Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கிய இலக்கியக்குழுவைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அக்காலத்தில் டி.கே.சிதம்பர முதலியார் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்கூடுகையோடு தொடர்புடையவர். கல்கி, ராஜாஜி, நீதிபதி மகாராஜன், அ.சீனிவாசராகவன், தொ.மு.பாஸ்கரத்தொண்டமான் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர். கல்கியின் மறைவுக்குப் பிறகு இரண்டாண்டு காலம் கல்கி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதிப் பார்த்தவர் சோமு. அவருடைய கவிதைகள் நேரடியான விவரணைகளைக் கொண்ட எளிய மொழியில் யாப்பிலக்கணப்படி சந்தநயத்தோடு எழுதப்பட்டவை. பாரதியாரை அடுத்து உருவான நாமக்கல் கவிஞரின் மரபைச் சேர்ந்தவர் என சோமுவை அடையாளப்படுத்த முடியும். ’ரவிச்சந்திரிகா’ என்பது அவருடைய முக்கியமான நாவல். ’மனைமங்கலம்’ அவர் எழுதி வெளிவந்த எட்டுச் சிறுகதைத்தொகுதிகளில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். அவருடைய சிறுகதைகள் கச்சிதமான காட்சியமைப்பும் கூர்மையான சித்தரிப்பும் கொண்டவை. பதினோரு சிறுகதைகளைக் கொண்ட அத்தொகுதி பாரதி பதிப்பகம் வழியாக 1962இல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மீ.ப.சோமுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையில் நல்ல கடிதத்தொடர்பு இருந்தது. புதுமைப்பித்தன் அவருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து நேஷனல் புக் டிரஸ்ட் வழியாக ஒரு தொகுப்பை வெளியிட்டார் சோமு. அவருக்கு சாகித்திய அகாதமியின் விருது கிடைக்கக் காரணமாக இருந்த ’அக்கரைச்சீமையிலே’ பயணநூல் மிகவும் முக்கியமானது. ஏ.கே.செட்டியார், சோமலெ ஆகியோருடன் சோமுவும் தமிழ்ப்பயண இலக்கியத்தின் முன்னோடியாக விளங்குகிறார்.

சித்தர் பாடல்களை முன்வைத்து மீ.ப.சோமு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் அக்காலத்தில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அப்பாடல்களில் அடங்கியிருக்கும் மறைஞானக் கருத்தை நாட்டாரியல், சிற்பவியல் வழிபாட்டுக்கூறுகளோடு இணைத்து பொருள் காண அவர் எடுத்த முதல் முயற்சி மிகவும் முக்கியமானது. பிற்கால ஆய்வாளர்களுக்கு அது ஒரு முன்னோடி நூலாக விளங்கியது.

0

’மனைமங்கலம்’ தொகுதியின் முதல் சிறுகதையாக அமைந்துள்ள ‘பித்தம் தெளிந்தது’ சோமுவின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டான கதை. ஒருவனை நல்லவனாக எப்படி வரையறுப்பது, ஒருவனைக் கெட்டவனாக எப்படி வரையறுப்பது என்னும் கேள்விகள் இன்றளவும் விடையறியாப் புதிர்களாகவே இருப்பதை நாம் அறிவோம். தோற்றம், தகுதி, குணம், பேச்சு, பழக்கவழக்கம் என எதை வைத்தும் வரையறுக்கமுடியாத ஒன்றாகவே மனித வாழ்க்கை அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு புதிரான தருணத்தைத்தான் சோமு ‘பித்தம் தெளிந்தது’ சிறுகதையில் முன்வைத்திருக்கிறார்.

உளவியல் பேராசிரியரான சிவானந்தமும் அவர் நண்பரும் நிகழ்த்தும் உரையாடலாக அச்சிறுகதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. “மங்களகரமான மஞ்சள் நிறப்பூக்களோடு குலுங்கிக்கொண்டிருக்கும் இந்த மலர்ச்செடிக்கு அருகிலே நாள்தோறும் அந்தக் காட்சியைப் பார்க்கலாம்” என்று தன் நண்பருக்குச் சுட்டிக்காட்டியபடி உரையாடலைத் தொடங்குகிறார் பேராசிரியர். சென்னை சாந்தோம் கடற்கரையில் மேரி ராணியார் கல்லூரிக்கு எதிரில் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரில் கடற்கரை விரிந்திருக்கிறது.

”நல்ல காரியம் என்று பிறர் சொல்லும் செயலைச் செய்ததற்காக வருத்தப்படவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய இத்தனை ஆண்டு கால ஆராய்ச்சிக்கு ஒரு பொருளும் இல்லாமல் போய்விட்டது. மனத்தையும் அதன் தத்துவத்தையும் அறிந்தவன் என நான் இருந்துவிட்டேன். ஆனால் நான் அறிந்ததற்கெல்லாம் ஒரு பொருளும் இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று நீண்டதொரு முன்னுரையோடு விழிகள் கலங்கியபடி உரையாடலைத் தொடங்குகிறார் பேராசிரியர்.

அதே கடற்கரையில் சில நாட்கள் முன்னர், தான் தொடர்ந்து சந்தித்த ஒரு மனிதனைப்பற்றி அவர் சொல்லத் தொடங்குகிறார். மனநிலை சரியில்லாதவன் அவன். முதல் பார்வையிலேயே பேராசிரியர் அதைப் புரிந்துகொள்கிறார். அப்போது ஒரு நாயின் கழுத்தில் மாட்டிய நீண்டதொரு கயிற்றை ஒரு கையிலும் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய பிட்சாடணர் படத்தை மற்றொரு கையிலும் ஏந்தியவனாக அவன் நடந்துவருகிறான். கரையோரமாக செடியில் மலர்ந்திருந்த மஞ்சள் பூவை ஒவ்வொன்றாகப் பறித்து கண்ணாடிச் சட்டமிட்ட படத்தின் உச்சியில் வைக்க முயற்சி செய்கிறான். பூ அந்தப் புள்ளியில் நிற்கவில்லை. கீழே விழுந்துவிடுகிறது. அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான். பிடிமானம் இல்லாமல் அவன் பறித்துவைத்த பூக்கள் எல்லாமே விழுந்துவிடுகின்றன.

ஒரு கட்டத்தில் தன் முயற்சியில் வெல்லமுடியாத சலிப்பில் அந்த முயற்சியைக் கைவிட்டு தொடர்ந்து கடலை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். அவனோடு நடக்கத் தயங்கி அடிக்கடி நின்றுவிடும் நாயையும் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்கிறான். யாரோ ஒரு சிறுவனிடம் பேசுவதுபோல செல்லமாகக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசியபடி இழுத்துச் சென்று கரையோரத் தண்ணீரில் அந்த நாயை நிற்கவைக்கிறான். தண்ணீரில் இறங்க மறுத்து விலகியோட முனையும் நாயை இழுத்துச்சென்று நீரில் நிற்கவைத்து, கொஞ்சிக்கொஞ்சிப் பேசியபடி குளிக்கவைக்கிறான். நீராடிய பிறகு தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அதன் தலையைத் துவட்டிவிடுகிறான். மார்போடு அணைத்து கொஞ்சுகிறான். பிறகு அருகிலிருந்த ஓட்டலிலிருந்து தோசை வாங்கிவந்து உணவுண்ண வைக்கிறான்.

மனநிலை பிறழ்ந்த நிலையிலும் கூட பிட்சாடணர் மீது பக்தியும் நாயிடம் அன்பும் கொண்டிருந்த அந்த இளைஞனை ஏதோ ஒரு காரணத்துக்காக பேராசிரியருக்குப் பிடித்துவிடுகிறான். இரண்டு மூன்று நாட்களாக கடற்கரையில் நிகழும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்ததன் மூலம் தன் உளவியல் ஞானத்தைக் கொண்டு அவனைக் குணப்படுத்தும் எண்ணம் பேராசிரியருக்குள் எழுகிறது. பித்துநிலையிலேயே இந்த அளவுக்கு அன்பும் பக்தியும் கொண்டவன் தெளிந்த மனநிலையில் இன்னும் கூடுதலான அன்பும் பக்தியும் கொண்டவனாக வாழ்வான் என அவர் நம்புகிறார். அப்படி நினைத்ததுமே, அதை உடனடியாகச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்று முடிவுகட்டிவிடுகிறார்.

ஒருநாள் அவன் நாயை இழுத்துக்கொண்டு கடலைநோக்கிச் செல்லும் தருணத்தில், அந்த இளைஞனை நெருங்கிச் சென்று பேச்சைத் தொடங்குகிறார். தனக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும் தன்னுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தால் அவர் மூலம் பித்தம் தெளிந்து குணமடைந்துவிடலாம் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் அவனோ அவரோடு வர மறுக்கிறான். பட்டினத்தார் பாடல்களைத் தெளிவான குரலில் பிழையின்றிப் பாடி தன் உடல்நிலை சரியாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு நாயைக் குளிக்கவைக்க கடலை நோக்கி இழுத்துக்கொண்டு செல்கிறான்.

ஆயினும் பேராசிரியர் தன் முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவனிடம் பேசிப்பேசி, அவன் மனத்தை மாற்ற முயற்சி செய்கிறார். ஒருநாள் அவன் அவருடைய திட்டத்துக்கு உடன்பட்டு தன் நாயோடும் பிட்சாடணர் படத்தோடும் வீட்டுக்கு வருகிறான். தன் வீட்டிலேயே ஓர் அறையை ஒதுக்கி அதில் அவனைத் தங்கவைக்கிறார் பேராசிரியர். பிட்சாடணர் படத்தைத் தன் படுக்கைக்கு அருகிலேயே வைத்துக்கொள்கிறான் அவன். பக்திப்பாடல்களைப் பாடிப் பாடி அந்த நினைவிலேயே திளைக்கிறான். குளியலறைக்கு நாயை அழைத்துச்சென்று தினமும் குளிக்கவைக்கிறான். அத்துடன் கொஞ்சிக்கொஞ்சிப் பேசி சிரித்து பொழுதுபோக்குகிறான்.

அடுத்த நாள் வீட்டுக்கு அருகிலிருந்த டாக்டரை அழைத்துவந்து அவனைச் சோதிக்கவைக்கிறார் பேராசிரியர். அவனைச் சோதித்துப் பார்க்கும் டாக்டர் அவனுடைய மனப்பிரச்சினை மருந்துகள் வழியாக எளிதாகக் குணப்படுத்தத்தக்க ஒன்றுதான் என்று தெரிவிக்கிறார். பிறகு அவன் உட்கொள்வதற்குத் தேவையான மருந்துமாத்திரைகளையும் அவரே கொடுத்துவிட்டுச் செல்கிறார். இப்படியாக ஒவ்வொரு நாளும் டாக்டரின் சோதனையும் சிகிச்சையும் தொடர்கின்றன.

ஒரு வார சிகிச்சையிலேயே ஆச்சரியப்படத்தக்க வகையில் அவனுடைய மனநிலையில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்படுகிறது. அவன் கண்களில் அதுவரை தெரிந்துவந்த பித்துநிலை மறையத் தொடங்குகிறது. தெளிவின் சுடர் தெரியத் தொடங்குகிறது. அதைப் பார்த்த பேராசிரியர் பெருமகிழ்ச்சி கொள்கிறார்.

ஆனால் அவருடைய மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தெளிவு திரும்பிய முதல்நாள் அவன் அதுவரை கையிலேயே ஏந்திப் பிடித்துவந்த பிட்சாடணர் படத்தை ஜன்னல் வழியே தரையில் வீசி எறிகிறான். கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதற, சட்டத்திலிருந்து விடுபட்ட பிட்சாடணரின் படம் காற்றில் பறந்துசெல்கிறது. அதுவரை அவன் பக்தியின் மீது பெருமதிப்பு வைத்திருந்த பேராசிரியர் திகைத்து உறைந்துவிடுகிறார். இந்தச் செயலைச் செய்ய அவன் மனம் எப்படித் துணிந்தது என்று புரிந்துகொள்ள முடியாமல் குழம்புகிறார்.

இன்னொரு வார சிகிச்சையில் அவன் பித்துநிலை மறைந்து இன்னும் கூடுதலான தெளிவு தெரியவருகிறது. அத்தனை நாட்களும் அவன் குழந்தைபோல அணைத்துக் கொஞ்சிய நாயை அடித்து வெளியே விரட்டியடிக்கிறான். வலி தாங்காமல் அந்த நாய் வெளியே ஓலமிட்டபடி ஓடியது. தங்க இடமின்றி வெளியே சுற்றித் திரியும் நாய் ஒவ்வொரு நாளும் அவனை நெருங்கி வீட்டுக்குள் வருவதற்கு முயற்சி செய்கிறது. அவன் அந்த நாயைக் கொடூரமாக அடித்து விரட்டிவிடுகிறான். இன்னொரு நாள் அந்த வீட்டு வேலைக்காரன் தன்னிடம் மரியாதைக்குறைவாக உரையாடினான் என்று குற்றம் சுமத்தி அடித்து விரட்டுகிறான்.

அடுத்து சில நாட்களில் அவன் முழுமையாகவே குணம் பெற்றுவிடுகிறான். டாக்டரும் பரிசோதித்துவிட்டு அவனுடைய பித்துநிலை முற்றிலுமாக அகன்றுவிட்டது எனக் கூறிவிட்டுச் செல்கிறார். அவனும் அந்த இடத்தைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் அகன்றுவிடுகிறான்.

பித்தநிலையில் இருந்தபோது அவனிடம் இருந்த பேரன்பு நிலையும் ஞானமும் இன்னும் மேம்படக்கூடும் என்கிற எண்ணத்தோடுதான் பேராசிரியர் அவன் குணம்பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக மருத்துவத்தால் தெளிவுற்ற அவனுடைய மனநிலை அன்பும் மனிதாபிமானமும் அற்ற கல்லாக அவனை மாற்றிவிடுகிறது. அறிவுநிலைக்கும் அன்புநிலைக்கும் உள்ள புதிரான உறவு எல்லாக் காலத்திலும் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. பித்துநிலை, தெளிந்த நிலை தொடர்பான குணங்களையும் செயல்பாடுகளையும் விளக்கமாக விவரிக்கும் எந்தப் பாடநூல்களிலும் இந்த விசித்திர முரண் ஏன் நிகழ்கிறது என்பது தொடர்பான விளக்கங்கள் கிடையாது. இக்காரணத்தாலேயே எல்லாக் காலத்துக்கும் உரிய சிறப்பான கதையாக இச்சிறுகதை அமைந்துவிடுகிறது.

0

’செக்கும் சிவலிங்கமும்’ என்னும் சிறுகதையும் இத்தொகுதியில் முக்கியமான ஒன்று. மீனாட்சிபுரம் என்னும் ஊரில் புளியந்தோப்பை ஒட்டிய வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஒரு திடலில் ஒரு செக்கு இயங்குகிறது. அந்தச் சிற்றூரில் அந்த ஒரு செக்கு மட்டுமே இருப்பதால், ஊராரின் எண்ணெய்த் தேவைக்காக ஓய்வில்லாமல் நாள்முழுதும் இயங்கியபடியே இருக்கிறது.

அந்தச் செக்குக்கு அருகிலேயே மஞ்சணத்தி மரத்தையொட்டி ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. அந்தச் சிற்றூரில் வசிப்பவர்கள் அனைவரும் பக்திமான்கள் என்பதால் நாள்தோறும் ஓய்வே இல்லாமல் சிவலிங்கத்துக்கு வழிபாட்டுப்ப்பூசைகள் நடைபெற்றபடி இருக்கின்றன.

அதே திடலில் இன்னொரு திசையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறத் தோதான வகையில் ஒரு மேடை இருக்கிறது. அங்கு சீர்திருத்தக்காரர்கள் அடிக்கடி கூட்டம்போட்டு “நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை. நம்முடைய பழைய மூட நம்பிக்கைகளைத் துறந்து பகுத்தறிவு உள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்” என்று பேசுகிறார்கள். சரிநிகர் சமானம் என்னும் சொல் ஊரார் காதில் விழுந்ததுபோல அந்தச் செக்கின் காதிலும் விழுகிறது. “மனிதர்கள் அனைவரும் சமமாக உலவி வரும் நிலையில் எனக்கு மட்டும் இடுப்பு ஒடியும்படியான வேலையும் சிவலிங்கத்துக்கு மட்டும் மாலைமரியாதைகளும் என வித்தியாசமாக ஏன் அமைந்திருக்கிறது?” என செக்கு நினைக்கத் தொடங்குகிறது.

அதுதான் தொடக்கம். அந்தக் கேள்விதான் கதையின் மையப்புள்ளி. அதற்குப் பிறகு ஒவ்வொரு கணமும் சிவலிங்கத்தைப் பார்த்துப் பார்த்து மனத்துக்குள் பொருமத் தொடங்குகிறது செக்கு. சிவராத்திரியை ஒட்டி அந்தத் திடலில் உரையாற்றிய ஒரு சாமியார் சிவபெருமானின் திருவிளையாடல்களையும் பெருமையையும் நீண்ட நேரம் எடுத்துரைத்தார். தன் உரையை முடிக்கும்போது ‘எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப்பகலை இரவென்று கூறும் பாதகரே’ என்கிற பட்டினத்தார் பாடலைப் பாடி இந்த உலகில் உள்ள அனைத்தும் கடவுளின் சொரூபமே. எங்கும் உறையும் இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான், அதோ அந்தச் செக்கிலும் இருக்கிறான்’ என்று ஆவேசத்துடன் சொல்லி முடிக்கிறார். அதைக் கேட்டு செக்குக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது.

திருவிழாச்சந்தடி முடிந்த மறுநாள் இரவில் சாமியார் செக்கடிக்கு வந்து காவித்துண்டை உதறி விரித்து படுத்து உறங்கத் தொடங்குகிறார். இதுதான் தக்க சமயம் என நினைத்த செக்கு அவரை மென்மையான குரலில் அழைத்து, ‘செக்கும் சிவலிங்கமும் ஒன்று என்பதுதானே உங்கள் கொள்கை. அதை இன்னொருமுறை தயவுசெய்து எனக்காகக் காதுகுளிரச் சொல்வீர்களா?’ என்று கேட்கிறது.

செக்கின் குரலைக் கேட்ட சாமியார் சட்டென எழுந்து உட்கார்ந்து ஒருமுறை செக்கை உற்றுப் பார்க்கிறார். பிறகு ‘செக்கும் சிவலிங்கமும் ஒன்று என இப்போதும் நான் சொல்கிறேன். ஆனால் சிவலிங்கமும் செக்கும் ஒன்று என நான் எப்போதும் சொல்லவில்லை’ என்று தெளிவான குரலில் சொல்கிறார். அதைக் கேட்டதும் முதலில் திகைப்பில் மூழ்கிவிடுகிறது செக்கு. பிறகு சாமியாரின் முகத்தையே சில கணங்கள் கூர்ந்து பார்க்கிறது.

ஒருசில நிமிடங்களிலேயே பழைய செய்திகள் எல்லாம் அதற்கு நினைவுக்கு வந்துவிடுகின்றன. அந்தச் சாமியார் முன்பு உளியெடுத்து வேலை செய்யும் கல்தச்சராக இருந்தவர் என்பதையும் குறுக்குத்துறை பாறைகளை உடைத்து தன்னையும் சிவலிங்கத்தையும் உருவாக்கியவர் அவரே என்பதையும் உணர்ந்துகொள்கிறது. உடனே ஆத்திரத்துடன் அந்தச் சாமியாரைப் பார்த்து “எல்லாம் உன் உளி செய்த குற்றம்” என்று சீறுகிறது.

“செக்கு மகனே, கோபம் கொள்ளாதே” என்று அமைதிப்படுத்துகிறார் சாமியார். பிறகு ”உன்னை உருவாக்கியதும் சிவலிங்கத்தை உருவாக்கியதும் இந்தக் கைதான் என்பது உண்மை. ஆனால் ஒரே உளியின் படைப்பில் செக்கும் சிவலிங்கமும் ஏன் வேறுவேறாக உருவாகவேண்டும் என்னும் கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. அந்த விடையைத் தேடித்தான் நான் தச்சுவேலையைத் துறந்து சாமியாராக அலைகிறேன். வெள்ளை ஆடை காவி ஆடையாக மாறியதே தவிர, என் வினாவுக்கு இதுவரை விடை தெரியவில்லை” என்று அமைதியான குரலில் சொல்லிவிட்டு பெருமூச்சு விடுகிறார். இறுதியாக “ஒருவேளை நான் அந்த வினாவுக்குரிய விடையைக் கண்டறிந்துவிட்டால் உன்னிடம் மீண்டும் வந்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்து நடக்கத் தொடங்குகிறார்.

சுவாரசியமான ஒரு நாட்டுப்புறக்கதையைப்போல தொடங்கிய சிறுகதை மெல்லமெல்ல ஒரு புதிரான புள்ளியில் வந்து நிறைவடைகிறது. இன்றும் அந்தப் புதிருக்கு விடையைச் சொல்பவர்கள் இல்லை. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு பிள்ளைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆசிரியரிடம் படிக்கும் இரு மாணவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே தளத்தின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்கள் ஒரே மாதிரியாக வாழ்வதில்லை. நேற்று போல இன்று இருப்பதில்லை. இன்றுபோல நாளை இருப்பதில்லை. எல்லாமே இந்தப் புதிரின் நீட்சிதான். இந்தப் புதிரைத் தொட்டு அடையாளம் காட்டுவதாலேயே இந்தக் கதை மிகமுக்கியமான கதையாகிறது.

0

தொகுப்பின் தலைப்புக்கதையான ‘மனைமங்கலம்’ இறுதியாக இடம்பெற்றுள்ளது. மணக்கிள்ளி வளவன் என்னும் சோழ அரசன் தன் நாட்டை வளப்படுத்துவதற்காக ஒரு திட்டம் வகுக்கிறான். சம்பை என்னும் ஆறு அந்த நாட்டுக்கு அருகில் பாய்ந்துசெல்கிறது. காவிரி நதியிலிருந்து ஒரு பெருங்கால்வாய் வெட்டி அந்தக் கிளைநதியின் துணையோடு உறையூரைச் சுற்றியிருக்கும் புஞ்சை நிலங்களையும் தரிசு நிலங்களையும் வளம்கொழிக்கும் நஞ்சை நிலங்களாக மாற்றவேண்டும் என்பதுதான் அவன் திட்டம். அதனால் அமைச்சரை அழைத்து அந்தக் கால்வாய்ப்பாதையில் உள்ள மனைகளையெல்லாம் அங்கு வசிப்பவர்களுக்கு உரிய விலைகொடுத்து கையகப்படுத்தும்படி கட்டளை விதிக்கிறான்.

அரசு சேவகர்கள் அக்கட்டளைப்படி ஊரெங்கும் சென்று கால்வாய்ப்பாதையில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்குகிறார்கள். அந்தப் பாதையில் மன்னனின் சேனையில் ஏற்கனவே பணிபுரிந்து பாண்டியருக்கு எதிராக மாலூரில் நடைபெற்ற போரில் போரிட்டபோது உயிரைத் துறந்த சூலபாணி என்கிற வீரனுடைய வீடு இருக்கிறது. அவனுடைய மனைவி கொற்றவை அங்கு தனித்து வசித்துவருகிறாள். அவள் தன் இடத்தை அளிக்க மறுக்கிறாள். அமைச்சரும் படைத்தலைவரும் நேரில் வந்து கேட்டபோதும் அவள் பிடிவாதமாக தரமுடியாது என மறுக்கிறாள். அரசு சேவகர்கள் கொற்றவையின் பிடிவாதத்தை மன்னனிடம் தெரிவிக்கிறார்கள்.

ஒருநாள் இரவில் மாறுவேடத்தில் நகருலா வரும் அரசன் கொற்றவையின் குடிசைக்கு வருகிறான். வாய்ப்பிருந்தால் அவளை நேரில் சந்தித்து தன் திட்டத்தைப்பற்றித் தெரிவிக்கவேண்டும் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. நள்ளிரவில் ஒருவரும் அறியாதபடி அவளுடைய குடிசைக்கு அருகில் வேலியை ஒட்டி அவன் வந்து நிற்கும் சமயத்தில் அவள் குடிசைக்குப் பின்புறத்தில் இருந்த நடுகல் முன்னால் நின்று மலர்களைத் தூவி யாம வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாள் கொற்றவை. அதைப் பார்த்து உறைந்து நின்றுவிடுகிறான் மன்னன்.

நடுகல் முன்னால் நின்று மனமுருகப் பேசிய சொற்கள் மன்னன் காதில் விழுகின்றன. “நாட்டுக்காக நான் செய்யவேண்டிய கடமை எது? என் கணவனுக்காக செய்யவேண்டிய கடமை எது? என் தாய்நாட்டுக்காக என் கணவனை நான் பறிகொடுத்தேன். இன்றுவரை என் தாய்நாட்டுக்காகவே என் வீரனை வணங்குகிறேன். இப்போது இந்தத் தாய்நாட்டுக்காக இந்தக் கடமையையும் நினைவையும் இழக்கவேண்டுமா?” என்று கேட்டபடி விம்மி அழுகிறாள்.

அழுகையூடே அவள் சொன்ன சொற்களைக் கேட்டுத் திகைத்த அரசன் வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிடுகிறான். அடுத்தநாள் காலையில் அமைச்சரை அழைத்து கொற்றவையின் நிலத்தைக் கையகப்படுத்தவேண்டாம் என்று தெரிவிக்கிறான். அது மட்டுமன்றி, அவள் வசிக்கும் மனைமங்கலம் கிராமத்தில் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தவேண்டாம் என்று சொல்கிறான். ஊருக்கு வணக்கம் செலுத்தியவாறு அந்த ஊரைச் சுற்றிக்கொண்டு ஓடும்படி கால்வாயின் பாதையை மாற்றித் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறான்.

மன்னனின் முடிவுக்கான காரணத்தைக் கேட்கிறார் அமைச்சர். ”இந்த மண்ணில் பெண்கள் தம் அறக்கடமையை ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்வதால்தான் மழை பொழிகிறது. நிலம் செழிக்கிறது. மக்கள் வாழ்கிறார்கள். இந்த மங்கல மாட்சியை நாம் கெடுத்துவிடவேண்டாம்” என்று பதில் சொல்கிறான் மன்னன். ”சுற்றிவளைத்துச் செல்லும் பாதையின் காரணமாக செலவுத்தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொல்லி தயக்கத்தை வெளிப்படுத்துகிறார் அமைச்சர். ஆனால் தன் முடிவில் உறுதியாக இருக்கும் மன்னன் “செலவுத்தொகை அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் ஓர் உத்தமியின் சீற்றத்தால் ஏற்படும் இயற்கைச்சீற்றத்தால் நேரக்கூடிய அழிவு அதைவிட அதிகமாக இருக்கும்” என்று சொல்கிறார்.

மன்னனின் கட்டளைப்படி கால்வாய்ப்பாதை மாற்றியமைக்கப்படுகிறது. ஒருசில மாதங்களுக்குள் வெட்டி முடிக்கப்பட்ட கால்வாய்ப்பாதை ஊரைச் சுற்றிக்கொண்டு ஓடத் தொடங்குகிறது என்னும் குறிப்போடு கதை முடிவடைகிறது. இக்கதையில் விவரிக்கப்படும் இரு நம்பிக்கைகள் நாம் எண்ணிப் பார்க்கத் தக்கவை. ஒன்று, போர்வீரனை இழந்த பெண்ணின் நம்பிக்கை. இன்னொன்று, ஒரு பெண்ணின் சீற்றத்துக்கு ஒருபோதும் இலக்காகிவிடக்கூடாது என நினைக்கும் மன்னனின் நம்பிக்கை. ஒரு நாட்டார் கதையின் தோற்றத்தை உடைய இச்சிறுகதை ஒரு சமூகத்தில் நிலவிய அழுத்தமான நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.

0

மனைமங்கலம் தொகுதியில் அமைந்துள்ள பதினோரு சிறுகதைகளும் வெவ்வேறு பின்னணிகளில் தனித்துவத்தோடு அமைந்திருக்கின்றன. போதி நிழலில் என்கிற சிறுகதையை பிம்பிசாரரின் காலத்தில் நிகழ்வதுபோல எழுதியிருக்கிறார் சோமு. அச்சிறுகதையில் புத்தரும் ஒரு பாத்திரமாக இடம்பெற்றிருக்கிறார். காலனை வென்ற கை என்னும் சிறுகதை மார்க்கண்டேய புராணத்தின் கதையை ஒரு சரடாகக் கொண்டிருக்கிறது. லாரன்ஸ் வில்சனின் காதல் என்னும் கதை முழுக்கமுழுக்க லண்டனில் நிகழும்வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

மீ.ப.சோமுவுடைய சிறுகதைகள் கச்சிதமான வடிவத்தோடு அமைந்துள்ளன. எதார்த்தக்கதையாக இருந்தாலும் சரி, தொன்மத்தையும் வரலாற்றுத்தருணத்தையும் முன்வைக்கும் கதையாக இருந்தாலும் சரி, கதையை ஒவ்வொரு கட்டமாக நிகழ்த்திக் காட்டுவதில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் எட்டுச் சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் எழுதியிருந்தபோதிலும், சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியலில் அவர் இடம்பெற முடியாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘அக்கரைச்சீமையிலே’ என்னும் பயணநூலுக்காக அவர் சாகித்திய அகாதமி விருது பெற்றதன் காரணமாக, தமிழ்ச்சூழல் அவரைப் படைப்பாளியாகக் கருதாமல் பயணநூல் ஆசிரியராக மட்டுமே வகைப்படுத்திவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *