Skip to content
Home » ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

பனி உறையும் அரசன் சம்பவத்திற்குப் பிறகு வந்த கோடைக் காலம் அது. அவ்விடுமுறைக்கு ஹெலன் குடும்பம் எங்கும் செல்லவில்லை. அலபாமாவிலேயே கழித்தனர். தோட்டத்தின் மூலையில் இருந்த வீட்டைத் திராட்சைக் கொடிகள் மூடியிருந்தது. அவ்வீடு கஸ்தூரியின் மணத்தால் கமகமத்தது. அதில் சூரிய ஒளிபட்டுத் தங்கம்போல் ஜொலித்தது. சிவப்பு, பொன்னிற இலைகள் நிலமெங்கும் இறைந்து கிடந்தன. இப்படியான புறச்சூழல் பனி உறையும் சம்பவத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ளியது.

ஆனால் எழுத்து என்று பேனா தொட்டால் பயம் வந்துவிடும். எதை எழுதினாலும் தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என்ற உச்சபட்ச எச்சரிக்கையோடு எழுதினார். சொந்தக் கதையாக இருந்தாலும் சொந்தப் படைப்பாக இல்லாமல் போய்விடும் என்ற பயம் அது. ஸல்லிவனைத் தவிர வேறு யாருக்கும் ஹெலனின் இந்தப் பயம் புரியாது.

எழுதுவதற்கு எந்தக் கரு உதித்தாலும் அது தன்னுடையதுதானா என்று ஸல்லிவனிடம் குறிப்பு எழுதிக்காட்டுவார். ஆம் என்று உறுதிசெய்துகொண்ட பிறகே விரிவாக எழுதினார். விரிவாக எழுதினாலும் இந்தப் பத்தியை ஏற்கெனவே யாராவது எழுதியிருப்பார்களா என்ற சிந்தனை வந்துவிடும். அந்தப் பயம் அவர் கையைக் கட்டிப்போடும். மேற்கொண்டு எழுதவிடாமல் தடுக்கும். அன்றைய தின எழுத்தை அதோடு மூட்டைக் கட்டிவிடுவார்.

மனம் அமைதியின்றி அலைபாயும். ஸல்லிவன்தான் ஒரே ஆறுதல். உடனே அந்த மனநிலையிலிருந்து மீட்கப் போராடுவார். மனதின் ஆறாத வடுவை ஆற்றிக்கொள்ளத்தான் தன் வரலாற்றை எழுதத்தொடங்கினார். யூத் கம்பேனியன் என்ற பெயரில் சுருக்கமாக ஓர் இதழுக்கு எழுத ஒப்புக்கொண்டார். அப்போது ஹெலனுக்குப் பன்னிரண்டுவயது. பழைய களங்கத்திலிருந்து மீண்டுவருவதற்காக இதைச் செய்தார்.

முடியும் என்று தூண்டுதலாக இருந்தவர் ஸல்லிவன். எதிர்காலத்தில் எழுத்தாளராகலாம் என்ற முடிவு. அல்லது தோற்றுவிடக்கூடாது என்ற பயம். ஏதோ ஒன்று தன் வரலாற்றிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது.

ஒத்துக்கொண்டாலும் தன் கதையை எழுதத் துளியும் தைரியம் இல்லை ஹெலனுக்கு. பதற்றமாக இருந்தார். ஆனால் எழுத வேண்டும் என்ற தீர்மானத்தில் தெளிவாக இருந்தார். ஹெலனின் மனவலிமையை ஸல்லிவன் மீட்டுக்கொடுத்தார். ஹெலனின் பழைய புலன்களை அவரிடமே ஒப்படைத்து எழுத வைத்தார். உலகம் முழுவதும் ஹெலனின் என் கதை பேசுபொருளானது. நாம் இப்போது வாசித்துக் கொண்டிருப்பதும் அதை அடிநாதமாகக் கொண்டதுதான். நம்பிக்கை இன்றிச் சோம்பியிருந்த மனங்களை ஹெலனின் கதை எழுந்து நிற்க வைத்தது. பதின்மப் பருவமே தொடங்காத காலத்தில்தான் இவ்வளவு பெரிய சாதனையைச் செய்து முடித்தார்.

அடுத்து வாசிப்பு. இதைப் படித்தால் இந்த நன்மை என்று எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாசித்தார். கிரேக்க வரலாறு, ரோம், அமெரிக்க வரலாறு என்று எந்த மேடான புத்தகம் கிடைத்தாலும் படித்துவிடுவார். ஒரு முறை ஃபிரெஞ்சு இலக்கணப் புத்தகம் கிடைத்தது. அதற்கு முன்பாக ஓரளவு பிரெஞ்சு மொழி கற்று வைத்திருந்தார். எனவே அதை வாசிக்கத் தொடங்கிவிட்டார். புதிய வார்த்தைகள் கிடைத்தால் அதை ஸல்லிவனிடம் சொல்வதைவிட்டு அவ்வார்த்தையை வைத்து அவரே எதையாவது எழுதிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

விதிமுறைகள், நுட்பங்கள் பற்றி எல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. புத்தகத்திலுள்ள அனைத்தையும் வாசித்தார். அப்படிச் செய்ததில் அதிலுள்ள ஒலி வடிவம் புரிந்தது. பிறகு யாருடைய உதவியும் இல்லாமல் ஃபிரெஞ்சு உச்சரிப்பில் வல்லமை பெறத் தொடர்ந்து முயற்சி செய்தார். இந்த அனுபவத்தால் ஃபிரெஞ்சு புத்தகங்களின் சில முக்கியப் பகுதிகளைத் தானே அனுபவித்துப் படிக்கும் அளவிற்குத் தேறிவிட்டார். அப்படிச் செய்ததில் மொழி கற்றது ஒருபுறம் எனில் பேச்சுத் திறன் வளர்ந்தது மறுபுறம்.

பேச்சுத் திறனை மேம்படுத்த அதிக நேரம் ஒதுக்கினார். எந்நேரமும் வாய்விட்டு எதையாவது ஸல்லிவனிடம் வாசித்துக்காட்டினார். பிடித்த கவிஞர்களின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பித்தார். எதைச் செய்தாலும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறிக்காமல் விடமாட்டார். கவிதை ஒப்பிப்பதன் மூலம் தன் ஞாபகத் திறனைப் பட்டைதீட்டிக்கொண்டார். உச்சரிப்பைச் சரிசெய்து கொள்வார். தவறாக உச்சரித்துவிட்டால் ஸல்லிவன்தான் விட்டுவிடுவாரா என்ன? இயந்திரம்போல் வாசிக்காமல் குரலில் ஏற்ற இறக்கங்கள் வெளிப்படுத்த ஸல்லிவன் உதவினார். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டப் பாடத்தைப் படித்து முடித்துவிடுவார்.

அப்போது பென்சில்வேனியாவில் ஹல்டன் நகரில் வில்லியம் வேட் குடும்பத்துடன் தங்கியிருந்தனர். அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்த அய்ரான்ஸ் என்பவர் லத்தீன் மொழியில் புலமை பெற்றவர். அவரிடம் ஹெலனுக்கு லத்தீன் மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். சொல்லிக்கொடுக்கும் தயாள மனம் படைத்த அய்ரான்ஸ் சரி என்றார். அவருடைய பரந்த அனுபவமும் இனியச் சுபாவமும் ஹெலன் இலத்தீன் இலக்கணம் செம்மையாகக் கற்க வழி கோலியது.

கணிதம் கற்கவும் அதே மனிதர் உதவி செய்தார். ஹெலனும் அவரும் சேர்ந்து டென்னிஸனின் இன்-மெமோரியத்தை வாசித்தனர். அதற்கு முன் ஹெலன் பல புத்தகங்களை வாசித்திருக்கிறார். ஆனால் அதன் நிறை குறைகளை ஆராய்ந்து பார்க்கத் தெரியாது. அய்ரான்ஸ் உடனான வாசிப்பு அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தது. நூலாசிரியரைப் புரிந்துகொள்வதற்கும், தோழமையோடு அவர் கரத்தைப் பற்றுவதற்கும் தெரிந்துகொண்டார்.

இலத்தீன் இலக்கணம் படிப்பதற்கு முதலில் ஹெலனுக்கு ஆர்வம் குறைவாக இருந்தது. கற்றுக்கொண்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் தெரிந்துகொண்டார். அதன்பிறகு அதன் வேர்ச்சொல், பெயர்ச்சொல், ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் எனப் பிரித்துப் படிப்பது காலவிரயம் என நினைத்தார். ஏனெனில் பூனையைப் பூனை என்று சொன்னால் போதும். முதுகெலும்பு உள்ளது, நான்கு கால் பிராணி, பாலூட்டி, பதுங்கிச் செல்வது என்று வகைவகையாகப் பிரித்து அடுக்க ஆரம்பித்ததால் ஆரம்பத்தில் சற்று ஆர்வம் குறைந்திருந்தார்.

ஊன்றிப் படிக்க ஆரம்பித்ததும் ஆர்வம் அதிகரித்தது. லத்தின் மொழியின் அழகு அவரை ஆனந்தப்படுத்தியது. அடிக்கடி எடுத்துவைத்து வாசித்து மகிழ்ந்தார். வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியமாக்கினார். பொழுதுபோக்காகச் செய்தாலும் ரசனையோடு அனுபவித்துச் செய்தார்.

புதிதாகக் கற்கும் மொழி ஆயிரமாயிரம் நுண்ணுணர்வுகளை ஊட்டின. கற்பனையில் மின்னல்கள் பளிச்சிட்டன. மனதில் உதித்த சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்தார். அதற்கு மேலும் மெருகூட்ட நாளெல்லாம் சிந்திப்பார். புதுப்புது வார்த்தைகளை அய்ரான்ஸிடமிருந்து கற்றுக்கொள்ளக் காத்திருந்தார்.

அய்ரான்ஸ் சொல்லிக்கொடுக்கும்போது அருகிலேயே ஸல்லிவனும் அமர்ந்துகொள்வார். ஸல்லிவன் அத்தனையும் ஹெலன் கையில் எழுதிக்காட்டாமல் லத்தீன் கற்கவில்லை. இவ்வளவு சிரமப்பட்டு எதற்காக லத்தீன் கற்க வேண்டும்? காரணம் இருக்கிறது.

மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக லத்தீன் அவசியம். நுழைவுத் தேர்வில் லத்தீன் மொழியும் உண்டு. அதில் தேறினால்தான் கல்லூரியில் இடம் கிடைக்கும். கல்லூரிக் கனவை ஹெலன் பெரிதாகக் கண்டுவந்தார். எனவே எதையும் கற்கத் தயங்கவில்லை.

இலத்தீனை நல்லபடியாகக் கற்றார். கற்றது போதுமானது என்று தோன்றியபோது அலபாமா திரும்பினார்கள். திரும்பியதும் சராசரி வாழ்க்கைத் தொடங்கிவிடும். ஏனெனில் வெளியே சென்றால் ஹெலனின் தினசரி வீட்டுப்பாடங்கள் கெட்டுவிடும். அதைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இந்த முறை ஸீசர் எழுதிய காலிக் வார் என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார் ஹெலன்.

(தொடரும்)

பகிர:
ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன்

ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர். தொடர்புக்கு sridevikannan20@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *