வ.உ.சி, திலகர், விபின் சந்தர் பால் ஆகியோரின் கைதுப் படலம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. சூரத் மாநாட்டிற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கழுகுப்பார்வை திலகர் பிரிவின் மேல் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. தேசியவாதக் கருத்துகளை ஆதரிக்காத நாளிதழ்கள்கூட வ.உ.சியின் சிறை தண்டனையைக் கடிந்து செய்திகள் வெளியிட்டன. இந்து, மதராஸ் மெயில் ஆகிய இதழ்களும் கலவர நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்தன.
தேசியத் தமிழ் நாளேடான சுதேசமித்திரன், நெல்லை எழுச்சி குறித்த ஆங்கில நாளிதழான மதராஸ் மெயில் வெளியிட்ட செய்திகளைத் தொடக்கத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது. பின்னர் தன் சொந்த நிருபர்கள்மூலம் நேரடிக் கள ஆய்வு மேற்கொண்டு செய்திகள் வெளியிட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, எழுச்சி நடந்த இடங்களில் 275 பேர் கொண்ட தண்டக்காவல் படைக்கான அறிவிப்பு, மார்ச் 18 அன்று வெளியானது. தண்டக்காவல் படை (Punitive Police Force) என்பது ஆயுதமேந்திய காவல் படையினர். அவர்களின் நோக்கம் அரசுக்கெதிரான கலகத்திற்குக் காரணமான மக்களில் ஒரு குழுவையோ முக்கிய நபரையோ தண்டிப்பதல்ல; மாறாக, போராட்டத்திற்கு உறுதுணையாயிருந்த கிராமம் மற்றும் நகர மக்களைக் கூட்டாகத் தண்டிப்பதே.
தண்டக்காவல் படையினர் ஆயுதமேந்தியபடி தெருக்களில் கூட்டம் கூட்டமாக ரோந்து செல்வர். ஊருக்குள் யாரும் கூட்டமாகச் சேர்ந்து நிற்க முடியாது. பொதுவெளியில் கூட்டம் நடத்த இயலாது. ஊரின் எல்லைக்குள் வேற்று ஆட்களுக்கு அனுமதி கிடையாது. அரசின் ஆள் பலத்தை, ஆயுத பலத்தை மக்களுக்குக் காண்பித்து அச்சங்கொள்ளச் செய்வதே அவர்களின் எண்ணம். இறுதியாகத் தண்டக்காவல் படையை நிர்வகிக்கும் மொத்தச் செலவையும் சம்பந்தப்பட்ட ஊர் மக்களிடமிருந்து வரி விதித்து வசூல் செய்வர்.
தண்டக்காவல் படைக்கான பேச்சு அடிபட்டதும் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் கே.ஆர்.குருசாமி ஐயர் அச்சம் கொண்டார். ஆரம்பம் முதலே வ.உ.சியின் தேசியவாதக் கொள்கையில் பிடிப்பில்லாத அவர், சுதேசிக் கருத்துகளால் கப்பல் வணிகத்தில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி ஆங்கிலேயர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டுமே என அஞ்சினார். ஏற்கெனவே வ.உ.சியைக் கப்பல் நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்ததில் இவரின் பங்கு மிக அதிகம். இந்நிலையில், கூடுதலாக இந்தத் தண்டக்காவல் படைக்கு வரி கட்ட வேண்டுமே என பயந்தார். இதனால் சில முக்கியப் பிரமுகர்களுடன் வின்ச்சை சந்திக்க முற்பட்டார். ஆனால் தன்னைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என அவர் மறுப்பு தெரிவித்ததால், அடுத்ததாக ஆளுநர் ஆர்தர் லாலியைச் சந்திக்க முயற்சிசெய்தார். அவர் முயற்சி வீணாகவில்லை. ஏப்ரல் 1ஆம் தேதி, ஐவர் குழுவுடன் ஆளுநர் லாலியை சென்னை சென்று சந்தித்தார்.
சந்திப்பில் வ.உ.சிமீது எவ்வளவு குற்றம் சுமத்த முடியுமோ அவ்வளவு சுமத்தினார். கலவரத்திற்கான முழுப் பொறுப்பையும் வ.உ.சியின் தலையில் கட்டினார். ‘வ.உ.சிதம்பரனாருக்குப் பின்னால் ஆதரவாய் இருப்பவர்கள் அனைவரும் படிப்பறிவு இல்லாதவர்களே. கோரல் மில் போராட்டத்தில் வ.உ.சியின் தூண்டுதலே மிக முக்கியமானது. சுதேசிக் கப்பல் நிர்வாகக் குழுவிலிருந்து பதவிநீக்கம் செய்தும் அவர் தொடர்ந்து அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்’ எனத் தெரிவித்தார். சுதேசிக் கப்பல் நிர்வாகத்திற்கும் கலகத்திற்கும் யாதொரு தொடர்புமில்லை என்றும் வாதிட்டார்.
மேலும் நெல்லை, தூத்துக்குடி மக்களிடையே எந்தவொரு எதிர்ப்புணர்வுமில்லை, வ.உ.சி போன்றோர் உணர்வைத் தூண்டும் வகையில் உரை நிகழ்த்தியதே மூலக்காரணமாக அமைந்தது எனக் கூறினார். ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் நோக்கிலேயே பேசினார். ஐவர் குழுவாகச் சென்றாலும், அங்கு இறுதிவரை பேசியதென்னவோ குருசாமி ஐயர் மட்டுமே.
அனைத்தையும் ஆர்தர் லாலி கேட்டு முடித்தார். ‘இந்தக் கிளர்ச்சிக்கு ஆதரவளித்த மக்கள், தண்டனை அனுபவித்தாக வேண்டும். இவர்கள் செய்த தவறுகளுக்கு மலபார், கோதாவரி, கஞ்சம் பகுதி மக்கள் ஏன் வரி கட்டவேண்டும்? வ.உ.சியைத் தடுக்காத முக்கியப் பிரமுகர்களும் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். பிரிட்டிஷ் அரசின் கருத்துச் சுதந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை’ என்று லாலி கூறியதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
எவ்வளவோ பேசிப்பார்த்தும் தூதுக்குழுவின் கோரிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை. அடிப்படையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞரான குருசாமி ஐயர், சட்டமன்ற உறுப்பினர், மிதவாதக் குழுவில் முக்கிய உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர். இந்த அனுபவங்களின் மொத்த சாரத்தை உபயோகப்படுத்தியும் எந்தப் பலனும் இல்லாமல் ஊர் திரும்பினர். மூக்குடைபட்ட தூதுக்குழுவை விமர்சிக்கும் வகையில், ‘திருநெல்வேலி தண்டப்போலிஸும் போலிப் பெரியமனிதரும்’ எனும் தலைப்பில் செய்தியை வெளியிட்டது சுதேசமித்திரன்.
18 மார்ச் 1908 அன்று நிறுவப்பட்ட தண்டக் காவல் படையை 6 மாதம் கழித்துக் கலைத்தனர். அதற்கு விதிக்கப்பட்ட தண்டத் தீர்வையின் மதிப்பு ரூ. 98,125. அந்த ஆண்டு நெல்லை நகராட்சியின் மொத்த வரித்தொகையே ரூ.68,279தான். ஏற்கெனவே செலுத்தி வந்த நகராட்சி வரியைவிட ஒன்றரை மடங்கு வரியை நெல்லை மக்கள் கூடுதலாகச் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். வரிவிதிப்பின் மூலம் மக்கள் தலையில் விழுந்த பொருளாதாரச் சுமை மக்களிடம் வெறுப்பையே அதிகரித்திருந்தது.
ஒருபுறம் நெல்லை மக்களைத் தண்டக்காவல் படை மூலம் அச்சுறுத்த ஆங்கிலேய அரசு இறங்கியிருந்த வேளையில், எழுச்சிக்குக் காரணமான வ.உ.சி பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். எழுச்சி நடந்த மறுநாள் காலை சிறை அதிகாரிகள் மூலமே எழுச்சி குறித்த தகவல்களைத் தோராயமாக அறிந்துகொண்டார். நெல்லைத் தெருக்கள் போர்க்களமாக மாறிவிட்டதாகவும், அரசாங்க அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். ஏதுமறியாத பொதுமக்களில் சிலர் ஆட்சியரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானது சிதம்பரனாரை மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாக்கியது.
அன்று மதியப் பொழுதில் குருநாதய்யர் கைது செய்யப்பட்டு சிறை வந்த பின்னரே எழுச்சி குறித்த மொத்தத் தகவல்களும் வ.உ.சிக்குக் கிடைத்தன. குருநாதய்யர் வ.உ.சியின் மகன் உலகநாதனை தூத்துக்குடிக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்த்திருந்தார். மக்களின் எழுச்சி ஆங்கிலேயர்களை அச்சமடையச் செய்ததை குருநாதய்யர் மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் குருநாதய்யர், பத்மநாப ஐயர், சிவா, வ.உ.சி ஆகியோரை இருட்டறையில் அடைக்கும்படி வின்ச் கூறியதை, அவர் மூலம் அறிந்துகொண்டார் வ.உ.சி. என்னதான் எழுச்சி நடந்தியிருந்தாலும் இடையே ஏற்பட்ட வன்முறையை வ.உ.சி ஆதரிக்கவில்லை. ஏற்பட்ட சேதத்திற்கும் மக்களைக் குறைகூறவில்லை.
இதற்கிடையே வ.உ.சியின் கைது சுதேசிக் கப்பலின் வணிகத்தைப் பெருமளவு பாதித்தது. என்னதான் சுதேசிக் கப்பல் நிர்வாகத்திலிருந்து, நிறுவனத்திற்கும் எழுச்சிக்கும் சம்பந்தமில்லை என விளக்கம் கொடுத்திருந்தாலும் ஆங்கிலேயர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் வ.உ.சியை மனதில் வைத்து மேலும் நெருக்கடிகளைக் கொடுத்துவந்தனர். விசாரணைக்காகப் பாளை சிறையில் வ.உ.சி இருந்த நேரத்திலேயே தனது முகவர் பதவியிலிருந்து விலகினார்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில், வ.உசியின் ராஜினாமா மட்டுமே கப்பல் கம்பெனியைக் காப்பாற்றும் என்கிற யோசனையை நிர்வாகத்தார் முன்வைத்தனர். அதனை சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் இயக்குநரும் சட்ட ஆலோசகருமான வெங்கு ஐயர் மூலம் அவர்கள் நிறைவேற்ற திட்டமிட்டனர். வெங்கு ஐயர் வ.உ.சி மதிக்கும் மனிதர்களுள் ஒருவர். அதுமட்டுமல்லாது சுதேசிக் கப்பல் நிர்வாகத்தில் சேர்ந்ததிலிருந்தே அவருக்கு ஏற்படும் ஆங்கிலேயர்களின் குடைச்சல்களுக்கு அஞ்சாமல் போராடும் மனிதர். ஆகவே இம்முறை சுதேசிக் கப்பல் நலனைக் கருத்தில்கொண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் வ.உ.சி. இதற்காக அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தின் வரிகள் இதோ.
‘நான் இப்போது சிறையில் இருக்கிறேன். நாளை என்ன நிகழப்போகிறது என்பதை நான் அறியேன். எனவே, இதுவரை நீங்கள் என்மீது காட்டிய அன்பையும் அனுதாபத்தையும் இனி நமது கப்பல் நிறுவனத்தின் மீது செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதைப் பங்குதாரர்களின் பொருளாதார நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு வணிக முயற்சியாக மட்டும் கருதாதீர்கள். மாறாக, இந்த நிறுவனத்தை நம் தெய்வீக அன்னை பாரதமாதாவின் இருப்பிடமாகவும் புனிதத்தலமாகவும் கருதி, பிள்ளைப்பாசத்துடனும் தேசபக்தியுடனும் இந்நிறுவனத்திற்காகப் பணியாற்றுங்கள்.
அந்நியர்களின் சதித்திட்டங்களை முறியடித்து இந்த நிறுவனம் வெற்றிபெற்றால், அது வெறும் பங்குதாரர்களின் வெற்றியாக இருக்காது; அன்னை பாரதத்திற்கான சுயராஜ்ஜியத்தின் வெற்றியாக அமையும்.
வெளிநாட்டவர்களின் போட்டியை வென்று நமது நிறுவனம் இலாபம் ஈட்டினால், அது வெறும் பண இலாபம் மட்டுமல்ல. சுதந்திரம், விடுதலை போன்ற நமது தேசியப் பண்புகளை மீட்டெடுத்து நமது தேசத்திற்கான தார்மீக வெற்றியாகவும் அமையும்.’
சுதேசிக் கப்பல் நிர்வாகத்திலிருந்து விலகுதல் என்பது வ.உ.சிதம்பரனாருக்கு எத்தகைய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை இக்கடிதத்தின் வாயிலாக அறியலாம். சுதேசிக் கப்பல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டபடி வ.உ.சி ராஜினாமா செய்திருந்தும் கப்பல் கம்பெனியைப் பின்னாளில் காப்பாற்ற முடியாமல் போனது வ.உ.சிக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
(தொடரும்)

