இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தின்போது மன்னராட்சி நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வூர், தொண்டைமான் மன்னர்களால் புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த புதுக்கோட்டை பிராந்தியம், சோழர்-பாண்டியர்-முத்தரையர்-இருக்குவேள்-பல்லவர் போன்ற அரச மரபினரால் ஆளப்பட்டது.
மீசெங்கிளி நாடு, கீழ்செங்கிளிநாடு, வடசிறுவாயில் நாடு, தென் சிறுவாயில் நாடு, பொன்னமராவதி நாடு, ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், தென் கவிர நாடு, பெருவாயில் நாடு, செங்குன்றநாடு, வயலகநாடு, குன்றியூர் நாடு, பன்றியூர் நாடு, கீழ்சூத நாடு, அண்ணவாயில் கூற்றம், வெண்ணாவல்குடி நாடு, தானவநாடு, பாலையூர் நாடு, கூடலூர் நாடு போன்ற பல நாட்டுப்பிரிவுகள் மற்றும் கூற்றங்கள் இணைந்த ஒரு பகுதியாக இன்றைய புதுக்கோட்டை இருந்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் சமண மதத் தடங்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்றாகும்.
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஒலையூர் கூற்றத்து குடுமியான்மலையில் செயல்படத் துவங்கிய ‘சமணப் பள்ளி’ அதன்பின் சித்தன்னவாசலுக்குப் பரவியது. அதற்குப் பிறகான நூற்றாண்டுகளைச் சேர்ந்த சமணம் தொடர்புடைய தடங்கள் இப்பகுதியில் கிடைக்கவில்லை. எனினும் குடகுமலை, ஆளுருட்டிமலை, மலையடிப்பட்டி, தேனிமலை போன்ற பகுதிகளில் சமணப்படுக்கைகள் கிடைத்துள்ளன. அதன்பிறகு சுமார் 800 வருட இடைவெளி, அதாவது கி.பி. 8ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள், சித்தன்னவாசலில் உள்ள அறிவர் குடைவரையில் கிடைத்துள்ளன. இதன்பின்னர் புதுக்கோட்டையில் ஆங்காங்கே தனித்தனி கோவில்களாக எழுச்சி பெற்று, இம்மதம் வளர்ச்சி கண்டது. கால ஓட்டத்தில் வைதீக மதங்களின் அதீத வளர்ச்சி காரணமாகப் புதுக்கோட்டையில் சமணம் முற்றிலுமாக அழிவுற்றது. இம்மதத்தின் எஞ்சிய சுவடுகள் இன்று இம்மாவட்டம் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. புதிய சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் அவ்வப்போது இங்கு கிடைத்து வருகின்றன.
‘பறையன் மகனெனினுங் காட்சி யுடையா
னிறைவ வெனவுணரற் பாற்று’
சமண இலக்கியமான ‘அருங்கலச் செப்பு’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள இந்த வரிகள், சாதி வேறுபாடில்லாமல் சமண ஒழுக்கத்தைப் பின்பற்றினால் இறைவனின் காட்சி கிடைக்கும் என்கிறது.
சமண மதம் வடக்கிலிருந்து கர்நாடகத்துக்குப் பரவி, அதன்பிறகு அங்கிருந்து தமிழகம் வந்ததாக ஒரு கருத்து உலவுகிறது. அவ்வாறு புலம் பெயர்ந்திருப்பினும், அந்தந்த ஊரார்களின் தாய்மொழியைக் கற்று அம்மொழிகளின் வாயிலாகவே தம் கருத்தியலையும் மதத்தையும் சமணர்கள் பரப்பினார்கள். இதன் காரணமாகவே சமணம் ஒருகாலத்தில் தமிழகத்தில் வேரூன்றி இருந்தது. கிட்டத்தட்ட 60 இலக்கியங்கள் சமணர்களால் தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன. சமணத்தின் சமகால மதமான பௌத்தம் இதை நடைமுறைப்படுத்தத் தவறியதால், காலப்போக்கில் தமிழகத்தில் செல்வாக்கை இழந்தது.
0
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்களே பெரும்பாலும் கிடைத்துள்ளன. பொதுவாக அவை மகாவீரர் சிற்பங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அரிதாக கண்ணாங்குடியில் ஆதிநாதர் சிற்பமும், குன்னவயல், சித்தன்னவாசல் மற்றும் மோசக்குடியில் பார்சுவநாதர் சிற்பங்களும் காணப்படுகின்றன. செம்பாட்டூர், மோசக்குடி போன்ற இடங்களில் இயக்கி பத்மாவதியின் தனிச்சிற்பங்கள் கிடைத்துள்ளன.
அவிரோதியாழ்வார் இயற்றிய திருநூற்றந்தாதியில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று, சமண தீர்த்தங்கரர் சிற்பம் எவ்வாறு இருந்தது என்கிற தகவலை அளிக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ளதைப்போலவே தீர்த்தங்கரர் சிற்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.
‘சுடர்மண் டலஞ்சுர துந்துபி தெய்வத் துவனிசிங்கப்
பிடர்மண் டலவணை பிண்டிவெண் சாமரை பெய்மலரி
னடர்மண் டலமழை யம்பொற் குடைமும்மை யாமடியோ
மிடர்மண் டலம்கெடுப் பார்க்கிமை யார்செயு மென்சிறப்பே’
இப்பாடல் ப்ரபாவளையம், தேவஸாத்யம், திவ்யத்தொனி, வட்ட அணை பொருந்திய சிம்மாசனம், அசோகமரம், வெள்ளிய சாமரை, நெருங்கப் பொழிகின்ற பூமழை, அழகிய பொற்குடைகள் மூன்று எனத் தீர்த்தங்கரர் உருவங்களைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. இதையொற்றியே புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ள தீர்த்தங்கரர் சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றுள், சித்தன்னவாசல் மற்றும் குடுமியான்மலை கல்வெட்டுகள் குறித்துப் பலரும் அறிந்திருப்பர். இவை தவிர்த்து, பிற சமணர் கல்வெட்டுகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.
1. தேனிமலை
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமரவாதி செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் தேனிமலை எனப்படும் ஒரு பெரிய மலைக்குன்று அமைந்துள்ளது. சமணர் புடைப்புச் சிற்பங்களும், சைவம் சார்ந்த சிறிய புடைப்புச் சிற்பங்களும் இங்குள்ள பாறையில் குடையப்பட்டுள்ளன. சமணர் சிற்பம் அமைந்த பாறைக்குச் செல்லும் வழியில் இடப்புறம் காணும் சிறு பாறையிலுள்ள 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இம்மலையை தேனூர்மலை எனக் குறிப்பிடுகிறது. மேலும், இம்மலையில் மலையத்துவஜன் என்கிற சமணமுனிவர் தவம்புரிந்தபோது, இருக்குவேளிர் மரபைச் சேர்ந்த அரசன் ஒருவன் இங்கு வந்து தங்கி, இங்கு தவம் புரிந்துவந்த சமண துறவிகளுக்குப் பள்ளிச்சந்தம் (தானம்) கொடுத்த செய்தியையும் இந்தக் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.
கல்வெட்டு
1.ஸ்வஸ்திஸ்ரீ மலையதுவஜந் தே
2.னூர் மலை இல் தவஞ்செ
3.ய்யக்கண்டு இருக்கு
4.வேள் வந்திந்து அவிப்பு
5.றஞ் செய்த பள்ளிச் சந்த
6.ந் நாலே கால் இவ்வறங் கா
7.த்தான் அடி…
எளிதில் அறிய முடியாத வகையில் இக்கல்வெட்டு இன்று முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. இங்கு முழுமையாகச் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும், முற்றுப்பெறாத இரு தீர்த்தங்கரர் சிற்பங்களும் வெட்டப்பட்டிருக்கும் பாறைக்கு அருகே பெரிய தேன்கூடுகள் உள்ளன. வெகு கவனமாகத்தான் இந்த அரிய பொக்கிஷங்களைக் காண வேண்டியுள்ளது. இவற்றில் முழுமை பெற்ற சமணத்திருமேனிக்குக் கீழே, ‘ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி’ என்கிற கல்வெட்டு காணப்படுகிறது.
2. செட்டிப்பட்டி ஐநூற்றுவப் பெரும்பள்ளி
புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செட்டிப்பட்டி. இவ்வூரில் உள்ள பெரிய ஊருணிக் கரையில், உள்ளூர் மக்களால் ஓட்டைக்கோவில் என அழைக்கப்படும் சிதைவுற்ற ஒரு கற்றளி (கற்களால் கட்டப்பெற்ற கோவில்), கட்டட இடிபாட்டுக் குவியலாகக் கிடக்கிறது. இக்கோவிலில் உள்ள ராஜராஜசோழனின் துண்டு கல்வெட்டு ஒன்று, இக்கோவிலை ‘ஐநூற்றுவப் பெரும்பள்ளி’ என அடையாளப்படுத்துகிறது. இக்கோவிலுக்கு வெளியே ஊருணிக்கரையில் ஓர் உடைந்த தீர்த்தங்கரரின் துண்டுச் சிற்பமும், கோவில் வளாகத்தில் தொல்லியல்துறையால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அறையில், உடைந்த இரு தீர்த்தங்கரர் சிற்பங்களும், சிதைவுற்ற தீர்த்தங்கரரின் ஒரு தலைச்சிற்பமும் உள்ளன.
பாதுகாப்பு கருதி இக்கோவிலில் இருந்த சில சிலைகள், புதுக்கோட்டை மற்றும் திருச்சி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் இரு தீர்த்தங்கரர் சிற்பமும், திருச்சி அருங்காட்சியகத்தில் உடைந்த பார்சுவநாதர் மற்றும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் என ஏழு சிற்பங்களும் உள்ளன.
இக்கோவிலின் அமைப்பு கொடும்பாளூர் மூவர் கோவிலை ஒத்துள்ளது. சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, தனித்தனி கற்றளியாய் மகோன்னதம் நிறைந்த கோவிலாக அன்று இது இருந்திருக்கும். இப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள் 9ஆம் நூற்றாண்டு வரை சிற்றரச மரபினரான முத்தரையரின் ஆளுகைக்குட்பட்டு இருந்தன. கிபி 8ஆம் நூற்றாண்டில் பல்லவர் மேலாண்மையை ஏற்றுக்கொண்ட முத்தரையர்கள், புதுக்கோட்டை, செந்தலை, வல்லம், தஞ்சை, நியமம் பகுதிகளை ஆட்சி செய்தனர். இவர்களில் பெரும்பிடுகு முத்தரையன் எனும் சுவரன் மாறன், தன்னுடைய பகைவர்களை மணலூர், கொடும்பாளூர், காரை, காந்தளூர், கண்ணணூர், செம்பொன்மாரி, மறங்கூர், அண்ணல்வாயில், அழிந்தியூர் ஆகிய ஊர்களில் வென்றதாகப் புலவர்கள் பாடியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் செந்தலையில் இது குறித்த கல்வெட்டு உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்கள் புதுக்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ளன. இவற்றில், காந்தளூர் என்பது செட்டிப்பட்டிக்கு அருகில் உள்ள அதே பெயரைக்கொண்ட ஊராகவே இருக்க வாய்ப்புள்ளது. மேலும், இதே பகுதியில் அமைந்துள்ள மலையடிப்பட்டி என்கிற ஊரில் முத்தரையர் காலக் குடைவரை கோவில் உள்ளது. இந்த ‘ஐநூற்றுவப் பெரும்பள்ளி’ எனும் சமணக்கோவில், முத்தரையர் காலத்தைச் சேர்ந்த கோவிலாகவோ அல்லது அவர்களது ஆட்சிக்குப் பிறகு கொடும்பாளூர் வேளிரால் கட்டப்பட்டதாகவோ இருக்கலாம்.
3. மோசக்குடி பெருஞ்சேவூர் நாட்டார் பெரும்பள்ளி
புதுக்கோட்டை கீரனூரைத் தாண்டிச் செல்லும்போது வலது பக்கமாக அமைந்துள்ள ஊர் மோசக்குடி. இங்கு இடிபாட்டுடன் கூடிய நிலையில் சமணக்காளியார் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஒரு சமணக் கற்றளி உள்ளது. இடிந்து சிதைந்த கருவறையும் முன் மண்டபப் பகுதிகளுடன் கூடிய கட்டட அமைப்பும் உள்ளன. இக்கோவிலின் குமுதப்பட்டையில் (அதிட்டானம்), கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரகேசரியின் 12ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில், காரிகேசுவன், காரிசடையன், காரிகண்டன் ஆகியோர் ஆரம்பநந்திக்கும் அவருடைய மாணவர்களுக்கும், பள்ளிச்சந்தமாக நிலம் வழங்கிய செய்தி காணப்படுகிறது. மேலும், கல்வெட்டு மூலமாக இச்சமணப்பள்ளியின் பெயர் ‘பெரியசேவூர் நாட்டார் பெரும்பள்ளி’ என வழங்கப்பட்டது தெரிய வருகிறது.
கருவறையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒற்றைச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்ற நிலையில் இடது வலதாக இரு தீர்த்தங்கரர்கள் சிற்பமும், நடுவில் சமண இயக்கியான தர்மதேவி சிற்பமும் உள்ளன.
நின்ற நிலையில் இருக்கும் இடப்புறத்தவரின் தலைக்கு மேல் முக்குடை இருக்க, வலப்புறத்தவரின் தலைக்கு மேலிருந்த முக்குடை சிதைந்து வீழ்ந்துவிட்டது. சுகாசனத்தில் அமர்ந்தபடி இயக்கி அருள்புரிகிறார். இவரது வலக்கை நீலோற்பவ மலரை ஏந்தியிருக்க, இடக்கை பூமிஸ்பரிச முத்திரையில் உள்ளது. இவரது மகுடமும் ஆடையும் அணிகலன்களும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இந்த அம்மையின் இருக்கைப் பகுதியில், அவர்தம் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று உருவங்கள் சிறப்புறச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் இருந்த பார்சுவநாதர் உள்ளிட்ட தீர்த்தங்கரர் திருவுருவங்கள் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
4. குன்னவயல் தென்கவிர்நாட்டுப் பள்ளி ஆழ்வார்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள குன்னவயல் ஊர், சுற்றிலும் மலைவளம் நிரம்பியது. இன்று கல்குவாரிகளால் சூழப்பட்டு அது பொலிவிழந்து காணப்படுகிறது. முன்பு அங்கு ஒரு மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த தீர்த்தங்கரர், இன்று தனிச் சுற்றுச்சுவர் எழுப்பிப் பாதுகாப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளார்.
உள்ளூர் மக்கள் இவரை, சடையாண்டி முனிவர் என அழைக்கின்றனர். அப்பெயரிலேயே இது சடையார் மலை எனத் தற்போது அழைக்கப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் இப்பெயரே வழங்கி வரப்பட்டுள்ளது. சடையார்மலை தென்கவிரநாட்டுப் பள்ளி ஆழ்வார் என இத்தீர்த்தங்கரர் அழைக்கப்பட்டுள்ளார். இது பார்சுவநாதரின் சிற்பமாகும்.
பார்சுவநாதரின் பெற்றோர் விஷ்வசேனன் – பிராமி ஆவர். வாரணாசியில் தை மாதம் தேய்பிறை ஏகாதசி விசாகத்தன்று பச்சைநிற மேனியுடன் அவர் அவதரித்தார். பல்வேறு இன்னல்களைப் பொறுத்து அறம் அருகிடாது வளர்ந்து, ஆவணி வளர்பிறை சப்தமியில் விசாக நேரத்தில் சம்மேத சிகர மலையில் முக்தி பெற்றார். இவரது சின்னம் பாம்பு.
கல்வெட்டுச் செய்தி
கோனேரின்மேல் கொண்டான் ஆட்சிக்காலத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இவர் சோழரா அல்லது பாண்டியரா என்பதை அறியமுடியவில்லை. தென்கவிர்நாட்டுப்பள்ளி நாட்டார்கள் இச்சடையார் கோவில் அமைந்துள்ள இடத்தை, கல்லாற்றுப் பள்ளியான பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளி ஆழ்வாருக்கு நிவந்தம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இன்றைய கவிர்நாட்டு கண்மாய் கரையில் உள்ள, உடைந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ள பகுதியே அன்று பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளி என்று வழங்கப்பட்டது. பெருநற்கிள்ளி சோழன் என்பது, ஆதித்த கரிகாலனின் விருதுப் பெயர்களில் ஒன்றாகும். அவரின் பெயரில் இப்பள்ளி இயங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 27 வரியுடைய இந்தக் கல்வெட்டு, பெருநற்கிள்ளி சோழப்பெரும்பள்ளிக்கு, சடையார்மலையை பள்ளிச்சந்தம் இறையிலியாக, சந்திரனும் சூரியனும் இருக்குமவரை தென்கவிரநாட்டுப் பள்ளி நாட்டார்கள் வழங்கியதாகக் கூறுகிறது.
5. பொம்மாடிமலை தென்திருப்பள்ளி நாயகர்
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் புறவழிச்சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பொம்மாடிமலை. இங்கு சாலையின் இடதுபுறம் தலை சிதைக்கப்பட்ட ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும், அதன் பின்புறம் உள்ள பாறைச்சரிவில் இந்தத் தீர்த்தங்கரர் சிற்பம் தொடர்பான ஒரு கல்வெட்டும் உள்ளது. இச்சிற்பத்தின் தலை மற்றும் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள சேதத்தால் இது குறித்த முழுமையான தகவலை அறிய இயலவில்லை.
கல்வெட்டுச் செய்தி
இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசரின் பெயர், திருபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மேல் கொண்டான் என உள்ளதால், இவர் குறித்து அறிய முடியவில்லை. இன்றைய பொம்மாடிமலை, அன்று தென்திருப்பள்ளி மலை எனவும், இத்தீர்த்தங்கரர் தென்திருப்பள்ளி நாயகர் எனவும் கல்வெட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கல்வெட்டில் இன்றைய குடகுமலை என அழைக்கப்படும் இடம், அன்று திருப்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு பள்ளிகளுக்கு திருப்படிமாற்று நிவந்தம் வழங்க தென்சிறுவாயில் நாடு மற்றும் கொற்றமங்கலம் பகுதி புன்செய் நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இரு திருப்பள்ளிக்கு விடப்பட்ட நான்கு எல்லை நிலங்களிலும், எல்லைக்கல்லாக முக்குடை வைத்த கல்நாட்டியும் (எல்லையை ஆவணப்படுத்த அமைக்கப்படுவது) அன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. லெட்சுமணன்பட்டி முன்னூறு கூற்றுப் பெரும்பள்ளி
புதுக்கோட்டையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் கீரனூரைத் தாண்டி, வலதுபுறம் திரும்பினால் இந்த ஊரைச் சென்றடையலாம். இங்கு ஒரு சிதைந்த கற்றளி கட்டுமானத்தின் அதிட்டான பகுதி உள்ளது. அதன் மத்தியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது.
கல்வெட்டுச் செய்தி
தீர்த்தங்கரர் சிற்பம் அமைந்துள்ள சிதைந்த கோவிலுக்கு எதிர்புற நிலத்தில் ஒரு கல் நடப்பட்டுள்ளது. அதில் 7 வரிகளில் எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. இதன் வாயிலாக இவ்வூர் நல்லூர் என்பதும், இங்குள்ள சமணப் பள்ளி முன்னூற்றுப் பெரும்பள்ளி என்பதும் தெரியவருகிறது. இக்கோவிலின் பராமரிப்பைக் கீழ்க் கோனாட்டு நாட்டார் சபையினர் ஏற்றுக்கொண்டதைக் கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் தற்போது தகுந்த முறையில் வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
7. ஆளுருட்டிமலை திருமானமலை ஆழ்வார்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ளது அம்மாசத்திரம் கிராமம். திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தின் கிழக்கே இரு சிறிய குன்றுகள் அமைந்துள்ளன. அவற்றில் இடதுபுறம் உள்ள முதல் குன்று குடகுமலை என்றும், வலதுபுறம் உள்ள குன்று ஆளுருட்டிமலை என்றும் மக்கள் வழக்கில் அழைக்கப்படுகிறது.
ஆளுருட்டிமலையில் உள்ள கல்வெட்டு திருமானமலை பள்ளி ஆழ்வாருக்கு அர்ச்சனாபோகமாக நிலதானம் அளித்த தகவலைக் குறிப்பிடுகிறது. மேலும் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வடசிறுவாயில் நாடு என்பது இன்றைய குளத்தூர் வட்டத்தில் கீரனூரில் தொடங்கி நாஞ்சூர், மருதூர், மோசக்குடி, மங்கத்தேவன்ப்பட்டி, வாழமங்கலம், கோவில்வீரக்குடி, செனையாக்குடி, அம்மாசத்திரம் வரையிலான கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதி என்பதை இப்பகுதி கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த வடசிறுவாயில் நாட்டில் மட்டுமே ஐந்துக்கும் மேற்பட்ட சமண சின்னங்கள் காணப்படுகின்றன. அம்மாசத்திரத்தில் இரு சமண படுக்கை தளங்கள், மோசக்குடியில் பெரிய சமண கோவில், நாஞ்சூர், மருதூர் மற்றும் கோவில் வீரக்குடி கிராமங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் என, சமண சின்னங்கள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.
கல்வெட்டுச் செய்தி
பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியரின் ஆட்சிக்காலத்தில், தெலுங்கு குல காலபுரமான குலோத்துங்க சோழபட்டினத்து பள்ளிச்சந்த உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியனும், திருப்பள்ளிமலை (இன்றைய குடகுமலை) ஆழ்வார் மாணாக்கரும், பரம்பையூர் வியாபாரியும் இணைந்து, திருமானமலை (ஆளுருட்டிமலை) ஆழ்வாருக்கு பள்ளிச்சந்தமாக நிலதானம் அளித்த தகவலைக் கூறுகிறது.
9. குடகுமலை திருப்பள்ளி ஆழ்வார் மலை
ஆளுருட்டிமலைக்கு எதிர்ப்பக்கமாக குடகுமலை உள்ளது. மக்கள் வழக்கில் குடகுமலை என்று அறியப்பட்டாலும், கல்வெட்டுகளில் திருப்பள்ளிமலை என்றே அழைக்கப்படுகிறது. இம்மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளங்கள் அதிகமாக உள்ளன. அதில் சில குகைத்தளங்களில், மண் மூடியுள்ளதால் கற்படுக்கைகள் சரியாகத் தெரியாத வகையில் புதைந்துள்ளன. இவற்றைச் சுத்தம் செய்தால், அங்கே படுக்கைகளும் எழுத்துப் பொறிப்புகளும் கிடைக்கக்கூடும்.
முதலில் நுழைந்ததும் காணக் கிடைக்கும், (மழை நீர் வடியாமல் இருப்பதற்காக வெட்டப்படும்) காடி உள்ள குகைத்தளம் சற்று பெரியதாக உள்ளது. இந்தப் பெரிய குகைத்தளத்தில் நிறையக் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாகத் தொடர்ச்சியாகச் சிறிய அளவில் சுமார் 7 குகைத்தளங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் கற்படுக்கைகள் உள்ளன. அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் இங்கே சமணப்பள்ளிகள் இயங்கியிருக்க வேண்டும். இங்குள்ள சிறிய அளவிலான ஒரு குகைத்தளத்தில் சிதைந்த கல்வெட்டு ஒன்று, நாம் கள ஆய்வுக்குச் சென்றபோது கிடைத்தது. முழுவதும் பொருள் தராமல், இறுதி வரிகளின் தொடர்ச்சி மட்டும் கிடைப்பதால் இதன் பொருளை அறிய முடியவில்லை. பெரிய குகைத்தளத்தின் முன்பாக இருக்கும் ஒரு சிறிய பாறையில் சுந்தர சோழரின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
கல்வெட்டுச் செய்தி
சுந்தர சோழரின் 5ஆம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இந்த மலையையும் அங்கு வழிபாட்டில் இருந்த அருகரையும் இணைத்து, ‘வடசிறுவாயில் நாட்டு திருப்பள்ளிமலை ஆழ்வார்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருகருக்கு ஏழு நாட்கள் திருவிழா நடத்த நீர்ப்பழனியுடையான் என்பவர், மீசெங்கிளி நாட்டு பொடுகாரி நல்லூரில் (லெட்சுமணப்பட்டியில் இருந்த சமணப்பள்ளிக்கு, அன்று நல்லூர் முன்னூற்றுப் பள்ளி எனப் பெயர் வழங்கப்பட்டது. எனவே இக்கல்வெட்டில் பயின்று வரும் நல்லூர் என்பது லெட்சுமணப்பட்டியாக இருக்கலாம்) உள்ள வயல் ஒன்றை நிவந்தமாகக் கொடையளித்த செய்தியை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.
15 வரிகளில் உள்ள இக்கல்வெட்டு குறிப்பிடும் திருப்பள்ளிமலை (இன்றைய குடகுமலை) குறித்து, பொம்மாடிமலை மற்றும் ஆளுருட்டிமலைகளில் உள்ள கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
10. கவிநாட்டு பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளி
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழமையான கவிநாட்டு கண்மாய். இது ஒரு சிதைந்த சமணத் தலமாகும். இங்குள்ள குமிழித்தூம்பில் முதலாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு உள்ளது. இந்தக் கண்மாயின் உட்பகுதியில் தலையில்லாது சிதைவுற்ற ஒரு தீர்த்தங்கரரின் சிற்பம் உள்ளது. இதனருகே நிறைய கற்கள், கோவிலின் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இவற்றை நோக்குங்கால், இங்கு ஒரு கோவில் இருந்ததை அறியலாம். இந்தத் தீர்த்தங்கரர் சிற்பத்தில் இருந்து சற்று தள்ளிச் சென்றால், ஒரு பலகைக் கல்லில் 12ஆம் நூற்றாண்டின் எழுத்தமைவில் ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. அக்கல்வெட்டின் வாயிலாக இங்கே பெருநற்கிள்ளிச் சோழப் பெரும்பள்ளி எனப்படும் ஒரு சமணத் தலம் இருந்ததை அறிய முடிகிறது.
கல்வெட்டு
தனித்த ஒரு பலகைக் கல்லில் இருபுறமும் குத்துவிளக்குடன் கூடிய மங்களச் சின்னத்தின் மேல் ஐந்து வரிகளில் கல்வெட்டுப் பொறிப்பு உள்ளது.
1.ஸ்வஸ்தி ஸ்ரீ
2.கவிநாட்டுப் பெருநற்கிள்ளி
3.சோழப் பெரும்பள்ளியாந்
4.அரசகண்டராமம் பெரும்
5.பள்ளி இத்தன்மம்
இக்கல்வெட்டு வாயிலாக இங்கே இயங்கி வந்த சமணக்கோவிலின் பெயர் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளி என்பதும், அக்கோவிலுக்கு அரசகண்டராமன் என்பவர் தானம் அளித்ததும் தெரிய வருகிறது. பெருநற்கிள்ளி சோழன் என்பது சுந்தரசோழரின் மகன் ஆதித்த கரிகாலனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. அவரின் இப்பெயரைக் குறிக்கும் கல்வெட்டு துவாக்குடி அருகே உள்ள ஒரு குமிழித்தூம்பு கல்வெட்டிலும், திருப்பழனம் கல்வெட்டு ஒன்றிலும் இடம்பெறுகிறது. எனவே இந்தச் சமணத்தலம் அவரது காலத்திலேயே கட்டப்பட்டு பின்னர் அழிந்து போயிருக்கலாம்.
11. மயிலாப்பூர் திருமலை தீர்த்தர்
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புல்வயல் செல்லும் வழியில் பேரையூருக்கு முன்னே 8 கி.மீ. தொலைவில் உள்ளது மயிலாப்பட்டி. இவ்வூரின் தென்புறமுள்ள ஊருணிக்கரைக்கு மேலே ஒரு சிறிய மலைக்குன்று உள்ளது. அதில் ஒரு சமணக்கோவில் இருந்ததற்குச் சான்றாக அதன் அதிட்டானப் பகுதி எஞ்சியுள்ளது. அதில் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு செய்தி
இரண்டாம் குலோத்துங்கனின் 17ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1146) வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, பெருவாயில் நாட்டு மயிலாப்பூர் திருமலைத் தீர்த்தர் என, இன்று கேட்பாரற்று கிடக்கும் தீர்த்தங்கரை அடையாளப்படுத்துகிறது. இக்கல்வெட்டின் வாயிலாகக் கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறுவாயில் நாடு என்றும், இலுப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பெருவாயில் நாடு என்றும் சோழர் காலத்தில் அறியப்பட்டது தெரிய வருகிறது. மேலும், இன்றைய மைலாப்பட்டி அன்று மயிலாப்பூர் என அழைக்கப்பட்டதும், இங்குள்ள குன்று, திருமலை என அழைக்கப்பட்டதும் தெரிகிறது. இக்கோவிலைக் கட்டியவர், புல்வயல் அரையனான மதுரவாய்மொழி சதிர்ராசன் என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது.
12. மலையடிப்பட்டி சமணப்படுக்கைகள்
புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் மலையடிப்பட்டி. இங்கு விடேல் விடுகு முத்தரையர் காலத்தில் கட்டப்பட்ட இரு குடைவரைக் கோவில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சைவம் சார்ந்தது. மற்றொன்று வைணவம் சார்ந்தது. இம்மலை அக்காலத்தில் திருஆலத்தூர் மலை என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள முத்தரையர் கல்வெட்டு வாயிலாக இதை அறிய முடிகிறது. இவ்விரு குடைவரைகள் அமைந்த மலைக்கு மேல் ஏறிச் சென்றால், அங்கு மற்றொரு சிறிய மலைக்குன்று காணப்படுகிறது. இயற்கையாக அமைந்த அந்தக் குகைத்தளத்தை துறவியர் தங்குவதற்காக வழவழப்பாகத் தேய்த்து வைத்திருப்பது தெரிய வருகிறது.
இந்தச் சிறிய மலைக்குன்றுக்கு மேலே ஏறிச்செல்லும் பாதை எளிதானது அல்ல. செங்குத்தான அந்தப் பாறையில் ஒரு கால் பாதத்தை வைக்கும் அளவுக்கு மட்டும், அதாவது 30 செ.மீ. நீளத்திலும், 50 செ.மீ. அகலத்திலும் சிறிய அளவில் மூன்று பள்ளங்கள் குடையப்பட்டுள்ளன. அவற்றில் கவனமாகவே கால் வைத்து மேலே ஏறிச் செல்ல வேண்டும், சிறிது கவனம் பிசகினாலும் கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. மேலே ஏறிச்சென்றால் அங்குள்ள சமணப்படுக்கைகளைக் காணலாம்.
ஏனைய தமிழி கல்வெட்டுகள் உள்ள தளங்களில் இருப்பதைப் போலவே இங்கும், மழைநீர் கீழே உட்புகா வண்ணம் பாறையின் நெற்றிப்பகுதியில் காடி வெட்டியுள்ளனர். கருங்காலக்குடி, மாங்குளம், அரிட்டாப்பட்டி, மாமண்டூர், புகளூர், மாறுகால்தலை போன்ற பகுதிகளிலும் இதேபோன்ற அமைப்பு உள்ளது. அங்கே தமிழி கல்வெட்டுகள் இருக்கின்றன.
இக்குகைத்தளத்தில் ஐந்து கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று கற்படுக்கைகள் நல்ல நிலையிலும் இரண்டு கற்படுக்கைகள் உள்ளடங்கியும் உள்ளன. இக்குகைத்தளத்தில் சில வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகிறது. மேலும் சில குறியீடுகளும் கற்படுக்கைப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. திருவாசி போன்ற அமைப்பில், பீடத்தின் கீழே ஒருவர் அமர்ந்துள்ளது போலவும், குதிரையின் மேல் அமர்ந்து ஒருவர் செல்வது போலவும் பாறைக்கீறல்கள் உள்ளன. மேலும், பாறை ஓவியம் அமைந்துள்ள பகுதியில், 50 செ.மீ. உயரம், 30 செ.மீ. அகலத்தில் ஒரு பாறைக்கீறல் உள்ளது. கரண்ட மகுடம் அணிந்து, அரையாடையுடன் இடது கையில் ஓர் உருள்தடியும், வலது கையில் சுசி ஹஸ்த முத்திரையும், முகத்தில் முறுக்கு மீசையும் இருக்கும்படியான உருவத்தை இந்தப் பாறைகீறல் மூலமாக உருவாக்கியுள்ளனர். இந்தப் பாறைக்கீறலை இக்குகைத்தளத்தின் கீழிலிருந்து பார்த்தால் முழுமையாகத் தெரியும் வகையில் அமைத்துள்ளனர். இப்பாறைக்கீறலின் கீழே 9ஆம் நூற்றாண்டின் எழுத்தமைவில் ஒரு தமிழ்க் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
1.கரையூர் ஆலங்காரி
2.க்கு பிச்சும் பிராந்
3.தும் அமலி
என அக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் விளங்கவில்லை என்று முனைவர் கலைக்கோவன் முதலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் குகைத்தளத்தின் கீழிறங்கி மீண்டும் வலதுபுறம் திரும்பினால் சுமார் 100 மீட்டர் தொலைவில் சில குகைத்தளங்கள் உள்ளன. அவற்றில் 8 கற்படுக்கைகள் அடையாளம் காணும் வகையில் உள்ளன. இந்தக் குகைத்தளத்தின் பக்கவாட்டுப் பகுதியில் ‘யரய’ எனும் மூன்று எழுத்துப் பொறிப்பில் ஒரு கல்வெட்டு உள்ளது.
(தொடரும்)

