Skip to content
Home » சங்க இலக்கியம் #18 – ஞாயில்களும் மாடங்களும்

சங்க இலக்கியம் #18 – ஞாயில்களும் மாடங்களும்

ஆதிகாலத்தில் பசிப்பிணி போக்க உணவை வேட்டையாடிய மனிதன், இயற்கையின் சீற்றங்களிலிருந்து உடலைக் காக்கத் தழைகளையும் தோல்களையும் ஆடையாக உடுத்தத் தொடங்கினான். உணவு மற்றும் உடையின் தேவையை நிறைவு செய்த மனிதனுக்கு, அடுத்த கட்டத் தேவையாக இருந்தது உறைவிடம்.

மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஓர் இடத்தில் நிலைத்து வாழத் தொடங்கியபோது உறைவிடத்தின் தேவை உருவானது. காடுகளிலும் மலைகளிலும் விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பெருமழை, சுட்டெரிக்கும் வெயில், பனி போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கிக் கொள்ளவும், பயிர்த்தொழில் செய்யத் தொடங்கிய பின் விளைவித்த தானியங்களைச் சேமித்து வைக்கவும், குடும்பமாக இணைந்து வாழவும் உறைவிடம் தேவைப்பட்டது. வெறும் உயிர் பிழைத்தலுக்கான தேடலாக இருந்த மனித வாழ்வானது, ஒரு நாகரிக சமூகமாக மாறுவதற்குக் காரணமாய் அமைந்தது உறைவிடத்தின் தேவையே.

திணை நிலப் பகுப்புகளின் அடிப்படையில் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) சங்க காலத் தமிழர்கள் தங்களின் உறைவிடங்களை அமைத்துக்கொண்டு, பண்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருந்தனர்.

குறிஞ்சி நிலப் பகுதியான மலையில் வாழ்ந்த குறவர்களும் வேடர்களும் ஆரம்பக் காலத்தில் இயற்கையாக அமைந்த குகைகளில் வாழ்ந்தனர். பின்னர் தினை, வரகு முதலிய பயிர்களைப் பயிரிட்டபொழுது தினைப் புனக் காவலுக்கு மரங்களின் மேல் உயரமான பரண்களை அமைத்தவர்கள், அதையே உறைவிடமாகவும் கொண்டனர்.

காடுகளில் வாழ்ந்த முல்லை நில மக்கள் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மரங்களில் பரண் கட்டி வாழத் தொடங்கினர். ஆடு, மாடுகளை மேய்க்கும் ஆயர்கள், காடுகளில் கிடைக்கும் மரக்கிளைகளை நட்டு, வலுவான மரக்கம்புகளையும் இலைகளையும் பரப்பி வைக்கோல் கொண்டு வேயப்பட்ட வட்ட வடிவக் குடில்களை அமைத்து, குடில்களுக்கு முன்புள்ள முற்றத்தில், தாங்கள் வளர்க்கும் ஆடு மாடுகளுக்குக் கொட்டகை கட்டி வாழ்ந்தனர்.

வேளாண்மை செழித்திருந்த மருத நிலத்தில்தான் மனிதன் நாடோடி வாழ்க்கையை முழுமையாகக் கைவிட்டு, நிரந்தர உறைவிடங்களை அமைத்து, ஊர் என்கிற அமைப்பில் வாழத் தொடங்கினான். பொருளாதார வசதி மிக்க வீடுகள் உருவாயின. களிமண் சுவர்கள் எழுப்பப்பட்டு, பனை ஓலைகள் அல்லது வைக்கோல் கொண்டு வேயப்பட்ட வீடுகள் இருந்தன. மருத நிலத்து அரசர்களும், பெரும் வணிகர்களும் செங்கற்கள், மரத்தூண்கள் மற்றும் சுண்ணாம்பு சாந்து ஆகியவை கொண்டு கட்டப்பட்ட மாடி வீடுகளிலும், மாட மாளிகைகளிலும் வாழ்ந்தனர். தானியங்களை உலர்த்தவும், மக்கள் கூடிப் பேசவும் ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெரிய முற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நெய்தல் நிலமான கடற்கரையில் வாழ்ந்த பரதவர்கள் பெருங்காற்றையும், உப்புக் காற்றையும் தாங்கக்கூடிய எளிய உறைவிடங்களை அமைத்தனர். கடலோர மணல் பரப்பில் மரத் தூண்களை நட்டு, தாழை இலைகள் மற்றும் நாணல் புற்களைக் கொண்டு வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். இவர்களின் உறைவிடங்கள் கூட்டமாக அமைந்து, கடற்கரை கிராமங்களென அழைக்கப்பட்டன. மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும் வீட்டின் அருகே இடத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

வறண்ட நிலப்பகுதியான பாலையில் வாழ்ந்தவர்கள் நிலையான குடியிருப்புகளில் வாழ விரும்பவில்லை. வழிப்பறிச் செய்து வாழ்க்கையை நடத்தியவர்கள், பெரும்பாலும் தற்காலிகமாகக் கூடாரம் அமைத்துக்கொண்டு, பல இடங்களுக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தனர்.

சங்க காலத்தில் எளிய மக்கள் மூங்கில், புல், ஓலை போன்றவற்றைக் கொண்டு வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்தனர். ‘புல் வேய்க் குரம்பைக் குடிதோறும் பகர்ந்து’ என்ற சங்க இலக்கியப் பாடல் வரியின் பொருள், ‘புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசை வீடுகள் தோறும் சென்று, தம்மிடம் உள்ள பொருள்களை விலை கூறி விற்றல்’ என்பதாகும். குரம்பை என்றால் குடில் அல்லது குடிசை என்று பொருள். அக்காலத்தில் வாழ்ந்த உழவர் அல்லது எயினர் குலப் பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தயிர், மோர், மீன் அல்லது காட்டில் கிடைத்த பொருள்களைத் தலைச்சுமையாக எடுத்துச் சென்று, ஊரிலுள்ள ஒவ்வொரு குடிசை வீட்டின் வாசலிலும் விற்று வந்துள்ளனர்.

பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்

என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகளின் பொருள், ‘மழைக்காலத்தில் வானத்தில் திரண்டு நிற்கும் கரிய மேகக் கூட்டங்களைப்போல், கருநிற வைக்கோலால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட அழகிய குடில்கள் நிறைந்த சிற்றூர்’ என்பதாகும். இதன் மூலம் புல்லாலும் வைக்கோலாலும் வேயப்பட்ட குடிசை வீடுகளில் சங்க கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

சங்க கால மக்கள் தங்களின் வசதிக்கேற்ப வீட்டின் பல பக்கங்களிலும் படிகளுடன் கூடிய திண்ணைகளைக் கட்டி வாழ்ந்துள்ளனர். பழந்தமிழர்கள் ஆரம்பக் காலத்தில் மண் சுவர்களால் ஆன குடில்களில் வாழ்ந்தனர். நாகரிகம் மற்றும் கட்டடக் கலை வளர்ந்த காலத்தில், மண்ணைச் சுட்டுச் செங்கற்களாக மாற்றி உயர்ந்த சுவர்களையும் மதில்களையும் கொண்ட பெரு நகரங்களை உருவாக்கினர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை பாடலில் இடம்பெற்றுள்ள, ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்’ என்கிற வரி விளக்குகிறது.

பழமையான ஊர் அழிந்து பாழடைந்த தோற்றத்தில் உள்ளதைப் பற்றி விவரிக்கும் அகநானூற்றுப் பாடலில் சங்க கால வீட்டைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று

பெரிய துதிக்கை உடைய யானையானது, முருங்கை மரத்தின் தழைகளை மேய்ந்துவிட்டு, தன் முதுகைக் கொண்டு பாழடைந்த வீட்டின் சுவரில் போய் உரசிக்கொள்ள, அதனால் அசைந்துபோன செங்கற்களாலான நீண்ட சுவரில் உள்ள விட்டம் கீழே விழுந்தது. அழகிய புறாக்கள் தங்கி வாழ்ந்த, மரங்கள் சிதைந்துபோன அந்த மாட மாளிகையின் சுவர்களில் வரையப்பட்டிருந்த அழகிய தெய்வச் சித்திரங்களின் வடிவம் நீங்கிப் போய்விட்டதால், அந்த இடம் அழகின்றிப் புல்லென்று (வெறிச்சோடி) போய்விட்டது என்கிறது இப்பாடல். இதன் மூலம் சங்க காலத்தில் செங்கற்களால் வீடுகள் கட்டப்பட்டிருந்ததையும் சுவர்களில் சித்திரங்கள் வரையும் வழக்கம் இருந்ததையும் அறிய முடிகிறது.

சங்க கால அரசர்களும் குறுநில மன்னர்களும் மாட மாளிகைகள், கோட்டை கொத்தளங்களை அமைத்து மிகச் சிறப்பான முறையில் வாழ்ந்தனர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள், இவர்களின் கட்டடக்கலைத் திறனுக்குப் பல சான்றுகளைத் தருகின்றன.

மாட மாளிகையில் ‘மாடம்’ என்பதும், கோட்டைக் கொத்தளத்தில் ‘கொத்தளம்’ என்பதும் எவற்றைக் குறிக்கின்றன?

வீடுகளின் சுவரில் அமைக்கப்படும் சிறிய உள்வாங்கப்பட்ட குழிகளையும், மாளிகைகளின் மேல் அடுக்குகள் மற்றும் மாடிப் பகுதியையும் மாடம் என்பர். சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களும், செல்வந்தர்களும் பல அடுக்குகளைக்கொண்ட மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். இம்மாளிகைகள் நிலவொளி வீசும் அளவிற்கு மிக உயரமாகக் கட்டப்பட்டிருந்தன. மாளிகையின் உச்சியில் தென்றல் காற்றை நுகர்வதற்கும், நிலவைக் காண்பதற்கும் ‘நிலா முற்றம்’ (மாடங்கள்) அமைக்கப்பட்டிருந்தன.

மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார், மதுரையின் உயரமான மாளிகைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘விண் உற ஓங்கிய பல்படை மாடம்’ என்கிறார். அதாவது ‘விண்ணைத் தொடும் அளவுக்குப் பல அடுக்குகளைக்கொண்டு உயர்ந்திருந்த மாட மாளிகைகள், மேகங்கள் வந்து தங்கும் இடமாக விளங்கின’ என்கிறார்.

ஞாயில் மற்றும் கொத்தளம் ஆகிய இரண்டுமே பண்டைய தமிழர்களின் கோட்டைக் கட்டடக்கலை மற்றும் பாதுகாப்பு அரண்களுடன் தொடர்புடைய சொற்கள் ஆகும்.

ஞாயில் என்ற சொல்லுக்கு, கோட்டையின் ஏவறை என்கிற பொருளை வழங்குகிறது தமிழ் அகராதி. ஏவறை என்றால் பாதுகாப்பு அறை என்று பொருள். ஞாயில் என்பது படைக்கலங்களைச் சேமித்து வைப்பதற்கும், பகைவர் மீது அவற்றைச் செலுத்துவதற்குமான இடமாகும். இங்கிருந்தபடி, பகைவர்கள் மீது அம்புகளையும், ஈட்டிகளையும், எரியும் எண்ணெய்யையும் வீசி வீரர்கள் போரிட்டனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே இருக்கும் வீரர்கள் தெரிய மாட்டார்கள். ஆனால், உள்ளே இருக்கும் வீரர்களால், மதிலின் துவாரங்கள் வழியாக வெளியே இருக்கும் எதிரிகளைக் கண்காணித்துத் தாக்க முடியும்.

கொத்தளம் என்கிற சொல்லுக்குக் கோட்டை மதிலுறுப்பு என்கிற பொருளை வழங்குகிறது தமிழ் அகராதி. கோட்டை மதில் சுவர்களின் மூலைகளிலோ அல்லது இடைவெளிகளிலோ வெளியே துருத்திக் கொண்டிருக்கும்படி கட்டப்பட்ட அகன்ற மேடை போன்ற வலுவான அமைப்புக் கொத்தளம் ஆகும். கோட்டையை முற்றுகையிடும் எதிரிகளை நாலாபுறமும் கண்காணித்து, பீரங்கிகள் அல்லது அம்புகள் மூலம் மிக எளிதாகப் பதில் தாக்குதல் நடத்த கொத்தளம் பயன்படுத்தப்பட்டது. ஞாயில் என்பது வீரர்கள் மறைந்திருந்து தாக்க மதில் சுவரில் செதுக்கப்பட்ட அறை. கொத்தளம் என்பது கோட்டைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு மிகுந்த பெரிய மேடை அல்லது கோபுரம்.

பகைவர்கள் எளிதில் உள்ளே நுழைய முடியாதவாறு, சங்க கால நகரங்கள் மற்றும் அரண்மனைகளைச் சுற்றிப் பிரமாண்ட மதில்களும், ஆழமான அகழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. பொதுவாகவே மதிற்சுவரை அடுத்துச் சுமார் 60 அடிக்கு மேற்பட்ட ஆழமும், சில வேளைகளில் 100 அடிக்கு மேற்பட்ட அகலமுடைய அகழியை அமைத்த அரசர்களும் இருந்தனர். இவ்வாறான அகழிகளில் ஆறுகள், ஏரிகள், கடல் முதலியவற்றை இணைத்து, நீர் வற்றாமலிருக்க ஏற்பாடும் செய்திருந்தனர்.

பொதுவாக மக்களைக் காப்பதற்காக முற்கால அரசர்கள் ஊர்களையும் நகரங்களையும் சுற்றிக் கோட்டைகளைக் கட்டியிருந்தனர். சில குறுநில மன்னர்களுக்கு, மலைகளும் அடர்த்தியான காடுகளும் நிறைந்த பகுதிகளே பாதுகாப்பான கோட்டைபோல் விளங்கின. நகரின் அமைப்பில் அகநகர், புறநகர் என இருவகைப் பாகுபாடுகள் இருந்தன. அகநகரில் மிகவும் அவசியமான கருவூலங்களும் படைக்கலக் கொட்டில்களும் அமைந்திருக்கும். புறநகரில் பல்வகைப் போர் வீரர்களும், பல்வகைத் தொழில் புரிவோர்களும், நம்பிக்கைக்குரிய நன்மக்களும் தங்கியிருப்பர். இவ்வாறு தலைநகரைச் சுற்றிலும் போர்த்திறன் மிக்க வீரர்கள் அருகிலிருக்கும் வகையில் உயரமான பெரிய மதிற்சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும். இந்த மதிலையடுத்து வெளியே நீர் நிறைந்த ஆழமான அகழி அமைக்கப்பட்டிருக்கும். அந்த அகழியைப் பகைவர்கள் கடந்து உள்ளே வாராத வகையில், அதில் முதலைகள் விடப்பட்டிருக்கும். இவ்வாறாக அரசர்கள் தங்களது மக்களைப் பாதுகாக்கும் வகையில் கோட்டைகளைக் கட்டினர்.

சங்க கால அரசர்களின் அரண்மனைகள் சிற்பக் கலைக் கூடங்களாகத் திகழ்ந்தன. காவிரிப்பூம்பட்டினத்து மாளிகைகளின் சுவர்களில் சுதை (சுதை என்பது சுண்ணாம்புச் சாந்து அல்லது காரையைக் குறிக்கும். பழங்காலத்தில் கோயில்களில் சிற்பங்களையும், அதன் சுவர்களில் உருவங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட முக்கியக் கலவைப் பொருள் சுதை ஆகும்) ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும், அவை வானத்தில் இயங்கும் தேவர்களின் தேர்களைப்போல் அழகாகக் காட்சியளித்தன என்றும் பட்டினப்பாலையில் விவரிக்கப்பட்டுள்ளது.

நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் சங்க நூல், பாண்டிய மன்னனின் அரண்மனை எவ்வாறு கட்டப்பட்டது என்பதை நுட்பமாக விவரிக்கிறது. சிற்ப சாஸ்திர அறிவுடைய நூலறிப் புலவர்கள் திசைகளை முறையாகக் கணித்து, சுவர்களை எழுப்பி, அரண்மனையை உருவாக்கினர். அரண்மனையின் தூண்கள் யானைத் தந்தங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த மாளிகையின் அந்தப்புரம் குறித்து நெடுநல்வாடை பின்வருமாறு கூறுகிறது.

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ

பெருமை பொருந்திய சிறப்பினையும், உயர்ந்த குணங்களையும் உடைய அரசன் தவிர, மற்ற ஆண்கள் எவரும் நெருங்க முடியாத அரிய, கடுமையான காவல் உடைய அந்தப்புர மாளிகையானது, மலைகளைப் பார்ப்பது போன்ற உயர்ந்த தோற்றத்தைக் கொண்டு விளங்கியது. உயரமான மலைகளில் மேகங்களோடு வானவில் சேர்ந்து கிடப்பதுபோல், அந்த மாளிகையின் பல இடங்களிலும் அழகிய பலவண்ணக் கொடிகள் அசைந்தாடித் தொங்கின. மேலும், அந்த மாளிகையின் சுவர்கள் யாவும் வெள்ளியைப்போலத் தூய்மையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்படி சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு விளங்கின என்கிறது இப்பாடல்.

சிலப்பதிகாரத்தில் வரும் புகார்க் காண்டம், மருவூர்ப்பாக்கத்தின் அகன்ற வீதிகளையும், பட்டினப்பாக்கத்தின் மாட மாளிகைகளையும் இருவேறு பிரிவுகளாகப் பிரித்து, அவற்றின் கட்டட நேர்த்தியைத் தெளிவுபடுத்துகிறது.

மணிமேகலை காப்பியத்தில், சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகார் மற்றும் அதன் அரண்மனைகள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. உலகெங்கிலும் இருந்து வந்த வணிகர்கள் தங்கும் பல அடுக்கு மாடங்களும், கலைகள் வளர்க்கும் நாடக அரங்குகளும் பூம்புகாரில் இருந்தன எனக் காப்பியங்கள் கூறுகின்றன. மணிமேகலையில் வரும் சக்கரவாளக் கோட்டம் மற்றும் உலக அறவி போன்ற கட்டட அமைப்புகள் அக்காலப் பொதுக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். சக்கரவாளக் கோட்டம் என்பது பூம்புகார் நகரத்தில் இருந்த பெரிய சுடுகாடு மற்றும் அதனுடன் இணைந்த சம்பாபதி அம்மன் கோயில் ஆகும். ஊர் மக்கள் இதனைப் பொதுவாக ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்று அழைத்தனர்.

ஆனால், உலகத்தைச் சுற்றி அமைந்துள்ளதாகக் கருதப்படும் சக்கரவாள மலையின் தன்மையை ஒத்த அமைப்புடனும், பழங்காலத் தெய்வமான சம்பாபதி உறைவிடமாகவும் இருந்ததால் இது ‘சக்கரவாளக் கோட்டம்’ என அழைக்கப்பட்டது. உலக அறவி என்பது ஊர்ப் பொதுமன்றம் அல்லது அம்பலம் ஆகும். மணிமேகலையில் இந்தப் பொதுமன்றம் பெரிய வாயில்களையும், அகன்ற கூடங்களையும், மக்கள் அமர்வதற்கும் உண்பதற்குமான நீண்ட பகுதிகளையும் கொண்ட பெரிய பொதுக் கட்டடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறாகச் சங்க இலக்கியம் மற்றும் காப்பியங்களில் விவரிக்கப்பட்டுள்ள மாட மாளிகைகளும், விண்ணை முட்டும் கோபுரங்களும், எஃகு போன்ற கோட்டை கொத்தளங்களும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டடக் கலையிலும் நகரமைப்பிலும் உலகளாவிய தரத்துடன் திகழ்ந்துள்ளனர் என்பதை நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *