சான் ஃப்ரான்சிஸ்கோவில் தங்கியிருந்த காலத்தில் அங்கு சந்தித்தவர்களின் உருவப்படங்களை ஃப்ரீடா வரைந்தார். இவற்றுள் லூதர் பர்பாங்க் என்ற தோட்டக்கலை வல்லுநரின் ஓவியம் புகழ்பெற்றது. கலப்பின வகை காய்கறிகளையும் பழங்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஃப்ரீடா லூதர் பர்பாங்கையே பாதி தாவரம், பாதி மனிதன் உருவம் எனக் கலப்பினத்தின் உருவகமாக வரைந்தார். கையில் பெரிய இலைகளையுடைய தாவரத்தை ஏந்தியுள்ளார் லூதர் பர்பாங்க். அவர் கால்கள் இரண்டும் மரத்தின் அடிப்பகுதியாக மாறி நிலத்துக்கடியில் நின்றிருந்தன. மரத்தின் வேர்கள் படுத்துக்கிடக்கும் எலும்புக்கூட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளன. மண்ணுடனும் தாவரங்களுடனும் அவருக்கிருந்த தொடர்பைச் சிறப்பாகச் சித்தரித்தது அந்த ஓவியம்.
உயிர்ப்பு, இறப்பு, இறப்பிலிருந்து வளம்பெற்றுத் தொடரும் உயிர்ப்பு என்ற கருப்பொருளை இந்த ஓவியத்தை வரைந்த சமயத்தில்தான் முதன்முதலில் ஃப்ரீடா கையாண்டிருக்கவேண்டும். ஃப்ரீடா எதார்த்த பாணியிலிருந்து விலகி கனவுருவப் பாணியையும் உயிர்ப்பு-இறப்பு கருப்பொருளையும் பின்பற்றத் தொடங்கியதற்கு காரணம் என்னவென்பது தெளிவாக இல்லை. சான் ஃப்ரான்சிஸ்கோவில் அவர் கண்ட அதீத கற்பனை பாணி ஓவியங்கள், டீயகோவின் சுவரோவியங்கள், பாரம்பரிய மெக்சிகோ கலைவடிவம் எனப் பலவற்றின் தாக்கமாகவும் இருக்கலாம். மெக்சிகோவில் இதற்கிடையே மருத்துவர் லியோ எலஸ்ஸர் ஃப்ரீடாவின் உளவியல், உடல்நலம் இரண்டுக்குமான தீர்வுகளைச் சொன்னார். லியோ எலஸ்ஸரின்மீது பெருமதிப்பு கொண்டிருந்தார் ஃப்ரீடா. இருவருக்குமிடையே நட்பு அரும்பியது. என்றாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவில்லை. அவருக்குப் பரிசளிப்பதற்காக தன்னுடைய பாணியில் அவரின் உருவப்படமொன்றை வரைந்தார்.
ஃப்ரீடா தத்துவ, அரசியல் நூல்களைப் படித்தவர், பல விஷயங்களை அறிந்தவர் என்றாலும் சான் ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்த அமெரிக்கர்கள் அவருக்கு அலுப்பூட்டினார்கள். அவர்களுக்குச் சிறிதும் ரசனையோ நுட்பமான உணர்வுகளோ இல்லையென நினைத்தார். அவர்களது முகங்கள் வேகாத பிஸ்கெட் மாவைப்போல இருந்ததாகச் சலித்துக்கொண்டார். அமெரிக்காவை கிரிங்கோலாண்டியா என அழைத்தார். சீனர்கள் அதிகம் வசித்த பகுதிகளுக்கு அடிக்கடிச் சென்றார். சீன மக்களும் அவர்களின் குழந்தைகளும் வாழ்க்கை முறையும் அவர் மனதைக் கவர்ந்தன.
1931 ஜூன் மாதத்தில் சுவரோவியங்களை வரைந்துமுடித்ததும் ஃப்ரீடாவோடு மெக்சிகோவுக்குத் திரும்பினார் டீயகோ. மெக்சிகோ அரசாங்கம் கேட்டுக்கொண்ட சுவரோவியங்களைத் தீட்டிமுடிக்கும் வேலை காத்திருந்தது. அமெரிக்காவில் ஈட்டிய பொருளைக்கொண்டு ஃப்ரீடாவின் தந்தை லா காசா அசூலின் பெயரில் வாங்கியிருந்த கடனைத் திருப்ப உதவினார். அடுத்ததாக, மெக்சிகோ சிட்டி நகரில் சான் ஏஞ்சல் பகுதியில் தனக்கும் ஃப்ரீடாவுக்குமாகத் தனி வீடொன்றைக் கட்டத் தொடங்கினார். இரண்டு தனித்தனி வீடுகளை மேல்தளத்தில் அமைக்கப்பட்ட பாலம் ஒன்றிணைப்பதுபோல வடிவமைக்கப்பட்டது.
1931 ஜூலை மாதம் நியூயார்க்கின் மாடர்ன் ஆர்ட் அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சியொன்றை அமைக்க வருமாறு டீயகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெருமையும் மதிப்புமிக்க அழைப்பை உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டார் டீயகோ. கண்காட்சிக்காக டீயகோ புதிய ஓவியங்களையும் சுவரோவியங்களையும் தீட்டுவாரென்றும் முடிவுசெய்யப்பட்டது.
டீயகோவின் புரவலர் அமெரிக்காவின் முதன்மைச் செல்வந்தர்களான ராக்ஃபெல்லர் குடும்பம். ஆனாலும் டீயகோ மார்க்சியப் பார்வையில் மெக்சிகோ என்ற கருப்பொருளையொட்டி சுவரோவியங்களை வரைந்தார். ஃப்ரீடாவுக்கு நியூயார்க் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற ஓவியங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நவம்பர் மாதத்தில் நடந்த டீயகோவின் ஓவியக் கண்காட்சியின் திறப்புவிழாவுக்கு ஃப்ரீடா தனது வழக்கமான பாணியில் பளிச்சென்ற வண்ணத்தில் பாரம்பரிய மெக்சிகோ பாணியில் ஆடையணிந்தார். டீயகோவின் கண்காட்சி பெருவெற்றி அடைந்தது.
அடுத்து டெட்ராய்ட் நகருக்கு வருமாறு டீயகோவை டெட்ராய்ட் கலை நிறுவனத்தின் இயக்குநர் கேட்டுக்கொண்டார். ஃபோர்ட் கார் நிறுவனத்தின் தலைவர் டெட்ராய்ட் கலை ஆணையகத்தின் தலைவராகவும் இருந்தார். டெட்ராய்ட் தொழில் நிறுவனங்கள், குறிப்பாக மோட்டார் வண்டிகளைச் சித்தரிக்கும் சுவரோவியங்களை வரையவேண்டும் என்றும் அதற்காக 10000 டாலர்கள் தருவதாகவும் சொன்னார்.
டெட்ராய்ட் அமெரிக்காவின் தொழில் நகரம், பாட்டாளி மக்களின் வசிப்பிடம் என்பதால் அங்கு செல்வது டீயகோவுக்கு உற்சாகம் அளித்தது. மற்ற கலைஞர்களைப்போல இயந்திரங்களை வெறுக்கவில்லை டீயகோ. மாறாக உழைப்பாளர்களின் வேலையை எளிதாக்க உதவியதால் அவற்றை வரவேற்றார்.
ஃப்ரீடாவும் டீயகோவும் ஒவ்வொரு நாளும் செல்வந்தர்களின் விருந்துகளுக்கு அழைக்கப்பட்டனர். அங்கே டெட்ராய்ட்டின் முக்கியமான குடிமக்களைச் சந்தித்தனர். டீயகோ தொழிற்சாலைகள், இயந்திரங்கள் இரண்டின்மீதும் பெருமயக்கம் கொண்டு சுவரோவியம் தீட்டும் பணியில் உற்சாகத்தோடு இறங்கினார். புது விளையாட்டுப் பொருளைக் கண்ட குழந்தையைப்போல ஆவல்கொண்டார்.
ஃப்ரீடாவுக்கு டெட்ராய்ட் நகரை அறவே பிடிக்கவில்லை. ‘தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியைத்தவிர மற்றவை அலங்கோலமான பழைய கிராமத்தைப் போல இருக்கின்றன. மெக்சிகோவில் ஏழைகளின் குடிசைகள்கூடக் கவனத்துடனும் பிரியத்துடன் பராமரிக்கப்படும். இங்கே அவை இடிந்துபோய் அழுக்காக உள்ளன.’
மெக்சிகோ உணவையொத்த சில அமெரிக்க இனிப்புகளை விரும்பி உண்டார். மற்றபடி அமெரிக்க உணவு சுவையற்றது, உப்புச் சப்பே இல்லை எனக் கூறினார். மெக்சிகோ உணவுப் பொருட்களை விற்கும் கடைகளைக் கண்டறிந்து தானே சமைத்துச் சாப்பிட்டார்.
1932இல் மெக்சிகோ, அமெரிக்காவுக்கு நடுவே உள்ள எல்லைக்கோட்டில் இருப்பதுபோன்ற (Self-Portrait on the Borderline between Mexico and the United States) தன்னோவியமொன்றை வரைந்தார். நடுவில் நிற்கும் ஃப்ரீடாவுக்கு வலப்புறம் பழங்கால மெக்சிகோவின் இடிபாடுகளோடு வானில் சூரியனும் சந்திரனும் அழகிய வண்ண மலர்களும் காய்கறிச் செடிகளும் காணப்படுகின்றன. இடப்புறம் அமெரிக்காவின் வானுயர்ந்த கட்டடங்கள், புகை கக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன.
சில வருடங்கள் கழித்து ‘என் ஆடை இங்கே தொங்குகிறது’ (My Dress Hangs Here) என்ற தலைப்பில் அமெரிக்க வாழ்க்கையைச் சுட்டும் இன்னொரு ஓவியத்தை வரைந்தார். உணவு வேண்டி மக்கள் வரிசையில் நிற்கின்றனர், கட்டடம் ஒன்றில் தீப்பற்றியுள்ளது, குப்பைத் தொட்டி நிரம்பி வழிகிறது. பின்னணியில் சுதந்திர தேவியின் சிலை காணப்படுகிறது, இன்னொரு புறம் வங்கிக் கட்டடமும், திரைப்படச் சுவரொட்டியும். கழிப்பிடத்துக்கும் வெற்றிக்கோப்பைக்கும் நடுவே கட்டப்பட்ட கயிற்றில் ஃப்ரீடாவின் ஆடை தொங்குகிறது. இருந்தாலும் ஃப்ரீடாவின் உடலும் மனமும் மெக்சிகோவில் உள்ளன என்ற செய்தியைச் சொல்லுகிறது இந்த ஓவியம்.
டெட்ராய்ட்டில் தங்கியிருந்த சமயத்தில் மீண்டும் கருவுற்றார் ஃப்ரீடா. இந்தச் செய்தி மகிழ்ச்சியைத் தந்தாலும் முந்தைய அனுபவத்தால் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டது. ஃப்ரீடாவின் தந்தைக்கு இருந்த வலிப்பு நோயினால் தனக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்காது என நம்பினார். கூடவே தன்னுடைய பலவீனமான உடல்நிலை கருவுறுவதால் இன்னும் மோசமாகும் என நினைத்தார். அமெரிக்காவில் தன்னைக் கவனித்துக்கொள்ள உறவினர் யாருமில்லை என்பதும் அவருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஃப்ரீடாவின் உடல்நிலையை மனதில்கொண்டு குழந்தை வேண்டாமென்றார் டீயகோ. ஆனால் ஃப்ரீடா அவர் சொன்னதைக் கேட்கத் தயாராக இல்லை. நண்பரும் மருத்துவருமான லியோ எலஸ்ஸர் பரிந்துரைத்த மருத்துவர் ப்ராட்டைச் சந்தித்தார். அவர் ஃப்ரீடா சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என உறுதியளித்தார். கூடவே ஃப்ரீடா முழு ஓய்விலிருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் மருத்துவரின் ஒரு ஆலோசனையைக் கேட்ட ஃப்ரீடா மற்றொன்றின்படி நடக்கத் தயாராக இல்லை. ஓய்வெடுப்பதற்குப் பதில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டார், டீயகோ சுவரோவியம் வரையும் இடத்துக்குச் சென்றார், விருந்துகளுக்குப் போனார்.
கருவுற்ற மூன்றாம் மாத இறுதியில் ஃப்ரீடாவுக்கு லேசான ரத்தப்போக்கு ஏற்பட்டது. வெயில் தாங்காமல் வாந்தி வந்தது. மருத்துவரிடம் சென்றால் நிறைய கட்டுப்பாடுகளை விதிப்பார் எனப் போகவில்லை. நான்காம் மாதம் கரு கலைந்து போனது. விடியற்காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி அலறிய ஃப்ரீடாவை ஹென்றி ஃபோர்ட் மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் சென்றனர். போகும் வழி முழுவதும் மருத்துவமனையிலும் ரத்தப்போக்கு நிற்கவேயில்லை.
பதின்மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டியிருந்தது. இனி குழந்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்பதால் அழுதுகொண்டே இருந்தார் ஃப்ரீடா. ‘இப்படி வாழ்வதற்குப் பதில் செத்துப் போயிருக்கலாம்,’ என வேதனையோடு சொன்னார். பிள்ளைப் பேற்றினால் பெண்கள், குறிப்பாக ஃப்ரீடா படும்பாட்டைக் கண்டு கலங்கினார் டீயகோ. அவரின் உடல்நிலை மோசமாகிவிடுமோ என்ற கவலையோடு மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார்.
பிறந்தது முதல் ஏதாவதொரு உடல்நோவால் அவதிப்பட்ட ஃப்ரீடா அதிலிருந்து உடனே மீண்டு வந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் மீள்திறனையும் பெற்றிருந்தார். ‘இதைத் தாங்கிக்கொள்வதைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை. பூனையின் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தேன்.’ கருக்கலைப்பு ஏற்பட்ட ஐந்தாவது நாள் ஃப்ரீடா பென்சிலையெடுத்துத் தன்னோவியம் வரைய ஆரம்பித்தார். முழு உருப்பெறாமல், பிறக்காமல் இறந்துபோன மகனை ஓவியமாக வரையவேண்டுமென நினைத்தார். கருவின் வெவ்வேறு நிலைகளைத் தெரிந்துகொள்வதற்காகப் படங்களோடு கூடிய மருத்துவ நூல்களைத் தரச்சொல்லிக் கேட்டார்.
நோயாளிகள் மருத்துவ நூல்களைப் பார்த்தால் அச்சமுறுவார்கள் என்ற காரணத்தால் கொடுக்க மறுத்தது மருத்துவமனை. ஃப்ரீடா கடுங்கோபம் கொண்டார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் கலைதான். உள்ளம், உடல் இரண்டின் வலியையும் வெளிப்படுத்த அவருக்குத் தெரிந்த ஒரே வழி ஓவியம். தனிமையையும் மனவழுத்தத்தையும் கலையின் வெளிப்பாடாக்குவது மட்டுமே அவருக்கு மீட்சியளிக்கும் செயல்.
‘ஃப்ரீடா சாதாரணப் பெண்ணில்லை. அதைக்கொண்டு கலைப்படைப்பொன்றை உருவாக்குவார்,’ என மருத்துவரிடம் எடுத்துச் சொன்னார் டீயகோ. பிறகு மருத்துவமனையில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் மருத்துவ நூலொன்றை எடுத்து வந்து அவரே ஃப்ரீடாவிடம் கொடுத்தார். படுக்கையிலிருந்தபடியே பென்சிலால் தன்னோவியம் ஒன்றை வரைந்தார் ஃப்ரீடா. கூடவே இன்னும் இரண்டு கிறுக்கல்களை வரைந்தார். இவற்றில் வேர்களோடு இருக்கும் கை, கிழங்கைப் போன்ற பாதம், நகர்ப்புறக் கட்டிடங்கள், டீயகோவின் முகம் என தன்னியக்கமாகத் தோன்றும் உருவங்கள் அதீத கற்பனைப் பாணியின் வகைமை. ஒரு படத்தில் படுக்கையின்மீது நிர்வாணமாக ஃப்ரீடா படுத்திருக்கிறார். அவரின் கூந்தல் படுக்கையிலிருந்து தரையில் விழுந்து வேர்த் தொகுதிபோல ஊர்கிறது.
ஹென்றி ஃபோர்ட் மருத்துவமனை (Henry Ford Hospital) குருதிதோய்ந்த அச்சமூட்டும் ஃப்ரீடாவின் ஓவியங்களின் வரிசையில் முதலாவதாக வரையப்பட்டது. அந்த ஓவியங்களின் வழியாக அவர் காலத்தில் அசலான ஓவியங்களை வரைவதில் முதன்மையானவர் என்று அறியப்பட்டார். ‘ஃப்ரீடாவின் தலைசிறந்த படைப்புகள் ஓவிய வரலாற்றில் முன்னுதாரணம் அற்றவை. உண்மை, நிதர்சனம், கொடூரம், துன்பம் ஆகியவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பெண்ணியல்பின் மேன்மையைச் சுட்டுபவையாக அமைந்தன. துன்பியல் கவிதையை ஓவியமாக இதுவரை எந்தப் பெண்ணும் தீட்டியதில்லை,’ என்றார் டீயகோ.
ஃப்ரீடாவின் ‘ஹென்றி ஃபோர்ட் மருத்துவமனை’ ஓவியத்தில் காணப்படும் நிர்வாணப் பெண்ணுடல் எந்த அழகியலுமற்றது, ஆண்களின் பார்வையால் காணமுடியாதது. இப்படிப் பெண்ணுடலை உள்ளது உள்ளபடியே சித்தரிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். கட்டிலில் ஃப்ரீடா குருதி வெள்ளத்தில் கிடக்கிறார். அவர் கன்னத்தில் பெரிய கண்ணீர்த்துளி வடிகிறது. வீங்கிய வயிற்றின்மீது கிடக்கும் அவரது கை ஆறு சிவப்பு ரிப்பன்களைப் பற்றியுள்ளது. ஒவ்வொரு ரிப்பனின் முனையிலும் அவரது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொருட்கள் மிதக்கின்றன. வயிற்றினுள் உருவாகும் கரு, தனக்குப் பிறக்குமென்று எதிர்பார்த்த குட்டி டீயகோ, கருப்பையைச் சுட்டும் ஆர்கிட் மலர், மெல்ல நடந்த கருக்கலைப்பைச் சித்தரிக்கும் நத்தை, உடல்வலியைக் காட்டும் இயந்திரம் இவை யாவும் டெட்ராய்டின் இயந்திரமயமான பின்னணியைக் கொண்டுள்ளன.
மருத்துவமனையிலிருந்து ஃப்ரீடாவை வீட்டுக்கு அழைத்து வந்தார் டீயகோ. ஓவியம் வரைவதற்குப் புதிய ஊடகங்களைப் பயன்படுத்திப் பார்க்கலாமே என ஆலோசனை சொன்னார். ஃப்ரீடா வரைவதற்குத் தேவையான லித்தோக்ராஃப் அச்சுகளையும் கற்களையும் தயார் செய்தார். கொளுத்தும் வெயிலையும் உடல்நிலையையும் குறித்த சிந்தனையேயின்றி ஒவ்வொரு நாளும் லித்தோக்ராஃப் ஓவியங்களை வரையத் தொடங்கினார் ஃப்ரீடா. லித்தோக்ராஃப் புதிய ஊடகம் என்பதால் கற்பனையில் உதித்த உருவங்களை நேர்த்தியாக அமைப்பதற்குக் காலம் எடுத்தது.
ஃப்ரீடாவும் கருக்கலைப்பும் (Frida and the Abortion) என்ற லித்தோஃக்ராப் ஓவியம் மனதைப் பிளக்கும் ஆற்றல்கொண்டது. ஃப்ரீடா நிர்வாணமாக, அமைதியாக நடுவே நிற்கிறார். அவரைச் சுற்றிலும் கருவுறுதலின் வெவ்வேறு நிலைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வலது காலைச் சுற்றிய நீளமான குருதிக்குழாயினால் ஆண் கருவொன்று அவருடன் இணைக்கப்பட்டுள்ளது. சற்று மேலே வெவ்வேறு நிலைகளிலுள்ள செல் பிரிவைச் சுட்டும் படங்கள் உள்ளன. வயிற்றுப்பகுதியில் கருப்பையினுள் கருமுளை காணப்படுகிறது. இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் சொட்டுகிறது. கருக்கலைப்பினால் இடது காலில் வடியும் குருதித் துளிகள் நிலத்தினுள் விழுகின்றன. நிலம் கல்லறையாகவும் புதிய செடிகள் துளிர்விடும் தோட்டமாகவும் உள்ளது.
ஃப்ரீடாவின் உடல் ஒரு பக்கம் ஒளியோடும் மற்றொரு பக்கம் இருள் சூழ்ந்தும் காணப்படுகிறது. ஒளியற்ற பகுதியில் தோன்றிய நிலவு கண்ணீர் சிந்துகிறது. அதே பக்கத்தில் அவர் உடலிலிருந்து முளைத்த மூன்றாவது கை இலைவடிவிலான ஓவிய வண்ணத்தட்டை ஏந்தியுள்ளது. தாய்மையின் தோல்விக்கு ஓவியம் மாற்றாக இருப்பதைச் சித்தரிக்கிறது.
ஃப்ரீடா குழந்தைப் பேற்றுக்காக ஏங்கினார் என்பது அவர் அறையிலுள்ள நூல்களையும் பொம்மைகளையும் பொம்மை வீடுகளையும் பார்த்தால் தெரிகிறது. பழைமையானவை, துணி, பேப்பரினாலான எளிமையான மெக்சிகோ பொம்மைகள், விலையதிகமான வெளிநாட்டுப் பொம்மைகள், சீன பொம்மைகள் எனப் பலவிதமானவற்றை வைத்திருந்தார்.
1926இல் அலஜேண்ட்ரோ பரிசாகக் கொடுத்த பொம்மையொன்றுக்கு லியொனார்டோ என்று பெயரிட்டு தன்னைத் தாயாக அறிவிக்கும் ஞானஸ்நான சான்றிதழை வைத்திருந்தார். ஞானஸ்நானப் பெற்றோரென அலஜேண்ட்ரோவையும் இசபெல் காம்போஸையும் குறிப்பிட்டிருந்தார். டீயகோவுடன் மணமான பிறகு அன்றாடம் செய்யவேண்டிய வேலைகள் பட்டியலில் எந்தெந்த பொம்மையை மருத்துவரிடம் இட்டுச் செல்லவேண்டும், புதிய உடல், ஆடை, பொய் முடி வாங்கவேண்டுமென எழுதி வைத்திருப்பார்.
அவருடைய பல ஓவியங்கள் மகப்பேறு குறித்து அவருக்கிருந்த ஆர்வத்தையும் குழந்தைப்பேறின்மையால் அவர் கொண்ட துயரத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவருடைய நாட்குறிப்புகளிலும் இது பற்றி எழுதியுள்ளார். ஆனால் குழந்தைகளைப் பெறுவதல்ல, ஓவியங்களைப் படைப்பதே ஃப்ரீடாவுக்கு விதிக்கப்பட்டது.
(தொடரும்)

