தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கிய காலத்துக்கு முற்பட்ட நாடக வரலாறு மிகவும் சுவாரசியமானது. அக்காலத்தில் நடிப்புக்கலைக்கு உகந்த வடிவமாக இருந்த தெருக்கூத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுகமான ஆங்கிலேய நாடகபாணியை உள்வாங்கிக்கொண்டு மெல்ல மெல்ல மேடை நாடகமாக உருவெடுத்தது. தொடக்கத்தில் தெருக்கூத்துக்கு அடிப்படையாக இருந்த புராணக்கதைகளே மேடை நாடகங்களிலும் உள்ளடக்கமாக இருந்தன. பிறகு மக்களுக்கு நன்கு அறிமுகமான நாட்டுப்புறக்கதைகள் நாடக உருவெடுத்தன. பார்வையாளர்கள் அந்த வடிவத்துக்குப் பழகியதும் சமூக வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களும் சூழல்களும் நாடகங்களின் கருப்பொருட்களாக மாறின.
சங்கரதாஸ் சுவாமி, பம்மல் சம்பந்த முதலியார், கிருஷ்ணசாமிப் பாவலர், சி.கன்னையா, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலாமணி அம்மாள், டி.கே.எஸ்.சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் எனப் பல ஆளுமைகள் வழியாக அன்றைய தமிழ் நாடக உலகம் வளர்ச்சியடைந்துவந்தது. அவ்வரிசையில் ஐம்பதுகளில் எஸ்.வி.சகஸ்ரநாமம் தொடங்கிய சேவா ஸ்டேஜ் நாடகக்குழு தாகூரின் சிறுகதையைத் தழுவி ‘கண்கள்’ என்னும் மேடை நாடகத்தை அரங்கேற்றி ஒரு புதிய பாதைக்கு வழிவகுத்தது. இலக்கிய ஆளுமையாக விளங்கிய பி.எஸ்.ராமையா சேவா ஸ்டேஜுக்காகவென புதிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார். அவ்வரிசையில் தி.ஜானகிராமன் எழுதிய நாடகங்களுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது.
தி.ஜானகிராமன் தமிழ்மொழியின் முக்கியமான சிறுகதையாசிரியர். நாவலாசிரியர். 1937இல் அவர் தன் முதல் சிறுகதையை எழுதினார். தொடக்கத்தில் கலைமகள், மணிக்கொடி போன்ற இதழ்களில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்தன. கும்பகோணம் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அதே கல்லூரியில் படித்துவந்த மூத்த மாணவரான எம்.வி.வெங்கட்ராமுடன் ஏற்பட்ட நட்பு, அவரைத் தீவிர இலக்கியத்தை நோக்கிச் செலுத்தியது. கரிச்சான் குஞ்சு, சுவாமிநாத ஆத்ரேயன் போன்றோரும் அவருக்கு நல்ல நண்பர்களாக விளங்கினர். கும்பகோணத்திலேயே வசித்துவந்த கு.ப.ராஜகோபாலனுடைய தொடர்பு அவரை மேலும் செழுமைப்படுத்தியது.
1954இல் தி.ஜானகிராமனுடைய முதல் சிறுகதைத்தொகுதி கொட்டுமேளம் வெளிவந்தது. இரண்டு ஆண்டு இடைவெளியிலேயே சிவப்பு ரிக்ஷா என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியும் வெளிவந்தது. பத்திரிகைகளில் தொடர்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். தான் எழுத நினைத்த நாவல்களை அவர் தொடர்கதைகளின் கட்டமைப்பில் எழுதினார். மலர்மஞ்சம், செம்பருத்தி, உயிர்த்தேன், அன்பே ஆருயிரே, மோகமுள் அனைத்தும் தொடர்கதைகளாக வெளிவந்தபோதே அவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்த படைப்புகளாகும். அம்மா வந்தாள் மட்டுமே நேரிடையாக நாவல் வடிவில் அவர் எழுதிய படைப்பாகும்.
தி.ஜானகிராமனின் கதைசொல்லும் நடை இயல்பான உரையாடலைப் போன்றது. ஒரு வாழ்க்கைத்தருணத்தை கண்முன்னால் நிகழும் காட்சியாக நிறுவிக்காட்டும் ஆற்றல் அவரிடம் இயல்பாகவே குடியிருந்தது. அந்த மொழியாற்றலே அவருக்குச் சிறந்த நாடகங்களை எழுதுவதற்குத் துணையாக அமைந்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு உணர்வைக் கடத்தும் மிகச்சிறந்த சிறுகதையாக துல்லியமான சித்திரத்தைப்போல அவரால் கட்டமைக்க முடிந்தது.
ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார், டாக்டருக்கு மருந்து ஆகிய மூன்று நாடகங்களும் சேவா ஸ்டேஜ் குழுவுக்காகவே எழுதப்பட்டவை. நாடகப்பிரதிகளாக அவை நூல்களாகவும் வெளிவந்தன. நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் ஆகிய இரு நாடகங்களும் கிராமத்தை மையமாகக் கொண்டவை. டாக்டருக்கு மருந்து நாடகத்தில் கிராமமும் நகரமும் சம அளவில் இடம்பெற்றிருக்கின்றன. அந்நாடகப் பிரதியை 1965இல் குயிலன் பதிப்பகம் புத்தக வடிவில் வெளியிட்டது.
0
ஒரு சிற்றூரில் எல்.எம்.பி. படித்து நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் டாக்டர் கைலாசம் என்பவருடைய மருத்துவமனையிலிருந்துதான் நாடகத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. டாக்டர் கைலாசம் இன்னும் வரவில்லை. கம்பவுண்டர் வேலாயுதம் கலுவத்தில் எதையோ அரைத்து சின்னச்சின்ன புட்டிகளில் இருக்கும் வெவ்வேறு மருந்துகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கலந்து சிவப்பு, கருப்பு, பச்சை ஆரஞ்சு எனப் பல வண்ணங்களிலான மருந்தை ஊற்றி வைக்கும் வேலையில் மூழ்கியிருக்கிறார். நீண்ட நேரமாக டாக்டரின் வருகைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் வாசலில் போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் உட்கார்ந்து முனகிக்கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நேரக் காத்திருப்பின் காரணமாக அவர்கள் மனம் சலித்து வாசலையே வைத்தகண் எடுக்காமல் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். அப்போது டாக்டர் வருகிறார். ஒவ்வொருவராகச் சோதித்து அவர்கள் முன்வைக்கும் உடல்நிலைக்கோளாறைப் பாதி கேட்டும் பாதி கேட்காமலும் சீட்டு எழுதிக் கொடுக்கிறார். அச்சீட்டை வாங்கிப் படிக்கும் வேலாயுதம் அதில் குறிப்பிட்டுள்ளபடி மருந்துக்கரைசலைக் கொடுத்தனுப்புகிறார். அப்போது கோவிலிலிருந்து ஆள் வந்து தீபாரதனைக்கு நேரமாகிறது என சொல்லி டாக்டரை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். டாக்டரைச் சந்திக்க இயலாத ஒருசில நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.
டாக்டர் நல்ல மனிதர். ஆனால் ஊரிலேயே தங்குவதில்லை. ஊர் ஊராகக் கோவில்களைப் பார்க்கவும் திருவிழா பார்க்கவும் அடிக்கடி புறப்பட்டுப் போய்விடுவார். அவர் இல்லாத நாட்களில் நோயாளிகள் காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். அவசரமாக மருத்துவம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் பணவசதியும் கொண்டவர்கள் கார் வைத்துக்கொண்டு அருகிலுள்ள மாயவரத்துக்குச் சென்று விடுகிறார்கள். பணவசதி இல்லாதவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை.
வேலாயுதத்துக்கு பங்கஜம் என்றொரு மகள் இருக்கிறாள். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்தவள். தன் சகோதரியின் துணையுடன் அவளை வளர்த்துவருகிறார் வேலாயுதம். பள்ளிப்படிப்பை முடித்தவள் அவள். சிற்றூரிலேயே உள்ள தட்டச்சு நிலையத்தில் பயிற்சி பெற்றவள். வேலைக்காக மகளை வெளியூருக்கு அனுப்ப வேலாயுதத்துக்கு மனமில்லை. அதனால் வீட்டிலேயே இருக்கிறாள். அவளுக்குச் சமீப காலமாக தீராத தலைவலி. ஏதாவது கைமருத்துவம் செய்தால் ஒன்றிரண்டு நாட்கள் அடங்கியிருக்கும். பிறகு மீண்டும் தொடங்கிவிடும். அச்சமயங்களில் மருத்துவமனைக்கு வந்து மருந்து வாங்கிக்கொண்டு செல்வாள்.
அச்சிற்றூரில் சொக்கலிங்க வைத்தியர் மூலிகை மருத்துவம் அளிப்பதைத் தொழிலாகக் கொண்டவர். தொடக்கத்தில் சிற்றூர்க்காரர்கள் அனைவரும் அவரிடம்தான் மருந்து வாங்கிச் சாப்பிட்டனர். நாடி பிடித்து நோயைக் கணிப்பதில் அவருக்கு இருந்த திறமை அவருக்கு நல்ல பெயரைத் தேடித் தந்தது. ஆயினும் அவர் அளிக்கும் மருந்துகள் பலனளிக்கத் தாமதமாகிறது என்பதாலும் அவர் விதிக்கும் பத்திய முறைகளைப் பின்பற்றுவது நாக்கு ருசிக்கு அடிமையானவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது என்பதாலும் ஒரு சிலர் ஆங்கில மருத்துவரை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆயினும் டாக்டர் கைலாசம் ஊரில் தங்கியிருக்காத நாட்களில் வேறு வழியில்லாமல் கிராமத்து மக்கள் வைத்தியரையே மீண்டும் தேடி வரும் நிலை ஏற்படுகிறது.
சொக்கலிங்கம் மூலிகைமருத்துவம் செய்துவந்தாலும் தன்னுடைய ஒரே மகனை ஆங்கில மருத்துவம் படிப்பதற்கு சென்னைக்கு அனுப்பிவைக்கிறார். எதிர்காலத்தில் ஆங்கில மருத்துவமே இந்த நாட்டை ஆளப் போகிறது என்று அவர் நம்பினார். பத்தியமாக இருப்பதற்கு விருப்பமில்லாத மக்களுக்கு ஆங்கில மருத்துவம் விருப்பமான ஒன்றாக மாறுவதில் வியப்பில்லை என்று அவர் நினைத்தார். அதனால் மகனை மருத்துவராகப் பார்க்கும் ஆவலால் கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு அனுப்பிவைத்தார். அவன் பெயர் தர்மராஜன். கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்ததும் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கும் அனுப்பிவைத்தார். ஜெர்மனி, பிரான்சு, லண்டன் எனப் பல நகரங்களில் அவன் மூன்றாண்டு காலம் படித்து, மூளை மருத்துவத்தில் சிறப்புப்பயிற்சி பெறுகிறான்.
0
ஒருநாள் தர்மராஜனிடமிருந்து ஒரு தந்தி வருகிறது. படிப்பு முடிந்துவிட்டதாகவும் கிராமத்துக்குத் திரும்பி வருவதாகவும் அவன் அதில் குறிப்பிட்டிருக்கிறான். சொக்கலிங்க வைத்தியருக்கு நீண்டநாளாக ஒரு கனவு இருக்கிறது. மகன் ஊருக்குத் திரும்பி வருவது உறுதியானதும் மகனுக்காகத் தன் கிராமத்திலேயே ஒரு மருத்துவமனையைக் கட்டியெழுப்பி மக்கள் சேவை செய்வதில் ஈடுபடுத்தவேண்டும் என்பதுதான் அவர் கனவு. அவனுக்காகத் தனக்குச் சொந்தமான இடத்திலேயே மருத்துவமனையைக் கட்டுவதற்காகவும் நினைத்திருக்கிறார். அதற்காக கும்பகோணத்திற்குச் சென்று உரியவர்களைச் சந்தித்து கட்டடத்துக்கான வரைவுத்திட்டத்தையும் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கிறார்.
தர்மராஜன் வீட்டுக்கு வந்ததும் மருத்துவமனைத் திட்டத்தைப்பற்றிக் கலந்தாலோசித்துவிட்டு கட்டுமானப்பணிகளைத் தொடங்கலாம் என்பதுதான் அவருடைய ஆரம்பத் திட்டமாக இருந்தது. ஆனால் ஜோதிடப் புத்தகத்தை எடுத்து பணியைத் தொடங்குவதற்கான நல்ல முகூர்த்தநாளைத் தேடும்போது அடுத்து இரு நாட்களில் வரவிருக்கும் முகூர்த்தமே சிறப்பான முகூர்த்தமென்று தெரிய வருகிறது. அதற்கடுத்த சிறப்பான முகூர்த்தம் ஆறு மாதம் கழித்துத்தான் வருகிறது. ஆகவே, அந்த முகூர்த்தத்தைக் கைவிட விரும்பாத வைத்தியர், மகனைச் சந்திக்காமலேயே அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை அதே முகூர்த்தத்தில் குறித்துவிட்டு ஊரிலிருப்பவர்களிடம் அத்தகவலைப் பகிர்ந்துகொள்கிறார்.
அந்த ஊரிலிருக்கும் ஒரே டாக்டரான கைலாசத்துக்குத் தகவல் சொல்வதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார் வைத்தியர். டாக்டர் அப்போது மருத்துவமனையில் இல்லை. டாக்டரைச் சந்திக்க இயலாததால் வைத்தியர் ஏமாற்றமடைகிறார். ஆயினும் மருத்துவமனையில் இருந்த வேலாயுதத்துக்கும் பங்கஜத்துக்கும் தகவலைத் தெரிவிக்கிறார். அவர் பங்கஜத்துடன் எப்போதும் பாசமுடன் உரையாடுபவர். அவள் தலைவலியால் அவதிப்படுவதைக் கேட்டதும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏதோ மூலிகை மருந்து கொடுக்கிறார். அவளை அமரவைத்து ஆதரவோடு உரையாடுகிறாள் வைத்தியரின் மனைவி. அடிக்கல் நாட்டு விழா செய்தியைத் தெரிவிப்பதற்காக வைத்தியர் வீட்டைவிட்டு வெளியேற, இரு பெண்களும் உரையாடலைத் தொடர்கிறார்கள். தர்மராஜனின் வருகைச் செய்தியைக் கேட்டு பங்கஜத்தின் மனம் கிளர்ச்சியடைகிறது. வைத்தியர் மனைவிக்கு, ஊரிலிருந்து திரும்பி வரும் தன் மகனுக்கும் பங்கஜத்துக்கும் திருமணம் செய்துவைத்துப் பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த ஆசையை ஓரளவு ஊகித்த பங்கஜத்துக்கும் அதில் நாட்டம் பிறக்கிறது.
அந்த ஊரில் இன்னொரு முக்கியமான நபர் வக்கீல் வடுகநாதப்பிள்ளை. தந்திரசாலி. தனக்கு லாபம் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு சூழலையும் வளைத்துக்கொள்வதில் திறமைசாலி. வைத்தியர் தன் மகனுடைய படிப்புச் செலவுக்காக அவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். மாதாமாதம் வட்டி மட்டும் செலுத்திவருகிறாரே தவிர, அசல் கடன் நீண்ட காலமாக அப்படியே இருக்கிறது.
வடுகநாதப்பிள்ளைக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் சரோஜா. செவிக்குறைபாடு உள்ளவள். டாக்டராகத் திரும்பிவரும் தர்மராஜனைத் தன் மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அவர் திட்டமிடுகிறார்.
0
வைத்தியர் மகன் திரும்பி வரும் செய்தி ஊரிலிருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. ஏதோ ஒருவகையில் எல்லோருமே தர்மராஜனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வைத்தியர் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கான தகவலைச் சொல்வதற்காக ஊர் முழுதும் சுற்றி அலைகிறார்.
பம்பாயில் இறங்கியதும் தர்மராஜன் அனுப்பிய தந்தித்தேதியை முன்வைத்து கிராமத்துக்கு வர இன்னும் மூன்று நாட்கள் ஆகலாம் என அனைவரும் நினைத்திருக்கிறார்கள். அவன் ரயிலில் பயணம் செய்து வருவான் என்பது அவர்களுடைய எண்ணம். அவனோ திருச்சி வரைக்கும் விமானத்திலேயே வந்து அங்கிருந்து ரயில் வழியாக கும்பகோணம் வந்து அங்கிருந்து காரில் அடுத்த நாளே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறான். அவனுடைய திடீர் வருகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிடுகிறது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கச் சென்ற வைத்தியர்கூட தெருவில் யாரோ சொன்ன செய்தியைக் கேட்டு அவசரம் அவசரமாக வீட்டுக்குத் திரும்பிவருகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய தர்மராஜனைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைத்திருக்கவில்லை. அடுத்தடுத்த அவனுடைய பேச்சும் நடவடிக்கைகளும் அவன் பெற்றோரை நிலைகுலைய வைத்துவிடுகின்றன. பருவப்பெண்ணான பங்கஜத்தை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. வீட்டு வேலைகளில் தன் தாய்க்கு உதவி செய்யவந்த பெண் என நினைத்துவிட்டதாக அவள் முன்னிலையே சொல்கிறான். விவாகமாக இருந்தாலும் விவாதமாக இருந்தாலும் அது சமமான தகுதி கொண்டவர்களுடன்தான் நிகழவேண்டும் என்கிற நிலையில் திருமணம் சார்ந்த ஒரு முடிவை ஒருபோதும் அவசரமாக எடுக்கக்கூடாது என்று தன் தாய்க்கு அறிவுரை சொல்கிறான். அதைக் கேட்டு மனமுடைந்த பங்கஜம் கண்ணீருடன் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறாள்.
அடுத்து, அப்பாவின் கனவுப்படி கிராமத்தில் மருத்துவமனை கட்டி மக்கள் சேவையில் ஈடுபடும் திட்டத்தில் அவனுக்கு ஒருசிறிதும் விருப்பமில்லை. அத்திட்டத்துக்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்திவிடும்படி தன் அப்பாவிடம் தெரிவிக்கிறான். தன் தகுதியையும் திறமையையும் பயன்படுத்திக்கொண்டு சென்னையில் ஒரு மருத்துவ மனையைச் சொந்தமாக உருவாக்கி, செல்வம் சம்பாதிப்பதே தன் முக்கிய நோக்கம் என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துகிறான் அவன்.
அவனுடைய திட்டத்தைத் தடுக்க இயலாத வைத்தியர் மனமுடைந்துவிடுகிறார். அடிக்கல் நாட்டுவிழாவை நிறுத்திய செய்தியைக் கூட அவரால் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. வைத்தியரின் உதவியாளரே பலரைச் சந்தித்து அந்த நிகழ்ச்சி ரத்தான செய்தியைத் தெரிவிக்கிறார். ஒரு சில நாட்கள் மட்டும் பெற்றோருடன் தங்கிவிட்டு தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறான் தர்மராஜன்.
0
தர்மராஜன் தன் நண்பர்கள் உதவியோடு சென்னையில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்கி பணியைத் தொடங்குகிறான். மூளை, நரம்பியல் துறையில் பயிற்சி பெற்றவன் அவன். வேறுசில மருத்துவ நண்பர்களையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக்கொள்கிறான். மல்லிகா என்னும் இளம் பெண் மருத்துவர் அவனுக்கு நல்ல துணையாக இருக்கிறாள். அவள் பெயரிலேயே அந்த மருத்துவமனை இயங்கத் தொடங்குகிறது. குறுகிய காலத்திலேயே மூளை அறுவை சிகிச்சையில் திறமைசாலி எனப் பெயர் பெறுகிறான். நிறைய நோயாளிகள் அங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். அவன் வாழ நினைத்த வாழ்க்கையை அவன் வாழ்கிறான்.
தன் மகளை தர்மராஜன் நிராகரித்துச் சென்றுவிட்டான் என்பதால் அடிபட்ட புலியாக உள்ளூரக் குமைந்தபடி இருக்கிறார் வடுகநாதப்பிள்ளை. எப்படியாவது அக்குடும்பத்துக்கு அவமானத்தைத் தேடித் தரவேண்டும் என்று நினைத்தபடி தக்க தருணத்துக்காகக் காத்திருக்கிறார்.
வடுகநாதப்பிள்ளையிடம் வாங்கிய கடனுக்கான வட்டித்தொகையை வைத்தியரால் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் செலுத்த இயலாத சூழல் உருவாகிவிடுகிறது. வைத்தியரை வீழ்த்தவும் அவமானத்தில் துடிக்கவைக்கவும் அதையே ஒரு நல்வாய்ப்பாகக் கருதி உடனடியாக நீதிமன்றத்தை அணுகுகிறார் வடுகநாதப்பிள்ளை. தன் தந்திரமான வாதங்களால் வைத்தியருடைய வீட்டை ஜப்தி செய்யும் ஆணையைப் பெற்றுவிடுகிறார். கிராமத்துக்குத் திரும்பி வைத்தியருடைய வீட்டுக் கதவில் அந்த ஏல நோட்டீஸை ஒட்டிவிட்டுச் செல்கிறார்.
வைத்தியர் நிலைகுலைந்து செய்வதறியாமல் தவிக்கிறார். அவ்வளவு பெரிய தொகையை உடனடியாக எப்படிப் புரட்டுவது என்பது புரியாமல் தடுமாறுகிறார். மகன் கல்விக்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக மகனிடமே பணஉதவி கேட்க அவர் மனம் விரும்பவில்லை. கல்வியை வழங்குவது ஒரு தந்தையின் கடமை என்பதால் அந்தக் கடனைத் தானே அடைப்பதுதான் முறையானது என அவர் மனம் நினைக்கிறது.
வைத்தியர் குடும்பத்தை வீட்டைவிட்டு வெளியேற்றுவதில் முனைப்பு காட்டும் வடுகநாதப்பிள்ளையை அக்கிரமக்காரன் என ஊரே தூற்றுகிறது. ஆயினும் வடுகநாதப்பிள்ளை தன் செயலில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையில் ஊரார் சேர்ந்து சென்னையில் வசிக்கும் தர்மராஜனுக்குத் தந்தி வழியாகத் தகவலைத் தெரிவிக்கிறார்கள். அப்போது வைத்தியர் மீது நெருக்கம் பாராட்டிப் பழகிய டாக்டர் கைலாசமும் வேறுசில ஊர்க்காரர்களும் தம்மிடம் இருக்கும் பணத்தையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து வடுகநாதனிடம் கொடுத்து கடனை அடைத்து, உரிய நேரத்துக்குள் வீட்டை மீட்டுவிடுகின்றனர்.
தந்தி கிடைத்ததும் சென்னையிலிருந்து உடனடியாகப் புறப்பட்டு வருகிறான் தர்மராஜன். கடன் விஷயம் அவனைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. அம்மாவும் அப்பாவும் தம்மிடம் இயல்பாகப் பேசவில்லை என்பதையும் அவன் உணர்கிறான். ஆயினும் தன்னுடைய நகர வாழ்க்கை தொடர்பான முடிவில் அவன் உறுதியாக இருக்கிறான்.
தக்க நேரத்தில் பணம் திரட்டி கடனை அடைத்து உதவி செய்த கைலாசம் டாக்டரைச் சந்தித்து நன்றி சொல்வதற்காகவும் தொகையைத் திருப்பிக் கொடுக்கவும் அவரைத் தேடி மருத்துவமனைக்குச் செல்கிறான். இரு டாக்டர்களும் சிறிது நேரம் மனம்விட்டுப் பேசிக்கொள்கிறார்கள். கிராமத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு மருத்துவமனை இருப்பதன் முக்கியத்துவத்தை தர்மராஜனுக்கு உணர்த்தும் வகையில் டாக்டர் கைலாசம் உரையாடுகிறார். ஆனால் நகரத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவதே முக்கியம் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் தர்மராஜனை அவரால் கரைக்கமுடியவில்லை. கிராமத்திலிருந்து அவர் அனுப்பும் நோயாளிகளுக்கு தன் மருத்துவமனையில் தான் இலவசமாக மருத்துவம் பார்த்து அனுப்புவதாக ஒரு வாக்குறுதியை மட்டும் அளிக்கிறான் தர்மராஜன்.
அந்த நேரத்தில் பங்கஜம் தலைவலிக்கு மருந்துவாங்கிச் செல்ல கைலாசம் டாக்டரிடம் வருகிறாள். கைலாசம் அவளைச் சோதித்துப் பார்க்கிறார். தலையின் முன்பக்கம், பின்பக்கம், கழுத்து என எங்கு தொட்டாலும் அவள் வலிப்பதாகச் சொல்கிறாள். கைலாசம் தன் அறைக்கு வந்து அங்கு காத்திருந்த தர்மராஜனை அழைத்துச் சென்று நோயாளியைச் சோதித்துப் பார்க்கச் சொல்கிறார்.
சில அடிப்படைச் சோதனைகளுக்குப் பிறகு தர்மராஜன் நோயாளியை உடனடியாகச் சென்னைக்கு அழைத்துவர வேண்டும் என்றும் கழுத்து சார்ந்த பகுதியிலும் மூளை சார்ந்த பகுதியிலும் ஏதோ பிரச்சினை இருப்பதாகவும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபிறகே என்ன பிரச்சினை என்பதைத் தெரிவிக்கமுடியும் என்றும் தெரிவிக்கிறான். அதைக் கேட்டதும் டாக்டர் கைலாசம் பங்கஜத்தை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் செல்லுமாறு சொல்கிறார். வேலாயுதத்துக்கு சென்னைக்குச் செல்வதில் விருப்பமே இல்லை. ஆயினும் டாக்டரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வேலாயுதம் பங்கஜத்தையும் துணைக்கு தன் சகோதரியையும் அழைத்துக்கொண்டு சென்னைக்குச் செல்கிறான்.
சென்னை தர்மராஜனின் மருத்துவமனையில் பங்கஜத்துக்கு பலவிதமான மருத்துவப்பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. தலைப்பகுதியிலும் கழுத்துப்பகுதியிலும் பல கோணங்களில் எக்ஸ்ரே எடுக்கப்படுகின்றது. மூளைப்பகுதியில் கட்டியொன்று தோன்றியிருப்பதாகவும் அதுதான் அவளுடைய எல்லா வேதனைகளுக்கும் காரணமென்றும் தெரிவிக்கிறான் தர்மராஜன்.
பல கோணங்களில் எக்ஸ்ரே படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் மூளையில் இருக்கும் அந்தக் கட்டி அகற்றப்படக்கூடிய சூழலில் இருக்கிறதா, இல்லையா என்பதை தர்மராஜனால் உறுதியாக உணரமுடியவில்லை. அந்தக் கட்டி வளர்ந்திருக்கும் இடம் தர்மராஜனுக்குச் சற்றே தடுமாற்றத்தை அளிக்கிறது. மூளை மருத்துவத்தில் அவனைவிட அனுபவம் மிக்க ஒரு பெரியவர் வேறொரு மருத்துவமனையில் இருக்கிறார் என்பதும் அவரோடு கலந்து பேசி ஒரு முடிவெடுப்பதுதான் நல்லது என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்த போதும் தன் கல்வித்திறமை சார்ந்து அவன் கொண்டிருந்த ஆணவம் அவனைத் தன்னிச்சையாகச் செயல்படத் தூண்டிவிடுகிறது. அதனால் உதவிக்குச் சில இளைய மருத்துவர்கள் சூழ்ந்திருக்க, அவன் பங்கஜத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறான்.
உரிய மயக்க மருந்து அளிக்கப்பட்ட பிறகு அவளுடைய மண்டையோடு பிரிக்கப்படுகிறது. அவன் அஞ்சியபடி சிக்கலான ஒரு புள்ளியில் அந்தக் கட்டி இருக்கிறது. அதை நீக்குவது அவ்வளவு பாதுகாப்பல்ல என்று மனம் உரைத்தபோதும், அவன் கைகள் ஏதோ ஓர் அசட்டுத்துணிச்சலில் அக்கட்டியை நீக்கிவிடுகின்றன.
அறுவை சிகிச்சை முடிகிறது. நோயாளியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆயினும் குழப்பமான மனநிலையில் தர்மராஜன் அறுவை சிகிச்சைக் கூடத்திலிருந்து வெளியே வருகிறான். வெளியே காத்திருந்த வேலாயுதமும் அவன் சகோதரியும் டாக்டர் சொல்லப் போகும் சொல்லுக்காகக் காத்திருக்கினனர். மயக்கம் தெளிந்த பிறகு பார்க்கலாம் என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிடுகிறான் தர்மராஜன்.
ஆயினும் அவனுடைய விருப்பத்துக்குரிய மருத்துவரான மல்லிகாவின் கேள்விக்கணைகளிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. அவள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவனால் ஒரு பதிலையும் சொல்லமுடியவில்லை. அவர்களிருவரும் தமக்குள் நீண்ட நேரம் விவாதித்துக்கொள்கின்றனர். அந்த விவாதத்தின் முடிவில் மல்லிகாவின் மனத்தில் தர்மராஜன்மீது கொண்டிருந்த மதிப்பு சரிந்துவிடுகிறது.
மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த பங்கஜம் தன்னால் எதையும் பார்க்கமுடியவில்லை என்று கூறுகிறாள். தன் முன்னால் உலகமே இருண்டுகிடப்பதாகச் சொல்கிறாள். அவள் சொற்களைக் கேட்டு அனைவரும் அவளுடைய அறையில் கூடுகின்றனர். சில சோதனைகளுக்குப் பிறகு அவள் பார்வைத்திறனை இழந்துவிட்டாள் என்பது உறுதி செய்யப்படுகிறது. மகளைப் பார்வையிழந்த கோலத்தில் பார்க்க இயலாத வேலாயுதம் தர்மராஜனோடு சண்டைக்குப் போகிறான். அந்த விவாதத்தை விரும்பாத தர்மராஜன் அவனைக் கைநீட்டி அடித்துவிடுகிறான். அவனுடைய நடத்தை பிடிக்காத மல்லிகாவும் அவனைக் கசப்புடன் கடிந்துகொள்கிறாள். அவனைவிட்டு நிரந்தரமாக விலகிவிடுகிறாள்.
அன்று இரவு ரயிலிலேயே மகளையும் சகோதரியையும் அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிடுகிறான் வேலாயுதம். பங்கஜத்திற்கு ஏற்பட்ட நிலையை அறிந்து டாக்டர் கைலாசம் பேசுவதற்குச் சொல்லின்றி உறைந்துவிடுகிறார். தன் கட்டாயத்தினால்தானே பங்கஜத்தை அழைத்துக்கொண்டு வேலாயுதம் சென்னைக்குச் சென்றான் என நினைத்து அவர் ஒருவித குற்ற உணர்ச்சியில் மூழ்கிவிடுகிறார். சொக்கலிங்க வைத்தியரும் அவர் மனைவியும் நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு பங்கஜத்தைப் பார்த்து ஆறுதல் சொல்கிறார்கள்.
பங்கஜம் பார்வையற்ற தன் நிலையை நினைத்து தொடக்கத்தில் சில நாட்கள் கலவரமடைந்த மனநிலையில் காலத்தைக் கழிக்கிறாள். பிறகு, அந்தக் குறையை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிடுகிறாள்.
அந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தர்மராஜனுக்கு அவமானத்தைத் தேடித் தரவேண்டும் என நினைக்கும் வடுகநாதப்பிள்ளை எதை எதையோ சொல்லி வேலாயுதத்தின் மனத்தைக் குழப்பி தன் மகளின் கண் பார்வை பறிபோகும்படி பொறுப்பில்லாத முறையில் அறுவை சிகிச்சை செய்ததற்காக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்ப அனுமதியைப் பெற்று விடுகிறார். அடுத்தநாளே வக்கீல் நோட்டீஸ் சென்னைக்குப் பறந்துபோகிறது.
பங்கஜத்தின் அறுவைசிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை அமைதியற்ற இடமாக மாறிவிடுகிறது. தர்மராஜன் நியாய உணர்வில்லாதவன் என்பதைப் புரிந்துகொண்டதும் மல்லிகா மெல்ல மெல்ல தர்மராஜனை விட்டு விலகுகிறாள். தனிமை அவனைத் தன்னைத்தானே ஒரு மறுமதிப்பீடு செய்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. பங்கஜத்தைச் சந்தித்து மன்னிப்பு கேட்பதே தனக்கு அமைதியளிக்கும் செயலாகும் என அவன் கருதுகிறான். அடுத்தநாளே சென்னையிலிருந்து தன் கிராமத்துக்குத் திரும்புகிறான்.
அவன் நேராக பங்கஜத்தின் வீட்டுக்குச் செல்கிறான். அந்த நேரத்தில் அவனுடைய பெற்றோர், டாக்டர் கைலாசம் அனைவரும் அந்த வீட்டில்தான் இருக்கின்றனர். நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவரம் எதுவும் அங்கு இருந்த ஒருவருக்கும் தெரியாது. தர்மராஜன் ஒரு லட்ச ரூபாய் அடங்கிய உறையை வேலாயுதத்தின் முன்னால் எடுத்துவைத்து மன்னிப்பு கேட்கும்போதுதான் அனைவருக்கும் தெரியவருகிறது.
குளிர்ந்த பார்வையும் பரிவும் அடக்கமும்தாம் டாக்டருக்கு உண்மையிலே தேவையானவை என்பதைத் தான் புரிந்துகொண்டதாகச் சொல்லி பங்கஜத்தின் கைகளைப் பற்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறான். தன்னை மறந்து பங்கஜத்தின் காலில் விழுந்து பற்றிக்கொள்கிறான். பார்வையிழந்த பங்கஜம் அவனைப் பற்றி எழுந்து நிற்கவைக்கிறாள். ‘நீ இழந்த கண்ணுக்கு மாற்றாக நான் வந்திருக்கேன். என்னைப் புடிச்சிட்டு நீ நடக்கலாம். இந்த ஜென்மம் முழுக்க இந்தக் கை உனக்குக் கண்ணாக இருக்கும்’ என்று நெகிழ்ச்சியோடு வாக்களிக்கிறான் தர்மராஜன்.
பக்கத்தில் காமாட்சியம்மனுக்காக தொடுத்து வைத்திருந்த மாலையை எடுத்து பங்கஜத்தின் கைகளில் கொடுத்து தன் கழுத்தில் போடவைக்கிறான் அவன். மனப்பூர்வமாக அவளை மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். தன் பெற்றோர் சொன்னபோது அத்திருமணம் நடந்திருந்தால் அது ஒரு மிருகத்துக்கும் மனுஷிக்கும் நடக்கிற திருமணமாகவே இருந்திருக்கும் என்றும் இப்போதுதான் அது ஒரு மனுஷனுக்கும் மனுஷிக்கும் நடக்கிற திருமணமாக இருப்பதாகச் சொல்கிறான். பங்கஜமும் அவனும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.
தன்னிடம் கொடுக்கப்பட்ட பணத்தை அவனிடமே திருப்பிக் கொடுக்கும் வேலாயுதம் ‘ஒண்ணே ஒண்ணு மட்டும் நான் சொல்லணும்னு ஆசைப்படறேன். எங்க குலத்துக்கு வைத்தீஸ்வரன்னு ஒரு மருந்து இருக்கிறான். அவன் எப்பவும் உங்க டாக்டர் பையிலயும் பாக்கெட்லயும் இருக்கணும்’ என்று சொல்லிவிட்டு வாழ்த்துகிறான். அத்துடன் காட்சி நிறைவடைகிறது.
0
நாடகத்தை வாசித்துமுடித்ததும் வேலாயுதத்தின் சொல் ஒரு மணியோசையைப்போல நெஞ்சில் ஒலித்தபடியே இருக்கிறது. அது என்ன வைத்தீஸ்வரன் மருந்து என்றொரு கேள்வி நம் முன் பேருரு கொண்டு நிற்கிறது. தெய்வநம்பிக்கை அல்லது தெய்வபயம் என எதுவோ ஒன்றாக அது இருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று நம் செயல்களைக் கண்காணித்தபடி இருக்கிறது என்ற எண்ணமாகவும் அது இருக்கலாம். நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்கிற நிலையில் ஒவ்வொரு அடியையும் நாம் எச்சரிக்கையுணர்வோடு எடுத்துவைக்கவேண்டி இருக்கிறது. அத்தகு எச்சரிக்கையுணர்வையே அச்சொல்லின் பொருளாகவும் எடுத்துக்கொள்ளலாம். டாக்டருக்கு அது மருந்துமட்டுமல்ல. வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் உள்ளது.
நாடகத்தில் ஒருசில இடங்களில் மரபான மூலிகை வைத்திய முறையைப்பற்றியும் ஆங்கில மருத்துவமுறையைப்பற்றியும் பாத்திரங்கள் தமக்குள் உரையாடுவதுபோன்ற சில தருணங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் ஆங்கில மருத்துவமே உயர்வானது என்கிற பார்வை வெளிப்படுகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் மூலிகை வைத்தியம் நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில உணவுமுறைகளையும் பத்திய முறைகளையும் வலியுறுத்துகிறது என்பதுதான். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் அந்த வலியுறுத்தல் இல்லை. கட்டற்ற அந்த உணவுச்சுதந்திரமே மக்களை ஆங்கில மருத்துவத்தின் திசையை நோக்கி ஓடச் செய்கிறது.
இந்த நாடகத்தில் ஒரு காட்சியில் சொக்கலிங்க வைத்தியர் வேறு ஏதோ வேலையில் மூழ்கியிருக்கும்போது, குணமாகி நன்றாக நடமாடத் தொடங்கிய பழைய நோயாளி ஒருவர் மீண்டும் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்கிற செய்தி வருகிறது. அவரும் அவசரமாகப் புறப்படுவதற்கு மருந்துப்பெட்டியைத் தயார் செய்கிறார். அப்போது ‘போன மாதத்திலேயே அவருக்கு குணமாகிவிட்டது என்று சொன்னீர்களே, மறுபடியும் அந்த நோய் ஏன் திரும்பி வந்தது?’ என்று கேட்கிறார் அவர் மனைவி. வைத்தியர் புன்னகைத்துக்கொண்டே ‘ஒரு மாதம் நாம் சொன்னபடி கேட்டு கட்டுப்பாடாக இருந்தார். உடல்நலமும் நன்றாக இருந்தது. நாக்கு ருசியும் ஆசை ருசியும் யாரை விட்டது? அது இழுக்கும் திசையில் நாம் நகர்ந்தால் இப்படித்தான் ஆபத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கவேண்டும். அதை எத்தனை தரம் எத்தனை நோயாளிகளிடம் சொன்னாலும் புரிவதில்லை. இவருக்குப் புகையிலை ருசி. முன்பு விட்டதை மீண்டும் தொடங்கிவிட்டார். அதனால் பழைய அவஸ்தை மறுபடியும் வந்துவிட்டது’ என்று சொல்லிவிட்டு மருந்துப்பெட்டியோடு வெளியேறுகிறார்.
கிட்டத்தட்ட இதே போன்றதொரு காட்சி தாராசங்கர் பானர்ஜி எழுதிய ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. மருத்துவர் ஜீவன் மஷாய் தன்னை நாடிவரும் சர்க்கரை நோயாளிக்கு நாடி பிடித்துப் பார்ப்பார். மரணநாடி ஒலிக்கிறது என்றும் இனிப்பின் பக்கம் செல்லாவிட்டால் பிழைத்திருக்கலாம் என்றும் அதை மீறி இனிப்பை உட்கொண்டால் மரணத்தை நெருங்கிச் செல்வது உறுதியென்றும் எச்சரித்து அனுப்புவார். இனிப்பைக் கைவிட மனமில்லாத அவன் அவர் கொடுத்த மருந்துகளைப் புறக்கணித்துவிட்டு அதே நகரத்தில் இருந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச் செல்வான். அவர் அவனுக்கு முறிமருந்து கொடுத்து சில நாட்களில் குணமாக்கிவிடுவார். ஆங்கில மருத்துவத்தைப் பாராட்டியும் மூலிகை மருத்துவத்தைத் தாழ்த்தியும் அந்த வைத்தியரின் முன்னாலேயே நின்று கேலி பேசிவிட்டுச் செல்வான் அவன். தன் நாக்குக்குப் பிடித்த குலாப்ஜானை ஒவ்வொருநாளும் சுவைத்து மகிழ்வான். ஆனால் அவனுடைய ஆட்டம் அதிக நாட்கள் நீடிப்பதில்லை. குணம் பெற்று நடமாடத் தொடங்கிய மாதத்திலேயே உயிரிழந்துவிடுவான்.
இதையெல்லாம் படிக்கும்போது, ருசி மீதான கட்டற்ற ஆர்வமே இந்த மண்ணில் காலம்காலமாக நிலவி வந்த ஒரு மருத்துவ அமைப்பிலிருந்து மனிதர்களை விலகிச் செல்லவைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ருசி மீதான கட்டற்ற ஆர்வம் என்னும் அம்சத்தை வாழ்வின் ஒவ்வொரு தளத்துக்கும் நாம் பொருத்திப் பார்க்கமுடியும். செல்வம் மீதான கட்டற்ற ஆர்வம், காமம் மீதான கட்டற்ற ஆர்வம், வெற்றி மீதான கட்டற்ற ஆர்வம் என விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். இந்த வாழ்வில் நாம் கொள்ளும் கட்டற்ற ஆர்வத்துக்கும் நாம் இழப்பதற்கும் இடையில் ஏதோ ஓர் உறவு இருக்கிறது. இரண்டுக்கும் இடையிலான குறுகிய பாதையில் இடித்துக்கொள்ளாமல் நடப்பது என்பது மிகப்பெரிய சவால். அது சார்ந்து நம் அணுகுமுறை என்னவாக இருக்கப்போகிறது என்று நம்மை யோசிக்கவைக்கிறது தி.ஜானகிராமனின் நாடகம்.
0

