Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

1. ஸ்ரீராஜராஜ நாடகம்

தஞ்சை பெரியகோயிலில் உள்ள 2ஆம் ராஜேந்திரனின் கல்வெட்டில் ‘ஸ்ரீ ராஜராஜ நாடகம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வைகாசி பெரிய திருவிழாவில், சாந்திக்கூத்தனான திருமுதுகுன்றம் விஜயராஜேந்திர ஆசாரியன் எனும் கூத்து ஆசிரியர் தலைமையில் இது நிகழ்ந்ததைக் கல்வெட்டு கூறுகிறது.

பலவித கூத்துகள் இருந்தாலும், பெரும்பான்மையாக மக்கள் வழக்கத்தில் இருப்பவை, சாந்திக்கூத்து மற்றும் விநோதக்கூத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கதையைத் தழுவி நிகழ்த்தப்படும் நாடகம் என்பது சாந்திக்கூத்தின் பகுதியாக இருந்துள்ளது. இதனால் இன்று தெருக்கூத்து என்று கூறுவது முற்காலத்தில் சாந்திக்கூத்து என்கிற பெயரைப் பெற்றிருந்தது. ராஜராஜனின் போர் வெற்றிகள், பராக்கிரமங்கள் போன்றவற்றை வைகாசி பெருவிழா அன்று மக்கள் மனம் மகிழ கூத்துகளாக நடத்தியிருக்கக்கூடும். வட தமிழகத்தின் விருத்தாச்சலம் (திருமுதுகுன்றம்) ஊரைச் சேர்ந்தவர் சாந்திக்கூத்தர் என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இன்று வரையிலும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் கூத்தாடும் கலைஞர்கள் பாரம்பரியமாக இருந்து வருகின்றனர்.

கல்வெட்டு

‘ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன் முன்னோன் சேனை பின்னது வாக எதிரமர் பெறாது எண்டிசை நிகழப் பறையது கறங்கின வார்த்தை கேட்டு இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டி பேராற்றங் கொப்பத்து வந்தெதிர் பெருத ஆகவ மல்லன்தன் அடல்சேனை எல்லாம் பாராது நிகழப் பசும்பிணம் ஆக்கி ஆகவ மல்லன் புரக்கிட்டோடஅவன் ஆனையும் குதிரையும் ஒட்டக நிரைகளும் பெண்டிர் பண்டாரமும் அகப்பட பிடித்து விபவமும் கொண்டுவ விஜயாபி ஷேகம் பண்ணி வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய கோப்பர கேசரி வன்ம ரான உடையார் இராசேந்திர தேவர்க்கு யாண்டு ஆறாவது உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார் கோயில் ஸ்ரீராஜராஜ நாடகமாட ….நம் திருவாய்க்கெழ்விப் படி சாந்திக்கூத்தன் ….திருமுதுக்குன்ரனான விஜயராஜேந்திர ஆச்சார்யானுக்கும்….’

2. மானம்பாடி தமிழ்க்கூத்து

கும்பகோணம்-சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள சோழபுரம் என்கிற ஊர், மக்கள் வழக்கில் மானம்பாடி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு ஒன்று, முதலாம் குலோத்துங்க சோழரின் 18ஆம் ஆட்சியாண்டைக் குறிக்கிறது. முதலாம் ராஜேந்திர சோழரின் காலத்தில் ‘ராஜேந்திர சிம்ம வளநாடு’ என்று அறியப்பட்ட இப்பகுதி முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ‘விருதராஜ பயங்கர வளநாடு’ எனப் பெயர் மாற்றம்பெற்றது.

இக்கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா உற்சவத்தில், இறைவன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராஜ பயங்கர ஆசாரியன் என்பவர் ‘தமிழ்க்கூத்து’ நடத்தினார். இந்தக் கூத்து ஆசிரியரும் திருமுதுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் 5 முறை இக்கூத்து நிகழ்த்தப்பெற்றது.

இக்கூத்தை நிகழ்த்தியவருக்கும் அவரது சந்ததியினருக்கும் ‘கூத்தாட்டு காணியாக’ நிலம் ஒன்றை இவ்வூர் நகரத்தாரும் இக்கோயில் தேவகன்மிகளும் வழங்கியுள்ளார்கள். (தேவகன்மிகள் என்பவர்கள், இன்றைய காலகட்டத்தில் கோயில்களை நிர்வகிக்கும் அறங்காவலர்களைப் போன்றவர்கள்).

இசையும் ஆடலும் கோயில்களுடன் இரண்டறக் கலந்தே வளர்ந்து வந்தன. இசையும் ஆடலும் கலந்த கூத்துகள் கோயில் திருவிழா காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் நூல்கள் வழியாக இக்கூத்துகள் பொதுவாகச் சாந்திக்கூத்து, விநோதக்கூத்து என வகைப்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம். சாந்திக்கூத்து என்பது சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நால்வகையாகவும், விநோதக்கூத்து என்பது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என 6 வகையாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வகைக் கூத்துகள் தவிர்த்து, சாக்கைக்கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து போன்ற கூத்துகள் சோழர் காலத்தில் கோயில் விழாக்களின்போது நடத்தப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. திருவீழிமிழலை, கோட்டூர், காமரசவல்லி, கீரனூர், கீழப்பழுவூர் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் திருவிழாக் காலங்களில், சாக்கைக்கூத்து நடத்தப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. அதேபோல் திருநள்ளாறு, திருவாடுதுறை, வயலகம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் ஆரியக்கூத்து திருவிழாக்காலங்களில் நடைபெற்றுள்ளது.

மானம்பாடியில் உள்ள கல்வெட்டு, இவ்வூர்க் கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவின்போது தமிழ்க்கூத்து என்கிற ஒரு வகையான கூத்து நடைபெற்ற தகவலைத் தெரிவிக்கிறது. மற்ற கூத்துகள் குறித்துத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் பல கோயில்களில் காணப்பட்டாலும், தமிழ்க்கூத்து குறித்துத் தெரிவிக்கும் ஒரே கல்வெட்டு இக்கோயிலில்தான் உள்ளது. இக்கல்வெட்டு வழியாகத்தான் இப்படியொரு கூத்து தமிழகக் கோயில்களில் நடத்தப்பட்டது தெரியவருகிறது. இத்தகைய அரிய தகவல் உள்ளதால் தமிழக வரலாற்றில் இக்கோயில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல் வேறு ஊர்களிலும் தமிழ்க் கூத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.

3. திருநள்ளாறு கோயில் நாடகம்

கோலம் புனைந்து ஆரியக்கூத்து ஆடப்பட்ட மரபு குறித்து, திருநள்ளாறு கோயிலில் காணப்படும் முதலாம் ராஜாதிராஜனின் 35ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1053) கல்வெட்டு (புதுச்சேரி மாநில கல்வெட்டு எண் 455) தெரிவிக்கிறது.

திருநள்ளாறுடையார் கோயிலில் ஆரியக் கூத்தாடுவதற்காகக் காணி பெற்றிருந்த ஸ்ரீகண்டன் கம்பனான அபிமானமேரு நாடகப் பேரரையனுக்கும் ஸ்ரீகண்டன் அரையன் மக்களுக்கும், ‘மாசி மாதத் திருநாளில் ஐந்தங்கமும் வைகாசி விசாகத் திருநாளில் ஐந்தங்கமும், ஆடுவதற்கு நிலம் மூன்று வேலியும்’ தரப்பட்டது. மேலும் இவர்களுக்கும் இவர்கள் கூட்டத்தினருக்கும் இரு திருநாள்களுக்கும் திருவிழாக்கொற்றுக்காக (உணவு) 20 கலம் நெல்லும், ஓரங்கத்துக்கு ‘முகமெழுத’ (முகத்தில் வண்ணம் பூசவது – கேரளக் கதகளியை நினைவுபடுத்துகிறது) எண்ணெய்யும் மாவும் அளிக்கப்பட்டுள்ளன.

அங்கம் என்பது நாடகத்தின் ஒரு பிரிவு. சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரை, பரதநாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றால் இது தெரியவருகிறது. நாடகம் ஆடுவோரின் பெயர்களில் உள்ள ‘அரையன்’ எனும் சொல் திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் போன்ற வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி அவிநயிக்கும் அடியாரைக் குறிப்பிடப் பயன்படும் ‘அரையர்’ என்கிற வழக்கோடு ஒத்துப்போகிறது.

4. கலைஞர்களுக்குச் சம்புவராயரின் மரியாதை

சோழமண்டலத்தில் கூத்து நடத்துபவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை அளிப்பார்களோ அதே அளவில் தொண்டைமண்டலத்தில் கூத்து நடத்துபவர்களுக்குச் சம்புவராயர் மரியாதை அளித்து, அதற்கிணங்க அரண்மனையார் (வாயிலார்) நடந்துகொள்வர் எனச் சம்புவராயர் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தின்போது சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் கூத்துக் கலைஞர்கள் இருந்ததை இதிலிருந்து அறியலாம்.

கல்வெட்டு

1. திருவாய்க் கேழ்வி முன்னாக சம்புவராயர்க்கு
2. யஎ வது ஜயங்கொண்டசோழ மண்டல
3. த்து எயிற்கோட்டத்து நகரங் காஞ்சிபுரத்து
4. கும்பநாயற்று ஷூவபூவக்ஷத்து வெள்ளிக்கிழமை
5. உபாஜியும் பெற்ற திருவாதிரை நாள் தொண்டை மண்டலத்து
6. சாலைகள் தங்களுக்கு ஷூவமானபடியே சோழமண்டல
7. மரியாதி காஞ்சிபுரத்திலும் தொண்டைமண்டலத்தில்
8. தாங்கள் இருந்த ஊர்கள் தோறும் வாயிலாரை
9. தங்கள் நாடகம் கூத்துக் காணக்கடவர்கள்
10. இப்படிக்கு தாங்கள் இருந்த ஊர்கள் தோ
11. நும் கல்லுவெட்டி நாட்டிக் கொள்வது

 5. சாக்கைக்கூத்து

அரியலூர் மாவட்டத்தில் காமரசவல்லி எனும் சோழர்காலத்து ஊர் உள்ளது. இவ்வூரும் இங்குள்ள கோயிலும் ராஜராஜசோழனின் தந்தை சுந்தரசோழரால் உருவாக்கப்பட்டது. இக்கோயில் இறைவன் திருக்காற்கோடீஸ்வரமுடையார் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டு சாக்கைக்கூத்து பற்றிக் குறிப்பிடுகிறது.

இக்கோயிலில் வைகாசி திருவாதிரை திருவிழா நாட்களில் சாக்கைக் கூத்து ஆடுவதற்கு சாக்கை மாராயன் விக்கிரமசோழனுக்கு இறையிலியாக மூன்று மாச்செய் நிலம் காமரவல்லிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையால் கொடுக்கப்பட்டது. இந்நிலத்தை வழங்குவதற்காக இக்கோயிலின் தென்மேல் பக்கத்தில் இருந்த திருவோலக்கக் கூடத்தில், இச்சபை கூடி தீர்மானம் இயற்றியது. இக்கூட்டத்தில் இவ்வூரில் இருந்த 4 சேரிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு சேரிக்கும் முதல் சேரி, இரண்டாம் சேரி என வரிசை எண் கொடுக்கப்பட்டு கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அதன்படி முதல் சேரி அவனி கந்தர்வச்சேரி எனவும், இரண்டாம் சேரி ராஜகேசரிச்சேரி எனவும், மூன்றாம் சேரி காமரவல்லிச் சேரி எனவும், நான்காம் சேரி சோழமகாதேவிச் சேரி எனவும் கூறப்பட்டுள்ளது.

வைகாசி மாதம் திருவாதிரைத் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றதையும், அந்நாட்களில் சாக்கைக்கூத்து ஆடப்பட்டதையும் கல்வெட்டு மூலமாக அறிகிறோம். சாக்கைக்கூத்து என்பது சேர நாட்டில் ஆடப்பட்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இக்கூத்து பற்றிய தொன்மையான குறிப்பு அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலில் உள்ள உத்தமசோழரின் கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. பழுவேட்டரையர்கள் கேரள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அன்பில் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே இக்கூத்துக்கலை சேரநாட்டிலிருந்து பழுவேட்டரையர்களால் இப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கருதலாம்.

இக்கோயிலில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திர நாளன்று திருவிழா நடத்தப்பட்டது. அப்போது சாக்கைக்கூத்தின் மூன்று அங்கங்கள் ஆடப்பட்டன. இக்கூத்தை ஆடிய அலையூர்ச் சாக்கை என்கிற கூத்துக் கலைஞருக்கு அரைக்கழஞ்சுப் பொன்னும், 3 கலம் நெல்லும், திருவாலந்துறை நல்லூரில் நிலமும் வழங்கப்பட்டது.

கல்வெட்டு

1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகே
2. சரிபள்மற்கு யாண்டு
3. ஆவது குன்றக் கூற்ற
4. த்து ப்ரஹ்மதேயம் சிறுபழு
5. வூர்த் திருவாலந்துறைத்
6. தேவதான நில(ம்) திருவால
7. ந்துறை நல்லூரிலே
8. அப்பிகை அஸ்வதி திருவிழா
9. வுக்கு வந்து சாக்கை கூத்து
10. ஆடக் கடவ அலையூர்ச் சாக்கை!
11. க்கு மூன்றங்கம்மாட நிவந்த
12. ம் செய்த பொன் கழுஞ்சரை
13. நெல்லு முக்கலம் கோற்று
14. இது பந்மாஹேஸ்வர ரக்க்ஷை

இந்தச் சாக்கைக்கூத்து மிகவும் தொன்மையானது. இன்றைய கேரள மாநிலத்தின் வடமலபார் பகுதிகளில் ஆடப்படும் தெய்யம் மரபை, சாக்கைக்கூத்தின் நீட்சியாகக் கருத வாய்ப்புள்ளது. எடக்கல் பகுதியில் உள்ள தொன்மையான பாறைக்கீறல்களின் உருவம் ஒன்று தெய்யம் கலைஞரின் இன்றைய உருவ அமைப்பை அடியொற்றிக் காணப்படுவது வியப்பானது. இந்தத் தெய்யம் ஆட்ட மரபை சங்ககால வேலன் வெறியாட்டு நிகழ்வுடன் ஒப்பிட்டு கருத்துகள் தோன்றியுள்ளன. நாட்டார் ஆய்வாளர் அ.கா. பெருமாள் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வக்குமார் போன்றோர் இதேபோன்ற கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்கள். இன்றும் மலபாரின் கண்ணூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வேலன் என்கிற மரபினர் ஆடும் ஆட்டத்தைச் சங்ககால வேலன் வெறியாட்ட மரபாகக் கருதமுடிகிறது. சாக்கைக்கூத்தின் தொன்மையையும், அதன் தொடர்ச்சியினையும் இதிலிருந்து நாம் அறியலாம்.

0

புகைப்படம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *