Skip to content
Home » ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏனென்றால் சாதி நம் அனைவரையும் பாதிக்கிறது.

காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன? வகுப்பொன்றில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, சட்டென்று வந்து விழுந்தது பதில். நேருவின் சுயசரிதைக்கு என்ன தலைப்பு? சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் சுயசரிதைதான் அவர் நூலின் பெயரே என்பதை ஓரிருவரேனும் சொல்லிவிட்டார்கள். சரி, அம்பேத்கர் சுயசரிதை எழுதியிருக்கிறாரா என்று இறுதியாகக் கேட்டபோது சில விநாடிகளுக்குப் பிறகு இல்லை என்றனர் சிலர்; தெரியாது என்றனர் வேறு சிலர். வேறொரு வகுப்பில் மாணவர்களிடமும் முயன்று பார்த்தேன். வாசித்திருக்கிறார்களோ, இல்லையோ ‘சத்திய சோதனை’ பெரும்பாலும் தெரிந்திருந்தது. ‘ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்’ எனும் பெயரைக்கூட ஒருவரும் கேள்விப்பட்டதில்லை. தலித் விடுதலைக்கான விசாவுக்காக அம்பேத்கர் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார்.

காந்தியை அரசியல்மயப்படுத்திய ஒரு முக்கியப் புள்ளி தென் ஆப்பிரிக்க ரயில் நிகழ்வு (1893). முதல் வகுப்புக்குச் சீட்டு வாங்கிய பிறகும் ஏன் அனுமதி மறுக்கப்படவேண்டும்? ஏன் எனது அடிப்படை உரிமை மறுக்கப்படவேண்டும்? இது இனவாதம் அல்லவா? இது அநீதி அல்லவா? இக்கேள்விகளிலிருந்து காந்தியின் போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிறது. நேருவின் அரசியல் வரவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அவர் எழுத்துகளிலிருந்து கண்டறிய முடியவில்லை. அதாவது, திட்டவட்டமாக ஒரு புள்ளியைச் சுட்டிக்காட்டமுடியவில்லை. தந்தை மோதிலாலின் தாக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார். ஆனந்த பவனுக்குத் தலைவர்கள் எப்போதும் வருவதும் போவதுமாக இருந்ததால் அரசியல் உரையாடல்களை அவர் செவிமடுத்திருக்க வேண்டும். மோதிலால் வழியில் பொது வாழ்க்கைக்கு வந்தவர் இரண்டாவது தந்தை காந்தியின் அரவணைப்பில் ஓர் அரசியல் தலைவராக உயர்ந்து நின்றார்.

அம்பேத்கர் அரசியல்மயமான தருணம் எது? மற்ற மாணவர்களோடு சேர்ந்து அமரக்கூடாது. அவர்கள்மீது உன் விரல்கூடப் படக்கூடாது. இந்தா இந்தக் கோணிப்பையில் அமர்ந்துகொள் என்று பள்ளியில் அறிவுறுத்தப்பட்டபோதா? இல்லை, அந்தக் குழாய் உனக்கானது அல்ல, மற்றவர்களுக்கானது என்று கடிந்துகொண்டபோதா? உதவியாளர் வந்து பிடித்துத் தந்தால்தான் நீர். இல்லாவிட்டால் கிடையாது எனும் நிலை தோன்றியபோதா? அம்மாவின் மரணத்தைத் தொடர்ந்து தொலைவிலுள்ள அப்பாவைப் பார்க்க ரயில் ஏறி, இறங்கி ஒரு மாட்டு வண்டிக்காரரை அணுகியபோது, என்னால் உன்னைப் போன்றவர்களுக்கு வண்டியோட்ட முடியாது. வேண்டுமென்றால் நீ ஓட்டு என்று சொல்லி இரட்டிப்புப் பணத்தையும் அவர் பெற்றுக்கொண்டபோதா?

கொலம்பியா பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் போன்ற பெருமைமிகு நிறுவனங்களில் படித்துப் பட்டம் பெற்ற பிறகும் கொடூரமான முறையில் அவர் ஒதுக்கப்பட்டபோதா? பரோடா மன்னரின் உதவி பெற்று படித்ததால் ஊர் திரும்பி வந்து பணியாற்றியபோது வீடு கிடைக்காத நிலை ஏற்பட்டபோதா? எலியும் இருளும் நிறைந்த கிட்டத்தட்ட பாழடைந்த ஒரு விடுதியில் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒண்டியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோதா? அங்கிருந்தும்கூட ஒருநாள் விரட்டியடிக்கப்பட்டபோதா? வலி தாங்காமல் அம்பேத்கர் வெடித்து அழுத தருணத்திலா?

சொல்வது கடினம். ஏனென்றால் அம்பேத்கரின் வாழ்க்கை நெடுகிலும் இத்தகைய தருணங்கள் முட்கள்போல் நிறைந்திருக்கின்றன. அம்பேத்கரை அரசியல்மயப்படுத்த தனியே எந்தவொரு தருணமும் தேவைப்படவில்லை. காந்தியைப்போல், நேருவைப்போல் சாதி என்றால் என்னவென்பதைத் தன் இருப்பிடத்திலிருந்து நீண்டு சென்று தெரிந்துகொண்டவரல்லர் அவர். பிறக்கும்போதே அவருடலில் தீட்டு ஒட்டிக்கொண்டு பிறந்துவிட்டது. அவருடைய கல்வியையோ அசாதாரண அறிவாற்றலையோ மேதமையையோ அல்ல, அவர் பிறந்த சாதியை அவருடைய அடையாளமாகக் காண்பவர்கள் இன்றும் உள்ளனர். நேரு, காந்திபோல் காலனியாதிக்கம், விடுதலை, ஜனநாயகம் போன்ற பெத்தாம் பெரிய கருத்தாக்கங்களைவிட சாதி ஒழிப்பைத் தன்னுடைய பிரதான குறிக்கோளாக வரித்துக்கொள்ளவேண்டிய நிலையில் அம்பேத்கர் இருந்தார்.

இந்தியா எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளுள் சாதியும் ஒன்று என்று காந்தியும் நேருவும் கருதினார்கள் என்றால் சாதிதான் நம் முன் நிற்கும் முதன்மையான பிரச்னை என்றார் அம்பேத்கர். பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து விட்டால் போதும்; பிற சவால்களை நாம் முறியடித்துக்கொள்ளலாம் என்று பெரும்பாலானோர் வாதிட்டு வந்தபோது, அது அப்படியல்ல என்று அம்பேத்கர் மறுக்கவேண்டியிருந்தது. உங்களைப்போல் சாதியை பத்தோடு பதினொன்றாக என்னால் பார்க்கமுடியாது. அது என் பட்டியலில் எங்கோ அடியில் தேங்கியிருக்கும் ஒரு தலைப்பு அல்ல. தவிரவும், அது நீங்கள் அனைவரும் நினைப்பதுபோல் தீண்டப்படாதவர்களின் தனிப்பட்ட பிரச்னையும் அல்ல. அது நம் அனைவரின் பிரச்னை. அந்தப் புரிதலோடுதான் நாம் அனைவரும் நம் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கியாகவேண்டும். சாதியிலிருந்து விடுபடாதவரை விடுதலை சாத்தியமில்லை என்றார் அம்பேத்கர். எனில், பிரிட்டனிடமிருந்து விடுபடுவது முக்கியமில்லையா என்றால் ஆம், முக்கியம்தான். ஆனால் அவர்கள் வெளியேறிய பிறகு அந்த இடத்தில் இங்குள்ள உயர் சாதியினர் அல்லவா அமரப்போகிறார்கள்? அவர்கள் சாதியின் பிடியில் கட்டுண்டு கிடப்பவர்கள்தான், இல்லையா? ஆக, தலித்துகளைப் பொருத்தவரை விடுதலை ஆட்சி மாற்றத்தால் விடுதலையைப் பெற்றுவிடமுடியாது என்பதுதானே இதன் பொருள்?

சாதிப்படிநிலை எவ்வாறு இயங்குகிறது என்பதை அம்பேத்கர் தெளிவாக வரையறுக்கிறார். ‘இந்துச் சமூகம் பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கோபுரத்தைப் போன்றது. ஆனால் அதில் ஏணியோ நுழைவாயிலோ இல்லை. கீழ் அடுக்கில் பிறந்த ஒருவர் எவ்வளவு தகுதியுடையவராக இருந்தாலும் மேலடுக்கு செல்ல முடியாது. அதேபோல், மேலடுக்கில் பிறந்த ஒருவர் எவ்வளவு தகுதியற்றவராக இருந்தாலும் கீழடுக்குக்குத் தள்ளப்பட முடியாது.’ வெள்ளை நிறத்தோடு பிறக்கும் ஒருவர் எவ்வாறு பிறக்கும்போதே சிறப்புச் சலுகைகள் பெற்றிருக்கிறாரோ அவ்வாறே கோபுரத்தின் மேலடுக்கில் பிறப்பவர்களும் சலுகைகள் பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். இந்தச் சலுகைகள் அவர்களுக்கு அனுகூலமாக இருப்பதால் கோபுரத்துக்கு ஏணியோ நுழைவாயிலோ இருக்கக்கூடாது; கோபுரத்தின் அமைப்பு எந்த வகையிலும் மாறக்கூடாது என்று விரும்புகிறார்கள். உங்களைக் கீழினும் கீழகாக அழுத்தி வைத்திருக்கும் கோபுரம் உங்கள் வீடல்ல. உடைத்து, வெளியேறுங்கள் என்று அறைகூவல் விடுத்தார் அம்பேத்கர்.

அடிமைமுறையைக் காட்டிலும் சாதியமைப்புமுறை கொடுமையானது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது என்கிறார் அம்பேத்கர். ஓர் அடிமைக்கு விடுதலை சாத்தியம். வேறொருவனின் உடைமையாக இருந்த ஒரு மனிதன் தனது விடுதலைக்குப் பிறகு உழைத்து, செல்வம் சேர்ப்பது சாத்தியம். சமூகத்தின் ஏற்பையும் மதிப்பையும் அவர் பெறுவதும் சாத்தியம்தான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால் ஒரு தீண்டப்படாதவர் இதுவரை விடுதலை பெற்றிருக்கிறாரா? தன் பிறப்போடு ஒட்டி வளர்ந்த அடையாளத்தை அவர் வெற்றிகரமாகத் துறந்ததாக ஏதேனும் பதிவு வரலாற்றில் உள்ளதா? ஒரு தாழ்த்தப்பட்டவரால் சமூக மதிப்பை ஈட்டமுடியுமா? அவர் என்ன செய்தால் தீண்டத்தக்கவராக மாறுவார்? இதற்கு வரலாற்றிடம் விடை இருக்கிறதா?

வர்க்க பேதம் ஒழிந்தால் சாதி உள்ளிட்ட அனைத்து இடர்களும் மறையும் எனும் பொதுவுடைமைவாதிகளின் வாதத்தையும் ஏற்கத் தயாராக இல்லை அம்பேத்கர். சாதியை முதன்மை பிரச்னையாக முன்வைக்காத எந்தக் கோட்பாடும், சாதி ஒழிப்புக்கு முதலிடம் அளிக்க மறுத்த எந்தக் கோட்பாட்டாளரும் என் மக்கள் விடுதலைக்கு உதவப்போவதில்லை என்றார் அம்பேத்கர். சாதியமைப்பு மனித உரிமைகளை மறுக்கிறது என்பதை அம்பேத்கர் அளவுக்கு வலியுறுத்திய இன்னொருவர் இல்லை. பிறப்பின் அடிப்படையில் தலித்துகளுக்கு நீரும் உணவும் கல்வியும் இருப்பிடமும் வேலை வாய்ப்பும், மிக முக்கியமாகக் கண்ணியமும் மறுக்கப்படுகிறது என்றால் அந்த இடத்தில் நீதியின் நிழல்கூட படாது. அப்படியொரு இடம் வேறு எதிலும் சிறந்து விளங்குவதும் சாத்தியமில்லை என்றார் அம்பேத்கர்.

இந்தியா ஒரு சுதந்தர நாடாக இருப்பது மட்டும் போதாது. ஒரு நல்ல அரசமைப்பு அங்கே நிலவவேண்டும். எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம உரிமைகள் உள்ளன என்னும் நிலை உருவாகவேண்டும். கல்வி, மதம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களும் அனைவருக்குமானவையாக மாறவேண்டும் என்றார் அம்பேத்கர். நவீன இந்தியாவுக்கான அடித்தளம் என்பது சமத்துவமாகவே இருக்கமுடியும், இருந்தாகவேண்டும் என்றார் அவர்.

0

காந்தி உப்பு சத்தியாகிரகத்தை முன்னெடுப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1927இல் அம்பத்கர் மகத் சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தினார் என்றாலும் சத்தியாகிரகம் என்றதும் நமக்குக் காந்திதான் நினைவுக்கு வருகிறார். மாணவர்களிடம் இதை நான் குறிப்பிட்டபோது பலருக்கும் இது புதிய செய்தியாக இருந்ததைக் கண்டபோது பாடப்புத்தகங்களின் போதாமையை என்னால் உணரமுடிந்தது. சுதந்தரத்தை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக இதைப் பாடப்புத்தகங்கள் கவனப்படுத்தியிருக்கவேண்டும். மகாராஷ்டிராவிலுள்ள மகத் நகராட்சியின் தீர்மானத்தின்படி இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பொதுக்குளத்திலிருந்து நீர் அருந்தலாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. இதனை எதிர்த்து அம்பேத்கரின் தலைமையில் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் சௌதார் குளத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். உப்பு மீதான அநியாய வரியை உடைத்து காந்தி குனிந்து உப்பெடுத்ததுபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட தீண்டாமையை உடைக்கவும் குளத்தின் நீர் அனைவருக்கும் பொதுவானது என்பதை வலியுறுத்தவும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

‘ஒவ்வொரு கிராமத்திலும், தீண்டப்படாதவர்களுக்காவே உருவாக்கப்பட்ட ஒரு விதிமுறைச் சட்டம் உள்ளது. அதை அவர்கள் கட்டாயமாகப் பின்பற்றியாக வேண்டும். இந்த விதிமுறைகள் தீண்டப்படாதவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பதைச் சட்டமாக வகுக்கின்றன. மீறல் குற்றமாகப் பாவிக்கப்படும். குற்றங்களின் பட்டியல் பின்வருமாறு: 1)தீண்டப்படாதவர்கள், இந்துக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தனியே, ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ வேண்டும். 2) தீண்டத்தகாதவர்களின் குடியிருப்புகள் தெற்குத் திசையில் அமைந்திருக்க வேண்டும்; நான்கு திசைகளில் தெற்குதான் ராசியில்லாதது. 3) தீண்டத்தகாதவர்கள், ‘தொலைவு தீட்டு’ அல்லது ‘நிழல் தீட்டு’ ஆகியவற்றைப் பொருத்தமான இடங்களில் கடைப்பிடிக்க வேண்டும்.’ அதாவது, மேல்சாதியினரிடமிருந்து விலகி இருப்பது, தங்கள் நிழல்கூட அவர்கள்மீது படாமல் பார்த்துக்கொள்வது. இவற்றோடு சேர்ந்ததுதான் பொதுவிடங்களிலிருந்து நீர் எடுத்துப் பருகுவதும் என்கிறார் அம்பேத்கர்.

இங்கே தீட்டு என்பது என்ன? அதை எப்படிப் புரிந்துகொள்வது? வகுப்பறையில் தலித் மக்கள் பிற மாணவர்களோடு இணைந்து அமர்ந்தால் அந்த மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகிவிடுமா? பொது இடத்திலிருந்து தலித்துகள் நீர் எடுத்தால் குளத்தின் தூய்மை கெட்டுவிடுமா? அப்படித்தான் பிற சமூகத்தினர் நினைக்கிறார்களா? தீட்டைக் கண்டு உண்மையிலேயே அவர்கள் அஞ்சினார்களா? இதை அப்படிப் புரிந்துகொள்ளக்கூடாது என்கிறார் அம்பேத்கர். ‘கிணற்றின் நீர் கெட்டுப்போய்விடும் என்பதாலோ, அது மாயமாக மறைந்துபோய்விடும் என்பதாலோ அவர்கள் எதிர்ப்பதில்லை. தீண்டத்தகாதவர்கள் தங்களுக்குச் சமமான மனிதர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மனமில்லாததால்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்.’ ஆக, தீட்டு என்பது ஒரு வசதியான காரணம் மட்டுமே. ஏதோ மரபு போல் அதை உயர்த்திப்பிடிக்கிறார்களே தவிர, உண்மையில் சாதி இந்துக்கள் சமத்துவத்தைத்தான் எதிர்க்கிறார்கள்.

அம்பேத்கரின் சத்தியாகிரகப்போராட்டம் அமைதியான முறையில்தான் முன்னெடுக்கப்பட்டது, அமைதியான முறையில்தான் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் சாதி இந்துக்கள் பெருமளவில் திரண்டு இப்போராட்டத்தை எதிர்த்ததோடு கற்களாலும் கம்புகளாலும் தாழ்த்தப்பட்டோரைத் தாக்கத் தொடங்கினர். தாக்குபவர்களைவிட தாக்கப்படுவோரே மிகுதியாக இருந்தனர் என்றாலும் அவர்கள் இறுதிவரை அமைதி இழக்கவில்லை. ‘டாக்டர் அம்பேத்கர் ஒரு சொல் சொல்லியிருந்தால்போதும். மகத் ஒரு ரத்தக் குளமாக அன்று மாறிப்போயிருக்கும்.’ என்கிறார் தனஞ்செய் கீர். ஆனால் அம்பேத்கர் தனது மக்களைத் தூண்டிவிடவில்லை. மக்களும் ‘தங்கள் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணினர். தாக்குவோரை அவர்கள் உறுதியுடன் எதிர்த்தனர். அவர்களுடைய போராட்டம் அகிம்சை வழியிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள்ளும் நடைபெற்றது. சட்டத்தை மீறுவது குறித்து அவர்கள் கனவில்கூட நினைக்கவில்லை. இதனால் ஒரு தீவிரமான கலவரம் தடுக்கப்பட்டது. இரவு நேரம் வந்ததும், அனைத்து பிரதிநிதிகளும் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றனர்’ என்கிறார் கீர்.

அம்பேத்கரின் எழுத்துகளும் உரைகளும் மட்டுமல்ல, அவருடைய வலிகளையும் போராட்டங்களையும் கனவுகளையும்கூட நாம் அறிந்து வைத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. காந்திக்கும் நேருவுக்கும் கிடைக்கும் இடம் அம்பேத்கருக்கு ஏன் கிடைக்கவில்லை, இன்னமும் கிடைப்பதில்லை என்னும் கேள்வியை நாம் எழுப்பியே ஆகவேண்டும். காந்தியை, நேருவை நாம் புறக்கணிக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள். காந்தி, நேரு உள்ளிட்டோரின் விடுதலைப் போராட்டப் பாதையும் அம்பேத்கரின் விடுதலைப் போராட்டப் பாதையும் ஏன், எங்கே வேறுபட்டிருந்தது என்பதை நாம் வரலாற்றிலிருந்து கற்கவேண்டும். அவ்வாறு கற்கும்போது சாதி ஒழிப்பின் அவசியம் நமக்குப் புரியும்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *