இன்றைய காலத்தில் மனிதனின் உயிர்நாடியாய் விளங்குகிறது பணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவில் உறங்கச் செல்வதுவரை நாம் சுவாசிக்கும் காற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையில் பணம் தேவையாய் இருக்கிறது.
பணம் இல்லாது சிறு புல்லையும் அசைக்க முடியாது என்ற நிலையில்தான் இன்றைய உலகம் இயங்குகிறது. பசி தீர்க்க உணவு, உடுத்த உடை, தங்குவதற்கு இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் தொடங்கி, கல்வி, மருத்துவம், மரியாதை என அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பணம் மாறிவிட்டது. அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்வுகளைக்கூட விலைக்கு வாங்கும் அளவுக்குப் பணத்தின் பேராதிக்கம் இன்றைய சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது.
ஒருவன் மிகுந்த நற்குணங்களைக் கொண்டவனாகவும், பிறருக்கு உதவுபவனாகவும், அறிவார்ந்த சிந்தனையைக் கொண்டவனாகவும் இருந்து அவனிடம் பணம் இல்லாது போனால், அவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்றிடுவர். அதுவே ஒருவன் அறிவற்றவனாகவும் கெடு மதி கொண்டவனாகவும் இருந்து அவனிடம் பணம் செழித்திருந்தால் அவனைச் சாமர்த்தியவான் என்று புகழ்வர். இன்று ஒருவனை நல்லவன், கெட்டவன் என்று தீர்மானிப்பதே பணம்தான் என்றாகிவிட்டது.
ஒரு காலத்தில் உயிர் வாழ்வதற்கு மட்டுமே தேவைப்பட்ட பணம் என்கிற செல்வம், தற்காலத்தில் ஒருவருடைய சமூக மதிப்பையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் பொருளாய் மாறியுள்ளது. இதனைத் திருவள்ளுவர் அன்றே 247ஆவது குறளில், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று பணம் என்கின்ற பொருளின் முக்கியத்துவத்தை உரைத்துள்ளார்.
‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.’
திருவள்ளுவர் பணத்தின் தேவையை வலியுறுத்தினாலும், அதையே முழுமையான வாழ்க்கையாகக் கருதவில்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறும்போதே, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று அறநெறியையும் இணைத்துக் கூறுகிறார். அதாவது, பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அது அறவழியில் இருக்க வேண்டும். மனிதநேயம் மற்றும் கருணையோடு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்கிற உயர்ந்த கருத்தை இக்குறள் மூலம் உரைத்துள்ளார்.
இப்படியாக 1000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பணத்தின் தேவையை உரைத்திருக்கிறார் எனில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் அன்றைய மனிதர்கள் பணம் இல்லாமல் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள்? பணம் இல்லாமல் எப்படித் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கியிருப்பார்கள்?
இன்றுபோல் அன்று மக்களிடம் பணம் இல்லை என்றாலும் அவர்கள் பண்டமாற்று முறையில் தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டனர்.
ஒரு நிலத்தில் வாழும் மக்கள் தங்களிடம் உபரியாக, அதாவது தேவைக்கு அதிகமாக இருக்கும் பொருளை, வேறு நிலத்தில் உள்ள மக்களுக்குக் கொடுத்து, தங்களுக்குத் தேவையான பொருளைப் பெற்றுக்கொண்டனர். மருத நிலத்தவர் நெல்லைக் கொடுத்து, நெய்தல் நிலத்தவரிடம் மீனையோ அல்லது உப்பையோ பெற்றுக்கொண்டனர். முல்லை நிலத்து ஆயர்கள் பாலையும் நெய்யையும் கொடுத்து, தங்களுக்குத் தேவையான தானியங்களைப் பெற்றனர். பண்டமாற்று முறையில் நெல் மற்றும் வெள்ளுப்பு ஆகியவை மிக முக்கியப் பங்கு வகித்தன.
இதனை அகநானூற்றின் 390ஆவது பாடலில் அம்மூவனார் என்ற புலவர், ‘நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்! கொள்ளீரோ எனச் சேரிதொறும் நுவலும்’ என்ற வரிகள் மூலம் குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஒரு படி நெல்லுக்கு, ஒரு படி உப்பு என நேராக மாற்றிக் கொள்ளுங்கள், ஊர் மக்களே! உப்பு வாங்குங்கள்!’ என்று சங்க காலத்தில் உப்பு விற்கும் வணிகப் பெண்கள் ஒவ்வொரு தெருவாகச் சென்று கூவி விற்றதை இந்த வரிகள் குறிக்கின்றன.
அன்று நெல்லின் அளவே பிற பொருள்களின் மதிப்பைத் தீர்மானிக்கும் அளவுகோலாக இருந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
சங்க காலத்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற வணிகங்களில் பண்டமாற்றுமுறை வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது என்பதைப் பின்வரும் புறநானூற்று அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.
‘கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய் மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகத்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்’
காட்டில் தங்கும் வாழ்க்கையை உடையவனும், சினம் மிகுந்த வேட்டை நாயை உடன் அழைத்துச் செல்பவனுமான வேடன், அவன் வேட்டையாடிய மான் இறைச்சியைக் கடகப் பெட்டியில் (வட்டி) நிரப்பிக் கொண்டு வந்தான். ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, தான் தயாரித்த தயிரை மண்பானையில் (தசும்பு) சுமந்துகொண்டு வந்தாள். ஏரால் உழுது வாழும் உழவர்களின் பெரிய வீடுகளில் வாழும் பெண்கள், வேடனும் ஆயமகளும் கொண்டு வந்த இறைச்சியையும் தயிரையும் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக குளத்தின் நீர்ப்பாசனத்தால் விளைந்த, களத்தில் அறுவடை செய்து பெறப்பட்ட வெண்ணெல்லைத் தங்கள் கைகளால் அள்ளி (முகந்து) கொடுக்க, அந்த நெல்லைப் பெற்றுக்கொண்டு வேடனும் ஆயமகளும் மகிழ்ச்சியோடு (உகந்து) தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புவர் என்பதுதான் இப்பாடலின் பொருள். இதன் மூலம் சங்க காலத்தில் இறைச்சியினையும் தயிரையும் கொடுத்து நெல்லினைப் பண்டமாற்றாகப் பெற்றிருப்பதை அறியலாம்.
பண்டமாற்று முறை வணிகத்திற்கு இன்றளவும் சான்றாகத் திகழ்வது உப்பு வணிகமாகும். இவ்வணிகத்தைச் செய்தவர்கள் ‘உமணர்கள்’ என அழைக்கப்பட்டனர்.
‘உப்பெய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே’
என்ற புறநானூற்றுப் பாடலில் எருது பூட்டிய கட்டை வண்டிகளில் உப்பினைக் கொண்டு செல்லும் முறையினையும், உப்பளங்களில் குன்றைப்போல் உப்பு குவித்து வைத்திருந்ததையும், அந்த உப்பினை விலை கூறி விற்று வரும் உமணரின் ஆரவாரம் ஊரெல்லாம் நிறைந்திருக்கும் என்கிற செய்தியினையும் அறிய முடிகின்றது.
சங்க காலத்தில் பண்டமாற்று முறைதான் இருந்தது எனில் பணம் என்ற செல்வம் எப்போது தோன்றியது?
சங்க காலத்தில் நாம் இன்று நினைப்பது போன்ற காகிதப் பணம் இல்லை என்றாலும், செல்வம் என்ற சொல்லுக்கு அவர்களிடம் வேறு பொருள்கள் இருந்தன. சங்க காலத்தில் மிக முக்கியச் செல்வமாகத் திகழ்ந்தது ஆடுகளும் மாடுகளும்தான். மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்றுதான் பொருள்.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை’
கேடில் என்றால் அழிவற்ற, என்றும் அழியாத என்று பொருள். அழிவற்ற சிறந்த செல்வம் ஒருவர்க்குக் கல்வியே ஆகும். மற்ற பொருள்கள் எல்லாம் சிறந்த செல்வம் ஆகாது என்ற பொருள்கொண்ட இக்குறளில், மாடு என்ற சொல் செல்வத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஒருவரிடம் எவ்வளவு கால்நடைகள் இருக்கின்றனவோ, அவரே பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார். சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளே அன்றைய வங்கியிருப்பாகக் கருதப்பட்டது.
பண்டமாற்று முறை சாதாரண மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்தாலும், சங்கக் காலத் தமிழர்களின் கடல் கடந்த பன்னாட்டு வணிகம் உலகையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது. அன்றைய தமிழர்கள் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பல நாடுகளுடன் பிரமாண்டமான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தனர். காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), மதுரை, வஞ்சி போன்ற நகரங்கள் பெரிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன. இந்த வணிகமே தமிழகத்தில் நாணயங்கள் மற்றும் முறையான பணப் புழக்கம் தீவிரமடைய முக்கியக் காரணமாக அமைந்தது.
சங்க காலத் தமிழர்களின் வணிகத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்கள் யவனர்கள் (கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்) ஆவர். தமிழகத்தின் மிளகு, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களுக்கும், முத்துக்கும், பட்டுத் துணிகளுக்கும் ரோமானியப் பேரரசில் தங்கத்தின் விலைக்கு நிகரான மதிப்பு இருந்தது.
சங்க காலத்தின் பிற்பகுதியில், குறிப்பாக ரோமானியர்களுடன் வெளிநாட்டு வணிகம் பெருகியபோது, தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. ரோமானியர்கள் கப்பல் கப்பலாகத் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைக் கொண்டுவந்து, தமிழகத் துறைமுகங்களில் கொட்டிவிட்டு, இங்கிருந்து மிளகையும், முத்துகளையும் அள்ளிச் சென்றனர். இதனால்தான் தற்கால அகழ்வாராய்ச்சிகளில் (கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு, கீழடி போன்ற இடங்களில்) குவியல் குவியலாக ரோமானியத் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
மேலைநாட்டினருடன் வணிகம் செய்ததால், சங்க கால அரசர்களான சேர, சோழ, பாண்டியர்கள் தங்களுக்கென்று சொந்தமாக நாணயங்களை அச்சிடத் தொடங்கினர். மூவேந்தர்களும் தங்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
சதுர அல்லது வட்ட வடிவிலான செப்பு மற்றும் வெள்ளி நாணயங்களில் சூரியன், மலை, விலங்குகள், வில், புலி, மீன் போன்றவை முத்திரையிடப்பட்டன. செப்பு நாணயங்கள், ‘காசு’ என்றும் அழைக்கப்பட்டன. இருப்பினும், இது பெரும்பாலும் பெரு வணிகர்களிடமும், அரசர்களிடமுமே புழக்கத்தில் இருந்தது. சாதாரண மக்கள் பண்டமாற்றையே நம்பியிருந்தனர்.
சங்க இலக்கியங்களில் காசு, பொன் போன்ற சொற்களால் நாணயங்கள் குறிக்கப்பட்டுள்ளன. பெண்கள் இந்த நாணயங்களைத் தொடுத்து காசு மாலையாகக் கழுத்தில் அணிந்துகொண்டனர் என்பது போன்ற குறிப்புகளும் உள்ளன.
மேற்குலக நாடுகள் மட்டுமின்றி, சீனா, மலேசியா (கடாரம்), இலங்கை, ஜாவா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் சங்க காலத் தமிழர்கள் கப்பல் வழி வணிகம் செய்தனர். தமிழகத்திலிருந்து பட்டு, சந்தனம், அகில் மற்றும் இரும்புப் பொருட்கள் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
பண்டமாற்று முறையில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எனக்கு மீன் தேவைப்படுகிறது, என்னிடம் நெல் இருக்கிறது. ஆனால், மீன் வைத்திருப்பவருக்கு நெல் தேவையில்லை, துணி தேவைப்படுகிறது என்றால் அங்கு வியாபாரம் நடக்காது. மேலும், மீன், இறைச்சி போன்றவற்றை நீண்ட நாள்களுக்குச் சேமித்து வைக்க முடியாது. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாகவே பொதுவான ஒரு மதிப்புத் தேவைப்பட்டது. அதுவே பணத்தின் தோற்றத்திற்கு அடித்தளமிட்டது.
முதன்முதலில் அரிதான கிளிஞ்சல்கள், உப்புக்கற்கள், விலையுயர்ந்த மணிகள் போன்றவை பொதுவான பணமாகப் பயன்படுத்தப்பட்டன.
கி.மு. 6-7ஆம் நூற்றாண்டுகளில் உலகளவில் மற்றும் இந்திய அளவில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அறிமுகமாயின. இவை அழியாதவை. உருவத்தில் சிறியவை. எங்கும் எடுத்துச் செல்ல எளிதானவை. இதனால் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சீனாவில் டாங் வம்ச ஆட்சியின்போது, மூட்டை மூட்டையாக உலோக நாணயங்களை எடுத்துச் செல்வதில் இருந்த சிரமங்களைத் தவிர்ப்பதற்காகச் சீன வணிகர்கள் முதன்முதலில் ரசீதுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதுவே காகிதப் பணத்தின் தொடக்கமாக அமைந்தது. பின்னர், சாங் வம்ச காலத்தில் (11-12ஆம் நூற்றாண்டில்) இது முறைப்படுத்தப்பட்டு, அரசு அதிகாரபூர்வமாகக் காகிதப் பணத்தை வெளியிடத் தொடங்கியது. இதுவே உலகின் முதல் அரசு அங்கீகாரம் பெற்ற காகிதப் பணமாகும்.
இந்தியாவிற்குள் காகிதப் பணம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக அறிமுகமானது. ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுடன் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தியபோது, பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்க, தனியார் வங்கிகளைத் தொடங்கின. அதன்படி, 1770இல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற வங்கிதான் இந்தியாவில் முதன்முதலில் காகிதப் பணத்தாள்களை வெளியிட்டது. இன்று அதுவே நெகிழி அட்டைகளாகவும், இணையப் பணப் பரிமாற்றமாகவும் உருமாறி, காகிதப் பணத்தையும் அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பணம் என்பது மனிதன் தன் தேவையை எளிதாக்கிக்கொள்ளக் கண்டுபிடித்த ஒரு கருவி மட்டுமே. ஆனால் இன்று அதுவே மனிதனை அடிமையாக்கி, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பணம் இல்லாத சங்க காலத்தில் மனிதர்களிடம் பேராசை குறைவாகவும், பாசம் அதிகமாகவும் இருந்தது. ஆனால், இன்று பணம் பெருகிய இடத்தில் மனிதநேயம் சுருங்கிவிட்டது. பணம் இருந்தால்தான் மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்றில்லாது, மனிதனின் குணத்திற்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து இயங்கும் சமூகமே ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும். ஆனால் இன்றைய நவீன உலகில், மனிதனின் அடிப்படைத் தேவைகள் முதல் சொகுசு வாழ்க்கைவரை அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகப் பணம் உள்ளதால் பணத்தை வைத்து மனிதனை எடைபோடப் பழகிவிட்டனர் மக்கள்.
சங்க காலத்தில் வணிகம், பண்டமாற்று மற்றும் உபரிப் பொருள்களைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவை மக்களின் தேவையை நோக்கமாய் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய வணிகம் லாபம் சம்பாதிப்பது மற்றும் மூலதனத்தைப் பெருக்குவது போன்ற சுயநலத் தேவையை நோக்கமாய் கொண்டிருக்கிறது.
(தொடரும்)

