Skip to content
Home » வாசிக்கும் கலை #5 – வாசிப்பின் மீதான ஆர்வம்

வாசிக்கும் கலை #5 – வாசிப்பின் மீதான ஆர்வம்

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலும் அதன் முழுமையான இலக்கை அடைவதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான முக்கிய விஷயங்களில் ஒன்று வாசிப்புப் பழக்கம். இது நமது தன்னம்பிக்கையையும் பேச்சுத் திறனையும் வளர்க்கிறது. ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் வாசிப்பு நல்லது. வாழ்க்கைச் சூழலில் பல்வேறு கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ளவும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படவும் வாசிப்பு உதவுகிறது. எனவே வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது அவசியம்.

வாழ்க்கைக்கான தகவல்களையும் அறிவையும் வழங்குவதாலேயே புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன. அப்படியான நண்பர்களுக்கு நமது மனதில் நிரந்தர இடத்தை கொடுக்கவேண்டும் என்ற சிறந்த மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆம், வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வதில் ஒருவரின் மனநிலை முக்கிய பங்காற்றுகின்றது. உணவு உண்ணுதல், சுவாசித்தல் போன்றவை நம் வாழ்வில் எவ்வாறு முக்கிய இடத்தை வகிக்கின்றனவோ அவ்வாறே வாசிப்பையும் வாழ்வோடு ஒன்றிணைந்த ஓர் இயல்பான செயற்பாடாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவே வாசிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை.

ஒரு திறனை நாம் வளர்த்துக்கொள்ள அதற்கான நேரமும் அர்ப்பணிப்பும் தேவைப்படும். வாசிப்புக்கும் இது பொருந்தும். பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் முயன்று வாசிப்புக்கான ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அதாவது, நீங்கள் வாசிக்கத் தொடங்கி சிறிது நாட்கள் உங்கள் திட்டத்தின்படி வாசித்துவருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களது வேலைப்பளு அல்லது சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உங்களது வாசிப்பைத் தவறவிடுகிறீர்கள். இவ்வாறான தருணங்களில் சிறிதும் மனம் தளராமல் அடுத்த நாள் மீண்டும் உங்களது வாசிப்பைத் தொடங்க வேண்டுமே தவிர, அப்படியே நிறுத்திவிடக்கூடாது.

நன்கு வடிவமைக்கப்பட்ட, ஈர்க்கக்கூடிய புத்தக சேமிப்பு அலமாரிகள் நம்மைப் புத்தகங்களை நோக்கி ஈர்ப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி, அதனைக் கவனியுங்கள். அவற்றைக் கடந்து செல்லும்போது சில புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் அதன் அட்டைப்படம் ஆகியவற்றை ரசியுங்கள். இந்த ரசனையே அவற்றை வாசிப்பதற்கான ஆர்வத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

உங்கள் வாசிப்புப் பழக்கத்தை, நீங்கள் தினமும் செய்யும் வேறொரு செயலோடு இணைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, உணவு உண்ணும்போதோ அல்லது தேநீர் அருந்தும்போதோ வாசிக்கலாம். இரவு தூங்குவதற்கு முன் படிப்பதும் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள ஒரு சிறந்த வழியாகும். முடிந்தால், தினமும் ஒரே நேரத்தில் படிக்க முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் மூளை அந்த நேரத்தை வாசிப்பதற்கான நேரம் என்று பழகிக்கொள்ளும்.

நீங்கள் வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகத்திற்கும் உங்களது ஆர்வத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. நீங்கள் படிக்கும் புத்தகம் உங்களை ஈர்க்கவில்லை என்றால், வாசிப்பு ஒரு சுமையாகத் தோன்றலாம். அதேவேளை நீங்கள் விரும்பிய புத்தகத்தைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தால், அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கவே தோன்றாது. வாசிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக அமையவேண்டுமானால் உங்களுக்கு ஆர்வமூட்டும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு செயல்பாட்டினை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கும். ஆனால் வாசிப்பை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிப்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. காரணம், ஒரு புத்தகத்தைப் படிப்பதில் சலிப்பு ஏற்பட்டாலோ அல்லது வாசிப்பு முறையில் மாற்றம் தேவைப்பட்டாலோ, நாம் உடனடியாக வேறொரு புத்தகத்திற்கு மாறிவிடலாம். இதன்மூலம் தொடர்ச்சியான வாசிப்பார்வத்தை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

உங்கள் வாசிப்பு இலக்குகளை ஆர்வத்துடன் தொடர, உங்களுக்கான ஒரு வாசிப்புத் துணையை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். அதாவது, உங்கள் நண்பர், வாழ்க்கைத் துணை அல்லது சக ஊழியர் என யாரை வேண்டுமானாலும் இதற்காகத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரே புத்தகத்தை வாசிக்கும்போதோ அல்லது இருவரும் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்த பிறகோ அதைப் பற்றி விவாதிக்கலாம். இதில் இருவருக்குமான வாசிப்பு ஆர்வம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தேவையற்ற ஒரு பழக்கத்தை மறக்க, அதற்கு மாற்றாக அத்தியாவசியமான ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்வதைப்போல, நம்மிடமுள்ள பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குப் பதிலாக வாசிப்பை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். உதாரணமாக, டிவி அல்லது சினிமா பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது அல்லது இன்ஸ்டாகிராமில் உலாவுவது ஆகியவற்றுக்குப் பதிலாக, ஒரு புத்தகத்தை வாசியுங்கள். இது காலப்போக்கில் இன்னும் பல புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும்.

நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகங்களின் பட்டியலைத் தயாரிப்பதன்மூலம் உங்கள் வாசிப்புக்கான ஆர்வத்தை அதிகரிக்கலாம். உதாரணமாக, நீண்ட காலமாக வாசிக்க விரும்பியும் இதுவரை வாய்ப்புக் கிடைக்காத நாவல்களின் பட்டியலையோ அல்லது உங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு அல்லது துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தேவையான புத்தகங்களின் பட்டியலையோ உருவாக்கலாம். தினசரி வாசிப்பு இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமும், ஆடியோ புக்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களை ஆராய்வதன் மூலமும் வாசிப்புக்கான ஆர்வத்தைப் பெறலாம்.

0

நாம் கற்கும் கல்வியின் முதுகெலும்பாகத் திகழும் வாசிப்பை இன்றைய மாணவர்கள் பலரும் கவனத்தில் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. புத்தகங்களை வாசிப்பதற்குப் பதிலாக, வீடியோ கேம்ஸ் விளையாடுவதையோ டிவி பார்ப்பதையோ சிறுவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதற்கான முக்கிய காரணம், அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் பெரும்பாலான இன்றைய பெற்றோர் போதிய கவனம் செலுத்துவதில்லை.

குழந்தைகளிடம் வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வத்தை வளர்க்க, சிறு வயதிலிருந்தே வாசிப்பதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். வாசிப்பை வெறுக்கும் குழந்தை என்று யாரும் இல்லை, சரியான புத்தகத்தைக் கண்டறியாத குழந்தைகள் மட்டுமே உள்ளனர் என்கிறார் ஃபிராங்க் செராஃபினி. குழந்தைகளிடம் வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது ஒரு சவாலான காரியமாகத் தோன்றலாம். ஆனால் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தையை எளிதாக ஒரு சிறந்த வாசகராக மாற்ற முடியும்.

வீட்டில் குழந்தைகளைச் சுற்றி புத்தகங்கள், சித்திரக்கதைகள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், லேபிள்கள் மற்றும் பிற எழுதப்பட்ட பொருட்களை வைப்பது, வாசிப்பு அன்றாட வாழ்வின் ஓர் இயல்பான பகுதியாக மாறும் சூழலை அவர்களிடம் வளர்க்கிறது. ‘ஜர்னல் ஆஃப் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் அண்ட் இன்னோவேட்டிவ் ரிசர்ச்’ என்ற இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, வாசிப்பு பொருட்கள் நிறைந்த சூழல் எழுத்தறிவுத் திறன்களை மேம்படுத்துவதாகவும், வாசிப்பின்மீது நீடித்த ஆர்வத்தை வளர்ப்பதாகவும் வலியுறுத்துகிறது.

‘ஜாமா நெட்வொர்க் ஓபன்’ இதழில் வெளியான ஓர் ஆய்வில் குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் அதிக அளவு டிவி மற்றும் மொபைல் உபயோகம், குறைந்த வாசிப்பு மற்றும் கணித திறன்களுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. டிஜிட்டல் சாதனங்கள் இல்லாத இடங்களை அமைத்துக்கொடுப்பது குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தைக் கணிசமாக மேம்படுத்தும்.

ஒருவழியாக குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக, அந்த ஆர்வங்களுக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து கொடுப்பது அவர்களின் ஆர்வம் நீர்த்துப் போகாமல் இருக்கச்செய்யும். விளையாட்டு, விலங்குகள், விண்வெளி, கற்பனை போன்ற குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களுடன் ஒத்துப்போகும் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது, வாசிப்பை மேலும் ஈடுபாட்டுடன் கூடியதாக மாற்றும். நூலகங்களிலும் புத்தகக் கடைகளிலும் பெரும்பாலும் இவற்றுக்கான பிரத்தியேகப் பிரிவுகள் இருக்கும். இவை குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகங்களைக் கண்டறிய உதவும்.

குழந்தைகள் தாங்கள் காண்பவற்றிலிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். பெரியவர்கள் தொடர்ந்து வாசிப்பதைக் காணும்போது, குழந்தைகள் வாசிப்புப் பழக்கத்தை எளிதில் கடைப்பிடிக்கின்றனர். புத்தகங்கள் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவது, கதைகளைப் பற்றி விவாதிப்பது மற்றும் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவை குழந்தைகளை வாசிபின்பால் தீவிரமாக ஈடுபடத் தூண்டும். எனவே பெரியவர்கள் வாசிப்பில் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டியது அவசியம். மாறாக, குழந்தைகளை வாசிக்க வைக்க தீவிரமாக செயல்படுகிறேன் என்று சொல்லிவிட்டு, நீங்கள் டிவி சீரியலில் மூழ்கிவிடுவதில் எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை.

உங்கள் குடும்பத்திற்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் குழந்தைகளையும் அனுமதிப்பது, புத்தகங்களின் மீதான அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச்செய்யும். நாவல்கள், பாடப்புத்தகங்கள், சித்திரக் கதைகள் அல்லது கவிதைகள் எனத் தங்களுக்கு விருப்பமான வாசிப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டும். மேலும், அவர்களது நண்பர்களுக்கான பிறந்தநாள் பரிசாக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை வழங்குவதையும் ஊக்கப்படுத்தலாம்.

எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி கற்பதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கற்கும் திறன் உண்டு. கற்றல் வேறுபாடுகள், மொழித் தடைகள் அல்லது கவனச் சிக்கல்கள் காரணமாகச் சில குழந்தைகள் பாரம்பரிய வாசிப்பில் சிரமப்படுவதுண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆடியோ புக்ஸ் அவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையலாம். தற்போது, மிகவும் பிரபலமான புத்தகங்கள் அவற்றின் ஆடியோ புக்ஸ் வடிவத்தில் வெளியிடப்படுகின்றன. இது, குழந்தைகளின் தடைகளைத் தாண்டி, அவர்களின் வாசிப்பிற்கான ஓர் ஆயத்த வழியை வழங்குகிறது.

கோடை விடுமுறையின்போது வாசிக்காத குழந்தைகள், பள்ளி ஆண்டு முழுவதும் தாங்கள் கற்றவற்றில் ஒரு பகுதியை இழக்கக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த நிகழ்வு ‘சம்மர் ஸ்லைட்’ என்று அழைக்கப்படுகிறது. நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு கோடைக்கால வாசிப்புத் திட்டம் இவ்வித இழப்பைத் தடுக்க உதவுகிறது. இது கோடைக்காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பயனளிக்கிறது.

ஒவ்வொரு பெரிய சவாலும் ஓர் இலக்குடன் தொடங்குகிறது. உங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறன் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில், வேடிக்கையான மற்றும் அடையக்கூடிய வாசிப்பு இலக்குகளை அமைக்க அவர்களுக்கு உதவுங்கள். சவால் என்று வந்துவிட்டால், அதன் வெற்றிக்கு பரிசு என்ற ஒன்று வேண்டுமல்லவா! குழந்தைகள் ஒரு வாசிப்பு மைல்கல்லை நிறைவு செய்த பிறகு, ஒரு புதிய புத்தகம், ஒரு சிறப்புப் பயணம் அல்லது ஒரு அவுட்டிங் போன்ற சிறிய பரிசுகளை வெகுமதியாக அவர்களுக்கு வழங்கலாம்.

குழந்தைகள் வாசித்து முடித்த புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப பரிசு பொருளினை வழங்குவது அவர்களுக்கு சுவாரஸ்யமானதாக அமையும். உதாரணமாக, ஒரு மர்ம நாவலைப் படித்த பிறகு பூதக்கண்ணாடியைப் பரிசாக வழங்குவது அல்லது புத்தகத்தின் கதாபாத்திரத்தின் வடிவில் விளையாட்டுப் பொருட்களை கொடுப்பது போன்றவை. இந்த ஊக்கங்கள் அவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் ஒரு சீரான ஆர்வத்தை ஏற்படுத்தவும், வாசிப்பை ஒரு சுமையாக அல்லாமல் கொண்டாட்டமாக உணரச் செய்யவும் உதவுகின்றன.

வயது ஏற ஏற வாசிப்பதற்கான ஆர்வம் குறைவதாகவும், குறிப்பாக வாசிப்பு குறித்த மாணவர்களின் மனப்பான்மை சாதகமற்றதாக மாறும்போது இந்த ஆர்வம் மேலும் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலேயே வாசிப்பை ரசிக்காத மாணவர்கள், வளர்ந்த பிறகும் அதை விரும்பிச் செய்வதற்கான வாய்ப்புக் குறைவு. உங்கள் குழந்தை வாசிக்கும் விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள உதவுங்கள். புத்தகங்களுக்கும் உங்கள் குழந்தையின் சொந்த அனுபவங்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, வாசிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

குழந்தைகள் வளரும்போது, புதிய புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எளிதாகக் கண்டறிவதற்கு நூலகங்கள் மதிப்புமிக்கதாக அமைகின்றன. பல நூலகங்கள் இளம் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கதை சொல்லும் நிகழ்வுகள் மற்றும் எழுத்தறிவுத் திட்டங்களையும் வழங்குகின்றன. நூலகத்திற்குச் செல்வது, குழந்தைகளுக்குச் சிறந்த வாசிப்புப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும், தங்கள் சம வயதுடையவர்கள் வாசிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காணவும் வாய்ப்பளிக்கிறது.

வாசிப்பின்மீதான ஆர்வம் மற்றும் அதைத் தொடர்வதற்கான யுக்திகள் ஆகியன வாசிப்பு வாழ்க்கையை நிச்சயம் வளப்படுத்தும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *