Skip to content
Home » முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல. ஆனால், அப்படியான அமைதிப் பேச்சுவார்த்தைகளை அடிக்கடி காஷ்மீரில் ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்டவர் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி.

அன்று 14 ஜூன் 2018. விடிந்தால் ரம்ஜான். அப்போதைய காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் இஃப்தார் விருந்து நேரம் அது. அன்று மாலை 7.15 மணியளவில் தனது நாளிதழ் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, தன் மரணம் காத்திருந்ததை புகாரி கவனிக்கவில்லை. காரில் ஏறத் தயாரானபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சரமாரியாகச் சுட்டனர்.

புகாரி மட்டுமல்ல அவரது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்த்தே கொல்லப்பட்டனர். ஒரே நேரத்தில் மூன்று உயிர்கள் பலி. யார் இந்த ஷுஜாத் புகாரி. ஏன் இந்தக் கொலை நடந்தது?

25 பிப்ரவரி 1968 அன்று பிறந்த செய்யது ஷுஜாத் புகாரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் க்ரீரி கிராமத்தைச் சேர்ந்தவர். ‘தி இந்து’ நாளிதழில் 15 ஆண்டுகள் காஷ்மீர் நிருபராகப் பணிபுரிந்தார். பிறகு 2008இல் ‘ரைஸிங் காஷ்மீர்’ என்ற ஆங்கில நாளிதழைத் தாமே தொடங்கினார். பத்திரிகையாளராக, ஆசிரியராக, உரிமையாளராக 30 ஆண்டுகால இதழியல் அனுபவம் கொண்டவர்.

பிபிசியில் இவர் எழுதும் கட்டுரைகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. எளிய மாணவர்களுக்கும் புரியும்படி, துறைசார் நிபுணர்களுக்கும் நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி இருக்கும் இவரது கட்டுரைகள். நாடு முழுவதும் பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் இவர்மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர். அரசியல் கட்டுரைகள் எழுதினால் புகாரி சார் போல எழுதவேண்டும் என்று பலர் எண்ணுவதுண்டு. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இரண்டாம் கட்ட (டிராக் 2) தூதுவர் பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்தார். காஷ்மீர் அமைதி மாநாடுகளை ஏற்பாடு செய்தார். இரு நாட்டு முன்னாள் தூதர்கள், ஜெனரல்களை ஒரு மேஜையில் அமர வைத்தவர்.

இப்படித்தான் சென்று கொண்டிருந்தது காஷ்மீரில் ஒரு பத்திரிகையாளராக புகாரியின் வாழ்வு. 2016இல் பிபிசிக்கு எழுதிய கட்டுரையில் காஷ்மீர் நிருபர்களின் நிலையை அவர் விவரித்த விதமே இதைப் புரிய வைக்கும். ‘உயிருக்கு அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல், கைது, தணிக்கை இவையெல்லாம் ஒரு சாதாரண காஷ்மீர் நிருபரின் வாழ்க்கையின் பகுதிகள்’ என்று அவர் எழுதினார். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது சொந்த வாழ்க்கையே அதன் உச்சகட்ட உதாரணமாக மாறிவிட்டது.

புகாரிமீது ஏற்கெனவே இருமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. 2000ஆம் ஆண்டு ஏற்கெனவே ஒருமுறை தாக்கப்பட்டார். அதன் பிறகே அவருக்கு அரசுத் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பாதுகாப்பு 2018இல் போதாமல் போனது.

காஷ்மீரில் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒரே நேரத்தில் பல அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டும். போராட்டக்காரர்களின் கோபம், பாதுகாப்புப் படையினரின் சந்தேகம், அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு ஆகிய மூன்றையும் கடந்து உண்மை நிலையை எழுதியவர் புகாரி. சம்பவத்துக்குச் சம்பவம் நிலைப்பாடு எடுக்கும் அறம்சார் இதழியல் முறைமை அவருடையது. அதுவே அவரை எல்லாத் தரப்பினரின் கோபத்துக்கும் ஆளாக்கியது.

அன்று ஜூன் 14. மாலை தன் பிரஸ் என்க்ளேவ் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார் புகாரி. ரமலான் நோன்பு சமயம் என்பதால் ஒரு இஃப்தார் விருந்திற்கு செல்லவிருந்தார். காரில் ஏறும் தருணம், மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். நெருக்கமான தூரத்தில் நிறுத்தினர். தொடர்ந்து சுட ஆரம்பித்தனர். புகாரிக்குத் தலையிலும் வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்தன. உடனிருந்த இரண்டு பாதுகாப்பு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அல்ஜசீரா தளத்தில் ஒருவர் இவ்வாறு பேட்டியளித்திருந்தார். ‘நான் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தேன். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தேன். ஷுஜாத் சார் இரண்டு பாதுகாவலர்களுடன் கார் அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.’

யார் வந்தது? எப்படிச் சுட்டார்கள்? ஏதும் பேசினரா? எதுவும் தெரியவில்லை. என்ன பின்னணி என்பதெல்லாம் விசாரணையின் யூகங்கள்தாம்.

தப்பிச் சென்றவர்களை சிசிடிவி மூலம் தேடிப் பிடித்துக் கைது செய்தது காவல்துறை. கொலை நடந்த 13ஆம் நாள், இந்த வழக்கு குறித்த அறிக்கையை வெளியிட்டது. காஷ்மீர் ஐஜி எஸ்.பி.பாணி இது குறித்து விளக்கியபோது, இந்தத் திட்டம் பாகிஸ்தானில் லஷ்கர்-எ-தொய்பா அமைப்பால் வகுக்கப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட மூவரும் அதைச் சேர்ந்தவர்கள் என்றார். நவீத் ஜாட், ஆசாத் அகமது மாலிக், முசாபர் அகமது ஆகியோர்தான் அம்மூவர் என்றும் இதற்காக சஜாத் குல் என்ற ஸ்ரீநகர்வாசி புகாரிக்கு எதிராக ஆன்லைனில் பரப்புரை நடத்தினார் என்றும் காவல்துறை அறிக்கை தெரிவித்தது.

சம்பவம் நடந்து 5 மாதங்கள் கழித்து 24 நவம்பர் 2018 அன்று ஆசாத் அகமது மாலிக் உட்பட 6 பேர் ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹரா மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். பின் நவம்பர் 28ஆம் தேதி நவீத் ஜாட் கொல்லப்பட்டார். தொடர்ந்து முசாபர் அகமதுவும் கொல்லப்பட்டார்.

இதில் குற்றம் சுமத்தப்பட்ட சஜாத் குல் பாகிஸ்தானில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாயின. அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சிபிஐ வழியாக சர்வதேசக் காவல் (இண்டர்போல்) மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கோரியது என்று தகவல்கள் வெளியாயின. ஆனால், அந்த நோட்டீஸ் எங்கும் பொதுவில் வெளியிடப்படவில்லை.

உலக நாடுகளில் சரவதேசக் காவல் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒரு நாடு, ஒரு நபரைத் தன் நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடைமுறைக்கு சிவப்பு நோட்டீஸ் என்று பெயர். அதே சமயம், இது ஒரு சர்வதேசப் பிடியாணையும் அல்ல. தகவலை உலகம் முழுதும் சொல்லப் பயன்படும் நடைமுறை. அவ்வளவுதான்.

அதே சமயம், இந்தக் கொலையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்தது லஷ்கர்-இ-தொய்பா. அத்துடன் ‘இது இந்திய ஏஜென்சிகளின் செயல்தான்’ என்றும் கூறியது.

ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர் (@ahmadkhalid) கணக்குகள்மூலம் புகாரிக்கு எதிராகத் தொடர் பரப்புரை நடந்ததும், இணைய சேவை நிறுவனங்கள் கொடுத்த லொகேஷன் தரவுகளும் இவை பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டன என்று உறுதி செய்ததாக அழுத்தமாகச் சொன்னார் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஐஜி எஸ்.பி.பாணி

அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இது கோழைத்தனமான செயல். காஷ்மீரின் நியாயமான குரல்களை அமைதிப்படுத்தும் முயற்சி’ என்றார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி இதனை ‘ஈத் நாளின் முன் இப்படித் தலைதூக்கிய பயங்கரவாதத்தைக் கடுமையாக கண்டிக்கிறேன்’ என்று அறிக்கை வெளியிட்டார். முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, இந்தச் சம்பவம் குறித்துப் பேச ‘வார்த்தைகளே வரவில்லை. அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது’ என்றார். இந்தக் கொலை ஜம்மு காஷ்மீருக்குள் அரசியல் எதிரிகளை ஒரே குரலில் பேச வைத்திருந்தது.

நியாயத்தின், பகுத்தறிவின் குரலாக காஷ்மீரில் இருந்தவர் புகாரி. இந்தக் கொலை அந்தப் பகுத்தறிவுக் குரலை அழிக்க நடத்தப்பட்டது. ‘குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். இந்தியாவில் 2018இல் கொல்லப்பட்ட மூன்றாவது பத்திரிகையாளர் இவர்’ என்று சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டித்தது.

ஆனால், சர்வதேசக் காவல் வரையில் சென்றுவிட்டதால் இந்தவிவகாரத்தின் மேலதிக விசாரணைகள் குறித்துத் தகவல்கள் வெளியாகவில்லை. சுட்டவர்களில் மூவர் கொல்லப்பட்டனர். திட்டமிட்டவர் என்று சொல்லப்படும் சஜாத் குல் பாகிஸ்தானில் இருக்கிறார். அவர்மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கோரப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணை நடந்ததா, தீர்ப்பு வந்ததா என்று பொதுவெளியில் தெளிவான தகவல் இல்லை. கொல்லப்பட்டவர்களைக் கொல்லப்பட்டவர்களாகப் பதிவு செய்தனர். நீதி என்ன ஆனது என்று சொல்ல முடியவில்லை.

காஷ்மீரில் இரண்டு தரப்பும் அமைதியாக பேசட்டும் என்று விரும்பியவர் புகாரி. ஆயுதம் தூக்கியவர்களைத் திரும்பவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர முயற்சி செய்தவர். ஆனால், இந்தக் கொலையைச் செய்தது யார், என்ன காரணம் என்பது மட்டும் தெளிவாக வெளிவரவேயில்லை.

சுஜாத் புகாரி கொல்லப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர், கொலம்பியா ஜர்னலிசம் ரிவ்யூ இணையத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை, ‘பாகிஸ்தானியப் போராளிகள், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்திய குரலை ஒடுக்க முயன்றிருக்கலாம். இந்தியத் தேசியவாதிகள், பாகிஸ்தானுடனான அமைதிக்கான கோரிக்கைகளை நிறுத்த விரும்பியிருக்கலாம். அல்லது காஷ்மீர் போராளிகள் புகாரியை ஒரு துரோகியாகக் கருதியிருக்கலாம்; அவரது பத்திரிகைத் தொழில், சுதந்திரப் போராட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதாக அவர்கள் கருதியிருக்கலாம்’ என்று தெரிவித்தது.

இப்படி அனுமானங்களுடன் இரு நாட்டு விவகாரம் என்ற லேபிளுடன் சத்தமில்லாமல் நீதிக்காகக் காத்திருக்கிறது புகாரியின் கொலை வழக்கு. அவர் குடும்பமும் நாமும்கூட காத்திருக்கிறோம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *