Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 18 – வ.உ.சியின் கனவைத் தாங்கிய போராளிகள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 18 – வ.உ.சியின் கனவைத் தாங்கிய போராளிகள்

சுதேசிக் கப்பலானது வ.உ.சிதம்பரனாரின் கனவு என்றாலும், அந்தக் கனவைத் தொடர்ந்து உயிர்ப்பித்து வைத்திருக்கப் போராடியவர்கள் பலர். அதிலும், வ.உ.சியின் சிறைவாசத்திற்குப் பிறகு, அதனைத் தொடர்ந்து இயக்க உதவியவர்கள் எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார், வெங்கட்ராம ஐயர், சோமசுந்தர பாரதி, பாண்டித்துரைத்தேவர் மற்றும் மண்டயம் சகோதரர்கள் ஆகியோர் ஆவர்.

அவர்களில் எஸ்.டி. கிருஷ்ண அய்யங்காரின் பங்கு தனித்துவமானது. கடன், நிலுவைத் தொகை, கப்பல் இயக்கத் தடைகள், பழுது பார்த்தல் எனக் கப்பல் நிறுவனம் நெருக்கடியில் சிக்கியிருந்த ஒவ்வொரு கட்டத்திலும், அதனை மீண்டும் இயக்குவதற்கான முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். அவரது போராட்டத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பது அவசியம்.

பெரும்பாலான சுதந்திர நிகழ்வுகளையும் செய்திகளையும் குறிப்புகளையும் அக்காலக் கடிதங்கள், அரசாங்க அறிக்கைகள், குறிப்புகள் வழியேதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறே, திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பி.பி. தாமஸ், மாவட்ட ஆட்சியர் ஹெச்.ஃப்.டபிள்யூ. கில்மன் ஆகியோரின் அறிக்கைகள் வழியே சுதேசி நிறுவனத்தாரின் முயற்சிகளின் பின்னணியை அறிந்துகொள்ள முடிகிறது.

பி.பி. தாமஸ் உளவாளிகளிடமிருந்து திரட்டிய அறிக்கையின்படி, 1909ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் நடந்துள்ளது. கூட்டத்தின் முடிவில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில் மிகுந்த வருந்தத்தக்க பரிசீலனையாக இரு விஷயங்கள் இருந்ததாக ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி தன் நூலில் குறிப்பிடுகிறார். ஒன்று, காலியா கப்பலை விற்பது; மற்றொன்று, லாவோ கப்பலைக் கடற்கரைப் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி, தூத்துக்குடி – கொழும்பு கடல்வழிப் போக்குவரத்தை முற்றிலுமாகக் கைவிடுவது.

காலியா கப்பல் அதன் உறுதித்தன்மையை இழந்து, சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சுமையாக மாறியிருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். காலியா கப்பலில் கசிவு ஏற்பட்டிருந்த கொதிகலன்கள், உடனே மாற்றப்படவேண்டிய நிலையில் இருந்தன. எனவே பழுதாகியிருந்த கப்பலை விற்பது முடியாத காரியமாக இருந்தது. இதனால் அதன் உதிரிப்பாகங்களைப் பிரித்து விற்க முடிவெடுத்தனர். மேலும், லாவோ கப்பலைப் பொறுத்தவரையில் அதன் வால்தண்டு மாற்றவேண்டிய நிலையில் இருந்ததால், அதனைப் பழுதுபார்த்து மீண்டும் பயணத்திற்கு ஏற்றவகையில் மாற்றவேண்டிய கட்டாயம் இருந்தது.

கூடுதலாக, பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாமல் நீதிமன்றத்தின் பறிமுதல் நடவடிக்கைக்குக் கப்பல் நிறுவனம் ஆட்பட்டிருந்தது கொடுமையிலும் கொடுமையான ஒரு நிலையாகும். அலுவலக எழுத்தர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். நிறுவனம் ‘முற்றிலும் செயலிழந்த நிலைக்கு’ வந்துவிட்டதாக பி.பி. தாமஸ் குறிப்பிட்டார்.

வணிகர்களில் சிலர் தங்களுடைய வர்த்தகத்தை அச்சமயம் பிரிட்டிஷ் இந்தியக் கப்பல் நிறுவனத்துக்கு மாற்றியிருந்தனர். கூடுதலாக, மாவட்ட ஆட்சியர் கில்மன், தற்செயலான விடுப்பில் கொழும்புக்குச் சென்றபோது மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அளித்த அறிக்கையில், சுதேசி கப்பல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை குறித்த மதிப்பீடு கவனிக்கப்பட வேண்டியவை.

அவற்றுள், சரக்குப் படகுகள் அனுப்பும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட குடிநீருக்காகச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, அதேபோல், உணவுப் பொருட்கள் மற்றும் கப்பலுக்குத் தேவையான பொருட்களை வழங்கிய ஒரு மரக்காயர் வணிகருக்கு, சுதேசி நிறுவனத்தின் கொழும்பு முகவர் அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை எனத் திருப்பிச் செலுத்த வேண்டிய கணக்கு வழக்கு நீண்ட பட்டியலாக இருந்தது.

இக்கணக்கைச் சரிக்கட்ட லாவோ கப்பல் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காகப் பெறப்பட்ட கடன் தொகை எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

காலியா கப்பலை மும்பைக்கு அனுப்புவதற்கு முன்னதாக, அதனைப் பழுதுபார்க்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே துறைமுகம் அனுமதியளிக்கும். ஆகவே லாவோ கப்பல் மூலம் கடனாகப் பெறப்பட்ட முன்பணம், காலியா கப்பலில் புதிய கொதிகலன்களைப் பொருத்தி, புதுப்பித்து இயக்குவதற்கும், பல்வேறு நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், 1909 மார்ச் மாதத்தின் பிற்பகுதியில், கொழும்பில் பேசிய எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார் இரு நீராவிக் கப்பல்களும் மார்ச் மாத இறுதிக்குள் மும்பை சென்றடையும் என்றார். காலியாவுக்குப் பொருத்துவதற்காகப் புதிய நீராவிக் கொதிகலன்களுக்குச் செலுத்தப்படவேண்டிய ரூ. 32,000 நிலுவைத் தொகையை நான்கு தவணைகளாகக் கொடுக்க இருப்பதாகக் கூறியிருந்தனர். அவற்றில், முதல்கட்ட தவணைத்தொகை கொடுக்க சில முக்கிய இயக்குநர்கள் உதவி செய்திருந்தனர். இது நிறுவனத்தின் மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையைக் காட்டுவதாக சுதேசமித்திரன் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

ஆனால் அதே மார்ச் மாதத்தில் ஏற்கெனவே செலுத்தப்படாமல் இருந்த கொழும்பு முகவரின் நிலுவைத்தொகை காரணமாகக் கப்பலுக்குத் தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை. இப்பிரச்னையைச் சரி செய்ய, சுதேசிக் கப்பலின் சில இயக்குநர்களும் நிர்வாகிகளும் கொழும்பு விரைந்தனர்.

இக்காலகட்டத்தில் கப்பல் நிர்வாகத்தில் பெரிதும் ஆர்வங்கொண்டு முதலீடு செய்திருந்த பாண்டித்துரைத்தேவர், மேலும் பணம் வழங்கி வருவதாகவும், அதன் காரணமாக நீராவிக் கப்பல்கள் ஒரு வாரத்திற்குள் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டு, 1909 ஜூன் மாதத்தில் சுப்பிரமணிய பாரதி, மகிழ்ச்சியுடன் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், முக்கிய முதலீட்டாளர்களான மைசூர் சமஸ்தானத்தின் மாண்டியா பகுதியைச் சேர்ந்த மண்டயம் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கப்பெற்றது. மண்டயம் சகோதரர்களான எஸ். திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாசாச்சாரி, எஸ். பார்த்தசாரதி ஆகியோரும், அவர்களுடைய உறவினரான எஸ்.என். திருமலாச்சாரியும் தனித்தனியாகவும் கூட்டாகவும், சுதேசிக் கப்பல் நிறுவனம் திவால் நிலையை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையிலும் அதில் முதலீடு செய்தனர்.

எஸ்.டி. கிருஷ்ண அய்யங்காரும், கே.ஆர். வெங்கடராம ஐயரும், மண்டயம் சகோதரர்களிடமிருந்து கடன் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். நீராவிக் கப்பலை அடமானம் வைப்பதாக எஸ். திருமலாச்சாரியிடம் உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், முதற்கட்டமாக ரூ. 50,000 வழங்கப்பட்டதாகக் காவல்துறையின் உளவுப் பிரிவு அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

பின்னர் பாண்டித்துரைத் தேவருடனான சந்திப்பின்போது, சுதேசிக் கொள்கையில் நம்பிக்கைக்கொண்டு அவர் கூடுதலாக, ரூ. 70,000 வழங்கியுள்ளார். அதன்பிறகு, இரு சுதேசி நீராவிக் கப்பல்களையும் மண்டயம் சகோதரர்களிடம் அடமானமாக வைத்து ரூ. 3 லட்சம் திரட்டினார் எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார். திரளான நிதி கிடைத்தாலும் நிலக்கரியை வாரி வாரிக் குடித்த கப்பல்கள், அவ்வாறு கிடைத்த நிதியையும் குடித்தவண்ணம் இருந்தன.

ஜூலை மாதத்தின் முதல் வாரத்திற்குள், கொழும்பில் தடைபட்டிருந்த கடற்கரைப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார் காத்திருந்தார். ஆனால் அங்கு படகு ஒப்பந்தக்காரர் ஒருவருக்குச் செலுத்தப்படாமல் இருந்த நிலுவைத்தொகையால், லாவோ கப்பல் புறப்படுவதில் தாமதமானது.

இவ்வாறாக, வ.உ.சிதம்பரனாரின் கனவான சுதேசிக் கப்பல் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காக எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார் மேற்கொண்ட போராட்டம், சில கட்டங்களில் வ.உ.சியின் போராட்டத்தையே நினைவூட்டுகிறது. அந்த வகையில், சுதேசிக் கப்பலை மீட்டெடுப்பதில் அவரது பங்கு வ.உ.சியின் பங்குக்கு இணையாகப் பாராட்டப்பட வேண்டியது.

இருந்தும் 1909ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை, நிர்வாகத்தின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையையும் கிருஷ்ண அய்யங்காரின் முயற்சி வீணாகி வருவதையும் வெளிப்படையாகக் காண்பித்தது. நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பு வைப்புத்தொகை, ஒப்பந்தக்காரர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை, கடனாளிகளுக்குத் திருப்பிச் செலுத்தவேண்டிய கடன்தொகை எனக் கப்பல் நிறுவனத்தின் சுமைப் பட்டியல் நீண்டது. மூலதன வரவு நன்கு இருப்பினும், சரியான நேரத்தில் அது கிடைக்கப்பெறவில்லை. நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்காக அதிகளவில் வாங்கப்பட்ட கடன் தொகை, கப்பலைப் பழுதுபார்ப்பதற்குச் செலவான அதிகப்படியான தொகை எனச் சுதேசி நிறுவனத்தின் நிதி நிர்வாகத்தில் முக்கியக் குறைபாடுகள் காணப்பட்டன.

பங்குகளுக்கான பாக்கித்தொகை கிடைத்திருந்தால் லாவோ கப்பலையாவது முழுமையாக இயக்கியிருக்கலாம் என்கிற தன் மனக்குறையைப் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார் எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார். இதனுடன், இரு மாதங்களுக்குள் ரூ.2 லட்சம் திரட்ட வேண்டும் என்கிற ‘இறுதியான வேண்டுகோளையும்’ அவர் விடுத்தார்.

செப்டம்பர் 18 அன்று நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. நிறுவனத்தைக் கலைப்பதா அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பதே அக்கூட்டத்தின் முக்கியக் கேள்வியாக இருந்தது. ஆனால், போதிய உறுப்பினர்களின் வருகை இல்லாததால், திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறவில்லை;

பின்னர், புதிய பங்குகள் வாங்கப்பட்டதும், நிலுவைத் தொகைகள் செலுத்தப்பட்டதும், புதிய மூலதனத்தைத் திரட்டும் முயற்சிகள் தொடர்ந்ததும், செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தின. எனவே, நிறுவனத்தின் வணிகத்தை அந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தப் பங்குதாரர்கள் முடிவு செய்தனர்.

சிறுசிறு தொகைகள் கிடைத்தாலும், உடனடியாகக் கிடைக்கும் தொகை பெரிதும் உதவும் என்பதைப் பொதுமக்களிடம் வேண்டுகோளாக விடுத்தார் எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார். இதனை ஊக்குவிக்கும் விதமாக, ‘நன்கொடைச் சீட்டு’ விற்பனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலும் நாடகக் குழுக்கள், சர்க்கஸ் நிறுவனங்கள், பாகவதர்கள், கதா காலட்சேபம் நடத்துபவர்கள் ஆகியோரும் இதுபோன்ற நிதி திரட்டும் முயற்சிகளில் பங்கேற்று உதவ வேண்டும் என்று கிருஷ்ண அய்யங்கார் கேட்டுக்கொண்டார். இப்போராட்டத்தில் மிகுந்த உணர்ச்சியுடன் செயல்பட்டவர் சுப்ரமணிய பாரதியார். ஆனால் கப்பல் நிறுவனத்துக்குத் தென்னிந்தியாவில் கிடைத்த சொற்ப அளவிலான தொகை அவரைக் கோபத்தின் உச்சிக்கே இழுத்துச் சென்றது.

இதுகுறித்து இந்தியா இதழில், ‘உறங்கிக் கொண்டிருக்கும் மக்களை எவ்வாறு விழித்தெழச் செய்வது?’ ‘வெட்கம்! வெட்கம்!’ என்று அவர் விரக்தியுடன் கேள்வி கேட்டார். அந்தளவில்தான் நம்மவர்களின் பங்களிப்பு இருந்தது என்பதை மறுக்கமுடியாது.

போராட்டக் களத்தில் போராடுவதற்குப் போராளிகள் இருந்தனர். ஆயினும் சமூகத்திலிருந்து அதற்கான நிதி ஆதரவு கிடைக்கவில்லை. சுதேசிக் கப்பலைக் காப்பாற்றச் சிலர் தங்கள் சொத்தையும், பணத்தையும், உழைப்பையும் பணயம் வைத்துப் போராடியபோதும், அவர்களுக்குப் பின்னால் நிற்கவேண்டிய பொதுமக்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இதுவே சுதேசிக் கப்பல் நிர்வாகத்தின் போராட்டத்தில் வேதனையான முரண்பாடாக இருந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *