Skip to content
Home » முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

நடந்ததை நடந்தவாறும் உள்ளதை உள்ளவாறும் சொல்வதே நல்ல இதழியல். ஆனால், தங்கள் செய்தியின் விளைவாக, சின்ன அளவில் ஏதேனும் ‘செயல்’ நடந்தால்கூட (யதார்த்தமாக நடந்தாலும்) இது எங்கள் செய்தியின் எதிரொலி என்று விளம்பரப்படுத்திக்கொள்ள எந்த நிறுவனமும் தயங்குவதே இல்லை. இந்த நகைமுரண் நடப்புக்கு மத்தியில், தனது செய்திகளால் தன் ஊரில் மாற்றம் நிகழ வேண்டும் என்று எண்ணிய செய்தியாளர் கருண் மிஸ்ராவை மண்ணோடு மண்ணாக்கியது மணல் மாஃபியா கும்பல்.

அந்த நாள் 2016 பிப்ரவரி 13. உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டம். பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் 32 வயதான பத்திரிகையாளர் கருண் மிஸ்ரா. பிறந்து 15 நாட்களே ஆன அவரது இரண்டாவது குழந்தையும் மனைவியும் முதல் குழந்தையும் காத்திருந்தனர்.

வீட்டை அடைய இன்னும் சில நிமிடங்களே இருந்தன. அப்போது மூன்று பேர் மோட்டார் சைக்கிள்களில் அவரைப் பின்தொடர்ந்தனர். ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த கருண் மிஸ்ரா, அவர்கள் நெருங்கி வந்துவிட்டதால் தப்ப வழியின்றிச் சிக்கிக் கொண்டார். துப்பாக்கியால் சரமாரியாகச் சுடப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் குடும்பம் தன் ஆணிவேரை இழந்து நிற்கிறது.

குண்டுகள் துளைத்தது அவரது உடலை மட்டுமல்ல, உண்மையை எழுதத் துணிந்த ஒரு மாவட்ட நிருபரின் உறுதியையும்தான். அப்படி என்ன உண்மையை எழுதினார்? யார் இந்த கருண் மிஸ்ரா?

கருண் மிஸ்ரா, இந்தி நாளிதழான ஜன்சந்தேஷ் டைம்ஸ் (Jansandesh Times) பத்திரிகையின் அம்பேத்கர் நகர் மாவட்டப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். உள்ளூர் அரசியல், நிர்வாகம், ஊழல், சட்டவிரோதச் செயல்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து எழுதி வந்தார். செய்தியைப் பதிவு செய்வது மட்டுமல்ல, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது நம்பிக்கை. ‘அவர் ஒரு செய்தியாளர் அல்ல; ஒரு போராளி’ என்று அவருடைய நண்பர்கள் நினைவுகூர்ந்தனர்.

அவரது இதழியலில் கடைசி பெரிய போராட்டம், கோமதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிரானது. இந்தியாவில் கட்டுமானத் துறை வேகமாக வளர்ந்தபோது, மணல் ஒரு பெரிய கருப்புச் சந்தைப் பொருளாக மாறியது. ஆற்றங்கரைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொழிலை நடத்துவோர் வெறும் மணல் வியாபாரிகளோ தனித்தனி தொழிலதிபர்களோ அல்ல; அரசியல், உள்ளூர் அதிகார அமைப்புகள், ஒப்பந்ததாரர்கள், ஆயுத கும்பல்கள் எனப் பல அடுக்குகளைக் கொண்ட சக்திவாய்ந்த வலையமைப்பு.

அந்த வலையமைப்பின் மீது கைவைப்பது, மரணத்தை அழைப்பதற்குச் சமமானது. கருண் மிஸ்ரா அந்த ஆபத்தை நன்றாக அறிந்திருந்தார். இருந்தும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. காரணம், இந்தமுறை கோமதி ஆற்றங்கரையில் நடக்கும் மணல் கொள்ளை அப்பகுதியின் மொத்த எதிர்காலத்தையும் நாசமாக்கும் அளவுக்கு வீரியமாக இருந்தது.

அவரை அமைதிப்படுத்த முதலில் பணத்தைப் பயன்படுத்தப் பார்த்தார்கள். சட்டவிரோத மணல் அகழ்வு குறித்து செய்திகளை வெளியிடாமல் இருக்க லஞ்சம் வழங்க முயன்றதாக அவரது நண்பர்கள் பின்னர் தெரிவித்தனர். அது பலிக்கவில்லை. அடுத்ததாக மிரட்டல்கள் வந்தன.

‘தொடர்ந்து இதை எழுதுவது உனக்கு நல்லதல்ல’ என்று எச்சரிக்கப்பட்டார். ஆனால் கருண் செய்தியை நிறுத்தவில்லை. கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே, ‘எனக்கு ஆபத்து இருக்கிறது; ஆனால் நான் போராட வேண்டியிருக்கிறது’ என்று நண்பர்களிடம் கூறியிருந்தார்.

பிப்ரவரி 11 அல்லது 12ஆம் தேதிக்குள் தனக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்ற தகவலும் 5ஆம் தேதியே அவருக்குக் கிடைத்துவிட்டதை நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். அந்த அச்சத்தைவிட அவரது இதழியல் நெறி வலிமையானதாக இருந்தது.

கருண் உயிரிழந்த மறுநாளே உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஐந்து நாட்களுக்குள் காவல்துறை ஐந்து பேரைக் கைது செய்தது.

உள்ளூர் மணல் ஒப்பந்ததாரர்களான ராகுல் சிங் மற்றும் பவன் சிங் ஆகியோர் கொலையைத் திட்டமிட்டதாகவும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையினரை ஏவியதாகவும் காவல்துறை தெரிவித்தது. அஜய் சிங், சந்தீப் சிங், ஹைதர் அப்பாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இரு சந்தேகநபர்களைக் காவல்துறை தேடி வந்ததாக சிபிஜே பதிவு செய்தது.

இந்தக் கைது நடவடிக்கை, இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலை வழக்குகளில் அரிதாகக் காணப்படும் வேகமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால் கைது நடந்தாலே நீதி கிடைத்துவிட்டது என்று அர்த்தமில்லை. வழக்கு நீதிமன்றத்தை அடைகிறதா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறதா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா? இக்கேள்விகள் முக்கியமானவை.

இண்டியாஸ்பென்ட் (IndiaSpend) வெளியிட்ட ஆய்வின்படி, இந்தியாவில் பத்திரிகைப் பணியுடன் தொடர்புடைய கொலைகளில் பெரும்பாலானவை தண்டனையின்றி முடிவடைந்ததாக சிபிஜே தரவுகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பல வழக்குகளில்கூட இறுதியில் தண்டனை கிடைக்காத நிலை தொடர்ந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில் மணல் கொள்ளை என்பது அரசியல் மற்றும் குற்ற உலகின் கூட்டணியாக வளர்ந்துள்ளது. இந்தச் சூழலில், மாவட்ட அளவிலான பத்திரிகையாளர்களே முதலில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தேசிய ஊடகங்களின் வெளிச்சம் அவர்கள்மீது அரிதாகவே விழுகிறது; ஆனால் மிக அபாயகரமான விலையை அவர்கள் கொடுக்கவேண்டியிருக்கிறது.

கருணின் நண்பர்கள் கூறிய ஒரு வரி இந்த கதையின் மையத்தைத் தொட்டுவிடுகிறது. ‘கருண் கொல்லப்பட்ட காரணம் இன்னும் அங்கேயே இருக்கிறது. சட்டவிரோத மணல் அகழ்வு நிற்கவில்லை.’

ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்தாலும், அவர் எதிர்த்த குற்றம்/அமைப்பு உயிரோடு இருந்தால், அந்தக் கொலை முடிவுக்கு வரவில்லை என்பதையே இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன. ஒரு மனிதரை அமைதிப்படுத்தலாம்; ஆனால் அவர் எழுப்பிய கேள்வியை முழுமையாக அழிக்க முடியாது.

கருணின் சகோதரர் வருண் மிஸ்ரா பின்னர் ஓர் எளிய கோரிக்கையை முன்வைத்தார். ‘வழக்கு விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இனி எந்தப் பத்திரிகையாளரும் இப்படிச் சாகக் கூடாது.’ இது ஒரு குடும்பத்தின் நீதிக்கான கோரிக்கை மட்டுமல்ல. மாவட்ட நகரங்களிலும் சிற்றூர்களிலும் ஆற்றங்கரைகளிலும் சுரங்கப் பகுதிகளிலும் அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் செய்தி எழுதும் ஆயிரக்கணக்கான செய்தியாளர்களின் குடும்பங்கள் வைக்கும் கோரிக்கை அது.

கருண் மிஸ்ரா மணலைப் பற்றி எழுதினார். கேள்விகள் எழுப்பிய அந்தப் பேனா முறிக்கப்பட்டது. ஆனால் கேள்விகள் இன்னும் அதே ஆற்றங்கரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *