அப்பாவு என்கிற இயற்பெயரை உடைய கம்பதாசன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். மண்பொம்மைகள் செய்து விற்கும் தொழிலைச் செய்துவந்த அவருடைய பெற்றோர் வாழ்வுக்கான வழியைத் தேடி சென்னைக்குக் குடிபெயர்ந்ததால் கம்பதாசன் புரசைவாக்கம் பகுதியில் உள்ள நகரசபைப் பள்ளியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். நாடகங்களில் நடிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தால் ஆறாவது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நாடகக்கம்பெனியில் சேர்ந்தார்.
சொந்த முயற்சியில் இலக்கிய நூல்களைப் படித்து கவிதைகள் மீது ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டார். பாடல்களின் சந்தநயத்தில் ஆர்வம் கொண்டு இசைத்தன்மை கொண்ட ஏராளமான பாடல்களை எழுதிப் பயிற்சி செய்தார். கம்பர் எழுதிய ராமாயணப்பாடல்கள் மீது அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அதன் காரணமாகவே கம்பதாஸன் என்னும் புனைபெயரைத் தேர்ந்தெடுத்துச் சூட்டிக்கொண்டார். பாரதிதாசன் வழியில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட ஏராளமான பாடல்களை எழுதிப் புகழ்பெற்றார். பல குறுங்காவியங்களையும் நெடுங்கவிதைகளையும் எழுதினார்.
திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு கிட்டியபோது கம்பதாஸன் என்னும் பெயரிலேயே எழுதத் தொடங்கினார். ஏறத்தாழ முப்பதாண்டு காலம் எண்ணற்ற படங்களுக்குப் பாடல்களை எழுதினார். ஒருவகையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோருக்கு அவர் ஒரு முன்னோடிக்கவிஞராக இருந்தார்.
கம்பதாஸன் கட்டற்ற வாழ்க்கை கொண்டவர். பொருளைச் சேமித்துவைக்கக்கூடாது என்கிற எண்ணத்தோடு வாழ்ந்ததால் வறுமை எய்தி, உடல்நலம் கெட்டு இறுதிக்காலத்தில் துன்பத்தில் மூழ்கினார். கம்பதாசன் மீது பெரும்பற்று கொண்டிருந்த சிலோன் விஜயேந்திரன் அவர் எழுதிய கவிதைகள், காவியங்கள், திரைப்படப்பாடல்கள், சிறுகதைகள் அனைத்தையும் தேடித் தொகுத்து தனித்தனி தொகுதிகளாக வெளியிட்டார்.
பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா போன்ற எழுத்தாளர்களோடு கம்பதாஸனுக்கு நட்பு இருந்தது. கவிதைகளையும் காவியங்களையும் மட்டுமன்றி அவ்வப்போது சில சிறந்த சிறுகதைகளையும் அவர் எழுதினார். சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் அக்கதைகள் வெளிவந்தன. அவருடைய சிறுகதைகள் ‘முத்துச்சிமிக்கி’ என்னும் தலைப்பில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு சுதேசமித்திரன் வெளியீடாக 1946இல் ஜோதி நிலையம் வழியாக வெளிவந்தது. பதினேழு கதைகள் கொண்ட அத்தொகுதியை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். இறுதியில் கவிஞர் ராணி திலக் கும்பகோணத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையத்தில் அத்தொகுதியைக் கண்டெடுத்து பிரதியெடுத்து அனுப்பியுதவினார். நூலகத்துக்கும் அவருக்கும் நன்றி
0
முத்துச்சிமிக்கி தொகுப்பிலுள்ள ‘கடவுளின் விரோதி’ கம்பதாஸனின் புனைவாற்றலுக்கு எடுத்துக்காட்டான சிறுகதை. பழங்காலத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இக்கதையை எழுதியிருக்கிறார். ‘ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள்’ என்றுதான் இக்கதையைக் கம்பதாஸன் தொடங்குகிறார். நீலகிரி சிகரத்தை ஒட்டி வாழ்கிற தொதவர்களின் சமூகத்தில் நிலவிவந்த ஒரு பழங்கால நம்பிக்கையை இக்கதையின் வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எப்போதும் தம் படைப்புகள் வழியாக சமூகத்தை விமர்சிப்பதையும் சமூக மேம்பாட்டுக்கான கருத்துகளை முன்வைப்பதையும் வழக்கமாகக் கொண்ட கம்பதாஸன் இக்கதையில் அத்தகு முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக, ஆதிகால நம்பிக்கையை ஒரு சொற்சித்திரமாக மட்டும் எழுதி நம் முன் நிகழ்த்திக் காட்டி நிறுத்திக்கொள்கிறார். இந்த மெளனம் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.
தொதவர்களின் சமூகத்தலைவன் சங்கன். ஒருநாள் அவனிடம் ஒரு வழக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்குப் பிறகு அவன் தீர்ப்பு வழங்கவேண்டிய தருணத்திலிருந்துதான் கதையைத் தொடங்குகிறார் கம்பதாஸன். விசாரணை முடிந்ததும் சங்கன் உடனடியாகத் தன் தீர்ப்பைச் சொல்லவில்லை. கூடியிருந்தவர்கள் அனைவரும் அவனைப் பார்த்திருக்க, அவனோ குற்றம் சாட்டப்பட்ட நீலனைப் பார்த்தபடி யோசனையில் மூழ்கியிருக்கிறான்.
அவன் செய்த குற்றம் திருட்டோ, கொலையோ, கொள்ளையோ அல்ல. அப்படிப்பட்ட குற்றத்துக்கு இரு தரப்பினரையும் விசாரித்துவிட்டு அந்தந்த சந்தர்ப்பம் சார்ந்து தீர்ப்பு சொல்லிவிடலாம். அது எளிது. ஆனால் நீலன் செய்த குற்றம் ஒரு மரபு மீறல். காலம்காலமாக ஒரு சமூகம் நம்பிவந்த ஒரு மரபை நீலன் மீறியிருக்கிறான். அந்த மீறல் சார்ந்து ஒரு தலைவனாக சங்கன் கொண்டிருக்கும் எண்ணத்துக்கு அத்தருணத்தில் எந்த மதிப்பும் இல்லை. மொத்த சமூகமும் எதை எண்ணியிருக்கிறதோ, அதையே அவனும் பிரதிபலிக்க வேண்டிய நெருக்கடி அவனை அழுத்துகிறது.
அந்த நெருக்கடியின் அழுத்தம் காரணமாகவே சங்கன் தன் தீர்ப்பைச் சொல்லத் தாமதப்படுத்துகிறான். ஆயினும் இறுதிக்கணத்தில் நீலனுக்கு சிரச்சேதம் செய்யும் தண்டனையை அறிவிக்கிறான். கூடியிருந்த சமூகமும் அத்தண்டனையே பொருத்தமான தண்டனை என ஏற்றுக்கொள்கிறது. சிரச்சேதத்துக்கு முன்னால் அவனுடைய இறுதி ஆசையைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை நீலனுக்கு வழங்குகிறான் சங்கன். நீலன் ஒரு கதையைச் சொல்ல விரும்புவதாக உரைத்து தலைவனின் சம்மதத்தைப் பெறுகிறான். பிறகு நடந்த நிகழ்ச்சிகளை ஒரு கதையைப்போல அங்கு கூடியிருந்தவர்களிடம் சொல்கிறான். கதைக்குள் ஒரு கதையாக அதைத் திறமையுடன் முன்வைத்திருக்கிறார் கம்பதாஸன்.
ஒரு காட்டில் ஓர் இளைஞன் வசித்துவருகிறான். பசித்த நேரங்களில் காட்டில் அலைந்து திரிந்து கிடைக்கும் காய் கனிகளை உண்டு குகையில் உறங்கிக் காலம் கழிப்பதுதான் அவன் வாழ்க்கைமுறை. ஒருநாள் பசிக்கு உணவு தேடி அலையும்போது அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பிடத்திலிருந்து வெகுதொலைவு சென்று தேடியும் அவனுக்கு உண்ணத்தக்கதாக எதுவும் கிடைக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த மூங்கில் காட்டிலிருந்து ஏதோ ஒரு புதுமையான ஓசையைக் கேட்க நேர்கிறது.
அந்த ஓசையைக் கேட்கக்கேட்க தன் பசியும் மெல்ல மெல்ல மறைவதையும் அவனால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. அதனால் ஆர்வம் கொண்ட அந்த இளைஞன் அருகில் சென்று அந்த மூங்கிலைக் கவனிக்கிறான். அந்த மூங்கிலின் ஒரு பகுதியில் ஏராளமான துளைகள் இருப்பதையும் அவற்றின் ஊடாக ஒரு வண்டு நுழைந்து வெளியேறி விளையாடுவதையும் அவன் பார்க்கிறான். அந்த விசித்திரமான ஓசைக்கு அதுதான் காரணமாக இருக்கக்கூடும் என அவன் மனத்துக்குத் தோன்றுகிறது.
பசியைப் போக்கிக்கொள்ள புதியதொரு வழி கிடைத்துவிட்டது என நினைத்த அவன் அந்த மூங்கிலை வெட்டுகிறான். அதிலிருந்து அந்தத் துளைகள் அடங்கிய பகுதியை மட்டும் தனியாக வெட்டியெடுத்துக்கொள்கிறான். அதில் ஒன்பது துளைகள் இருக்கின்றன. ஆனால் அந்த ஓசை மறைந்துவிடுகிறது. உயரத்தில் இருந்தபோது கேட்ட இசை இப்போது கேட்கவில்லை. அந்த வண்டுகளும் எங்கோ பறந்துபோய் விடுகின்றன. வண்டில்லாமல் அந்தத் துளைகள் வழியாக முன்பு கேட்ட ஓசையை மீண்டும் எப்படிக் கேட்பது என்பது புரியாமல் அவன் தடுமாறுகிறான் இளைஞன்.
அந்த மூங்கில் துண்டை தன் கையில் ஏந்தி, முதலில் கேட்ட ஓசையை வரவழைப்பதற்காக, நாலைந்து நாட்களாக இரவும் பகலும் எப்படி எப்படியோ முயற்சி செய்கிறான். அவனுடைய எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. எப்படியோ அவனுடைய இறுதி முயற்சிக்குப் பலன் கிடைத்துவிடுகிறது. பசியையும் இல்லாமலாக்கும் ஓசை அந்த மூங்கில் துண்டிலிருந்து எழுகிறது. அந்த இனிய நாதத்தில் திளைத்தபடி தொடர்ந்து ஊதிக்கொண்டே இருக்கிறான் அவன்.
அப்போது அந்த ஓசையைக் கேட்ட தொதவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் ஓடோடி வந்து அவனை உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறான். அந்த இசை காட்டில் உறையும் தெய்வமான நாகதேவதைக்குச் சினமூட்டி சீறியெழச் செய்துவிடும் என எச்சரிக்கிறான். அந்த நம்பிக்கையைப்பற்றி எதுவும் தெரியாத அந்த இளைஞன் அந்த எச்சரிக்கைக்குரலைக் கேட்டு இசைப்பதை நிறுத்துகிறான். அதே கணத்தில் அதுவரை அந்த இசையில் மயங்கியபடி மூங்கில் புதரடியில் யாருடைய பார்வைக்கும் தென்படாமல் மறைந்திருந்த பாம்பொன்று அவனைக் கொத்திவிட்டு மறைந்துவிடுகிறது. அதன் நஞ்சினால் அவன் அக்கணமே இறந்துவிடுகிறான். நடந்தது என்ன என்பது புரியாமலேயே மூங்கில் துண்டை கையிலேந்திய இளைஞன் குழம்பிய கோலத்தில் நிற்கிறான்.
அந்தக் கதையை நீலன் சொல்லி முடித்ததும் சங்கன் ‘ஏதோ ஒரு கதை சொல்லப் போகிறாய் என நினைத்தால் நீ உன் கதையையே சொல்லிக்கொள்கிறாயா?’ என்று கேட்டுவிட்டு நகைக்கிறான். பிறகு நீலனை பலிமேடையில் ஏற்றி அவன் தலையை வெட்டி உருளவைக்கிறான். வாளில் படிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு மேடையிலிருந்து அலட்சியமாக இறங்குகிறான். அப்போது கீழே பரவய ரத்தப்பரப்பில் ஒன்பது ரத்தத்துளிகள் துடிப்பதையும் நீலன் கையிலிருந்த மூங்கில் துண்டிலிருந்த ஒன்பது துளைகளிலும் ரத்தத்துளிகள் தெரிவதையும் பார்த்துத் திகைத்து நிற்கிறான்.
இசை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு காலத்தையும் அக்காலத்து மக்கள் அந்த இசையைச் சுற்றி எந்த அளவுக்கு அச்சம் நிறைந்த கதைகளை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஒரு சொற்சித்திரமாகத் தீட்டியிருக்கும் கம்பதாஸனின் ஆற்றலை நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை.
0
கள்ளுக்கடை மோதலை முன்வைத்து கம்பதாஸன் ‘விதி’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ஒரு கள்ளுக்கடையின் தோற்றத்தைச் சித்தரிப்பதோடு தொடங்குகிறது அச்சிறுகதை. சுண்ணாம்புக் கிளிஞ்சலில் நீர்த்துளி பட்டதுபோல கொதித்துக்கொண்டிருந்த சூரியனின் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த புளியமரங்களின் பூக்களெல்லாம் வாடி ஒளியிழந்த நட்சத்திரங்களைப்போல உதிரும் காட்சியிலிருந்து அந்தச் சிறுகதை தொடங்குகிறது. அவற்றில் சில பூக்கள் காற்றில் பறந்துவந்து 37ஆம் நம்பர் கள்ளுக்கடை பெயர்ப்பலகையின் மீது உதிர்ந்து விழுகின்றன. ஒரு கோணத்தில் அப்பூக்களின் காட்சி கள்ளுக்குடியால் மீட்சியற்ற பள்ளத்தில் சரிந்து விழுந்த குடும்பங்களின் கண்ணீர்த்துளிகளாக அமைவதை வாசகர்களால் உருவகித்துக்கொள்ள முடியும். மொத்த கதையையும் அந்த ஓர் உருவகம் வழியாகவே கம்பதாஸன் வாசகர்களிடம் கடத்திவிடுகிறார். அவை எப்படி கண்ணீர்த்துளிகளாக மாறி நிற்கின்றன என்பதுதான் எஞ்சிய கதையின் பகுதி.
நகராட்சி ஊழியனாக வேலை செய்யும் சடையன் என்பவன் கள்ளுக்கடை பக்கமாக நடந்துவருகிறான். வேலையை முடித்துக்கொண்டு புறப்படும்போது அவனுக்குக் கள்ளருந்தும் எண்ணம் இல்லை. ஆனால் கள்ளுக்கடையைக் கடக்கும் கணத்தில் அந்த ஆசை பிறந்துவிடுகிறது. அக்கணமே கடைக்குச் சென்று கையிலிருந்த சில்லறைகளையெல்லாம் கொடுத்து இரண்டு புட்டி நிறைய கள்ளை வாங்கிக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து குடிக்கத் தொடங்குகிறான். சடையனைப்போலவே பல பேர் கள்ளுக்கடைக்கு வருகிறார்கள். புட்டி புட்டியாக கள்ளை வாங்கிச் சென்று ஓரமாக உட்கார்ந்து குடிக்கிறார்கள். பிறகு மனம்போன போக்கில் ஆடிப் பாடுகிறார்கள்.
அப்போது ஒரு சிறுவன் தயங்கித்தயங்கி அந்தக் கடையை நோக்கி வருகிறான். அன்று ஊருக்குள்ளே நெருப்புத்திருவிழா நடக்கிறது. விழாவை ஒட்டி குடைராட்டினம் போட்டிருக்கிறார்கள். ஏராளமான சிறுவர்கள் ராட்டினத்தில் ஏறி சுற்றுகிறார்கள். அதைப் பார்த்து அச்சிறுவனுக்கும் ராட்டினக்குதிரையின் மீது ஏறி அமர்ந்து சுற்றவேண்டும் என்கிற ஆசை வந்துவிடுகிறது. ஆனால் கட்டணமாகக் கொடுக்க அவனிடம் ஓரணா இல்லை. ஓட்டமாக ஓடி தன் அம்மாவிடம் சில்லறை கேட்கிறான். ஒரு தம்மிடி கூட இல்லாத அவள் அவனைத் திட்டி அனுப்புகிறாள்.
அவனுக்கு அப்பா இல்லை. குடித்துக் குடித்தே உயிரிழந்துவிட்டவன் அவன். மீண்டும் மீண்டும் ஓரணா கேட்டு சிறுவன் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் கொண்ட அவனுடைய அம்மா ‘எல்லாப் பணத்தையும்தான் உன் அப்பன் அந்தக் கள்ளுக்கடையில உண்டிக் கட்டி வச்சிட்டு போயிட்டானே, என்கிட்ட என்ன இருக்குது?’ என்று ஆற்றாமையில் சொல்லிப் புலம்புகிறாள். விவரம் புரியாத அந்த அறியாச் சிறுவன் அம்மாவின் சொற்களை உண்மை என்று நம்பி கள்ளுக்கடைக்கு வந்து கடைக்காரரிடம் ‘எங்க அப்பாவுடைய உண்டிப்பெட்டி உங்க கடையில இருக்குதாம். அதைக் கொடுக்கறீங்களா?’ என்று கேட்கிறான்.
வியாபார நேரத்தில் தொல்லை கொடுப்பதாக நினைத்து கள்ளுக்கடை முதலாளி அவனை அடித்து கீழே தள்ளிவிடுகிறான். அடி தாளாமல் அழும் அச்சிறுவனைப் பார்த்ததும் மரத்தடியில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த சடையனுக்குப் பாவமாக இருக்கிறது. தலைக்கு ஏறிய போதை அப்படியே இறங்கிவிடுகிறது. சிறுவனை நெருங்கி அவனிடம் பேசி உண்மையைத் தெரிந்துகொள்கிறான்.
அச்சிறுவனுக்கு உதவ அவனுக்கு விருப்பமாக இருக்கிறது. ஆயினும் அவனிடம் சில்லறை இல்லை. கள்ளுக்கடைக்காரரிடம் சென்று ஓரணா கடனாகக் கேட்கிறான். அவர் வியாபார நேரத்தில் கல்லாவிலிருந்து பணம் எடுக்கும் பழக்கமில்லை என்று மறுத்துவிடுகிறார். அதைக் கேட்டதும் சடையன் சினம் கொள்கிறான். ஒரே கணத்தில் வேகமாக முன்னேறி எல்லோருடைய முன்னிலையிலும் கல்லாவை இழுத்து சில்லறையை எடுக்க முயற்சி செய்கிறான். உடனே அது சண்டையாக முற்றிவிடுகிறது. காவல்துறையினர் வந்து சடையனை ஸ்டேஷனுக்கு அடித்து இழுத்துச் செல்கிறார்கள். பக்கத்தில் நின்றிருந்த சிறுவனையும் அடித்து விரட்டியடிக்கிறார்கள். எல்லோருமே அவரவர் கடமையைத்தான் செய்கிறார்கள். ஆனால் அறியாச்சிறுவனின் விருப்பத்தை ஒருவரும் நிறைவேற்றவில்லை. அது ஏக்கமாகவே உறைந்துவிடுகிறது.
0
கம்தாஸனின் சமூக அக்கறை வெளிப்படும் சிறுகதை ‘ஒன்பதாம் நெம்பர் கட்டில்’. ஆஸ்பத்திரி வாசல்தான் கதை நிகழும் இடம். ஒருநாள் இரவில் பிரசவத்துக்காக கிராமத்திலிருந்து அழைத்துவந்த மகளை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு ஆஸ்பத்திரி வாசலில் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார் நாடிமுத்து. இரண்டாம் நெம்பர் வார்டில் ஒன்பதாம் நெம்பர் கட்டிலில் அவள் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
நள்ளிரவு நேரத்தில் நாடிமுத்து தனித்து அமர்ந்திருப்பதை அந்த வழியாகச் சென்ற போலீஸ்காரர் ஒருவர் பார்த்துவிட்டு நெருங்கிவந்து அவரை விசாரிக்கிறார். நாடிமுத்து தன் மகளைப் பிரசவத்துக்காகச் சேர்த்திருக்கும் செய்தியை உள்ளது உள்ளபடி சொல்கிறார். ஆனால் போலீஸ்காரர் அதை நம்ப மறுக்கிறார். திருட்டுப்பயலே திருட்டுப்பயலே என்று பத்துமுறை மீண்டும் மீண்டும் சொல்லி அதட்டுகிறார். ‘எதைத் திருடிச் செல்லத் திட்டம் போட்டு இங்கு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று மிரட்டுகிறார். நாடிமுத்து சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அதை நம்ப மனமில்லாத போலீஸ்காரர் ‘என்னை மீறி என்ன செய்துவிடுகிறாய் என்பதை நானும் பார்த்துவிடுகிறேன்’ என்று எச்சரித்துவிட்டுச் செல்கிறார். திருட்டுப்பயலே என்று அவர் சொன்ன சொல் அவருடைய உள்ளத்தைத் தைக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய வயலில் அறுவடை முடிந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கலம் நெல் விளைந்திருந்தது. சந்தையில் விற்று கிடைக்கும் பணத்தில் கடனையெல்லாம் அடைத்துவிட்டு நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைத்தார். மூட்டை கட்டி வண்டியில் ஏற்றுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில் கடன் கொடுத்தவர் வண்டியோடு வந்து எல்லா மூட்டைகளையும் கொள்ளையடிப்பதுபோல வாரிப் போட்டுக்கொண்டு போய்விட்டார். அவரையெல்லாம் திருடன் என்று நினைக்காத இந்த உலகம் ஆதரவில்லாத நிலையில் ஆஸ்பத்திரி வாசலில் அமர்ந்திருக்கும் தன்னைத் திருடன் என்று நினைக்கிறதே என நினைத்து மனம் கலங்குகிறார் நாடிமுத்து.
விடியும் நேரத்தில் தன் மகள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் கதவு திறக்கப்படுவதைப் பார்த்து பரபரப்போடு எழுந்து நிற்கிறார் நாடிமுத்து. ஒரு பெண்ணையும் குழந்தையையும் படுக்கவைத்து சக்கரப்படுக்கையைத் தள்ளிக்கொண்டு வருகிறார் ஒரு செவிலி. உடனே ஆர்வத்தோடு அவளுக்கருகில் செல்கிறார் நாடிமுத்து. அந்தச் செவிலி ஒருகணம் நின்று பிரசவத்தின்போது தாயும் சேயும் இறந்துவிட்டதாகச் சொல்லி அவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார். மகளுடைய உயிரற்ற சடலத்தின் மீது விழுந்து அழுகிறார் நாடிமுத்து.
அந்த நேரத்தில் பிரசவத்துக்காக ஒரு பெண்ணை சிலர் காரில் அழைத்துவருகின்றனர். அதே வார்டில் சற்றுமுன் காலியான கட்டிலில் சேர்க்குமாறு சொல்கிறார் சேவகர். இந்த உலகத்தில் ஒன்பதாம் நெம்பர் கட்டிலுக்கு ஒருவர் போனால் இன்னொருவர் வந்து சேர வழியிருக்கிறது. ஆனால் சின்னஞ்சிறிய ஏழைக் குடும்பத்தில் ஒருவருடைய உயிரிழப்பு என்பது அக்குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிடுகிறது.
ரவீந்திரநாத் தாகூரை ஒரு பாத்திரமாகக் கொண்டு புதுவெள்ளம் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார் கம்பதாஸன். தாகூரைச் சந்திப்பதற்காக அவர் வீட்டுக் கூடத்தில் ஒரு பெண் காத்திருக்கும் புள்ளியிலிருந்து அக்கதை தொடங்குகிறது. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகே அவளுக்குத் தாகூரை அவருடைய எழுத்தறைக்குள் சென்று பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கிறது.
உள்ளே சென்றதும் அவளைப்பற்றி விசாரிக்கிறார் தாகூர். அவள் தான் ஒரு கவிஞனின் மனைவி என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். தன் கணவன் எழுதியிருக்கும் காவியத்துக்கு அவர் ஒரு முன்னுரை எழுதிக் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறாள். அக்காவியத்தைப் பதிப்பாசிரியர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் அனைவருமே அதைப் பதிப்பிக்க மறுத்துவிட்டதாகவும் தாகூரின் முன்னுரை இருந்தால் பதிப்பிக்கலாம் என்று கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறாள்.
ஏற்கனவே பல வேலைகளை முடிக்காமல் வைத்திருக்கும் சூழலில் தாகூருக்கு ஒரு முன்னுரைக்காக நேரம் ஒதுக்க விருப்பமில்லை. அவளைத் திருப்பி அனுப்பவே அவர் முதலில் முயற்சி செய்கிறார். ஆயினும் அவளுடைய முகத்தில் படிந்திருக்கும் சோகம் தாகூருடைய மனத்தை மாற்றிவிடுகிறது. அவள் கொண்டுவந்திருந்த கையெழுத்துப் பிரதியை வாங்கி சில பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிப் பார்க்கிறார்.
அப்பிரதியில் பல இடங்களில் இலக்கணப் பிழைகள் மலிந்திருக்கின்றன. அவற்றைப் பார்த்ததும் அவருக்கு முதலில் எரிச்சல் வருகிறது. ஆயினும் அதன் பொருளழகின் காரணமாக பிழைகளைப் பொருட்படுத்தாமல் சில பக்கங்களைப் படிக்கிறார். அவருக்கு அக்காவியத்தில் ஏதோ ஒரு புதுமை இருப்பதாகத் தோன்றுகிறது. அந்தப் பெண் அந்தக் காவியத்தை இலக்கணக் கட்டுக்குள் அடங்காத ஒரு புதுவெள்ளம் என்று குறிப்பிடுகிறாள்.
அப்போதுதான் அந்தக் காவியம் முற்றுப்பெறாமல் இருப்பதை உணர்கிறார் தாகூர். எல்லாப் பதிப்பாசிரியர்களும் நிராகரித்துவிட்டதால் அந்தச் சோகத்தில் தன் கணவர் அதை எழுதி முடிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறாள் அந்தப் பெண். அவள் மீது கருணை கொண்ட தாகூர் அவளிடம் கையெழுத்துப் பிரதியைத் திருப்பிக் கொடுத்து காவியத்தை முழுமை செய்து வாங்கி வருமாறும் தான் முன்னுரை எழுதிக் கொடுப்பதாகவும் சொல்லி அனுப்பிவைக்கிறார்.
மனைவி வீட்டுக்குத் திரும்பி கணவனிடம் ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்துக்கொண்டிருக்கிறது’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார். தாகூரைச் சந்தித்த செய்தியை விவரித்து அவர் முன்னுரை அளிக்க ஒப்புக்கொண்டதையும் தெரிவிக்கிறாள். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த கவிஞன் அன்றிரவே எஞ்சிய பகுதியை எழுதி அக்காவியத்தை முழுமை செய்கிறான்.
அடுத்தநாள் காலை முழுமையடைந்த காவியப்பிரதியோடு அவர்கள் தாகூரின் வீட்டுக்குப் புறப்படுகிறார்கள். தெருவில் நடக்கும் சமயத்தில் ஊரெங்கும் தாகூர் மறைந்துவிட்ட செய்தியே பேச்சாக இருக்கிறது. அதைக் கேட்டு அவர்கள் திகைத்து நின்றுவிடுகிறார்கள். கடைசிக்கணத்தில் கைநழுவிப் போகும் மகத்தான வாய்ப்பை கச்சிதமான வடிவத்தில் கதையாக மாற்றியிருக்கிறார் கம்பதாஸன்.
0
தலைப்புக்கதையான முத்துச்சிமிக்கி கம்பதாஸனுடைய சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு சிறுகதையில் கூடிவரும் கலை ஒருமையைவிட அதன் வழியாக வெளிப்படும் அக்கறையையே கம்பதாஸன் முக்கியமானதாகக் கருதுகிறார்.
ஓர் இளம்பெண்ணுக்கு நடனத்தில் நல்ல ஆர்வம் இருக்கிறது. அதைத் தெரிந்துகொண்ட அவளுடைய தந்தையார் அவளுக்கு நடனப்பயிற்சி அளிக்கிறார். அவளும் நடனமுறைகளை வேகவேகமாக கற்றுக்கொள்கிறாள். அப்போது ஒருநாள் ஊரிலேயே மிகப்பெரிய நாட்டியக்காரியான வாசவதத்தையின் நடனம் நடைபெறுகிறது. அந்த நடனத்துக்கு அவளையும் தன்னோடு அழைத்துச் செல்கிறார் அவளுடைய தந்தையார்.
மேடையில் வாசவதத்தை மயில்போல ஒயிலாக நடனமாடியதை அனைவரும் ரசித்த கணத்தில் அவள் மட்டும் வாசவதத்தை காதில் அணிந்திருந்த முத்துச்சிமிக்கையைப் பார்த்து ரசிக்கிறாள். அதேபோன்ற முத்துச்சிமிக்கிக்காக அவள் மனம் ஏங்குகிறது. பல ஆண்டுகள் காத்திருந்தும் அதற்கான வாய்ப்பு அவளுக்குக் கைகூடி வரவே இல்லை.
நாளடைவில் அவளும் ஊரறிந்த ஒரு சிறந்த நடனக்காரியாக புகழ்பெறுகிறாள். ஒருநாள் நகைவணிகம் செய்யும் வணிகர் விற்பனைக்காக அவளிடம் சில நகைகளைக் காட்டுகிறார். அந்த நகைகளில் முத்துச்சிமிக்கிகளும் உள்ளன. அவை ஒரு காலத்தில் வாசவதத்தை அணிந்திருந்த முத்துச்சிமிக்கிகள் என்றும் கடன்தொல்லையின் காரணமாக அவர் அவற்றைத் தம்மிடம் விற்றுவிட்டார் என்றும் அந்த வணிகர் தெரிவிக்கிறார். உடனே அந்த இளம்பெண் பணம் கொடுத்து அந்த முத்துச்சிமிக்கிகளை வாங்கி அணிந்துகொள்கிறாள். மிகப்பெரிய ஒரு கனவு நிறைவேறியதாக அவள் மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
ரகுநாதர் என்பவர் பாளையம்பட்டி ஜமீன்தார். அழகின் ஆராதகர். அவருடைய செலவில்தான் அவள் நாட்டியப்பேரொளியாகத் திகழ்கிறாள். அதற்கு விலையாக அவரோடு அவள் இல்வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறாள். அவள் புதிதாக அணிந்திருக்கும் முத்துச்சிமிக்கிகளைப் பார்த்து மனம் திறந்து பாராட்டுகிறார்.
அடுத்தநாள் ரகுநாதர் தன்னோடு கலாநிதி என்கிற தன் நண்பரை அழைத்து வருகிறார். அவர் கவிஞர். அவள் அணிந்திருக்கும் முத்துச்சிமிக்கியைப்பற்றி கவிதை எழுதவேண்டும் என்கிற கோரிக்கையோடு அவரை அழைத்து வந்ததாகத் தெரிவிக்கிறார் ரகுநாதர். ரகுநாதரின் விருப்பத்தை அறிந்து முதலில் அவள் நாணமுற்றாலும் உள்ளூர மகிழ்ச்சியில் திளைக்கிறாள். கலாநிதி அவள் முக அழகை ஒருமுறை ஆழமாக உற்று நோக்கிவிட்டு உடனடியாக ஒரு பாடலை ஒரு தாளில் எழுதிக் கொடுக்கிறார்.
மூச்சுவிடும் கடலில் முத்தெடுக்கச் சென்று
மூச்சுவிட்ட தொழிலாளர் கண்ணீர்த் துளியின்
பேச்சதனைப் பேசுதையா, பெண்ணொருத்தி பெருங்கடலாம்
விழிகளிடம் முத்துச் சிமிக்கி
தன்னைப்பற்றிய பாடல் என்றதும் அதன் பொருள் புரியாமலேயே அவள் அருமையாக இருக்கிறது என்று அந்தக் கவிஞரை மனம் திறந்து பாராட்டுகிறாள். ரகுநாதரும் பாராட்டி அவரை அனுப்பிவைக்கிறார்.
அன்று நள்ளிரவில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அந்தப் பெண் அக்கவிதையை எடுத்து மீண்டும் படித்துப் பார்க்கிறாள். படிக்கப்படிக்க அவ்வரிகளிடையில் அடங்கியிருக்கும் மறைமுகமான சோகத்தை அவளால் புரிந்துகொள்ள முடிகிறது. அக்கணத்தில் அவள் அணிந்திருக்கும் முத்துச்சிமிக்கி சுடுவதாக இருக்கிறது. வானத்தில் தெரியும் நட்சத்திரங்களெல்லாம் தொழிலாளர்களின் கண்ணீர்த்துளிகளாகத் தெரிகின்றன. இப்படி நினைக்க நினைக்க அவள் மனபாரம் அதிகரிக்கிறது.
அக்கணமே அவள் தன்னுடைய முத்துச்சிமிக்கிகளைக் கழற்றிவிட்டு கண்ணீர் விடுகிறாள். ஒரு காலத்தில் அழகுச்சுடராகத் தெரிந்த ஓர் ஆபரணம் இன்னொரு காலத்தில் கண்ணீர்த்துளியாகத் தெரியத் தொடங்குகிறது. சமூகம் தொடர்பான ஏதோ ஒரு புரிதல் அவள் மனநிலையை மாற்றிவிடுகிறது.
0
தொடக்க நாட்களில் கம்பதாஸன் நாடகங்களில் பாடி நடித்தார். பிறகு நாடகங்களுக்கான பாடல்களை எழுதினார். அதன்பிறகு அவர் திரைப்படங்களில் பாடல்களை எழுதும் வாய்ப்பையும் பெற்றார். புராணப்படங்களுக்கு மரபான முறையிலேயே பாடல்களும் எழுதப்பட்டு வந்த காலத்தில் கம்பதாஸன் மாறுபட்ட கோணத்தில் சமூகக்கருத்துகளும் அரசியல் கருத்துகளும் வெளிப்படும் வரிகளைக் கொண்ட பாடல்களை எழுதிக் கவனம் பெற்றார். அவர் வாழும் காலத்திலேயே அவருடைய படைப்புகளாக எட்டு கவிதைத்தொகுதிகளும் பல காவியங்களும் இரு நாடகப்பிரதிகளும் ஒரு சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தன.
கம்பதாஸனுடைய சிறுகதைகள் வடிவ நேர்த்தி கொண்டவை. பல சமயங்களில் தம்முடைய சமூகப்பார்வையை வெளிப்படுத்துவதற்காக கூடுதலாக சில வரிகளை எழுதியிருப்பதைப்போலத் தோன்றினாலும், அவை கதையின் போக்கிலேயே வெளிப்படும் வகையில் எழுதுவதில் அவர் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஒருபக்கம் கவிதைகள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற ஆர்வமும் இன்னொரு பக்கம் திரையுலக வாய்ப்புகளும் அவருடைய நேரத்தைப் பங்கிட்டுக் கொண்டதால் அவரால் அவர் நினைத்த அளவுக்கு சிறுகதைத்துறையில் நிலைத்துநிற்க முடியாமல் போய்விட்டது. ஒரு தொகுப்பு மட்டுமே வெளிவந்திருந்த போதும் தமிழ்ச்சிறுகதை உலகத்துக்கு வளம் சேர்த்தவர்களின் பட்டியலில் இடம்பெறும் வகையில் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

