ஏனென்றால் தவறான முன்னுதாரணங்கள் நம்மைச் சீரழிக்கும்.
உங்களைக் கவர்ந்த ஆளுமை யார்? மாணவர்களை வாய் திறந்து பேச வைப்பதற்காக வகுப்பறையில் ஒரு நாள் இக்கேள்வியை எழுப்பினேன். எட்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அந்த மையத்தில் குழுமியிருந்தனர். வழக்கமான சில பெயர்கள்தாம் அவர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்திருந்த தருணத்தில் நடு வரிசையிலிருந்து ஒரு குரல் தோன்றியது. ‘ஹிட்லர்!’ நான் திகைத்து நிற்பதைப் பார்த்து ஒருவேளை தன் குரல் சரியாகக் கேட்கவில்லையோ என்னும் குழப்பத்தில் அந்த மாணவர் அதே பெயரை இன்னொருமுறை அழுத்தம் கூட்டி உச்சரித்தார். ஓர் அலை நிறைவடைந்ததும் இன்னொன்று, மேலுமொன்று என்று அடுத்தடுத்துக் கிளம்பி வருமல்லவா? அதேபோல் வேறு சில மாணவர்களும் உற்சாகத்தோடு, ஆமாம் எனக்கும் அவர்தான் பிடிக்கும் என்று உடன் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்தபோது ஒரு கணம் என் உடல் ஒரு கணம் நடுங்கியது.
ஏன் ஹிட்லரை உங்களில் இவ்வளவு பேருக்குப் பிடிக்கும் என்று கேட்டபோது அவர்கள் அளித்த காரணங்கள் இவை. ‘ஹிட்லர் உலகை மிரட்டிய ஒரு மாபெரும் தலைவர். அவருடைய மிடுக்கான ராணுவ உடை கவர்ந்திழுக்கக்கூடியது. ஒரு தலைவர் என்றால் இப்படித்தான் கண்டிப்பானவராக, சர்வாதிகாரம் கொண்டவராக, எல்லோரையும் வழிக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவராக இருக்கவேண்டும் என்று அவரைப் பார்க்கும்போது தோன்றும். கம்பீரமான ஹிட்லர் ‘சல்யூட்’ பிடிக்கும். பெரிய, பெரிய நாடுகளையெல்லாம் நடுநடுங்க வைத்த அவர் துணிச்சல் பிடிக்கும். தவிரவும், அவர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி மகத்தான வளர்ச்சி கண்டதாகவும் சொல்கிறார்கள். இன்றைய தேதியில் நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க ஹிட்லர் போன்றவர்தான் வேண்டும், இல்லையா?’
எதிர்க்கேள்வியொன்றைப் போட்டேன். சரி, ஒரு வாதத்துக்கு நீங்கள் சொன்னவை எல்லாம் முழு உண்மை என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் வியந்து பார்க்கும் அதே தலைவர்தான் கொடூரமான முறையில் யூத இனவொழிப்பை நிகழ்த்தியிருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இந்த உண்மை அவரை மதிப்பிடும்போது உங்களை உறுத்தவில்லையா? இல்லை என்பதுதான் அவர்கள் பதில். ‘காரணம், அவர் ஆட்சியில் நடந்த தவறு அது ஒன்றுதான். ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் ஏராளம், ஏராளம். ஹிட்லரின் இந்த ஒற்றைக் குறையைச் சுட்டிக்காட்டும் எல்லோருமே அவருடைய விரிவான பங்களிப்புகளைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். அவர் யூதர்களைப் பழிதீர்த்துக்கொண்டார் என்றால் அதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கும் இல்லையா? காரணமின்றி ஹிட்லர் அவர்களைத் தண்டித்திருக்க மாட்டார்தானே? தனிப்பட்ட முறையில் அவர் யூதர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஜெர்மனிக்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவர் மனத்தில் என்ன இருந்தது என்று நமக்குத் தெரியாது அல்லவா?’
தேநீர் இடைவேளையின்போது எனக்குத் தெரிந்த பள்ளி ஆசிரியர்களிடம் என் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டபோது, இது புதிதல்ல; சிறிது காலமாகவே நிலவிவரும் ஒரு பிரச்சினைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். எங்கள் வகுப்பறைகளிலும் ஹிட்லர் ஆதரவு அலை வீசுவதைக் கண்டிருக்கிறோம். நாங்களும் இரண்டாம் உலகப் போர், இனவொழிப்பு குறித்தெல்லாம் பலமுறை பாடம் எடுத்துவிட்டோம். இருந்தாலும் ஹிட்லர்மீதான இவர்களுடைய ஈர்ப்பு குறைவதாகக் காணோம். என்ன செய்வதென்று எங்களுக்கும் தெரியவில்லை. தலைமை ஆசிரியர் தொடங்கி எல்லோருக்கும் இந்தக் கவலை இருக்கிறது.
அவர்களுடைய சில அவதானிப்புகள் பின்வருமாறு. வன்முறை இன்று இயல்பானதாக மாறிவிட்டது. இப்போதுவரும் திரைப்படங்களில் நாயகனைவிட வில்லன்தான் ஈர்க்கும்படியாக இருக்கிறான். அவன் நிகழ்த்தும் வதை, கொலை, வெட்டுக்குத்து அனைத்தையும் மாணவர்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதோடு அவற்றை நியாயப்படுத்தவும், ஏன் சில நேரங்களில் நிகழ்த்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஹிட்லர் பல லட்சம் பேரைக் கொன்றவர் என்று நாம் சொன்னால், அச்சத்தைவிட ஆச்சரியமே அவர்களிடம் பொங்குகிறது!
இவற்றோடு மேலும் சில காரணங்கள் என்னுடைய அடுத்தடுத்த வகுப்புகளில் புலப்பட்டன. முதலாவதாக, மாணவர்களின் உலகப்பார்வை உருவாகும் முறையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஹிட்லர் குறித்து எங்கிருந்து படித்து அல்லது கேட்டு தெரிந்துகொண்டீர்கள் என்று கேட்டபோது பலரும் ரீல்ஸ், இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்றவற்றைக் குறிப்பிட்டார்கள். சமூக வலைத்தளங்களே அவர்களுடைய உலகப் பார்வையை உருவாக்கியிருக்கியிருக்கின்றன. இரு நிமிட, ஐந்து நிமிட, அதிகபட்சம் பத்து நிமிடக் காணொளிகள் சிலவற்றின்மூலம் ஹிட்லரை ஒரு நாயகராக அவர்கள் வரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது, நேர்மறையான ஆளுமைகளிடமிருந்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விலகலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங் போன்றோர் குறித்து அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அல்லது ஆர்வம் கொள்ளும் அளவுக்கு அவர்களோடு எந்த உறவும் அவர்களோடு பூக்கவில்லை. எழுத்தாளர்களோ கவிஞர்களோ சிந்தனையாளர்களோ அவர்களுக்கு அறிமுகமாகவில்லை. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற அவர்கள் காணும், ரசிக்கும் ஆளுமைகள் போகக் கடந்தகாலத்திலிருந்து வரித்துக்கொள்ள அவர்களுக்குத் தக்க முன்னுதாரணங்கள் எதுவும் இல்லை. இந்த வெற்றிடத்தை ஹிட்லரும் அவரைப் போன்றோரும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.
மூன்றாவது, வாசிப்பு வழக்கத்திலிருந்து இன்றைய மாணவர்கள் அந்நியப்பட்டிருப்பதை (பெருமளவிலான ஆசிரியர்களும்தான்) நாம் ஏற்கவேண்டும். ஆறாம் வகுப்பு தொடங்கி பதினொன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களைப் பார்வையிட்டேன். முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வி, இரண்டாம் உலகப்போர், காரணங்கள், விளைவுகள், ஐ.நாவின் உருவாக்கம் என்று நீண்டுசெல்லும் வழியில், இனவொழிப்பு பற்றி ஒருசில குறிப்புகள் மட்டுமே காணப்படுகின்றன. இக்குறிப்புகளை மட்டும் வாசிக்கும் ஒருவர் ஹிட்லரின் ‘ஒற்றைத் தவறு’ மன்னிக்கக்கூடியது எனும் முடிவுக்குத்தான் வந்து சேர்வார்.
அடுத்த அழைப்பு வந்தபோது, ஹிட்லரின் வதைமுகாம்களை இயன்றவரை முறையாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன். ஒருவேளை நாம் அனைவரும் ஜெர்மனியில் யூதர்களாகப் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஒருநாள் திடீரென்று ராணுவத்தினர் வந்து நம் வீட்டையும் நம் உடமைகளையும் பறித்துக்கொண்டு, நம் குடும்பத்திடமிருந்து பிரித்து, ஆடு, மாடுகளைப்போல் வண்டியில் அடைத்து தொடர்பேயில்லாத ஓரிடத்துக்கு இழுத்துச்சென்று, சிறையில் தள்ளினால் என்னாகும்? ஒரு குற்றமும் செய்யாத நம்மை தங்கள் விருப்பத்துக்கு அவர்கள் துன்புறுத்தினால் எப்படி இருக்கும்? ஒரு குற்றமும் செய்யாத நம்மை தேச விரோதிகள் என்று தீர்ப்பளித்து மரண தண்டனையும் அளித்தால் நம் தலைவர் காரணமின்றி இப்படியெல்லாம் செய்யமாட்டார்; அவருக்கு ஒத்துழைப்பு நல்குவது நம் கடமை என்போமா? நம்மை ஒரு தொற்றுக்கிருமியாகப் பார்த்து நசுக்கும் ஒரு சர்வாதிகாரியை நம்மால் மெய்யுணர்வோடு மதிக்கமுடியுமா?
ஆசிரியர்களுக்கான வரலாற்று வகுப்புகள் அனைத்திலும் சில நிமிடங்கள் ஒதுக்கி ஹிட்லர் என்னும் பிம்பக்கட்டமைப்பை மையப்படுத்தி உரையாடத் தொடங்கினேன். பாடப்புத்தகங்களைக் கடந்து இயான் கெர்ஷா, ரிச்சர்ட் எவான்ஸ், பிரிமோ லெவி, எலி வீஸல் போன்றோரின் எழுத்துகளையும் அனுபவங்களையும் வாசித்து, மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துச்செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்.
0
ஹிட்லருக்கும் இனவொழிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிடுபவர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றதாகச் சொல்லப்படுவது பொய். வதைமுகாம் பொய். நச்சு வாயு அறை என்றொன்றை நாஜிகள் உருவாக்கவேயில்லை. நச்சு வாகனம் இயங்கியதில்லை. மக்கள் பெரும் எண்ணிக்கையில் திணிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் மொத்தமாகப் போட்டு எரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவது பொய். புகைபோக்கி வழியாக மனிதக் கரும்புகை வெளியேறியதாகவும் வானத்தை மறைத்ததாகவும் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நம்பாதீர்கள். இவை அனைத்தும் சோவியத் செம்படையினரும் மேற்கத்திய அரசுகளும் உருவாக்கிய கட்டுக் கதைகள். ஹிட்லரின் மிரட்டலான ஆளுமை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஜெர்மனி உலகச் சக்தியாக அவர் ஆட்சியில் எழுச்சி பெற்றதை அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. எனவே மறைமுகமாக ஹிட்லரை வீழ்த்த இக்கதைகளை அவர்கள் புனைந்தனர். ஹிட்லரைப் பழிபாவத்திலிருந்து தப்புவிக்க விரும்புபவர்கள் முன்வைக்கும் சித்திரம் இது.
இவர்களில் புகழ்பெற்றவர் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் (வரலாற்றாளர் என்று தன்னை அழைத்துக்கொள்பவர்) டேவிட் இர்விங். யூத இனவொழிப்பு நடைபெறவில்லை என்பதோடு நில்லாமல் ஹிட்லர் பலமுறை யூதர்களை நாடிச் சென்று உதவியிருப்பதாக வாதிடுகிறார் இர்விங். சில அத்துமீறல்கள் நடந்திருக்கலாம். யூதர்கள் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கெல்லாம் நாஜி அதிகாரிகள்தாம் காரணமே ஒழிய, தலைமையிடத்தில் அமர்ந்திருந்த ஹிட்லர் அல்லர். இனவொழிப்பை அவர் திட்டமிடவில்லை. அவர் மேலிருந்து செயல்படுத்தவில்லை. அப்படியொன்று நடந்ததுகூட அவருக்குத் தெரியாது என்பது இர்விங்கின் முடிவு. ஒருவேளை தெரிந்திருந்தால் அவர் இதனை அனுமதித்திருக்கமாட்டார். காரணம், யூத வெறுப்பை எதிர்த்தவர் ஹிட்லர் என்று அதிர வைக்கிறார் இர்விங்.
வரலாற்றாளர்கள் ஹிட்லர்மீது அபாண்டமாகப் பழியைச் சுமத்துகிறார்கள். ஹிட்லரை இனவொழிப்போடு தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை. யூதர்களை வதையுங்கள் என்றோ சிறையில் தள்ளுங்கள் என்றோ கொல்லுங்கள் என்றோ ஹிட்லர் உத்தரவிட்டுக் கையெழுத்திட்ட ஒரு காகிதம்கூட இதுவரை கண்டறியப்படவில்லை என்று 1977இல் வெளிவந்த தனது நூலில் (Hitler’s War) அறிவித்தார் இர்விங். எந்தவித ஆதாரமும் இன்றி நாம் அனைவரும் அபாண்டமாக ஹிட்லர்மீது பழி சுமத்திவருகிறோம் என்பது இர்விங்கின் குற்றச்சாட்டு.
‘ஹிட்லர் ஓர் அசாதாரணமான தலைவர். கூர்மதியாளர். ஜெர்மனியின் வளர்ச்சிதான் அவர் கொண்டிருந்த ஒரே கனவு. அதை அவர் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். முதல் உலகப் போரில் கடும் தோல்வியடைந்த ஜெர்மனியை ஒரு பலமிக்க ஆற்றலாக அவர் வளர்த்தெடுத்தார். ஹிட்லர் ஓர் அபாரமான ராஜதந்திரி. அவருடைய போர் வெற்றிகள் மகத்தானவை.’ இப்படி நூல் நெடுகிலும் ஹிட்லரின் புகழ் பாடி அவரை ஒரு மாபெரும் கதாநாயகராக முன்னிறுத்துகிறார் இர்விங்.
சமூக வலைத்தளத்தில் கொட்டிக்கிடக்கும் ஹிட்லர் ஆதரவுக் காணொளிக் காட்சிகளுக்கும் கட்டுரைகளுக்கும் ஆதாரம் இர்விங் போன்றோரின் படைப்புகள்தான். நான் சந்தித்த மாணவர்கள் இர்விங்கை வாசித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இர்விங் கட்டமைத்த பிம்பம்தான் அவர்களுக்குத் தெரிந்த ஹிட்லர். அந்தப் பிம்பத்தைதான் அவர்கள் தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கிறது. காரணம், இர்விங் போன்றவர்கள் சுயலாபத்துக்காகச் சான்றுகளின்றி பொய் பரப்புபவர்கள் என்பதை மாணவர்களுக்குப் புரிய வைப்பது சாத்தியம் என்று நம்புகிறேன். ‘ஹிட்லர்தான் இனவொழிப்பை நிறைவேற்றினார் என்பதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லையாமே?’ என்று ரீல்ஸ் பார்த்விட்டு வாதிடுபவர்கள் யாரும் ஹிட்லர் பற்றிய நூல்களை வாசித்தவர்களல்லர். பலவிதமான கருத்துகளை அலசி, ஆராய்ந்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தவர்களல்லர்.
ஏன் ஹிட்லர் கையெழுத்திட்ட ஓர் ஆணைகூடக் கிடைக்கவில்லை என்பதை அவர்களுக்கு விளக்கினால் நிச்சயம் அவர்கள் மாயையிலிருந்து விடுபடுவார்கள். நெப்போலியனுக்குப் பிறகு உலகம் சந்தித்த மாபெரும் ராணுவ ராஜதந்திரி என்று வர்ணிக்கப்படும் ஹிட்லர் 1 செப்டெம்பர் 1939 அன்று போலந்தில் போர் தொடுத்ததன்மூலம் இரண்டாம் உலகப்போரைத் தொடங்கிவைத்தார். அடுத்தடுத்து பல நாடுகளை அவர் வென்று, ஆக்கிரமித்தது நிஜம். ஆனால் சோவியத் யூனியன்மீது அவர் அறிவித்த போர் ஜெர்மனியை அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றது. நாலாபக்கமும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம், இனி நாம் தப்பிக்கமுடியாது என்று மிகுந்த அச்சத்தோடும் தயக்கத்தோடும் ராணுவத் தலைவர்கள் ஹிட்லரிடம் அறிவித்தபோது, ஹிட்லர் அதை நம்ப மறுத்ததோடு, தகவலைக் கொண்டுவந்தவர்கள்மீது கடுமையாக எரிந்து விழுந்திருக்கிறார்.
நாம் ஆரியர்கள். நமக்கு வீழ்ச்சியில்லை. இந்தக் கண்மூடித்தனமான முரட்டு நம்பிக்கையைக் கிட்டத்தட்ட இறுதிக்கணம்வரை ஹிட்லர் பற்றிக்கொண்டிருந்தது அவரை மட்டுமல்ல, ஜெர்மனியையும், ஏன் முழு உலகையும் மோசமாகப் பாதித்தது. ஜெர்மானியர்கள் உயர்ந்தவர்கள் என்றால் யார் கீழானவர்கள்? யூதர்கள், ஜிப்சிகள், ரோமாக்கள், உடல் நலக்குறைபாடு கொண்டவர்கள், கம்யூனிஸ்டுகள் இன்னபிறர். இவர்களை அகற்றினால் ஜெர்மனி விரிவடையும், செழிப்படையும், மேன்மை பெறும். இந்த நம்பிக்கையை யதார்த்தம் தகர்த்தெறிந்தபோது ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். தனது உடல்கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதால் அதைக் கவனமாக எரித்துவிடும்படி அவர் உத்தரவுகள் பிறப்பித்திருந்தார். ஜெர்மனி ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து அரசு ஆவணங்களும் மூலைக்கு மூலை எரிக்கப்பட்டன. வதைமுகாம்கள் தொடர்பான ஆவணங்களும் அவற்றில் அடக்கம். இனவொழிப்புபோன்ற ஒரு பெருங்கொடுமையை நிகழ்த்துமாறு ஹிட்லர் தன் கைப்பட உத்தரவு பிறப்பித்திருப்பார் என்று எதிர்பார்க்கமுடியாது. அப்படியே பிறப்பித்திருந்தாலும் அவை நாஜிகளால் அவசர, அவசரமாக (ஹிட்லரின் உடல்போல்) எரிக்கப்பட்டன என்பதே உண்மை.
உலகம் தோன்றியதற்குச் சான்றுகளில்லை என்பதால் உலகம் தோன்றவே இல்லை என்னும் முடிவுக்கு வரமுடியாது அல்லவா? ஹிட்லரும் அவர் கட்டியெழுப்பிய ஜெர்மனியும் சரிந்தபிறகு, வதைமுகாம்களில் எஞ்சியிருந்தவர்கள் அனைவரும் (ஆவணங்களைப்போல் அவசரமாக மனிதர்களை அழிக்கமுடியவில்லை) விடுவிக்கப்பட்டனர். எலும்பும் தோலுமாக குச்சிப்பூச்சிபோல் நடந்துவந்த மனிதர்களைக் கண்டு உலகமே அதிர்ந்து நின்றது. அவர்கள் எத்தகைய நரகத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களில் பலர் பின்னர் பதிவு செய்தனர். வதைமுகாம்களின் அமைப்பையும் இயக்கத்தையும் பலர் நுணுக்கமாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அழிவிலிருந்து தப்பிய பல ஆவணங்கள் ஹிட்லரின் ஜெர்மனியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அந்த ஜெர்மனி இப்போது நினைத்தாலும் நம்மை நடுநடுங்க வைக்கிறது.
வரலாற்றில் அதிகம் ஆராயப்பட்டவர் ஹிட்லர். போர்களில் அதிகம் அலசப்பட்டது இரண்டாம் உலகப்போர். ஒரு தலைப்பாக எடுத்துக்கொண்டால், யூத இனவொழிப்புக்குச் சமமாக வேறு எது குறித்தும் இவ்வளவு நூல்கள், இவ்வளவு ஆவணப்படங்கள், இவ்வளவு நினைவுக்குறிப்புகள், இவ்வளவு ஆய்வுகள் உருவாக்கப்பட்டதில்லை. ஹிட்லரின் பிம்பக்கட்டமைப்பை நொறுக்கும் பல நூறு நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. அவ்வளவெல்லாம் வேண்டாம். ஆன் ஃபிராங் தொடங்கி லெவிவரை நெஞ்சைப் பிசையும் ஏராளமான பதிவுகள் ஹிட்லரும் நாஜிகளும் இழைத்த மனிதத்தன்மையற்ற கொடுமைகளை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆன் ஃபிராங்கை வாசித்த ஒருவரால் வதைமுகாம் பொய் என்று கனவிலேனும் நினைக்கமுடியுமா?
லட்சக்கணக்கானவர்களின் வலியை, வதையை, கண்ணீரை, துயரை மறைப்பது சாத்தியமற்றது. டேவிட் இர்விங்கால் தொடர்ந்து பிம்பக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கமுடியவில்லை என்பதால் அவர் சோர்ந்துவிட்டார். பொய் கவர்ச்சிகரமானது. ஒரு பொய்யை உண்மைபோல் மாற்றிக்காட்டும் கலையில் நீண்டகால அனுபவம் கொண்டிருந்தவர் நாஜிகளின் பரப்புரையாளராகப் பணியாற்றிய ஜோசப் கெப்பல்ஸ். நாஜி ஜெர்மனியில் பரவியிருந்த அடர் இருளுக்கு வெள்ளையடித்து, பாருங்கள் ஹிட்லரின் தலைமையில் நாம் எப்படிப் பளபளப்பாக மின்னிக்கொண்டிருக்கிறோம் என்று படம் காட்டிக்கொண்டிருந்தார் கெப்பல்ஸ். அவருடைய கனவு முடிவுக்கு வருவதை உணர்ந்ததும், கெப்பல்ஸும் அவர் மனைவியும் தங்களுடைய ஆறு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோயினர். இன்று கெப்பல்ஸ் என்பது பொய்யின் இன்னொரு பெயராக மாறியிருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்தியது வரலாறு.
பொய்களுக்கும் பிம்பக்கட்டமைப்புகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடிவரும் ஒரு துறை, வரலாறு. தவறான புரிதல்களை முறியடித்து உண்மையை நிலைநாட்டும் ஆற்றல் வரலாறுக்கு இருக்கிறது.
(தொடரும்)

