எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை முடிக்காதவர் என்றபோதும் தன் சொந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். தொடர்ச்சியான தமிழிலக்கிய வாசிப்பு அவரை ஒர் எழுத்தாளராக்கியது. இளம் வயதிலேயே மின்வாரியப் பொறியாளரான முத்துகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டார். அதன் பிறகு, தனக்குக் கிடைத்த பயண வாய்ப்புகளை அவர் பல மனிதர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் இடங்களைப்பற்றிய ஆய்வுகளுக்கும் பயன்படுத்திக்கொண்டார்.
இயல்பாகவே புறச்சூழல்களை நெருங்கிச் சென்று கவனிக்கும் ஆர்வமே ராஜம் கிருஷ்ணன் மேற்கொண்ட எல்லாக் கள ஆய்வுகளுக்கும் அடிப்படை விசையாக இருந்தது. வளைக்கரம், கரிப்பு மணிகள், அலைவாய்க் கரையில், வனதேவியின் மைந்தர்கள் போன்ற பல நாவல்களை வாசிக்கும்போது, அவர் தம் கள ஆய்வுச் செய்திகளை எந்த அளவுக்குப் படைப்பூக்கத்துடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பல எழுத்தாளர்கள் குடும்பச்சூழலைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிவந்த சமயத்தில் அரசியல், சமூகவியல் களங்களை ஆய்வு செய்து எழுதிய ராஜம் கிருஷ்ணனை ஒருவகையில் முன்னோடி எழுத்தாளர் என்று குறிப்பிடலாம்.
1946ஆம் ஆண்டில் ராஜம் கிருஷ்ணன் ’வெள்ளி டம்ளர்’ என்னும் தலைப்பில் தன் முதல் சிறுகதையை எழுதினார். அப்போது அவருக்கு 21 வயது. 1948இல் அவர் எழுதிய முதல் நாவல் ’சுதந்திரஜோதி’ வெளிவந்தது. 90 வயதுவரை வாழ்ந்த ராஜம் கிருஷ்ணன் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாவல்களையும் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத்தொகுதிகளையும் பெண்ணியச் சிந்தனைகள் தொடர்பாக ஆறு கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய தன்வரலாறு ‘காலம்’ என்கிற தலைப்பில் 2014ஆம் ஆண்டில் வெளிவந்தது.
அவர் எழுதிய மூன்று முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவர் எழுதிய பிற நேரடிப் படைப்புகளுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை. பாரதியாரின் மனைவி செல்லமாளின் வாழ்க்கை வரலாற்றை முன்வைக்கும் ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’, மணலூர் மணியம்மையாரின் வாழ்க்கையை முன்வைக்கும் ‘பாதையில் படிந்த அடிகள்’, ஆங்கிலேயர் ஆட்சி செய்துவந்த காலத்தில் மருத்துவத்தை மக்களுக்கு ஆற்றும் சேவையாக நினைத்து இரவுபகல் பாராமல் பாடுபட்ட டாக்டர் ரங்காச்சாரியின் வாழ்க்கையை முன்வைக்கும் ‘டாக்டர் ரங்காச்சாரி’ என அவற்றை நாம் வரிசைப்படுத்தி வாசிக்கலாம். இம்மூன்று படைப்புகளும் இச்சமூகம் எத்தகைய மனிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு இயங்கவேண்டும் என்கிற தெளிவைக் கொடுக்கும் வழிகாட்டி நூல்களாகும்.
நேரில் பார்த்தறியாத ரங்காச்சாரியின் மருத்துவச் சேவையைப்பற்றி சென்ற இடங்களிலெல்லாம் எல்லாத் தரப்பினரும் பேசும் செய்திகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாலும் சென்னை மருத்துவமனை வாசலில் நிறுவப்பட்டிருக்கும் அவருடைய சிலையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாலும் அவருடைய வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வமும் வேகமும் இயல்பாகவே ராஜம் கிருஷ்ணனுடைய நெஞ்சில் பெருகின. அவருக்கு எல்லா வகையிலும் உதவி செய்பவராக தாமோதரன் என்பவர் அமைந்தார். ராஜம் கிருஷ்ணன் தன் முன்னுரையில் நூலாக்கத்தில் அவருடைய பங்களிப்பைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
டாக்டர் ரங்காச்சாரியின் காலத்தில் சகமருத்துவர்களாகப் பணிபுரிந்தவர்கள், உதவி மருத்துவர்களாகப் பணிபுரிந்தவர்கள், ரங்காச்சாரி நிறுவிய கெங்க்ஸ்டன் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள், ஊழியர்கள், அவருடைய குடும்பத்தார் என அனைவரையும் ராஜம் கிருஷ்ணன் சந்தித்து உரையாடினார். முக்கியமான, அவருடைய மனைவியைப் பலமுறை சந்தித்து தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். மேலும் கூடுதலான தகவல்களுக்காக, ரங்காச்சாரி பணிபுரிந்த எல்லா ஊர்களுக்கும் ராஜம் கிருஷ்ணனே நேரிடையாகச் சென்று பலரையும் சந்தித்தார். ரங்காச்சாரியால் பயன்பெற்ற நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களையும் தேடித்தேடிச் சந்தித்து உரையாடினார்.
சராசரியாக ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரம் என்கிற கணக்கில் நோயாளிகளுக்கு மருத்துவச்சேவை புரிந்த ரங்காச்சாரி குறைந்த ஆயுட்காலமே வாழ்ந்தாலும் என்றென்றும் இச்சமூகம் நன்றியுடன் நினைத்துப் போற்றத்தக்க ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர். ரங்காச்சாரியின் துணைவியார் கமலம்மாளின் ஆசி உரையுடனும் டாக்டர் ஸி.பி.ராமஸ்வாமி ஐயரின் முன்னுரையுடனும் சுதேசமித்திரன் வெளியீடாக 1965ஆம் ஆண்டில் ரங்காச்சாரியின் வாழ்க்கை வரலாறு முதன்முதலாக வெளிவந்தது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு கோவையைச் சேர்ந்த பவித்ரா பதிப்பகம் அப்புத்தகத்தை 2005இல் மறுபதிப்பாகக் கொண்டுவந்தது.
0
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சருக்கை என்னும் சிற்றூரில் 28 ஏப்ரல் 1882 அன்று ரங்காச்சாரி பிறந்தார். அவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரி புகழ்பெற்ற கட்டடப்பொறியாளர். சென்னையில் நேப்பியர் பாலம், மெட்ராஸ் பொது மருத்துவமனை போன்ற பல முக்கியமான கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்தார். அவருடைய மாமா எஸ்.கோபாலாச்சாரி பெரிய வழக்கறிஞர். மேலும் திருவிதாங்கூரில் திவானாகவும் பணிபுரிந்துவந்தார்.
கும்பகோணத்தில் பள்ளிக்கல்வியை முடித்த ரங்காச்சாரி பட்டப்படிப்புக்காக சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அவர் இறுதியாண்டுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் மருத்துவமனைக் கட்டடத்தின் விரிவாக்கப் பணி தொடர்பாக அவருடைய தந்தை கிருஷ்ணமாச்சாரியும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
ஒருநாள் தேர்வுக்காக காலையில் படித்துக்கொண்டிருந்த ரங்காச்சாரியை அவருடைய தந்தை கடற்கரையைப் பார்ப்பதற்காக வண்டியில் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றார். கடற்கரைக்குச் செல்வதற்கு முன்னால் கட்டுமான வேலையின் நிலையை அறிந்துகொள்வதற்காக மருத்துவமனையின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அவரோடு ரங்காச்சாரியும் நடந்தார். அங்கிருந்த மேற்பார்வையாளரிடமும் பணியாளர்களிடமும் பேசுவதில் கிருஷ்ணமாச்சாரி மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, அந்த வளாகத்தைச் சுற்றிச்சுற்றிப் பார்த்த ரங்காச்சாரி அங்கிருந்த நோயாளிகளின் களைத்த முகங்களைப் பார்த்தும் வேதனைப் புலம்பல்களைக் கேட்டும் துயரமுற்றார்.
அப்போது அவ்வழியாக நடந்துவந்த சர்ஜன் கிஃபோர்டு, சர்ஜன் நிப்லக் என இரு ஆங்கிலேய மருத்துவர்களும் கிருஷ்ணமாச்சாரியும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக்கொண்டனர். சிறிது நேரம் அங்கு நடைபெற்றுவரும் பணிகள் தொடர்பான உரையாடல் நிகழ்ந்தது. அப்போது தனக்கு அருகில் நின்றிருந்த ரங்காச்சாரியை அவர்களுக்கு ‘என் மகன். கிறிஸ்டியன் காலேஜில் எஃப்.ஏ. படிக்கிறான்‘ என்று சொல்லி அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணமாச்சாரி.
சர்ஜன் நிப்லக் நெருங்கி வந்து உள்ளார்ந்த அன்போடு ரங்காச்சாரியின் கையைப் பற்றிக் குலுக்கினார். ரங்காச்சாரியின் உள்ளங்கை மென்மை அவருக்கு வியப்பளித்தது. உடனே ‘உன் விரல்கள் பட்டுப்போல மென்மையாகவும் நீளமாகவும் அழகாக உள்ளன‘ என்று தயக்கமின்றி சொல்லிப் பாராட்டினார். தொடர்ந்து ‘உன் கைவிரல்கள் ஒரு சர்ஜனின் கைவிரல்கள் போலவே இருக்கின்றன. எதிர்காலத்தில் நீ ஒரு சர்ஜனாக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்‘ என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். அவர் ஏதோ விளையாட்டுக்குச் சொல்வதாக நினைத்து கிருஷ்ணமாச்சாரி அச்சொற்களை அக்கணமே மறந்துவிட்டார். ஆயினும் அச்சொற்கள் ரங்காச்சாரியின் நெஞ்சில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டன. தன் வாழ்வின் இலக்கு என்ன என்பதை அவர் மனம் அக்கணத்தில் தீர்மானித்துவிட்டது. மருத்துவம் படித்து நோயால் வாடும் எளிய மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார்.
மகனைப் படிக்கவைத்து பொறியாளராக்கிப் பார்க்கவேண்டும் எனக் கனவில் மூழ்கியிருந்த குடும்பத்தினர் ஏமாற்றத்தில் மூழ்கினர். ஆயினும் அவர்களிடம் நிதானமாகப் பேசிப் புரியவைத்த ரங்காச்சாரி 1900ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படிக்கத் தொடங்கினார். எஃப்.ஏ.வில் மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மருத்துவக்கல்லூரியில் அவருக்கு எளிதாக இடம் கிடைத்துவிட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சையில் நாட்டம் அதிகமாக இருந்தது. அதனால் மாணவப்பருவத்திலேயே அறுவை சிகிச்சை வளாகத்துக்கு அடிக்கடி சென்று, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் உதவி செய்தபடி ஒவ்வொரு நடவடிக்கையையும் அருகிலேயே இருந்து தெரிந்துகொண்டார். நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை. பட்டப்படிப்பை வெற்றிகரமாகப் படித்துமுடித்தார்.
0
ஒருநாள் ரங்காச்சாரி வீட்டில் இருந்த சமயத்தில் ஒரு தந்தி வந்தது. அனுப்பியவர் அவருடைய மனைவியின் சகோதரர். அவருடைய மனைவியின் தமக்கையின் பிரசவத்தில் ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்டது, உடனே புறப்பட்டு வரவும் என்று தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தியைப் பார்த்ததும் ரங்காச்சாரி தன்னுடைய மருத்துவப்பெட்டியைத் தயார்ப்படுத்திக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ரயில், டிராம், ரிக்ஷா என மாறிமாறி பயணம் செய்து நோயாளியுடைய வீட்டை அடைந்தார். ஏற்கனவே அவரைக் கவனித்துவரும் பெண் டாக்டரும் தாதியும் சிக்கலைத் தீர்க்கும் வழி தெரியாமல் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.
பதற்றமின்றி நோயாளியைப் பரிசோதித்த ரங்காச்சாரி, பிரசவம் பார்க்கத் தேவையான ஏற்பாடுகளையும் செய்தார். ஏற்கனவே அங்கு நின்றிருந்த பெண் டாக்டர் அவருக்கு எல்லா வகைகளிலும் உதவியாக இருந்தார். அறுவை சிகிச்சை செய்யப்போகிற இடம் வீடு என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ரங்காச்சாரி சிகிச்சையைத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சிகிச்சை வெற்றிகரமாக முடிய தாயின் வயிற்றிலிருந்து குழந்தையைத் தனியாகப் பிரித்தெடுத்துத் தாதியிடம் அளித்தார். சிக்கலான அறுவை சிகிச்சையை ரங்காச்சாரி இளம்வயதிலேயே வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். வசதிகள் குறைவான வீட்டிலும் போதிய கவனத்தோடு செயல்பட்டால் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கமுடியும் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தினார் ரங்காச்சாரி. அவருடைய முதல் அறுவை சிகிச்சை அந்த வீட்டிலிருந்தே தொடங்கியது.
0
1904ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற ரங்காச்சாரி 1906இல் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக அரசு பணியில் சேர்ந்தார். எழும்பூர், ஐதராபாத், மாயவரம், தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், பெர்ஹாம்பூர், சென்னை பொது மருத்துவமனை என பல இடங்களில் அரசு மருத்துவராக பல ஆண்டுகள் அவர் பணியாற்றினார். எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் துணைக்கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்றார். அவரே அப்பதவியை வகித்த முதல் இந்தியர். 1922ல் அரசு பதவியைத் துறந்து 1922இல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கென்சிங்டன் நர்சிங் ஹோமில் சொந்தமாக ஒரு மருத்துவமனையைத் தொடங்கி மக்களுக்கு மருத்துவத் தொண்டாற்றினார்.
ரங்காச்சாரி மருத்துவமனையில் பணிபுரிந்தபோதும் நோயாளிகளின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அவர்களுடைய இருப்பிடங்களுக்கே சென்று மருத்துவம் பார்த்துவந்தார். நோயாளிகள் வசிக்கும் இடத்தில் விரைந்து செல்வதற்காக சொந்தமாக ஒரு மிதிவண்டி வைத்திருந்தார். தொலைபேசியில் அழைப்பு வந்ததுமே மருத்துவப்பெட்டியோடு புறப்பட்டுவிடுவது அவர் வழக்கம். பிறகு ஒரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு காரில் செல்லத் தொடங்கினார்.
ஒருபோதும் அவர் வருமானத்தைப் பெரிதாக நினைத்ததே இல்லை. நோயாளிகள் மனமுவந்து கொடுப்பதை ஏற்றுக்கொள்வதையே அவர் வழக்கமாக வைத்திருந்தார். பணம் கொடுக்கமுடியாத ஏழைகளுக்கு அவர் இலவசமாகவே மருத்துவம் பார்த்தார். வாழ்நாள் முழுதும் மருத்துவத்தை மக்களுக்கு ஆற்றும் ஒரு சேவையாக மட்டுமே ரங்காச்சாரி பார்த்தார்.
0
1909ஆம் ஆண்டில் அவர் ஐதராபாத் மருத்துவமனையில் பணிபுரிந்தார். அப்போது நாடெங்கும் பிளேக் நோய் தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தது. எங்கெங்கும் மரண ஓலம் கேட்டபடி இருந்தது. முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் அனைவரும் அந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வரிசை வரிசையாக பிண ஊர்வலங்கள் சென்றபடி இருந்தன. அப்போது அப்பகுதிக்கு உடனடியாகச் சென்று அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்று மூத்த டாக்டர் கூறினார். நோயின் கடுமைக்கு அஞ்சி அனைவரும் பின்வாங்கிய நிலையில் இளம் மருத்துவரான ரங்காச்சாரி துணிச்சலோடு தான் செல்வதாகக் கூறிவிட்டு அக்கணமே தேவையாக கருவிகளோடு உதவியாளர் ஒருவரோடு புறப்பட்டுவிட்டார். வாசலில் நின்றிருந்த குதிரைவண்டியில் ஏறி அந்த முஸ்லிம்கள் பகுதிக்கு விரைந்து சென்றார்.
அந்த நேரத்திலும் சில பழைமைவாதிகள் அவரைத் தெருவுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் அனுமதிக்க மறுத்து தடுத்தனர். எதிர்ப்பு வலிமையடைந்தது. மதத்தின் பெயரால் அறியாமை கூக்குரலெழுப்பியது. அந்நிய ஆடவன் வந்து நம் திரைகளுக்கப்பால் புகுந்து நம் பெண்டிருக்கு ஊசி குத்துவதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று பொய்ப்பிரசாரம் செய்தனர். ரங்காச்சாரியால் ஒருவரையும் நெருங்கமுடியவில்லை. பேசிப்பேசி சலித்துவிட்ட உதவியாளரும் திரும்பிவிடலாம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார். ‘அப்படிச் செய்யக்கூடாது. நாம் நல்லதைச் செய்யத்தான் வந்திருக்கிறோம் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்‘ என்று உதவியாளரை அமைதிப்படுத்திவிட்டு, கூடியிருந்த முஸ்லிம் மக்களிடம் நீண்ட நேரம் பேசினார். அதற்குப் பிறகே அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதற்குப் பிறகு ஆண்களும் பெண்களும் ஒவ்வொருவராக வந்து ஊசி போட்டுக்கொண்டனர்.
0
காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த சமயத்தில் ஒருமுறை ஸ்ரீநிவாச ஐயங்கார் வீட்டில் தங்கியிருந்தார். பிறரைப்போல ரொட்டி, பருப்பு என்று சாப்பிடாமல் அவர் ஆட்டுப்பாலும் கீரையும் பழங்களையும் மட்டும் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு அவரும் அவருடைய மனைவி அம்புஜத்தம்மாளும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இந்தச் சில்லறை உணவுகள் வழியாக இவருக்கு என்ன சத்து கிடைத்துவிடப்போகிறது என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தம் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பல டாக்டர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்துச் சென்று காந்தியடிகளின் உணவுவகைகளைக் காட்டி, அவருக்குப் புரியும்படி அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களும் காந்தியடிகளைச் சந்தித்து அவர் சாப்பிடும் கீரையும் பழவகைகளும் அவருக்குத் தேவையான சத்தை அளிக்காது என்று தெரிவித்துவிட்டுச் சென்றனர். ஆனால் அவர்களுடைய கூற்றைக் காந்தியடிகள் ஏற்க மறுத்துவிட்டார்.
காந்தியடிகளின் மனம் ஏற்கும்படி எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக ஒருநாள் ஸ்ரீநிவாச ஐயங்கார் டாக்டர் ரங்காச்சாரியைச் சந்தித்து செய்தியைச் சுருக்கமாகத் தெரிவித்தபின் தம்முடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சாப்பாட்டு நேரத்துக்குச் சரியாக அவர்கள் காந்தியடிகள் தங்கியிருந்த அறைக்குச் சென்றனர். அப்போது மீராபென் ஒரு தட்டில் திராட்சையை உதிர்த்து வைத்தார். அருகில் ஒரு கிண்ணத்தில் கீரை மசியல் இருந்தது. இன்னொரு தம்ளரில் ஆட்டுப்பால் இருந்தது. சாறு எடுப்பதற்கு வசதியாக நாலைந்து சாத்துக்குடி பழங்கள் உரித்துவைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிய ஸ்ரீநிவாச ஐயங்கார் ‘இதுதான் அவருடைய சாப்பாடு. பொழுதெல்லாம் உழைப்பவர்களுக்கு இது எப்படிப் போதும் டாக்டர். நீங்களே அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்‘ என்று தெரிவித்தார். காந்தியடிகளும் ‘இது மட்டுமே எனக்குப் போதும் என்று சொன்னால் இவர்களுக்குப் புரிவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் டாக்டர். இது எனக்குப் போதுமா, போதாதா? ‘ என்று நேரிடையாகவே கேட்டார்.
ரங்காச்சாரி அங்கிருந்த உணவு ஏற்பாடுகளையெல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு புன்னகையோடு ‘தாராளமாகப் போதும். இதற்கு மேல் வேண்டாம்‘ என்று சொன்னார். அவரை அழைத்துச் சென்ற ஸ்ரீநிவாச ஐயங்கார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ரங்காச்சாரி அவரிடம் ‘நீங்கள் கவலை கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை. பழமாக உரித்துச் சாப்பிட்டால் ஒரு சாத்துக்குடிதான் சாப்பிடமுடியும். சாறு எடுத்துச் சாப்பிடத் தொடங்கினால் நான்கு சாத்துக்குடி சாப்பிடலாம். இந்த உணவுமுறை ஆரோக்கியத்துக்கு மிக மிகச் சிறப்பானது. இனிமேல் இதை நினைத்து கவலைப்படாதீர்கள்‘ என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்.
காந்தியடிகளைப் போலவே ரங்காச்சாரிக்கும் அவித்த காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஓய்வின்றி நாள் முழுக்க உழைப்பவருக்கு இந்த உணவினால் என்ன சத்து கிடைத்துவிடும் என்று கவலைப்பட்டார் அவருடைய மனைவி கமலம்மாள். தன் உணவுப்பழக்கம் சரியான ஒன்றே என்பதை அவருக்குப் புரியவைப்பதற்காக, காந்தியடிகளைச் சந்தித்து உரையாடிய தகவலைத் தன் மனைவியிடம் பகிர்ந்துகொண்டார் ரங்காச்சாரி.
0
ஒருமுறை டாக்டர் ரங்காச்சாரி மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்று சொன்ன ஒரு பெண்மணியைத் தன் கைரிக்ஷாவில் உட்காரவைத்து இழுத்துக்கொண்டு ஓடினான் ஒரு ரிக்ஷாக்காரன். தீராத வயிற்றுவலியால் துடித்தாலும் வேதனையை மறைத்துக்கொண்டு வண்டியை இழுத்துப் பிழைத்துவந்தான் அவன். அன்று சவாரியோடு மருத்துவமனை வாசலை நெருங்கிவந்த சமயத்தில் தடுமாறி கீழே விழுந்து வாந்தியெடுக்கத் தொடங்கிவிட்டான். சுற்றி நின்றிருந்த வண்டிக்காரர்கள் உடனடியாக அவனைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவனைப் பரிசோதித்த டாக்டர் ரங்காச்சாரி அவன் இரப்பையில் புண் ஏற்பட்டிருப்பதையும் குடல் வாய் குறுகிவிட்டதையும் கண்டுபிடித்துச் சொன்னார். குடலின் ஒரு பகுதியை அறுத்து வீசிவிட்டு தைக்கவேண்டிய பெரிய சிகிச்சையைச் செய்தால்தான் அவனைப் பிழைக்கவைக்கமுடியும் என்பதையும் விளக்கமாகச் சொல்லிப் புரியவைத்தார். தன்னிடம் பணமில்லை என்று அவன் கைவிரித்தபோது, அவன் தோளைத் தட்டிக் கொடுத்த டாக்டர் அவனுக்குப் படுக்கை ஒதுக்கி அனுமதிக்குமாறும் அறுவை சிகிச்சைக்கான நாளைக் குறிக்குமாறும் உதவியாளர்களிடம் சொன்னார். குறிப்பிட்ட நாளில் ரங்காச்சாரியே நேரில் வந்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து பிழைக்கவைத்தார். சில நாட்கள் படுக்கையிலேயே தங்கி உடல்நலம் தேறியதும் அவனை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அவனுடைய மனைவி ‘இதுதாங்க எங்களால முடிஞ்சது‘ என்றபடி முந்தானையில் முடிந்துவைத்திருந்த ஐந்து ரூபாயை எடுத்து டாக்டரிடம் கொடுத்தார். டாக்டர் புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு ரிக்ஷாக்காரனை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவைத்தார்.
0
ஒருமுறை ரங்காச்சாரியின் தாயார் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இளம்வயதில் டாக்டர் படிப்பு படிக்கப் போவதாகத் தெரிவித்தபோது, அவர் விருப்பத்துக்கு எவ்விதமான தடையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி அனுப்பிவைத்தவர் அந்தத் தாயார். முதுமையின் காரணமாக அவர் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் எதுவும் செய்ய இயலாத சூழலில் உட்கார்ந்திருந்தார் ரங்காச்சாரி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
அப்போது மருத்துவமனையிலிருந்து அவருக்கு ஓர் அவசர அழைப்பு வந்தது. தொலைபேசியில் ரங்காச்சாரியை அழைத்தவர், சீரான இடைவெளியில் அவ்வப்போது உடல்சோதனைக்கு வந்து சென்ற போலீஸ் சார்ஜெண்ட்டின் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் கொடுத்தார். அசாதாரணமான கனத்தாலும் சுமையாலும் அச்சத்தில் மூழ்கியிருந்த அந்தப் பெண்மணிக்கு ஒவ்வொரு முறையும் தைரியமூட்டி பிரசவம் நல்லபடி நடக்கும் என ரங்காச்சாரிதான் நம்பிக்கை கொடுத்திருந்தார்.
உடனே புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொண்டார் உதவியாளர். மெல்ல மெல்லப் பிரிந்துகொண்டிருக்கும் தாயின் உயிரைத் தடுத்து நிறுத்துவதற்கில்லை, ஆனால் பிரசவத்துக்கு வந்திருப்பவருக்கு நல்லபடி பிரசவம் பார்த்து பெரிய உயிரையும் சிறிய உயிரையும் ஆபத்தில் சிக்காமல் காப்பாற்றிவிடலாம் என நினைத்தார் ரங்காச்சாரி. அடுத்த நிமிடமே வீட்டிலிருந்து மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணைப் பரிசோதித்தபோது, அவளுக்கு வந்திருப்பது பொய்வலிதானே தவிர உண்மை வலியல்ல என்பது அவருக்குப் புரிந்தது. அதை அந்தத் தாயிடம் நிதானமாக எடுத்துச் சொல்லி புரியவைத்து அவருடைய அச்சத்தைப் போக்கினார்.
அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருக்கும் பிற நோயாளிகளைச் சந்தித்து ஒவ்வொருவருக்கும் தகுந்த ஆலோசனைகளைச் சொன்னபடி இருந்த சமயத்தில் ரங்காச்சாரிக்கு வந்த தொலைபேசி அழைப்பு, அம்மாவின் மரணச்செய்தியைத் தெரிவித்தது. வேறு வழியின்றி ரங்காச்சாரி உடனடியாக வீட்டுக்குப் புறப்பட்டார். அம்மாவின் உயிர் பிரியும் நேரத்தில் அவருக்கு அருகில் இருக்கமுடியவில்லையே என்கிற வருத்தம் அவரை வாட்டியெடுத்தது.
ஒன்றிரண்டு மணி நேரத்திலேயே வீட்டுக்கு அருகிலேயே வசித்துவந்த உறவினர்களும் நண்பர்களும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டனர். அடுத்து ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவருடைய உடல் தகனமையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ரங்காச்சாரி கனத்த இதயத்துடன் தன் தாய்க்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளைச் செய்துமுடித்தார். வீட்டுக்குத் திரும்பிய சில நிமிடங்களிலேயே மருத்துவமனையிலிருந்து மறுபடியும் அவருக்கு அழைப்பு வந்து, அந்தப் பெண்மணிக்கு பிரசவவலி தொடங்கிவிட்டது என்று சொல்லப்பட்டது. உடனே வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் ரங்காச்சாரி.
அந்தப் பெண்மணிக்கு அப்போதுதான் உண்மையாகவே பிரசவ வலி தொடங்கியிருந்தது. அந்தச் சிகிச்சை சற்றே சிக்கலாக இருந்தது. குழந்தையின் உருவம் வழக்கத்தைவிட பெரிதாக இருந்ததால் கருப்பைத் தசைகள் விரிந்து விரிந்து அசைவு கொடுத்ததே தவிர, குழந்தை வெளியே வரவில்லை. ரங்காச்சாரியின் அனுபவம் கொண்ட கைவிரல்கள் நிதானமாக இயங்கி எப்படியோ குழந்தையை வெளியே எடுத்துவிட்டன. அசாதாரணமான குழந்தையின் உருவமும் எடையும் தாய்க்கு எவ்விதமான ஆபத்தையும் விளைவித்துவிடாதபடி குழந்தையைப் பக்குவமாகப் பிரித்தெடுத்தார் ரங்காச்சாரி. குழந்தையின் அழுகுரலைக் கேட்டும் முகத்தைப் பார்த்தும் மகிழ்ந்த தாய் தன் கண்களாலேயே ரங்காச்சாரிக்கு நன்றி கூறினாள். அவளுக்கு வாழ்த்து கூறிய ரங்காச்சாரி, வெள்ளை உடைகளில் குருதிக்கறை படிந்த கோலத்தோடு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி அன்னையின் அஸ்தியை எடுக்கும் சடங்குக்குத் தயாரானார். ஒருபுறம் கடமை. இன்னொருபுறம் சேவை. இரண்டையும் சமமாகவே எதிர்கொண்டார் ரங்காச்சாரி.
0
திருநள்ளாறு பகுதியில் வசிக்கும் கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவனொருவன் தூளியில் உட்கார்ந்து வேகமாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கீழே விழுந்துவிட்டான். செய்தியறிந்து ஓடிவந்த அவனுடைய தாய் அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினாள். கால்வலியின் கடுமையால் அவன் அழுதுகொண்டே இருந்தான். கால் சுளுக்கிக்கொண்டிருக்கலாம் என நினைத்த அவன் தாய் வீட்டிலிருந்த ஏதோ ஒரு தைலத்தைத் தடவி உருவிவிட்டாள். அதனால் எந்தப் பயனும் இல்லை. உள்ளூர் வைத்தியரிடம் அழைத்துச் சென்று காட்டினாள். அவரும் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்து அனுப்பினார். நான்கு நாட்கள் ஓடிவிட்டன. கால் வீக்கமும் வலியும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் கடலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னார்கள். அன்று காலையே அவள் சிறுவனைத் தூக்கிச் சென்று கடலூர் மருத்துவமனைக்குச் சென்றாள். மருத்துவர் பரிசோதித்துவிட்டு எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். ஆனால் அந்த மருத்துவமனையில் அந்த வசதி இல்லாததால் புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அந்த டாக்டர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு முறிவு எதுவுமில்லை என்று தெரிவித்தார். வீக்கம் குறைவதற்கு ஒரு மருந்தை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார். இதற்குள் மேலும் ஒரு வாரம் ஓடிவிட்டது.
எந்த மருந்தும் சிறுவனின் வேதனையைக் குறைக்கவில்லை. அவனைப் பார்க்கவந்த உறவினர் ஒருவர் உடனடியாக சென்னைக்குச் செல்லுமாறு ஆலோசனை கூறினார். அன்றிரவே ரயிலில் அச்சிறுவனை அழைத்துக்கொண்டு சென்றாள் அந்தத் தாய். சென்னை மருத்துவமனையில் சிறுவனுடைய காலைப் பரிசோதனை செய்த டாக்டர் பாரிஸ் சாந்து பட்டி போட்டு மூன்று மாதம் வைத்துப் பார்த்தால்தான் வீக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியும் என்று தெரிவித்துவிட்டார்.
மூன்று மாத காலம் வெளியூரில் தங்குவது தம் குடும்ப வசதிக்கு எட்டாத செயல் என்று நினைத்து விதிவிட்ட வழியில் நடப்போம் என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்பிச் செல்லத் தயாரானாள் அவள். அடுத்த நாள் அவள் தங்கியிருந்த வீட்டைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் கடைசி முயற்சியாக ஒரு டாக்டரிடம் காட்டிப் பார்ப்போம் என்று அச்சிறுவனை பூந்தமல்லியில் மருத்துவமனையை நடத்திவந்த டாக்டர் ரங்காச்சாரியிடம் அழைத்துச் சென்றார்.
ரங்காச்சாரி அச்சிறுவனிடம் விளையாட்டுத்தனமாகப் பேச்சு கொடுத்தபடியே காலை நீட்டவைத்து முழுமையாகப் பரிசோதனை செய்தார். அதற்குப் பிறகு ஒரு சீட்டில் மருந்து விவரத்தை எழுதி அச்சிறுவனின் தாயிடம் கொடுத்தார். மருந்தை உட்கொண்டதும் மூன்று நாட்களுக்குக் காய்ச்சல் அடிக்கும் என்றும் அச்சமின்றி ஐஸ் ஒத்தடம் மட்டும் கொடுத்துக்கொண்டே வந்தால் போதும் என்றும் காய்ச்சல் நின்ற பிறகு சிறுவனை அழைத்து வந்து காட்டவேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவைத்தார். அதைக் கேட்ட தாய் குழப்பமடைந்தாள். கால் வேதனைக்கு மருந்து கேட்டு வந்தால் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கிறாரே என நினைத்துத் தவித்தாள். ஆயினும் டாக்டர் சொன்ன விதமாகவே தொடர்ந்து செய்தாள்.
மூன்று நாட்களுக்குள் சிறுவனுடைய வலி படிப்படியாகக் குறைந்து நின்றுவிட்டது. ஆனால் வீக்கம் குறையவில்லை. அதைக் குறைப்பதற்காக டாக்டர் மற்றொரு மாத்திரையை எழுதிக் கொடுத்தார். மாத்திரை உட்கொள்ளத் தொடங்கிய ஒன்றிரண்டு வாரங்களிலேயே சிறுவன் பழைய நிலைக்குத் திரும்பி சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கிவிட்டான். எக்ஸ்ரே கண்களால் கூட கண்டறிய முடியாத நோயை ரங்காச்சாரி தன் உள்ளுணர்வால் தெரிந்து தக்க மருத்துவம் செய்து குணப்படுத்திவிட்டார். அச்சிறுவனைப்போல எண்ணற்றோரை ரங்காச்சாரி தன் தனித்திறமையால் குணப்படுத்தினார் என்பது வரலாறு.
0
1909இல் பிளேக் நோய் பரவியதைப்போல 1934இல் பல இடங்களில் டைபாய்டு நோய் பரவியது. அவருடைய உதவியாளர்கள் பல இடங்களுக்குச் சென்று தடுப்பு முகாம்களை ஏற்படுத்தி மக்களுக்குச் சேவை செய்தனர். அவர்களைப்போலவே ரங்காச்சாரியும் சில இடங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து விழிப்புணர்வூட்டித் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும்படி ஆலோசனை வழங்கிவந்தார். ஓய்வில்லாத நீண்ட நேர உழைப்பு ஒரு கட்டத்தில் அவரைச் சோர்வுற வைத்துவிட்டது. எதிர்பாராத விதமாக அவரே அந்த நோய்க்கு ஆளானார். நோய்க்கிருமிகளின் தொற்று தீவிரமாக இருந்ததால், அந்த நோய்க்கு அவர் இரையானார்.
அறுவை சிகிச்சை நிபுணராகப் பெயர்பெற்ற ரங்காச்சாரியைக் கெளரவிக்கும் வகையில் ஒரு சிலையை நிறுவ அரசு முடிவெடுத்தபோது, பொதுமக்கள் அனைவரும் அதற்கென நிதி திரட்டி அளித்தனர். பொதுமருத்துவமனையில் வெளியேறும் வாயிலுக்கு அருகில் அவருடைய சிலை நிறுவப்பட்டது. 1939இல் மெட்ராஸ் ஆளுநராக இருந்த லார்ட் எர்ஸ்கைன் ரங்காச்சாரியுடைய சிலையைத் திறந்துவைத்தார். ‘அரிய மருத்துவத்திறமைகளும் எல்லையற்ற மனித நேயமும்‘ என்கிற வாசகம் அவருடைய சிலையைத் தாங்கி நிற்கும் பீடத்தில் பொறிக்கப்பட்டது.
0
இன்று, உலகெங்கும் மருத்துவத்துறை முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது. அறிவியலின் மிகப்பெரிய சாதனையாக இன்றைய மருத்துவம் விளங்குகிறது. பல நுட்பமான நோய்களைக் கூட இன்றைய மருத்துவத்தால் குணப்படுத்திவிட முடியும். மனிதர்களின் ஆயுட்காலம் இன்றைய நவீன மருத்துவத்தால் பெருகியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
இன்று ஒரு மருத்துவர், பலவிதமான சோதனைகளில் தெரியவரும் முடிவுகளின் அடிப்படையில் நோயின் தன்மையைக் கூர்மையாக உய்த்துணர்ந்து, அதற்கேற்ற மருந்துகளை எளிதாக அளித்துவிட முடியும். மருத்துவத்தின் முக்கியமான சவாலே நோய்க்கூறின் தன்மையை அறிந்துகொள்வதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, இவ்விதமான நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலத்தில் மருத்துவம் பார்த்தவர் ரங்காச்சாரி. நோய்களின் குறிகுணங்களை அவர் தன் உள்ளுணர்வாலேயே உய்த்தறிந்து தகுந்த மருந்துகளைக் கொடுத்து குணம்பெறச் செய்தார் என்பது மிகப்பெரிய சாதனை. அதுதான் அவருடைய முதல் சிறப்பம்சம்.
நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சைப் பிரிவில் வேலை செய்யும் மருத்துவர்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவது சிரமம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று அறுவை சிகிச்சைகளே ஒருவருடைய அதிகபட்ச எல்லை. ஆனால் இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னால் குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே நிறைந்த சூழலில் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தவர் டாக்டர் ரங்காச்சாரி. நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவர முடியாத நெருக்கடியான சமயங்களில், அவரே நேரிடையாக நோயாளிகளின் இல்லங்களுக்குச் சென்று, அங்கு கிடைக்கும் குறைவான வசதிகளோடு அறுவை சிகிச்சை செய்து நோயாளிகளைப் பிழைக்கவைத்தவர் அவர். அது அவருடைய இரண்டாவது சிறப்பம்சம்.
ஒரு தனியார் மருத்துவமனையைத் தொடங்கி எண்ணற்ற இளம் மருத்துவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களிடம் சேவை மனப்பான்மையை ரங்காச்சாரி உருவாக்கினார். அவர்கள் வழியாக மருத்துவத்தை ஒரு சமூகச்சேவை என கருதி உழைக்கும் தலைமுறைகள் அடுத்தடுத்து உருவாகின. அது அவருடைய மூன்றாவது சிறப்பம்சம்.
இன்றைய சூழலில் தனியார் மருத்துவமனைகளில் முன்பணமாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்ட பிறகே மருத்துவத்தைத் தொடங்கும் சூழலை நாம் பார்க்கிறோம். மருத்துவம் பெறும் காலம் நீண்டுபோகும் சூழலில் கூடுதலான தொகையைச் செலுத்திய பிறகே குணம் பெற்ற நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியே வரமுடியும். ஆனால் முன்பணம் செலுத்துவது என்கிற கருத்தாக்கத்துக்கே இடமில்லாத வகையில் ஒரு மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தியவர் ரங்காச்சாரி. பணத்தை ஒரு அளவுகோலாக ஒருபோதும் கொள்ளாதவர் அவர். கட்டணம் கொடுப்பவர்களிடம் வாங்கிக்கொள்வார். கொடுக்க இயலாதவர்களிடம் எதையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஏழை நோயாளிகள் கொடுக்கும் சிறு தொகையையே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு வழியனுப்பிவைக்கும் மாபெரும் மனிதர் அவர். அது ரங்காச்சாரியுடைய நான்காவது சிறப்பம்சம்.
நானூறு பக்க அளவில் ராஜம் கிருஷ்ணன் எழுதியிருக்கும் ரங்காச்சாரியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவருடைய சிறப்பம்சங்கள் வெளிப்பட்டபடியே இருப்பதை உணரலாம்.
0

