Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது

ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது

ரொம்ப ரொம்பத் தந்திரமானது

இம்முறை கொல்லப்பட்டது ஒரு பெண். ரெங்கம்பட்டிலிருந்து புலிபோனு செல்லும் சாலையில் ரகிமன்கோனார் என்ற நீரோடைக்குச் செல்ல ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது. அந்தப் பாதையின் வளைவில் ஒரு பெண் மாயமாக மறைந்தார். அவர் பெயர் வெங்கடம்மா.

கால்நடைகளை மேய்க்கச் சென்ற தன் கணவனுக்கு மதிய உணவு எடுத்துச் சென்றாள் வெங்கடம்மா. ரகிமன்கோனார் நீரோடைக் கரையில் ஓர் அரச மரத்தின் அடியில் வெங்கடம்மாவும் அவளது கணவரும் சந்திப்பது வழக்கம். மழைக் காலங்களில் ரகிமன்கோனார் நீரோடையில் செல்லும் தண்ணீர் சுமார் 30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழும்.

வெங்கடம்மாவோ அன்று வந்தபாடு இல்லை. அவளது கணவனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. வெங்கடம்மாவின் மீது அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. மதிய வேளையும் முடிந்துவிட்டது. இன்னும் வெங்கடம்மாவைக் காணவில்லை. பசி அதிகமாகவே அவனது கோபமும் எகிறியது. ‘அவ வரட்டும், அப்புறம் இருக்கு அந்தச் சோம்பேறிக் கழுதைக்கு. அவளை நாலு சாத்து சாத்துனாத்தான் அடுத்த தடவ ஒழுங்கா நேரத்துக்கு வருவா’ என்று மனதில் வசைபாடியபடியே வெங்கடம்மாவின் கணவன் அவள் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான்.

ஆனான் அவன் எண்ணம் ஈடேறவில்லை. ஏனென்றால் அதற்குப் பிறகு அவன் வெங்கடம்மாவைப் பார்க்கவேயில்லை. கோபம் கொப்பளிக்க மந்தைகளை விரட்டிக்கொண்டு வேகமாக வீட்டுக்குத் திரும்பினான். அங்கும் ஏமாற்றம் காத்திருந்தது. உணவும் இல்லை வெங்கடம்மாவும் இல்லை. அவனுடைய சிறிய மகள், ‘அப்பா, அம்மா மதியமே சட்டில சோறு எடுத்துட்டு உன்னப் பாக்க போச்சு’ என்று தெரிவித்தாள்.

பதறிப் போனவன் இன்னும் சிலரைக் கூட்டிக்கொண்டு வெங்கடம்மாவைத் தேடிப் புறப்பட்டான். வெங்கடம்மாவைத் தேடிச் சென்றவர்களுக்கு ரகிமன்கோனருக்குச் செல்லும் ஒத்தையடிப் பாதையில் அரச மரத்திலிருந்து சுமார் அரை மைலுக்கு முன்னர் உடைந்து போன சட்டி ஒன்று கிடைத்தது. ஆனால் வெங்கடம்மாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் ஆண்டர்சன், நாகப்பட்லா காட்டுப் பங்களாவிற்கு வந்தார். அவர் அப்பொழுது வேட்டையாடுவதற்காக வரவில்லை என்றாலும் தன்னுடன் துப்பாக்கியைக் கொண்டு வந்திருந்தார்.

பெங்களூரில் ஆண்டர்சனின் நண்பர் தேவ சுந்தரம் கக்குவான் இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக கக்குவான் இருமல் குழந்தைகளையே பாதிக்கும். பெரியவர்களை அவ்வளவாக பாதிக்காது. ஆனால் தேவ சுந்தரம் அதற்கு விதிவிலக்கு. அவரது சிறிய மகன் மூலமாக கக்குவான் இருமல் தொற்றிக்கொண்டது. தேவ சுந்தரத்தைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றார் ஆண்டர்சன். சோஃபாவில் அமர்ந்திருந்த தேவ சுந்தரம் ஆண்டர்சனைப் பார்த்ததும் இருமலுக்கு நடுவே தடுமாறியபடி ஆண்டர்சனைப் பார்த்து வெளியே போ, வீட்டிற்குள் வராதே, உனக்கும் ஒட்டிக்கொள்ளும் என்று கைகளால் செய்கை செய்தபடியே விரட்டினார். தேவ சுந்தரத்தின் மனைவி, பல வைத்தியங்கள் பார்த்தும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் தன் கணவனுக்கு இருமல் நிக்கவில்லை என்று ஆண்டர்சனிடம் கவலையுடன் தெரிவித்தாள்.

ஆண்டர்சனுக்கு கக்குவான் இருமலிலிருந்து மீள தீர்வு தெரியும். சில வருடங்களுக்கு முன்னர் அவரது மகனும் மகளும் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டபோது, ஆண்டர்சனின் நர்சிங் தெரிந்த மனைவி, வறண்ட, வெப்ப சீதோஷ்ணப் பகுதிக்குச் சென்றால் கக்குவான் இருமல் நின்றுவிடும் என்று தெரிவித்தாள். அதன்படி ஆண்டர்சனும் வேட்டையாட நாகப்பட்லாவிற்குச் செல்லும்போது தன் குழந்தைகளையும் கூட்டிச் சென்றார். என்ன ஆச்சர்யம், நாகப்பட்லா வந்த இரு நாட்களில் குழந்தைகளின் இருமல் முற்றிலுமாக நின்றுவிட்டது.

இந்தச் சம்பவத்தை ஆண்டர்சன் தேவ சுந்தரத்திடம் தெரிவிக்க, வனப் பிரியரான தேவ சுந்தரம், ‘இன்னிக்கே கிளம்பலாம் வா’ என்று வலியுறுத்தினார். இப்படியாக ஆண்டர்சனும், தேவ சுந்தரமும் பெங்களூரிலிருந்து ஃபோர்டு காரில் நாகப்பட்லா வந்து சேர்ந்தனர். வரும் வழியில் சித்தூரைத் தாண்டிய உடனேயே தேவ சுந்தரத்தின் இருமல் குறைந்துவிட்டது.

நாகப்பட்லா பங்களாவில் இரவில் லாந்தர் விளக்கில் உணவருந்தியபடியே வனப் பகுதியின் நிகழ்வுகளை பங்களா காப்பாளனிடம் விசாரித்தார் ஆண்டர்சன். அந்தக் காப்பாளன் கடந்த சில மாதங்களாகச் சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘தீயது’ செய்யும் அட்டூழியங்களைப் பற்றி விவரித்தான். இதுவரை தீயது ஐந்து பேரைக் கொன்று விட்டதாகவும், அது அவர்களை எப்படிக் கொன்றது என்றும் உணர்ச்சித் ததும்பக் கூறினான்.

பங்களா காப்பாளன், தான் கேள்விப்பட்ட சங்கதிகளை, வதந்திகளோடு சேர்த்து, யூகத்தின் அடிப்படையிலும், மூட நம்பிக்கைகளின் பின்னணியிலும், தன்னுடைய மாந்திரீகப் பின்புலத்தையும் வைத்து ‘தீயதை’ பற்றிச் சுவாரஸ்யமான, கற்பனையை விஞ்சும் சம்பவங்களாக ஆண்டர்சனிடமும் தேவ சுந்தரத்திடமும் சிலிர்ப்பூட்டும் விதத்தில் தெரிவித்தான். அவன் அந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பங்களாவிலிருந்து சற்றுத் தொலைவில் சிறுத்தை ஒன்று ரம்பம் மரத்தை அறுக்கும் சத்தத்தைப் போலவே சத்தத்தை எழுப்பி உறுமியபடி அப்பகுதியைக் கடந்து சென்றது. அந்தச் சத்தம் ஆண்டர்சனுக்கும் தேவ சுந்தரத்துக்கும் சிலிர்ப்பூட்டுவதாக அமைந்தது.

அவர்கள் இருவரும் காட்டுப் பங்களாவில் படுத்திருந்தனர். ஆனால் காற்று வீசாததால் உள்ளே புழுக்கமாக இருந்தது. போதாக்குறைக்கு எலிகளின் அட்டகாசம் வேறு. அவை பங்களாவின் ஓலைக் கூரையின் (புல்லால் வேயப்பட்ட) மேல் ஒன்றையொன்று துரத்தியபடியே கீச்சிட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று ஓர் எலி பயத்தினாலும் வலியினாலும் பெரிதாகக் கீச்சிட்டது. அதன் அலறல் ஒலி பரிதாபகரமாகவும் இருந்தது.

தேவ், ஆண்டர்சனிடம் ‘நீ அந்த எலி கத்துவதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டார். ‘இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்!’ என்ற ஆண்டர்சன், ‘அந்த எலியைப் பாம்பு கொத்திப் பிடிச்சிடுச்சு. தற்பொழுது பாம்பு எலியை முழுங்கிக் கொண்டிருக்கிறது. எலியைப் பிடிக்க அந்தப் பாம்பு கூரை மீது ஏறி வந்திருக்கிறது’ என்றார்.

ஆண்டர்சன் இந்தத் தகவலைக் கூறியவுடன் தேவ் தன் கட்டிலிலிருந்து பதறியடித்துக்கொண்டு எழுந்தார். கட்டிலை வெளியே வராண்டாவில் போட்டுப் படுத்துக் கொள்ளலாம் என்ற யோசனை தெரிவித்தார் தேவ். அந்த யோசனை ஆண்டர்சனுக்கு சரியாகப்பட்டது. வராண்டா குளுமையாக இருக்கும், மேலும் வராண்டாவின் கூரை துத்தநாகம் கொண்டு வேயப்பட்டிருந்தது. எலிகள் அக்கூரையில் குதிக்காது. அதனால் பாம்பு அவற்றைப் பின் தொடராது. ஆண்டர்சனும், தேவ்வும் வெளியே வராண்டாவில் படுத்தனர். பின்பு நன்கு உறங்கினர்.

பொழுது புலர்வதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக தாற்காலிகமான வெளிச்சம் தோன்றியது. அதைக் கண்டு காட்டுக் கோழிகள் கூவ ஆரம்பித்தன. பின்னர் சற்று நேரத்திற்கு இருட்டு. அதன் பின்னர் கிழக்கில் அடிவானத்தில் சூரியன் உதித்தது. அந்த வெளிச்சத்தில் வனம் படர்ந்த மலைகள் எல்லாம் இளஞ் சிவப்பு, செந்தூரம், சிவப்பு, கரு நீலம், நீலம் என எல்லாம் கலந்து மயில் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. கூடவே மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்களும் சேர்ந்துகொண்டன. பின்னர் தங்க நிற உருண்டையாக தோற்றமளித்த கதிரவன், இரவில் காடுகள் உருவாக்கிய மூடுபனியை நீக்கிவிட்டு மேலெழுந்தான்.

காட்டுச் சேவல்கள் கூவுவதைக் கேட்டு பங்களாவிற்குத் தெற்கே ஒரு மைல் தொலைவில் இருந்த இரங்கம்பட்டு கிராமத்திலிருந்த நாட்டுச் சேவல்களும் கூவத் தொடங்கின. மயில்களும் அகவியது. காட்டில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மான்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்தும் விதமாக சத்தம் எழுப்பியது. சென்ற இரவு போன சிறுத்தை திரும்பி வந்து கொண்டிருக்கலாம். அதன் காரணமாகக் கூட புள்ளி மான்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பியிருக்கலாம்.

ஆண்டர்சனும் தேவும் பெங்களூரிலிருந்து கொண்டு வந்திருந்த சப்பாத்தியைப் பன்றி இறைச்சியுடன் உண்டனர். பின்னர் தேவ் அருமையான காபி தயாரிக்கவே, அதை இருவரும் பருகிவிட்டு வனத்திற்குள் சென்றனர். அவர்கள் சென்ற இடம் வெங்கடம்மா மாயமான இடத்தை நோக்கி. ரகிமன்கோனாரில் அரசமரத்தின் அருகாமையில் சென்று பார்வையிட்டனர். சென்ற இரவு எந்த விலங்கு அந்த இடத்தைக் கடந்து சென்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கீழே தரையைக் கவனித்தனர். பின்னர் நீரோடையின் மண் கரையையும் பார்வையிட்டனர்.

கல்யாணி ஆற்றங்கரையில் சிறுத்தை நடந்து சென்றதற்கான சுவடு தெரிந்தது. அந்தச் சுவட்டை வைத்து அந்தப் பக்கமாகச் சென்றது ஒரு பெரிய ஆண் சிறுத்தை என்று தெரிந்து கொண்டனர். அங்கிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் சென்று பார்த்தபோது ஒரு நாவல் மரத்தின் அடியில் ஒரு பெண் கரடி தன் இரு குட்டிகளுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்தக் குட்டிக் கரடிகளின் கால் சுவடுகள் மண்ணில் தனித்துவமாகத் தெரிந்தது. கடா மான், புள்ளி மான், காட்டுப் பன்றி ஆகியவையும் சென்ற இரவு அங்கு இருந்ததற்கான அடையாளமாகத் தங்கள் கால் சுவடுகளை விட்டுச் சென்றிருந்தன.

ஆனால் ஆண்டர்சன் ரொம்பவும் ஆவலாக எதிர்பார்த்து வந்தது புலியின் சுவட்டைத்தான். ஆனால் புலியின் சுவடு அங்கு இருக்கவில்லை. ஆண்டர்சனும், தேவும் பங்களாவிற்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து தெற்கு நோக்கி ரெங்கம்பட்டிற்குச் சென்றனர். அங்கு மக்கள் ‘தீயதை’ பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆண்டர்சனும், தேவும் ஆவலாக இருந்தனர். ரெங்கம்பட் கிராம பட்டேலும், முன்சீஃப்பும் ஆண்டர்சனையும், தேவ்வையும் வரவேற்று உபசரித்தனர். கிராம மக்கள் ஆண்டர்சனையும், தேவையும் சூழ்ந்து கொண்டனர்.

அப்பொழுது முதுகு வளைந்த, கைத்தடியுடன் நின்று கொண்டிருந்த பழுத்த கிழவன் ஒருவன் தன்னுடைய தழுதழுத்த குரலில் சொன்னான்.  ‘துரை, அந்த ‘தீயது’ காட்ல தீர்க்கமா இருக்கு. இதுவரைக்கும் அஞ்சு பேரக் கொன்னுருக்கு. அது உங்க துப்பாக்கிக்கு பலியாகாது. அது உங்க முன்னாடி வந்து நின்னு, உங்களுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்காது. அது ரொம்பத் தந்திரமானது. ரொம்ப ரொம்பத் தந்திரமானது. அது உங்க முன்னாடி வந்தாலும், உங்க தோட்டாவெல்லாம் அதுகிட்ட பலிக்காது. நீங்களெல்லாம் வெளிநாட்டுக்காரங்க, எங்க ஆளுங்க இல்லை. அது காட்டுல பதுங்கியிருக்கும். புதருல, பூமில பொந்துல ஒளிஞ்சிருக்கும். அப்படி இல்லாட்டி உருவத்தில வண்டு மாதிரி சின்னதா மாறி, பெரிய மரத்து மேல ஏறி உச்சிக்குப் போய், அங்கிருந்து எங்கள ஆணையோ பெண்ணையோ, குழந்தையையோ பார்க்கும். பிறகு இமைக்குற நொடியில தன்னுடைய உருவத்தையும் அளவையும் மாத்திக்கும். வண்டு மாதிரி இருந்தது அசுரனா மாறிடும். அப்பாவிகளைப் பிடிச்சு அடையாளம் இல்லாம தின்னுடும். இது இப்படியேதான் போயிட்டு இருக்கும். இல்லாட்டி நாங்களெல்லாம் இந்தச் சபிக்கப்பட்ட காட்டை விட்டுப் போய்டனும், திரும்பி வரக்கூடாது.’

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *