1940 தொடங்கி ஃப்ரீடாவின் உடல்நிலை நாளுக்குநாள் பலவீனமடைந்தது. முதுகுத் தண்டிலும் காலிலும் பொறுக்கமுடியாத வலி ஏற்பட்டது. 1944 முதல் லா எஸ்மெரால்டா பள்ளியில் ஆசிரியப் பணியைத் தொடரமுடியவில்லை. எலும்பு சிகிச்சை நிபுணர் எஃகினாலான இடுப்பு வளையமொன்றை அணிந்துகொள்ளவேண்டுமெனப் பரிந்துரைத்தார். அதை அணியாவிட்டால் உட்காரவோ நிற்கவோ முடியவில்லை. பசியே இல்லை, அவ்வப்போது மயக்கம் ஏற்பட்டது, மிதமான காய்ச்சல் தோன்றியதால் படுக்கையிலேயே இருக்கவேண்டிய நிலைமை. ஆறே மாதங்களில் ஆறு கிலோவுக்கும் அதிகமாக எடை இழந்தார்.
வேறொரு மருத்துவர் வேறு பல பரிசோதனைகளைச் செய்து பால்வினை நோய் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். அவர் பங்குக்கு ரத்தம் ஏற்றுவது, சூரியக்குளியல், பிஸ்மத் சிகிச்சை என வேறு பல சிகிச்சைகளைப் பரிந்துரைத்தார். அடுத்து லிபிடால் என்னும் மருந்தைத் தண்டுவடத்தில் ஏற்றினர். அது முதுகுத்தண்டுக்குப் பதில் மூளைக்குச் சென்றதால் அழுத்தம் கூடித் தாங்கமுடியாத தலைவலி ஏற்பட்டது.
பிறகு எலும்பு சிகிச்சை நிபுணர் வேறொரு பொருளினாலான வளையத்தை அணியச் சொன்னார். முதுகுத் தண்டிலும் காலிலும் வலி அதிகமானதால் அதைக் கழட்டும்படி ஆனது. இதுபோல மொத்தம் வெவ்வேறு பொருட்களாலான 28 விதமான வளையங்களை மாற்றி மாற்றி அணிந்துகொண்டார். தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் எல்லாமே கொடிய தண்டனை என்றார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கவிளைவை ஏற்படுத்தியது.
ஒரு வளையம் படுக்கவோ உட்காரவோ முடியாமல் செய்தது. இன்னொரு முறை காலில் மணல் பைகளைக் கட்டிக்கொண்டு மூன்று மாதம் வரையில் நின்றபடியே இருந்தார். ஒரு முறை கால் நுனி மாத்திரம் தரையில் படுமாறு எஃகு வளையத்திலிருந்து தொங்கியபடி இருந்தார். வேறொரு சமயம் பிளாஸ்டரினால் செய்யப்பட்ட வளையம் அணிந்துகொண்ட சில மணி நேரத்தில் மெல்லமெல்ல இறுகத் தொடங்கியது. ஃப்ரீடா வலியில் கூச்சலிட்டார், சிறிது நேரத்தில் மூச்சுவிடத் திணறினார். இரவு நேரமானதால் மருத்துவர்கள் உடனடியாக வரவில்லை. உடன் தங்கியிருந்த தோழி சவரக் கத்தியால் வளையத்தை அறுத்து ஃப்ரீடாவை விடுவித்தார்.
‘ஃப்ரீடா முன்னால் இருந்த கித்தானில் வரைந்தபடி நகைச்சுவையாகப் பேசினார். அவரால் நிற்கமுடியாத அளவுக்கு அசதி ஏற்பட்டபோது கீழே இறக்கிப் படுக்கவைத்தனர். ஆனால் அப்போதும் வளையங்களைக் கழட்டவில்லை. முதுகெலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டி தண்டுவடம் குறுகிவிடாமல் இருப்பதற்காக அவற்றை அணிந்தபடியே படுத்திருந்தார். அதைப் பார்த்துக் கதிகலங்கிப் போனோம்,’ என்று மருத்துவமனையில் ஃப்ரீடாவைப் பார்க்க வந்த தோழியொருவர் கூறினார்.
1944இல் வரைந்த உடைந்த தூண் (The Broken Column) ஓவியத்தின் பின்னணியில் வறண்ட, பாளம் பாளமாக வெடித்த பாலைநிலம் காணப்படுகிறது. ஆடையின்றித் தோற்றமளிக்கும் ஃப்ரீடாவின் தலைமுடி விரித்த கோலத்தில் உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த வளையத்தின் பட்டிகளைக் கழுத்து முதல் இடுப்பு வரை அணிந்திருக்கிறார். உடல் மேலிருந்து கீழாகக் கிழிக்கப்பட்டுள்ளது. நடுவிலுள்ள கிரேக்கப் பாணித் தூண் பல இடங்களில் உடைந்துள்ளது. உடலின் பல இடங்களில் ஆணி அறையப்பட்டுள்ளது. கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிகிறது. ஃப்ரீடா ஒவ்வொரு நாளும் பட்ட வேதனையை ஓவியம் துல்லியமாகக் காட்டியது.
1944 தொடங்கி தினமும் நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார் ஃப்ரீடா. இறுதி நாட்களில் வரைந்த ஓவியங்களோடு அதையும் சேர்த்துப் படிக்கையில் அவருடைய ஆளுமையை முழுவதுமாக அறிந்துகொள்ள முடிகிறது. படுக்கையில், சக்கர நாற்காலியில் என எந்த நேரமும் நாட்குறிப்பைப் பக்கத்திலேயே வைத்திருப்பார். வண்ணக் கிறுக்கல்கள், கேலிச் சித்திரங்கள், ஆபாச நகைச்சுவை, நீண்ட ஓசைநயமிக்கக் கவிதைகள், மென்மையான உள்நோக்கு என மனதில் தோன்றியதையெல்லாம் அதன் பக்கங்களில் நிரப்பினார். அதில் தவறுதலாகச் சிந்திய மைச் சிதறல்கள் தனித்த உருவங்களைப்போலத் தோற்றமளித்தன. மயக்க மருந்தின் பாதிப்பு அவரின் எழுத்திலும் கிறுக்கல்களிலும் வெளிப்பட்டன. தன்னிச்சையாக எழுதப்பட்ட காரணத்தால் வாழ்வின் இறுதி நாட்களில் அவரின் மனநிலை எப்படி இருந்தது எனப் புரிந்துகொள்ள உதவுகிறது. ‘வேதனையும் வலியும் இன்பமும் மரணமும், எல்லாமே தொடர் செயல்முறைகள் மட்டுமே,’ என எழுதினார்.
தொடக்கத்திலிருந்தே தன்னுடைய உடல்நிலை குறித்து மருத்துவ நூல்கள், கட்டுரைகள் என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ஃப்ரீடா. கையில் கிடைத்தவற்றையெல்லாம் படித்தார். எப்போதும் தன்னுடைய உடல்நிலை பற்றிய சிந்தனையில் இருந்ததால் நார்சிசிஸம் எனப்படும் தற்காதற் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் உடல்கோளாறினாலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். நிலைகுலைந்துபோகும் உடல்நலிவு ஏற்பட்டிருந்தால் உணர்வுகளைக் கலை வழியாக வெளிப்படுத்தியிருக்க முடியாது எனவும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
மற்ற மருத்துவர்கள் அனைவரும் அறுவை சிகிச்சைகளைப் பரிந்துரைத்தபோது மருத்துவர் லியோ எலஸ்ஸர் மட்டுமே அவை எதுவும் தேவையில்லை என்று உறுதியாகச் சொன்னார். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் எல்லோரின் கவனமும் தன்மீது குவியும் என்பது உளவியல் இணைத்தொகுப்பின் கூறாகும். அதன்படி, ஃப்ரீடா உளவியல் காரணங்களால் அறுவை சிகிச்சை தேவை என்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு உளவியல் ஆலோசனையே போதுமானது எனப் பரிந்துரைத்தார்.
கவனயீர்ப்புக்காகத்தான் காலற்ற, தலையற்ற, பிளவுற்ற, ரத்தம் கசிகிற ஓவியங்களைத் தீட்டினார். தான் படும் துன்பத்தின் தீவிரத்தை மற்றவர்களின் மனதில் பதியவைப்பதற்காகவே தன்னுடைய வலியை ஓவியமாக வரைந்தார் என்று கருதுவோரும் உண்டு. ஆனால் ஒன்று. உடலை நசிக்கும் வலியைக் கித்தானுக்குக் கடத்தியதும் வலி அவருடைய உடலைவிட்டு விலகியது. இன்னொன்றையும் சொல்லலாம். உடல் அல்லது மன வலி ஏற்படுகையில் கண்ணாடியில் எதிரொளிக்கும் பிம்பத்தைப் பார்க்கும்போது அந்தப் பிம்பம் நம்மைப்போலவே தோற்றமளித்தாலும் நம்முடைய வலியை அனுபவிப்பதில்லை. வலியை உணரும் நம் பார்வையில் படும் வலியற்ற பிம்பத்தின் தோற்றம் சுயத்தை நிலைப்படுத்திக்கொள்ள உதவியிருக்கலாம். வலியற்ற பிம்பத்தைக் காண்பது ஃப்ரீடாவுக்குத் தன்னைக் குறித்த நம்பிக்கையை ஊட்டியிருக்கலாம். தற்சார்பற்ற பார்வை தான் வலிமையானவள் என்ற மாயத் தோற்றத்தை வலுப்படுத்தியிருக்கலாம்.
ஃப்ரீடாவின் நண்பரும் புரவலருமான டான் ஹொஸே டொமிங்கோ லாவின் என்பவர் சிக்மண்ட் ஃபிராய்ட் எழுதிய மோசஸும் தனியிறைவாதமும் (Moses and Monotheism) என்ற நூலைக் கொடுத்தார். நூல் முன் வைத்த கருத்துகளையும் வாதங்களையும் மையமாகக் கொண்டு ஓவியம் வரையுமாறு கேட்டுக்கொண்டார். மூன்று மாதத்தில் நூலைப் படித்து முடித்து 1945இல் மோசஸ் என்ற சிறிய சுவரோவியத்தை ஒத்த சித்திரமொன்றைத் தீட்டினார் ஃப்ரீடா. ஓவியத்தின் நடுவில் பெற்றோரால் ஆற்றில் விடப்பட்ட குழந்தையொன்று நெற்றியில் மூன்றாவது கண்ணோடு காணப்படுகிறது. இரு புறத்திலும் வெவ்வேறு மதங்களின் கடவுளர்களும் சீர்திருத்தவாதிகளும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் காணப்படுகின்றனர். கிறிஸ்து, புத்தர், அலெக்ஸாண்டர், நெப்போலியன், செங்கிஸ் கான், காந்தி, லெனின், கார்ல் மார்க்ஸ், ஹிட்லர் என எல்லோரையும் வரைந்தார். பிறப்பு, மரணம் இரண்டையும் சுட்டும் குறியீடுகளும் ஓவியத்தில் பொதிந்துள்ளன. 1946இல் மெக்சிகோ அரசு நாட்டின் சிறந்த ஓவியர்களுக்குப் பரிசும் சன்மானமும் வழங்க முடிவுசெய்தது. ஃப்ரீடாவின் மோசஸ் ஓவியத்துக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழாவுக்கு இளவரசியைப்போல அலங்கரித்துக்கொண்டு வந்தார்.
‘நூலை ஒரு முறைதான் படித்தேன். அதுகுறித்த என் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையத் தொடங்கினேன். மீண்டும் படித்தபோது என்னுடைய படைப்பின் போதாமையைப் புரிந்துகொண்டேன். ஃபிராய்ட் தன்னுடைய நூலில் சிறப்பாகச் செய்திருந்த ஆய்விலிருந்து ஓவியம் முற்றிலும் மாறுபட்டிருப்பது தெரிந்தது. ஆனால் இப்போது அதை மாற்றுவதற்கு வழியில்லை,’ என்று பின்னாளில் ஓவியம் குறித்து விளக்கமளித்தார் ஃப்ரீடா.
1946இல் வரைந்த அடிபட்ட மான் (The Wounded Deer or The Little Deer) என்ற ஓவியத்தில் இலைகளற்ற மரங்களடர்ந்த வனத்தின் நடுவே உடலெங்கும் அம்பு துளைத்த ஆண் மானொன்று தப்பியோடுகிறது. அந்த மான் ஃப்ரீடாவின் முகத்தைக் கொண்டுள்ளது. அஜ்டெக் இனத்தில் மான் வலது காலின் குறியீடு. பேருந்து விபத்தில் ஃப்ரீடாவின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவர் இறக்கும் வரையில் அந்தக் காலில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. உடலைத் துளைத்த அம்புகள் உடலிலும் மண வாழ்விலும் அவர் பட்ட காயங்களைச் சுட்டுகின்றன.
தன்னை மானாகவும் மற்ற உயிரினங்களாகவும் சித்தரித்துக் கொள்வது மூலமாகப் புவியில் வாழும் உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்ற தத்துவத்துக்கு வடிவம் கொடுத்தார் ஃப்ரீடா. அது அஸ்டெக் கலாசாரத்தின் நம்பிக்கையின் நீட்சி. ஒவ்வொரு உயிரினமும் தனித்தன்மை வாய்ந்த குறியீடாக இருப்பதாகவும் அஸ்டெக் இனத்தவர்கள் நம்பினார்கள்.
ஒரு மனிதன் பிறக்கையில் அந்த நாளுக்கான உயிரினத்துடன் அவனுடைய விதி பிணைந்திருப்பதாகக் கருதினார்கள். அந்த வகையில் தான் உருமாற்றம் கொள்ளும் திறன் பெற்ற உயிரினம் என்னும் நம்பிக்கையைக் கொண்டிருந்தார் ஃப்ரீடா. மானின் உடலைக் கொண்டிருப்பதாகவும் தனக்குச் சிறகுகள் முளைப்பதாகவும் தன்னுடைய முகத்துக்குப் பதிலாக மலர் தோன்றுவதாகவும் அவரால் கற்பனை செய்து வரைய முடிந்தது.
அதே வருடம் தண்டுவட அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்தது. அதற்காக அமெரிக்கா சென்றார். உடன் தங்கை கிறிஸ்டினாவையும் கூட்டிப் போனார். தண்டுவடத்தின் நான்கு எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்ட வைக்கப்பட்டன. அதற்காக இடுப்புப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புத் துண்டமும் சிறிய உலோகக் கம்பியும் பயன்படுத்தப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்தார் ஃப்ரீடா. முழுதாகக் குணமடையும் வரையில் ஓவியம் வரையவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். வழக்கம் போலவே அதை ஏற்கவில்லை ஃப்ரீடா. அங்கே இருந்தபடியே ஓவியம் வரைந்தார். சில மாதங்களுக்குப் பிறகு கோயோயாகானுக்குத் திரும்பினார்.
துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. மெக்சிகோ வந்த பிறகு தண்டுவடத்தில் வலி துளைத்தெடுத்தது. படுக்கையைவிட்டு எழுந்திருக்கவே முடியவில்லை. அதையடுத்த எட்டு மாதங்களுக்கு எஃகு வளையத்தை அணிய வேண்டியிருந்தது. பரபரப்பாக இயங்காமல் அமைதியாக ஓய்வெடுக்குமாறு ஆலோசனை கூறினார் மருத்துவர். ஆனால் ஃப்ரீடாவில் படுத்துக் கிடக்க முடியவில்லை. வலி அதிகமாகி உடல்நிலை மோசமானது. இரும்புச் சத்துக் குறைபாட்டினால் உடல் மெலிந்தது. வலது கையில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டது. முந்தைய அறுவை சிகிச்சையின் பாதிப்பைச் சரிசெய்ய மீண்டும் ஒரு முறை தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்தது. மொத்தத்தில் தண்டுவட அறுவை சிகிச்சை ஃப்ரீடாவை அவரது வாழ்க்கையின் இறுதிக் கோட்டுக்கு வேகமாக இட்டுச் சென்றது என அவருடைய நண்பர்கள் எண்ணினார்கள்.
அத்தனை வலியோடு மருத்துவமனையில் படுத்துக் கிடந்த சமயத்திலும் ஃப்ரீடாவின் படைப்பூக்கம் குன்றவில்லை என்பது ஆச்சரியமூட்டுகிறது. 1946இல் அவர் வரைந்த மற்றொரு ஓவியமான நம்பிக்கையின் மரம் (Tree of Hope) அறுவை சிகிச்சையின் பாதிப்பைச் சித்தரிக்கிறது. இதிலும் சூரியனையும் நிலவையும் கொண்ட இரு வேறு பின்னணிகளில் இரண்டு ஃப்ரீடாக்கள் இருப்பதைக் காணலாம். ஒரு ஃப்ரீடா நோயருக்கான நீள் படுக்கையில் முதுகைக் காட்டியபடி கிடக்கிறார். மயக்கமருந்தின் பாதிப்பில் நினைவின்றி இருக்கும் அவரின் தண்டுவடப் பகுதியில் பெரிய கீறல்கள்.
இன்னொரு ஃப்ரீடா சிவப்பு வண்ண டெஹுஆனா ஆடையை அணிந்தபடி மென்சிவப்பு வண்ண இடுப்பு வளையத்தை இடது கையில் பற்றியிருக்கிறார். இடுப்பில் வேறொரு வளையத்தை அணிந்திருக்கிறார். வலது கையில் பச்சையில் சிவப்பு வாசகத்தைக் கொண்ட கொடி. அதில் ‘நம்பிக்கையின் மரம், திடமாக இரு’ என்று எழுதப்பட்டுள்ளது. அவருக்கு விருப்பமான பாடலின் முதல் வரி. அவர் வாழ்க்கையின் குறிக்கோளாகவும் எழுச்சி முழக்கமாகவும் இருந்தது. ‘நான் விடைபெறுகையில் உன் கண்களை அழவிடாதே,’ என்பது அடுத்த வரி. சிவப்பு ஆடை தரித்த ஃப்ரீடா காப்பாளர், கருணையின் கண்ணீரை வடித்தாலும் திடமாக அமர்ந்திருக்கிறார்.
1950ஆம் ஆண்டின் தொடக்க முதல் ஃப்ரீடா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலது காலில் மூன்று விரல்கள் கறுத்துப் போயிருந்தன. இடைவிடாத தலைவலியோடு காய்ச்சலும் ஏற்பட்டு அவதியுற்றார். திசு அழுகலால் பாதிக்கப்பட்ட விரல்களை அகற்றவேண்டுமெனக் கூறினார் மருத்துவர். சுமார் ஓராண்டுக் காலத்துக்கு மருத்துவமனையில் தங்கி பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார் ஃப்ரீடா. டீயகோவும் அதே மருத்துவமனையில் தங்கி ஃப்ரீடாவைக் கவனித்துக்கொண்டார்.
ஃப்ரீடா மருத்துவர்கள், தாதிகள் என எல்லோருக்கும் பிரியமான, வித்தியாசமான நோயாளியாக இருந்தார். மருத்துவர்களை ஒருபோதும் குறைசொல்ல மாட்டார். அவர்களோடு இயல்பாக நண்பர்களிடம் பேசுவதுபோலவே உரையாடுவார். தாதிகளுக்கு அவர்கள் கேட்காமலேயே இனாம் தருவார். ஃப்ரீடாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு காலில் குறைபாடு இருந்ததால் ஊன்றுகோலின் உதவியோடுதான் நடக்கமுடியும். அவர்மீது மரியாதையும் பிரியமும் கொண்டிருந்தார் ஃப்ரீடா. அவருக்குப் பரிசளிப்பதற்காக இரண்டு ஓவியங்களை வரைந்தார். அவற்றுள் ஒன்றில் மருத்துவரின் மார்பளவு உருவத்தைத் தான் கித்தானில் தீட்டுவதுபோல அமைத்தார்.
காலில் கட்டோடு படுத்திருந்தாலும் பலவிதமான விளையாட்டுகளைத் தானே உருவாக்கிக்கொண்டு உற்சாகத்தோடு இருப்பார். மண்டையோட்டு வடிவ மிட்டாய்கள், அலங்கார மெழுகுவர்த்தித் தண்டு, மெழுகினால் செய்யப்பட்ட வெண்புறாக்கள், ரஷ்ய நாட்டுக்கொடி எனப் பலவிதமான பொருட்களை அறையில் வைத்திருந்தார். படுக்கையருகிலிருந்த சின்ன மேசையில் புத்தகங்கள், வண்ணங்கள், தூரிகைகள் ஆகியவற்றை அடுக்கி வைத்திருந்தார்.
தனிமையும் அலுப்பும் ஃப்ரீடாவுக்கு அச்சமூட்டின. தன்னைச் சுற்றி எப்போதும் யாராவது இருக்கவேண்டுமென விரும்பினார். அதனால் அவரைப் பார்ப்பதற்கென யாராவது வந்துகொண்டே இருப்பார்கள். சுவாரசியமான கிசுகிசுக்கள், ஆபாச நகைச்சுவை, களிப்பூட்டும் பேச்சு எனக் கலகலப்பாக இருக்கும். மருத்துவம், அரசியல், பாலியல், கட்டற்ற காதல், கத்தோலிக்க மதத்தின் தீமைகள், தன் தந்தை, டீயகோ என எதைப் பற்றியாவது பேசுவார். அதுமட்டுமின்றி, மற்றவர்கள் பேசுவதைக் கவனத்துடன் கேட்பார். அவரைச் சந்தித்துவிட்டு வருகையில் மன நிம்மதியோடும் ஆறுதலோடும் பல மடங்கு அதிகரித்துவிடும் என்று நண்பர்கள் கூறினர். குழந்தைகளைக் கண்டால் இன்னும் அதிகமான உற்சாகம் கொள்வார்.
டீயகோ ஒளிப்படக் கருவியொன்றை வாடகைக்கு எடுத்து வந்து வாராவாரம் திரைப்படங்களைப் போட்டுக் காட்டுவார். லாரல் அண்ட் ஹார்டி, சார்லி சாப்ளின், மெக்சிகோ இயக்குநர்களின் படைப்புகள் என எல்லாவற்றையும் நண்பர்களோடு கண்டு களிப்பார் ஃப்ரீடா. உண்பதற்கு விதவிதமான பண்டங்களும் டெக்கிலா மதுவும் இருக்கும். மொத்தத்தில் அவருடைய அறையில் ஒவ்வொரு நாளும் கேளிக்கை, விளையாட்டு, விருந்து என உற்சாகம் கரைபுரளும்.
தன்னைப் பார்க்க வரும் நண்பர்களையும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களையும் தன்னுடைய இடுப்பு வளையங்களில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்வார். வண்ணங்கள், இறகுகள், கூழாங்கற்கள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு இடுப்பு வளையத்தை அலங்கரித்தார். அவற்றையெல்லாம் பயன்படுத்தவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது அயோடின், உதட்டுச் சாயம் ஆகியவற்றைக் கொண்டு வரைந்தார். உடல் சிறிது தேறிய பிறகு மருத்துவர்களின் அனுமதியோடு ஒரு நாளில் நான்கைந்து மணி நேரம் கித்தானில் வரையத் தொடங்கினார்.
(தொடரும்)

