தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ். இராமையா என்கிற வத்தலகுண்டு இராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாகப் பள்ளியில் நான்காவது படிவம் வரை மட்டுமே படித்தார். படிப்பை நிறுத்திய பின்னர் ஏறத்தாழ பத்தாண்டு காலம் வெவ்வேறு ஊர்களில் துணிக்கடை விற்பனையாளராகவும் உணவு விடுதிப் பணியாளராகவும் பணிபுரிந்தார்.
நாடெங்கும் பல இளைஞர்களை ஈர்த்த காந்தியடிகளின் அகிம்சைவழிப் போராட்டம் இராமையாவையும் ஈர்த்தது. ஆங்காங்கே நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலருடைய கருத்துகளைத் தெரிந்துகொண்டார். 1930ஆம் ஆண்டில் காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகம் தேசமெங்கும் ஒரு பேசுபொருளாக இருந்தது. அச்சமயத்தில் அவர் மேற்கொண்ட தண்டி யாத்திரையைப்போலவே தமிழகத்தில் ராஜாஜி வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அப்போராட்டத்தில் இராமையாவும் கலந்துகொண்டார். திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரைக்கும் தொண்டர்கள் நடந்துசென்று கடற்கரையில் உப்பு காய்ச்சி தம் எதிர்ப்பைப் புலப்படுத்தினர். காவல்துறையினர் அத்தொண்டர்களைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இராமையாவுக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது. சிறைச்சாலையில் வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் போன்றோரின் அறிமுகமும் நட்பும் இராமையாவுக்குக் கிடைத்தன. அதன் விளைவாக, தண்டனைக்காலம் முடிந்து விடுதலையடைந்ததும் இராமையாவுக்குக் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதராடைகளை மூட்டையாகக் கட்டி தோளில் சுமந்து சென்று விற்பனை செய்தார். விலை குறைந்த சுதந்திர இயக்கப் புத்தகங்களையும் விற்றார். காந்தியடிகளின் நிர்மாணப் பணிகளில் ஆர்வம் கொண்ட இராமையா தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு போன்ற நகரங்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்களை அமைத்தார்.
1932இல் சென்னைக்குத் திரும்பிய இராமையா இனி இயக்க வேலைகளைக் குறைத்துக்கொண்டு எழுத்து முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்கிற முடிவை எடுத்தார். அவருடைய நண்பர் சங்கு சுப்பிரமணியத்தின் தூண்டுதலால் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். அதுதான் அவர் எழுதிய முதல் சிறுகதை. ‘மலரும் மணமும்’ என்கிற அக்கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்டபோது, அவ்விதழுக்கு விளம்பர சேகரிப்பாளராக இராமையா பணிபுரிந்தார். சமூக, அரசியல் கட்டுரைகளுக்கு நடுவில் அவ்வப்போது அவர் எழுதிய பல சிறுகதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகளும் மணிக்கொடி இதழில் வெளிவந்தன. மெல்ல மெல்ல அனைவருடைய கவனத்துக்கும் உரிய எழுத்தாளராக அவர் மலர்ந்தார்.
மணிக்கொடியின் இரண்டாவது காலகட்டம் என்று குறிப்பிடப்படுகிற 1935-1938 ஆண்டுகளில் மணிக்கொடி இதழில் ஆசிரியராக இராமையா பொறுப்பேற்றார். அவருடைய காலகட்டமே தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு வலிமையான தொடக்கத்தை உருவாக்கிக்கொடுத்தது. புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மெளனி, சிதம்பர சுப்பிரமணியன், தி.ஜ.ர., க.நா.சு, எம்.வி.வெங்கட்ராம், சி.சு.செல்லப்பா உள்ளிட்ட பல ஆளுமைகள் இக்காலத்தில் மணிக்கொடியில் எழுதி சிறப்பு சேர்த்தனர்.
இந்தக் காலத்தில் இராமையா மட்டுமே நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். மணிக்கொடி நின்ற பிறகு சுதேசமித்திரன், காந்தி, கலைமகள், ஆனந்த விகடன் எனப் பல இதழ்களிலும் இராமையாவுடைய சிறுகதைகள் வெளிவந்தன. சிறுகதைகள் மட்டுமன்றி இராமையா சீரான இடைவெளியில் நாவல்களையும் நாடகங்களையும் எழுதினார். அவர் எழுதிய நந்தாவிளக்கு குறிப்பிடத்தக்க நாவல்.
பிற எழுத்தாளர்களைப்போல அவரும் திரைத்துறையின்பால் கவர்ந்திழுக்கப்பட்டார். பூலோகரம்பை, மணிமேகலை, மதனகாமராஜன், சாலிவாகனன் எனப் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். அவர் எழுதிய பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள் ஆகிய நாடகங்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியிருந்தாலும் புத்தக வடிவில் ஐந்து தொகுதிகள் மட்டுமே வெளிவந்தன. புதுமைக்கோயில் என்னும் சிறுகதைத் தொகுதியை மலர் நிலையம் என்னும் பதிப்பகம் 1954ஆம் ஆண்டில் வெளியிட்டது.
0
பி.எஸ். இராமையா எழுதிய முதல் சிறுகதையின் தலைப்பு மலரும் மணமும். அதே தலைப்பிலேயே அவருடைய முதல் சிறுகதைத் தொகுதியும் 1944ஆம் ஆண்டில் வெளிவந்தது. தனித்தனியாக சிறுகதைகள் வெளிவருவதற்கும் அவை நூல் வடிவம் பெறுவதற்கும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழலே அன்று நிலவியிருக்கிறது. அடுத்து பத்து ஆண்டுகள் கழித்து 1954ஆம் ஆண்டில்தான் மலர் நிலையம் வெளியீடாக அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதியாக ‘புதுமைக்கோயில்’ வெளிவந்தது.
இத்தொகுதியில் பதினோரு சிறுகதைகள் உள்ளன. 1933 முதல் 1954 வரை 22 ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய சிறுகதைகளிலிருந்து அவரே தேர்ந்தெடுத்து இத்தொகுதியைத் தயாரித்திருக்கிறார். தாம் எழுதிய கதைகளில் மனிதர்களுக்கும் தெய்வத்துக்கும் இடையிலான உறவு சார்ந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து இத்தொகுதியை உருவாக்கியிருப்பதாக அத்தொகுதியின் முன்னுரையில் இராமையா குறிப்பிட்டிருக்கிறார். புதுமைக்கோயில் என்னும் சிறுகதை 1934ஆம் ஆண்டில் காந்தி என்னும் இதழில் வெளிவந்தது.
புதுமைக்கோயில் சிறுகதையின் முக்கிய பாத்திரம் ரோஹிணி என்கிற சிறுமி. சோமசுந்தரம் என்னும் செல்வந்தரின் மகள். நான்கு பக்கங்களிலும் தோட்டங்கள் சூழ்ந்த பெரிய வீட்டில் அவர்கள் வசித்து வருகிறார்கள். ஒருநாள் அவளுடைய வீட்டுக்கு ஒரு வண்டி நிறைய விறகுக்கட்டை வந்து இறங்குகிறது. சிறிது நேரம் கழித்து முனியன் என்னும் தொழிலாளி வருகிறான். விறகுகளையெல்லாம் வெட்டி சிறு துண்டுகளாக்கி பின்கட்டில் அடுக்கிவைக்குமாறு அவனிடம் சொல்கிறார் சோமசுந்தரம். முனியன் வீட்டிலிருந்து கோடாலி எடுத்துவந்து விறகுகளை வெட்டத் தொடங்குகிறான்.
முனியன் விறகு வெட்டுவதை வேடிக்கை பார்த்தபடி நிற்கிறாள் ரோஹிணி. கோடாலியால் விறகு பிளந்து துண்டாவதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருக்கிறது. ரோஹிணிக்கு அவனுக்கு அருகில் சென்று அந்தக் கோடாலியைத் தொட்டுப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. வாசலிலிருந்து இறங்கிச் செல்ல நினைத்த சமயத்தில் அவளுடைய அம்மா வந்து அவளைத் தடுத்து சாப்பிடுவதற்கு அழைத்துச் செல்கிறாள். அப்போதுகூட அவளுடைய பேச்சு முனியனைப் பற்றியதாகவும் அவன் விறகு வெட்டுவதைப் பற்றியதாகவும் இருக்கிறது. சாப்பிட்ட பிறகு வாசல் திண்ணையோரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறாள் ரோஹிணி.
அன்று வெள்ளிக்கிழமை. ரோஹிணியின் தாயார் அவளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறாள். கொட்டும் மேளமும் முழங்குகிறது. தீப ஆராதனை நிகழ்கிறது. எல்லோரும் சேர்ந்து ‘அரஹரா அப்பனே’ என முழங்குகிறார்கள். தமக்கு முன்னால் நீட்டப்பட்ட தீபத்தட்டை அனைவரையும்போல ரோஹிணியும் தொட்டு கண்களில் ஒத்திக்கொள்கிறாள். அங்கு வரிசையில் நின்று வணங்கிய கூட்டத்தில் அப்பாவோ முனியனோ ஏன் இல்லை என்னும் கேள்வி அவள் மனத்தில் தோன்றுகிறது. வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவிடம் அக்கேள்வியைக் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறாள்.
வீட்டில் சோமசுந்தரம் விளக்கடியில் அமர்ந்து ஏதோ கணக்கு எழுதியபடி உள்ளார். அவரிடம் சென்று கோயிலுக்கு வராததன் காரணத்தைக் கேட்கிறாள். கணக்கெழுதும் வேலை இருந்ததால் வர இயலாமல் போய்விட்டது என்று சொல்கிறார் அவர். சிறிது நேரம் கழித்து முனியன் ஏன் வரவில்லை என்று கேட்கிறாள். அந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் சோமசுந்தரம் தடுமாறுகிறார்.
சாஸ்திரங்களையும் சாதி அமைப்புக் கட்டுப்பாடுகளையும் சொல்லும் வழி அறியாமல் தடுமாறுகிறார். பிறகு பொதுவாக ‘அவன் தீண்டத்தகாதவன். அதென்னமோ பெரியவர்கள் அவனைக் கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறார்கள்’ என்று அக்கணத்தில் தோன்றியதைச் சொல்லிச் சமாளிக்கிறார். ஆனால் ரோஹிணியின் நெஞ்சில் அந்தப் பதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அன்று இரவு முழுதும் அப்பா சொன்ன பதிலைப்பற்றியே யோசித்தபடி இருக்கிறாள்.
அடுத்த நாள் காலையில் முனியன் முதல்நாள் வேலையின் தொடர்ச்சியாக மீண்டும் விறகு வெட்ட வருகிறான். ரோஹிணி தோட்டத்தின் இன்னொரு மூலையில் சுள்ளிகளையெல்லாம் சேகரித்து ஒரு கோபுரம் போல அடுக்கிவைக்கிறாள். கிட்டத்தட்ட அது ஒரு கோயில் கோபுரம்போல காட்சியளிக்கிறது. வீட்டுக்குள் சென்று தன்னுடய கண்ணன் பொம்மையை எடுத்துவந்து அந்தக் கோபுரத்துக்கு நடுவில் வைக்கிறாள். வேலையை எல்லாம் முடித்துவிட்டு சற்றே தள்ளிவந்து நின்றுகொண்டு அக்கோபுரத்தைப் பார்க்கிறாள். ஏதோ ஒரு கோணத்தில் அந்தத் தோற்றம் அவளுக்கு மனநிறைவை அளிக்கவில்லை. உடனே அக்கோபுரத்தை அவளே கலைத்துவிடுகிறாள்.
தோட்டத்தில் வேறு எந்த இடத்தில் தன் கோவிலைக் கட்டலாம் என சுற்றிச்சுற்றி வருகிறாள். விறகு வெட்டும் முனியனையே ஒரு கணம் நின்று பார்க்கிறாள். கிட்டத்தட்ட எல்லாக் கட்டைகளையும் அவன் வெட்டி முடித்துவிட்டான். கடைசி கட்டையைத்தான் அவன் வெட்டத் தொடங்கியிருக்கிறான். எதிர்பாராத விதமாக உயரத்தில் ஓங்கிய கோடாலி கைப்பிசகாக அவன் கால்மீது விழ இருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தரையில் பதிகிறது. கடவுள்தான் முனியனுடைய காலைக் காப்பாற்றினார் என்று ரோஹிணி மனசுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.
விறகு வெட்டும் வேலை முடிந்ததும் முனியன் கோடாலியை வைத்துவிட்டு வருவதற்காகத் தன் வீட்டுக்குச் செல்கிறான். முனியனின் கால்மீது விழ இருந்த வெட்டு விழாதபடி நிலத்தில் பதிந்த இடமே தன் கோவிலைக் கட்டப் பொருத்தமான இடம் என அச்சிறுமிக்குத் தோன்றுகிறது. உடனே வேகவேகமாக அந்த இடத்தில் சுள்ளிகளைக் குவித்து கோபுரத்தைக் கட்டியெழுப்பி, அதற்கிடையில் கண்ணன் பொம்மையை வைக்கிறாள். அது அவள் கண்களுக்குக் கோவிலாகக் காட்சியளிக்கிறது.
உடனே வீட்டுக்குள் சென்று சோமசுந்தரத்தை அழைத்துவந்து தன் புதிய கோவிலைக் காட்டி மகிழ்கிறாள். தன் கோவில் முன்னால் நின்று வணங்கும்படிக் கேட்டுக்கொள்கிறாள். கூலி வாங்குவதற்காக நின்றிருக்கும் முனியனையும் அழைத்து வணங்கச் செய்யுமாறு சோமசுந்தரத்திடம் கேட்டுக்கொள்கிறாள். சோமசுந்தரத்தின் நெஞ்சில் ஒருகணம் ஆத்திரம் பொங்குகிறது.
ஆனால் மறுகணமே மகளின் முகத்தைப் பார்த்ததுமே அடங்கிவிடுகிறது. மகளின் விசாலமனத்தை நினைத்துப் பெருமைகொள்கிறார். நீண்ட மனப்போராட்டத்துக்குப் பிறகு கடைசியில் ரோஹிணியின் கோரிக்கையை ஏற்று அவள் கட்டியெழுப்பிய புதுமைக்கோயிலுக்கு முனியனையும் அழைத்துச் சென்று வணங்குகிறார். சிறுமி கட்டிய கோவில் முன்னால் சோமசுந்தரமும் முனியனும் ஒருசேர நின்று இறைவனை வணங்குகிறார்கள்.
‘கொத்தனார் கோவில்’ என்பது இத்தொகுதியில் உள்ள மற்றொரு சிறுகதை. நாட்டுப்புறக் கதையொன்றின் சாயலில் இச்சிறுகதையை எழுதியிருக்கிறார் இராமையா. முதன்முதலாக மின்சார வசதியைப் பெற்றிருக்கும் கிராமத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல வந்த அயலூர்க்காரனுக்கு உள்ளூர்க்கார பெரியவர் ஒருவர் சொல்வதுபோன்ற அமைப்பில் அக்கதையை எழுதியிருக்கிறார் இராமையா.
நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை என்றுதான் அந்தப் பெரியவர் தொடங்குகிறார். மைசூர் ராஜ்ஜியத்திலிருந்து ஒரு பெரிய படை பாண்டியநாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாக ஒரு தகவல் வருகிறது. உடனே பாண்டிய நாட்டில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் பதற்றம் பெருகுகிறது. ஒற்றர்கள் வழியாக செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட அரசாங்க அதிகாரி தம் படை பலத்தை அதிகரிக்கும் பொருட்டு குறுகிய நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் வாள்களைத் தயாரிக்க முற்படுகிறார்.
அக்காலத்தில் பெரியகுளத்துக்கு அருகிலிருந்த கிராமத்தில் வசித்துவந்த செங்கண்ண ஆச்சாரி என்கிற எழுபது வயதுக் கிழவர்தான் படைக்கலன்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர். அவர் செய்துகொடுக்கும் வாளினால் வைரம் பாய்ந்த மரத்தையும் வெட்டலாம், கரும்பாறையையும் வெட்டலாம் என்று சொல்வதுண்டு. அரசாங்க அதிகாரி அந்தக் கிராமத்துக்கு வந்து வாள்களை வடித்துக்கொடுக்கும் பொறுப்பை அந்த ஆச்சாரியிடம் ஒப்படைக்கிறார்.
இரவும் பகலும் ஓய்வின்றி ஆச்சாரி உலைக்களத்தில் உழைத்தபடி இருக்கிறார். வடித்துவைத்த வாள்களின் ஒரு பகுதியை மதுரைக்கு அனுப்பிவைக்கிறார் அதிகாரி. அடுத்த பகுதியை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்வதற்குள் கொங்கு நாட்டுப் பகுதியிலிருந்து கொள்ளைக்காரர்கள் கூட்டமொன்று அந்தக் கிராமத்தின் பக்கமாக வருவதாகச் செய்தி கிடைக்கிறது. அவர்கள் கொள்ளைக்காரர்கள் மட்டுமல்ல, கிராமங்களில் இரவு நேரத்தில் புகுந்து சூறையாடி மக்களைச் செயலற்றவர்களாக்கி, எதிரிப்படைகள் அக்கிராமங்களை வசப்படுத்திக்கொள்ள வழிசெய்து கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
அந்தக் கிராமத்தில் சொக்குப்பிள்ளை என்னும் செல்வந்தர் வசித்துவருகிறார். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாத் திசைகளிலும் சென்று வணிகம் செய்து சம்பாதித்த செல்வத்தைப் பொன்னாக மாற்றி வீட்டில் சேமித்து வைத்திருக்கின்றனர். ஏறத்தாழ எட்டாயிரம் வராகன் மதிப்புள்ள தங்கம் அக்குடும்பத்தில் இருக்கிறது. அதனால் கொள்ளைக்காரர்கள் பற்றிய செய்தி அவர்களுக்கு அச்சமூட்டுகிறது. அந்தக் கிராமத்தில் அம்மன் கோவிலொன்றும் இருக்கிறது. அம்மனுக்குச் சொந்தமாக ஏராளமான நகைகளும் வைரமுடியும் நவரத்தின மாலையும் இருக்கின்றன.
சொக்குப்பிள்ளை வீட்டில் கிராமத்தினர் அனைவரும் கூடிப் பேசுகிறார்கள். பரமசிவக் கொத்தனார் என்பவரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். சொக்குப்பிள்ளையின் சொத்து, கோயில் சொத்து, ஆயுதங்கள் எல்லாவற்றையும் தான் காப்பாற்றிக் கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார். அதற்காக அவர் ஒரு திட்டம் தீட்டி வேகவேகமாகச் செயல்படுத்துகிறார்.
அவருடைய திட்டப்படி ஊரார் அனைவரும் திரண்டு சென்று ஊர் எல்லையில் மிகப்பெரிய பள்ளமொன்றை வெட்டுகிறார்கள். தங்கமும் ஆபரணங்களும் நிறைந்த குடங்களை அப்பள்ளத்தில் வைத்து மண்ணைப் போட்டு மூடுகிறார்கள். அதற்குப் பிறகு, ஊரின் எல்லையில் இருந்த ஐயனார் கோவிலை அப்படியே பெயர்த்துக்கொண்டுவந்து அந்தப் பள்ளத்தின்மீது நிறுவிவிடுகிறார் கொத்தனார். ஐயனார் குதிரை அந்தச் சொத்துக்கு மேலே காவலாக நின்றிருக்கிறது.
ஊரின் மற்றொரு எல்லையில் இருந்த கிணற்றில் பாறைகளையும் மண்ணையும் கொட்டி அரைமட்டத்துக்கு மூடுகிறார்கள். பிறகு அனைத்து ஆயுதங்களையும் எண்ணெய் பூசிய துணிகளில் சுற்றி பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து கிணற்றில் இறக்கி அடுக்கிவைக்கிறார்கள். சொக்குப்பிள்ளைக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை இடித்து உத்தரக்கட்டைகளைக் கொண்டுவந்து கிணற்றின் அகலத்துக்கு அறுத்து மூடிவிடுகின்றனர். அதன்மீது கல்லையும் மண்ணையும் பரப்பி கிணறு இருந்த தடத்தையே மறைத்துவிடுகின்றனர். இறுதியாக ஆற்றங்கரையில் இருந்த பிள்ளையாரைக் கொண்டுவந்து அதன் மீது நிறுவி அதையும் ஒரு கோவிலாக மாற்ற முனைகிறார்கள்.
இன்னும் கொஞ்சம் கற்களை அடுக்கும் வேலை மீதமிருந்த நிலையில் பொழுது சாய்ந்துவிடுகிறது. இன்னும் தாமதித்தால் அனைவருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் கொத்தனார் அனைவரையும் அக்கணமே கிராமத்தைவிட்டு வெளியேறுமாறு கட்டளையிடுகின்றார். தான் ஒருவனே தனித்து நின்று எஞ்சிய வேலையை முடித்துவிட்டு தப்பித்துவருவதாக வாக்களித்து அனைவரையும் அனுப்பிவைக்கிறார். வேறு வழியின்றி அனைவரும் கிராமத்திலிருந்து வெளியேறி உயிர் தப்புகின்றனர்.
கொத்தனார் அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் கொள்ளைக்காரர்கள் தீவட்டிகளுடன் வரவும் சரியாக இருக்கிறது. கிராமம் முழுக்க அலைந்தும் ஒரு பொருளும் கிடைக்காத வெறியில் கொள்ளைக்காரர்கள் கொத்தனாரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தத் தொடங்குகின்றனர். ஆயுதங்களும் செல்வமும் இருக்குமிடத்தைத் தெரிவிக்கும்படி கட்டளையிடுகின்றனர். எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ளும் அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்கிறார்.
கோபம் கொண்ட கொள்ளைக்காரர்கள் கொத்தனாருடைய கைகால்களைக் கட்டி ஆடுமாடுகளைத் தொங்கவிடுவதுபோல தொங்கவிட்டு, அடியில் கட்டைகளைப் போட்டு தீமூட்டுகிறார்கள். முதல்நாள் இரவு வேளையில் தொடங்கிய சித்திரவதை மறுநாள் நடுப்பகல் வரை நீண்டுபோகிறது. ஆயினும் கொத்தனார் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஐயனார் கோவிலையும் பிள்ளையார் மேட்டையும் கொள்ளைக்காரர்கள் சந்தேகிக்கவே இல்லை.
நடுப்பகலுக்குப் பிறகு சோழவந்தானிலிருந்து பாண்டிய நாட்டின் படைகள் அக்கிராமத்தை வந்தடைகிறார்கள். படையின் வருகையை உணர்ந்துகொண்ட கொள்ளைக்காரர்கள் கூட்டம் உடனடியாக அந்தக் கிராமத்திலிருந்து தப்பியோடத் தொடங்குகிறது. குற்றுயிரும் குலையுயிருமாகத் தொங்கிக்கொண்டிருந்த கொத்தனாரைப் படைவீரர்களும் கிராமத்தினரும் காப்பாற்றுகிறார்கள். ஆயினும் அதிகநேரம் அவர் உயிர்த்திருக்கவில்லை. நடந்த செய்திகளை அனைவரிடமும் தெரிவித்துவிட்டு உயிர்துறந்துவிடுகிறார்.
கொள்ளைக்காரர்கள் ஊரையே நாசம் செய்திருந்தாலும் கோவில்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கொத்தனாரின் மதிநுட்பத்தை கிராமத்தினர் நன்றியுணர்வுடன் பாராட்டி மகிழ்கிறார்கள். கொத்தனார் கொடுமைப்படுத்தப்பட்ட இடத்திலேயே அவரை அடக்கம் செய்து அவருக்குக் கோவிலொன்றைக் கட்டுகிறார்கள். அவரையே கிராமத்துக் காவல் தேவதையாகப் பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்குகிறார்கள்.
பொதுநலம் விரும்பும் ஒரு மனிதரைப்பற்றிய சித்திரத்தை கொத்தனார் கோவில் சிறுகதை வழியாக வழங்கிய இராமையா தன்னலத்திலேயே திளைத்திருக்கும் விசித்திரமான மனிதரொருவரை ‘முள்ளிப்பளையம் மொட்டைக்கோபுரம்’ என்னும் சிறுகதையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவர் பெயர் சதாசிவ ஐயர். வழக்கறிஞர். முள்ளிப்பாளையம் என்னும் கிராமத்தில் பிறந்து மதுரையிலும் சென்னையிலும் படித்து மதுரையில் தொழில் செய்கிறார். ஏதோ ஒரு வழக்கு தொடர்பாக கல்கத்தாவுக்குச் சென்று ஒரு பெரிய வக்கீலை அழைத்துவந்து வெற்றி பெற்றதால் மக்களால் ‘கல்கத்தா வக்கீல்’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய செல்வாக்கின் காரணமாக அவருடைய கிராமத்தின் மதிப்பு உயர்கிறது. ஜில்லா போர்டு வழியாக அக்கிராமத்துக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றன.
அந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட முள்ளிநாதர் ஆலயம் இருக்கிறது. அக்கோவிலுக்கு முன்னால் இருந்த கோபுரம் இடிந்து விழுந்துவிட்டது. கோவிலுக்கு எதிரில் உள்ள அக்கிரகாரத்தில்தான் சதாசிவ ஐயரின் வீடு இருக்கிறது. ஏதோ ஒருநாள் ஊர்க்காரர்களோடு உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் மொட்டைக்கோபுரம் பற்றிய பேச்சு வருகிறது. கோபுரத்தை நல்லவிதமாகக் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் செய்துவைப்பதாக வழக்கறிஞர் அவர்களிடம் வாக்களித்துவிடுகிறார். தன் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அப்படிச் சொன்னாரே தவிர, உள்ளூர அப்படிச் செலவு செய்வதில் அவருக்கு விருப்பமில்லை.
நீண்ட நேர யோசனைக்குப் பிறகு சதாசிவ ஐயர் தன் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் அதே சமயத்தில் செலவு கையைக் கடிக்காமல் இருப்பதற்காகவும் ‘முள்ளிநாதர் ஆலயப் புனருத்தாரனத் திருப்பணி லாட்டரி’ ஒன்றைத் தொடங்கவும் ஒரு திட்டம் வகுக்கிறார். ஒரு சீட்டு ஒரு ரூபாய் வீதம் ஒரு லட்சம் சீட்டு அச்சிடுவதென்றும் ஆறு மாத காலத்தில் விற்பனையான சீட்டுகள் போக எஞ்சியிருக்கும் சீட்டுகளைத் தானே பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக மக்களிடம் தெரிவிக்கிறார். விற்பனைத்தொகையில் 50,000 ரூபாயைத் திருப்பணித்திட்டத்துக்கு ஒதுக்கிவைத்துவிட்டு எஞ்சிய பணத்தைப் பரிசுச்சீட்டில் வெற்றி பெற்றவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவருடைய திட்டம். அனைவரும் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
பரிசுச்சீட்டை ஊர்மக்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். ஆறாம் மாத இறுதியில் தம் பங்காக எத்தனை சீட்டுகள் எஞ்சும் என்பது தெரியாதவரைக்கும் தன் குடும்பத்தினர் ஒருவரும் பரிசுச்சீட்டு வாங்கக்கூடாது என சதாசிவய்யர் தடுத்துவிடுகிறார். இதற்கிடையில் அவருடைய மகள் பிரசவத்துக்காகத் தாய்வீட்டுக்கு வந்து சேர்கிறாள். அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்த அவளுடைய கணவனுக்குப் பரிசுச்சீட்டுமீது ஆசை வந்துவிடுகிறது. ஆயினும் மாமனாரின் கட்டளை அவனைத் தடுத்துவிடுகிறது.
குலுக்கலுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் நாளுக்குள் தமக்கு மகன் பிறந்துவிடுவான் என்பதால் அவனுக்குச் சூட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்துவைத்திருக்கும் பெயரில் சீட்டு வாங்கினால் ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்றும் அவன் மனம் திட்டமிடுகிறது. அதனால் ஊருக்குப் புறப்பட இருக்கும் கடைசிநாளன்று மாமனார் வீட்டினருக்குத் தெரியாமல் செளந்திரராஜன் என்னும் பெயரில் ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறான்.
நான்கு மாத காலத்திலேயே மொத்த பரிசுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. தன் பங்காக ஒரு ரூபாய்கூடச் செலவாகாமல் திருப்பணி நடக்கவிருப்பதை நினைத்து சதாசிவய்யர் உள்ளூர மகிழ்ச்சியடைகிறார். அதனால் ஆறாவது மாத இறுதியில் நடக்கவிருந்த குலுக்கலை இரண்டு மாதங்கள் முன்னாலேயே நடத்தவேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. ஊரார் முன்னிலையில் குலுக்கல் நடைபெறுகிறது. முதல் பரிசுக்குரிய எண் அறிவிக்கப்படுகிறது. அந்த ஊரார் ஒருவருடைய கையிலும் அப்படிப்பட்ட சீட்டே இல்லை. அடுத்தநாள் சீட்டை விற்பனை செய்தவர் செளந்திரராஜன் என்கிற பெயருக்கு விற்றதாகத் தெரிவிக்கிறார். சதாசிவய்யரின் மருமகன்தான் அந்தப் பெயரில் சீட்டு வாங்கிச் சென்றார் என்கிற விவரத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.
குழந்தை இன்னும் பிறக்கவில்லை என்பதால் பரிசுத்தொகையை எப்படிப் பெறுவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அக்கிரகாரத்தில் சதாசிவய்யருக்கு எதிரான ஒரு தரப்பு விரைவிலேயே உருவாகிவிடுகிறது. உயிரோடு இருப்பவர்கள் பெயரில்தான் சீட்டு வாங்கப்பட வேண்டும் என விதி இருக்கும்போது இந்தப் பெயருக்குப் பரிசுத்தொகை கொடுக்கக்கூடாது என அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள். செலவில்லாமல் புகழ்பெற நினைத்த சதாசிவய்யர் மருமகனுக்குப் பணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வழக்கு தொடுக்கிறார். வழக்கு நடைபெறும் காலத்தில் சதாசிவய்யரின் மகள் ஒரு பெண்குழந்தைக்குத் தாயாகிறாள். வழக்கின் தன்மை மேலும் கடுமையாகிறது.
பத்து ஆண்டுகளானாலும் வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை. பரிசுத்தொகை விநியோகம் தடைப்பட்டதால் திருப்பணி வேலையும் தொடங்கப்படவில்லை. தனிப்பட்ட மனிதர்களின் தன்னலப்போக்கின் விளைவாக கோவில் கோபுரம் மொட்டையாகவே நிற்கிறது.
தன்னலத்தின் உச்சக்கட்டமாக கதையின் இறுதியில் மேலுமொரு சிறிய காட்சியை எழுதி இணைத்திருக்கிறார் இராமையா. நீண்டநாள் கழித்து சதாசிவய்யரின் மனைவி கருத்தரித்திருக்கிறாள். அவளும் சதாசிவய்யரும் ஆண்குழந்தைதான் பிறக்கும் என்கிற கனவில் மிதக்கிறார்கள். அப்போது சதாசிவய்யரின் மருமகன் அந்த ஊருக்கு வருகிறான். ஆண்குழந்தை பிறந்தால் சொத்து அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். பெண்குழந்தை பிறந்தால் வீட்டு மருமகனான தனக்கே வருமென அவன் மனம் திட்டமிடுகிறது.
தனக்கு ஆண்குழந்தை வேண்டுமென வேண்டிக்கொண்டபோது பெண்குழந்தையைப் பிறக்கவைத்த முள்ளிநாதர் அவர்களுக்கும் ஆண்குழந்தைக்குப் பதிலாகப் பெண்குழந்தையை அருளவேண்டுமென பிரார்த்தனை செய்துகொள்கிறான். தன் பிரார்த்தனை பலித்துவிட்டால் மொட்டைக்கோபுரத்தைத் தன் சொந்தச் செலவிலேயே கட்டிமுடிப்பதாகவும் வேண்டிக்கொள்கிறான். தன்னலம் ஒருவனை எந்த எல்லை வரைக்கும் செலுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தச் சிறுகதை வழிவகுக்கிறது.
இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் இப்படி ஏதோ ஒரு விதத்தில் மனத்தைக் கொள்ளைகொள்வதாக இருக்கிறது. அதுவே இத்தொகுதியின் சிறப்பு. இராமையாவின் புகழ்பெற்ற சிறுகதையான ‘நட்சத்திரக்குழந்தைகள்’ இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
0
இராமையா தம் வாழ்நாளில் 304 சிறுகதைகளை எழுதியிருப்பதாக சி.சு.செல்லப்பா ஒரு பெரிய பட்டியலைத் தயாரித்திருக்கிறார். ‘இராமையாவின் சிறுகதைப்பாணி’ என அவர் எழுதியிருக்கும் நூலில் ஒவ்வொரு கதையையும் முன்வைத்து விரிவான குறிப்புகளையும் அவர் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் வாழும் காலத்தில் மலரும் மணமும், புதுமைக்கோயில், பூவும் பொன்னும், ஞானோதயம், பாக்கியத்தின் பாக்கியம் என ஐந்து தொகுதிகள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கதைகளைக் கொண்ட தொகுதிகளாக அவை அமைந்துள்ளன.
அவர் சிறுகதைகளை மட்டுமன்றி, நாவல்கள், நாடகங்கள் எனப் பல வடிவங்களிலும் எழுதியிருக்கிறார். எழுத்தாளராக அவர் வாழத் தொடங்கினாலும் திரையுலகம் அவரை இழுத்துச் சென்றுவிட்டது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டு காலம் திரையுலகத்தில் பணிபுரிந்தார். பொருளியல் தேவைக்காக பல சாதாரணமான சிறுகதைகளையும் தான் எழுத நேர்ந்துவிட்டது எனப் பல உரையாடல்களில் அவரே வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதிய முன்னூறு சிறுகதைகளையும் ஒரு பெருந்தொகுதியாக வைத்து வாசிக்கும்போதுதான் நமக்கு அந்த எண்ணம் வரக்கூடும். ஆனால் அவராகவே தேர்ந்தெடுத்துத் தொகுத்து நூல்வடிவில் வெளிவந்திருக்கும் ஐந்து தொகுதிகள் அப்படிப்பட்டவை அல்ல. அத்தொகுதிகள் அவரை எப்போதுமே உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும். சிறுகதைச் சாதனையாளர்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
0

