Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

சமணர் என்பது இன்று பொதுவாக ஜைனர்களை (Jains) அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல், வடமொழியின் ‘ஸ்ரமணர்’ (Śramaṇa) என்ற சொல்லாகும். ‘ஸ்ரமணர்’ என்பது துறவிகளைக் குறிக்கும் பொதுப்பெயராக அக்காலத்தில் வழங்கப்பட்டது. இத்துறவியர் மரபில் ஜைனர்கள், பௌத்தர்கள், ஆசீவகர்கள் உள்ளிட்ட பல்வேறு சிரமணப் பிரிவினரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் காலப்போக்கில், தமிழகத்தில் ‘சமணர்’ என்ற சொல் ஜைனர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக நிலைபெற்றுவிட்டது.

அன்றைய வைதீக மரபுகளுக்கு மாற்றாக உருவான சிரமணச் சிந்தனைப் பள்ளிகள், வினைப்பயன் மற்றும் ஊழ்வினை ஆகிய இரு அடிப்படைக் கோட்பாடுகளில் வேறுபட்டன. ஒருவர் செய்யும் செயல்களுக்கேற்ப அதன் நன்மை, தீமைகள் அமையும் என்ற வினைப்பயன் கொள்கையை ஜைனமும் பௌத்தமும் ஏற்றுக்கொண்டன. இதற்கு மாறாக, உலகில் நிகழும் அனைத்தும் முன்கூட்டியே விதிக்கப்பட்டவை; அவை விதிக்கப்பட்டபடியே நடைபெறும் என்ற ஊழ்வினை அல்லது நியதிக் கொள்கையை ஆசீவகர்கள் (Ajivikas) பின்பற்றினர்.

ஆசீவகர்களின் மூல நூல்கள் ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவை கிடைக்கவில்லை; காலப்போக்கில் அவை அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அவர்களின் கொள்கைகள் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் பெரும்பாலும் பௌத்த மற்றும் ஜைன இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகளின் மூலமே அறியப்படுகின்றன. இதனால், ஆசீவகர்களைப் பற்றிய தகவல்கள் முழுமையாக நம்பகமானவை அல்ல என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், அவை ஆசீவகர்களுக்கு எதிராக இருந்த மத மரபுகளைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டவை. எனவே, அவர்களைப் பற்றிய வர்ணனைகளை விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே நாம் அணுக வேண்டியுள்ளது. பீஹார் மாநிலத்தின் பராபர் குகைத்தள வளாகத்தில் உள்ள விஸ்வகர்மா குகையில், ‘ஆசீவகர்’ என்னும் சொல் உளியால் சிதைக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். இந்தக் கல்வெட்டுகள், அக்காலத்தில் பௌத்த மற்றும் ஜைன மதங்களுடன் இணைந்து செழித்திருந்த ஆசீவக சமயத்திற்காகப் பல குகைகள் அர்ப்பணிக்கப்பட்டதைப் பதிவு செய்கின்றன.

பின்னாளில், ‘ஆசீவகர்கள்’ என்ற சொல் மதப் போட்டியாளர்களால் உளியால் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தச் செயல், பிராமி எழுத்து புரிந்துகொள்ளப்பட்ட காலத்திலேயே (அநேகமாக கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்பே) நிகழ்ந்திருக்கலாம்.

ஆனால் கல்வெட்டுகள் ஆழமாகப் பொறிக்கப்பட்டிருந்ததால், அவற்றின் வாசகங்கள் இன்றும் எளிதாக வாசிக்கப்படுகின்றன. இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமல்ல, தென்னகத்திலும் ஆசீவகத்தின் தாக்கத்தையும், பிற மதத்தினருக்கு ஆசீவகர்கள்மீது இருந்த காழ்ப்புணர்ச்சியையும் இதன் மூலம் அறிய முடிகிறது. ஆசீவகம், ஒருவகையில் இன்றைய நாத்திகக் கருத்துகளின் சில கூறுகளைக் கொண்டிருந்ததால், பிற மதத்தினர் அதன் மீது இயல்பாகவே வெறுப்புணர்வைக் கொண்டிருந்திருக்கலாம்.

தென்னிந்தியாவில் ஆசீவகத்தின் தாக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டு வரை இருந்ததைக் கல்வெட்டுகள் வாயிலாக உணர முடிகிறது. ஆசீவகம் பற்றிய குறிப்புகளைக் கொண்ட கல்வெட்டுகள்:

1. சிம்மவர்மன் பல்லவர் (கி.பி. 446)

இவரது ஆட்சியின் 10ஆம் ஆண்டில் வழங்கிய செப்பேட்டில், நெல்லூர் மாவட்டம் விடவலூர் (விலவட்டி) கிராமம் விஷ்ணுசர்மன் என்ற பிராமணருக்கு வழங்கப்படுகிறது. அதில் விதிக்கப்பட்டிருந்த உள்ளூர் வரிகள்:

இரும்பு வரி
தோல் தொழில் வரி
நெசவாளர் வரி
கயிறு தயாரிப்பாளர் வரி
ஆசீவகர் வரி

எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. கிழக்கு சாளுக்கிய அம்மராஜன் II (கி.பி. 945–970)

குண்டூர் பகுதியில் உள்ள 4 கிராமங்கள் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டன. அவற்றில் ‘அசுவுலபாறு’ (Acuvulaparru) என்கிற கிராமப் பெயர், ‘ஆசீவகர் வாழ்ந்த கிராமம்’ என்கிற பொருளில் விளக்கப்படுகிறது.

3. ராஷ்டிரகூட மூன்றாம் கிருஷ்ணர் (10ஆம் நூற்றாண்டு)

திருவண்ணாமலை மாவட்டம் காவனூர் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு. கடவுளுக்கோ, வைத்தியர்களுக்கோ அல்லது ஆசீவகர்களுக்கோ வழங்கப்படும் நிலங்களை, வாங்குபவரும் விற்பவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கிறது.

4. முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1072)

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஆவணி கல்வெட்டு. இங்கு ‘அசுவி மக்கள்’ (Acuvi-makkal) என்கிற பெயரில் ஆசீவகர்கள் குறிப்பிடப்படுகின்றனர். குறிப்பிட்ட உள்ளூர் வரிகளை அவர்கள் செலுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

5. முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1103)

கீழூர் வீரட்டானேஸ்வரர் கோயில் கல்வெட்டில், ‘அசுவி காசு’ (Acuvi-kācu) என்கிற வரி குறிப்பிடப்படுகிறது.

6. மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1223)

திருவொற்றியூர் கல்வெட்டில், ‘ஆசீவக மக்களிடம் வசூலிக்கப்படும் வரி’ (Acuvikal-pērār-kācu) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

7. பொய்கை (விரிஞ்சிபுரம் அருகில்)

கி.பி. 1238–1244 காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகளில், ‘ஆசீவகர் கடமை/வரி’ (Acuva-k-katamai) என்கிற பெயரில் வரி பதிவு செய்யப்பட்டுள்ளது.

8. ராஜகம்பீர சம்புவராயன் (கி.பி. 1259)

படவேடு அம்மையப்பேஸ்வரர் கோயில் கல்வெட்டு. ஆசீவகர் வரி மற்றும் உவச்சர் வரி ஆகிய இரண்டும் குறிப்பிடப்படுகின்றன.

9. ஹொய்சாளர் ராமநாத தேவன்

கி.பி. 1291 முதல் 1346 வரை கோலார் மாவட்டத்திலுள்ள மதிவாளா, கல்லுஹள்ளி, கைவாரா, குடிஹள்ளி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் “Acuva-k-katamai”, “Acuvam avalambalam”, “Acuvam tari-irai” போன்ற சொற்றொடர்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இவை ஆசீவகர்களுடன் தொடர்புடையவை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில், ஆசீவக மரபினர் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்திருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

உலகமகாதேவிக்கு பேய் பிடித்த கதை

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் கண்டறியப்பட்ட இரண்டு துண்டுக் கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் துறையினர் படியெடுத்துள்ளனர். அவை 1954ஆம் ஆண்டின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் (ARE-360/1954) வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் பல்வேறு வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றிருப்பதால், இக்கல்வெட்டு சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

இக்கல்வெட்டு, பல்லவ அரசன் ராஜசிம்மனின் தேவியான உலகமகாதேவிக்கு பிசாசு பிடித்ததாகவும், ஆசீவக மரபைச் சேர்ந்த கௌதமன் என்னும் துறவி அதை நீக்கியதாகவும், அதற்குப் பரிசாக, வழிபாட்டுக்காக ஓர் ஊர் தானமாக வழங்கப்பட்டதாகவும் பதிவு செய்கிறது.

இக்கல்வெட்டு பல்லவ அரசன் நரசிங்கப் போத்தரையனின் 18ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இந்த அரசன், இரண்டாம் நரசிம்மன் எனப்படும் ராஜசிம்மனாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வெட்டில் குறிப்பிடப்படும் லோகமாதேவி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் குறிப்பிடப்படும் லோகமகாதேவியே எனக் கருதப்படுவதால், இக்கல்வெட்டு ராஜசிம்மன் காலத்தைச் சேர்ந்தது என்பதும் வலுப்பெறுகிறது.

சிவசூடாமணி என்ற பட்டத்தை ஏந்திய ராஜசிம்மன் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் ரங்கபதாகையும் லோகமகாதேவியும் பல சிவாலயங்களை நிறுவியுள்ளனர். இக்கல்வெட்டில் பிசாசு பிடித்ததாகக் குறிப்பிடப்படும் அரசியே அந்த லோகமகாதேவி ஆவார். அவருடைய நோயை நீக்கியவர் ஆசீவக மரபைச் சேர்ந்த சமணத் துறவி. அதற்காக அரசர் ஒரு சமணப்பள்ளிக்கு ஓர் ஊரைத் தானமாக வழங்கியுள்ளார்.

இதிலிருந்து அக்காலத்தில் பல்வேறு சமயங்களுக்குள்ளும் சுமுக உறவு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். இன்று ‘சமணர்’ என்ற சொல் பொதுவாக ஜைனர்களைக் குறிப்பதாக இருந்தாலும், அக்காலத்தில் அது ஆசீவகத் துறவிகளையும் உள்ளடக்கிய பொதுப்பெயராகப் பயன்பாட்டில் இருந்ததை, இக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகள் மருத்துவத்திலும் மாந்திரீகச் சிகிச்சைகளிலும் சிறந்து விளங்கியதை அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரின் வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. இலக்கியங்களில் காணப்படும் இந்தச் செய்திக்கு இக்கல்வெட்டு ஒரு வரலாற்றுச் சான்றாக அமைகிறது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் அரசின் நிலவருவாய் நிர்வாகம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததை அறிய முடிகிறது. புரவுவரி, புரவுவரி நாயகம், புரவுவரித் திணைக்களம், புரவுவரித் திணைக்களத்துக் கண்காணி போன்ற பதவிகள் பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டிலும் குணமங்கலங்கிழான் என்பவர் ‘புரவுவரி நாயகன்’ என்று குறிப்பிடப்படுகிறார். இதன் மூலம், சோழர்களுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே நிலவருவாய் நிர்வாக அமைப்பு முறையாகச் செயல்பட்டதை அறிய முடிகிறது.

கல்வெட்டு

1. ஸ்வஸ்தி ஸ்ரீ நரசிங்கப் போத்தரையற்கு யாண்டு பதிநெட்டாவது லோக
2. மாதேவியாரை பைஸாக்ஷம் பற்ற
3. விலகிகளெல்லாம் உருவசநத்தோந் ஹூமியெல்லாம் இறங்கலிட அம்மொழி கேட்டு அஜீவ
4. க டியயகத்து அவர் நெறி வழாமை இருந்த ஸ்ரீ பாடிங்களாந பள்ளி ஆசார் ராணாக்கனெந் நற்
5. கௌதமநெந் சமணன் மாதேவியை மாதெரஸ பட்டிநத்து அறங்களெல்லாமிறங்கல் மீட்டு மது ஸா
6. மகிழொடு கூற மந்நவனு மருக் கொண்டு ஹூக்ஷத்தி நா நல்லறம் பேணி அறிவர் கோயில் முநிவரு
7. முறையுளுதாருத்தே எழிலிய மகிழம் பள்ளி யெனப் பியர் பெற்ற அதந் கீழ்பாற்கெல்லை
8. மேற்கும் மேல்பாற்கெல்லை வதிக்கு 8 மனைப் படப்புக்கு கிழக்கும் தென்பாற்கெல்லை காலுக்கு வடக்கும் வடபாற்கெ
9. லை மதிளுக்கு தெற்கு முண்ணில மொழிவின்றி மகிழம் பள்ளி அதற்புறமாக அணுக்கப் பல்லவந் சரு
10. விண்ணப்பத்தினால் வெண்குன்றக் கோட்டத்து போர் மலி பூண்டியு மெயிற் கோடடத்து துண்டுணுக்க சேரி நாகர் பட்டி தந்நி
11. மெய்காப்பான் அறிஞ்சயந் உடை பட்டியாகிய நிலது மானை நடத்து கண்காணி கிழானும்… உடையான்
12. யான் மாணி திருக்காளியும் புரவுவரி நாசகன் சி குணமங்கலங் ங்கா திழ

இரண்டாவது துண்டு

1. ம் அரைசு முதலாக பஞ்
2. று முன்னடத்தி மகிழம்பள்ளிப் புற .க்க …டு வள்ளுவ.
3. க்கம் ஆப்புழார் கோவடி மனை ஆறேகாலும் அறக்கோவல்லதாழ்
4. வென் ஆசற நீக்க மகிழம்பள்ளிச் சேரி என்று நாமங் குறித்து பூரண
5. படிமம் பொலிவுற பொங்கி ஆஜீவகர் தம்மால் மென்
6. இவ்வறங் காப்பானடி என் முடி .
7. கொற்றங்கோன் ந

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *