சென்னை அடையாறு சிக்னலில் இருந்து சர்தார் படேல் சாலை நோக்கிச் சில நிமிடங்கள் சென்றால், இடதுபுறத்தில் கேனல் பேங்க் சாலை வரும். அந்தச் சாலையில் திரும்பி நேராகச் சென்று கஸ்தூரிபாய் நகரைக் கடந்தால், இடதுபுறத்தில் பசுமை நிறைந்த, பழமையான கட்டடங்களும் புதுமையான கட்டடங்களும் கலந்த ‘CANCER INSTITUTE (WIA)’ என்ற மருத்துவமனை வளாகம் காணப்படும்.
நோயாளிகளுக்கு மனஅமைதி தரக்கூடிய சூழல் எனும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு திறந்தவெளி, மர நிழல், காற்றோட்டம் என இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டுள்ள அந்த வளாகம், ஒரே உயரமான கட்டடமாக அல்லாமல் பல பிரிவுகளாகத் தனித்தனி கட்டடங்களாக அமைந்துள்ளது.
வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, மருத்துவ சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் புற்றுநோய் பிரிவு, இறுதிக்கட்ட நோயாளிகளுக்கான வலி நிவாரண சிகிச்சைப் பிரிவு, செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளி, ஆராய்ச்சி மையம் எனப் பல பிரிவுகள் இந்த அமைப்பில் செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் மிக முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணி டாக்டர் வி.சாந்தா அவர்கள்.
புற்றுநோய் வந்தாலே மரணம் நிச்சயம், இதற்கு மருந்தே கிடையாது என்று மக்கள் எண்ணியிருந்த காலத்தில் எல்லாவிதமான புற்றுநோய்களுக்கும் தீர்வு உண்டு என்று எளிய மக்களுக்கு நம்பிக்கை தீபம் ஏற்றிய டாக்டர் வி.சாந்தா, 11 மார்ச் 1927இல் சென்னை மயிலாப்பூரில் விஸ்வநாதன், பாலபார்வதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது குடும்பப் பின்னணி மிகவும் சுவாரசியமானது. ராமன் விளைவைக் கண்டுபிடித்து, அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்று பெயர் பெற்ற சர் சி.வி.ராமன் இவரது தாத்தா. அதேபோல் நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் வளர்ச்சி பற்றிய கோட்பாட்டுக்கான நோபல் பரிசு பெற்ற டாக்டர் சந்திரசேகர் இவரது தாய் மாமா. இப்படி ஓர் அறிவியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்தாலும், சாந்தா தனது 12வது வயதில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை மயிலாப்பூரில் தற்போதுள்ள லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அப்பொழுது அந்தப் பள்ளியின் பெயர் நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி. 1949இல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமும், 1952இல் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் டிப்ளமோவும், பின்னர் எம்.டி. பட்டமும் பெற்றார். கனடாவில் ஒரு வருடம் பணியாற்றியபின் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றினார்.
ஜூன் 18, 1954ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்டது. ஜவாஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்ட இந்த மருத்துவமனை தொடக்கத்தில் வெறும் 12 படுக்கைகளை மட்டும் கொண்ட சிறிய மருத்துவமனையாக இருந்தது. டாக்டர் சாந்தா தனது அரசு மருத்துவர் பதவியிலிருந்து விலகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இணைந்தார். அப்போது அந்த மருத்துவமனையில் வெறும் 2 மருத்துவர்கள் மட்டும் பணியாற்றினார்கள். ஒருவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகன் டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மற்றொருவர் டாக்டர் சாந்தா. தொடக்கத்தில் 2 மருத்துவர்கள் 2 செவிலியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அடையாறு மருத்துவமனை, இன்று 130 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஏழை நோயாளிகளுக்கு இலவசமாகவும், ஓரளவு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒருநாள் அந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்த ஒரு குழந்தை இறந்துவிட்டது. இதனால் கடுமையான மன வருத்தத்திற்கு உள்ளானார் சாந்தா. போதிய மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய்க்கான காரணமும் அதற்கான சிகிச்சை முறைகளும் மருத்துவர்களுக்கே பெரிய அளவில் தெரியாமல் இருந்தது. இதனால் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். எனவே சந்தா புற்றுநோய் குறித்து தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். புற்றுநோய்க்கான மருந்து எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக அடையாறு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் இறங்கினார். அயராது பாடுபட்டு அடையாறு மருத்துவமனையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் அடையாறு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று பலன் அடைந்தனர்.
1980ஆம் ஆண்டு அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநரானார். 1997ஆம் ஆண்டுவரை அப்பதவியை வகித்தார். இவரது காலத்தில்தான் ஏராளமான திறமையான மருத்துவர்களும், செவிலியர்களும். பணியமர்த்தப்பட்டனர். அடையாறு புற்றுநோய் நிறுவனம், தேசிய அளவில் மிகமுக்கியமான புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமாக மாறியது. இந்தியாவில் குழந்தைகளுக்கான தனி புற்றுநோய் பிரிவைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவராக சாந்தா திகழ்ந்தார். குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் பெரியவர்களின் புற்றுநோய்களிலிருந்து மாறுபட்டது. இதற்கெனத் தனி சிகிச்சை முறை, தனி மருந்தளவுகள், தனி பராமரிப்பு தேவைப்பட்டது. எனவே அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கான தனி வார்டு, சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகளுக்கான நட்புச் சூழல், தனி கண்காணிப்பு போன்ற வசதிகளை உருவாக்கினார்.
இவர் 1986 முதல் 2005 வரை உலக சுகாதார மையத்தின் புற்றுநோய் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் 2007ஆம் ஆண்டு சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை எனும் அமைப்பில் சயின்டிபிக் கவுன்சில் உறுப்பினராக இருந்து புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பணிக்குழு உறுப்பினர், இந்தியப் புற்றுநோயியல் சங்கத்தின் தலைவர், புற்றுநோய் குறித்த மாநில ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசியா மற்றும் பசிபிக் கூட்டமைப்பின் தலைவர், 15வது ஆசியா மற்றும் பசிபிக் புற்றுநோய் மாநாட்டுக்கான மாநாட்டுத் தலைவர் என, பல பதவிகளை தன் வாழ்நாளில் வகித்தார் டாக்டர் சாந்தா. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கியமான நிர்வாக முடிவுகளையும், கொள்கை முடிவுகளையும் எடுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
இவர் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் புற்றுநோய் தொடர்பாக 95க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். புற்றுநோய் நோய்ப்பரவியியல், குழந்தை மருத்துவப் புற்றுநோயியல், புற்றுநோய் பதிவேடுகள் போன்ற துறைகள் தொடர்பாக எழுதியுள்ளார். புற்றுநோய் விழிப்புணர்வு பற்றியும், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் பற்றியும் பல உரைகள் ஆற்றியுள்ளார். மருத்துவ வெளியீடுகளில் பங்களித்துள்ளார். புற்றுநோய் பதிவேடுகள் மற்றும் பொதுச் சுகாதாரப் புற்றுநோயியல் தொடர்பான பல அறிவியல் ஆய்விதழ்களில் இணை ஆசிரியராக இருந்துள்ளார். இந்தியாவில் புற்றுநோய் துறையில் இவர் செய்த பணிகளை விவரிக்கும் விதமாக எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளையும், ‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப்படுகிற ரமோன் மகசேசே விருதையும் வென்றுள்ளார். தான் பெற்ற பரிசுப் பணம் அனைத்தையும் மருத்துவமனையின் வளர்ச்சிக்காகவே செலவிட்டார்.
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை உழைப்பதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்த சாந்தா, தனது நேரத்தை எல்லாம் புற்றுநோயாளிகளின் நலத்திற்கும், புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்கும், புற்றுநோய் நிறுவனத்தின் வளர்ச்சிக்குமே செலவிட்டார். சுமார் 65 ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை அந்த மருத்துவமனை வளாகத்திலேயே செலவிட்டார்.
ஜனவரி 18, 2021 அன்று இரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கடுமையான அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஜனவரி 19, 2021 அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் உயிர் இழந்தார்.
அவருடைய மரணம் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட எண்ணற்ற தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள், மருத்துவர்கள்,அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் அங்கு அஞ்சலி செலுத்தினர். பின் பெசன்ட் நகர் மின் மயானத்தில் காவல்துறையினரின் மரியாதை அணிவகுப்பு மற்றும் துப்பாக்கி மரியாதை உடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்குப் பின்பு புற்றுநோய் நிறுவனம் (WIA) வளாகத்திலேயே அவருக்குச் சிலையும் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது. ஏப்ரல் 22, 2025 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைவு மண்டபத்தைத் திறந்துவைத்தார். டாக்டர் சாந்தா அவர்கள் பயன்படுத்திய மேசை, புத்தகங்கள், மருத்துவக் குறிப்புகள், விருதுகள் போன்றவை அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவரது சிந்தனைகள் மற்றும் சேவைகள் படங்களுடனும், ஆவணங்களுடனும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ‘சேவைதான் வாழ்க்கை’ என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமணமே செய்துகொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் குறித்த ஆய்வுகளிலும், புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் செலவிட்டு வந்த சாந்தா, கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் மிகவும் கனமானவை, ‘நான் இறந்த பிறகு என் அஸ்தியை இந்த கேன்சர் இன்ஸ்டிட்யூட் முழுவதும் தூவுங்கள்; நான் இந்த மருத்துவமனையை விட்டுச்செல்ல விரும்பவில்லை’.
(தொடரும்)

