ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒரு வடிவத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சம் இருக்கும்; அது வாழ்க்கைத் துணை, பெற்றோர், நண்பர், உடன்பிறந்தவர் என எந்த வடிவத்திலும் இருக்கலாம். அந்த வெளிச்சம் மறையும்போதுதான், உலகத்தின் உண்மையான இருள் எத்தகையது என்பது முழுமையாகப் புரியவரும். ஹெலன் கெல்லரின் வாழ்வில், குறிப்பிட்ட அந்தப் பிரகாசமான வெளிச்சம் அவரது ஒட்டுமொத்த உலகமாகவும் விளங்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
ஹெலன் கெல்லருடைய வாழ்வின் பெரும்பாலான பகுதியில் நீக்கமற நிறைந்திருந்து, அவருக்கு உற்ற துணையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய அந்த வெளிச்சத்தின் பெயர் ஆனி சல்லிவன். ஐந்து வயதில் மனித வாழ்வின் வண்ணங்களை அவருக்கு உணரச் செய்தது, அந்த அன்பு தேவதைதான்.
பல ஆண்டுகளாக, ஹெலனின் விரல் நுனிகளிலும், அவரது இதயத் துடிப்பிலும் கலந்து, அவருடைய கண்களாகவும், குரலாகவும் வாழ்ந்து வந்த ஆனி சல்லிவன், நீண்ட கால உடல்நலக்குறைவின் காரணமாக 20 அக்டோபர் 1936 அன்று 70வது வயதில், தன்னுடைய அன்புக்குரிய ஹெலன் கெல்லரிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்தார். இந்தப் பிரிவு என்கிற சொல், ஹெலனின் இழப்புகளை வர்ணிக்கவோ அளவிடவோ முடியாத ஒரு சிறிய சொல். அந்த மரணம் வெறுமனே ஒரு மனிதரின் இழப்பு அல்ல; அது ஹெலனின் அக உலகத்தில் நிகழ்ந்த ஒரு பேரழிவின் தொடக்கம்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, நிழலாக, தாயாக, ஆசானாக, தோழியாக, வழிகாட்டியாக உடன் பயணித்து, தன்னுடைய சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்த ஒரு தேவதை அமைதியாக விடைபெற்றுச் சென்றபோது, ஹெலன் மீண்டுமொருமுறை இந்தப் பரந்த உலகத்தில் தனியாக, அதாவது கடலில் தனித்து மிதக்கும் ஒரு தோணியைப்போல் உணர்ந்தார்.
ஆனி சல்லிவனின் இறுதி நொடிகளை ஹெலன் எப்படிக் கடந்தார் என்பதை வார்த்தைகளால் முழுமையாக விவரித்துவிட முடியாது. ஆனியின் மூச்சுக்காற்று மெல்ல மெல்லக் குறைந்து, அவர் உயிர் பிரிந்த கணத்தை ஹெலன் தன்னுடைய கைகளால் உணர்ந்தபோது, அவரது உடலின் அத்தனை நரம்புகளும் அதிர்ந்துபோயின. ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்துப்போனது போலிருந்தது. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் எத்தனையோ புயல்களைச் சந்தித்த ஹெலனுடைய மனம், அன்று முழுவதுமாக நிலைகுலைந்து நின்றது.
சிறு வயதில், அறியாமை இருள் சூழ்ந்த, அந்தத் தீவு போன்ற உலகிலிருந்து தன்னை அன்பின் வெளிச்சத்திற்கு மீட்டெடுத்த அந்த விரல்களில், கதகதப்பு நீங்கி, குளிர்ந்துபோனதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஆனி சல்லிவனின் நறுமணமும், அவருடைய அரவணைப்பும் இன்னும் மீதமிருக்கும் என நினைத்து ஹெலனின் கைகள் தேடித் தவித்தன. ஆனால், எங்கு தொட்டாலும் வெறுமை மட்டுமே நிலவியது.
உயிரோடு கலந்துவிட்ட ஒருவர் விலகிவிட்ட நிலையில், கண்கள் இல்லாத துயரம் மீண்டும் அவரைச் சூழ்ந்துகொண்டது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அமைதியும் தன்னுடைய அறைக்குள் வந்து தேங்கிக்கிடப்பது போலவும், தன் நெஞ்சின் ஒரு பகுதி அறுபட்டு விழுந்துவிட்டது போலவும் உணர்ந்து, ஹெலன் கதறித் துடித்தார்.
அன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஹெலன் கெல்லரை ஒரு மாபெரும் சாதனையாளராகவும், உடல் ஊனத்தை வென்ற உன்னதச் சின்னமாகவும் பார்த்து வியந்தது; அவருடைய சாதனைகளைப் போற்றிப் புகழ்ந்தது. மேடைகளில் அவர் ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான உரைகளும், அவர் எழுதிய நூல்களும், லட்சக்கணக்கான சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கொடுத்தன.
பல மனிதர்களின் வாழ்வில் விளக்கேற்றிய ஹெலன் கெல்லர் என்கிற அந்த மாபெரும் வெளிச்சத்திற்குக் காரணமாக விளங்கிய மூல ஒளி, சர்வ நிச்சயமாக ஆனி சல்லிவன் மட்டுமே. இதை ஏறக்குறைய அனைவரும் அறிந்திருந்தனர். உலகமே ஹெலனைக் கொண்டாடியபோது, அந்தப் புகழ் வெளிச்சத்தில் படாமல், ஆனி சல்லிவன் எப்போதும் தன்னை மறைத்துக்கொண்டு, ஹெலனின் நிழலாகவும், கவசமாகவும் மட்டுமே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகத்தான தியாகச் சுடர், முற்றிலுமாக மறைந்துவிட்ட நிலையில், தன்னை யாருமற்ற அனாதையாக உணர்ந்தார் ஹெலன்.
பார்வை மற்றும் கேட்கும் திறன் இல்லாத ஒரு மனிதருக்கு, ஒரு நம்பகமான வழிகாட்டி நிரந்தரமாக விலகுவது என்பது, ஈர்ப்பு விசையைப் பூமி முற்றிலுமாக இழப்பதற்கு ஒப்பாகும். இருண்ட ஓர் உலகத்தில் உறுதியுடன் பயணிப்பதற்குத் தனக்குத் திசைகாட்டிய துருவ நட்சத்திரம் மறைந்துபோனதே என்கிற தவிப்பு, ஒவ்வொரு நாளும் அவருடைய உறக்கத்தைக் கெடுத்தது. ஆனி சல்லிவனின் மறைவுக்குப் பிறகு, ஹெலனைச் சுற்றியிருந்த உலகம் எப்படி மாறியிருந்தது தெரியுமா?
அந்த முடிவில்லா இருளில், மற்றவர்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஒரு தனிமைப் பெருவெளி அவருக்குள் விரிந்தது. காலையில் துயில் எழும்போதோ அல்லது இரவில் உறங்கச் செல்லும்போதோ, கைவிரல்களைப் பிடித்து வெளி உலகச் செய்திகளைச் சொன்ன அந்தப் பரிச்சயமான கைகள் இல்லாமல் போயின. காது கேளாத நிலையை எதிர்கொள்ள, அடுத்தவர் பேசும் வார்த்தைகளின் அதிர்வுகளைக் கடத்திய அந்தக் கைகள் நிரந்தரமாக விலகின. உலகுடன் இணைத்துக்கொள்ள உதவிய அந்தத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டதும், மரணத்துக்கு ஒப்பான ஒரு மௌனம் அவரைச் சூழ்ந்துகொண்டது.
யாரோ ஒருவர் பேசும்போது, அந்தச் செய்தியைத் தன் உள்ளங்கையில் உணர்த்த, இனி எப்போதும் ஆனி சல்லிவன் இருக்கமாட்டார் என்கிற உண்மை ஹெலனின் இதயத்தைக் கனக்கச் செய்தது. இந்த உலகத்தின் ஒலிகள் அனைத்தும் ஹெலனை விட்டு என்றைக்கோ விலகிவிட்டன; ஆனால் இன்று, அந்த ஒலிகளைத் தனக்கு அறிமுகப்படுத்திய ஒளியும் மறைந்துவிட்டதால், தன் சொந்த மொழியை மறந்துபோன ஒரு தீவுவாசியைப்போல் தனித்து நின்றார் ஹெலன்.
ஆனி சல்லிவனின் பிரிவால் ஏற்பட்ட இந்தத் தனிமை வெறும் உளவியல் சார்ந்ததோ, உடல் சார்ந்ததோ அல்ல. அது ஆன்மாவைச் சுட்டெரித்த ஓர் ஆறாத ஏக்கம். நிரந்தர வடு. ஆனி சல்லிவன் இருந்தபோது, உடல் ரீதியான துன்பங்கள் எவை வந்தாலும், அவற்றை எதிர்கொள்ள ஒரு பலமான கேடயம் ஹெலனிடம் இருந்தது. ‘நான் தனி ஆள் இல்லை, ஆனி என்னுடன் இருக்கிறார்’ என்கிற அந்த ஒற்றை எண்ணம் மட்டும் போதும், எந்த மலையையும் ஹெலனால் புரட்டிப்போட முடிந்தது. ஆனால், அந்தப் பாதுகாப்புக் கேடயம் மறைந்துபோனது அவருக்குச் சொல்லொன்னா துயரத்தை ஏற்படுத்தியது.
கண்பார்வைக் கோளாறுடன், தனது சொந்த ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் ஹெலனுக்காகவே பல வருடங்கள் ஆனி சல்லிவன் உழைத்தார். அனைத்து வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு ஹெலனின் தேவைகளை நிறைவேற்றினார். கடமையே கண்ணாக இருந்து அவருக்காகவே வாழ்ந்தார். தன்னுடைய உடல்நலம் குன்றிய நிலையிலும் ஹெலனின் கைகளைப் பற்றிக்கொண்டு உலகம் முழுதும் பயணித்த அந்தத் தியாகத்தின் ஆழத்தை, ஆனி பிரிந்த பின்னர்தான் ஹெலன் முழுவதுமாகப் புரிந்துகொண்டார்.
தான் எதற்காக இவ்வளவு காலம் போராடினோமோ, அப்போராட்டத்தின் சுவாசமாக விளங்கியதே அந்தத் தியாகம்தான் என்பதை ஹெலன் உணர்ந்தபோது, அவருடைய நெஞ்சம் விம்மி அழுதது. ஆனி சல்லிவனுடன் ஒன்றாக இருந்த நினைவுகள் ஒவ்வொன்றும் முட்களைப்போல் அவரது இதயத்தைக் கீறி, ரத்தமில்லா காயத்தை உண்டாக்கின.
நண்பர்களும், உதவியாளர்களும் ஹெலனை தேற்ற முயன்றனர். தங்களால் முடிந்தளவில் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்கள். பாலி தாம்சன் போன்றோர் அவருக்குத் துணையாக இருக்க முயன்ற போதிலும், ஆனி சல்லிவன் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. ஓர் ஆசானுக்கும் மாணவிக்குமான எளிய உறவு என்பதைத் தாண்டி, அவர்கள் இருவரும் ஒரே ஆன்மாவின் இரு பகுதிகளாக, பிரிக்க முடியாத பந்தமாக வாழ்ந்திருந்தனர்.
ஆனி இல்லாத ஒவ்வொரு நொடியும் ஹெலனுக்கு ஒரு நீண்ட யுத்தமாக மாறியது. ஆனி சல்லிவனுடனான பழைய நினைவுகள் அலை அலையாக வந்து அவருடைய நெஞ்சத்தில் மோதின. தன் கரங்களால் ஆனி சல்லிவனின் முகத்தை முதல்முறையாகத் தடவிப் பார்த்த அந்த இளமைக்கால நினைவு, முதல்முறையாக வாட்டர் என்கிற வார்த்தையைத் தன் உள்ளங்கையில் எழுதிய அந்தப் பால்யகாலத் தருணம் — அனைத்தும் ஹெலனின் மனதில் ஓடி மறைந்தன.
கண்பார்வை பறிபோன பிறகு தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து வைத்த தேவதை மௌனத்தில் ஆழ்ந்துவிட்டதால் ஏற்பட்ட சோகம், ஹெலனைச் சுற்றியிருந்த காற்றையும் கனமானதாக மாற்றியது. இருப்பினும், ஹெலன் கெல்லர் சோகத்தால் முடங்கிப்போகக்கூடியவர் அல்ல. ஆனி சல்லிவன் அவருக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் என்னவென்றால், ‘வாழ்க்கையின் சவால்களைக் கண்டு பின்வாங்கக் கூடாது; மாறாக அவற்றை எத்தகைய சூழ்நிலையிலும் எதிர்த்து நிற்கவேண்டும்’ என்பதுதான்.
தனிமை தந்த வலியைத் தாங்கிக்கொண்டு, அந்தத் துயரத்தையே ஒரு சக்தியாக மாற்ற ஹெலன் முயன்றார். கண்பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மக்களின் நலனுக்கான உழைப்பு மட்டுமே இனி தன் வாழ்வின் எஞ்சிய கடமை என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். ஆனி சல்லிவன் மறைந்திருக்கலாம்; ஆனால் அவர் விதைத்த தைரியமும் அன்பும் ஹெலனின் ஒவ்வொரு அணுவிலும் உயிர்ப்புடன் இருந்தன.
அந்தத் தனிமையின் பேரிடியிலும், ஹெலன் தன் ஆன்மாவின் பலத்தை முழுமையாகத் திரட்டிக்கொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார். ஆனி இல்லாத உலகத்தில் அடியெடுத்து வைக்கச் சிறிது பயந்தாலும், அவர் தனக்குள் விட்டுச் சென்ற அந்த அழியாத வெளிச்சத்தைக்கொண்டு, தனது எஞ்சிய பாதையை ஒளிரச் செய்ய அவர் உறுதிபூண்டு, ஃபீனிக்ஸ் பறவைபோல் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
(தொடரும்)

