இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு, இணையவழி வணிகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் போன்ற புதிய துறைகளை உருவாக்கி, மனிதக் குலத்திற்கு அளவற்ற வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. இணைய வசதியால் உலகத்தின் எந்த மூளையில் உள்ள நிறுவனத்திற்கும் வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. பெரிய முதலீடுகள் இல்லாமல் இணையத் தளங்கள் மூலமாகவே சுயதொழில் மற்றும் வணிகம் செய்யும் வாய்ப்புகள் எளிதாகியுள்ளன. நாள்தோறும் மாறும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் எங்கும் எளிதில் வேலை பெறமுடியும் என்கின்ற நிலை உருவாகியுள்ளது. இவை எதுவும் இல்லாத சங்க காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருந்தன?
மனித வாழ்வின் இன்றியமையாத தேவையான உணவையும் உடையையும் தமக்குத் தாமே உற்பத்தி செய்து கொண்டும், தயாரித்துக் கொண்டும் சங்க காலத்தவர்கள் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்திருந்த போதிலும், தங்களின் தேவைக்கேற்ற பன்முகத்தன்மை கொண்ட பல தொழில்களைச் செய்து, பொருளாதார நிலையில் சிறந்து விளங்கினர். வேலைவாய்ப்பு என்கிற நவீனக் கருத்துரு அன்று இல்லாத நிலையிலும், உழைப்பும் தொழிலும் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருந்தன.
இன்றைய சூழலில் தொழில் அல்லது வேலை என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள், எந்திரங்களைப்போல் இயங்கும் சூழலாக மாறிவிட்டது. கணினித் திரையின் முன்னாலும், தொழிற்சாலை எந்திரங்களுக்கு மத்தியிலும் மனிதர்கள் தங்களின் நேரத்தைச் செலவிடும் விதமாக பணிச்சூழல் என்பது மாறிவிட்டதால், வேலை நேரம் மற்றும் சொந்த நேரம் என்று மனிதர்களின் வாழ்க்கை இரண்டாகப் பிரிந்துவிட்டது. இன்றைய சூழலில், வாழ்வாதாரத்துக்கு உதவுவதாகவும் பணத்துக்கான ஆதாரமாகவும் பணிகள் அணுகப்படுவதால், அவற்றில் இயல்பான ஈடுபாடு ஏற்படுவதைவிட, அவற்றால் மன அழுத்தமே அதிகமாகிறது. இன்றைய தொழில்கள் மக்கள் தேவையைத் தாண்டி, வணிக லாபத்தையும் நுகர்வுக் கலாசாரத்தையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்குகின்றன.
சங்க காலத்தில் தொழில் என்பது மக்களின் வாழ்வோடு பிணைந்திருந்தது. அவர்களின் தொழில் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கையும் வேறு வேறாக இருக்கவில்லை. ஒவ்வொரு தொழில் செய்வோரும் மற்றவரின் தேவைக்கு உதவினர். இதனால் சமூகத்தில் உள்ள அனைவரும் பயனடைந்தனர். தொழில் என்பது உழைப்பாகவும், அறச் செயலாகவும் பார்க்கப்பட்டது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அமைப்பிற்கு ஏற்ப சங்க காலத்தில் தொழில்களைச் செய்தனர். குறிஞ்சியில் தேனெடுத்தலும் கிழங்கு அகழ்தலும், முல்லையில் ஆநிரை மேய்த்தலும், மருதத்தில் உழவும், நெய்தலில் உப்பு விளைத்தலும், மீன்பிடித்தலும் என இயற்கையோடு ஒன்றிய தொழில்களைச் செய்தனர். பாடலும், ஆடலும், உறவுகளின் அன்பும் தொழிலோடு இணைந்தே இருந்தன.
சங்க காலத்தில் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவ்வாறாகப் பல்வேறு தொழில் செய்யும் மனிதர்களைக் கூட்டாக, ‘பல்வினை கைவினைஞர்கள்’ என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம். சங்க காலத்தில் ஒரே ஊருக்குள் வாழ்ந்த உழவர், நெசவாளர், கொல்லர், தச்சர், குயவர், வண்ணார் போன்ற அனைத்துத் தொழில் பிரிவினரையும் கூட்டாக ‘பல்வினை மாக்கள்’ என்று புறநானூற்றுக்கு எழுதிய ஆராய்ச்சிக் குறிப்பில் உ.வே. சாமிநாதையர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
சங்க காலம் என்பது வெறும் விவசாயச் சமூகமாக மட்டும் சுருங்கி விடவில்லை. மக்களின் தேவைக்கேற்பப் பல்வேறு தொழிற்பிரிவுகளும், அதற்கான வேலைவாய்ப்புகளும் அங்குக் கொட்டிக்கிடந்தன. ஒவ்வொரு தொழில் செய்வோரும் தங்களுக்குள் குழுக்களாக இணைந்து வாழ்ந்தனர். தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, தமிழர்கள் தங்கள் உழைப்பாலும் திறமையாலும் பலதரப்பட்ட தொழில்களை உருவாக்கி, சுயசார்பு பொருளாதார அமைப்பை வெற்றிகரமாக நடத்தினர் என்பதற்குப் பின்வரும் சங்க இலக்கியப் பாடல் சான்றாக உள்ளது.
சங்க இலக்கிய நூலான மதுரைக்காஞ்சியில் வரும் 511 முதல் 517 வரையிலான அடிகள், பண்டைய மதுரை மாநகரத்தின் பகல் நேரக் கடைத்தெருக்களான நாளங்காடியில் தொழில் செய்த பல்வேறு வகையான கைவினைஞர்களைப் பற்றி விவரிக்கின்றன.
‘கோடுபோழ் கடைநருந் திருமணி குயினருஞ்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நருஞ்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையு மாயு மாக்களு
மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றர’
சங்குகளை அறுத்து, அவற்றைக் கடைந்து வளையல் போன்ற அணிகலன்களைச் செய்யும் கைவினைஞர்கள். அழகிய மணிகளில் துளையிட்டு, அவற்றை மாலைகளாகக் கோர்ப்பவர்கள். நெருப்பில் சுடவைத்து உருக்கிய தூய தங்கத்தைக் கொண்டு ஒளிரும் ஆபரணங்களைச் செய்யும் பொற்கொல்லர்கள். விற்பனைக்கு வரும் தங்கத்தை உரைக்கல்லில் உரைத்துப் பார்த்து, அதன் தரத்தை மதிப்பிடும் நாணயப் பரிசோதகர்கள். கலிங்க நாட்டு ஆடைகளைப் போன்ற மென்மையான, தரமான துணிகளை விற்கும் துணி வணிகர்கள். செம்பு மற்றும் பிற உலோகப் பாத்திரங்களை அவற்றின் எடைக்கேற்ப நிறுத்துப் பார்த்து விற்கும் உலோக வணிகர்கள். அக்காலத்தில் தராசின் ஒரு தட்டில் பொருளையும், மறுதட்டில் அதற்கு இணையான செம்பு நாணயங்களையும் வைத்து வணிகம் செய்தனர். மகளிர் அணியும் மார்புக் கச்சைகளைத் தைத்து அல்லது முடித்து அழகுபடுத்துபவர்கள். வழிபாட்டிற்கும் மங்கல நிகழ்வுகளுக்கும் தேவையான நறுமண மலர்கள், அகில், சாம்பிராணி, சந்தனக்கட்டை போன்ற நறுமணப் பொருள்களின் தரத்தை ஆராய்ந்து விற்பவர்கள். உலகில் உள்ள பல்வேறு செய்திகளையும் கதைகளையும் இயற்கை நிகழ்வுகளையும், மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றுக்கு இணையான வடிவங்கள் அல்லது உவமைகளை வரைந்து காட்டும் ஓவியக் கலைஞர்கள். ஓவியர்கள் மட்டுமன்றி, பல்வேறு தொழில்களைச் செய்யும் பிற கைவினைஞர்களும் ஒன்றாகக் கூடியிருந்தனர். தெளிவான அலைகளையுடைய ஆற்றின் மணலில், நீர் வற்றிய பின் தோன்றும் மணல் வரிகளைப் போன்று, மடிப்புகள் தெரியும் வகையில் துணிகளை விரித்து வைத்திருந்தனர். ஒளிரும் பலவகையான குட்டையான துணிகளையும், நீண்ட பெரிய துணிகளையும் அவற்றின் மடிப்புகளை அகற்றி, மக்கள் பார்வையிடும் வகையில் விரித்து வைத்திருந்தனர். இளையவர்களும் முதியவர்களுமான பல்வேறு கைவினைஞர்கள்—கொல்லர், தச்சர், சிற்பி போன்றோர்—மதுரையின் நான்கு பெரிய மாட வீதிகளிலும் ஒன்றாகக் கூடியிருந்தனர்.
பண்டைய மதுரை நகரின் தெருக்களில் சங்க காலத் தமிழர்களின் தொழில் மற்றும் கலைச் செழுமை, மிக உன்னதமான நிலையில் இருந்ததை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. தச்சுத் தொழில், ஆபரணத் தொழில், துணி வணிகம், வாசனைத் திரவிய வணிகம் எனப் பல்துறை சார்ந்த கைவினைஞர்கள் ஒருசேர அங்கு வாழ்ந்தனர். குறிப்பாக, மதுரைக்காஞ்சியின் 516 மற்றும் 517வது அடிகள் தமிழர்களின் ஓவியக் கலைத் திறனுக்கு மிகச்சிறந்த சான்றாகும். ஒரு பொருளைத் தத்ரூபமாகப் பார்த்து, உலகப் பொருள்களோடு உவமித்து, மிகக் கூர்மையான பார்வையோடு நுட்பமாக வரையும் ஆற்றல் பெற்ற ஓவியர்கள் மதுரையில் நிறைந்திருந்தனர் என்று மாங்குடி மருதனார் வியந்து பாடுகிறார்.
இதேபோன்று சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவு ஊரெடுத்த காதை’ மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில், சோழ நாட்டின் தலைநகரான பூம்புகாரில் வாழ்ந்த பலதரப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் தொழில்கள் குறித்து மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்நகரம் அன்றைய காலத்தில் உலகளாவிய வணிக மையமாகத் திகழ்ந்திருந்தது.
‘வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
துரசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகைத் தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் மைந்தின விலைஞரோடு
ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’
அழகான வண்ணப்பொடிகள், குளிர்ந்த நறுமணச் சந்தனம், நறுமலர்கள் மற்றும் நறுமணப் புகையை அளிக்கும் வாசனைப் பொருள்களை விற்பவர்கள் நடமாடும் அங்காடித் தெருவும், பட்டு, விலங்குகளின் உரோமம் மற்றும் பருத்தி ஆகிய நூல்களைக் கொண்டு மிக நேர்த்தியான ஆடைகளை நெய்யும் நெசவாளர்களின் (காருகர்) இருப்பிடங்களும், ஆடைகள் (தூசு), பவளம் (துகிர்), சந்தனம் (ஆரம்), அகில், குற்றமில்லாத முத்துகள், மணிகள், தங்கம் மற்றும் பல அரிய ஆபரணங்களும், அளவிட முடியாத அளவிற்குச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் அகன்ற கடைத்தெருக்களும், பால் பொருள்கள் மற்றும் பல வகையான உணவு தானியங்கள் விற்கப்படும் தானிய அங்காடி வீதியும், சங்கு வளையல் விற்போர், அப்பம் சுடுவோர், மாலைகள் கட்டுவோர், மீன் விற்போர், உப்பு விற்போர், வெற்றிலை பாக்கு விற்போர் மற்றும் நறுமணப் பொருள்கள் விற்போர்களும், கொழுப்பு நிறைந்த இறைச்சி விற்பவர்கள் மற்றும் எண்ணெய் விற்பவர்கள், நெருக்கமாக இருக்கும் இறைச்சிக்கூட தெரு எனப் புகார்ப் பட்டினத்தின் மருவூர்ப்பாக்கம் என்னும் பகுதியில் இருந்த வணிக வீதிகளின் சிறப்பை இப்பாடல் விவரிக்கிறது.
வெண்கலத் தொழில் செய்யும் கன்னார், மரங்கொல் தச்சர், செம்பினாற் கலங்கள் செய்வோர், இரும்பினால் தொழில்கள் புரியும் கொல்லன், ஓவியர், சிற்பாசிரியர், பொற்கொல்லர், மணிகளிழைப்போர், தையல் வினைஞர், நெட்டி, துணி போன்றவற்றைக்கொண்டு பறவை, பூங்கொத்து முதலிய உருவங்களைச் செய்வோர், குழல் முதலிய துளைக் கருவியாலும், யாழ் முதலிய நரம்புக் கருவியாலும், பண் இசையினை வளர்க்கும் பாணர், குழலர் ஆகிய பல்வகைத் தொழிலாளர்கள் வாழ்தற்குரிய இடமாகப் பூம்புகார் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.
இதன் மூலம் பண்டைய தமிழகத்தில் இருந்த பல்வேறு தொழில்களைக் குறித்து அறிய முடிகிறது.
சங்க காலத்தில் தொழில் என்பது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் வாழ்வியல் முறையாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனிதன் தன் தொழிலில் எந்திரத்தனமான அழுத்தத்திற்கே ஆளாகிறான். இன்றைய மன அழுத்தமும் இலக்குகளை எட்ட வேண்டிய பதற்றமும் அன்றைய தொழில்களில் இல்லை. அன்றைய தொழில்களில் மக்கள் அனைவரும் பரவலாகப் பயன்பெற்றனர். இன்றைய தொழில்களால் நுகர்வோர் மற்றும் பெருநிறுவனங்கள் பயன்பெறுகின்றனர். அன்று மனித மூளையும் கைகளும் செய்த வேலைகளை, இன்று மனித மூளையின் வழிகாட்டுதலோடு இயந்திரங்களும் கணினிகளும் செய்கின்றன. இயந்திரங்கள் நம் வேலைகளை எளிதாக்கலாம். ஆனால் இயற்கையோடு இயைந்த தொழில்களும் வாழ்வியலுமே நம் ஆன்மாவிற்கு நிம்மதியையும் உண்மையான மகிழ்ச்சியையும் தரும் என்பதைச் சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
(தொடரும்)

