அணைக்கட்டு என்றால் என்ன? ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்புச் சுவர் அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. இது நீரின் ஓட்டத்தைத் தடுத்து, திசையை மாற்றி, தண்ணீரைத் தேக்கிவைக்கப் பயன்படுகிறது.
அணைகட்டுதல் என்றால் என்ன? இயற்கையாகத் தன்போக்கில் ஓடி வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி வைப்பதற்கும், அதைத் தாம் விரும்பும் பகுதிக்குக் கொண்டுசெல்லவும் பயன்படும் அடிப்படையான தொழில்நுட்பம் அணைகட்டுதல் ஆகும்.
நதிகளில் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பெருவெள்ளத்தால் ஊர்கள் அழிவதைத் தடுப்பதற்கும், வறட்சிக் காலத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர்த் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு நீரைத் தேக்கி வைப்பதற்கும், தண்ணீரை விவசாய நிலங்களுக்குக் கால்வாய்கள் மூலம் திருப்பி விடுவதற்கும் அணைகள் உருவாக்கப்பட்டன.
சங்க காலத்தில் அணைக்கட்டு, கற்சிறை என்கிற பெயரினால் அழைக்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்திலும் மதுரைக் காஞ்சியிலும் கற்சிறை என்ற பெயரில் அணைக்கட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்டுள்ள பகுதியில் தண்ணீர் சிறைப்பட்டுள்ளதால் இப்பெயரை இட்டுள்ளனர்.
வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்.
இவை தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் புறத்திணையியலில் இடம்பெற்றுள்ள வரிகளாகும். இங்கு ‘கற்சிறை’ என்ற சொல் பயின்று வந்துள்ளதைப் பார்க்கலாம்.
விசை என்றால் பெருவேகம். வருவிசை என்றால் பெருவேகமாக வரும் என்று பொருள். விசையோடு விரைந்து வரும் வெள்ளப் பெருக்கைக் கற்களால் கட்டப்பட்ட அணை தடுத்து நிறுத்துவதுபோல, வேகமாக வெள்ளம்போலத் திரண்டு தாக்க வரும் படையை, உறுதியோடு முதலாவதாக முன்சென்று தடுத்து நிறுத்தி தன் நாட்டைப் பாதுகாப்பதன் மூலம் வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள்.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியிலும் இதே பொருளில் கற்சிறை குறித்த பாடல் இடம்பெற்றிருக்கிறது.
வருபுனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்.
வருபுனல் என்றால் பெருகி ஓடி வரும் ஆற்று நீர். கற்சிறை என்றால் கல்லால் கட்டப்பட்ட அணை. கடுப்ப என்பது போல எனும் உவம உருபைக் குறிக்கிறது. இடையறுத்து என்றால் நடுவே புகுந்து தடுத்து நிறுத்தி என்று பொருள். ஒன்னார் என்றால் பகைவர்கள். ஓட்டிய என்றால் விரட்டியடித்த. செருப்புகல் என்றால் போரை விரும்புகின்ற அல்லது போரில் விருப்பம்கொண்ட என்று பொருள். மறவர் என்றால் போர் வீரர்கள்.
மேற்கண்ட பாடல்களில் ஆசிரியர் மாங்குடி மருதனார் பெருகிவரும் பேரியாற்று வெள்ளத்தைக் கற்சிறைகொண்டு தடுப்பதுபோல், தம் படைத்தாண்டி வருகின்ற பகைவர்களைத் தடுத்து நிறுத்தி அழிக்கும் அரண்களாக வீரர்கள் இருந்தனர் என்று கூறியிருக்கிறார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியமும் மதுரைக் காஞ்சியும் இச்செய்தியைக் குறிப்பிட்டாலும், அக்காலத்திற்கு முன்பே இத்தகைய கற்சிறை எனும் அணை கட்டும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். பொதுவாக மக்கள் மத்தியில் மிகத் தெரிந்த ஒன்றையே புலவர்கள் உதாரணமாக எடுத்துக்காட்டி தாங்கள் சொல்ல வந்த பொருளை விளக்குவர். எனவே கற்சிறை எனும் அணைக்கட்டுகள் மக்கள் மத்தியில் மிகுதியாகப் புழங்கிய சொல்லாகவே இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு. உரிச்சொல் நிகண்டு இவற்றுக்கு, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவை போக வேறு பல பெயர்களும் உள்ளன.
கற்சிறைகள் என்ற பெயரிலான தொன்மையான அணைக்கட்டுகளில் இன்றும் நாம் காணக்கூடியதாகக் கல்லணை இருக்கிறது. கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, தமிழர்களின் வியக்கத்தக்க நீர் மேலாண்மைக்குச் சான்றாகும். உலகிலுள்ள மிகப் பழமையான, இன்றும் பயன்பாட்டில் இருக்கும் 4வது பெரிய நீர்ப்பாசன அணையாகக் கல்லணை போற்றப்படுகிறது.
கிமு 3ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் உருவாக்கப்பட்ட ஜாவா அணையே உலகின் மிகப் பழமையான அணையாகும். ஆனால் இந்த அணை கட்டப்பட்ட சில தசாப்தங்களிலேயே ஏற்பட்ட போர் மற்றும் முறையற்ற பராமரிப்பினால் முற்றிலும் கைவிடப்பட்டு, இன்று வெறும் சிதைவுகளாக மட்டுமே உள்ளது. எகிப்து நாட்டில் கிமு 2600களில் சாத்-எல்-கஃபாரா என்ற அணை கட்டப்பட்டது. இதன் கட்டுமானம் முழுமையடைவதற்கு முன்பே கடுமையான வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் அழிந்துபோனது.
ஆனால் கிபி 2ஆம் நூற்றாண்டில் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, கட்டி முடிக்கப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் காவிரி நீரைத் தடுத்து, ஒழுங்குபடுத்தி, விவசாயப் பாசனத்திற்குப் பயன்படும் உலகின் அதிசய அணையாகத் திகழ்கிறது. மற்ற இரு அணைகளும் வறண்ட அல்லது அவ்வப்போது வெள்ளம் வரும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டவை. ஆனால் கல்லணை, நொடிக்குப் பல்லாயிரக்கணக்கான கன அடி நீர் தொடர்ந்து பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. ஓடும் நீரின் வேகத்தை எதிர்கொண்டு அணை கட்டியது அன்றைய காலத்தின் மிகப்பெரிய பொறியியல் சாதனையாகும்.
கடற்கரையில் அலைகள் கால்களை நனைத்துவிட்டுச் சொல்லும்போது, பாதங்களின் கீழே இருக்கும் மணலை அரித்துச் சிறிய குழியை ஏற்படுத்தி விட்டுச்செல்லும். இந்தத் தத்துவத்தைக் கொண்டே கல்லணை கட்டப்பட்டது.
தண்ணீரைத் தடுத்து நிறுத்துவது கடினம் என்பதால், காவிரி ஆற்றின் வேகமான நீரோட்டத்தை உணர்ந்து, ஆற்றின் குறுக்கே பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக ஆற்றின் மணலுக்குள் தானாகவே அழுந்தின. பாறைகளை ஒன்றோடு ஒன்று இணைக்கச் சுண்ணாம்புக் காரை அல்லது களிமண் மற்றும் பிசின் கலவையைப் பயன்படுத்தி, உறுதியாக அவை மணலில் நிற்கும்படி செய்தனர். இதுவே கல்லணை கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.
இந்தியாவை ஆங்கிலேயக் காலனித்துவ அரசு ஆண்டபோது 1829ஆம் ஆண்டு காவிரி பாசனப் பகுதியின் பொறுப்பாளராக சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். கல்லணையின் அடித்தளத்தை ஆராய்ந்து, மணல் அடித்தளத்தின்மீது எப்படி இவ்வளவு பெரிய அணை நிலைத்து நிற்கிறது என்கிற ரகசியத்தைக் கண்டறிந்து அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே பிற்காலத்தில் பல அணைகளைக் கட்டினார். பின்னாளில் தென்னிந்தியாவின் விவசாய வரலாற்றில் நீர்ப்பாசனத்தின் தந்தை என்று போற்றப்பட்ட அவர், கல்லணையின் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து, அதற்கு Grand Anaicut அதாவது மாபெரும் அணைக்கட்டு எனப் பெயரிட்டார்.
‘ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை இவர்களிடமிருந்துதான் (கல்லணை கட்டியவர்களிடம்) நாம் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டு போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனையைப் புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம்’ என்று சர் ஆர்தர் காட்டன் பதிவு செய்துள்ளதாக முனைவர் பழ.கோமதிநாயகம் தனது ‘நீரின்றி அமையாது நிலவளம்’ நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்தக் கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமானம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது, இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.
பிரிட்டிஷ் பொறியியலாளரான பேயர்டு ஸ்மித் 1853ஆம் ஆண்டு கல்லணையைப் பார்வையிட்டார். கங்கை கால்வாய் திட்டத்தின் மூலம் புகழ்பெற்ற இவர், காவிரியின் சீறிப்பாயும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, பாறைகளை ஒன்றிணைத்துக் கட்டிய தமிழர்களின் இந்த நீர் மேலாண்மைத் திறனைக் கண்டு வியந்தார். இதன் அடிப்படையில், அவர் கல்லணையை ‘மிகப்பெரிய பொறியியல் சாதனை’ என்று பாராட்டிப் பதிவுசெய்துள்ளார்.
மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் அணைக்கட்டுகளை எவ்வாறு கட்டுவது என்கிற அறிவியல் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் சீரிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டிருந்தனர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.
இப்படியாக ஆறுகளில் அணைகட்டி அவற்றின் நீரைத் தேக்கி வைக்கும் தொழில்நுட்பம் மட்டுமின்றித் தேக்கிய நீரை வெளியேற்றும் தொழில்நுட்பத்தையும், தமிழர்கள் பெற்றிருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களில் ஒன்று பாண்டியன் கால். இதைப் பழுதுபார்த்த ஹாரஸ்லி என்ற ஆங்கிலப் பொறியாளர், தமிழர்கள் தொழில்நுட்பத்தைப் புகழ்ந்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
‘பாண்டியன் வாய்க்கால் மற்றும் பத்மநாபபுரம் புத்தனாறு வாய்க்கால்களை ஆரம்பத்தில் உருவாக்கியவர்களின் வழியில் செல்வது தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் கலப்பில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம் இவர்களுடைய திறமையையும், மனித சக்தியையும் மீறிய விடாமுயற்சியும், காட்சியாக நன்கு பதிந்துள்ளது, பாசனப் பொறியியல் கலையின் ஆசானாகவும் திறமையுள்ள மகத்தானவர்களாகவும் நான் கருதுகின்றவர்களின் அடிச்சுவட்டை ஒட்டி நான் அவ்வேலைகளைச் செய்வதில், போதுமென்ற மனநிறைவையும் முழுத்திருப்தியும் அடைகிறேன்.’
இவ்வாறு ஐரோப்பியப் பொறியாளர்களின் கூற்றுக்களை முனைவர் பழ.கோமதிநாயகம் தனது ‘நீரின்றி அமையாது நிலவளம்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய தமிழர்கள் ஆற்றுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தத் திட்டங்கள் உருவாக்கும்பொழுது ஆற்றின் தனித்தன்மையான நில அமைப்பு, நீர்வளம் பற்றி நன்கு அறிந்திருந்ததால், அவர்களால் உருவாக்கப்பட்ட பாசனத் திட்டங்கள் பல நூற்றாண்டுகள் செயல்பட்டுவந்தன. மக்களும் அரசர்களும் அவற்றை ஈடுபாட்டுடன் பராமரித்தும் மேலான நிர்வாகமும் செய்து வந்தனர் என்று தனது அவதானிப்பையும் முனைவர் பழ.கோமதிநாயகம் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சங்க காலத்தினர் நீர் மேலாண்மையில் சீரிய அறிவாற்றல் பெற்றுச் சிறந்து விளங்கினர் என்பதை அறிய முடிகிறது.
(தொடரும்)

