Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உடனேயே சுதேசிக் கப்பல் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பிற இடங்களில் தொடங்க ஆரம்பித்தது. அவற்றில் மிக முக்கியமானது கொழும்பு கிளை. தூத்துக்குடி–கொழும்பு கடல்பாதை நிறுவனத்தின் முக்கிய வர்த்தக மையமாக இருந்ததால், கொழும்பு அலுவலகம் ஆரம்ப நாட்களிலிருந்தே செயல்பட்டது. பின்னாள்களில் பம்பாயிலும், கல்கத்தாவிலும் கிளைகள் திறக்கப்பட்டன. இவை, சுதேசி நிறுவனம் பெயரளவிலான நிறுவனமாக இல்லாமல் முறையான நிர்வாக அமைப்புடன் இயங்கிய நிறுவனமாக இருந்ததைக் காட்டுகிறது.

வ.உ.சி தனது பேச்சுத் திறமையால் தூத்துக்குடி உள்ளூர் வங்கியாளரும் வணிகருமான ஹாஜி பகீர் முகமது சயித்தை நிறுவன மூலதனத்தின் நான்கில் ஒரு பங்கை முதலீடு செய்யவைத்தார். இந்நிகழ்வு பெரும் பேசுபொருளானது. இதனால் மற்ற வணிகர்களும் முதலீடு செய்ய முன்வந்தனர்.

வ.உ. சிதம்பரனார், தான் மட்டுமே பங்குகளைச் சேர்க்கும் பணிகளில் ஈடுபடவில்லை. பங்குகளைச் சேகரிப்பதற்காக மிகப்பெரிய பிரச்சார வலையமைப்பை உருவாக்கினார். சுதேசி உணர்வுள்ள இளைஞர்களைத் தேடி இணைத்தார். சிலர் தானாகவே முன்வந்து இணைத்துக்கொண்டனர். பலர் ஊர் ஊராகச் சென்று கூட்டங்கள் நடத்தினர். சில முகவர்களுக்கு மாதம் ரூ.20 முதல் ரூ.25 வரை சம்பளமும், பயணச் செலவுகளும் வழங்கப்பட்டன. அவர்கள் ரயில், குதிரைவண்டி, கப்பல் மூலம் நகரம் நகரமாகச் சென்று பங்குகளை விற்றனர். பங்குகள் விற்பதற்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பப் படிவங்கள், விளம்பரத் தாள்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டன. அந்நாளில் இது ஒரு பெரிய பொருளாதாரச் செலவாக இருந்தது.

பங்குகள் சேகரிக்கும் பணியில் பல தேசப்பற்றாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர். சமூகத்தில் மேலடுக்கு முதல் கீழடுக்கு வரை என அனைத்துத் தரப்பிலும் ஆதரவு கிடைத்தது. அரச வம்சத்தைச் சேர்ந்த பாண்டித்துரை தேவர் பொதுமக்களிடையே நேரடியாகச் சென்று, சுதேசி நிறுவனங்களில் முதலீடு செய்வது தேசப்பணிக்குச் சமம் என்று வலியுறுத்தினார். தஞ்சாவூரில் நடைபெற்ற பல கூட்டங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் பலரையும் தீவிரமாகப் பாதித்தன.

அதன் விளைவாக, ஆபிரகாம் பண்டிதர், தமிழ் அறிஞர் கே.எஸ். சீனிவாச பிள்ளை மற்றும் பி.எஸ். மணி ஐயர் ஆகியோர் இணைந்து 45 பங்குகளை வாங்கினர். அதேபோல், தமிழ் சைவ மரபின் முக்கிய மையமான திருவாவடுதுறையிலும் 20 பேர் இணைந்து 91 பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சுதேசி உணர்வு சமுதாயத்தின் பல அடுக்குகளிலும் ஆழமாக வேரூன்றியிருந்ததைக் காட்டுகின்றன.

வ.உ.சியின் நெருங்கிய நண்பரான எம்.ஆர். கந்தசாமி கவிராயர், தனது ‘விவேகபாநு’ இதழின் பணிகளைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்து, சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு போன்ற பகுதிகளுக்குச் சென்று பங்குகள் சேகரித்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த நைனார் பிள்ளை என்பவர் பர்மாவிற்குச் சுமார் 50 பங்குகளை விற்று வெற்றிபெற்றார் என்பதை போலீஸ் அறிக்கைகள் கூறுகின்றன.

இச்சூழலில் திருநெல்வேலி பரளிக்கோட்டையைச் சேர்ந்த ‘பரளி சகோதரர்கள்’ சண்முகசுந்தரம் பிள்ளை, நெல்லையப்ப பிள்ளை மற்றும் குழந்தைவேலன் பிள்ளை குறித்துக் குறிப்பிட வேண்டியது அவசியம். இவர்கள் அலுவலக வேலைகளோடு பங்குகள் விற்பனை, கூட்டங்களுக்கான ஏற்பாடு, அரசியல் பிரச்சாரம் போன்ற பணிகளிலும் ஈடுபட்டனர். சீர்காழியை மையமாகக் கொண்டு செயல்பட்ட சண்முகசுந்தரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பங்குகளை விற்பதில் வெற்றிபெற்றார். குறிப்பாக நெல்லையப்ப பிள்ளை வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னர் எழுதி, அவரது நினைவுகளை உயிர்ப்புடன் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல தோழமை உள்ளங்கள் தங்கள் நிலையான வேலைகளை உதறித் தள்ளி சுதேசிக் கப்பலுக்காக மிகக்குறைந்த ஊதியத்தில் வ.உ.சியுடன் சேர்ந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சு. கந்தசாமி பிள்ளை துறைமுக அலுவலகத்தில் வழக்கறிஞராக நல்ல சம்பளத்துடன் இருந்த வேலையை விட்டு சுதேசிப் பணிக்காக வந்தார். சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் மேலாளராகவும், வ.உ.சி தொடங்கிய நெசவு சாலையின் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுக்கொண்டார். மாதம் ரூ.125 சம்பளம் பெற்றார். அவரது முந்தைய வருமானத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான தொகையே.

குருநாத ஐயர் என்ற காவல்துறை தலைமைக் காவலர் தனது அரசுப் பணியை ராஜினாமா செய்து சுதேசக் கப்பல் நிறுவனத்தில் சரக்கு மேற்பார்வையாளராக மாதம் ரூ.60 சம்பளத்தில் இணைந்தார். கூடவே, கூர்க் பகுதியில் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய துரைசாமி ஐயர், காப்பித் தோட்டத்தில் ஆங்கிலேயர்களின் இனவெறியை எதிர்த்து வேலையை விட்டு மாதம் ரூ.20 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர்களில் பலர் குறைந்த சம்பளத்தில் பணியாற்றினாலும், ‘இந்தியர்களுக்கான இந்தியக் கப்பல் நிறுவனம்’ உருவாக வேண்டும் என்ற தேசப்பற்று உணர்வே அவர்களை உந்தித்தள்ளியது. ஜப்பானியர்களும் முதலீடு செய்யலாம் எனும் கருத்து இந்தியர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.

பங்குகளை மக்களிடமிருந்து திரட்டும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 1906 அக்டோபரில் வ.உ.சி கப்பல் வாங்குவதற்காக பம்பாய்க்குச் சென்றார். சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டு கடல் வாணிப போக்குவரத்து ஆரம்பித்த நாள்களிலிருந்து பம்பாய் இந்தியாவின் கடல்வழி வாணிபத்தில் மிக முக்கிய அங்கம் வகித்தது. வ.உ.சி அடுத்த 5 மாதங்களில் பெரும்பாலான நாட்களை பம்பாயில் கழித்தார். கப்பல் உரிமையாளர்களைச் சந்தித்தல், தரகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், முதலீட்டாளர்களைச் சமாதானப்படுத்துதல், கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல் இவை அனைத்தும் அவரை நாள் முழுவதும் சோர்வடையச் செய்தன.

சில மாதங்கள் கழித்து ஓர் ஐரோப்பிய நண்பரின் உதவியுடன் 2 நீராவிக் கப்பல்களைத் தவணை முறையில் வாங்க ஏற்பாடு செய்திருந்ததாக அவர் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதச் செய்தியின் வழி அறியமுடிகிறது. தவணைமுறையில் கப்பல் வாங்கும் நடவடிக்கையிலிருந்து வ.உ.சிக்கு இருந்த பணப்பற்றாக்குறை தெரியவருகிறது.

கப்பல் வாங்குவதற்குப் பணமிருந்தால் மட்டும் போதாது. கப்பலுக்கான காப்பீடு, தொழில்நுட்ப ஆய்வு, பழுதுபார்ப்பு, பதிவு, துறைமுகச் செலவுகள், லாயிட்ஸ் பதிவு (Lloyd’s Register) போன்ற சர்வதேசத் தரச்சான்று நிறுவனங்களின் அனுமதி என அனைத்து நிலைகளிலும் மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்பட்டது. இதற்காக சுந்தர்தாஸ் தரம்சே அண்டு கோ நிறுவனம் சுதேசக் கப்பல் நிறுவனத்திற்காகத் தரகராகச் செயல்பட்டு, கப்பல் வாங்கும் பேச்சுவார்த்தைகளில் உதவியது.

பம்பாயில் தங்கியிருந்த மாதங்கள் வ.உ.சிக்குக் கடும் மனஅழுத்தம் நிறைந்த நாட்களாக இருந்தன. பணத்தட்டுப்பாடு, தரகர்களின் நிபந்தனைகள், முதலீட்டாளர்களின் தயக்கம் என ஒவ்வொரு நாளும் புதிய சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன. கப்பல் வாங்கும் பணியில் எதிர்பாராத தடைகள் வந்துகொண்டே இருந்தன. இருந்தபோதிலும், ‘நான் இரண்டு அழகான, அதிவேக நீராவிக் கப்பல்களுடன் தூத்துக்குடிக்குத் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருங்கள். இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அவற்றை வாங்கப் பணம் எங்கே கிடைக்கும் என்று கவலைப்பட வேண்டாம். தேசத்திற்காக நான் செய்கிற இந்தப் பணிக்குத் தேவையான பணத்தைக் கடவுள் தருவார்’ என்று தன் நண்பருக்குக் கடிதம் எழுதினார். எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது இலட்சியத்தில் பின்னடையவில்லை என்பதை இந்தக் கடிதத்தின் வரிகள் காட்டுகின்றன.

1906ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய தினம். இந்தியச் சுதேசி இயக்கத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது. அன்றைய தினம் வ.உ.சிதம்பரனார், சுதேசமித்திரன் பத்திரிகைக்கு ஒரு சுருக்கமான தந்தி அனுப்பினார்: ‘நான் ஒரு கப்பலை வாங்கிவிட்டேன்.’ இந்த ஒரு வரி செய்தி, வணிகச் சாதனையை மட்டும் குறிக்கவில்லை; பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு எதிராக இந்தியர்கள் எழுப்பிய பொருளாதாரச் சவாலின் முதல் வெற்றிக் குரலாகவும் இருந்தது.

தமிழ்நாட்டைத் தாண்டியும் வ.உ.சிக்கு ஆதரவு கிடைத்தது. கல்கத்தாவில் இருந்த தேசியவாதிகள், குறிப்பாக அரவிந்த கோஷ் நடத்திய வந்தே மாதரம் (Bande Mataram) பத்திரிகை சுதேசக் கப்பல் நிறுவனத்தைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது. பூனேயில் பாலகங்காதர திலகர் நடத்திய மராட்டா இதழும் கப்பல் வாங்கிய செய்தியைப் பாராட்டியது.

இதே காலகட்டத்தில் அவரது குடும்ப வாழ்க்கையும் பெரும் சோதனையைச் சந்தித்தது. வ.உ.சி பம்பாய்க்குக் கிளம்பியபோதே அவரது முதல் மகன் உலகநாதன் கடுமையாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். மனைவி மீனாட்சி கர்ப்பிணியாக இருந்தார். 1906 டிசம்பர் 29 அன்று 2வது மகன் பிறந்தபோதும் வ.உ.சி குடும்பத்தாருடன் இருக்கவில்லை; பம்பாயில் கப்பல் வாங்கும் முயற்சியிலேயே மூழ்கியிருந்தார்.

அந்த நெருக்கடியான காலத்தில் குடும்பத்திற்கு உதவிய கப்பல் நிர்வாகத்தின் இயக்குநரும் வியாபாரியுமான எஸ்.டி.ஏ. ஆறுமுகம் பிள்ளைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது மகனுக்கு அவரது பெயரையே வைத்தார். கப்பலை வாங்கிய பிறகும் சிக்கல்கள் முடிவடையவில்லை. அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டபடி, 1906 டிசம்பர் 22ஆம் தேதி அன்று வாங்கப்பட்ட கப்பல் உடனடியாக தூத்துக்குடிக்கு வரவில்லை. அதன் உரிமையாளர் பழுதுபார்த்து ஒப்படைக்க முடிவு செய்ததால், கப்பல் டாக் யார்டுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் பிப்ரவரி 4 அன்று ஐரோப்பாவிலிருந்து புறப்படும் எனத் தகவல் வந்தது.

இதற்கிடையில் வ.உ.சி தனது 2வது கப்பலையும் 1907 ஜனவரி 24ஆம் நாள் வாங்கினார். அவற்றின் பெயர்கள் காலியா, லாவோ என அறியப்பட்டன. கூடவே மிராண்டா என்ற நீராவிப் படகும் வாங்கப்பட்டது. இந்தக் கப்பல்களின் விலை அக்காலத்தில் பெரிய விவாதமாக மாறியிருந்தது. ஏனெனில் ஒவ்வொரு பத்திரிகையும் அவர்களுக்கான ஊகத்தில் சுதேசிக் கப்பல் விலையைக் கூறிவந்தனர். வந்தே மாதரம் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி காலியா கப்பல் ரூ.2,40,000க்கும், லாவோ ரூ.1,50,000க்கும், மிராண்டா ரூ.30,000க்கும் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மொத்தம் சுமார் ரூ.3,90,000. ஆனால் உண்மையான செலவு என எதையும் உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தப் பணிகளில் தரகராகச் செயல்பட்ட சுந்தர்தாஸ் தரம்சே அண்டு கோவுக்கு கமிஷன் தொகை 1908 வரையிலும் முழுமையாகச் செலுத்தப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே சுதேசிக் கப்பல் நிறுவனம் எதிர்கொண்ட நிதிச் சிக்கல்களின் தீவிரத்தைக் காட்டுகிறது. எதுவாயினும், இந்தியர்களால் நடத்தப்பட்ட ஒரு சுதேசி நிறுவனம் தனது சொந்த நீராவிக் கப்பல்களை வாங்கியது என்பது அக்கால இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சாதனை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *