Skip to content
Home » வாசிக்கும் கலை #4 – வாசிப்பைத் தடுக்கும் காரணிகள்!

வாசிக்கும் கலை #4 – வாசிப்பைத் தடுக்கும் காரணிகள்!

எந்தவொரு செயல்பாடானாலும் அதற்கென தனிப்பட்ட இடையூறுகள் இருக்கவே செய்யும். எதிர்வரும் இடையூறுகளைத் திறம்படக் கையாண்டு அச்செயல்பாட்டில் வெற்றியடைவதே சிறப்பு. வாசிப்புக்கும் இது பொருந்தும். ஓர் இடையூறு உங்கள் கவனத்தை வேறொன்றிலிருந்து திசைதிருப்பும்.

ஏதேனும் ஒன்றை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனை வாசித்த பிறகு, ‘நாம் இப்போது என்ன வாசித்தோம்?’ என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அப்படி யோசித்து நீங்கள் வாசித்த விஷயம் உங்களுக்கு எளிதில் நினைவிற்கு வரவில்லை என்றால், உங்கள் வாசிப்பில் நீங்கள் முழுமையாக ஈடுபடவில்லை என்று அர்த்தம். ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள, வாசிக்கும்போது அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம். அதனால்தான் கவனம் செலுத்துவது என்பது எப்போதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் கவனம் சிதறினாலோ அல்லது நீங்கள் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தாலோ, வாசித்தவற்றிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளும் விஷயங்களின் அளவு குறைந்துவிடும்.

ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது என்பது, உங்கள் கவனத்தின் பெரும்பகுதியை அந்த விஷயத்தின்மீது திருப்புவதாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் (மல்டிடாஸ்கிங்) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உதாரணமாக, வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைக்கும்போது உங்களால் நிச்சயம் வாசிக்க முடியும். இது போன்ற அதிகச் செயல்பாடு தேவைப்படாத விஷயங்களுக்கு மல்டிடாஸ்கிங் பொருந்தலாம். ஏனெனில், அத்தகைய சூழலில் பெரும்பாலான வேலையை வாஷிங் மெஷினே செய்துவிடுகிறது. எனவே அதே நேரத்தில் வாசிப்பதில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இருக்காது.

இதேபோன்ற மற்றொரு சூழலைச் சிந்தித்துப் பாருங்கள். வாஷிங் மெஷின் இல்லாமல் கைகளால் துணிகளைத் துவைக்கும்போது, அதில் உங்களது தொடர்ச்சியான செயல்பாடு என்பது இருந்தேயாக வேண்டும் அல்லவா! அப்போது உங்களால் அந்த நேரத்தில் வாசிக்க முடியுமா? என்றால், அநேகமாக முடியாது என்பதே பதிலாக இருக்கும். ஆக வாசிப்பதற்குக் கவனம் மிக முக்கியமானது. வாசிப்பு என்பது ஒரு தீவிரமான செயல்பாடு என்பதால், வேறொரு வேலையைச் செய்துகொண்டே இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்பதை மனதில் பதிய வைப்போம்.

வாசிப்பைத் தடுக்கும் கவனச்சிதறலை சரியாகக் கையாளுவதன் மூலமாக, நீங்கள் வாசித்த பகுதிகளை மீண்டும் வாசிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைக்கலாம். மேலும், கவனத்தைச் சிதறவிடாமல் வாசிப்பதன்மூலம் முக்கியமான குறிப்புகளைத் தவறவிடுவதையோ அல்லது கதையோட்டத்தைப் பின்தொடர முடியாமல் போவதையோ தவிர்க்கலாம். இதன் வாயிலாக உங்கள் நேரத்தைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அதுபோலவே, சீரான கவனத்துடன் வாசிப்பதன் மூலம் தடையற்ற மற்றும் இனிமையான வாசிப்பு அனுபவத்தைப் பெறலாம்.

இன்றைய பரபரப்பான காலத்தில் வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தாலும்கூட, நீங்கள் பணிபுரியும் அலுவலக சூழல், உங்களது வேலைக்கான காலக்கெடு, வீட்டு வேலைகள் மற்றும் முடிவில்லாத சமூக ஊடகப் பயன்பாடு ஆகியவற்றிற்கு இடையே, வாசிப்பதற்கான நேரத்தையும் கவனத்தையும் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதனால் உங்கள் புத்தக அலமாரிகள் தூசு படிந்து கிடப்பதோடு, வாசிப்பின்மீது உங்களுக்குள்ள ஆர்வமும் கைவிடும் நிலைக்குச் செல்கிறது என்றால் அது மிகையல்ல.

உங்கள் மனதிற்குள் எழும் கவனச்சிதறல்களையும் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். மனதில் பலவிதமான எண்ணங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தால் உங்களால் முழு கவனத்துடன் வாசிக்க முடியாது. ஆழ்ந்த மூச்சு விடுவதன் மூலமாக மனதை அமைதிபடுத்துங்கள். உங்கள் உடல் மற்றும் மனநிலை சிறப்பாக இருக்கும் நேரத்தையும் கவனச்சிதறல் இல்லாத நேரத்தையும் வாசிப்புக்காகத் தேர்ந்தெடுப்பது நல்ல பலனளிக்கும்.

முடிக்க வேண்டிய பிற பணிகள் இருக்கும்போது, புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமராதீர்கள். உங்கள் வாசிப்பு நேரத்தைச் சரியாக திட்டமிடுவதன்மூலமாக இடையூறுகளைக் களைந்து, உங்களால் சிறந்த வாசிப்பை மேற்கொள்ள முடியும். வாசிப்பைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்வது வாசிக்கும் விஷயத்தில் கவனத்தைச் செலுத்தவும் உதவும். வேலைக்குச் செல்லும் முன் 20 நிமிடங்கள், உணவு இடைவேளையின்போது 20 நிமிடங்கள் என உங்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்கேற்ப வாசிப்பைத் திட்டமிடலாம். சில சமயங்களில், புத்தகத்தின் பிரிவுகள், குறிப்பிட்ட அளவு பக்கங்கள் என்பதன் அடிப்படையிலும் வாசிப்பை எளிதாகப் பிரித்துக்கொள்ளலாம்.

வாசிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட, அலாரம் ஒன்றைப் பயன்படுத்தவும். குறிப்பிட்ட வாசிப்பு நேரம் முடிந்ததும், செய்ய வேண்டிய வேறு வேலைக்குச் செல்லலாம் அல்லது சிறிது இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் வாசிக்கலாம். நல்ல இடையூறுகளற்ற வாசிப்பிற்குப் பிறகு கிடைக்கும் சிறிய இடைவேளையை உங்களுக்கு வெகுமதியாக அளியுங்கள். அந்த நேரத்தில் சிற்றுண்டி உண்பது அல்லது சிறிது தூரம் நடந்து வருவது போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் வெகுமதி எதுவாக இருந்தாலும், அது முடிந்ததும் மீண்டும் வாசிப்பைத் தொடர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உதாரணமாக, ஒரு மணி நேரத்தில் முதல் இருபத்தைந்து நிமிடங்கள் வாசியுங்கள், பிறகு ஐந்து நிமிடங்கள் இடைவேளையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் அடுத்த இருபத்தைந்து நிமிடங்கள் வாசித்துவிட்டு, மீண்டும் ஓர் ஐந்து நிமிட இடைவேளையை எடுத்துக்கொள்ளுங்கள். சமூக ஊடகங்களைப் பார்க்க வேண்டுமா? அந்த ஐந்து நிமிட இடைவேளையில் செய்யுங்கள். குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமா? அந்த ஐந்து நிமிட இடைவேளையில் செய்யுங்கள். மின்னஞ்சலைச் சரிபார்க்க வேண்டுமா? அந்த ஐந்து நிமிட இடைவேளையில் செய்யுங்கள்.

நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். உங்களது வாசிப்பைத் தொடங்குவதற்கு முன் எல்லாவற்றையும் தயாராக வைத்திருங்கள். குடிப்பதற்கான தண்ணீர், நல்ல வசதியான நாற்காலி மற்றும் அந்த அமர்வுக்குத் தேவையான வாசிப்புப் பொருட்கள் என அனைத்தையும் தயார்படுத்துங்கள். இது தேவையற்ற இடையூறுகளையும் கால விரயத்தையும் தடுக்கும் நல்ல முன்னேற்பாடாகும்.

உங்கள் வாசிப்பைத் தடுக்கும் காரணிகளை கவனத்தில் வைக்கப் பழகிக்கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் வாசிக்கும்போது, ஒரு சிறிய குறிப்பேட்டை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். வாசிப்பதை நிறுத்தும்போதெல்லாம், எதனால் உங்கள் கவனம் சிதறியது என்பதைச் சில நொடிகள் ஒதுக்கி அதில் குறித்து வையுங்கள். ஒரு சிறிய பட்டியல் தயாரானதும், அதை மதிப்பீடு செய்து, வாசிப்பதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது என்பதைக் கண்டறியுங்கள். எதைத் தவிர்க்க வேண்டும் என்பது தெரிந்தால், கவனச்சிதறல்களைக் கையாளுவது மிகவும் எளிதாக இருக்கும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் உங்கள் வாசிப்புத் தேவையைத் தெளிவுபடுத்துங்கள். அதாவது, அடுத்த சில மணிநேரங்களுக்கு நீங்கள் வாசிக்கப்போவதாகவும், அப்போது யாரும் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இது குடும்பத்தினர், உடன் பணிபுரிபவர்கள், நண்பர்கள் மற்றும் உடன் வசிப்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். வாசிப்பு நேரம் முடிந்ததும் நீங்கள் அவர்களைத் தொடர்புகொள்வீர்கள் என்றும், அதுவரை உங்களைத் தனியாக விட்டுவிடுமாறும் அவர்களிடம் தெளிவாகக் கூறிவிடுங்கள்.

வாசிக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஒரு புத்தகத்தைத் திறக்கிறீர்கள், ஆனால் இரண்டு நிமிடங்களிலேயே உங்கள் அலைபேசி ஒலிக்கிறது. அலைபேசியை கையில் எடுத்ததும் மெசேஜ், ஈமெயில் என அடுத்தடுத்த கவனச்சிதறலுக்கு ஆளாகிவிடுகிறீர்கள். அவ்வளவுதான், அடுத்து அந்தப் புத்தகத்தை எப்போது மீண்டும் திறக்கப்போகிறீர்கள் என்பது தெரியாது. வாசிக்கும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழலில் கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். இரைச்சல், மற்றவர்களின் பேச்சு மற்றும் மின்னணுச் சாதனங்கள் போன்றவை கவனத்தைச் சிதறடிக்கும் முக்கியக் காரணிகளாக அமையலாம்.

நாம் அளவுக்கு அதிகமான தூண்டுதல்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். சராசரி மனிதர் ஒரு நாளைக்கு 58 முறை தனது அலைபேசியைச் சரிபார்ப்பதாகவும், மூளைக்கு உடனடி மகிழ்ச்சியைத் தரும் செயலிகளைப் பார்ப்பதில் தினமும் 3 மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக, நீங்கள் படிக்கும் இடத்தை மின்னணு சாதனங்கள் இல்லாத பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன்கள், சமூக வலைதளங்கள், மற்றும் வீடியோ கேம்கள் தொடர்ந்து பொழுதுபோக்கை வழங்கக்கூடியவை. வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்து வரும் ஒரு சிறிய அறிவிப்புகூட நமது கவனத்தைச் சிதறடித்துவிடும். நாம் கைப்பேசியை எடுத்தாலும், அந்த அறிவிப்பைப் பார்ப்பதோடு நிறுத்தாமல், சமூக ஊடகங்களில் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழிபோம் என்பதால் உங்கள் கைபேசியை மற்றொரு அறையில் வைக்கவும் அல்லது அறிவிப்புகளை அணைத்துவிடவும். அதுபோல வெளிப்புற ஒலியைத் தடுக்க வேண்டுமென்றால், இசைக்கருவிகள் அல்லது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தவும். அமைதியான இசையைக் கேட்டுக்கொண்டே வாசிப்பது இடையூறுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

வாசிக்கும்போது சொற்களுக்கான அர்த்தங்களைத் தேட இணையத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கையில் ஒரு அகராதியை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், ஓரிரு சொற்களின் அர்த்தங்களைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு முறையும் உங்கள் கைபேசியை எடுக்கும்போது, அளவுக்கு அதிகமான தகவல்கள் நிறைந்த இணையச் சூழலில் நீங்கள் மூழ்கிப்போக நேரிடலாம்.

நீங்கள் வாசிக்கும்போது குறிப்புகளைக் காகிதத்தில் குறித்து வையுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதை தவிருங்கள். புகைப்படம் எடுப்பது என்பது மீண்டும் உங்கள் கையில் அலைபேசியை எடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்கு மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

வாசிப்பை எப்போதும் சோஃபாவில் அமர்ந்துதான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒலிப்புத்தகங்களைக் கேட்பது, எழுத்துக்களை வாசிப்பதைப் போன்றே மொழி செயலாக்கப் பகுதிகளைத் தூண்டுகிறது என்று நரம்பியல் ஆய்வுகள் காட்டுகின்றன. பயணம், உணவு தயாரித்தல் அல்லது வீட்டு வேலைகள் போன்ற வழக்கமான பணிகளுடன் அவற்றை இணைத்துப் பாருங்கள். பல தொழில் வல்லுநர்கள், ஒலிப்புத்தகங்கள்மூலம் தங்கள் மாதாந்திர வாசிப்புத் திறனை இரட்டிப்பாக்குவதாகக் கூறுகின்றனர்.

நீங்கள் படிக்கும்போது அடிக்கடி கவனச்சிதறலுக்கு ஆளாகிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். இந்தப் பிரச்சனைக்குக் காரணம் நீங்களோ, உங்களது சூழலோ இல்லாமல்கூட இருக்கலாம். அதாவது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் அந்த விஷயமே அதற்குக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் படிக்கும் புத்தகம் உங்கள் கவனத்தை ஈர்க்காததாலேயே உங்கள் கவனம் சிதறலாம். எனவே, குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது, வேறொரு புத்தகத்தைப் படிப்பதாகக்கூட இருக்கலாம். இந்த மாறுபட்ட கோணத்திலும் உங்களது வாசிப்பைத் தடுக்கும் காரணியை அணுகலாம்.

ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டிருந்தாலும் சரி, அது உங்களுக்கான முழுமையான வாசிப்பாக இல்லாதபட்சத்தில், அதை பாதியிலேயே விட்டுவிட்டு வேறொன்றைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. வாசிக்கத் தொடங்கிய ஒவ்வொரு புத்தகத்தையும் கட்டாயம் முடித்தே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், எல்லாப் புத்தகங்களும் எல்லா வாசகர்களாலும் ரசிக்கப்பட வேண்டும் என்று எழுதப்படுவதில்லை என்பதே உண்மை.

திட்டமிட்ட சிறப்பான யுக்திகளைக்கொண்டு, இடையூறுகளற்ற வாசிப்பு சூழலை ஆனந்தமாய் அனுபவியுங்கள்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *