தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு புதிய மரபை உருவாக்கியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவல் 1879ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் எழுத்துமுறையால் ஈர்க்கப்பட்ட பல எழுத்தாளர்கள் அதே வடிவத்தில் எண்ணற்ற நாவல்களை எழுதியிருக்கக்கூடும். ஆனால் அவையனைத்தும் காலத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் கரைந்துபோய்விட்டன.
எழுத்து வடிவத்தில் காட்சிகளைச் சித்தரிப்பதிலும் எதார்த்த அனுபவங்களை மிகையின்றி முன்வைப்பதிலும் ஒட்டுமொத்த நாவல் வழியாக ஒரு வாழ்க்கைப் பார்வையை வகுத்துரைப்பதிலும் நல்ல தேர்ச்சி கைவரப்பெற்றிருந்ததால் பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய நாவல் நிலைத்து நின்றது. பல தலைமுறைகளைக் கடந்தும் அந்த நாவலுக்குப் புதிய, புதிய வாசகர்கள் தொடர்ச்சியாக உருவானார்கள். தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவல் என ஆய்வாளர்கள் அதனை முன்வைத்தனர். முதல் நாவலின் எந்தச் சாயலும் இல்லாமல் தனித்தன்மையோடு ராஜம் ஐயர் தன் நாவலை எழுதியிருந்ததுதான் அதற்குக் காரணம்.
இந்நாவலை விவேகசிந்தாமணி என்னும் மாத இதழில் 1893 முதல் 1895 வரை ஒரு தொடர்கதையாகவே எழுதினார் ராஜம் ஐயர். பிறகு 1896ஆம் ஆண்டில் விவேகசிந்தாமணி பிரசுரம் அதை நூலாக வெளியிட்டது. தொடர்கதையாக வெளிவந்தபோது இந்த நாவலுக்கு ராஜம் ஐயர் ‘ஆபத்துக்கிடமான அபவாதம்’ என்னும் தலைப்பையே சூட்டியிருந்தார். பிறகு நூல்வடிவம் பெற்றபோது ‘ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள்’ என்ற தலைப்புடன் வெளிவந்தது. கால ஓட்டத்தில் அந்த நாவலுக்கு வாசகர்களின் ஆதரவு பெருகியபோது அதன் தலைப்பு ‘கமலாம்பாள் சரித்திரம்’ என மாற்றமுற்றது. யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிப்படைப்பாக இந்த நாவல் கருதப்படுகிறது.
ராஜம் ஐயரின் இயற்பெயர் சிவசுப்பிரமணிய ஐயர். பள்ளிப்படிப்பை மதுரையிலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். தொடர்ந்து சட்டக்கல்வியைப் பயின்ற அவர் இறுதித்தேர்வில் தோல்வியுற்றார். அத்தோல்வி அவரை நிலைகுலையவைத்தது. வேதாந்த சிந்தனைகளிலும் ஞான மார்க்கத்திலும் தாயுமானவர் பாடல்களை வாசிப்பதிலும் ஈடுபட்டு மெல்ல, மெல்ல மீண்டு வந்தார். பூண்டி அரங்கநாத முதலியார் எழுதிய கச்சிக்கலம்பகப் பாடல்களுக்குக் கட்டுரை வடிவில் விளக்கவுரை எழுதினார். அதுவே அச்சில் வெளிவந்த அவருடைய முதல் படைப்பு.
எதிர்பாராத தருணமொன்றில் அவருக்கு சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் என்ற மகானின் அறிமுகம் கிடைத்தது. ராஜம் ஐயர் அவரையே தன் குருவாகக் கருதினார். அவரிடம் உபதேசம் பெற்று தியான, யோக வழிமுறைகளைப் பயின்றார். அவருடைய வாசிப்பும் சித்தாந்த ஈடுபாடும், ‘இந்த உலகத்தில் ஓர் உயிர் எல்லையற்ற துன்பங்களில் சிக்கித் தவித்தாலும், இறுதியில் இறையருளால் அனைத்திலிருந்தும் மீண்டு நிர்மலமான இன்ப நிலையை அடையும்’ என்னும் கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்கின. தற்செயலாக விவேக சிந்தாமணி இதழில் அவருக்கு ஒரு தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தபோது, இந்த நம்பிக்கையையே கருப்பொருளாகக் கொண்டு தன் நாவலை எழுதி நிறைவு செய்தார்.
நாவலைத் தொடர்ந்து தத்துவ, வேதாந்த, சமய விசாரணைக் கட்டுரைகளை எழுதுவதில் ராஜம் ஐயர் ஆர்வமுடன் ஈடுபட்டார். விவேகானந்தர் ஆசியுடன் தொடங்கப்பட்ட ‘பிரபுத்த பாரதம்’ என்னும் இதழில் பல்வேறு புனைபெயர்களில் அக்கட்டுரை வெளிவந்தன. எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கோளாறு காரணமாக 13 மே 1898 அன்று இருபத்தாறு வயதிலேயே இயற்கையெய்தினார்.
0
மதுரைக்கு அருகிலிருக்கும் சிறுகுளம் என்னும் கிராமத்தைச் சித்தரிக்கும் காட்சியிலிருந்து நாவல் தொடங்குகிறது. அந்தக் கிராமத்தில் நல்ல ஞானமும் கருணையுள்ளமும் கொண்ட முத்துசாமி ஐயர் வசித்துவருகிறார். பேதமின்றி எல்லாவிதமான மனிதர்களிடமும் அன்புடன் பேசிப் பழகும் இயல்புடையவர் அவர். அவருடைய மனைவி கமலாம்பாள். அமைதியும் அனைவரையும் நேசித்து அன்பைப் பொழியும் குணமும் கொண்டவள். அவர்களுடைய மகளின் பெயர் கல்யாணி என்கிற லட்சுமி. பத்து வயது நிறைந்தவள். கல்யாணியை அடுத்து இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தாலும் அவர்கள் நீண்ட காலம் உயிர் பிழைத்திருக்கவில்லை. ஏதோ ஒரு நோயின் காரணமாக குழந்தைப்பருவத்திலேயே இறந்துவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலாம்பாள் கருவுற்றிருக்கிறாள். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பிறக்கவிருக்கும் குழந்தை நீண்ட ஆயுளோடு உயிர்த்திருக்கவேண்டும் என பிரார்த்தனை செய்துகொள்கிறாள்.
முத்துசாமி ஐயருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் பெயர் சுப்பிரமணி ஐயர். அவருடைய மனைவி பொன்னம்மாள். அவர்கள் முத்துசாமி ஐயரின் வீட்டுக்கு அருகிலேயே குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் சுந்தரம். நாலைந்து வயது மட்டுமே நிரம்பிய அவன் எப்போதும் பெரியப்பா முத்துசாமி ஐயர் வீட்டிலேயே இருக்கிறான். சொந்தமாக ஆண் குழந்தை இல்லாத காரணத்தால், முத்துசாமி ஐயர் குழந்தை சுந்தரம்மீது அளவற்ற பிரியம் உள்ளவராக இருக்கிறார். அதனால் அவன் நாள் முழுதும் பெரியப்பா வீட்டிலேயே வசித்துவருகிறான்.
பொன்னம்மாள் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த நாட்டமுடையவள். தெருவில் நடந்து செல்லும்போது எல்லோரும் தன்னையே வியப்புடன் பார்ப்பதாக நினைத்து மகிழ்வாள். அடுத்த கணமே தான் அன்னநடை நடக்கிறோமோ என்று தோன்றி வேகவேகமாக நடக்கத் தொடங்குவாள். அப்போது அவள் நடை மிகவும் விகாரமாக இருக்கும். கணத்துக்குக் கணம் அவளுடைய எண்ண ஓட்டம் மாறியபடியே இருக்கும். எதிலும் நிலையான கருத்து என்பதே இல்லாதவள் அவள். கமலாம்பாள் அளவுக்குத் தான் படித்தவளோ, கருத்துத்தெளிவு உள்ளவளோ அல்ல என்பதையொட்டி அவளிடம் நிரந்தரமாக ஒரு தாழ்வுணர்ச்சி இருக்கிறது. அதை வெல்வதற்காக தேவைக்கும் கூடுதலாகப் பேசிச் சிரித்து பிறர் கவனத்தை ஈர்ப்பதை ஒரு வழக்கமாகப் பின்பற்றுகிறாள். பிறருடன் உரையாடுவதற்கு ஏங்கும் அவளுடைய இயல்பைப் புரிந்துகொண்ட வம்புப்பெண்கள் அவளிடம் ஒரு செய்தியை ஒன்பதாகத் திரித்துப் பேசி அவளுக்கு நெருக்கமானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கின்றனர்.
மகளுக்கு உரிய நேரத்தில் திருமணம் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் முத்துசாமி ஐயர். மகளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை வேண்டும் என்கிற தகவலை நண்பர்களிடம் அவ்வப்போது தெரிவித்திருந்த காரணத்தால் எண்ணற்ற ஜாதகக்குறிப்புகள் வந்து குவிந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நிதானமாகப் பரிசீலித்து பொருத்தமான ஜாதகத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒருநாள் ஒரு ஜோதிடரை வீட்டுக்கு வரவழைக்கிறார். எல்லாக் குறிப்புகளையும் ஒன்றுக்கு நான்கு முறை கவனமாகப் பரிசீலிக்கிறார் ஜோதிடர். இறுதியில், மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயரின் மகனும் மெட்ரிகுலேஷன் வகுப்பில் படித்துக்கொண்டிருப்பவனுமான ஸ்ரீநிவாசன் என்பவனின் குறிப்பைத் தேர்ந்தெடுத்து ‘இதுவே லட்சுமிக்குப் பொருத்தமான ஜாதகம்’ என்று தெரிவிக்கிறார். கோவிலுக்குச் சென்று தெய்வசன்னிதியில் பூப்போட்டு சகுனம் பார்க்கிறார்கள். அவர்கள் நினைத்தபடி வெள்ளைப் பூவே விழுகிறது. அந்த மாப்பிள்ளையையே தேர்ந்தெடுக்கலாம் என முடிவெடுத்துக்கொண்டு அனைவரும் வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்.
சிறுகுளத்தில் ஊருக்கு வெளியே ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றங்கரைதான் அக்கிரகாரத்தில் வசிக்கும் எல்லாப் பெண்களுக்கும் துணிதுவைக்கும் இடம். எல்லாருடைய வீட்டுச் சங்கதிகளையும் அரைகுறையாகத் தெரிந்த நாட்டு நடப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் இடம். யாரோ ஒருத்தி இன்னொருவருடைய வீட்டுச் செய்தியைத் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற பெருமையுடன் தனக்குத் தெரிந்த அரைகுறையான தகவலைச் சொல்லி உரையாடலைத் தொடங்கிவைப்பாள். உடனே ஒவ்வொருவரும் அதையொட்டி தத்தம் கருத்துகளைத் திரித்தும் பெருக்கியும் பகிர்ந்துகொள்வார்கள். அத்தகு வம்புப்பேச்சின் வழியாக உருவாகிப் பெருகும் சுவையில் திளைத்து மகிழ்வார்கள்.
முத்துசாமி ஐயருடைய வீட்டில் ஜாதகம் பார்க்கும் செய்தி அதற்குள் தெருவெங்கும் பரவி, வம்புப்பேச்சைப் பேசிக் களிக்கும் ஆற்றங்கரை வரைக்கும் வந்துவிடுகிறது. அதைப்பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் அப்பாவியாக ஆற்றங்கரைக்கு வரும் பொன்னம்மாளை வம்புக்கு இழுப்பவள் போல ‘ஏன் இத்தனை நாழிகை? கல்யாண அமர்க்களமோ? உன் மைத்துனரகத்துத் திண்ணையில் இரண்டு கிழவர்கள் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்கள் யார்?’ என்று கேள்வி கேட்கிறாள் ஒருத்தி.
தொடக்கத்தில் அப்பேச்சில் பொன்னம்மாளுக்கு எவ்விதமான ஆர்வமும் எழவில்லை. மிகுந்த சலிப்புடன் ‘அது யாரோ? கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? உலகத்தில் அவரவர்கள் பாட்டைக் கவனித்தால் போதாதா?’ என்று பதில் சொல்கிறாள். ஆனால் அந்தப் பதிலில் நிறைவு காணாத பெண்கள் எல்லாவற்றையும் திரித்துத் திரித்துப் பேசி அவள் மனத்தைக் கெடுக்கிறார்கள். தம்பி குடும்பத்துடன் கலந்து பேசாமல் திருமணம் தொடர்பான ஒரு நல்ல செய்தியைத் தொடங்குவது என்பது கிட்டத்தட்ட அவமதிக்கும் செயல் என நினைக்க வைக்கிறார்கள். அனைத்தையும் கேட்டுக் கேட்டு பொன்னம்மாளின் மனமும் திரிந்துபோகிறது.
வீட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தில் அவள் மனம் அனலெனக் கொதிக்கிறது. அவளுடைய தம்பிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் வைத்தி. கமலாம்பாளின் மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பது அவள் எண்ணம். அதைச் சாத்தியப்படுத்துவதற்கு எந்த வழியும் இல்லாதபடி கமலாம்பாளின் வீட்டில் மாப்பிள்ளை ஏற்பாடு முடிவுற்றதை அறிந்து அவள் மனம் கொதிக்கிறது.
சில நாட்களுக்குப் பிறகு லட்சுமிக்கும் ஸ்ரீநிவாசனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. முத்துசாமி ஐயர் வீட்டிற்கு ஊரே திரண்டுவந்து பங்கேற்கிறது. பக்கத்து வீட்டில் இருந்தாலும் அவருடைய தம்பி குடும்பம் கலந்துகொள்ளவில்லை. பொன்னம்மாள் தன் கணவனை வெளியே அனுப்பாமல் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறாள். மனைவிக்கு அஞ்சும் சுபாவமுடைய அவர் கடுமையான தலைவலியால் துன்பப்படுவதாகத் தகவல் அனுப்பிவைக்கிறார். பொன்னம்மாள் தன் மனத்தில் சாதாரணமான ஒரு காழ்ப்புணர்ச்சியை ஊதி, ஊதி அனல்வீசும் நெருப்பாக மாற்றிக்கொள்கிறாள். அந்த அனலால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சுட்டுப் பொசுக்கியபடி இருக்கிறாள். ஒவ்வொரு கணமும் வாய்க்கு வந்தபடி அவதூறுகளை இறைக்கத் தொடங்குகிறாள்.
திருமணத்துக்கான நாள் குறிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் முத்துசாமி ஐயரின் வீட்டில் நடைபெறத் தொடங்குகின்றன. அதைப் பார்த்ததும் தன் அண்ணனைத் தன் தந்தையாகவே நினைத்து மதிப்பு வைத்திருக்கும் சுப்பிரமணிய ஐயர் தன் மனைவியின் கட்டுப்பாடுகளை உதறிவிட்டு அண்ணனுக்குத் துணையாக நின்று திருமண வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். தன் கணவர் தன் வார்த்தையை மீறிச் சென்றதை பொன்னம்மாளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. மேன்மேலும் அவள் மனம் கொதிக்கிறது. என்ன செய்கிறோம் என்கிற தன்னுணர்வு கூட அப்போது அவள் வசத்தில் இல்லாமல் போகிறது. மூன்று நாள் திருமணமும் முடிந்து களைப்புடன் வீட்டுக்குத் திரும்பிய கணவரிடம் கள்ளநாடகம் ஆடி மருந்து கலந்த பாலைக் கொடுத்துக் கொல்லப் பார்க்கிறாள். நல்ல வேளையாக பாலின் மணத்தில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து வாந்தியெடுத்ததால் அவர் மயக்கத்தோடு தப்பித்துவிடுகிறார்.
0
மகளுடைய திருமணத்துக்குப் பிறகு கமலாம்பாளுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது. தன் நீண்டநாள் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றிவிட்டான் என நினைத்து மகிழ்ச்சியடைகிறார் முத்துசாமி ஐயர். குழந்தையைப் பார்ப்பதற்காக சம்பந்தி வீட்டார் மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள். எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு நடைபெறுகிறது.
அன்று மாலை வேடிக்கை பார்ப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்த ஸ்ரீநிவாசனை பொன்னம்மாளின் தம்பி மகன் வைத்தி சடுகுடு விளையாட அழைக்கிறான். ஆர்வத்தோடு அவனும் ஆட்டத்தில் இணைந்துகொள்கிறான். ஆனால் அந்த விளையாட்டு வினையாக முடிகிறது. வேண்டுமென்றே ஸ்ரீநிவாசனை அடித்துக் காயப்படுத்தி அனுப்பி வைக்கிறான் அவன்.
ஸ்ரீநிவாசனின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்து வருத்தமுற்ற முத்துசாமி ஐயர் தன் தம்பியிடம் முறையிடச் செல்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக, அது வாய்ச்சண்டையாகவும் கைச்சண்டையாகவும் முடிவடைகிறது. தம்பியின் நடத்தையால் முத்துசாமி ஐயர் மனம் துவண்டுவிடுகிறார்.
மருந்து கலந்த பாலைப் பருகிய சுப்பிரமணிய ஐயர் மயங்கி விழுந்திருந்த இரவில், அவருடைய வீட்டிலிருந்து நகைகளையும் மாடுகளையும் அந்த வட்டாரத்தில் பெயர்போன திருடனான பேயாண்டித்தேவனின் கூட்டம் திருடிக்கொண்டு சென்றுவிடுகிறது. முத்துசாமி ஐயர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி திருடர்களைக் கைது செய்ய காவல்துறையை அணுகுகிறார். அவர்களும் காத்திருந்து பேயாண்டித்தேவனைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவனுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை கிடைக்கிறது. தலைவன் பெற்ற தண்டனைக்குப் பழி வாங்கும் விதமாக அவனுடைய கூட்டாளிகள் முத்துசாமி ஐயரின் இளைய மகனைக் கடத்திக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். ஐயரும் கமலாம்பாளும் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் துடிக்கிறார்கள்.
குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என ஊரார் பேசிக்கொள்வதைக் கேட்டு கமலாம்பாள் துயரத்தில் மூழ்குகிறாள். குழந்தையைத் தேடிக்கொண்டு நான்கு திசைகளிலும் சென்ற ஆட்கள் வெறும் கையோடு திரும்பி வருகின்றனர். காவல்துறையினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று ஆண்டுகளாக அவர்கள் எடுத்த எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டவில்லை. கமலாம்பாளும் முத்துசாமி ஐயரும் வேதனையில் மூழ்கி மனம் துவண்டு கிடக்கிறார்கள்.
கணவனின் மறைவுக்குப் பிறகு சொந்த ஊரில் வாழ விரும்பாத பொன்னம்மாளின் தாய் எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்காக ஆதரவு தேடி மகளுடைய வீட்டுக்கு வருகிறாள். வரும்போது தனக்குத் துணையாக இன்னொருத்தியையும் அழைத்துவருகிறாள். இருவரையும் தன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்கிறாள் பொன்னம்மாள். அவர்கள் பொன்னம்மாளுக்கு அடிக்கடி பிழையான ஆலோசனைகளை வழங்கி தவறான வழியில் இழுக்கிறார்கள். ஊர் வம்புகளைப் பேசுவதே அப்பெண்களின் தினசரி வேலையாகிவிடுகிறது. சுப்பிரமணிய ஐயர் எதையும் தடுக்க இயலாத நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவராக இருக்கிறார்.
தம்பியின் குடும்பம் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து முத்துசாமி ஐயர் வெறுப்படைகிறார். இயலாமையின் விளைவாக, காரணமில்லாமல் மனைவி கமலாம்பாள் மீதும் அடிக்கடி எரிந்து விழுகிறார். கடுமையான சொற்களால் வசைமழை பொழியத் தொடங்குகிறார்.
அவர் தன் பெரும்பாலான சொத்தை விற்று பம்பாய் நிறுவனமொன்றில் முதலீடு செய்திருந்தார். ஒருநாள் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டதாக தகவல் வருகிறது. அதை அறிந்து அவர் மனம் முற்றிலுமாக உடைந்துவிடுகிறது. முதலில் பெற்றெடுத்த குழந்தை போயிற்று, பிறகு மன அமைதியும் போயிற்று, இப்போது பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி சேர்த்துவைத்திருந்த செல்வமும் போயிற்று என்றதும் அவர் மனம் துக்கத்தில் மூழ்கிவிடுகிறது. ஒருமுறை பம்பாய்க்குச் சென்று நிறுவனத்தினரைச் சந்தித்து உண்மைத் தகவலை அறிந்துகொண்டு வருவதற்காக பம்பாய்க்குப் புறப்படுகிறார்.
0
முத்துசாமி ஐயருடைய பயணம் தோல்வியில் முடிவடைகிறது. அவருடைய இழப்புக்குப் பொறுப்பேற்க நிறுவனத்தினர் தயாராக இல்லை. அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மன அமைதிக்காக சிதம்பரத்துக்குச் சென்று ஆருத்ரா தரிசனம் பார்த்துவிட்டு ஊருக்கு வருவதாகக் கமலாம்பாளுக்குக் கடிதம் எழுதிவிட்டு பம்பாயைவிட்டுப் புறப்படுகிறார். கமலாம்பாளுக்குக் கடிதம் வந்த செய்திகூட எப்படியோ வெளியே கசிந்துவிடுகிறது. ஆற்றங்கரையில் அவதூறு பேசிக் களிக்கும் பெண்கள் அதைக் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள்.
பொன்னம்மாளின் காதுக்கும் அந்தச் செய்தி வந்து சேர்கிறது. அதைக் கேட்டதும் பொன்னம்மாளை அண்டியிருக்கும் பெண்கள் அவளைத் தவறான வழியில் இறங்கத் தூண்டுகிறார்கள். கமலாம்பாள் குடும்பத்தைப் பழிவாங்கத் தக்க தருணத்துக்காகக் காத்திருந்த பொன்னம்மாளைத் தந்திரமான தம் சொற்கள் வழியாகத் தம் திட்டத்துக்கு இணங்க வைக்கின்றனர்.
கணவன் ஊரில் இல்லாத சமயத்தில் கமலாம்பாள் வேறொரு ஆடவனோடு தொடர்பில் இருப்பதாக ஒரு செய்தியை ஆருத்ரா தரிசனத்துக்கு வரும் முத்துசாமி ஐயருக்குத் தெரிவிப்பதுதான் அத்திட்டம். களங்கமானவள் என்கிற பட்டம் சமூகத்தின் முன்னிலையில் அவளைத் தலைகுனியவைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆருத்ரா தரிசனத்துக்கு வரும் முத்துசாமி ஐயரைச் சந்தித்து தகவலைத் தெரிவிப்பதற்காக பணம் கொடுத்து தீட்சிதர் ஒருவரை ஏற்பாடு செய்கின்றனர். பணத்தாசை கொண்ட தீட்சிதர் அத்திட்டத்துக்கு உடன்பட்டு வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்புவதாகத் தெரிவித்துவிட்டு சிதம்பரத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
முத்துசாமி ஐயர் வந்து சேர்வதற்கு முன்னால் சிதம்பரத்துக்குச் சென்ற தீட்சிதர் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போல, முத்துசாமி ஐயரின் வருகைக்காக கோவில் வாசலிலேயே காத்திருக்கிறார். அவர் நினைத்தது வீண் போகவில்லை. முத்துசாமி ஐயர் தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் வேளையில் அவரைச் சந்தித்துவிடுகிறார் தீட்சிதர். ஊர் விவகாரத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் முத்துசாமி ஐயர் ‘ஊரில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?’ என்றொரு கேள்வியைப் பொதுவாகக் கேட்கிறார். அவரும் சுற்றி வளைத்து எதை எதையோ பேசிவிட்டு, கடைசியாக விருப்பமில்லாமல் சொல்வதுபோல கமலாம்பாளும் நாராயணசாமி என்பவரும் தொடர்பில் இருப்பதாக ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார். அதைக் கேட்ட முத்துசாமி ஐயரின் இதயம் உடைந்துபோகிறது.
கடைசியில் மனைவியையும் இழந்துவிட்டோமே என்கிற இழப்புணர்வு முத்துசாமி ஐயரை வாட்டியெடுக்கிறது. ஆத்திரத்தில் மனைவியை மனத்துக்குள்ளேயே திட்டி ஆறுதலைத் தேடிக்கொள்கிறார். அக்கணமே ஊருக்குத் திரும்பிச் செல்லும் திட்டத்தைக் கைவிடுகிறார். தீட்சிதரை அனுப்பிவைத்துவிட்டு, அமைதியில்லாமல் சிதம்பரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறார். குடும்ப வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார். ஊருக்கு வெளியே ஒரு பாழ்மண்டபத்தைப் பார்த்துவிட்டு, அங்கே சென்று அமர்கிறார். இருள் சூழும் வரையில் காத்திருந்து அந்த மண்டபத்திலேயே தூக்கு போட்டுக்கொண்டு உயிர் துறக்கத் திட்டமிடுகிறார்.
இருள் கவிந்ததும் தன் தற்கொலை முயற்சியைத் தொடங்குகிறார் முத்துசாமி ஐயர். மண்டபத்தின் உத்திரத்தில் கயிற்றை மாட்டிவிட்டு மறுமுனையைக் கழுத்தைச் சுற்றி சுருக்கிடும் வேளையில் விதானத்தில் அமர்ந்திருந்த ஒரு துறவி அவரைக் கனிவான குரலில் அழைக்கிறார். அந்தக் குரல் அவரை என்னமோ செய்கிறது. உடனே முத்துசாமி ஐயர் கயிற்றை அறுத்துவிட்டு கீழே இறங்கிவருகிறார். துறவி அவரிடம் அருகிலிருக்கும் குளத்தில் சந்தியாவந்தனம் செய்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார். அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்ட முத்துசாமி ஐயர் குளத்தை நோக்கி நடந்துசெல்கிறார்.
அவர் எப்போதும் வழக்கமாகப் பாடும் தாயுமானவர் பாடலை வாய்விட்டு உருக்கமுடன் பாடியபடி காயத்ரி ஜபத்தைத் தொடங்கும் தருணத்தில் கோவிலிலிருந்து கணீர் கணீர் என அர்த்தஜாம மணி அடிக்கும் ஓசை கேட்கிறது. கடலோசை போல எழுந்த அந்த முழக்கத்தைக் கேட்டதும் முத்துசாமி ஐயரின் உடல் சிலிர்க்கிறது. ‘நான் எப்போது உன் கருணைக்கு உரியவனாவேன்? என் மனக்கவலையை உன்னால் ஒழிக்கமுடியாதா?’ என்று இறைவனை நினைத்து உருகுகிறார். அக்கணத்தில் ஒருகணம் எங்கெங்கும் ஒளிமயமாக வெளிச்சம் பரவி மறைந்ததுபோல இருக்கிறது. அதைக் கண்டு மெய்மறந்து நிற்கிறார் முத்துசாமி ஐயர். ‘கண்டேன் கண்டேன் காணாததைக் கண்டேன்’ என்று மகிழ்ந்து ஆனந்தக் களிப்போடு பாடியபடியே மண்டபத்துக்குத் திரும்பிவருகிறார். துறவியின் காலடியில் விழுந்து தான் கண்ட காட்சியை விவரிக்கிறார். அந்தத் துறவி அவர் தலைமீது கைவைத்து ஆசி வழங்கி, ‘நமக்கு இங்கே இனி வேலையில்லை. வா போவோம்’ என மண்டபத்தைவிட்டு வெளியே நடக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து நடக்கிறார் முத்துசாமி ஐயர்.
ஆருத்ரா தரிசனம் முடிந்து திரும்புவதாகச் சொன்ன கணவர் குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரும் வந்து சேராததைக் கண்டு கமலாம்பாள் மனம் கலங்கி நிற்கிறாள். அவளுக்கு ஆறுதல் கூறக்கூட ஒருவரும் இல்லை. அம்மாவின் தவறான போதனைக்கு உடன்பட்டு செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டதை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறாள் பொன்னம்மாள். ஒன்றைப் பத்தாக, பத்தை நூறாகப் பொய்களைப் புனைந்துரைப்பது அவளுக்குப் புதிதல்ல என்றபோதும், கமலாம்பாள் பற்றி புனைந்துரைத்த அவதூறு அவள் ஆழ்மனத்தைத் தைக்கிறது. அந்தக் குற்ற உணர்வில் அவள் மனம் பேதலித்துவிடுகிறது. சித்தம் கலங்கிய நிலையில் ஒருவரும் அறியாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டு தெருக்களில் உளறியபடி அலையத் தொடங்குகிறாள்.
பணி ஓய்வுக்குப் பிறகு அந்த ஊரிலேயே வசிக்கும் நீதிபதி வைத்தியநாத ஐயர், பொன்னம்மாளின் நடத்தைமுறையில் ஏதோ வித்தியாசம் இருப்பதைப் பார்த்துவிட்டு அவளோடு உரையாடியபடி அவளை விசாரிப்பதற்காக தன் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். அவள் பணம் கொடுத்து தீட்சிதரை ஏற்பாடு செய்து கமலாம்பாளின் கற்புக்குக் களங்கம் விளைவிக்கும் செய்தியை முத்துசாமி ஐயரிடம் தெரிவிப்பதற்கு அனுப்பிவைத்ததை உளறிவிடுகிறாள். அவளை வீட்டிலேயே அறையில் தங்கியிருக்கச் செய்துவிட்டு, அவளுடைய சொந்த வீட்டில் தங்கியிருக்கும் பிற பெண்களை அழைத்துவர ஆளை அனுப்புகிறார். அவர்கள் வந்ததும் அவர்களை விசாரிக்கவேண்டிய முறையில் விசாரித்து உண்மையைத் தெரிந்துகொள்கிறார். பிறகு காவல்துறையினரை வரவழைத்து, அவர்களிடமே வாக்குமூலங்களைப் பதிவு செய்யவைத்து, கைது செய்து சிறையில் அடைக்கவைக்கிறார்.
பெண்கள் தமக்குள் பொழுதுபோக்காக பேசத் தொடங்கும் வம்புப்பேச்சு மெல்ல மெல்லப் பெரிதாகி, ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிடுகிறது. கமலாம்பாள் குடும்பத்தின் உயர்வையும் சரிவையும் நாவலின் முதல் பகுதியில் முழுமையாக விவரிக்கிறார் ராஜம் ஐயர். இரண்டாம் பகுதியில் காணாமல் போன ஐயரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக மற்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் விரிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் குழுவைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் வேறொரு திசையில் காணாமல் போகிறான். திருவொற்றியூர், பம்பாய், காசி, புதுச்சேரி என பல இடங்களை நோக்கி கதை நகர்ந்தபடி செல்கிறது. இறுதியில் துன்பங்கள் அனைத்தும் அகல, அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
கமலாம்பாளைப் பார்த்ததும் அவளைப் பற்றி தன்னிடம் எடுத்துரைக்கப்பட்ட பொய்யுரையை நம்பியதற்காக வெட்கமடைகிறார் முத்துசாமி ஐயர். இருவரும் மீண்டும் ஊருக்குத் திரும்பி தம் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். கமலாம்பாள் பக்திவழியைத் தன் வழியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறாள். முத்துசாமி ஐயர் ஞானவழியைத் தன் வழியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்.
அக்கணத்தில் அவர்கள் மனத்தில் யார்மீதும் வெறுப்புணர்வோ பகையுணர்வோ இல்லை. அனைவரையும் மன்னிக்கும் மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். ‘எல்லாம் இறைவன் செயல் என்று நம்பத் தொடங்கிய பிறகு, இறைவனுடைய செயலுக்கு அப்படியே ஆகட்டும் என்று ஏற்றுக்கொண்டு நடப்பது மட்டுமே நம் வழியாக இருக்கவேண்டும். அதற்கு அப்பால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்பதுபற்றியோ மாறுபட்டு நடப்பதைப்பற்றியோ நாம் யோசிக்கவும் கூடாது’ என்கிற எண்ணமே அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.
0
‘கமலாம்பாள் சரித்திரம்’ தமிழில் பெண்ணை மையப்பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் படைப்பாகும். நாவலில் இடம்பெற்றிருக்கும் எல்லாப் பாத்திரங்களையும் மிகையுணர்ச்சியோ நாடகத்தன்மையோ சிறிதுமின்றி படைத்திருக்கும் ராஜம் ஐயர் பாராட்டுக்குரியவர்.
இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் கமலாம்பாளும் பொன்னம்மாளும் இரு துருவங்களாக இருக்கிறார்கள். கமலாம்பாள் தன் வாழ்வில் எண்ணற்ற துன்பங்களை எதிர்கொள்கிறாள். ஆயினும் இறுதியில் நன்மையையும் நிறைவையும் அடைகிறாள். பொன்னம்மாள் தொடக்கத்திலிருந்தே வம்புப்பேச்சில் ஈடுபடும் குணம் கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய பொறாமையுணர்வுக்கு இதுதான் தொடக்கப்புள்ளி. அது செயல்பட்டிருக்கும் வேகத்தைப் படிக்கும்போது அச்சமாகவே இருக்கிறது. தொடக்கத்தில் அந்த உணர்வு அவளுடைய நட்புவட்டம் பெருகுவதற்கும் பொழுதுகளை இனிமையாகக் கழிப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் இறுதியில் அதே உணர்வு அவளைப் பித்தாக்கித் திரியவைத்துவிடுகிறது.
0
கமலாம்பாள், பொன்னம்மாள் ஆகிய முக்கிய பாத்திரங்களுக்கு இணையான வகையில் பேயாண்டித்தேவன், ஆடுசாப்பட்டி தமிழ் வித்துவான் அம்மையப்பன், சச்சிதானந்த சுவாமிகள் போன்ற பிற துணைப்பாத்திரங்களையும் செறிவான வகையில் படைத்துள்ளார் ராஜம் ஐயர். அக்காலத்து மனிதர்களின் சிந்தனைப் போக்குகளையும் வாழ்வியல் முறைகளையும் இப்பாத்திரங்கள் வழியாகப் புரிந்துகொள்ள முடியும்.
பேயாண்டித்தேவன் ஒரு கொள்ளைக்கூட்டத்தின் தலைவன். தடம் தெரியாமல் திருடிவிட்டுச் செல்பவன். ஆனால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாமை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுதல், ஊருக்கு உபகாரம் செய்யும் பெரியோரை மதித்தல் என அவனுக்கென சில நியதிகள் இருக்கின்றன. அவற்றை மீறி அவன் ஒருபோதும் செயல்படுவதில்லை.
ஒருமுறை மதுரைக்கு அருகில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு ஜமீன்தாருடைய காளைகள் தோல்வியடைகின்றன. அவற்றை வெற்றி கண்ட காளைகளை வைத்திருப்பவர் சிறுகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐயர். வெற்றி பெறும் காளைகள் எப்போதும் தம்வசம் இருக்கவேண்டுமே தவிர, பிறரிடம் இருக்கக்கூடாது என்னும் எண்ணம் கொண்டிருக்கிறார் அந்த ஜமீன்தார். அவற்றை எப்படியாவது சுப்பிரமணியத்திடமிருந்து கவர்ந்துவிட வேண்டும் என அவர் மனம் துடிக்கிறது. அதனால் அவர் பேயாண்டித்தேவன் உதவியை நாடி வருகிறார்.
பேயாண்டித்தேவனை விருந்துக்கு வரவழைத்து போதையேறும் வகையில் மது அருந்தச் செய்கிறார் ஜமீன்தார். போதையின் உச்சத்தில் தன் வேண்டுகோளை அவனிடம் முன்வைக்கிறார். அவனும் மாடுகளைக் கவர்ந்துவந்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிடுகிறான். மறுநாள் போதை தெளிந்த பிறகே அவனுக்குத் தான் செய்த பிசகு புரிகிறது. ஆயினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்னும் தன் கொள்கையின் காரணமாக நள்ளிரவு வேளையில் சுப்பிரமணி ஐயரின் வீட்டுக்குச் சென்று காளைகளைத் திருடிவந்து ஜமீன்தாரிடம் ஒப்படைக்கிறான்.
துரதிருஷ்டவசமாக, திருட்டு நிகழ்ந்த சில நாட்களிலேயே அவன் காவலர்களிடம் பிடிபட்டுவிடுகிறான். இரண்டாண்டு தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறான். காவல்துறையில் முத்துசாமி ஐயருக்கு இருந்த செல்வாக்குதான் அதற்குக் காரணம் என்பதை அறிந்துகொண்டதும் அவர்மீது அவன் சீற்றமுறுகிறான். அவனுடைய சீடர்கள் ஒருவரும் அறியாதபடி ஐயரின் மகனைக் கடத்திச் சென்றுவிடுகிறார்கள். குழந்தையைப் பறிகொடுத்த அக்குடும்பம் நிலைகுலைந்து சரிந்துவிடுகிறது.
விடுதலை பெற்று திரும்பி வந்த பேயாண்டித்தேவன் பிழையை உணர்ந்துகொள்கிறான். ஊருக்கெல்லாம் உபகாரம் செய்கிறவராக இருந்த முத்துசாமி ஐயர் துறவியாக காசியில் அலையும் செய்தியைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திப்பதற்காகக் காசிக்குச் செல்கிறான். இக்கட்டான ஒரு தருணத்தில் அவரைச் சந்தித்து, அதுவரை வேறொருவர் வீட்டில் வளர்ந்துவந்த அவருடைய மகனை அவரிடம் ஒப்படைக்கிறான். பம்பாய் நிறுவனத்தில் அவர் பறிகொடுத்த செல்வமும் அவன் வழியாகவே அவரை வந்து சேர்கிறது.
தமிழ் வித்துவான் ஆடுசாப்பட்டி அம்மையப்பப்பிள்ளை. தொடக்கத்தில் மெட்ரிகுலேஷன் படிக்கும் ஸ்ரீநிவாசனின் ஆசிரியராகத்தான் வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். கதையின் போக்கில் அவருக்கும் முத்துசாமி ஐயருக்கும் இடையிலான உறவு கொஞ்சம் கொஞ்சமாக முன்வைக்கப்படுகிறது. முத்துசாமி ஐயரின் தந்தை ரங்கசாமி ஐயர். அந்தக் காலப் பழக்கவழக்கப்படி அவருக்கும் அப்போது பிரபலமாக விளங்கிய தேவதாசியான தெய்வானைக்கும் இடையில் தொடர்பு இருந்தது. நகருக்குள் அவருடைய குடும்பம் வசித்துவந்ததால், நகரின் வேறொரு பகுதியில் தெய்வானையோடு வாழ்ந்துவந்தார் அவர். அவர்களுக்கு ஜானகி என்றொரு மகள் இருந்தாள். தந்தையின் மரணத்துக்குப் பிறகு அக்குடும்பத்தையும் காக்கும் பொறுப்பை முத்துசாமி ஐயர் ஏற்றுக்கொண்டார். அம்மையப்பப்பிள்ளைக்கு ஜானகியைத் திருமணம் செய்துவைத்து அவர்கள் வாழ்வதற்கான வசதியையும் செய்துகொடுத்தார். மகனைத் தொலைத்துவிட்டு, கணவன் போன திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த கமலாம்பாளுடைய தேடுதல் படலத்தில் அவரும் பங்கெடுத்துக்கொள்கிறார்.
பாழ்மண்டபத்தில் தூக்கு போட்டுக்கொள்வதற்காக வந்த முத்துசாமி ஐயரைக் காப்பாற்றியவர் அதே மண்டபத்தில் விதானத்தில் தங்கியிருந்த சச்சிதானந்த சுவாமிகள். அதற்குப் பிறகு முத்துசாமி ஐயரைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டார் அவர். செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரையும் அழைத்துச்சென்றார். ஆன்மிகக் கருத்துகளை அவருடைய மனத்தில் விதைத்து நலிந்திருந்த அவருடைய எண்ணங்களைப் பக்குவமுறச் செய்தார். நடைப்பயணமாகவே அவர்கள் இருவரும் காசி நகரத்துக்குச் செல்கிறார்கள். காணாமல் போன கணவனைத் தேடிக்கொண்டு வந்த கமலாம்பாளோடு சேர்ந்து வாழும்படி கூறி மீண்டும் சிறுகுளம் கிராமத்துக்கே முத்துசாமி ஐயரை அனுப்பிவைக்கிறார்.
பேயாண்டித்தேவன், ஆடுசாப்பட்டி தமிழ் வித்துவான் அம்மையப்பன், சச்சிதானந்த சுவாமிகள் ஆகிய மூவரும் அன்றைய காலகட்டத்தின் அடையாளங்கள். அவர்களுடைய உருவம் தெளிவாகப் புலப்படும் வகையில் ராஜம் ஐயர் தன் நாவலில் அவர்களை அழகிய சொற்சிற்பங்களாகச் செதுக்கிவைத்துள்ளார்.
0
புரளி பேசித் திரியும் பெண்களை, நற்றிணையில் சீத்தலைச்சாத்தனார் எழுதிய ஒரு பாடலில் அலர்வாய்ப்பெண்டிர் என்று அடைமொழியிட்டுக் குறிப்பிடுகிறார். ஒரு புலி தன் சின்னஞ்சிறு கால்களால் மிகப்பெரிய யானையைத் தாக்கி வீழ்த்துவதுபோல அலர்வாய்ப்பெண்டிரின் கிசுகிசு பேச்சு பிற பெண்களின் வாழ்க்கையைச் சிதைத்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒருவர் ஏன் புரளி பேசுவதில் மகிழ்கிறார், பிறர் துக்கத்தைக் கண்டு ஒருவரால் எப்படி மனநிறைவடையமுடியும் என்பதெல்லாம் உளவியல் சார்ந்த கேள்விகள். கமலாம்பாளைத் துயரத்தில் ஆழ்த்தி வேடிக்கை பார்க்கும் பொன்னம்மாளிடம் வெளிப்படுவதும் அத்தகு உளவியல் சிக்கல்களில் ஒன்று. அதைப் பற்றிய சிந்தனைக்கும் ஆய்வுக்கும் வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார் ராஜம் ஐயர். அவருடைய எதார்த்தச் சித்தரிப்பும் பல்வேறு தளங்கள் சார்ந்த செய்திகளை நேர்த்தியாக இணைத்து ஒரு காட்சியை உருவாக்கும் தனித்தன்மையும் பாராட்டுக்குரியவை. இந்த அம்சங்களாலேயே, 125 ஆண்டுகளுக்குப் பிறகும் ராஜம் ஐயரின் நாவல் வாசிக்கத்தக்க ஒரு படைப்பாக திகழ்கிறது.
0

