Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

ஜப்பானைச் சேர்ந்த EXEO Group என்ற தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம், 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தியது. தனது ஆண் ஊழியர்களுக்கு ‘Perionoid’ என்ற கருவியின் மூலம் மாதவிடாய் வலியை ஒத்த அனுபவத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலியைப் பற்றி ஆண்களுக்குப் புரிதல் ஏற்படுத்துவதாகும்.

அந்த வலியை அனுபவித்த 26 வயதான ஊழியர் ஒருவர், ‘என்னால் அசைய முடியவில்லை; நிற்கக்கூட முடியவில்லை’ என்று கூறினார். அதன்பிறகு பெண்கள் இந்த வலியுடன் வேலை செய்வதைப் பற்றித் தனக்குப் புதிய புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனினும், இத்தகைய கருவிகள் உண்மையான மாதவிடாய் அனுபவத்தை முழுமையாக உருவாக்க முடியாது. ஏனென்றால் மாதவிடாய் என்பது வெறும் வயிற்றுவலி மட்டும் அல்ல; ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, தலைவலி, முதுகுவலி, உடல் வீக்கம், மனநிலை மாற்றங்கள், இரத்தப் போக்கு போன்ற பல அம்சங்கள் இதில் அடங்கும். இந்தக் கருவி, மாதவிடாய் இரத்தப்போக்கை அல்ல, மாதவிடாய் வயிற்று வலியை மட்டுமே மின்தூண்டுதல் மூலம் உருவாக்கியது. உண்மையான மாதவிடாயின் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது இரத்தப்போக்கு இதில் இடம்பெறவில்லை.

உண்மையிலேயே ஓர் ஆணுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று அறிவியல் ரீதியாக ஒரு முடிவு எட்டப்படவில்லை. அதற்கான ஆய்வு செய்வதும் சாத்தியம் இல்லை. காரணம் மாதவிடாய் என்பது கருப்பை மற்றும் கருப்பை உள்சுவர் சம்பந்தப்பட்ட உயிரியல் நிகழ்வு. ஆண்களுக்குக் கருப்பையும் கருப்பை உள்சுவரும் இல்லை. அதனால் இது சாத்தியமில்லை. ஆனால் ஆண்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு மனிதர் சோதனை செய்து பார்த்தார். அதுவும் ஓர் இந்தியர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவரது பெயர் அருணாசலம் முருகானந்தம்.

0

12 அக்டோபர் 1961 அன்று தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் ஒரு சாதாரண கைத்தறிக் குடும்பத்தில் பிறந்தவர்தான் அருணாச்சலம் முருகானந்தம். இவரின் தந்தை அருணாச்சலம், தாய் வனிதா. இவரது தந்தை சிறுவயதிலேயே சாலை விபத்தில் மரணமடைந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு தாய் கூலி வேலைசெய்து இவரைப் படிக்க வைத்தார். இருந்தும், வறுமையின் காரணமாகப் பாதியிலேயே படிப்பை விடும் சூழல் ஏற்பட்டது. குடும்ப பாரத்தைச் சுமக்கும் பொருட்டு வெல்டிங் வேலை, விவசாயம், இயந்திரங்களைப் பழுதுபார்த்தல் எனச் சிறுசிறு வேலைகளைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

1998ஆம் ஆண்டு சாந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டனர். ஒருநாள் அவரது மனைவியின் செயல்பாட்டில் வித்தியாசத்தை உணர்ந்தார். தன்னிடம் இருந்து எதையோ மறைத்து வைப்பதைக் கவனித்தார். அது ஒரு பழைய கந்தலான துணி. பார்ப்பதற்கு அடுக்களையில் பயன்படுத்தப்படும் கரித்துணிபோல இருந்தது. இந்தத் துணியைத்தான் மாதவிடாய் காலத்தில் அவரது மனைவி பயன்படுத்திவந்தார். இதைப் பார்த்த முருகானந்தம் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். ‘பெண்களின் உடல்நலத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தாதா?’ என்று யோசித்தார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக விலையுயர்ந்த நாப்கின்களை வாங்காமல் இருந்ததாக அவரது மனைவி சாந்தி கூறியுள்ளார். அதை வாங்கும் பணத்தை வைத்து வீட்டுக்குத் தேவையான பால் வாங்கிவிடலாம் என்றார் சாந்தி. அதைக் கேட்ட முருகானந்தம் மிகவும் வேதனைக்கு உள்ளானார். அதேசமயம் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனைதான் குறைந்த விலையில் தரமான சானிட்டரி நாப்கின்களை உருவாக்கும் முயற்சிக்கு அடித்தளமிட்டது.

ஆரம்பத்தில் கடைக்குச் சென்று பருத்தி, துணி போன்றவற்றை வாங்கி எளிதாக ஒரு நாப்கின் தயார் செய்தார். அதைப் பயன்படுத்தச் சொல்லி அவரது மனைவியிடம் கொடுத்தார். ஆனால் மாதவிடாய் பற்றிப் பேசுவதற்கே பலர் தயங்கிய காலத்தில், முருகானந்தத்தின் மனைவியோ, சகோதரியோ அதைப் பயன்படுத்தத் தயாராக இல்லை. அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்துப் பயன்படுத்தச் சொன்னார். அதுவும் பலனளிக்கவில்லை. அப்போதுதான் அவர் அந்தச் சோதனை முயற்சியில் இறங்கினார்.

கால்பந்து உள்ளே காற்றை நிரப்பி வைக்கும் பையை எடுத்தார். அதில் ஆட்டின் இரத்தத்தை நிரப்பினார். இரத்தம் உறையாமல் இருக்கச் சில சேர்மங்களைச் சேர்த்தார். அந்தப் பையில் சிறிய துளையிட்டு அதில் ஒரு குழாயைப் பொருத்தினார். பின்பு அந்தப் பையை இடுப்புப் பகுதியில் கட்டி அந்தக் குழாயை நாப்கினுடன் இணைத்தார். பின்னர் நாப்கினை அணிந்துகொண்டு நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்களைச் செய்தார். இதன் மூலம் மாதவிடாய் இரத்தப்போக்கு போன்ற ஒரு சூழலை உருவாக்கி, நாப்கின் எவ்வளவு ஈரம் உறிஞ்சுகிறது, எவ்வளவு நேரம் பயன்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். இந்த முயற்சியின் காரணமாக ஊர் மக்கள் அவரை விசித்திரமானவராகக் கருதினர். சிலர் அவருக்கு ஏதோ நோய் இருப்பதாகவும், அவரைப் பைத்தியம் எனவும் நினைத்தனர். இதனால் அவர் சமூக ஒதுக்கலுக்கும் ஆளானார். ஒருகட்டத்தில் அவரது மனைவியும் அவரை விட்டுப் பிரிந்துசென்றார். ஆனால் அவர் செய்த முயற்சியின் உண்மையான நோக்கம் பெண்களின் நலனுக்காக என்பதை உணர்ந்த அவரது மனைவி மீண்டும் அவருடன் இணைந்தார்.

இவ்வாறாக இரண்டு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அந்தக் காலத்தில் பிரபல நிறுவனங்களின் நாப்கின்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தன. முருகானந்தம் தயாரித்த நாப்கின்கள் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அவர் வெறும் நாப்கின்களை மட்டும் தயாரிக்காமல், குறைந்த செலவில் நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரத்தையும் உருவாக்க எண்ணினார். அந்த காலத்தில் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலை அளவிலான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்திங்களின் விலை சுமார் 75 லட்சம் முதல் 2.5 கோடி வரை இருந்தது. இதைக் குறைக்க நினைத்த முருகானந்தம், நான்கு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு ரூ.65,000 மதிப்பில், சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்தார்.

அவரது குறைந்த விலை நாப்கின் இயந்திரத்தின் காப்புரிமையை வாங்குவதற்கும், அதை வணிகரீதியாகப் பெரிதாக்குவதற்கும் பல நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். ஒரு தனியார் நிறுவனம், ‘தொகையை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்’ என்று காசோலையைக் கொடுத்து காப்புரிமையை வாங்க முன்வந்தது. அதையும் அவர் நேரடியாக மறுத்துவிட்டார். அவரது எண்ணம் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதானே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல. அதனால் அவர் இயந்திரங்களைப் பெரிய நிறுவனங்களுக்கு விற்பதைவிட, பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், சிறு தொழில்முனைவோர் மற்றும் பள்ளிகள் போன்றவர்களுக்கே வழங்க விரும்பினார். நாப்கின் தொழிலில் பல லட்சங்கள் சம்பாதிப்பதைவிடப் பல லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே ‘ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்’ எனும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, இயந்திரத்தைச் சந்தைப்படுத்தவும் பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கவும் செய்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் பல சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் தங்கள் கிராமத்திலேயே நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிந்தது. இதனால் பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ரூபாய்க்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒரு தொழிற்புரட்சி செய்தார்.

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே எனப் பல கல்வி நிறுவனங்களில் முருகானந்தம் சொற்பொழிவாற்றியிருக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் பேசியுள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி 2014ஆம் ஆண்டு உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக டைம் இதழ் இவரைத் தேர்ந்தெடுத்தது. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பல இந்திய மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழகங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தொழில்முனைவு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. 2013இல் வெளியான ‘மென்ஸ்ட்ருவல் மேன்’ எனும் ஆவணப்படம், முருகானந்தம் அவர்களின் உண்மையான வாழ்க்கைப் பயணத்தை நேரடியாகப் பதிவு செய்தது. மேலும் இவரது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு 2018இல் ‘பேட்மேன்’ என்ற இந்தித் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் முருகானந்தம் அவர்களின் பணியை உலக அளவில் பிரபலப்படுத்தியது.

குறைந்த விலையில் சுகாதாரமான நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, கிராமப்புறப் பெண்களுக்கும் மாதவிடாய் சுகாதார வசதியை எளிதில் கிடைக்கச் செய்ததுடன், ஆயிரக்கணக்கான பெண்களுக்குச் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பையும் உருவாக்கி பெண்களின் உடல்நலம் மற்றும் மாதவிடாய் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்திய அருணாச்சலம் முருகானந்தம், இளைஞர்களை நோக்கி, ‘இளைஞர்களே! வாய்ப்பைத் தேட வேண்டாம். பிரச்னையைத் தேடுங்கள். அது உங்களுக்கான வாய்ப்பை உருவாக்கும்’ என்கிறார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *