Skip to content
Home » முறிந்த பேனா #21 – அந்தக் கடிதம் இன்னும் காத்திருக்கிறது

முறிந்த பேனா #21 – அந்தக் கடிதம் இன்னும் காத்திருக்கிறது

அந்தக் கடிதம் ஒரு சாதாரண புகார் மனுவைப் போலத்தான் இருந்தது. ஆனால் அது புகாரல்ல. உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஒரு செய்தியாளர் காவல்துறைக்கு அளித்த கோரிக்கை. என்ன பிரச்னை? யார் காரணம்? ஏன் பாதுகாப்பு வேண்டும் என தெளிவாக எழுதி, கீழே கையெழுத்திடுகிறார். தேதி போடுகிறார். காவல் நிலையத்தின் முத்திரையும் விழுகிறது. அந்தக் கடிதம் காவல் நிலையத்துக்குள் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் கடிதம் கொடுத்த நபர்?

சில மாதங்களுக்குப் பிறகு அந்தச் செய்தியாளர் கடத்தப்பட்டார். காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டார். லத்தி, தடிகளால் தாக்கப்பட்டார். உயிரற்ற உடலாகச் சாலையோரத்தில் வீசப்பட்டார். அவர் பெயர் சந்தன் திவாரி.

கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அளவுக்கு என்ன நடந்தது? ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தின் பதல்கட்டா பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் திவாரி. ராஞ்சி நகரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தி நாளிதழான ‘ஆஜ்’ பத்திரிகையின் உள்ளூர் செய்தியாளர். சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் அரசுத் திட்டங்கள், உள்ளாட்சி நிர்வாகம், பொதுமக்களின் பிரச்சினைகள் ஆகியவற்றைச் செய்திகளாக எழுதிக்கொண்டிருந்தார். அப்படி அவர் எழுதிய செய்திகளுள் ஒன்றுதான் அவரது உயிரையே காவு வாங்கியது என்கிறது காவல்துறை விசாரணை.

அது ஒரு குளம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், பதல்கட்டாவில் சுமார் ரூ.4.50 லட்சம் மதிப்பில் குளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தப் பணியில் முறைகேடு நடந்ததாக சந்தன் செய்தி வெளியிட்டார். ஒப்பந்ததாரரான பிண்ட்டு சிங்கின் பணிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். தொடர்புடைய ஊர் தலைவர், அவரது கணவர் குறித்தும் செய்தியில் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, அதிகாரிகள் குளத்தில் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதைக் கண்டறிந்தது. செய்தியில் தொடங்கிய பிரச்னை, இந்த விசாரணையால் வீரியம் கொண்டது. ‘எங்கள் விவகாரத்தில் இனி தலையிடாதே’ என்று மிரட்டல்கள் தொடர்ந்தன. சாதாரண மிரட்டல்கள் குடும்பத்துக்கு அச்சுறுத்தலாகவும் கொலை மிரட்டல்களாகவும் மாற, காவல்துறையில் புகாரளித்தார்.

6 ஏப்ரல் 2018 அன்று சந்தன் திவாரி காவல்துறையிடம் அளித்த புகாரில், ‘ஊர் தலைவரின் கணவரான மகேஷ் டாங்கி, முகமது செராஜுல் மற்றும் தேவ்கி டாங்கி ஆகியோர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் நிதியில் ஊழல் செய்தது குறித்து சமூக ஊடகங்களில் எழுதியிருந்தேன். எனக்குத் தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. சாலை விபத்து, தாக்குதல், பொய் வழக்கு அல்லது கொலை போன்ற ஏதேனும் எனக்கு நேர்ந்தால், அதன் முழுப் பொறுப்பும் மகேஷ் டாங்கி, முகமது செராஜுல் மற்றும் தேவ்கி டாங்கி ஆகியோரையே சாரும்’ என்று எழுதியிருந்தார்.

ஏப்ரல் மாதத்திலேயே சந்தன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் புகார் அளித்து பாதுகாப்பு கோரியிருந்தார். ஆனால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதோடு அவர் புகார் குறித்து விசாரிக்கக்கூட இல்லை. புகார் கொடுக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் அப்படியே கடந்தது. புகாரும், அப்படியே கிடந்தது என்கிறார் சந்தன் பணியாற்றிய ஆஜ் இதழின் ஆசிரியர் அமித் குமார் அகர்வால்.

29 அக்டோபர் 2018 இரவு, திடீரென சந்தன் திவாரி காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. மறுநாள் காலை, பால்தர்வா காட்டுப்பகுதியில் சந்தன் கிடந்தார். அவரது உடலில் உயிர் இருந்தது. உயிர் மட்டும்தான் இருந்தது. இரவு முழுக்க வைத்து சித்திரவதை செய்ததற்கான சாட்சியமாகச் சரிந்து கிடந்தது அந்த உடல். அத்துடன் இனி பேனாவைப் பிடிக்கவே முடியாதபடி கைகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாகக் காவல்துறை பிண்ட்டு சிங், ஜமுனா பிரசாத், முசாஃபிர் ராணா ஆகிய மூன்று பேரையும் சந்தேகித்தது. பிண்ட்டு சிங் தான் குளம் சீரமைப்பில் தொடர்புடைய ஒப்பந்ததாரர். ஜமுனா பிரசாத், முசாஃபிர் ராணா இருவரும் கைது செய்யப்பட்டனர். பிண்ட்டு சிங் மட்டும் தலைமறைவானதாகக் காவல்துறை தெரிவித்தது. விசாரணையில் தாங்களே சந்தனை அழைத்துச் சென்றதாகவும், காட்டுக்குள் வைத்து தாக்கியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

பதல்கட்டா காவல் நிலையத்தில் வழக்கு எண் 53/18, 30 அக்டோபர் 2018 அன்று பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 364 (கொலை நோக்கத்துடன் கடத்தல்), 302 (கொலை), 201 (ஆதாரங்களை மறைத்தல்), 34 (பொதுவான நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றச்செயல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையின் கூற்றுப்படி, சந்தன் வெளியிட்ட குளம் கட்டுமான முறைகேடு குறித்த செய்தியே கொலைக்கான பழிவாங்கும் காரணமாக இருந்தது. ஆனால் இந்த வழக்கில் அதைவிடப் பெரிய கேள்வி ஒன்று மிச்சம் இருக்கிறது.

பாதுகாப்பு வேண்டி மனுகொடுத்தவரின் மரணம் இப்போது அதே காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கின் எண்ணாக மாறியிருந்தது. அந்தப் புகாருக்குப் பிறகு அவரது பாதுகாப்புக்காக ஏதாவது நடவடிக்கை இருந்ததா?

இந்தக் கேள்வியைத்தான் இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் (பிசிஐ) உண்மை கண்டறியும் குழுவும் கவனத்தில் எடுத்தது. சந்தன் கொலை தொடர்பாக அந்த அமைப்பு தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதிகாரிகளிடமிருந்து ஆவணங்களைப் பெற்றது. பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. சந்தனின் குடும்பத்தினரிடமும் விசாரித்தது.

அச்சுறுத்தல் குறித்து முன்பே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை விசாரணைக் குழு உறுதி செய்தது. காவல்துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இளம் பத்திரிகையாளரின் கொடூரக் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று பிசிஐ சுட்டிக்காட்டியது.

அத்துடன், வழக்கத்துக்கு மாறான சில விஷயங்களும் நடந்தன. கொலையைத் தடுக்கத் தவறிய மற்றும் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி ‘போலீஸ் லைனுக்கு’ இடமாற்றம் செய்யப்பட்டார். (தமிழ்நாட்டில் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவது போன்ற தண்டனை இது). மேலும், அந்த அதிகாரிக்கு எதிராகத் துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டதாகவும் சத்ரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இந்தியப் பத்திரிகை கவுன்சிலிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. கைது நடவடிக்கைகள் நடந்தன. விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டதாக பிசிஐ பதிவுகள் குறிப்பிடுகின்றன.

ஆனால் நீதியின் வேகம்? அது சந்தனின் கதை போன வேகத்தைப் போல இருக்கவில்லை. 2019ஆம் ஆண்டு பிசிஐயிடம் காவல்துறை அளித்த தகவலின்படி, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை இன்னும் தொடங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

2026 செப்டெம்பர் வரை கிடைத்த நம்பகமான பொது ஆவணங்களில், சந்தன் திவாரி கொலை வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு குளம் கட்டுவதில் முறைகேடு நடந்ததா? என்ற கேள்வியுடன் தொடங்கிய விவகாரம், ஒரு செய்தியாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோது அரசு என்ன செய்தது? என்ற கேள்வியாக மாறியிருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *