Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

ஆட்கொல்லி விலங்கு #13 – நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

நடுக்காட்டில் நள்ளிரவு வாசம்

புலியால் தாக்குதலுக்கு உள்ளான மூங்கில் வெட்டியிடம், தங்களை அந்தத் தாக்குதல் நடந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் ஆண்டர்சன். அவர் கூறியதைக் கேட்டதும் அந்த மூங்கில் வெட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘என்னது அந்தப் பயங்கரமான இடத்திற்கு மறுபடியும் போவதா?’ என்று அதிர்ந்தான். போங்க துரை நீங்களும் உங்கள் யோசனையும் என்று அவன் வர மறுத்ததுடன் வசை பொழிந்தான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் அந்த ஆபத்திலிருந்து உயிர் தப்பி வந்ததே பெரிய விஷயம்.

ஆனால் ஆண்டர்சன் மூங்கில் வெட்டியை விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி அவனைச் சம்மதிக்க வைத்துவிட்டார். ஐந்து பேர் காணாமல் போனதற்கு, கிராம மக்கள் தங்களது அறியாமையால் ஏதேதோ அமானுஷ்யமான காரணங்களைச் சொல்லி வருகிறார்கள். இதில் அமானுஷ்யம் ஏதும் இல்லை ஒரு புலிதான் காரணம் என்று நிரூபிப்பதற்கு ஆண்டர்சனுக்கு ஆதாரம் தேவைப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் அவருக்குப் புலியின் கால் சுவடுகள் கிடைக்கலாம். மேலும் மூங்கில் வெட்டி சொன்னது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளவும் முடியும். எனவேதான் ஆண்டர்சன் மூங்கில் வெட்டியைக் கட்டாயப்படுத்தி புலி தாக்கிய இடத்திற்குக் கூட்டிக்கொண்டுப் போக வைத்தார்.

அவர்கள் கிளம்பும் சமயம் மதியம் மணி 3:45. மூவரும் புலிபோனுவிற்குச் செல்லும் சாலையில் வேகமாக நடந்து சென்றனர். ‘Y’ வடிவச் சாலையின் வலது கிளையில் அவர்கள் முன்னேறி உம்பலமேரூவை நோக்கிச் சென்றனர். அவர்கள் கடந்து சென்ற மொத்த தூரம் சுமார் 9 மைல்கள். அவர்கள் தாக்குதல் நடைபெற்ற இடத்தை அடைந்தபோது மாலை மணி 6:30. இன்னும் சற்று நேரத்தில் இருட்ட ஆரம்பித்துவிடும். ஆனால் ஆண்டர்சனும், தேவ்வும் முன்னெச்சரிக்கையாக தங்களுடன் டார்ச் லைட்டுகளைக் கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால் நேரம் ஆக ஆக பனி பொழிய ஆரம்பித்துவிடும். கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்ட தேவ்வை பனிப் பொழிவு பாதிக்கும். அதைப்பற்றி ஆண்டர்சன், தேவ்விற்கு எச்சரிக்கை செய்தார். அதற்கு தேவ், ‘கக்குவான் இருமலா! யாருக்கு? கக்குவான் இருமல் எல்லாம் சரியாகி வெகு நாட்களாகி விட்டது’ என்றார்.

மூங்கில் வெட்டி ஆண்டர்சனையும் தேவ்வையும் தான் மூங்கில் வெட்டிய இடத்திற்குக் கூட்டிச் சென்றான். அங்கு தான் வேலை செய்து கொண்டிருந்தபோது மூங்கில் இலைகள் அசைந்ததையும், எப்படி அதன் பின்னாலிருந்து புலி வெளிப்பட்டது என்பதையும் விளக்கிக் கூறினான். மூங்கில் வெட்டி சுட்டிக் காட்டிய இடத்தை ஆராய்ந்ததில், வெளிச்சம் குறைவாக இருப்பினும், ஆண்டர்சனுக்கும், தேவ்விற்கும் புலியின் கால் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தது. சுவடுகளைப் பார்த்தபொழுது அது பெரிய புலியாகத் தோன்றவில்லை. வெளிச்சக் குறைபாடினாலும், அழுகிய மூங்கில் இலைகளின்மீது புலி நடந்து சென்றிருந்ததாலும் அந்தக் கால் சுவடுகள் ஆண் புலியினுடையதா அல்லது பெண் புலியினுடையதா என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த ஆதாரங்கள் ஆண்டர்சனுக்கு ஒரு சேர சந்தோஷத்தையும் திருப்தியையும் அளித்தது. இது நாள்வரை கிராம மக்களைப் பயமுறுத்தி வந்தது ஒரு அமானுஷ்யம் நிறைந்த விசித்திரமான ஜந்து இல்லை, அது ஒரு கூச்ச சுபாவம் கொண்ட தந்திரமான அதே சமயத்தில் யாருக்கும் மட்டுப்படாத பயந்தாங்கொள்ளிப் புலி என்பது உறுதியானது.

புலியைப் பிடிக்கத் தூண்டில் இரை எதுவும் அப்பொழுது அவர்களிடம் இல்லை. புலி வேட்டையாடிக் கொன்ற இரையும் அங்கு இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தால் நிறைய நீர் நிலைகள்தான் இருந்தன. நாகபட்லாவில் உள்ள பங்களாவிற்குச் செல்ல வேண்டும் என்றால் 12 மைல்கள் நடக்க வேண்டும். அதுவும் இருளில் நடக்க வேண்டும். பங்களாவிற்குச் செல்வதற்குள் டார்ச் லைட்டில் உள்ள வெளிச்சம் தீர்ந்து போய்விடும். எனவே ஏன் இரவை நடுக்காட்டிலேயே கழிக்கக் கூடாது என்று ஆண்டர்சனுக்கு விசித்திரமான யோசனை தோன்றியது.

இரவில் அவ்விடத்தில் தங்கினால் எதையாவது பார்க்கலாம், அல்லது ஏதேனும் சப்தத்தைக் கேட்கலாம். நாகபட்லா வனபங்களாவில் எலிகளுக்கும் பாம்புகளுக்கும் நடுவில் உறங்குவதற்குப் பதிலாக காட்டில் தங்குவது மேல் என்று ஆண்டர்சனும் முடிவெடுத்தார். ஆண்டர்சன் முடிவைக் கேட்டு மூங்கில் வெட்டி அதிர்ந்து போனான். ஆனால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காட்டில் அதுவும் இரவில் தன்னந்தனியே அவன் ஒருவனால் நடந்து வீட்டிற்குச் செல்ல முடியாது. எனவே அவனும் வேறு வழியின்றிக் காட்டிலேயே தங்க வேண்டியதாயிற்று.

எங்கு தங்குவது? அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் அடர்ந்த வனமாக இருந்தது. மூங்கில்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. இருளில் சுற்றும் முற்றும் ஒன்றும் தெரியாது. எனவே உம்பலமரூ குளத்தின் அருகே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று ஆண்டர்சன் தீர்மானித்தார்.

மூவரும் சற்றுத் தொலைவில் உள்ள உம்பலமேரூ குளத்திற்குச் சென்றனர். அவர்கள் குளத்தை அடையும்பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு மரத்தில் நடைமேடை கட்டுவதற்கோ அல்லது தரையில் தற்காலிகக் கூடாரம் அமைப்பதற்கோ போதுமான அவகாசம் இல்லை.

அருகில் நன்கு வளர்ந்த ஒரு ஆலமரம் இருந்தது. ஆலமரத்தின் கிளைகளில் வேர்கள் தோன்றும். இப்படி தோன்றும் வேர்கள் கீழ் நோக்கிச் செல்லும். இப்படி கீழ் நோக்கிச் செல்லும் வேர்கள் தரையைத் துளையிட்டுச் சென்று, அது தடிமனாகி மற்றொரு ஆலமரத்தின் தண்டாக உருவெடுக்கும். இப்படியாக, நாளடைவில் முதலில் தோன்றிய தண்டைத் தொடர்ந்து பல தண்டுகள் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றியுள்ள நிலத்தை ஆலமரம் ஆக்கிரமிக்கும்.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆலமரம் கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது. கல்கத்தா ஆலமரம், நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. கல்கத்தா ஆலமரம் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆலமரத்தினால் தாவரவியல் பூங்கா பிரபலமானது. கல்கத்தாவில் உள்ளது போலவே பெங்களூரிலிருந்து சுமார் 42 மைல்கள் தொலைவிலும், தாளி என்ற கிராமத்திலிருந்து சுமார் 2 மைல்கள் தூரத்திலும் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது.

அந்த ஆலமரத்தின் அடியில் ஒரு சிறிய கற்கோயில் இருந்தது. நாளடைவில் ஆலமரத்தின் வேர்கள் கோயிலின் நுழைவாயிலை மட்டும் விட்டு விட்டு அதன் சுவர்களை மூடிவிட்டன. அந்தக் கோயிலைப் பார்க்கும்பொழுது ஆலமரத்தின் வேர்கள் குகையை உருவாக்கியது போன்ற காட்சியைத் தரும். அந்தக் குகையின் பின் பக்கத்திலுள்ள ஒரு பொந்தில் நூறு வயதைக் கடந்த ஒரு கரு நாகப் பாம்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கோயிலின் பிராமண பூசாரி, அந்த நாகப் பாம்பிற்கு நிறையப் பாலும், அரை டஜன் முட்டைகளையும் வழங்கி வருகிறார். பூசாரி ஆண்டர்சனிடம் அந்தக் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்திருக்கிறார்.

நாம் மறுபடியும் உம்பலமேரூவிற்கு வருவோம். குளத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் நடுத்தண்டைச் சுற்றி பல தண்டுகள் வளர்ந்திருந்தன. அதில் இரண்டு தண்டுகள் சுமார் 4 அடி இடைவேளியில் இருந்தன. ஒவ்வொரு தண்டின் அளவும் சுமார் 8 அடி இருந்தது. இந்த இரண்டு தண்டுகளுக்கும் நடுவில் மூவரும் உட்கார்ந்து கொண்டனர். ஆண்டர்சன் வனத்தை நோக்கி உட்கார்ந்தார். அவர் கையில் துப்பாக்கி இருந்தது. ஆண்டர்சனுக்குப் பின்னால் தேவ் குளத்தை நோக்கியபடி உட்கார்ந்தார்.

தேவ்விடம் .12 துளை துப்பாக்கி இருந்தது. அந்தத் துப்பாக்கியின் வலது குழலில் சக்தி வாய்ந்த தோட்டா இருந்தது. இடது குழலில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு ஏதுவாக L.G. Cartridge இருந்தது. மூங்கில் வெட்டி தேவ்வின் வலதுபுரத்தில் குளத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். ஆண்டர்சனும், தேவ்வும் தலா ஒரு டார்ச் லைட்டை வைத்திருந்தார்கள். துப்பாக்கியில் டார்ச் லைட்டைப் பொருத்தும் இணைப்புச் சாதனத்தை (clamp) ஆண்டர்சன் கொண்டுவந்திருந்தார்.

ஆனால் தேவ்விடம் துப்பாக்கியுடன் டார்ச் லைட்டுடன் பொருத்தும் இணைப்புச் சாதனம் இல்லை. அதனால் மூங்கில் வெட்டி தேவ்வின் டார்ச் லைட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான். தேவைப்படும்பொழுது டார்ச் லைட்டிலிருந்து வெளிச்சம் அடித்தான். இவர்களின் இருபுற பக்கவாட்டிலும் ஆலமரத்தின் வேர்கள் இருந்ததே தவிர அது அவர்களுக்கு மறைவைத் தரவில்லை. அவர்கள் உட்கார்ந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

தேவ் உட்கார்ந்திருக்கும் திசையில் புலி வந்தால் அது கண்டிப்பாகக் குளத்தைத் தாண்டித்தான் வரவேண்டும். அப்படிப் புலி வந்தால் அது வரும் சப்தம் கேட்கும். எனவே அந்தத் திசை பாதுகாப்பாக இருந்தது. ஆண்டர்சன் உட்கார்ந்திருக்கும் திசை காட்டை நோக்கி இருந்தது. இருட்டியபின் ஒன்றும் தெரியாது. டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் முன்னால் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதனால் மூவரும் தங்களுடைய காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு தங்களைச் சுற்றி ஏதேனும் சத்தம் எழுகிறதா என்று கவனித்து வந்தனர். புலி குளத்தின் பக்கவாட்டிலிருந்து வந்தாலோ அல்லது காட்டிலிருந்து வந்தாலோ அதனால் கண்டிப்பாக மூவரையும் பார்க்க முடியும். மூவரைப் பார்த்த புலி ஒன்று தாக்குதல் நடத்தலாம். அல்லது மூவர் இருப்பதை உணர்ந்து தாக்காமல் சென்றுவிடலாம். புலி தாக்குதல் நடத்துவது அல்லது நடத்தாமல் போவது அதனுடைய தைரியத்தையும் மூவரின் அதிர்ஷ்டத்தையும் பொருத்தது.

தேவ் சந்தையைப் பார்த்த பள்ளி மாணவன் போல் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் காணப்பட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடமே கும்மிருட்டாகிவிட்டது. பறவைகளெல்லாம் தத்தம் கூடுகளுக்கோ உறைவிடங்களுக்கோ சென்று அடைந்துவிட்டன. எங்கும் நிசப்தம் நிலவியது. அவ்வப்பொழுது தூரத்திலிருந்து ஆந்தையின் கூப்பாடு மட்டும் கேட்டது. மூவர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு மேலே, செங்குத்தான உயரச் சரிவிற்கு மேலே, சுமார் ஒரு மைல் தொலைவில் ஆந்தை அமர்ந்துகொண்டு, தனக்குக் கீழ் விரிந்திருக்கும் பள்ளத்தாக்கை மெத்தனமாகப் பார்த்தவாறே கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு பெரும் தவளை கத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மற்றத் தவளைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் கத்த ஆரம்பித்தன. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் தவளைகளின் பலத்த சேர்ந்திசை நிகழ ஆரம்பித்தது.

ஆண்டர்சனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மூங்கில் வெட்டி இருளில் எதையோ முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்தவனது முதுகு பதற்றத்தில் அசைந்து, ஆண்டர்சனின் இடது கையை உரசியது. மூங்கில் வெட்டி பார்த்தது ஒரு சதுப்புத் தவளையை. இது பெரும் தவளையைவிட உருவத்தில் சிறிதாக இருக்கும். இந்தத் தவளையின் பின்னங்கால்கள் மெலிதாகவும், நீண்டும் இருக்கும். இத்தவளைகள் ஏரி மற்றும் குளங்களின் விளிம்புகளில் பாதி உடல் மூழ்கியபடியே அமர்ந்திருக்கும். இத்தவளைகளில் ஒன்று அவ்வப்பொழுது தண்ணீரின் மேலே தன் பின்னங்கால்களை உக்கிரமாக உதைத்து தண்ணீரில் பட்டும் படாமலும் சில கஜ தூரத்திற்குச் சறுக்கியபடிச் சென்று நிற்கும். பின்னர் அது மிதக்கும் பொழுது அதனுடைய பாதித் தலை தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அதனுடைய கண்கள் மட்டும் மிதந்து செல்வதுபோல் தோற்றமளிக்கும். இப்படி சதுப்புத் தவளை தண்ணீரில் தாவிச் செல்லும்போது ஏற்படுத்திய சத்தம் மூங்கில் வெட்டியைப் பயத்தில் ஆழ்த்தியது.

ஒரு தவளை துள்ளிக் குதிப்பதால் எந்தக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பல தவளைகள் மொத்தமாகத் தண்ணீருக்குள் குதித்து தஞ்சம் புகுந்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காரணம் தவளைகள் ஏதோ ஒன்று வருவதைப் பார்த்து அவற்றிடமிருந்து தப்பிப்பதற்காக மொத்தமாக குதித்திருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *