Skip to content
Home » ஹெலன் கெல்லர் #15 – தோற்காத அன்பு

ஹெலன் கெல்லர் #15 – தோற்காத அன்பு

காதல் குறித்து முதல்முதலில் ஹெலன் கெல்லர் தெரிந்துகொண்ட விதம் மிகவும் சுவாரசியமானது.

ஹெலனுக்கு 7 வயதாகும்போது, அவருடைய தனிப்பட்ட ஆசிரியராக ஆனி சல்லிவன் பொறுப்பேற்ற பின்னரே, அவரிடமிருந்து ஹெலன் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஹெலனின் கையில் வார்த்தைகளை எழுதிக்காட்டி, அதுவரை அவர் தொட்டுணர்ந்த பொருட்களுக்கெல்லாம் பெயர் இருப்பதைப் புரியவைத்தார் ஆனி சல்லிவன். இந்த முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் உற்சாகமாகப் பல வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார் ஹெலன்.

ஒருநாள் கற்றல் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக, தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த வயலெட் மலர்களைப் பறித்து வந்து ஆனி சல்லிவனிடம் கொடுத்தார் ஹெலன். அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர், ஹெலனின் கையில் ‘ஐ லவ் ஹெலன்’ என்று எழுதினார் ஆனி.

‘லவ் (காதல்) என்றால் என்ன?’ என்று ஆனியின் கையில் எழுதிக் கேட்டார் ஹெலன்.

அதற்கு, ஹெலனின் இதயப் பகுதியைத் தொட்டுக்காட்டிவிட்டு, ‘காதல் அங்கு உள்ளது’ என்று அவருடைய கையில் எழுதினார் ஆனி.

ஆனால், தொட்டுணர்ந்தால் மட்டுமே எதையும் புரிந்துகொள்ள முடியும் என்கிற நிலை இருந்ததால், ஆனி கூறியது ஹெலனுக்கு புரியவில்லை.

உடனே, ஆனியிடம் இருந்த வயலெட் பூக்களை நுகர்ந்து பார்த்த ஹெலன், அவருடைய மற்றொரு கையில், ‘காதல் என்பது பூக்களின் இனிமையா?’ என்று எழுதிக் கேட்டார். அதற்கு, ‘இல்லை’ என்று ஹெலனின் கையில் எழுதினார் ஆனி.

குழம்பிப்போனார் ஹெலன். இருந்தாலும், அந்த வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். அப்போது, வீட்டுக்கு வெளியே இருந்த புல்வெளியில் ஆனியும் ஹெலனும் அமர்ந்திருந்தார்கள். நண்பகல் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தால், சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருந்தது.

உடனே வானத்தை நோக்கிக் கைகாட்டிய ஹெலன், ‘இது காதலில்லையா?’ என்று சைகையில் கேட்டார்.

’இல்லை’ என்று அவரது கையில் எழுதிக்காட்டினார் ஆனி சல்லிவன். இதனால், நேரத்தை இதிலேயே கடத்தவேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, மற்ற வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் ஹெலன்.

பின்னாளில் வளர்ந்து ஆளாகி கல்லூரிக்கெல்லாம் சென்று, இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கற்றறிந்த பின்னரே ‘காதல்’ என்கிற வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டார் ஹெலன். அப்படியும் தன்னுடைய 36 வயதில்தான் காதல் வயப்படும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. ஆனால் அந்தக் காதலுக்கு ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, அவர் முற்றிலும் எதிர்பாராதது.

ஒருபுறம் பீட்டர் ஃபாகன் மீது கொண்ட காதலின் தீவிரத்தன்மை. மறுபுறம் பாசம் காட்டித் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய் காட்டிய கண்டிப்பு. இதைத்தவிர இத்தனை ஆண்டுகளாகத் தனக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து, கடுமையான உழைப்பைச் செலுத்திய ஆசிரியை ஆனி சல்லிவன் வெளிப்படுத்திய எதிர்ப்பு. இவை எல்லாம் சேர்ந்து ஹெலனின் இதயத்தை இரண்டாகக் கிழித்தன. காதலைக் கைவிட முடியாமலும், தாய்க்கும் ஆசிரியைக்கும் உண்மையாக இருக்க முடியாமலும் ஆரம்பத்தில் மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளானார் ஹெலன்.

பீட்டரின் நம்பிக்கை தரும் வார்த்தைகள்தான் அவருடைய மனதுக்கு இருந்த ஒரே ஆறுதல். இப்படியே இருந்தால் தன் காதலைக் குடும்பத்தினர் கைகூட விடமாட்டார்கள் என்கிற புரிதல் ஏற்பட்டபோது, துணிச்சலோடு காதலைத் தேர்ந்தெடுத்தார் ஹெலன்.

திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நாள் இரவு ஹெலன் தனது சிறு பெட்டியில் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் முகப்பில் வந்து பீட்டருக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். நிமிடங்கள் ஒவ்வொன்றும் மெதுவாகக் கழிந்துகொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. இருள் சூழ்ந்த அந்த இரவு வேளையின் ஒவ்வொரு நொடியும், இனி பீட்டரின் அன்புக்கரங்கள் காலந்தோறும் தன் கரங்களைப் பற்றப்போகின்றன என்கிற நம்பிக்கையில் துடிக்கும் இதயத்தோடு காத்துக்கொண்டு நின்றிருந்தார் ஹெலன்.

மணித்துளிகள் மணிநேரங்கள் ஆயின. ஆனால் பீட்டர் வரவேயில்லை. ஒரு கட்டத்தில் இனியும் பீட்டர் வருவதற்கு வாய்ப்பே இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததும், கனத்த இதயத்தோடு தனது அறைக்குச் சென்றார் ஹெலன். கதவைச் சாத்திக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். அந்த அறையின் நான்கு சுவர்களுக்கு மட்டுமே அவருடைய வலியின் வேதனையும் கண்ணீரின் ஆழமும் தெரிந்திருந்தது. அவருடைய குடும்பத்தினர் அவற்றுக்கு எந்த மதிப்பும் அளிக்கவில்லை.

பீட்டரும், ஹெலனும் பாஸ்டன் நகரத்திற்குச் சென்று திருமணம் செய்து கொள்வதற்கு முடிவெடுத்திருந்தார்கள். இதன்படி அங்கிருந்த பதிவு அலுவலகத்தில் முன்கூட்டியே விண்ணப்பத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் விண்ணப்பம் அளித்திருந்த தகவல் எப்படியோ வெளியில் கசிந்து, விஷயம் பலருக்கும் பரவியது. மிகவும் குறிப்பாக, ஹெலனின் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. ஹெலனும் பீட்டரும் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பார்கள் என ஹெலன் குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை.

இதைப் பீட்டரின் மிகப்பெரிய துரோகமாகப் பார்த்த ஹெலனின் குடும்பத்தினர், அவரை வேலையிலிருந்து நீக்கி, உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார்கள். இதனால் வேறு வழியில்லாமல், ஹெலனிடம் சொல்லிக்கொள்ளாமல் அன்று மாலையிலேயே பீட்டர் அங்கிருந்து கிளம்பி எங்கோ சென்றுவிட்டார். இந்த விஷயமெல்லாம் பின்னாட்களில்தான் ஹெலனுக்கே தெரியவந்தன.

பிரிவின் வேதனையும், காதலின் இழப்பும் ஹெலனுடைய வாழ்வில் நிரந்தர சோகமாகவே நிலைத்துப்போனது. இருப்பினும், தன் குடும்பத்தினர் தனக்குக் கொடுத்த வலியை ஏற்றுக்கொண்டு, பதிலுக்கு அவர்கள் மீது வெறுப்பைக் கக்காமல், அந்தத் தனிப்பட்ட துயரத்தையே தனது பலமாக மாற்றிக்கொண்டார் ஹெலன்.

எவ்வளவு ஆழமாக அவர் பீட்டரை நேசித்தார், பீட்டரின் பிரிவால் எப்படியெல்லாம் கலங்கித் தவித்தார் என்பதை, தன் வாழ்க்கை வரலாற்றில் ஹெலன் எழுதியுள்ள வரிகள் மூலமாக நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

‘அவரது அன்பு என் இயலாமை மற்றும் தனிமை மீது ஒளிவீசிய ஒரு பிரகாசமான சூரியனைப் போன்றது’ என, பீட்டரின் வருகையைத் தொடர்ந்து தன் மனதில் காதல் எட்டிப் பார்த்த நிகழ்வை ஹெலன் வர்ணித்துள்ளார். இருள்சூழ்ந்த தனது உலகத்தில் காதல் நுழைந்த தருணத்தை, தனது வாழ்க்கையின் மிக அழகான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய கைகளில், ஒவ்வொரு முறையும் விரல்களால் பீட்டர் அன்பு வார்த்தைகளை எழுதியபோதும், தன் இதயத்தில் அது நடுக்கத்தை உருவாக்கியதாகவும், ஒரு பெண்ணாக உள்ளுக்குள் தான் மலர்ச்சியடைந்ததாகவும், ஹெலன் விவரித்துள்ளார்.

சமூகத்தின் எதிர்ப்பாலும் குடும்பத்தினரின் நிராகரிப்பாலும் அந்தக் காதல் கைகூடாமல்போனதால் ஏற்பட்ட துயரத்தை, தனது எழுத்துகள் மூலமாக ஆழ்ந்த வலியோடு ஹெலன் பதிவு செய்துள்ளார். ‘கடிதம் மூலமாக நான் அவரோடு தொடர்புகொள்ள முயன்றேன். அது பலனளிக்கவில்லை. என் காதல் கனவுகள் தகர்க்கப்பட்டன’ என்று அவர் எழுதியிருந்தார்.

பீட்டர் ஃபாகனும் ஹெலன் மீது உண்மையான காதலுடன்தான் இருந்தார். ஹெலனின் கையில் தன்னுடைய விரல்களால் வார்த்தைகளை எழுதி, காதலை முதல் நபராக வெளிப்படுத்தியது அவர்தான். ‘நீ மிகவும் அழகானவள்’ எனச் சொல்லி ஹெலனை வெட்கப்பட வைத்தவரும் அவர்தான். ஆனால் ஹெலனின் குடும்பத்தினர் அளித்த அழுத்தத்தால், அந்தக் காதலைக் கைவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

பின்னாளில் பீட்டர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தபோதும்கூட, ஹெலனின் ஒரு புகைப்படத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் பத்திரமாகப் பாதுகாத்து வந்ததாக அவருடைய குடும்பத்தினர் மூலமாகப் பிற்காலத்தில் தெரியவந்தது. பிரிவுக்குப் பின்னர் பீட்டரும் ஹெலனும் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை.

அரசியல் பத்திரிகையாளரான பிறகும்கூட, தனது காதலைக் கைவிட நேர்ந்தது குறித்தோ ஹெலன் கெல்லர் குறித்தோ பொதுவெளியில் யாரிடமும் எதுவும் பீட்டர் பேசியதில்லை. ஆனால் இருவரும் ஓடிப்போகத் திட்டமிட்டிருந்த அந்நாளில் ஹெலனும் நானும் மிகவும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டோம் என்று மட்டும், ஒரு நண்பரிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு மேல் பீட்டர் எதுவுமே சொல்லவும் இல்லை, எழுதவும் இல்லை.

குடும்பத்தினர் மற்றும் ஆனி சல்லிவனின் எதிர்ப்பால் ஹெலனின் காதல் தோற்றாலும், அவரது மன உறுதி சற்றும் குறையவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அவருடைய அன்பு எந்த வகையிலும் மாறவில்லை. தன்னுடைய நலன் குறித்து மற்றவர்கள் யோசிக்கவில்லை என்றாலும், மற்றவர்களின் நலன்கள் மீதான அக்கறையைக் கைவிட ஹெலன் தயாராக இல்லை.

தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியையும் அதனால் உண்டான வலியையும் மறைத்துக்கொண்டு சமூகத்துக்காக இன்னமும் அதிக உற்சாகத்தோடும் வீரியத்தோடும் போராடத் தொடங்கினார் ஹெலன் கெல்லர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *