டுக் கொடுத்துச் செல்லும் குணத்தாலும் புகுந்த வீட்டையும் தன் பிறந்த வீட்டைப்போல மாற்றிவிடலாம் என தன்னம்பிக்கையுடன் நினைத்துக்கொள்கிறாள் சரோஜா.

இரண்டுமூன்று மாதங்களுக்குப் பிறகு சந்திரசேகரும் சரோஜாவும் சென்னையில் தனிக்குடித்தனம் தொடங்குகிறார்கள். அப்போது சீதாராம ஐயரும் பாகீரதியும் லட்சுமியும் அங்கே இருக்கிறார்கள். சீதாராம ஐயர் மருமகளின் உபசரிப்பில் உருகுகிறார். அவளைத் தன் மகளாகவே நினைத்து அன்பைப் பொழிகிறார். ஆனால் லட்சுமியும் பாகீரதியும் அவளைக் கண்டாலே எரிந்து விழுகிறார்கள். காரணமே இல்லாமல் வசைமழை பொழிகிறார்கள். பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தி வம்புக்கு இழுக்கிறார்கள். அவர்களுடைய தந்திரத்தைப் புரிந்துகொள்ளும் சரோஜா, எவ்விதமான பதில் பேச்சையும் பேசாமல் அமைதி காத்து ஒவ்வொருமுறையும் அவர்களுடைய தந்திர வலையிலிருந்து தப்பித்துவிடுகிறாள்.

சரோஜாவைப் பார்க்கும்போதெல்லாம் அவள் தன் தம்பியைத் தட்டிப் பறித்துக்கொண்டவள் என்கிற எண்ணமே அவள் நெஞ்சில் இயல்பாக மேலெழுந்து வந்து லட்சுமியைப் பித்துறச் செய்கிறது. தன் வெற்றிக்காக அக்குடும்பத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் குழப்பங்களை உருவாக்கவும் யார்மீது வேண்டுமானாலும் பழி சுமத்தவும் அவள் தயாராகவே இருக்கிறாள். தன் வெற்றியைச் சாத்தியப்படுத்திக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவள் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்கிறாள்.

அற்பமான ஒரு செய்தியை ஊதி ஊதிப் பெரிதாக்கி, அவள்மீது பழி சுமத்தி, எப்படியாவது அந்தச் செய்தியை சந்திரசேகரனின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுவிடவேண்டும் என அவள் அல்லும் பகலும் திட்டமிட்டபடி இருக்கிறாள். சந்திரசேகரின் மனத்தில் சரோஜாவைப்பற்றிய ஒரு வெறுப்புணர்வை எப்படியாவது விதைத்துவிட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறாள். ஆயினும் அதற்கு கிஞ்சித்தும் இடமளிக்காதபடி சரோஜா பக்குவமாக நடந்துகொள்கிறாள்.

சரோஜாவின் அமைதியும் நிம்மதியும் தாயையும் மகளையும் நிலைகுலைய வைக்கின்றன. ஒருநாள் கோபத்தின் உச்சத்தில் ‘எப்படியாவது அவளை வாழாவெட்டியாக்கி வீட்டைவிட்டுத் துரத்திவிட்டு என் பெண்ணையே சந்திரசேகருக்குக் கல்யாணம் செய்து கொடுக்காவிட்டால் என் பெயர் லட்சுமியே இல்லை’ என்று தன் தாயின் முன்னிலையில் சபதம் செய்கிறாள் லட்சுமி.

ஒருநாள் பாகீரதியும் லட்சுமியும் ஏதோ உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அந்த உரையாடல் எங்கோ தொடங்கி, எங்கோ திரும்பி, தன் மகள் நளினியைத் தன் தம்பிக்குத் திருமணம் செய்துவைக்கும் சபதத்தில் வந்து நின்றுவிடுகிறது. ஆவேசத்துடன் அந்தச் சபதத்தையே மீண்டும் மீண்டும் சொல்கிறாள் அவள். தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் சந்திரசேகர் அச்சொற்களைக் கேட்டு மனமுடைந்து விடுகிறான். தன் அக்காவின் கீழ்மையான எண்ணத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அவமானமாக இருக்கிறது. அதற்குப் பிறகு அவளோடு உரையாடுவதையே நிறுத்திவிடுகிறான். ஆயினும் அவளுடைய தந்திர எண்ணம் தனக்குத் தெரியும் என்பதை அவளுக்கு உணர்த்தவேண்டும் என நினைத்து, அவளை ரயிலேற்ற ரயில்நிலையத்துக்குச் சென்ற சமயத்தில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு நேரிடையாகவே தெரிவித்துவிட்டு நிலையத்தைவிட்டு வெளியேறிவிடுகிறான்.

0

தன் தம்பிக்கு நளினியை மணந்துகொள்வதில் நாட்டமில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும்கூட, லட்சுமிக்கு தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள மனமில்லை. அந்த ஒற்றை விருப்பத்திலேயே அவள் மனம் உழன்றபடி இருக்கிறது. கால ஓட்டத்தில் நளினியே அந்த எண்ணத்திலிருந்து வெளியேறி இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும்கூட, லட்சுமியால் அந்த எண்ணத்தை உதறமுடியவில்லை.

லட்சுமியின் கணவர் கிருஷ்ணசாமி ஐயர் அலைந்து திரிந்து இராமமூர்த்தி என்கிற இளைஞனைத் தேடிக் கண்டடைகிறார். ஜாதகப் பரிமாற்றத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாரை பெண் பார்ப்பதற்காக வீட்டுக்கு வரவழைக்கிறார். பெண்ணைப் பார்த்ததுமே மாப்பிள்ளைக்குப் பிடித்துவிடுகிறது. மாப்பிள்ளை வீட்டாருக்கும் பிடித்துவிடுகிறது. பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்துவிடுகிறது.

அந்தக் குடும்பத்தில் அத்திருமண ஏற்பாட்டில் லட்சுமிக்கு மட்டும் விருப்பமில்லை. அந்தத் திருமண முயற்சியை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவள் மனம் பல விதமாகத் திட்டமிடுகிறது. இறுதியாக அவளுடைய தந்திரமே வெல்கிறது. ஒரு போலிக்கடிதம் வழியாகவும் போலியான வதந்திகள் வழியாகவும் நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்திவிடுகிறாள். ஒரு தாயே மகளுடைய திருமணத்துக்குத் தடையாக நிற்கிறாள்.

பல மாதங்களுக்குப் பிறகு தற்செயலாக அனைவருக்கும் உண்மை தெரிய வருகிறது. சென்னையிலேயே நடைபெற்ற ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்த சமயத்தில், சந்திரசேகர் தற்செயலாக மாப்பிள்ளையைச் சந்தித்து உரையாடுகிறான். அப்போதுதான் உண்மையில் நடந்ததென்ன என்பதை முற்றிலும் அறிந்துகொள்கிறான். தன் அக்காவின் பொறாமையை நினைத்து வேதனைப்படுவதா, அல்லது அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் தவிக்கிறான். பிறகு இரு தரப்பினரிடமும் பேசி, நளினி – இராமமூர்த்தி திருமணத்தை அவனே முன்னின்று நடத்திவைக்கிறான்.

0

சந்திரசேகர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபடியே வேதியியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். கல்லூரியிலிருந்து திரும்பியதுமே, அவன் மனம் ஆய்வையொட்டிய சிந்தனைகளில் மூழ்கிவிடுகிறது. சிந்தனை, ஆய்வு, எழுத்து ஆகியவற்றுக்கு அப்பால் அவன் மனம் செல்லவில்லை. மாலை வேளைகளில் புதுமனைவியைக் கடைத்தெருப் பக்கமோ அல்லது கடற்கரைப் பக்கமோ அழைத்துச் சென்று உல்லாசமாக உரையாடிவிட்டுத் திரும்பவேண்டும் என்கிற எண்ணம்கூட அவனிடமிருந்து வெளிப்படுவதில்லை. பல நேரங்களில் இரவுணவை முடித்துக்கொண்டு மீண்டும் படிப்பு மேசைக்கே திரும்பிவிடுகிறான்.

கணவனுடைய நெருக்கத்துக்கும் இதமான உரையாடலுக்கும் அன்புக்கும் ஏங்கும் சரோஜா, அவன் நடவடிக்கைகளையெல்லாம் புரிந்துகொண்ட பிறகு, தன் ஆசைகளையெல்லாம் ஆழ்நெஞ்சிலேயே புதைத்துக்கொள்கிறாள். ஒருநாளும் அவற்றை வெளிப்படுத்தி அவனைச் சங்கடத்தில் ஆழ்த்துவதில்லை. எல்லா நேரங்களிலும் ஆய்வைப்பற்றிய நினைவுகளிலேயே மூழ்கியிருப்பதால் வேறு எண்ணங்களுக்கு இடமளிக்க இயலாத சூழலில் அவன் இருக்கிறான் எனத் தனக்குத்தானே சொல்லிகொண்டு அமைதியடைகிறாள்.

நாள்முழுதும் வீட்டில் தனிமையில் இருக்கும் ஒருத்தியிடம் கல்லூரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியதுமே எப்படிப் பொழுது கழிந்தது என ஆர்வத்தோடும் ஆசையோடும் கேட்கவேண்டும் என்கிற எண்ணம்கூட அவனிடம் இருப்பதில்லை. ஆய்வைப்பற்றிய சிந்தனைக்கு மட்டுமே அவன் நெஞ்சில் இடமிருக்கிறது.

அவன் செயல்பாடுகளும் கட்டற்ற அமைதியும் பல நேரங்களில் துயரத்தை அளித்தாலும், அவன் தன் ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டுப் பட்டம் பெற்றால், அது தனக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் செயல்தானே என நினைத்து அமைதியடைந்துவிடுகிறாள் சரோஜா. பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் என எதுவுமே அந்த வீட்டில் நிகழவில்லை. அவன் அதைப்போன்ற சின்னச்சின்ன சந்தோஷத்துக்குரிய தருணங்கள் எதையும் நினைவிலும் வைத்துக்கொள்வதில்லை. நினைவூட்டினாலும் அதையெல்லாம் பெரிதாகக் கொண்டாடும் மனநிலையிலும் இருப்பதில்லை. ஆய்வு ஒன்று மட்டுமே அவன் நெஞ்சில் பேருரு கொண்டு நிறைந்து நிற்கிறது.

சிறிய வயதுக்காரி என்றபோதும் அதையெல்லாம் சரோஜா பெருந்தன்மையோடு புரிந்துகொள்கிறாள். அவனுடைய லட்சியத்துக்குத் துணையாக இருக்கவேண்டுமே தவிர, தடையாக இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். எப்போதாவது ஒருமுறை கிடைக்கும் நெருக்கத்தையே மாபெரும் அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கிறாள் சரோஜா. அவளுடைய காதல் உள்ளம், எதையும் எதிர்பார்க்காமல், கிடைப்பதில் முழு மகிழ்ச்சியையும் காண நினைக்கிறது. அதையே நிறைவளிக்கும் அனுபவமாகவும் உணர்கிறது. இரண்டாண்டு காலம் இப்படியே கழிந்துபோகிறது.

0

அவளுடைய பொறுமை, அமைதி, எதையும் நேர்நிலையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாமே நொறுங்கிவிழும் ஒருநாள் அவர்கள் வாழ்விலும் வந்து சேர்கிறது. அவர்களுடைய இன்பவாழ்வின் அடையாளமாக அவள் கருவுறுகிறாள். அவள் உடலளவிலும் மனத்தளவிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதையெல்லாம் கவனித்து அவன் தானாகவே நெருங்கி வந்து ஏதேனும் விசாரிக்கக்கூடும், அப்போது வெட்கத்தோடு தாய்மையடைந்திருக்கும் செய்தியைச் சொல்லி அவனை ஆனந்தத்தில் தத்தளிக்கவைக்கவேண்டும் என்றெல்லாம் கற்பனைக்கோட்டை கட்டிவைக்கத் தொடங்குகிறாள்.

ஒரு நாளல்ல, இரு நாளல்ல, ஏறத்தாழ இரு மாதங்களே முடிய இருக்கிற நிலையில் கூட அப்படி ஒரு கேள்வியை அவன் கேட்கவே இல்லை. காலையில் எழுந்து சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்குச் செல்வது, மாலையில் திரும்பியதும் மேசை நிறைய புத்தகங்களை விரித்துவைத்துக்கொண்டு குறிப்புகளை எடுப்பது, பிறகு அவற்றையெல்லாம் விரித்து எழுதுவது, எழுதியவற்றைத் தட்டச்சு செய்வது, வாசிப்பு அறையில் இருக்கிற கட்டிலிலேயே உறங்கிவிடுவது என அவனுடைய தினசரிச் செயல்பாடுகள் சுருங்கிவிடுகின்றன. சாதாரணமான சொற்களைக் கடந்து சரோஜாவிடம் உரையாடுவதுகூட குறைந்துவிடுகிறது. அதை அப்பாவித்தனம் என எடுத்துக்கொள்வதா அல்லது புறக்கணிப்பு என எடுத்துக்கொள்வதா எனத் தெரியாமல் அவள் குழம்பித் தவிக்கிறாள்.

அவளுடைய முகமாற்றத்தையும் உடலில் திகழும் மாற்றத்தையும் கண்டு அடுத்த வீட்டில் வசிக்கும் தோழிகள்கூட அவள் தாய்மையடைந்திருப்பதைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு வாழ்த்துகிறார்கள். தம் வீட்டில் எதையோ சமைத்து எடுத்துவந்து அவளுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள். சின்னச்சின்ன உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால் அந்த வீட்டில் அவளுக்கென இருக்கிற ஒரே துணையான அவள் கணவன் ஒரே ஒரு வார்த்தைகூட அவள் கருவுற்றிருப்பதைப்பற்றி விசாரிக்கவில்லை. அந்த அமைதி அவளைப் பெரிதும் வாட்டியெடுக்கிறது.

ஒருவேளை, கருவுற்றிருக்கும் செய்தி தெரியாததால்தான் இப்படி நடந்துகொள்கிறானோ என்று சரோஜா நினைக்கிறாள். தெரிந்தால், அவன் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும், தன்னைத் தூக்கிச் சுமந்து அன்பு மழையில் நனையவைக்கக்கூடும் என்றெல்லாம் கற்பனை செய்கிறாள்.

அப்போதும் அவனிடம் நேராகச் சொல்வதற்கு அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. அதனால் அந்தச் செய்தியை முதலில் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவிக்கிறாள். தன் கணவரை வாழ்த்தும் விதமாக அவர் ஒரு கடிதம் எழுதி அவருக்குத் தெரிவிக்கவேண்டும் என்றும் அவள் குறிப்பிடுகிறாள். அவள் கடிதம் கிடைத்த அன்றே, அவர் சந்திரசேகர் பெயருக்கு ஒரு கடிதம் எழுதி வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.

அவள் திட்டமிட்டபடியே ஒருநாள் அவளுடைய அப்பா எழுதிய கடிதம் வீட்டுக்கு வந்து சேர்கிறது. அக்கடிதத்தை அவனுடைய படிப்புமேசையில் வைக்கிறாள் சரோஜா. அன்று மாலையில் அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்து காப்பி அருந்தும் வேளையில் அக்கடிதத்தைப் பிரித்துப் படிப்பான் என அவள் நினைக்கிறாள். செய்தியைத் தெரிந்துகொண்டதும் ஆனந்தத்துடன் தன்னை அழைத்துத் தழுவிக்கொள்ளக் கூடும் என அவளுடைய கற்பனை சிறகடித்துப் பறக்கத் தொடங்குகிறது.

அன்று மாலை அவன் கல்லூரியிலிருந்து வருகிறான். வழக்கம்போல தன் படிப்பு மேசைக்கு அருகில் அமர்கிறான். அவனுக்கு காப்பி கலந்து எடுத்துச் சென்று கொடுக்கிறாள் சரோஜா. காப்பி அருந்தியபடி மேசை மீது வைக்கப்பட்டிருந்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான். சரோஜா கருவுற்றிருக்கும் செய்தியையும் படிக்கிறான். படித்ததும் அவன் முகத்தில் ஒருவித சலிப்பு படர்வதை அவள் பார்த்துவிட்டு, நம்பமுடியாதவளாகத் திகைத்து நிற்கிறாள். ‘போ… இது வேறு வந்துவிட்டதோ? நான் இப்போதுதான் ஒரு முக்கியமான ஆய்வு வேலையைத் தொடங்கினேன். இந்த நேரத்தில் இப்படியா?’ என்று சலித்துக்கொண்டபடி எழுந்து சென்றுவிடுகிறான் சந்திரசேகர். சரோஜாவின் மனத்தில் ஒரு பேரிடி விழுந்ததைப்போல இருக்கிறது. ஒரு பெரிய பாறாங்கல் எங்கிருந்தோ உருண்டு வந்து இதயத்தின் மீது விழுந்து நசுக்கியதைப்போல இருக்கிறது. தன்னை மட்டுமல்ல, தன் குழந்தையையும் சந்திரசேகர் அவமானப்படுத்திவிட்டான் என அக்கணத்தில் அவளுக்குத் தோன்றுகிறது.

கடந்த காலத்தில், அவன் பல விஷயங்களைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல் செல்வதை அவள் பெருந்தன்மையோடு மறந்து அவனோடு எப்போதும் இயல்பாக இருப்பதையே நடைமுறைப்பழக்கமாகக் கடைபிடித்து வந்தாள். முதன்முறையாக, தான் கருவுற்றிருக்கும் செய்தியைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு அவன் எழுந்து செல்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் உடைந்துபோகிறாள். ‘நான் இருந்தாலும் ஒன்றுதான், போனாலும் ஒன்றுதான் என அவர் நினைக்கிறார் போலும்’ என்றெல்லாம் அவள் மனம் நினைக்கத் தொடங்குகிறது.

0

தான் செய்த தவறு என்ன என்பதை சந்திரசேகர் கடைசிவரை புரிந்துகொள்ள முயற்சி செய்யவே இல்லை. தன் ஆய்வு வேலைக்கு இடையூறு செய்ய வந்த ஒன்றாகவே அந்தக் குழந்தையை நினைக்கிறான். வழக்கம்போல எல்லாவற்றையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு சிரித்த முகத்தோடு நெருங்கிவந்து பழகும் சரோஜா அமைதியாக அவனைவிட்டு ஒதுங்கிச் செல்வதைப் பார்த்து அவன் குழம்புகிறான். பல சமயங்களில் கோபத்தில் எரிந்து விழுகிறான். அப்போதுகூட தன் தவற்றை உணர்வதற்கு மாறாக, மனைவியின் மீதே குற்றம் சுமத்துகிறான். அவளை முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தொடங்குகிறான். இன்னொரு பக்கம் தன் ஆய்வு வேலையையும் ஒழுங்காகப் பார்க்காமல் எங்கோ பாதை தப்பிய வழிப்போக்கனைப்போல அலையத் தொடங்குகிறான். அதற்கிடையில் பிரசவத்துக்கு முந்தைய சடங்குமுறைக்காக சரோஜா தாய்வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல நேர்கிறது.

தாய்வீட்டுக்குச் சென்ற சரோஜா ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையைச் சுமந்திருந்த காலம் முழுவதும் அவள் தீராத மன உளைச்சலில் மூழ்கியிருந்ததாலும் சத்துப் பற்றாக்குறையாலும் அவள் உடலும் மனமும் பலவீனமடைந்திருக்கின்றன. அவளைச் சோதித்துப் பார்க்கும் மருத்துவர் அவளுடைய இதயமும் வலிமையிழுந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். ஒருபக்கம் இதய நோய், இன்னொரு பக்கம் இதயத்தின் அடியில் தீராத வேதனை என்னும் நோய் என இருவிதமான நோய்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறாள் சரோஜா.

குழந்தையைப் பார்க்க வந்த சந்திரசேகரைப் பழைய புன்னகையோடு வரவேற்க சரோஜாவின் மனம் இடம் தரவில்லை. ஒருவித வறட்சியான புன்னகையுடன் வரவேற்கிறாள். சரோஜாவின் பாராமுகத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என அவனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள முனையவில்லை. அவளிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முனையவில்லை. மீண்டும் அவள் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் படரச் செய்யவேண்டும் என்று எந்த எண்ணமும் அவன் நெஞ்சில் தோன்றவில்லை. அதற்கான முயற்சியையும் அவன் எடுப்பதில்லை. மாறாக, குழந்தையிடம் மட்டும் செல்லமாகக் கொஞ்சிப் பேசிவிட்டு ஊருக்குப் புறப்பட்டுவிடுகிறான். முன்புபோல சந்திரசேகரும் சரோஜாவும் கலகலப்பாக இல்லை என்பதை வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே நேருக்கு நேர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் அந்த மௌனத்தைக் கலைக்க அவர்களில் ஒருவரும் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

ஓர் ஆண்டுக்குப் பிறகு குழந்தை வளர்ந்துவிடுகிறது. புகுந்த வீட்டுக்கு குழந்தையோடு வந்து சேர்கிறாள் சரோஜா. அவளுடைய உடல்நிலையும் மனநிலையும் அவளைப் பெரிதும் பலவீனமாக்கிவிடுகின்றன. ஒவ்வொரு கணமும் அமைதியற்றவளாக அந்த வீட்டில் நடமாடுகிறாள் அவள். கணவனின் வீட்டிலேயே குழந்தையை விட்டுவிட்டு, ஓய்வுக்காக சில நாட்கள் தாய்வீட்டுக்கு வருகிறாள். ஆனால் இரண்டுமூன்று வாரங்களை மட்டுமே அவளால் அங்கு கழிக்கமுடிகிறது. குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் மீண்டும் புகுந்த வீட்டுக்குச் செல்கிறாள்.

குழந்தையைப் பெயர் சொல்லி அழைத்தபடி, மாடியறையை நோக்கிச் செல்கிறாள் சரோஜா. உடல் பலவீனத்தின் காரணமாக ஒவ்வொரு படியாகத்தான் அவளால் ஏறிச் செல்லமுடிகிறது. கதவைத் திறந்துகொண்டு அறையிலிருந்து வெளிப்பட்ட குழந்தை, சரோஜாவைப் பார்த்த வேகத்தில் தானாகவே இறங்க முற்படும்போது கால் தடுமாறி கீழே உருண்டு விழுகிறது. ஐயோ என அலறியபடி, குழந்தையைப் பிடிக்க கைநீட்டுகிறாள் அவள். உடல் பலவீனத்தின் காரணமாக கால் தடுமாறி அவளும் படிக்கட்டில் உருண்டு கீழே விழுகிறாள். கீழே விழுந்த அதிர்ச்சி நீங்கியதும் குழந்தை எழுந்து உட்கார்ந்துவிடுகிறது. ஆயினும் அதிர்ச்சி நீங்காமல் மயக்கமடைந்த சரோஜா மருத்துவ மனையில் ஆபத்தான கட்டத்தில் சேர்க்கப்படுகிறாள்.

சரோஜாவுக்கு மாற்றுடைகளை எடுத்துச் செல்வதற்காக வீட்டுக்கு வருகிறாள் நளினி. ஆடைகள் வைக்கப்பட்டிருந்த அவளுடைய பெட்டியைத் திறக்கும்போது, ஆடைகளுக்கிடையில் வைக்கப்பட்டிருந்த டயரி நோட்டுகளைப் பார்க்கிறாள். ஏதோ ஒரு ஆவல் உந்த ஒரு நோட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறாள். ஒவ்வொரு பக்கத்திலும் சரோஜா தன் மன உளைச்சலைக் குறித்துவைத்திருப்பதைப் படித்துவிட்டு துயரமடைகிறாள். அவளுடைய எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் படிக்கப்படிக்க அவள் மனமும் பாரமடைகிறது.

ஆடைகளோடு திரும்பிய நளினி அந்த டயரி நோட்டுகளை சந்திரசேகரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்கிறாள். அதைப் படித்துவிட்டு சந்திரசேகர் தன் தவறை உணர்ந்து முதன்முறையாக மனம் கலங்குகிறான். சரோஜா கண் விழித்ததும் அவளிடம் மனம் திறந்து தன்னை மன்னித்துவிடும்படி ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லவேண்டும் என அவன் நினைக்கிறான். அதற்கு வழியற்றுத் தவிக்கிறான்.

மருத்துவமனைக் கூடத்தில் அவனைப்போலவே பிறரும் சரோஜாவிடம் மனம் திறந்து பேசவேண்டும் என நினைக்கிறார்கள். பாகீரதி அம்மாள் தான் இதுவரை இழைத்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தமாக சரோஜாவை தன் இமைக்குள் வைத்துப் பாதுகாப்பது உறுதி என்பதைத் தெரிவிக்க நினைக்கிறாள். சிவராமனும் சரஸ்வதியும் அவளிடம் திறந்த மனத்துடன் ஒரு வார்த்தை பேசி அவளுடைய மனக்குறையைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமைக்கு வருந்துகிறார்கள். கிருஷ்ணசாமி ஐயரும் சாமிநாத ஐயரும் சின்னஞ்சிறியவர்கள் விவகாரத்தில் தலையிடுவது வேண்டாம் எனக் கருதாமல் தக்க நேரத்தில் தலையிட்டுத் தடுக்கவேண்டிய கடமையிலிருந்து பிறழ்ந்துவிட்டதற்காக வருந்துகிறார்கள்.

அதலபாதாளத்தை நோக்கி உருண்டு செல்லும் ஒரு பந்து வழியிலுள்ள பல கற்களில் இடித்துக்கொண்டாலும் அவற்றால் தடைபட்டு நிற்காமல் வேகமாகச் சென்றுகொண்டே இருப்பதுபோல, சரோஜாவின் வாழ்க்கையில் உரிய நேரத்தில் ஒரே ஒரு வார்த்தைகூட சொல்வதற்கு ஒருவரும் இல்லாததால் பாதாளத்தை நோக்கி உருண்டுகொண்டிருக்கிறது. மருத்துவமனைக் கூடத்துக்கு வெளியே நின்று, மூடியிருக்கும் கதவைப் பார்த்தபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசனையில் மூழ்கியிருக்கிறார்கள்.

0

அநுத்தமா தன் கதைக்குரிய தளமாக குடும்பத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட போதும், அவர் உண்மையில் ஓர் உளவியலாளரின் கோணத்தில் மனித மனங்களின் நெருக்கடிகளையும் உறவுகளிடையில் நிலவும் மறைமுக வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் மன உளைச்சல்களையும் சித்தரிப்பதையே தன் எழுத்தின் வழியாகக் கொண்டிருக்கிறார். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ‘ஒரே ஒரு வார்த்தை’ நாவல். இல்லற வாழ்க்கையில் பெண்கள் அனுபவிக்கும் அழுத்தங்களையும் நுட்பமான புறக்கணிப்புகளையும் சித்தரிப்பதில் அநுத்தமா கொண்டிருந்த தேர்ச்சியே, எழுத்துலகில் அவருக்கென தனித்ததொரு இடம் உருவாவதற்குக் காரணமாகும்.

நாவலின் தொடக்கத்தில் சந்திரசேகரின் தவறுகளையும் மறதிகளையும் பொருட்படுத்தாமல் அன்பு பாராட்டுகிறவளாகவே இருக்கிறாள் சரோஜா. அனைத்தையும் மகிழ்ச்சியோடு மன்னிக்கிறவளாகவும் இருக்கிறாள். அன்பினால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்க்கையை ஆனந்தமயமானதாக வாழத் தெரிந்தவளாகவே இருக்கிறாள். வேலைமீது அவன் கொண்டிருக்கும் அதீத ஆர்வத்தின் விளைவாகவே அவற்றையெல்லாம் கருதி அந்தந்தக் கணத்திலேயே அனைத்தையும் மறக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவளாகவே இருக்கிறாள்.

ஆனால், கருவுற்றிருக்கும் செய்தியைக் கேட்டதும் ஒரு கணவனிடம் இயல்பாக வெளிப்பட்டிருக்கவேண்டிய மகிழ்ச்சிக்குப் பதிலாக முகம் சுளித்தபடி, சலிப்பும் சங்கடமுமான சொற்களை அவன் சொன்ன கணத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. ஆய்வு மீதான ஆர்வம் அதன் எல்லையை மீறி அவனிடம் ஒரு தன்னலமாக குடியேறியதன் அடையாளமே அவன் சொன்ன சொல். சொல்லப்பட்ட அந்த ஒரு சொல் கண்ணுக்குத் தெரியாத மதிலாக நின்றுவிட்டது. தெரியாமல் உருவாகிவிட்ட மதிலை இடித்து தரைமட்டமாக்குவதற்கு மாறாக இருவரும் அந்த மதிலின் உயரத்தைப் பெரிதாக்கிக்கொண்டே சென்றுவிட்டனர்.

0

அநுத்தமாவின் எழுத்தாளுமைக்குச் சான்றாக, இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள் குறிப்பிடப்படவேண்டியவை. திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட, சரோஜா தாய்வீட்டிலேயே இருக்கிறாள். சில நாட்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து முதல் பயணமாக மாப்பிள்ளை சந்திரசேகர் அந்த வீட்டுக்கு வருகிறான். வீட்டில் இருந்த அனைவரும் மாப்பிள்ளையை மகிழ்ச்சியோடு வரவேற்று மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்துச்சென்று உட்காரவைக்கிறார்கள். வெட்கத்தின் காரணமாக அவனை வரவேற்க வாசலுக்குச் செல்லாமல் அறையிலேயே அமர்ந்திருக்கிறாள் சரோஜா.

உரையாடல், காபி உபசாரம் எல்லாம் முடிந்த பிறகு ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேறுகிறார்கள். ஏறக்குறைய ஆரவாரம் அடங்கிய பிறகு, அவனைச் சந்திக்கும் ஆவலோடு சரோஜா தன் அறையைவிட்டு வெளியே வந்து சந்திரசேகர் தங்கியிருந்த மாடி அறைக்குச் செல்ல ஒவ்வொரு படியாக ஏறுகிறாள். ஒவ்வொரு படி ஏறும்போதும் அவளுக்குத் தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை அப்போதுதான் ஆரம்பிக்கிறோம் என்கிற உணர்ச்சியால் அவள் மனம் ததும்பியபடி இருக்கிறது. அந்தக் காட்சியை அப்படித்தான் எழுதியிருக்கிறார் அநுத்தமா.

நாவலின் இறுதியிலும் இதேபோன்ற மாடிப்படிக்கட்டு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அக்காட்சியும் அதே மாடிப்படிக்கட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. வெளியே சொல்லமுடியாத வேதனையோடும் கசப்போடும் சந்திரசேகரும் சரோஜாவும் ஆளுக்கொரு பக்கம் பேச்சுவார்த்தையற்று நடமாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் அந்தச் சம்பவம் நிகழ்கிறது.

உடல்நலம் குன்றிய நிலையில் தாய்வீட்டில் சிறிதுகாலம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு புகுந்த வீட்டுக்கே திரும்பி வந்திருக்கிறாள் சரோஜா. இடைப்பட்ட நாட்களில் மகனைப் பிரிந்திருந்த காரணத்தால் வீட்டுக்குள் நுழைந்ததுமே அவள் கண்கள் மகனைத் தேடுகின்றன. அவன் மாடியில் இருப்பதாகச் சொல்கிறாள் நளினி. மகனைக் காணும் ஆவலில் குழந்தையைப் பெயர் சொல்லி அழைத்தபடி உடல்நலிவை மறந்து ஒவ்வொரு படியாக ஏறி மாடியை நோக்கிச் செல்கிறாள்.

அவள் குரலைக் கேட்டு அறையிலிருந்து ஓடி வந்த மகன் அவள் கையைப் பற்றிக்கொள்ளும் ஆவேசத்தில் தாவும்போது கால் தடுமாறி படிக்கட்டில் உருண்டு சென்று கீழே விழுகிறான். உருண்டுவரும் குழந்தையைக் காப்பாற்ற நின்ற இடத்திலிருந்து கைநீட்டியபடி தாவுகிறாள் சரோஜா. மனத்தின் வேகத்துக்கு இசைவாக பலவீனமான உடலால் இயங்கமுடியவில்லை. அடுத்த கணமே வெட்டுண்ட மரம்போல பின்புறமாகக் கீழே சாய்ந்து படிக்கட்டில் உருண்டு விழுகிறாள். முதல் அதிர்ச்சி தீர்ந்தவுடன் குழந்தை எழுந்து அம்மாவின் மார்பில் சாய்ந்துகொள்கிறது. விழுந்த அதிர்ச்சியில் மயங்கி தன்னுணர்வை இழந்துவிடுகிறாள் சரோஜா.

சரோஜா உற்சாகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த நெஞ்சோடு படிக்கட்டில் ஏறிச் சென்ற தருணத்துக்கும், ஏமாற்றத்தோடும் கசப்போடும் அதே படிக்கட்டில் சரிந்து உருண்டு விழுந்த தருணத்துக்கும் இடைப்பட்ட காலம் வெறும் மூன்று ஆண்டுள் மட்டுமே. இரு காட்சிகளும் தனித்தனியானவை என்றபோதும் நாவலை வாசித்து முடிக்கும் வாசகர்கள் அக்காட்சிகளை இணைத்து ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும் வகையில் அநுத்தமாவின் சித்தரிப்புகள் அமைந்துள்ளன.

சீராகவும் மகிழ்ச்சியாகவும் நடத்தவேண்டிய வாழ்க்கையை, ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு தடுமாற்றத்தோடு நடத்துகிறவர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உரையாடித் தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையை உரையாடாமலேயே ஊதிப் பெருக்கி வேதனையையும் பெருக்கிக்கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வார்த்தை, அனைத்தையும் சரியாக்கி அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்கவைத்திருக்கும். ஆனால் அந்த வார்த்தையைச் சொல்வதற்கோ, கேட்பதற்கோ மனித மனம் இடம் தருவதில்லை. இந்த உளவியல் சிக்கலை நோக்கி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார் அநுத்தமா. இந்த நாவலில் எந்த இடத்திலும் அநுத்தமா ஆண் பக்கமாகவோ, பெண் பக்கமாகவோ சார்பு நிலையெடுத்துப் பேசவே இல்லை. நடுநிலையோடு சிந்திப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார். அநுத்தமாவின் கலைப்பார்வைக்கும் தெளிவுக்கும் ‘ஒரே ஒரு வார்த்தை’ நாவல் நல்லதொரு எடுத்துக்காட்டு.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *