தமிழ் நாவல் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் ரங்கூன் பேப்பர் கரன்சி அலுவலகத்தில் கருவூலப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். சைவ சித்தாந்தத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஆறு நாவல்களை எழுதியிருக்கிறார். முதல் நாவலாக வெளிவந்த ‘கமலாட்சி’ ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும் (ஆரம்பப் பதிப்புகளுக்குப் பிறகு அந்தத் தலைப்பு ‘கமலாட்சி சரித்திரம்’ என மாறிவிட்டது). இந்த நாவல் 1903ஆம் ஆண்டில் சென்னை ஆர்.எ.சிவசாம்பு வெளியீடாக முதன்முதலில் வெளிவந்தது.
பிற நாவலாசிரியர்கள் அனைவரும் ஒரு கதையை நேரிடையாக வரிசைமுறைப்படி நிகழ்ச்சிகளை எழுதி வந்த காலத்தில், முன்னும் பின்னுமாக கதைநிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் சிடுக்கில்லாத பின்னலாக கதையோட்டத்தைக் கட்டமைக்கும் ஒரு புதிய போக்கினை உருவாக்கினார் பொன்னுசாமி பிள்ளை. எதிர்பாராத திருப்பங்கள், கொலை, கொள்ளை, மர்மமான தருணங்கள், பொது வாசகர்களின் ரசனைக்குரிய காட்சிகள், உரையாடல்கள் என அனைத்தையும் எழுதி இணைத்து தன் நாவல்களை உருவாக்கியபோதும், ஒருபோதும் எந்த அம்சமும் அளவுக்கு மீறிச் செல்லாதபடி கட்டுக்கோப்பாக எழுதும் ஆற்றல் பொன்னுசாமி பிள்ளையிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்தது.
தமிழில் நாவல்கள் உருவான தொடக்கக் காலத்திலேயே, தமிழ் நாவல்களின் ஐந்து வகைப் போக்குகளைத் தீர்மானிக்கும் விதமாக நாவல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன என்று தன் ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கும் க.நா.சு. ஐந்தாவது போக்குக்கு முன்னுதாரணமாக தி.ம.பொன்னுசாமி பிள்ளை எழுதிய ‘கமலாட்சி சரித்திரம்’ என்னும் நாவலைத்தான் முன்வைத்திருக்கிறார். ஆரம்பகாலப் பதிப்புகளுக்குப் பிறகு வெளிவராத இந்நாவல் பிரதியைக் கண்டெடுத்த கால சுப்பரமணியம் 2025ஆம் ஆண்டில் புதிய பதிப்பாக பரிசல் பதிப்பகத்தின் வழியாகக் கொண்டுவந்திருக்கிறார்.
0
நாவலின் பிரதான கதைக்களம் மயிலாபுரி என்னும் நகரம். கதையின் போக்குக்குத் தக்கபடி, அந்நகரத்தைச் சுற்றியிருக்கும் பல கிராமங்களுக்கும் காட்டுப் பகுதிகளுக்கும் அடிக்கடி கதை சென்றுவந்தாலும் மயிலாபுரியே கதையின் மையம். நிகழ்காலத்திலிருந்து இருபதாண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு காட்சியை நாவலின் முதல் அத்தியாயம் சித்தரிக்கிறது. மயிலாபுரியை நோக்கிச் செல்லும் காட்டுவழியில் பெயர் சொல்லப்படாத ஓர் இளைஞனும் இளம்பெண்ணும் நடந்து செல்கிறார்கள். அவர்கள் காதலர்கள். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தக் காதலை ஏற்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணத்தை ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். பெண்ணழைப்பு நடக்கவிருந்த இரவு வேளையில் அந்தப் பெண்ணை ஒருவருக்கும் தெரியாமல் மண்டபத்திலிருந்து அழைத்துவந்துவிடுகிறான் இளைஞன். யாருடைய பார்வையிலும் படாதபடி இருவரும் ஊரைக் கடந்து காட்டுப்பாதையில் இறங்கி நடக்கத் தொடங்குகிறார்கள்.
பாதி வழியில் ஒரு புதருக்குப் பின்னாலிருந்து யாரோ இருவர் தமக்குள் உரையாடிக்கொள்ளும் சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டதும் இளைஞன் சட்டென ஒதுங்கி நின்று, ஒரு கணத்துக்குப் பிறகு அடிமேல் அடிவைத்து நடந்துசென்று புதர் இடைவெளி வழியாக எட்டிப் பார்க்கிறான். இருவரும் ஒரு குழியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு கைக்குழந்தை படுக்கவைக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சியைப் பார்த்த கணத்திலேயே, ஏதோ ஒரு குழந்தையை எங்கிருந்தோ கடத்திவந்து புதைக்க முற்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறான் இளைஞன். உடனே ஓடோடிச் சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கி வீழ்த்திவிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான்.
அக்குழந்தையைத் தன் காதலியிடம் கொடுத்துவிட்டு நடந்ததையெல்லாம் விவரிக்கும் வேளையில் அறிமுகமில்லாத ஐந்தாறு பேர் ஓட்டமாக ஓடி வந்து அவர்களைச் சுற்றிச் சூழ்ந்துகொள்கிறார்கள். திருமண மண்டபத்திலிருந்து அந்தக் காதலர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் காதலர்களைத் தாக்க முனையவில்லை. பெண்ணின் காதலைப் புரிந்துகொண்ட பெற்றோர் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்ததால் அழைத்துச் செல்ல வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இருவரும் அவர்களுடைய சொல்லை நம்பி, குழந்தையோடு அவர்களைப் பின்தொடர்ந்து மீண்டும் மண்டபத்துக்குச் செல்கிறார்கள். மண்டபத்தில் அவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது. மணமக்கள் இருவரும் குழந்தையோடு மயிலாபுரி நகரத்துக்குத் திரும்புகிறார்கள்.
இந்த ஒரு காட்சியின் சித்தரிப்புக்குப் பிறகு இரண்டாவது அத்தியாயத்தில் இருபதாண்டுகளுக்குப் பிறகான காட்சிகள் ஒவ்வொன்றாகச் சித்தரிக்கப்படுகின்றன. அவற்றைப் படிக்கப் படிக்க, அந்தப் புதுமணத்தம்பதிகள் யார், அவர்களுக்கும் நாவலுக்கும் உள்ள தொடர்பு என்ன, புதைக்கப்படவிருந்த குழந்தை யாருக்குச் சொந்தமானது, குழந்தையைப் புதைப்பதன் பின்னணியில் யாருக்கு என்ன நோக்கம் இருந்தது என்கிற கேள்விகளுக்கெல்லாம் தானாகவே விடை தெரிய வருகிறது.
0
வேலு முதலியார் ஊரிலேயே பெரிய பணக்காரர். ஏராளமான சொத்துக்கும் செல்வத்துக்கும் உரிமையாளர். அவருக்கு அருணாசலம், ஜெகநாதன் என இரு ஆண் பிள்ளைகள். ஒரே ஒரு பெண். அவள் பெயர் செழுங்கமலம். மூத்த பிள்ளையான அருணாசலமும் ஜெகநாதனும் பத்து ஆண்டு இடைவெளியில் பிறந்தவர்கள். அருணாசலம் நேர்மையானவர். உழைப்பாளி. ஜெகநாதன் அவருக்கு நேர்மாறானவர். சோம்பேறி. உல்லாசமாகத் திரிவதில் ஆர்வம் கொண்டவர். ஆனால் தானே பெரிய உழைப்பாளி என்றும் நேர்மையானவர் என்றும் பிறரை நம்பவைப்பதில் கெட்டிக்காரர். வாய்ப்பேச்சில் வல்லவர். உண்மை நிலவரத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாத அப்பா இரண்டாவது மகனுடைய சொற்களை அப்படியே நம்புகிறார். அதனால் அருணாசலத்தை அலட்சியப்படுத்தி ஜெகநாதன்மீது பாசத்தைப் பொழிகிறவராக இருக்கிறார்.
தம்பியைத் திருத்தி நல்வழியில் திருப்பவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் அருணாசலம் அடிக்கடி ஜெகநாதனைக் கடிந்துகொள்கிறார். அத்தகு தருணங்களைத் தற்செயலாக நேருறப் பார்க்கும் அப்பா மூத்த மகனை முரடனாகவும் தம்பிமீது பாசமற்றவனாகவும் வன்முறை செலுத்துபவனாகவும் நினைத்துக்கொள்கிறார். நம் கண் முன்னாலேயே இப்படி தன் தம்பியைப் பாடாய்ப் படுத்துகிறானே, எதிர்காலத்தில் என்னென்ன செய்வானோ என ஏதேதோ கற்பனை செய்து குழப்பத்தில் மூழ்குகிறார். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு உறவு கைவிட்டாலும் கடைசிவரை சொத்துதான் பாதுகாக்கும் என்கிற முடிவுக்கு வருகிறார். அதனால் சொத்து பிரித்து எழுதும் நேரம் வந்ததும் விளைச்சல் கொடுக்கும் செழுமையான நிலப்பகுதியை ஜெகநாதனுக்கும் சாதாரணமான நிலப்பகுதியை அருணாசலத்துக்கும் எழுதி வைக்கிறார். எஞ்சிய நூறு வேலி நிலத்தைத் திருமணமான மகள் செழுங்கமலத்துக்கு எழுதி வைக்கிறார்.
அத்திருமணத்துக்குப் பிறகு பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து இயற்கையெய்திவிடுகின்றனர். அருணாசல முதலியார் சம்பூரணம் என்னும் பெண்ணை மணந்துகொள்கிறார். அவர்களுடைய இனிய இல்லறவாழ்வின் விளைவாக சம்பூரணம் கருவுறுகிறாள். மணவாழ்க்கையில் விருப்பமில்லாத ஜெகநாத முதலியார் தாசிகளோடு பழகி, அவர்களுடைய இன்பத்தில் மூழ்கி காலம் கழிக்கிறார். அவருடைய செல்வமும் வெகுவேகமாகக் கரைகிறது. தன் பங்காகக் கிடைத்த சொத்து அனைத்தையும் விற்று அப்பெண்களுக்குச் செலவு செய்கிறார். செல்வத்தின் இருப்பு குறையக் குறைய தமையன் வைத்திருக்கும் சொத்துமீது அவருடைய பார்வை விழுகிறது.
அருணாசல முதலியாருக்கு கடல் கடந்து சென்று பிற தேசங்களுக்குச் சென்று புதிய புதிய இடங்களைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை எழுகிறது. அதனால் கருவுற்ற மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு கப்பலேறி நக்கவரத் தீவுக்குச் செல்கிறார். தம்பி ஜெகநாத முதலியாரும் அவரோடு அத்தீவுக்குச் செல்கிறார். தீவுக்குள் ஒரு கட்டுமரமேறிப் பயணம் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் தக்க தருணத்துக்காகக் காத்திருந்து அருணாசல முதலியாரை துடுப்பாலேயே அடித்து மயக்கமுறச் செய்து கடலில் தள்ளிவிட்டு ஊருக்குத் திரும்பிவிடுகிறார்.
தன் சகோதரன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக குடும்பத்தினரிடமும் ஊராரிடமும் சொல்லி நம்ப வைக்கிறார் ஜெகநாத முதலியார். அடுத்து, மெல்ல மெல்ல தன் தமையனுக்குச் சொந்தமான நிலபுலன்களை வசப்படுத்திக்கொள்கிறார். அது என்றென்றும் தனக்குச் சொந்தமாக இருப்பதற்காக, நிறைசூலியாக இருக்கும் சகோதரன் மனைவியைத் தனக்குச் சொந்தமாகிக்கொள்ளவும் விழைகிறார். சம்பூரணம் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் காட்டுக்குள் தனக்குச் சொந்தமாக இருக்கும் ஒரு வீட்டில் அவளைச் சிறைவைக்கிறார். அவளுடன் பேசிப் பேசி அவள் மனத்தைக் கரையவைப்பதற்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் நம்பிக்கைக்குரிய ஒரு பெண்ணையும் காவலுக்காக அனுப்பிவைக்கிறார்.
சம்பூரணத்துடன் உரையாடும்போதுதான் ஜெகநாத முதலியாரின் உண்மை உருவத்தை காவலுக்கு வந்த பெண் புரிந்துகொள்கிறாள்.
முதலியாரிடமிருந்து வரக்கூடிய வருமானத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் சம்பூரணத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப்பற்றி யோசிக்கிறாள். இன்னும் சம்மதிக்கவில்லை, இன்னும் சம்மதிக்கவில்லை என்று சீரான இடைவெளியில் ஜெகநாத முதலியாருக்குப் பொய்ச்செய்தி அனுப்பியபடி சம்பூரணத்தைப் பாதுகாக்கிறாள். இதற்கிடையில் சம்பூரணம் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.
ஜெகநாத முதலியார் இனி அவளைக் கட்டாயப்படுத்தக்கூடும் என நினைத்த அந்தப் பெண், குழந்தையை விட்டுவிட்டு எங்காவது சென்று உயிர் பிழைத்துக்கொள்ளும்படி சம்பூரணத்திடம் வேண்டுகிறாள். போக்கிடம் அறியாத சம்பூரணம் பதில் சொல்லாமல் அழுகிறாள். அதைப் பார்த்து மனமுருகிய அந்தப் பெண் தனக்குத் தெரிந்த ஓரிடத்துக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி சம்பூரணத்திடம் கேட்டுக்கொள்கிறாள். சம்பூரணத்துடைய புடவையொன்றை வாங்கி பட்டுப்போய் கிடந்த ஒரு மரத்துண்டின் மீது சுற்றி உயிரற்ற உடலைப் புதைப்பதுபோல ஒரு குழி வெட்டி அத்துண்டைப் புதைத்துவிடுகிறாள். அப்பெண்ணின் ஆலோசனையை ஏற்று குழந்தையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு சம்பூரணம் அங்கிருந்து தப்பித்துவிடுகிறாள்.
சம்பூரணத்தின் சம்மதத்துக்காக நீண்ட காலம் காத்திருந்ததில் சலிப்புற்ற ஜெகநாத முதலியார், ஒருநாள் திடீரென அவளிடமே நேரிடையாகக் கேட்டு அறிந்துகொள்வதற்காக காட்டுக்குள் இருந்த மறைவிடத்துக்கு வருகிறார். பிரசவ வேதனையில் சம்பூரணம் உயிரிழந்துவிட்டதாகவும் அவள் உடலைத் தன் குடிசைக்குப் பின்னாலேயே புதைத்துவிட்டதாகவும் சொல்லி அந்த மண்மேட்டைக் காட்டுகிறாள் பணிப்பெண். ஜெகநாத முதலியார் அவள் சொல்லை நம்பிவிடுகிறார்.
பணிப்பெண்ணின் பாதுகாப்பில் இருந்த குழந்தையை வாங்கி நம்பிக்கைக்கு உகந்த இரு ஆட்களிடம் ஒப்படைத்து, காட்டில் எங்காவது தொலைதூரமான இடத்துக்குச் சென்று வெட்டிப் புதைத்துவிட்டு வருமாறு சொல்கின்றார் ஜெகநாத முதலியார். அவர்களுக்கு அன்பளிப்பாக உடனடியாக ஒரு பெருந்தொகையை முன்பணமாகக் கொடுத்தனுப்புகிறார். வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்து எஞ்சிய தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்லி அனுப்பிவைக்கிறார்.
இரு நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பிவந்து சொன்ன வேலையை முடித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, எஞ்சிய பணத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். உரிமை கோருவார் எவரும் இல்லாத நிலைமையில், தமையனின் சொத்து முழுவதையும் தனதாக்கிக்கொண்டு செலவழித்து ஒவ்வொரு நாளும் சிற்றின்பத்தில் திளைக்கிறார் ஜெகநாத முதலியார்.
ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கையின் பெயரிலிருக்கும் சொத்தையும் அபகரித்துக்கொள்ள திட்டமிடுகிறது அவர் மனம். ஒருநாள் மயிலாபுரியில் வசிக்கும் தன் தங்கை செழுங்கமலத்தைச் சந்திக்கச் செல்கிறார். ஒரு பெரிய தொகையைக் கடனாக வாங்கிவிட்டு, திருப்பியளிக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும், அந்தக் கடனை அடைப்பதற்குத் தேவையான தொகையைத் தருவதற்கு குப்புசாமி ஐயர் என்பவர் தயாராக இருப்பதாகவும் ஆயினும் அந்தக் கடனுக்கு ஈடாக செழுங்கமலத்துக்குரிய நிலப்பத்திரங்களைக் கொடுத்து உதவும்படியும் இரண்டுமூன்று மாதங்களில் எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு பத்திரங்களை மீட்டுவந்து திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார். அண்ணனுடைய சொற்களை உண்மையென நம்பி செழுங்கமலமும் பத்திரங்களைக் கொடுத்துவிடுகிறாள்.
எண்ணற்ற ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பத்திரம் அப்படியே மீட்கப்படாமல் இருக்கிறது. நாடகமாடிப் பத்திரங்களைக் கவர்ந்துவந்த ஜெகநாத முதலியார் தன் நாடகத்துக்கு உதவியதற்காக குப்புசாமி ஐயருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாக அளித்துப் பாதுகாக்கிறார். நிலத்திலிருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தையெல்லாம் தாசிப்பெண்களிடம் செலவழித்து ஆனந்த மயக்கத்தில் திளைத்திருக்கிறார்.
0
செழுங்கமலத்தின் கணவர் பெயர் கேசவ முதலியார். அவர்களுடைய மகளே கமலாட்சி. அவளுக்கு வனசாட்சி என்றொரு தோழி இருக்கிறாள். எப்போதும் இணைபிரியாத தோழிகள். ஒருநாள் இருவரும் காட்டுக்குள் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது யாரோ ஒரு முதியவர் பாதையில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து திகைப்புடன் நெருங்கிச் செல்கிறார்கள். அது மயக்கமே என்றறிந்து, இருவரும் கைத்தாங்கலாகப் பற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்துவருகிறார்கள். வைத்தியரை அழைத்து மருத்துவம் பார்க்கிறார்கள். நாலைந்து நாட்கள் சோர்ந்து கிடந்த பிறகு அவர் ஆரோக்கியமடைந்து நடமாடத் தொடங்குகிறார். தன்னை நடராஜ முதலியார் என்றும் வெளியூர்க்காரன் என்றும் ஆதரிக்க யாருமில்லாததால் அப்படியே நாடோடியாகப் புறப்பட்டு வந்தவன் என்றும் அனைவருக்கும் அறிமுகம் செய்துகொள்கிறார். கமலாட்சியின் குடும்பத்தினர் அவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதிப் பராமரித்து வருகின்றனர்.
கல்யாணசுந்தர முதலியார், மீனாட்சி இணையரின் மகன் விஜயரங்கம். திருமணமாகாத இளைஞன். முத்துக்குமார முதலியார், பேச்சியாயி இணையரின் மகன் சோமசுந்தரம். திருமணமானவன். அவனுடைய மனைவி மனோன்மணி. குணத்தில் தங்கமானவள். சோமசுந்தரத்துக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் பெயர் காளியாயி. திருமணமானவள் என்றபோதும் கணவனோடு சேர்ந்திருக்காமல் தாய்வீட்டிலேயே பெரும்பாலான நாட்களைக் கழிப்பவள். சோமசுந்தரம் வீட்டில் இல்லாத நேரங்களில், மாமனார், மாமியார், நாத்தனார் மூவரும் சேர்ந்து மருமகளான மனோன்மணியைக் கொடுமைப்படுத்துகின்றனர்.
ஒருநாள் மோதலின் உச்சக்கட்டமாக மூவரும் சேர்ந்து மனோன்மணியை அடித்துத் துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிடுகின்றனர். மனம் வெறுத்துப்போன மனோன்மணி துயரம் தாங்காமல் அழுதபடி அங்கிருந்து வெளியேறுகிறாள். வீட்டுக்குத் திரும்பிய சோமசுந்தரம் தன் மனைவி வெளியேறிவிட்ட செய்தியை அறிந்து, அவளைத் தேடிக்கொண்டு செல்கிறான். நெடுநேரத்துக்குப் பிறகு இரவு கவிந்த வேளையில் அடுத்த ஊருக்குச் செல்லும் பாதையில் நடந்துசெல்லும் மனோன்மணியைப் பார்த்துவிடுகிறான். ஓடிச் சென்று அவளைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று அவன் நினைக்கும் வேளையில் யாரோ ஓர் இளைஞன் அவளை நெருங்கி உரையாடுவதையும் சில கணங்களுக்கு அவனோடு அவள் செல்வதையும் பார்த்துவிட்டு, அவள் நடத்தை சார்ந்து தன் குடும்பத்தினர் இதுநாள் வரை சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என நினைத்து மனம் கசந்து திரும்பிவிடுகிறான்.
ஆடவர் உடையில் அவளைத் தேடிவந்து அழைத்துச் சென்றது மனோன்மணியின் தங்கை சிந்தாமணி என்கிற உண்மை அவனுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. அவள் அணிந்திருந்த ஆடவர் உடை அவனைக் குழப்பிவிடுகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனைவியை நெருங்கிச் சென்ற சோமசுந்தரம், சந்தேகத்தின் விளைவாக நெருங்கிச் சென்று உரையாடாமலேயே திரும்பிவிடுகிறான். ஒருவேளை அவளிடம் நேருக்கு நேர் உரையாடியிருந்தால் அவன் அந்த உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆயினும் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பை அவன் தவறவிட்டுவிடுகிறான்.
0
தன் நண்பனான சோமசுந்தரத்தின் மனைவி மனோன்மணிக்கு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இழைக்கும் கொடுமைகளைப்பற்றித் தெரிந்துகொண்ட விஜயரங்கம் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என நினைத்து வருத்தத்தில் மூழ்கியிருக்கிறான். தன் நண்பனுக்கு உதவக்கூடிய வழிவகைகளைப்பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்ததால் அன்றைய இரவு அவனுக்கு உறக்கமே வரவில்லை. குழம்பிய மனநிலையில் தன் படுக்கையறையில் புரண்டுபுரண்டு படுக்கிறான்.
அதே சமயத்தில் அவனுடைய பெற்றோர்களும் அவர்களுடைய படுக்கையறையில் உறக்கம் வராமல் தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உறக்கம் வராமல் புரண்டபடி இருக்கும் விஜயரங்கம் அந்த உரையாடலைக் கேட்கிறான். தம்முடைய மகனுக்குத் தக்க பெண்ணைத் தேடி உரிய நேரத்தில் திருமணம் செய்துவைக்க முடியவில்லையே என்கிற கவலை அவர்களை வாட்டியெடுக்கிறது. அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. அதைப்பற்றித்தான் அவர்கள் மாறி மாறி தமக்குள் உரையாடிக்கொள்கிறார்கள்.
உரையாடலின் போக்கில், ஒருநாள் மீனாட்சியின் தமையனாரை தற்செயலாக வெளியூரில் சந்தித்ததாகவும் அவருடைய மகளை விஜயரங்கத்துக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சம்மதமா என்று கேட்டதாகவும் தெரிவிக்கிறார் கல்யாணச்சுந்தர முதலியார். தன் சகோதரர் அக்கேள்விக்கு என்ன பதில் சொன்னார் என்று ஆவலுடன் கேட்கிறாள் மீனாட்சி. பதில் சொல்ல உற்சாகம் காட்டாமல் மழுப்புகிறார் கல்யாணசுந்தர முதலியார். மீனாட்சி தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டதால், தன் வேண்டுகோளை முன்வைத்ததும் எரிச்சலுடன் அவர் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டதாகவும் பெற்றோர் யார் என்றும் என்ன குலமென்றும் எதுவுமே தெரியாத ஒருவனுக்குத் தன் மகளைக் கொடுக்கமுடியாது என்று தெரிவித்துவிட்டு வேகமாகப் புறபட்டுச் சென்றுவிட்டார் என்றும் அடங்கிய குரலில் அவர் தெரிவிக்கிறார் கலியாணசுந்தர முதலியார்.
அடங்கிய குரலில் அவர் உரையாடினாலும் அவருடைய பேச்சை முழுமையாகக் கேட்டுவிடுகிறான் விஜயரங்கம். அக்கணமே தான் அவர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளையே தவிர, சொந்தப் பிள்ளை அல்ல என்பதை அவன் புரிந்துகொள்கிறான். தன்னை இத்தனை ஆண்டு காலம் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர்களை இனியும் துன்பத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என்றொரு எண்ணம் அவன் நெஞ்சில் ஓடுகிறது. அதனால் சிறிது நேர யோசனைக்குப் பிறகு தன் ஆபரணங்களையெல்லாம் கழற்றி பெட்டிக்குள் வைத்துவிட்டு ஒரே ஒரு ரூபாயோடு அன்றிரவே வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான்.
0
சகோதரனால் கடலுக்குள் தள்ளப்பட்டு மூழ்கிய அருணாசல முதலியார் கைக்குக் கிடைத்த ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்துவிடுகிறார். மெல்ல மெல்ல கரையை நோக்கி நீந்திச் செல்கிறார். ஓர் இரவெல்லாம் மயங்கியிருந்து காலையில் கண் விழித்த அருணாசல முதலியார் அங்கே எப்படி உயிர்த்திருப்பது என புரியாமல் குழம்பி நிற்கிறார். பிறகு எப்படியாவது நீந்திச் சென்று மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குச் சென்று சேர்ந்துவிட்டால் பிழைத்துவிடலாம் என திட்டமிடுகிறார். தன் வலிமையையெல்லாம் திரட்டி கடலுக்குள் இறங்கி நீந்தத் தொடங்குகிறார்.
கைகள் சோர்வுறும் தருணத்தில் சிறிது தொலைவில் ஒரு கட்டுமரம் செல்வதைக் கண்டு கைகளை அசைத்தும் சத்தம் போட்டும் தன்னைக் காப்பாற்றுமாறு கட்டுமரத்தில் இருப்பவர்களிடம் தெரிவிக்கிறார். அந்தக் கட்டுமரத்தில் இருவர் இருக்கிறார்கள். அபயக்குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த அவர்கள் கட்டுமரத்தைத் திருப்பிவந்து அருணாசல முதலியாரையும் கட்டுமரத்தில் ஏற்றிக்கொள்கின்றனர். அவர் அணிந்துகொள்ள தம்மிடமிருந்த மாற்றுடையையும் அளிக்கின்றனர். நனைந்துபோன ஆடைகளைக் களைந்துவிட்டு அவரும் அந்த ஆடையை வாங்கி அணிந்துகொள்கின்றார். இறைவன் அருளால் எப்படியோ உயிர் பிழைத்தோம் என நினைத்திருந்த சமயத்தில் காவல்துறையினரின் படகு அவர்களுடைய கட்டுமரத்தை திடீரென மடக்கிப் பிடித்து அனைவரையும் கைது செய்து அழைத்துச் செல்கிறது.
சிறைச்சாலைக்குச் சென்ற பிறகுதான் அருணாசல முதலியார் உண்மையைப் புரிந்துகொள்கிறார். கட்டுமரத்தில் வந்தவர்கள் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்த கைதிகள். உண்மையில் தப்பி வந்தவர்கள் மூன்று பேர். அம்மூவரில் ஒருவர் வழியிலேயே இறந்துவிட்டதால் அவருடைய ஆடைகளை உருவி எடுத்துக்கொண்டு உடலைக் கடலுக்குள் தள்ளிவிட்டனர். இருவராகத் தப்பிச் செல்லும்போதுதான் அவர்கள் அருணாசல முதலியாரைக் காப்பாற்றும் விதமாகக் கட்டுமரத்தில் ஏற்றிக் கொண்டனர். தம் வசமிருந்த ஆடைகளையும் கொடுத்து உதவினர். அவர்கள் செய்த அந்த உதவிதான் அருணாசல முதலியாரை அந்தச் சிக்கலில் சிக்கவைத்துவிட்டது. அது கைதிகளுக்கு உரிய ஆடை என்பதை அவர் சிறைச்சாலைக்கு வந்த பிறகே புரிந்துகொள்கிறார். தப்பிச் சென்ற மூன்றாவது கைதி அவரே என அதிகாரிகள் கருதுவதற்கு அதுவே பெரிய தடயமாக அமைந்துவிடுகிறது.
விசாரணையின்போது தான் தப்பிச் சென்ற கைதியல்ல என பலமுறை எடுத்துக் கூறியபோதும் சிறை அதிகாரிகள் அவரை நம்பத் தயாராக இல்லை. தான் கைதியல்ல, பொது மனிதன் என தன்னை அவர்கள் முன்னிலையில் நிரூபிக்க எந்த ஆவணமும் அவரிடமும் இல்லை. சட்டம் அவரை அந்தக் கைதிகளோடு சேர்த்து சிறையில் தள்ளிவிடுகிறது. தான் நிரபராதி என எடுத்து நிறுவமுடியாத சூழலின் காரணமாக இறந்துபோன கைதியின் பெயரான நடராஜ முதலியார் என்கிற பெயரிலேயே அவர் அந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். இருபதாண்டு கால சிறைத்தண்டனைக்குப் பிறகு அவர் விடுதலை அடைகிறார்.
தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் ஆவலோடு கப்பலேறி ஊருக்குத் திரும்பி வருகிறார். கிட்டத்தட்ட ஊரை நெருங்கிய நிலையில் வெகுதொலைவு நடந்துவந்ததன் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் வழியில் மயங்கி விழுந்துவிடுகிறார்.
கமலாட்சியால் காப்பாற்றப்படுபவர் அவரே. செழுங்கமலமும் கமலாட்சியும் தாய்மையுணர்வோடு அவருக்குச் செய்த சேவையின் காரணமாக அவர் வெகுவிரைவிலேயே பிழைத்தெழுந்துவிடுகிறார். செழுங்கமலம் தன் தங்கை என்னும் உண்மையை அவர் புரிந்துகொண்டாலும் செழுங்கமலத்துக்கு எதுவும் தெரியவில்லை.
கருணையின் அடிப்படையிலேயே தன் வீட்டில் தங்கவைத்துக்கொள்கிறார் அவர். அருணாசல முதலியாரும் தன் குடும்பம் தொடர்பான பழைய தகவல்களையெல்லாம் முழுமையாகச் சேகரித்துக்கொள்ளும் பொருட்டு வழிப்போக்கனாகவே அவ்வீட்டில் தங்கிவிடுகிறார். அனைவரோடும் எளிதாகக் கலந்து பேசும் அவருடைய பழக்கத்தின் காரணமாக வெகுவிரைவில் அந்த ஊரே விரும்பும் மனிதராக அவர் மாறிவிடுகிறார்.
0
பொய்யாக அழுது நடித்து தங்கையின் நிலத்தை எடுத்துக்கொண்ட ஜெகநாத முதலியார், தங்கையின் மகளான கமலாட்சியை அடைய முயற்சி செய்கிறார். தன் மகள் வயதுடையவள் அவள் என்றபோதும் காமம் அவருடைய கண்களை மறைக்கிறது. வீட்டைவிட்டு காணாமல் போன விஜயரங்கம் எழுதுவதுபோல ஒரு கடிதத்தை எழுதி ஒரு சிறுவன் வழியாக கமலாட்சிக்குக் கொடுத்தனுப்புகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தால் தன்னைச் சந்திக்கலாம் என்றொரு குறிப்பு அக்கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. விஜயரங்கத்தைக் காணும் ஆவலில் வீட்டைவிட்டு இறங்கி அந்த இடத்தை நோக்கி ஓடுகிறாள். அவளுடைய அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு முரடர்கள் அவளைத் தாக்கி மயக்கமடையச் செய்து வண்டியில் ஏற்றிச் சென்று ஜெகநாத முதலியாரிடம் ஒப்படைக்கிறார்கள்.
மயக்கம் தெளிந்ததும் தன் ஆசையை கமலாட்சியிடம் வெளிப்படுத்துகிறார் ஜெகநாத முதலியார். தன் தந்தை வயதுடைய சொந்தத் தாய்மாமனே தன்னைப் பெண்டாள நினைப்பதை அறிந்து அதிர்ச்சியில் மூழ்கிய கமலாட்சி அவரை வெறுக்கிறார். எப்படியாவது அவளைத் தன் ஆசைக்கு இணங்கவைக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெகநாத முதலியார் அவளை ஊருக்கு வெளியே ஓர் அறையில் அடைத்துவைக்கிறார்.
வீட்டைவிட்டு வெளியேறிய விஜயரங்கம் பல இடங்களில் அலைந்து திரிகிறான். சில கசப்பான அனுபவங்களும் சிற்சில நல்ல அனுபவங்களும் மாறிமாறி வருகின்றன. சில நல்ல நட்புகள் கிடைக்கின்றன. சிற்சில சமயங்களில் சிலருடைய பகையையும் பொறாமையையும்கூட அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது. எல்லாவற்றையும் கடந்து வேறொரு ஊருக்குச் செல்லலாம் எனக் கருதி காட்டுவழியில் நடக்கத் தொடங்குகிறான்.
அவனுக்கு முன்னால் நடந்துசெல்லும் இருவர் காட்டுக்குள் வசிக்கும் ஒரு துறவியைப்பற்றி பேசிக்கொள்ளும் உரையாடலைக் கேட்கிறான். அந்தத் துறவி முக்காலத்தையும் உணர்ந்தவர் என்றும் ஒருவருடைய முகத்தைப் பார்த்தே அனைத்தையும் சொல்ல வல்லவர் என்றும் புகழ்கிறார்கள். தான் உண்மையில் யார், தன் உண்மையான பெற்றோர் யார் என்னும் கேள்விகளால் மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருந்த விஜயரங்கம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான்.
துறவியைச் சந்திக்கும் ஆவலில் அவர்களோடு அவனும் இணைந்துகொண்டு காட்டின் உட்பாதை வழியில் நடந்துசெல்லத் தொடங்குகிறான். அவனை மடக்கிப் பணம் பறிப்பதற்காக கள்வர்கள் போட்ட திட்டத்தில் சிக்கிக்கொண்டோம் என்பது அவனுக்குக் கடைசியில்தான் புரிகிறது. அவர்கள் அவனுடைய கையில் விலங்கிட்டுச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அவனைப்போலவே இன்னும் இருவரும் அடுத்தடுத்த அறைகளில் அடைபட்டிருப்பதை அவன் பார்க்கிறான்.
0
அந்த வட்டாரத்தில் அரங்கராவ் என்னும் நீதிபதியின் இல்லம் இருக்கிறது. ஒருநாள் அவருடைய வீட்டுத் தோட்டத்தில் பெரிய விருந்துக்கான ஏற்பாடு நடைபெறுகிறது. மயிலாபுரியில் புதிதாக ஒரு செல்வந்தர் குடியேற இருப்பதாகவும் தன் நண்பரான அவரை வரவேற்பதற்காக அவ்விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரங்கராவ் தெரிவிக்கிறார். வருகை தரவிருக்கும் புதிய செல்வந்தரை அறிமுகம் செய்துகொள்வதற்காக ஊரிலுள்ள சிறிய, பெரிய செல்வந்தர்கள் அனைவருக்கும் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்று அனைவரும் அங்கு வந்து சேர்கிறார்கள்.
புதிய விருந்தினர் இன்னும் வராத நிலையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விஷயத்தையொட்டிப் பேசத் தொடங்குகின்றனர். தற்செயலாக அந்த உரையாடல் அங்கிருந்த ஜெகநாத முதலியார்மீது குற்றம் சுமத்துவதாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அவர் மறுக்கிறார். அங்கே கூடியிருந்தவர்கள் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் சாட்சி ஆதாரங்களோடு நிரூபிக்கின்றனர். இப்படியே அவர் கொலை செய்த குற்றம், சொத்துகளை அபகரித்த குற்றம், நிலப்பத்திரங்களைச் சுருட்டிக்கொண்ட குற்றம், கமலாட்சியைக் கடத்திய குற்றம் என அடுக்கடுக்காக ஒவ்வொன்றுக்குமான விசாரணைக்கூடமாக அந்த விருந்துக்கூடம் மாறிவிடுகிறது. இறுதியில் அதுவரை அனைவருடைய பார்வையிலும் நடராஜ முதலியாராக நடமாடிவந்த பெரியவர் எழுந்து தானே அருணாசல முதலியார் என அனைவருக்கும் தெரிவித்து தன் சகோதரன் ஆதி காலத்திலிருந்து இழைத்துவந்த எல்லாக் குற்றங்களையும் பட்டியலிடுகிறார்.
0
நானூறு பக்க அளவுக்கு விரிந்திருக்கும் இந்நாவலில் ஏராளமான பாத்திரங்களை நடமாடவைத்திருக்கிறார் பொன்னுசாமி பிள்ளை. நாவலை வாசிக்கும்போது, ஒரு கிராமத்தில் புகுந்து வந்ததுபோன்ற உணர்வை அவரால் அளிக்கமுடிகிறது. மனிதர்கள் அனைவருமே மிகையின்றி சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு துணைக்கதை இருக்கிறது. பிரதான பாத்திரங்களோடு அனைவருக்கும் ஓர் இணைப்பும் இருக்கிறது. அதனால் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என அறிந்துகொள்கிற ஆவல் தானாகவே எழுந்து நாவலைப் படிக்கத் தூண்டுகிறது. பொன்னுசாமி பிள்ளையின் சோர்வில்லாத நடையும் வசீகரமான உரையாடலும் வாசகர்களை ஈர்க்கும் அம்சமாக உள்ளது.
கமலாட்சி, விஜயரங்கம், ஜெகநாத முதலியார் ஆகிய மூவரையும் நாவலின் பிரதான பாத்திரங்களாகப் பொன்னுசாமி பிள்ளை படைத்திருந்தபோதும் வாசகர்களின் கோணத்தில் கமலாட்சியே பிரதான பாத்திரமாக மேலெழுந்து வருகிறார். விஜயரங்கம் கமலாட்சியின்மீது காதல் கொண்டிருக்கிறான். ஜெகநாத முதலியார் கமலாட்சியைத் தன் காமவலையில் வீழ்த்த நினைக்கிறார். இறுதியில் அதீத செல்வ நாட்டத்தாலும் காம நாட்டத்தாலும் ஜெகநாத முதலியார் வீழ்ச்சியடைகிறார்.
நம் சமூகத்தில் ஆதி காலத்திலிருந்தே செல்வமும் காமமும் மானுடரை இயக்கும் அடிப்படை விசைகளாக அமைந்திருக்கின்றன. அவ்விழைவுகள் பிழையானவையும் அல்ல. அதே சமயத்தில், ஒருவர் செல்வத்தின் மீது கொள்ளும் பேராசையும் பெண்ணின்பத்தின் மீதான அதீத நாட்டமும் தொடக்கத்தில் இன்பமளிப்பதைப்போலத் தோன்றினாலும் இறுதியில் அது அழிவுக்கே வழிவகுக்கின்றன. அதுதான் நடைமுறை எதார்த்தம்.
புராணங்கள் உருவான காலத்திலிருந்தே மக்கள் மனத்தில் இக்கருத்துகளைப் பதியவைக்கும் விதமாக எண்ணற்ற கதைகளும் உருவாகிவிட்டன. ஆயினும் ‘வரலாற்றிலிருந்து மனிதர்கள் ஒருபோதும் ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்வதில்லை’ என்னும் கூற்றுக்கிணங்க, ஒவ்வொரு தலைமுறையிலும் அதீத செல்வ, காம நாட்டத்துக்கு இரையாகி வீழ்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது.
0
‘கொள்ளை விரும்பேல், கோதாட்டு ஒழி’ என்று ஒளவையார் தன் ஆத்தி சூடியில் குறிப்பிடுகிறார். இன்னொருவருக்குச் சொந்தமான செல்வத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு இசைவாக தந்திரமாகச் செயல்படுகிறவர்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியாது. அது பெரும் துன்பத்தையே தரும். சீதையைக் கவர்ந்துசென்ற இராவணனுக்கு நேர்ந்த முடிவைப்பற்றியும் தேவருலகத்தைக் கொள்ளையிட்ட அசுரர்களுக்கு நேர்ந்த முடிவைப்பற்றியும் ஏராளமான கதைகளை நாம் படித்திருக்கிறோம்.
பிறரிடமிருந்து கவர்ந்து வாழும் எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்பதுதான் நல்வாழ்க்கைக்கான முதல் விதி. இதே கருத்தைத்தான் ‘நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்’ என்னும் திருக்குறளும் வழிமொழிகிறது. அதீத நாட்டம் தண்டனைக்கும் சாபத்துக்கும் மட்டுமே வழிவகுக்கும்.
அக்கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாக, காப்பிய காலத்திலிருந்து எண்ணற்ற படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயினும் நாவல் உருவாக்கம் முதன்முதலாக தமிழில் உருப்பெற்றுவரத் தொடங்கிய காலத்தில், அக்கருத்துகளை வாசகர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதியவைக்கும் விதமாக, விரிவானதொரு வாழ்க்கைப்பின்னணியில் பொன்னுசாமி பிள்ளை தன் நாவலில் முன்வைத்திருக்கிறார் என்பது கமலாட்சி சரித்திரம் நாவலின் முக்கியத்துவத்துக்கான காரணம்.
0

