Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் குழுமத்தின் வளர்ச்சியும், வ.உ.சிதம்பரனாரின் அரசியல் செல்வாக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களை உறுத்தின. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான வாய்ப்பை அவர்கள் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். நிறுவனத்தைப் பலவீனப்படுத்துவதற்கான ஒரே வழியும் ஒரே இலக்குமான வ.உ.சியைச் சாய்ப்பது என முடிவுசெய்தனர். இதற்காக வெளிப்படையாகவே பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்துடன் கைகோர்த்தபடி காவல்துறை, கப்பல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அரசின் அனைத்துத் துறைகளும் இயங்கின.

21 டிசம்பர் 1907 அன்று, ‘தி மதராஸ் நேஷனலிஸ்ட்’ என்ற அடையாளத்துடன் தேசியவாதக் குழுவிற்குத் தலைமை தாங்கி சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப் புறப்பட்டார் வ.உ.சி. இந்தப் பயணச் செலவை வ.உ.சி மற்றும் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர் ஏற்றதாக ஆ.இரா. வேங்கடாசலபதி தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

தனது அரசியல் வழிகாட்டியாகக் கருதிய பால கங்காதர திலகரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வ.உ.சிக்கு முதன்முறையாக அமைந்தது. 27 டிசம்பர் 1907  அன்று நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டில், மிதவாதத் தலைவர்களான கோகலே–மேத்தா அணியினருக்கும் திலகர் தலைமையிலான தேசியவாத அல்லது தீவிரவாத அணியினருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. முதல்நாள் வாய்த் தகராற்றிலும், 2ஆம் நாள் கைகலப்பிலும் முடிந்தது.

காங்கிரஸின் தலைமைப் பிரசங்கமே நடைபெறாமல் கூட்டம் முடிந்தது. வாய் வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நாற்காலிகளும் செருப்புகளும் பறந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் தலையீடு இல்லையெனில் நிலைமை மிகத் தீவிர நிலையை அடைந்திருக்கும்.

இக்குழப்பங்களுக்கு மத்தியிலும் திலகர் மிகத் தைரியமாகத் தன் கருத்துகளை மேடையில் முன்வைத்தார். திலகரின் தலையை நோக்கி வீசப்பட்ட நாற்காலிகளை அவர் மேல் படாமல் திலகரின் தொண்டர்களில் சிலரும் மிதவாதிகள் சிலரும் காத்து நின்றனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் திலகருக்குப் பக்கபலமாக இருந்தவர்களுள் ஒருவர் வ.உ.சி. இம்மாநாட்டில் பாரதி, சக்கரை செட்டியார் என 30 பேர் கொண்ட நபர்களுடன் சென்று தன் சுதேசி எண்ணங்களை மேலும் வலுவாக்கக்கொண்டார் வ.உ.சி.

சச்சரவில் முடிந்த மாநாட்டின் முடிவில் சென்னை மாகாணத் தேசியவாதப் பிரிவினருக்கு வ.உ.சியும், பம்பாய் மாகாணத்திற்குத் திலகரும், வங்காள மாகாணத்திற்கு அரவிந்த கோஷும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இப்படித் தொண்டனாகச் சென்று தீரமிகு தலைவராக சென்னை திரும்பினார் வ.உ.சி.

சூரத் மாநாட்டிற்குப் பின் வ.உ.சி காட்டிய வலுவான ஆங்கிலேய எதிர்ப்பு கப்பலின் நிர்வாகக்குழுவில் இருந்தோருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. சுதேசிக் கப்பல் நிர்வாகத்தின் சட்ட ஆலோசகராக இருந்த குருசாமி ஐயர், வ.உ.சியின் தேசியவாத அரசியலை  விரும்பவில்லை. வ.உ.சிதம்பரனாரின் செயல்கள் சுதேசிக் கப்பல் போக்குவரத்தின் வருங்காலத்தையே அழித்துவிடும் முயற்சி எனும் வகையில் குழுவில் இருந்தோரின் மனத்தில் அச்சத்தை விதைக்கத் தொடங்கியிருந்தார்.

ஒருகட்டத்தில் சுதேசிக் கப்பல் நிர்வாகத்திலிருந்து வ.உ.சி ஓரங்கட்டப்படுவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் குருசாமி முன்னெடுத்துச் சென்றார். உதாரணமாக வ.உ.சிக்கு ஆதரவாக இருந்தோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். குருசாமி ஐயர் தனக்கு ஆதரவாகக் குழுவில் இருந்த மிதவாதத் தலைவர்களைச் சேர்த்துக்கொண்டார்.

சில இயக்குநர்கள், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் அதிகாரிகளுடனும் ஆங்கிலேயர்களுடனும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டதாகத் தனது சுயசரிதையில் வ.உ.சி வேதனையுடன் குறிப்பிட்டதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆங்கிலேயர்கள் நேரடியாகச் செய்யமுடியாததை குருசாமி ஐயர் போன்றோர் உடனிருந்தே சாதித்தனர் என்றே சொல்லலாம். இத்தகைய கூட்டுச் சதியின் பலன்களுள் ஒன்றாக சப்-மாஜிஸ்திரேட் வாலர் சுற்றறிக்கை ஒன்றினை இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பினார். அதில் சுதேசிக் கப்பல்களில் எந்தவொரு இந்திய அதிகாரிகளும் பயணம் செய்யக்கூடாது என ஆணை பிறப்பித்திருந்தார். இவ்வாறு சுதேசக் கப்பலின் வளர்ச்சிக்குத் தடையினை உண்டாக்கும் கெடுபிடிகளை உண்டாக்கினர்.

அடுத்ததாக சுதேசிக் கப்பல் பிரிட்டிஷ் கப்பல் மீது வேண்டுமென்றே மோதியதாகப் பழி சுமத்தியதோடு, பிரிட்டிஷ் கப்பல் கிளம்பிய பின்னரே சுதேசிக் கப்பல் கிளம்ப வேண்டுமென நேரக்கெடு விதித்தனர். இதனால் முதலில் கிளம்பும் பிரிட்டிஷ் கப்பலில் பயணிகள் பயணம் அதிகரிக்கும் என நினைத்தனர். இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர் சுதேசிக் கப்பல் நிறுவனத்தினர்.

இவ்வழக்கு விசாரணையில் மேற்கூறிய குற்றச்சாட்டு உண்மையில்லை என்பது நிரூபணமானது. இருந்தாலும்கூட, துறைமுகச் சுங்க அதிகாரிகளும் கப்பலின் உயர் அதிகாரிகளும் சுதேசக் கப்பல் நிறுவனத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்குப் பலவிதங்களில் தொல்லைகளைக் கொடுத்தபடியே இருந்தனர்.

இதற்கிடையில், வ.உ.சியின் நிர்வாகத் தலையீடு களையப்பட வேண்டும் எனக் குருசாமி ஐயர் திட்டம் தீட்டினார்.  அதற்காகப் பல்வேறு ஊர்களுக்கும் கொழும்புவிற்கும் நிதி திரட்டும் நடவடிக்கையின் பேரில் வ.உ.சியை வேண்டுமென்றே அனுப்பி வைத்தார்.

ஆனால் வ.உ.சியோ ஊர் திரும்பிய பின் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் சுதேசம் குறித்த கருத்துகளையும், அந்நிய வணிகத்தால் நாடு இழப்பவை பற்றியும், தனி மனிதச் சுதந்திரம் குறித்தும், அடிமைமுறை குறித்தும், உள்நாட்டு வணிகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் குறித்துமே பேசினார். தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உரை நிகழ்த்தினார். இதனால் சிறிது காலத்திலேயே வ.உ.சியின் பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டது. பொதுக்கூட்டங்கள் நடைபெறாத நாள்களே இல்லை எனலாம். இதனால் ஆத்திரமடைந்த கலெக்டர் வின்ச், தனது சொந்த நோக்கங்களை அடைவதற்காகவே வ.உ.சி தீவிரவாதத்தை ஆதரித்துப் பேசிவருவதாகக் குற்றம்சாட்டினார்.

அக்காலத்தில் பொதுக்கூட்டங்கள் யாவும் மூடிய அரங்குகளுக்குள் நடந்து முடிபவையாக இருந்தன. வ.உ.சியின் வருகைக்குப் பின்னரே திறந்தவெளிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்களின் சிந்தனைக்கு உரமளிக்கும் வகையிலும் சுதந்திர உணர்வைத் தூண்டும் வகையிலும் தமிழிலேயே உரை நிகழ்த்தப்பட்டது. அதற்கு முன்பு வரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

ஒரு பக்கம் வ.உ.சிக்குத் துணையாகத் தன் பாடல்களால் பாரதி தேசப்பற்றை ஊட்டிக்கொண்டிருந்தார். மறுபக்கம் சுப்ரமணிய சிவா எரிமலையாய் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தார். குறிப்பாகச் சுப்பிரமணிய சிவா எனும் காவியுடை தரித்த துறவியின் பேச்சைக் கேட்பவர்கள் மனத்தில் கனல் எரிந்தது. யார் இந்தச் சுப்பிரமணிய சிவா? வ.உ.சியின் வாழ்க்கைப் போராட்டத்தில் இவர் முக்கியப் பங்கு வகிக்கக் காரணம் என்ன?

4 அக்டோபர் 1884 அன்று பி.ஆர். ராஜம் அய்யர்-நாகம்மை தம்பதியினருக்கு மகனாக மதுரை மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார். தந்தை இவரது சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியே சென்றுவிட, தாய் வழி தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தார். இயற்பெயர் சுப்பாராமன்.

தொடக்கத்தில் மதுரையில் படித்தாலும் பின் குடும்ப வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்றார். அங்கு ஊட்டுப்புறையில் இலவச உணவுடன் தன் கல்வியைத் தொடரலானார். 1902ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஞான வகுப்புகளும் பயில்வான் சட்டம்பி நவநீத கிருஷ்ணனிடம் குஸ்தியும் சிலம்பாட்டமும் கற்றுக்கொண்டார். 1903ஆம் ஆண்டில் ‘தர்ம பரிபாலன சமாஜம்’ அமைப்பை நிறுவி ஆன்மிகச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றார்.

ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த தாகூர்கான் சந்திர வர்மாவின் மேடைப் பேச்சைக் கேட்டு அரசியல் சிந்தனை துளிர்விடத் தொடங்கிற்று. அது முதல் சிவாவும் கூட்டங்களைக் கூட்டிப் பேச ஆரம்பித்தார். மக்கள் கூட்டமும் பெருக்கெடுக்க ஆரம்பித்தமையால் சுப்பிரமணிய சிவாவை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விட்டு வெளியேற ஆணை பிறப்பித்தனர்.

கிராமம் கிராமமாக நடைப்பயணமாகவே அரசியல், நாட்டு நிலவரங்கள், சுதந்திரத்தின் அவசியம் ஆகியவற்றைப் பேச்சின் மூலம் கொண்டுசென்றார் சுப்பிரமணிய சிவா. தான் வருவதை ஏற்கெனவே கடிதம் மூலம் வ.உ.சிக்குத் தெரிவித்திருந்தார் சிவா. திருநெல்வேலி வந்தடைந்ததும் அங்கிருந்த சுதேசிப் பண்டகசாலையின் வாடிக்கையாளர் ஒருவர், கடையின் உரிமையாளரான சங்கர நாராயண அய்யரிடம் சிவாவை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் சங்கர நாராயணரின் வேண்டுகோளுக்கிணங்க பிரசாரம் செய்யத் தீர்மானித்தார் சிவா. 9 ஜனவரி 1908 அன்று பிரசாரத்தைத் தொடங்கினார். கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகாசி, ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் சுதந்திர வேட்கையைத் தன் பேச்சின் மூலம் பரப்பினார். அதன் பின்னர் தூத்துக்குடி வந்தடைந்தார்.

வ.உ.சி, பாரதி, சுப்ரமணிய சிவா ஆகிய மூவரும் திலகரின் அபிமானிகள் என்பதால் வெள்ளையர்களின் உளவுப் பார்வை இவர்கள்மீது விழுவதைத் தடுக்க முடியவில்லை. இவர்களது ஒவ்வொரு பேச்சையும் இரகசிய போலீஸ் அமைப்பின் ஒற்றர் பிரிவு தனித்தனியே பதிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ‘சென்னை விவசாய கைத் தொழிற்சங்கம் லிமிடெட்’ எனும் சங்கத்தை ஆரம்பித்து, சங்கத்தின் பங்கு ரூபாய் ஒன்று வீதம் ரூ.10,000 சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் வ.உ.சி .

இப்படியாகச் சுதேசி கப்பல், திலகரின் தலைமையில் மக்களிடையே சுதேசம் பற்றிய விழிப்புணர்வு எனச் சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்துவதுபோல ஒன்றன் பின் ஒன்றாக வ.உ.சி செய்தது வெள்ளையர்களைக் கொதிப்படையச் செய்தது. ஆனால் வெள்ளையர்களின் காத்திருப்பிற்குப் பலன் கிடைக்கும் விதமாகக் கோரல் மில் தொழிலாளர் பிரச்னை உருவானது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *