சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவருடைய ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்கிற கட்டுரை தொழிலாளர் பிரச்சினையை சமூகத்தில் வாழ்கிற அனைவரும் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. ‘சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்னும் கட்டுரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.
விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாவலூரில் 22 செப்டெம்பர் 1916 அன்று பிறந்தார். நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தன் தந்தையாரோடு கருமான் பட்டறைக்கு வேலைக்குச் சென்றார். எதிர்பாராத விதமாக, அவர் வசித்த பகுதியில் தேசிய உணர்வு மிக்க இளைஞர்கள் சிலர் ஓர் இரவுப்பள்ளியைத் தொடங்கியபோது அதில் இணைந்து எப்படியோ பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு ஓவியம் கற்க விரும்பி ஓவியப்பள்ளியில் சேர்ந்தார்.
முழுமையாகக் கற்க வசதியில்லாமல் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
அதன் பிறகு நண்பரொருவரின் உதவியால் வருமானத்துக்காக தமிழரசு பத்திரிகையில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். ‘பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் கவிதைக்கு அச்சுக் கோர்த்தவன் நான்’ என அவர் தன்னைப்பற்றி அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டு. தமிழரசு, ஆனந்த போதினி, ஆனந்த விகடன் என பல பத்திரிகைகளில் அச்சுக்கோர்ப்பாளராகப் பணிபுரிந்த அனுபவத்தில் கல்கி இதழில் இணைந்தார்.
ஒருமுறை கல்கி தீபாவளி மலருக்காக கிறுக்கலான கையெழுத்தில் அவசரமாக ஒரு சிறுகதையை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அக்கதை ஒரே ஒரு எழுத்துப்பிழை கூட இல்லாமல் பிரசுரமானதைக் கண்டு கல்கி வியப்பிலாழ்ந்தார். அதன் பின்னணியில் அச்சுக்கோர்ப்பாளரான விந்தனின் மொழியாற்றல் செயல்பட்டதை உணர்ந்து அவரை அழைத்துப் பாராட்டினார்.
விந்தனுக்கு எழுத்தின் மீதிருக்கும் ஆர்வத்தை அறிந்துகொண்டதும் ஒரு சிறுகதையை எழுதி எடுத்து வருமாறு கூறினார். அன்றிரவே விந்தன் ஒரு சிறுகதையை எழுதிமுடித்து மறுநாள் காலையில் கல்கியின் பார்வைக்கு அனுப்பிவைத்தார். விந்தனுடைய வேகமான புதிய நடையையும் புதிய சித்தரிப்புகளையும் ரசித்துப் படித்த கல்கி அவரை அழைத்துப் பாராட்டிவிட்டு, அக்கதையைப் பிரசுரிக்க வைத்தார். அவர் அப்போது தன் சிறுகதையை வி.ஜி. என்று சொந்தப் பெயரில் எழுதியிருந்தார். கல்கி அந்தப் பெயரை விந்தன் என்று மாற்றினார். அதையடுத்து அவர் எழுதிய படைப்புகள் அனைத்தும் விந்தன் என்னும் பெயரிலேயே வெளிவந்தன. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே கல்கி அச்சுக்கோர்ப்பாளராக இருந்த விந்தனை இதழின் துணை ஆசிரியர்களில் ஒருவராக அமர்த்தினார்.
அக்காலத்தில் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் மற்ற பத்திரிகைகளில் எழுதக்கூடாது என்பது எழுதாத விதியாக இருந்தது. பொருளியல் நெருக்கடிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்துவந்த விந்தன் வருமானத்துக்காக அவ்விதியை மீறவேண்டியிருந்தது. முற்போக்குச் சிந்தனையாளரான முருகு சுப்பிரமணியம் என்பவர் நடத்திவந்த ‘பொன்னி’ என்கிற மாத இதழில் நக்கீரன் என்னும் புனைபெயரில் ‘கண் திறக்குமா?’ என்னும் தொடர்கதையை 01 மே 1948 முதல் தொடங்கி இருபது மாதங்கள் எழுதினார்.
ஏறக்குறைய முப்பது நாற்பது ஆண்டுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆட்பட்டு தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்களில் பலரையும் சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியமைத்த ஆட்சியாளர்கள் புறக்கணித்ததையும் கிஞ்சித்தும் அற உணர்வே இல்லாத செல்வந்தர்களை அரவணைத்து இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அதிகார அடுக்கில் அமரவைத்ததையும் ஆற்றாமையுடன் முன்வைக்கும் விதமாக அமைந்த அந்தத் தொடர்கதை வாசகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கதையமைப்பையும் மொழியமைப்பையும் தொடர்ந்து கவனித்துவந்த பல வாசகர்கள் இறுதிக்கட்டத்தில் மாற்றுப் புனைபெயரில் எழுதினாலும் அக்கதையை எழுதியவர் விந்தனே என்பதை எப்படியோ தெரிந்துகொண்டனர்.
விரைவிலேயே அச்செய்தி கல்கியையும் வந்தடைந்தது. கல்கி விந்தனை நேரிடையாக தன் அறைக்கு அழைத்து விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டார். தான் எப்படியும் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்று அஞ்சியபடியே சென்ற விந்தனை மனம் திறந்து பாராட்டிய கல்கி, அடுத்த தொடர்கதையை கல்கி இதழிலேயே எழுதுமாறு சொல்லி அனுப்பிவைத்தார். அந்தக் கோரிக்கைக்கு இணங்க அடுத்து சில வாரங்களிலேயே ‘பாலும் பாவையும்’ என்னும் தலைப்பில் புதியதொரு தொடர்கதையை எழுதத் தொடங்கினார் விந்தன். பிறகு அது புத்தகமாகவும் வெளிவந்து அவரை முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவராக மாற்றியது.
அதையொட்டி திரைப்படத்துறையினரின் கவனம் விந்தன்மீது விழுந்தது. திரையுலகத்தின் மீது மயக்கம் கொண்டிருந்த விந்தனும் அவர்களுடைய அழைப்பை ஏற்று கல்கி இதழிலிருந்து வெளியேறினார். ஏ.வி.எம். கதைத்துறையில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு வாழப் பிறந்தவன், அன்பு, கூண்டுக்கிளி போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். கையில் எஞ்சியிருக்கும் அளவுக்கு பணம் சேர்ந்ததும் ‘மனிதன்’ என்றொரு மாத இதழைத் தொடங்கினார். ஒன்பது இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. பண நெருக்கடி காரணமாக இதழை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது.
மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பிய விந்தனுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவந்தன. பார்த்திபன் கனவு, குழந்தைகள் கண்ட குடியரசு, சொல்லு தம்பி சொல்லு என சில படங்களில் அடுத்தடுத்து பணியாற்றினார். சற்றே பணம் சேர்ந்ததும் புத்தகப்பூங்கா என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி ஜெயகாந்தன், க.நா.சுப்பிரமணியன், இளங்கோவன் போன்றோரின் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். அதனால் அவருடைய சேமிப்பு வெகுவிரைவிலேயே கரைந்தது. அதற்கிடையில் அவர் எட்டுக் குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பினார். சில படங்களில் பணியாற்றி காலமெல்லாம் வாடகை வீட்டில் வசித்து அல்லல்படும் தன் குடும்பத்தினர் குடியிருப்பதற்காக ஒரு வீட்டுமனையை வாங்கினார். ஆனால் அந்த இடத்தில் வீட்டைக் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அமையாமலேயே 30 ஜூன் 1975 அன்று மறைந்துபோனார்.
0
நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நேரத்தில் 1919ஆம் ஆண்டில் ரெளலட் சட்டம் என்கிற புதியதொரு குற்றவியல் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியர்களை எவ்விதமான விசாரணையும் இல்லாமல், பிடி ஆணையும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்பவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமலேயே இரண்டு ஆண்டுகள் வரைக்கும் சிறையில் அடைத்து வைக்கவும் பத்திரிகைகளுக்கும் பொதுநிகழ்ச்சிகளுக்கும் கடுமையான விதிமுறைகளை விதிக்கவும் அந்தச் சட்டம் வழிவகுத்தது. அச்சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் 06 ஏப்ரல் 1919 அன்று நாடு தழுவிய அளவில் சத்தியாகிரகத்தையும் கடையடைப்புப் போராட்டங்களையும் தொடங்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
போராட்டம் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் அரசு நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலையையும் ரெளலட் சட்டத்தையும் கண்டித்து நாடெங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கடையடைப்பும் ஊர்வலமும் நடத்தினர். ‘கண் திறக்குமா?’ தொடர்கதையை இந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறார் விந்தன்.
சென்னையில் பரந்தாமனார் என்பவர் பல ஆண்டு கால அனுபவங்களுடன் கெளரவமான வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். பெரிய செல்வந்தர். ஆங்கிலேயர் ஆட்சியின் மீது பெருமதிப்பு வைத்திருப்பவர் அவர். சட்ட அறிவு மிக்க ஆங்கிலேயர் ஆட்சி புரிவதால்தான் இந்திய தேசம் நல்லமுறையில் பராமரிக்கப்படுகிறது என்கிற எண்ணம் கொண்டவர். ஆங்கிலேயர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தன் வீட்டுக்கு ‘விக்டோரியா பவனம்’ என்னும் பெயரைச் சூட்டியிருக்கிறார்.
காந்தியடிகளைக் கலகக்காரன் என பட்டப்பெயர் சூட்டி அடிக்கடி குத்திக் காட்டிப் பேசுகிறார் அவர். தேசத்தைத் தவறான திசையில் வழிநடத்திக் கெடுப்பதாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் காந்தியடிகள்மீது குற்றம் சுமத்துகிறார். அவருக்குச் சாந்தினி என்னும் மகள் இருக்கிறாள். அவள் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறாள். அவருடைய மனைவி மறைந்து நீண்ட காலமாகிவிட்டதால் மகளைவிட குறைந்த வயதுடைய பெண் ஒருத்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
சட்டம் படித்துமுடித்த இளைஞனான செல்வம் மூத்த வழக்கறிஞரான பரந்தாமனாரிடம் உதவியாளனாகப் பணிபுரிகிறான். அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மட்டுமே உண்டு. திருமண வயதையடைந்த தன் மகன் செல்வத்துக்கும் மகள் சித்ராவுக்கும் திருமணம் செய்துவைப்பது மட்டுமே அந்தத் தாயின் ஒரே கனவு. அந்தச் சிறிய குடும்பம் செல்வத்தின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. காந்தியடிகள் மீதும் அவருடைய அகிம்சைத் தத்துவத்தின்மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவன் செல்வம். நாடெங்கும் பரவிப் பெருகிக்கொண்டிருந்த சுதந்திரப்போராட்டத்தின்மீது உள்ளூர மதிப்பும் ஆதரவும் கொண்டவன். மூத்த வழக்கறிஞரான பரந்தாமனாரின் நடவடிக்கைகள் சார்ந்து கசப்பும் வெறுப்பும் கொண்டவன். ஆயினும் குடும்பப் பொருளியல் நெருக்கடியின் காரணமாக அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள இயலாமல் ஒவ்வொருநாளும் அவன் தவிக்கிறான்.
ஒருநாள் இருவரும் நீதிமன்றத்துக்குப் புறப்படும் வேளையில் தெருவில் அவர்களுடைய வீட்டைக் கடந்து ரெளலட் சட்ட எதிர்ப்பு ஊர்வலம் செல்கிறது. ‘மகாத்மா காந்திக்கு ஜே’, ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழ்க’, ‘நமதே ராஜ்ஜியம்’, ‘அடைந்தே தீருவோம்’ என்னும் முழக்கங்கள் ஆவேசத்துடன் ஒலிக்கின்றன. அம்முழக்கங்களைக் கேட்டதும் மூத்த வழக்கறிஞர் எரிச்சலடைகிறார். அக்கணமே காந்தியடிகளைப் பற்றி வெறுப்போடு விமர்சனம் செய்கிறார். தொடக்கத்தில் இருந்தே பொறுமை காத்துவந்த செல்வம் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, ‘தங்கச்சங்கிலி என்பதற்காக கைகளில் விலங்கு போட்டுக்கொள்ள நான் தயாராக இல்லை. உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்று படபடப்புடன் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி கூட்டத்தோடு சேர்ந்துகொள்கிறான்.
அந்த நேரத்தில் கூட்டத்தைக் கலைப்பதற்காக ஒரு பெரிய வாகனத்தில் வந்து இறங்குகிறார்கள் காவலர்கள். எவ்விதமான எச்சரிக்கையும் அளிக்காமல் ஊர்வலத்தினர்மீது கடுமையாக தடியடி நடத்துகிறார்கள். அனைவரும் தலையிலும் கால்களிலும் அடிபட்டு மயங்கிச் சரிகிறார்கள். மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தே மாதரம் முழக்கத்தோடு அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிச் சென்ற இளைஞன் தலையுடைந்து சரிகிறான். அதைப் பார்க்கும் செல்வம் ஓடோடிச் சென்று அந்த இளைஞன் கையிலிருந்து விழுந்த கொடியை ஏந்தியபடி தன்னையறியாமல் வந்தே மாதரம் என முழக்கமிடுகிறான்.
‘வெறும் இருபது ரூபாய்ச் சம்பளத்துக்காக உங்கள் உரிமையை விற்கலாமா? வெட்கக்கேடு. எட்டிச் செல்லுங்கள். எங்களை நொறுக்குவதற்குப் பதிலாக அந்த வெள்ளைக்காரப் பயல்களை அடித்து நொறுக்குங்கள்’ என்று காவலர்களைப் பார்த்து சத்தம் போடுகிறான். ஆவேசம் கொண்ட காவலர்கள் அவனை அடித்து நொறுக்கிவிடுகின்றனர். தலையும் காலும் உடைந்து விழுந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பிற தொண்டர்கள் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று சிறையில் அடைக்கின்றனர்.
இரண்டு நாட்கள் மயக்கத்துக்குப் பிறகு செல்வத்துக்குத் தன்னுணர்வு திரும்புகிறது. அவனைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த அவனுடைய தாயும் தங்கையும் அவனைப் பார்த்து அழுகிறார்கள். ‘என் தலையில் இப்படி கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே’ என்று அழுகிறாள் தாய். ‘மன்னிப்புக்கடிதம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடு அண்ணா. நீ இல்லாமல் நாங்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்?’ என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறாள் சித்ரா. ஆனால் தன் முடிவில் உறுதிகொண்ட செல்வம் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாகக் கண்களை மூடிக்கொள்கிறான். அவர்கள் வெளியேறியதும் பரந்தாமனாரின் மகள் சாந்தினி வந்து கவலை நிறைந்த கண்களுடன் அவனைத் தொட்டு எழுப்பிப் பார்த்துவிட்டுச் செல்கிறாள். செல்வத்துக்கு மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை கிடைக்கிறது. மருத்துவமனை வாசம் முடிவடைந்ததும் அவன் சிறைக்குச் செல்கிறான்.
செல்வம் சிறையில் இருக்கும்போது அவன் அம்மா இறந்துவிட்ட செய்தி கிடைக்கிறது. அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக பரோலில் செல்ல அனுமதிக்குமாறு சிறை நிர்வாகியிடம் கடிதம் கொடுக்கிறான். அவன் கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்துவிடுகிறது. அவன் இல்லாமலேயே அவனுடைய தாய் அடக்கம் செய்யப்படுகிறாள்.
0
செல்வம் விடுதலையானபோது காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் நாடெங்கும் நடைபெறுகிறது. ஆங்கிலேயர் பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அதுவரை காந்தியடிகளை கலகக்காரன் என பட்டப்பெயர் சூட்டி அழைத்து ஏளனம் செய்த வழக்கறிஞர் பரந்தாமனார் காந்தியடிகளின் பெயரை அடிக்கடி சொல்லத் தொடங்கியிருப்பதையும் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் கொள்கைப்படி நீதிமன்றத்தைப் புறக்கணித்திருப்பதையும் செல்வம் நேரிடையாகவே பார்த்து வியப்பிலாழ்கிறான். விக்டோரியா பவனமாக இருந்த வீட்டின் பெயரும் ‘காந்தி பவனம்’ என மாறியிருக்கிறது. அனைத்திந்திய அளவில் புகழ் பெறவும் சமூகத்தில் தன்னை ஒரு பெரிய மனிதராக நிறுவிக்கொள்ளவும் அது ஒரு குறுக்குவழி என பரந்தாமனாரின் மனம் கணக்குப் போட்டிருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், காங்கிரஸ் அவரை எவ்விதமான கேள்வியுமின்றி எப்படி ஏற்றுக்கொண்டது என்பதுதான் அவனுக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
வசதியில்லாத பிள்ளைகள் தங்கிப் படிப்பதற்காக திலகர் குருகுலம் என்னும் பெயரில் ஒரு விடுதியையும் உருவாக்கியிருக்கிறார் பரந்தாமனார். அதை நடத்துவதிலும் அவருக்கு ஒரு தன்னலம் இருக்கிறது. ஒருபக்கம் புகழ், இன்னொரு பக்கம் வருமானம் என அவர் மனம் கணக்கிடுகிறது. அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு கால்வயிற்றுக்கும் அரைவயிற்றுக்குமான உணவுமட்டுமே தினந்தோறும் கொடுக்கப்படுகிறது. விடுதியின் செயல்பாட்டைப் பாராட்டி நன்கொடை வழங்கவரும் செல்வந்தர்களின் வருகை நிகழும் சமயங்களில் மட்டும் சிறப்பான உணவை ஏற்பாடு செய்கிறார்.
விடுதியைப் பார்த்துவிட்டுப் பாராட்டிவிட்டுச் செல்லும் விளம்பர விரும்பிகளான செல்வந்தர்கள் அந்தக் குருகுலத்துக்குத் தாராளமாக நன்கொடை அளித்துவிட்டுச் செல்கிறார்கள். அந்த நன்கொடை அவர் செலவு செய்ததைவிடப் பத்து மடங்கு இருபது மடங்கு கூடுதலான தொகை. அந்தப் பணத்தையெல்லாம் அவர் சுருட்டிக்கொள்கிறார். அதில் எவ்விதமான கூச்ச உணர்வும் அவருக்கு இருப்பதில்லை. அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து எழுதவந்திருக்கும் பத்திரிகையாளர்கள் நன்கொடையைக் கொடுப்பவர், வாங்குபவர் இருவரைப்பற்றியும் வானளாவப் புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார்கள். அதற்கான ஊதியமாக கண்மறைவில் சிறிய தொகையொன்றை வாங்கிச் செல்கிறார்கள்.
தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு விடுதலை பெற்ற செல்வம் ஆவலோடு வீட்டுக்குச் செல்கிறான். அந்த வீட்டில் வேறொரு குடும்பம் குடியிருக்கிறது. தங்கையைக் காணவில்லை. அந்தத் தெருவில் வசித்த ஒரு பெண்மணி அவன் சிறையில் இருந்த காலத்தில் பரந்தாமனாரின் மகள் சாந்தினிதான் அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கிறாள். தாயாரின் மரணத்தையொட்டி ஊருக்கு வந்திருந்த அவனுடைய தாய்மாமன் குற்றாலலிங்கம் ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது சித்ராவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கிறார். வீட்டை வாடகைக்கு விட்டதும் அவரே என்னும் தகவலையும் கூறுகிறார்.
சாந்தினியைச் சந்திப்பதற்காகப் பரந்தாமனாரின் வீட்டுக்குச் சென்ற செல்வம் அவரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பார்த்து வியப்பிலாழ்கிறான். அடிபட்டு உதைபட்டு ரத்தம் சிந்தியவர்களெல்லாம் எந்த முகவரியும் இல்லாதவர்களாக எங்கோ இருக்க, தன் செல்வாக்கின் காரணமாகவும் வாய்த்திறமை காரணமாகவும் கட்சிக்குள் பெரிய மனிதராக அவர் வலம் வருவதைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இலட்சியவாதிகளுக்கும் தியாகம் செய்கிறவர்களுக்கும் இந்த உலகத்தில் மதிப்பில்லையா என நினைத்துக் குழப்பத்தில் மூழ்குகிறான்.
அவனை வரவேற்ற பரந்தாமனார் கட்சியில் தனக்குக் கிடைத்திருக்கும் இடத்தைப்பற்றி பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார். தஞ்சாவூர் குற்றாலலிங்கம் மாமா வீட்டுக்குச் சித்ரா சென்றிருப்பது உண்மைதான் என்னும் தகவலை சாந்தினி வழியாக உறுதிப்படுத்திக்கொள்கிறான் செல்வம். அவர்களிடையில் கடிதப்போக்குவரத்து இருக்கும் செய்தியும் அவனுக்கு ஆறுதல் அளிக்கிறது.
அந்த ஆறுதல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சித்ரா தன்னுடைய சமீபத்திய கடிதத்தில் குற்றாலலிங்கம் மகன் சிவக்குமரன் அவளுக்குத் தொல்லை கொடுப்பதாக எழுதியிருந்த செய்தியைத் தெரிவித்தபோது அந்த ஆறுதல் குலைகிறது. உடனே சென்று சித்ராவை மீட்டு வாருங்கள் என்று கூறுகிறாள் சாந்தினி. அன்று இரவே செல்வம் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு ரயிலில் புறப்படுகிறான்.
0
அன்று இரவு இரண்டு திருப்பங்கள் நிகழ்கின்றன. குற்றாலலிங்கம் மாமாவின் மகன் சிவக்குமரனின் தொல்லைகள் எல்லை மீறுவதை உணர்ந்துகொள்கிறாள் சித்ரா. அந்த வீட்டில் தொடர்ந்து வசிப்பது தனக்கு ஆபத்தைக் கொடுக்கும் என்பதை அறிந்துகொண்டதும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறாள். தக்க தருணத்துக்காகக் காத்திருந்து யாரும் அறியாத நேரத்தில் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடுகிறாள். சென்னைக்குச் சென்றுவிடலாம் என நினைத்து ரயில் நிலையத்துக்கு வருகிறாள்.
நிலையத்தை நெருங்கியதும்தான் தன்னிடம் பணம் இல்லை என்னும் உண்மை அவளுக்கு உறைக்கிறது. பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை. அதனால் பணத்துக்கு என்ன செய்வது என்று மனம் குழம்பியபடி நிலையத்துக்கு வெளியே தவித்து நிற்கிறாள்.
அந்த நேரத்தில் அங்கு வரும் கண்ணன் என்னும் இளைஞன் அவளுடைய நிலையை அறிந்து பயணச்சீட்டு வாங்கி அவளிடம் கொடுத்து பெண்கள் பெட்டியில் பாதுகாப்பாக ஏற்றி அமரவைக்கிறான். அவனும் சென்னைக்குச் செல்லவேண்டியவன் என்பதால் வேறொரு பெட்டியில் ஏறி அமர்ந்துவிடுகிறான். சென்னையில் இறங்கிய பிறகு அவளை சாந்தினியின் இல்லம் வரைக்கும் பாதுகாப்பாக அழைத்துவந்து விட்டுவிட்டுச் செல்கிறான்.
குற்றாலலிங்கம் வீட்டுக்குச் செல்வதற்காக தஞ்சாவூரில் காலையில் ரயிலிலிருந்து இறங்கிய செல்வம் நிலையத்துக்கு வெளியே ஒரு தாயும் மகளும் தடித்த வார்த்தைகளுடன் மோதிக்கொள்வதைப் பார்க்கிறான். கழுத்தில் மாங்கல்யம் இல்லாத அந்த மகள் தன் மார்போடு ஒரு கைக்குழந்தையை அணைத்துக்கொண்டிருக்கிறாள். அவர்களை நெருங்கி பேச்சு கொடுத்து அந்த மோதலை நிறுத்துகிறான் செல்வம்.
அவர்களுடன் உரையாடியபோது அந்தத் தாய் குற்றாலலிங்கம் மாமாவின் வீட்டில் வேலை செய்துவந்த பணிப்பெண் என்னும் தகவல் தெரியவருகிறது. தாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டுக்குச் சென்றுவந்த அந்தப் பெண்ணுக்கு ஆசைவார்த்தை பேசி மயக்கிவிட்டான் மாமாவின் மகன் சிவக்குமாரன். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரைக்கும் அவனுடைய காதல் நாடகம் நடந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதும் தாயும் மகளும் அந்த வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் சார்பாக குற்றாலலிங்கத்திடம் தான் பேசுவதாகக் கூறி செல்வம் இருவரையும் அமைதிப்படுத்தி ஒரு மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் வசிக்கும் செய்யாமங்கலம் என்னும் கிராமத்துக்குச் செல்கிறான் செல்வம். ஆனால் ஏற்கனவே அவர்களால் வெளியேற்றப்பட்ட தாய் அச்சம் கொண்டு வழியிலேயே இறங்கி தன்னுடைய தோழி வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள். தனியாகவே அந்த வீட்டுக்குச் செல்லும் செல்வம் மாமாவைச் சந்தித்து, தான் கேட்டறிந்த தகவலைச் சொல்லி நியாயத்தைக் கேட்கிறான். அது பணம் பறிப்பதற்காக தாயும் மகளும் சேர்ந்து போடும் நாடகம் எனக் கூறி அந்தச் சம்பவத்தை எளிதாகக் கடந்து செல்கிறார் குற்றாலலிங்கம்.
அப்போதுதான் சித்ரா வீட்டைவிட்டு இரவே வெளியேறிவிட்டாள் என்னும் தகவல் கிடைக்கிறது. சென்னைக்குத் திரும்பிய செல்வம் சாந்தினியின் பாதுகாப்பில் அவள் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான். கண்ணன், சித்ரா இருவருடைய காதலைப்பற்றிய செய்தியையும் அவன் தெரிந்துகொள்கிறான். கண்ணனும் காந்தியடிகளின் பாதையைப் பின்பற்றுபவன் என்னும் செய்தி அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சாந்தினி, பரந்தாமனார் உதவியோடு அவர்கள் இருவருக்கும் நல்ல முறையில் திருமணம் நடக்கிறது.
தன்னிடம் எஞ்சியிருக்கும் பணத்தை முதலீடு செய்து தீனபந்து என்னும் பத்திரிகையைத் தொடங்குகிறான் செல்வம். ஆனால் அப்பத்திரிகையை அவனால் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை. ஏராளமான பொருளிழப்புக்குப் பிறகு அதை நிறுத்தவேண்டியதாகிறது. இடையிடையில் வெளிநாட்டு ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கள்ளுக்கடை மறியல் என பல மறியல்களில் ஈடுபட்டு காவலர்களால் கைது செய்யப்படுகிறான். ஒவ்வொருமுறையும் அவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். குணமடைந்த பிறகு தண்டனையை அனுபவிக்க சிறைக்குச் செல்கிறான்.
0
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவன் ஏழுமுறை சிறைத்தண்டனை பெற்றிருக்கிறான். ஒருமுறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவன் பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துத் தெரிந்து வியப்பிலும் கசப்பிலும் மூழ்குகிறான். காந்தியடிகள் மேற்கொண்ட தண்டி யாத்திரையைத் தொடர்ந்து ராஜாஜி அறிவித்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் எண்ணற்ற தொண்டர்கள் கலந்துகொண்டு திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரைக்கும் பாதயாத்திரை செல்கின்றனர். நடைவழியில் ஆங்காங்கே முகாமிட்டு அத்தொண்டர்களுக்கு உதவி செய்த முக்கியஸ்தராகக் குற்றாலலிங்கத்தின் பெயர் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருக்கிறது. புதிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவரை அனைவரும் பாராட்டியிருக்கின்றனர்.
அவனைச் சந்திப்பதற்காக சிறைக்கு வந்த பரந்தாமனாரிடம் அந்தச் செய்தியைக் கசப்புடன் பகிர்ந்துகொள்கிறான். அவரோ அச்செய்தியை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார். பொதுவாழ்வில் முடிந்தவரை ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொண்டு காரியங்களைச் சாதித்துக்கொள்கிறவர்களாக இருக்கவேண்டுமே அன்றி கொள்கைவாதியாக மட்டும் இருப்பதில் பயனில்லை என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
அவருடைய உரையாடல் வழியாக அவனுக்கு இன்னொரு செய்தியும் தெரியவருகிறது. குற்றாலலிங்கத்தின் மகன் சிவக்குமாரன் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை பேசி புதிதாக ஒரு பெண்ணிடம் நெருக்கமாகப் பழகி இன்பம் துய்த்த பிறகு ஏமாற்றிவிட்டுச் செல்லலாம் என திட்டம் போட்டிருக்கிறான். அவனுடைய தந்திரத்தை எப்படியோ அறிந்துகொண்ட அந்தப் பெண் அவனைக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்றுவிடுகிறாள். மகனின் மரணத்தைக்கூட குற்றாலலிங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ஆபத்திலிருந்த யாரோ ஓர் அபலைப்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக எதிரிகளோடு போராடி தன்னுயிரையே இழந்தான் தன் மகன் எனக் கூறி அவனைத் தியாகியாக்கிவிடுகிறார். ஊர் நடுவில் அவனுக்காக ஒரு சிலையும் வைத்துவிடுகிறார். ஊர்மக்களும் அவருடைய சொற்களை நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.
0
1937ஆம் ஆண்டில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பாதிக்குப் பாதி பேர் பணமுதலைகள் இடம்பெற்றிருக்கிறார்கள். குற்றாலலிங்கத்துக்குத் தஞ்சாவூரிலும் பரந்தாமனாருக்குச் சென்னையிலும் தொகுதி ஒதுக்கப்படுகிறது. இருவருமே தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குச் செல்கிறார்கள். அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். அறிவும் ஒழுக்கமும் நாணய உணர்வும் கொண்ட பலர் பொது அரசியலிலிருந்து ஒதுங்கி தமக்கேற்ற வழியில் தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்க, அக்குணங்களில் ஒன்றுகூட இல்லாத செல்வந்தர்கள் தம்மிடம் செல்வம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக எல்லாமே இருப்பதாக நடிப்பதையும் பார்த்து வியப்படைகிறான். எல்லாச் செய்திகளும் தெரிந்தவர்களாக இருந்தும் எதுவும் தெரியாதவர்கள்போல மக்கள் நடந்துகொள்வதைப் பார்த்துப்பார்த்து வருத்தத்தில் மூழ்குகிறான் செல்வம்.
0
இரண்டாவது உலகப்போரில் இந்தியர்களின் அனுமதியின்றி இந்தியாவை இணைத்துக்கொண்டது பிழை என்றும் ஆங்கிலேயருடன் இந்தியா ஒத்துழைக்காது என்றும் அறிவித்த காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்குகிறார். முதல் சத்தியாகிரகியாக நின்று வினோபா போர் எதிர்ப்புரையை நிகழ்த்தி கைதாகி சிறைக்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து நாடெங்கும் பலர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அந்தச் சத்தியாகிரகத்தில் செல்வமும் கலந்துகொள்கிறான். அமைச்சராக இருந்த பரந்தாமனாரும் கலந்துகொள்கிறார். பரந்தாமனார் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார். செல்வத்தைப் போன்ற பலரும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு போக்குவரத்து இல்லாத ஒரு காட்டில் தனித்து இறக்கிவிடப்படுகிறார்கள்.
மூன்று மாத தண்டனைக்குப் பிறகு விடுதலை பெற்று வந்த பரந்தாமனார் வழியாக செல்வத்துக்குப் பல உண்மைகள் தெரியவருகிறது. தேச விடுதலை நெருங்கிவிட்டது என்னும் உண்மையைத் தன் நுண்ணுணர்வால் எப்படியோ புரிந்துகொண்ட பரந்தாமனார் சத்தியத்தின் பாதுகாவலனாகத் தன்னை அரசியல்களத்தில் நிறுவிக்கொள்வதற்காக அன்றைய சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கிறார் அவர். பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து, பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்கவேண்டியதைக் கொடுத்து நீதிபதி வழியாக தனக்கு உகந்த வகையில் குறைந்தகால தண்டனையைப் பெற்று சிறைக்குச் சென்று தியாகியாக திரும்பிவந்திருக்கும் ரகசியத்தையும் அவனிடம் சொல்கிறார். அவருடைய அரசியல் கணக்கு அவனுக்கு எப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறது. மனக்குழப்பத்தில் தவிக்கும் செல்வம் இனியும் காங்கிரஸில் தொடர்வதில் பொருளில்லை என நினைத்து அந்த இயக்கத்தைவிட்டு வெளியேறுகிறான்.
யுத்தத்தை முன்னிட்டு அரசுடன் ஒத்துழைக்கக்கூடாது என்கிற காந்தியடிகளின் சொல்லுக்கிணங்கி, எண்ணற்ற ஊழியர்கள் தாம் பணிபுரிந்த அமைப்புகளிலிருந்து வெளியேறிவிடுகின்றனர். வேறு வழியில்லாமல் அரசு நிர்வாகம் எல்லா நகரங்களிலும் ஏராளமான ஒப்பந்ததாரர்களை நியமித்து, அவர்கள் வழியாக எல்லா வேலைகளையும் செய்யவைக்க முனைகிறது. அரசு ஒப்பந்தம் என்பது அப்போது பொருளீட்டுவதற்கு மிகப்பெரிய வழியாக உருவாகிறது. பொருளீட்டும் எந்தவொரு வழியையும் விட்டுவிடக்கூடாது என்னும் எண்ணம் கொண்ட பரந்தாமனாருக்கு அந்தக் காண்ட்ராக்ட் வழியையும் விட மனமில்லை.
ஆனால் ஒரு காங்கிரஸ்காரராக அந்தக் காண்ட்ராக்டை தன் பெயரில் எடுத்தால் தனக்குக் களங்கம் நேரும் என தயக்கம் கொள்கிறார், அதனால் காங்கிரஸிலிருந்து வெளியேறிய செல்வத்துக்கு அந்த காண்ட்ராக்ட் கிடைக்கும்படி செய்கிறார். கிடைக்கும் லாபத்தில் இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்வதென்று பேசி முடிவெடுக்கிறார்கள். வாழ விரும்புகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, எதிலும் பட்டும் படாமலும் இருக்கவேண்டும் என்பதையும் மறந்தும்கூட மனச்சாட்சிக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பரந்தாமனார் சொல்வதை அமைதியாக ஏற்றுக்கொள்கிறான் செல்வம். சாந்தினியை அவனுக்குத் திருமணம் செய்துவைக்கிறார் பரந்தாமனார். பழைய இலட்சியவாத எண்ணங்களையெல்லாம் துறந்துவிட்டு இருவரும் தம் இல்வாழ்க்கையை இனிதே தொடங்குகிறார்கள்.
0
ரெளலட் சட்ட எதிர்ப்பு தொடங்கி தனிநபர் சத்தியாகிரகம் வரையிலான காலகட்டத்தைத் தன் நாவலில் சித்தரித்திருக்கிறார் விந்தன். காந்தியடிகளும் ஒரு பாத்திரமாக நாவலெங்கும் இடம் பெற்றிருக்கிறார். உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளும் சுருக்கமாக இடம்பெற்றிருக்கின்றன. உண்மை நிகழ்ச்சிகளுக்கிடையில் நாவலுக்குரிய சம்பவங்களைப் புனைந்திருக்கிறார் விந்தன். அதன் வழியாக இலட்சியவாதத்துக்கும் பிழைப்புவாதத்துக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் விந்தன்.
செல்வமும் பரந்தாமனாரும் இந்த நாவலின் முக்கியமான பாத்திரங்கள். தொடக்கத்தில் இலட்சியவாதியாக வாழ்க்கையைத் தொடங்கும் இளைஞனான செல்வம் இருபதாண்டுகால அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு மனம் கசந்து பிழைப்புவாதியாக மாற்றமடைகிறான். ஒரு துருவத்திலிருந்து தொடங்கும் அவன் வாழ்க்கை இன்னொரு துருவத்திற்குச் சென்று தேங்கி நின்றுவிடுகிறது.
பரந்தாமனாரிடம் எவ்விதமான குழப்பமும் இல்லை. தொடக்கம் முதல் அவர் பிழைப்புவாதியாகவே வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இலட்சியவாதம் என்பது ஒருமுறை தேவைக்காக அணிந்து கழற்றக்கூடிய ஆடை மட்டுமே. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் தனக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாற்றிக்கொள்கிறார். அது அவருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. நடைமுறைத் தந்திரங்கள் அறிந்த அவர் பொருளீட்டுவதற்கான எந்த வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை.
ஓர் இலட்சியத்தை நோக்கிய பயணம் என்பது ஓர் உயர்ந்த குறிக்கோளுக்காகப் பாடுபடுவதும் அப்பயணத்தில் ஏற்படும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவதுமாகும். அப்பயணத்தில் வெற்றி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். வெற்றியைவிட இலட்சியத்தோடு இருந்தோம் அல்லது இருக்கிறோம் என்கிற மனநிறைவே முக்கியமானது. இலட்சியவாழ்க்கை என்பது மனநிறைவை அளிக்கும் வாழ்க்கை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையைப் பயனுள்ள வழியில் வாழ்ந்தோம் என்கிற நிறைவு மிகமிக முக்கியம். அந்த நிறைவுக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவும் இல்லை.
ஓர் இலட்சியத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிறகு, அந்த இலட்சியம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலேயே நம்மை வடிவமைக்கிறது. ஒரு நல்ல இலட்சியவாதிக்குப் புற உலகம் என்பது எப்போதும் முக்கியமல்ல. அவனுக்கு அக உலகமே முக்கியம். அவனுக்கு அகம் மலரும் வாழ்க்கையை அளிக்கிறது இலட்சியவாதம். அந்த மலர்ச்சியின் அருந்தேனை ஒருமுறை அருந்தியவர்கள் வேறொரு விதமான வாழ்க்கையைப்பற்றி கனவில்கூட நினைக்கமாட்டார்கள்.
இலட்சியவாழ்க்கையால் அகம் மலர்ந்தவர்களுக்கு நிகராக அகம் மலராதவர்களும் இம்மண்ணில் இருக்கக்கூடும். அனைவரும் ஒத்த எண்ணமுடையவர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை. அவர்கள் எப்போதும் புற உலகத்தைக் கவனித்தபடி இருப்பார்கள். புற உலகம் தன்னைக் கவனிக்கும்படியான செயல்களைச் செய்ய நினைப்பார்கள். அந்த வெளிச்சத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.
அகமலர்ச்சிக்காக இலட்சியவாதியாக வாழ்பவனுடைய பார்வையோ, சிந்தையோ வேறு பக்கங்களில் ஒருபோதும் திரும்புவதில்லை. எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. எதற்காகவும் பெருமூச்சு விடுவதில்லை. எதை நினைத்தும் ஏக்கமுறுவதுமில்லை. அவனுடைய பயணம் எப்போதும் இலக்கை நோக்கிய பயணமாகவே அமைந்திருக்கும்.
துரதிருஷ்டவசமாக ஒருசில தருணங்களில் ஒருசில இலட்சியவாதிகள் தம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். தம்மைப் போன்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய மதிப்பு கிடைக்கவில்லை, கண்ணெதிரில் போலியாக வாழ்கிறவர்கள் எப்படியோ மதிப்பையும் மரியாதையையும் அடைகிறார்கள் என்னும் உண்மை அவர்களைக் கசப்பில் ஆழ்த்துகிறது. பல சமயங்களில் அந்த ஒப்பீடு அவர்களை நிலைகுலைய வைத்துவிடுகிறது. தொடங்கிய பயணத்தைத் திசைதிருப்பி பாதையையும் மாற்றிவிடுகிறது.
செல்வம் போன்ற இளைஞர்கள் இலட்சியவாதியாக வாழ்க்கையைத் தொடங்கி பிழைப்புவாதியாக மாறிவிடுகிறார்கள். பரந்தாமனார், குற்றாலலிங்கம் போன்றவர்கள் பிழைப்புவாதியாக வாழ்க்கையைத் தொடங்கி இடையிடையே இலட்சியவாதி என்னும் பாத்திரத்தை திறமையாக நடித்து வெற்றி பெற்று பிழைப்புவாதியாகவே வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.
இலட்சியவாத நோக்கங்களுடன் இயங்கத் தொடங்கிய காங்கிரஸ் என்னும் பேரியக்கம் இலட்சியவாதிகளுக்கு மட்டுமன்றி சந்தர்ப்பவாதிகளுக்கும் இடமளிக்கும் நிறுவனமாக ஏன் மாறியது, எப்படி மாறியது என்பதுதான் இந்த நாவலில் விந்தன் முன்வைக்கும் முக்கியமான கேள்வி. இரு விதமான மனிதர்களுக்கும் இடையில் நிலவும் வேறுபாடுகளை தேசம் தழுவிய இயக்கம் தன் கண்ணைத் திறந்து பார்க்குமா என்கிற ஆற்றாமையின் விளைவே இக்கேள்வி.
இந்தக் கேள்விக்குரிய விடை தெரியாதவரல்ல விந்தன். அவருக்கு அதற்கான விடை நன்றாகவே தெரியும். அந்த விடையைத்தான் நாவலைத் தொடங்கும் முன்னால் தாகூர் எழுதிய ஒரு வரியாக முன்னுரைக்குறிப்பில் அளித்திருக்கிறார் விந்தன். ‘தவறுகளை வெளியே நிறுத்திக் கதவைத் தாளிடுவாயானால், உண்மையும் வெளியே நின்றுவிடும்’ என்பதுதான் அந்தக் குறிப்பு.
காங்கிரஸைப்போன்ற ஒரு பேரியக்கம் சமுத்திரத்துக்கு நிகரானது. அந்தச் சமுத்திரத்தை நோக்கி ஓடிச் சென்று ஆறுகள் மட்டும் சங்கமமாவதில்லை. ஆறுகளுக்கு இணையாக சாக்கடைகளும் ஓடி அதே சமுத்திரத்தில்தான் சங்கமமாகிறது. ஆறுகளை ஏற்றுக்கொள்ளும் சமுத்திரம் சாக்கடைகளை நிராகரிப்பதில்லை. காங்கிரஸ் இயக்கத்தின் நிலையும் கிட்டத்தட்ட அதுதான்.
அனைத்தும் தெரிந்திருந்தும் சமூகத்தின் முன்னால் தன் படைப்பின் வழியாக இக்கேள்வியை விந்தன் ஏன் முன்வைக்கவேண்டும் என ஒருவர் நினைக்கலாம். ஒரு படைப்பில் மீண்டும் மீண்டும் கேள்விகளை முன்வைப்பது என்பது இச்சமூகத்தில் ஒருவித விழிப்புணர்ச்சியை உருவாக்கும் முயற்சி என்பதுதான் அதற்கான பதில். இலட்சியவாதிகளுக்கிடையே சந்தர்ப்பவாதிகளின் எண்ணிக்கை பெருகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வும் அதில் அடங்கியிருக்கிறது.
0

