Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

கடல் என்றுமே அழகானது, ஆழமானது. கடலில் பயணம் செய்வது என்பது எப்போதும் அலாதியானது. உலகை நோக்கிய மனிதனின் முதல் பயணமே கடல் வழிப் பயணமாகத்தான் இருந்திருக்கிறது. ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது ஔவையின் வாக்கு. மனித குல வரலாற்றில் வணிகத்தின் வளர்ச்சிக்குக் கடல் போக்குவரத்தின் பங்கு மிக முக்கியமானது. உலக வர்த்தகத்தில், மிக அதிக எடையுள்ள பொருட்களைக் குறைந்த செலவில் கொண்டுசெல்லக் கடல்வழிப் போக்குவரத்துப் பெரிதும் உதவுகிறது. மனித வாழ்வாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் கடலில் பயணம் செய்வது ஒருகாலத்தில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியால் கடல் பயணம் மிகவும் எளிதாகி உள்ளது.

கடலில் பயமில்லாமல் கப்பல் பயணம் செய்வதற்கு முக்கியக் காரணம் அதன் கேப்டன். ஏனென்றால் அவர்தான் கப்பலில் பயணம் செய்யும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்படுகிறார். அவசர காலங்களில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார். வானிலை, புயல் காலங்களில் கப்பலை எங்கு, எப்படி இயக்க வேண்டும் என்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கிறார். கப்பல் செல்ல வேண்டிய பாதையைத் திட்டமிடுகிறார். கடல்சார் சட்டங்கள் மற்றும் துறைமுக விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்கிறார். ஆனால் இப்படிப்பட்ட கப்பல் கேப்டனுக்கே வழிகாட்டியாகச் செயல்படுகிறவர்கள், ‘கப்பல் பைலட்’ என அழைக்கப்படுகிற கடல் வழிகாட்டி.

கடல்சார் துறைகளைச் சேர்ந்த இந்தக் கப்பல் பைலட் என்கிற பொறுப்பு, பொதுவெளியில் பெரிதும் அறியப்படாத ஒன்று. கப்பல் பைலட் என்பவர் ஒரு பெரிய கப்பலைத் துறைமுகம், நதி, கால்வாய் அல்லது குறுகிய நீர்வழிகளில் பாதுகாப்பாக வழிநடத்தும் நிபுணர் ஆவார். உள்ளூர் நீர்வழிகளின் ஆழம், மணல் மேடுகள், நீரோட்டம், அலைகள், வளைவுகள் போன்றவற்றை முழுமையாக அறிந்திருப்பவர் கப்பல் பைலட். எனவே கப்பல் துறைமுகத்தை அடையும்போதும், துறைமுகத்தை விட்டு வெளியேறும்போதும் அவர் கப்பலில் ஏறி கேப்டனுக்கு வழிகாட்டுவார். அப்படி இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் கப்பல் வழிகாட்டியாக இருப்பவர் ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி.

4 பிப்ரவரி1989 அன்று சென்னையில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் ரேஷ்மா. சிறுவயதிலிருந்தே கடலைப் பற்றிய ஆர்வம் இருந்தாலும், ஒரு கப்பல் வழிகாட்டியாக ஆக வேண்டும் என்றோ, கடல்சார் துறையில் சேர வேண்டும் என்றோ அவர் எண்ணியதில்லை. காரணம், கடல்சார் துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பது அப்போது அவருக்குத் தெரியாது. ஒருநாள் செய்தித்தாளில் ‘கேடட் ஸ்பான்ஸர்சிப் ப்ரோக்ராம்’, எனும் கல்வி உதவித் திட்டத்தின் விளம்பரத்தைப் பார்த்தார். டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஏ.பி. மோலர் மெர்ஷ்க் எனும் நிறுவனம்தான் அந்தத் திட்டத்தை அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்தில் தேர்வாகும் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதுடன் பயிற்சி முடிந்த பிறகு கப்பலில் பணியாற்றும் வாய்ப்பையும் அந்த நிறுவனம் வழங்கும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்காக ரேஷ்மா விண்ணப்பித்தார். 4000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த இந்தத் திட்டத்தில், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதித் தேர்வுகள் ஆகியவற்றில் வெற்றிபெற்றுத் தேர்வானார். மெர்ஷ்க் நிறுவனத்தின் உதவியுடன் சென்னை கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் கடல் தொழில்நுட்பத்தில் தொழில்முறை படிப்பை முடித்தார். இது கப்பல் இயக்கவியல், கடல்சார் சட்டங்கள், அவசரகால மீட்பு, வானிலை அறிவியல், கப்பல் பாதுகாப்பு போன்ற பாடத்திட்டங்கள் அடங்கிய படிப்பாகும். பின் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கடல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டமும் பெற்றார்.

படிப்பை முடித்த உடன் மெர்ஷ்க் நிறுவனத்தின் சர்வதேச சரக்கு கப்பல்களில் டெக் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். கப்பலை வழிநடத்தல், பாதுகாப்பு கண்காணிப்பு, சரக்குகளைக் கையாளுதல், கடல் வரைபடத்தைப் பயன்படுத்தி பயணத்துக்குத் திட்டமிடல் போன்ற பொறுப்புகளை அவர் மேற்கொண்டார். பல பயணிகள் மற்றும் கொள்கலன் கப்பல்களில் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். இந்த அனுபவமே அவர் கப்பல் பைலட்டாக ஆவதற்கு மிகவும் உதவியது. ஏனென்றால் கப்பல் பைலட்டாக வேண்டுமெனில் முதலில் பெரிய கப்பலில் பணியாற்றிய அனுபவம் அவசியம்.

சுமார் 2 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றியபின், 2011இல் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் பயிற்சி பைலட்டாக சேர்ந்தார். இது இந்தியாவின் முதல் முக்கிய நதி துறைமுகமாகும். இது கடலில் நேரடியாக இல்லாமல் ஹூக்ளி ஆற்றின் உள்பகுதியில் அமைந்துள்ளது. கப்பல்கள் இத்துறைமுகத்தை அடைய சுமார் 148 கி.மீ. தூரம் ஹூக்ளி ஆற்றின் குறுகிய வளைந்த நீர்வழியில் பயணிக்க வேண்டும். இந்தப் பாதையில் மணல் மேடுகள், வலுவான நீரோட்டம் மற்றும் சிக்கலான வளைவுகள் இருப்பதால் கப்பல் பைலட்டின் பங்கு மிகவும் முக்கியமானது. கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் சேர்ந்த அவர் ஒரு வருடம் கடலில் கேடட்டாகப் பணியாற்றி, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து 2வது மற்றும் 1வது துணை மாலுமி தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றார். பின் கிரேடு III பகுதி-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், அடுத்த 6 மாதங்களுக்குள் கிரேடு III பைலட்டாகத் தகுதிபெற்றார்.

தொடக்கத்தில் சிறிய கப்பல்களை மட்டும் கையாண்ட அவர், அனுபவம் வாய்த்த பிறகு கிட்டத்தட்ட 300 மீட்டர் நீளமும் 70,000 டன்களுக்கும் அதிகமான கொள்ளளவும் கொண்ட பனாமக்ஸ் போன்ற பெரிய கப்பல்களில் வழிகாட்டும் பணியைத் தொடங்கினார்.

ஆறரை ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பின் 2018இல் ஹூக்ளி ஆற்றின் சவாலான நீர்வழிகளின் வழியாக கொல்கத்தா துறைமுகத்திற்குக் கப்பல்களைச் செலுத்தும் முழுநேர மாலுமியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் கப்பல் பைலட் என்ற பெருமையைப் பெற்றார். இவர் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் மட்டுமல்ல; உலகிலேயே மிகச் சில பெண் நதிநீர் பைலட்டுகளில் ஒருவராகவும் திகழ்கிறார். அதுமட்டுமல்ல, பெண்கள் கடல்சார் துறையில் அதிக அளவில் வர வேண்டும் என்பதற்காக ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் செயல்படுகிறார்.

ஒருவிதத்தில் இந்தத் துறை மிகவும் ஆபத்தான துறையும்கூட. வானிலை மாற்றத்தின் காரணமாக, பல ஆபத்துகளைச் சந்திக்க நேரலாம். ஒருமுறை கப்பலிலிருந்து இறங்கும் சமயத்தில் மோசமான வானிலை காரணமாக ஒரு விபத்தில் சிக்கினார். பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரிய காயத்திலிருந்து தப்பினார். மற்றொரு முறை பலத்த காற்றால் 4 நாட்கள் நங்கூரமிட்டு கடலிலே காத்திருந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் பணியின்போது பாலினப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளார். ‘இது மிகவும் கடினமான வேலை, உன்னால் இதைச் செய்ய முடியாது’, என்பது போன்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளார்.

இவர் செய்த சாதனைகளுக்காக, கடல்சார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2016ஆம் ஆண்டு இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நாட்டின்100 சிறந்த சாதனைப் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய பெண்கள் விருதான ‘நாரி சக்தி புரஷ்கார்’ விருதையும் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட்டாக சாதனை படைத்ததற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.

கடல்சார் துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சர்வதேச கடல்சார் அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 18 மே 2023 அன்று ‘உலக கடல்சார் மகளிர் தினத்தை’ இந்த அமைப்பு அறிவித்துள்ளது. அதே 2023ஆம் ஆண்டு ஒரு தனித்துவமான அணுகுமுறையை இந்த அமைப்பு கையாண்டது. முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண் மாலுமிகளின் அன்றாட வாழ்க்கை, பின்னணி மற்றும் சாதனைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கியது. இந்த அமைப்பின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே இந்தியப் பெண் ரேஷ்மா.

ரேஷ்மாவின் சாதனை ஒரு தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; இந்தியாவில் கடல்சார் துறையில் பெண்களும் உயர்ந்த பொறுப்புகளை ஏற்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய முன்னோடி அவர். தான் முன்னேறியது மட்டுமல்லாமல், பிற பெண்களும் முன்னேற வேண்டும் என்று அவர்களுக்காகப் பாடுபட்டு வரும் ரேஷ்மாவின் முயற்சி காலத்தால் இன்றியமையாதது. உலகம் முழுவதும் சுற்றி வந்து சர்வதேச அளவில் புகழ் அடைந்தாலும், தன்னைப் பற்றி எல்லா மேடைகளிலும் ரேஷ்மா சொல்வது, ‘ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமை அடைகிறேன்’.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *