Skip to content
Home » ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

புறப்பொருள் வெண்பாமாலையில் மொத்தம் 12 படலங்கள் உள்ளன. இதில் ‘வாகைப்படலம்’ எனும் படலம் வெற்றிக் கொண்டாட்டத்தினைக் கூறும் படலம். வெற்றி பெற்ற மன்னரும் அவர்தம் மறவர்களும் வாகை மாலை சூடிக்கொண்டு கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். தற்போதைய காலத்திலும்கூட ‘வெற்றி வாகை சூடினான்’ எனக் கூறும் சொல்வழக்கு இருப்பதைக் காணலாம். இந்த வாகையில் மொத்தம் 34 துறைகள் உள்ளன. இதில் ‘அவிப்பலி’ எனும் ஒரு துறை உள்ளது.

அவி- கடவுளுக்கு இடும் உணவு. அவிப்பலி என்பதற்குக் கடவுளுக்குத் தன் உயிரையே பலியிடும் முறை எனப் பொருள்.

வெள்வாள் அமருள்
செஞ்சோ றல்லது
உள்ளா மைந்தர்
உயிர்ப்பலி கொடுத்தன்று

தமிழகப் பாறை ஓவியங்கள், பலியிடும் செயல்கள் வழக்கில் இருந்ததைச் சுட்டுகின்றன. கரிக்கியூர், அழகர்மலை பாறை ஓவியங்களில் பலியிடுவது தொடர்பான ஓவியங்கள் இருந்ததைப் பொருத்திப் பார்த்தால், இம்மரபு நீண்ட நெடிய காலமாய் நிலைபெற்றிருந்ததை அறிய முடிகிறது.

இம்மரபு இந்தியா முழுவதும் ஆங்காங்கே இருந்தாலும், தென்னிந்தியாவில் இச்சடங்கு அதீத அளவில் இருந்துள்ளது. அதிலும் நடுகற்களை ஆழ்ந்து நோக்கும்போது, தமிழகத்தில் கிடைக்கும் நடுகற்களில், தன்னைத்தானே பலியிட்டுக் கொண்டு இறக்கும் நவகண்டம், அரிகண்டம் சிற்பங்களும், ஆகோள் பூசல் போன்ற பூசலில் இறந்த நடுகற்களுமே கிடைக்கின்றன. நாட்டார் வழக்காற்றியல் தவிர வேறு எங்குமே நரபலி இடும் சடங்குகள் தொடர்பான நடுகற்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. ஆனால் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பகுதிகளில் ஒருவர் மற்றவரை வெட்டி நரபலியிடுவது போன்ற நடுகற்கள் கிடைக்கின்றன. இதேபோன்று அன்றைய ஒடிசாவில் ஒரு கொடூர வழமையாய் நீண்டகாலம் இருந்த, ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்ட ஒரு சடங்கினைக் காண்போம்.

ஒடிசா மற்றும் ஆந்திர எல்லைப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடியினர் கோண்டு (Khondh) என அழைக்கப்படுகின்றனர். விவசாயம் மற்றும் வேட்டையாடுதலைப் பிரதானமாகக்கொண்ட இக்குடியினர், மஞ்சள் விளைச்சலைப் பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர். பல நாட்டார் தெய்வங்கள் இவர்கள் மரபில் உண்டு. அதில் தலைமை தெய்வமாக ‘தரணி பெனு’ எனும் பூமிதேவியைப் பிரதானமாய் வழிபடுகின்றனர். இவரே இவர்களின் அனைத்துத் தெய்வங்களுக்கும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர். ஐனவரி-பிப்ரவரி மாதங்களில் 8 நாட்கள் இவ்விழாவினை நடத்துகின்றனர். விழாக்குழுத் தலைவர்கள் கூடி முடிவெடுத்ததும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ஏற்பாடுகளை ஆரம்பித்து விடுகின்றனர்.

விழாவிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, பூசாரி 4 உதவியாளர்களுடன் யாருக்கும் தெரியாமல் காட்டுக்குச் சென்று 14 அடி நீள மூங்கில் ஒன்றை வெட்டுவார். மூங்கிலை வெட்டும்போது பூசாரி முற்றிலும் ஆடையின்றி இருப்பார் என்று கூறப்படுகிறது. மூங்கிலில் உறையும் ஆவி தனக்குத் தீங்கு செய்யாமல் இருக்கவே இவ்வாறு செய்யப்படுவதாய் நம்புகின்றனர். அந்த மூங்கில் இரண்டு நாட்கள் ஆற்று நீரில் ஊறவைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும். பின்னர் அதன்மேல் வண்ணத் துணிகளும் கண்ணாடிகளும் பொருத்தப்பட்டு, ‘சத்ரி’ (குடை) தயாரிக்கப்படும். மெரியா எனும் ஊர்வலத்தில் பூசாரி இதை ஏந்திச் செல்வார்.

விழாவிற்கு நான்கு நாட்களுக்கு முன்பே உறவினர்கள் வரத் தொடங்குவார்கள். அவர்கள் வரும்போது 5 பாட்டில் மது, 5 கிலோ அரிசி மற்றும் பலியிட ஒரு விலங்கு (ஆடு அல்லது கோழி) ஆகியவற்றைக் கொண்டு வருவார்கள். ‘பிஷ்மாஜி’ எனும் பெரியவர், இவற்றைச் சேகரித்து விழாவிற்குப் பயன்படுத்துவார்.

பூசாரி மற்றும் இசைக்கலைஞர்கள் ஓர் ஆலமரத்திற்குச் சென்று, அதன் பொந்துக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள புனித மெரியா பாத்திரங்களை எடுப்பார்கள். இரண்டு இரும்புச் சங்கிலிகள் மற்றும் ஒரு கனமான இரும்புத் தட்டு அங்கிருந்து எடுக்கப்படும். இவை ஒரு காலத்தில் மனிதரை நரபலி கொடுக்கப் பயன்பட்டவை. பெண்கள் ‘குடி’ (Kuddi) எனப்படும் வழிபாட்டு இடத்தை வாழை மரங்கள், மா இலைகளால் அலங்கரிப்பார்கள். தரணி பெனு சிலைக்குப் புதிய சேலை அணிவிக்கப்படும். அரிசி மாவால் 12 சதுரக் கோலங்களை வரைந்து, ஒவ்வொன்றின் மீதும் அரிசியைக் குவித்து வைத்து, இரவு முழுவதும் மந்திரங்கள் ஓதி தெய்வங்களை அழைப்பார்கள். அதன்பின், குழுக்களாக வந்து தரணி பெனுவை மகிழ்விக்க நடனமாடுவார்கள். தலைமைப் பூசாரிக்கு அருள் வந்து ஆவி உடலில் புகுந்ததும், பூமி தேவியின் 12 சீடர்களையும் திருப்திப்படுத்த, சிறிய அரிசிக் குவியல்களுக்குக் கோழிகளும், பெரிய குவியல்களுக்கு ஆடுகளும் என மொத்தம் 12 முறை பலியிடப்பட்டு ரத்தம் தெளிக்கப்படும்.

மெரியா சடங்கு (Meriah ritual)

நள்ளிரவில் பூசாரியின் வீட்டிலிருந்து மூன்று பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டுவர மூன்று இளம் பெண்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் அந்தப் பாத்திரங்களில் ஆற்று நீரை நிரப்பி வரும்போது, எக்காரணம் கொண்டும் பின்னோக்கிப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் பாத்திரத்தில் இருக்கும் ஆவிகள் அவர்களைப் பிடித்துவிடும் என்று நம்பப்படுகிறது. தீய ஆவிகளை விரட்ட பூசாரி இறகுத் தொகுப்பை ஆட்டியபடி அவர்களுடன் செல்வார்.

அந்த நீரைக்கொண்டு ‘மெரியா’ என்று அழைக்கப்படும் ஒரு பெரிய எருமை மாடு குளிப்பாட்டப்பட்டு, ஒரு மரத்தூணில் கட்டப்படும். இது அந்த விலங்கைத் தூய்மைப்படுத்தும் சடங்காகும். பின்னர் அதன் கால்கள் இரும்புச் சங்கிலி கொண்டு கட்டப்படும். இது அந்த விலங்கு விரைவில் பலியிடப்படப்போகிறது என்பதைக் குறிக்கும். அதிகாலையில் ஊர்வலம் கிராமத்தின் கிழக்கு எல்லைக்குச் செல்லும். அங்கு பூசாரி எருமையினை முதலாவதாக வெட்ட, மற்றவர்கள் கோடரி மற்றும் கத்திகளால் அந்த விலங்கைத் தாக்கி இறக்கச் செய்வார்கள். அந்த விலங்கு உயிருடன் இருக்கும்போதே அதன் வயிற்றைக் கிழித்து, குடல்களை வெளியே எடுத்து, மகிழ்ச்சியில் தங்களது உடலில் பூசிக்கொள்வார்கள் ஊர் மக்கள். அந்த விலங்கு எவ்வளவு அதிகமாகத் துன்புறுகிறதோ, அவ்வளவு அதிகமாகத் தெய்வம் (பெனு) திருப்தியடையும் என்பது இவர்களின் நம்பிக்கை.

பலியிடப்பட்ட எருமையின் தலையை அந்த ஊரைச் சேராத ஒருவர் சுமந்து வருவார். சொந்த ஊர்க்காரர்கள் அதைத் தொடக்கூடாது. பின்னர் பூசாரி அதன் மேல் மதுவை ஊற்றிச் சடங்கை முடிப்பார். பலியிடப்பட்ட கறி சிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு, நல்ல விளைச்சல் வேண்டி அண்டை கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இன்று எருமைகளை வெட்டி செய்யும் இந்த மெரியா சடங்கில் ஒரு காலத்தில் இதே பாணியில் மனிதர்களை வெட்டிப் பலியிட்டுள்ளனர். பிரிட்டிஷ் அதிகாரியான ஜான் காம்ப்பெல், இந்தப் பழங்குடியினரிடையே நிலவிய கொடூரமான மனிதப் பலி முறையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை நேரில் கண்டு வேதனையுடன் ஆவணப்படுத்தியுள்ளார்.

எருமைக்கு முன் மனிதன்

பலியிடும் நபர்களை கோண்டுகள் ‘மெரியா’ என்றழைத்தனர். அவர்கள் தம் இனத்தவர்களைப் பலியிடுவதில்லை. பலியிடப்படும் மனிதர்கள் பெரும்பாலும் சமவெளிப்பகுதிகளில் வறுமையில் வாடும் பெற்றோரிடமிருந்து வாங்கப்படுவார்கள் அல்லது ‘பானூ’ எனும் சாதியினரால் சமவெளிப் பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படுவார்கள். இச்சாதியினரைப் பற்றி ஜான் கேம்பெல் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். அவர்கள் அறியாமையினால் இதைச் செய்யவில்லை. லாபத்திற்காக மனிதர்களைக் கடத்தி வந்து விற்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறு கடத்தி வரப்படும் ஆட்களுக்கு விலையாக, பெரும்பாலும் கால்நடைகள், பன்றி, பித்தளைப் பாத்திரங்கள் அல்லது குங்குமப்பூ கொடுக்கப்படும். பலி கொடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கொண்டாட்டங்கள் தொடங்கும். மெரியாவுக்கு மாலைகள் அணிவித்துச் சிறப்பாகக் கவனிப்பார்கள். சடங்கிற்கு முந்தைய நாள், பலியாளுக்குக் ‘கள்ளு’ அல்லது இலுப்பைப் பூ சாராயம் கொடுத்து மயக்க நிலைக்குக் கொண்டு வருவார்கள். பிறகு ஒரு தூணில் கட்டி வைத்து, மயில் உருவத்தின் முன் சடங்குகளைச் செய்து, பூமித் தாயிடம் நல்ல விளைச்சலுக்காக வேண்டிக்கொள்வார்கள்.

பலியிடும் சடங்கு

பலி கொடுக்கப்படும் நபரை எண்ணெய் பூசி, ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். ’சகாரி பெனு’ (Zacari Penoo) என்ற கிராம தெய்வத்தின் முன் முதலில் ஒரு பன்றி பலியிடப்படும். அதன் இரத்தம் ஒரு குழியில் சேகரிக்கப்படும். மயக்க நிலையிலுள்ள நபரை அந்தக் குழியில் தள்ளி, மூச்சு முட்டும் வரையிலும் முகத்தை இரத்தச் சேற்றில் அழுத்திப் பிடிப்பார்கள். பின்னர், பூசாரி அந்தப் பலியாளின் உடலிலிருந்து ஒரு துண்டு சதையை வெட்டி தெய்வத்திற்குப் படைப்பார். மற்றவர்கள் சதையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு தங்கள் நிலங்களில் புதைப்பார்கள். அதன்பின், இரு மூங்கில் தடிகளுக்கு இடையே வைத்து மார்பிலும் தோளிலும் அழுத்துவார்கள். அந்தத் தடிகளை இறுக்கிக் கட்டி, அவர் உயிரிழக்கும் வரை நசுக்குவார்கள். உயிர் பிரியும் முன்பே உடலைக் கோடரியால் இரண்டாக வெட்டுவார்கள். சில இடங்களில் பலியாள் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவர் உடலிலிருந்து சதையை வெட்டி எடுத்துச் செல்வார்கள். உடல் முழுமையாகப் புதைக்கப்பட்டால் பலன் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், துண்டுத் துண்டாகப் பரப்பப்பட்டால் அனைவருக்கும் பலன் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பினர். மெரியா எனும் பலியாள் 60 முதல் 130 ரூபாய் வரை விலைக்கு வாங்கப்பட்டார். அதிலும் பருமனான மற்றும் நடுத்தர வயதுடைய நபர்களுக்கே அதிகச் செல்வாக்கு இருந்தது. இவர்களில் சில பலியாட்கள் இளம் வயதிலேயே கடத்தப்பட்டனர். அவ்வாறு கடத்தி வரப்படும் குழந்தைகள் பல ஆண்டுகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்படுவார்கள். பலியிடப்படும் வரை அவர்கள் மிக அன்பாக நடத்தப்படுவார்கள்; ஆட்டினை வளர்ப்பதைப்போல.

கோண்டு மக்களின் இந்தக் கொடூரச் சடங்கினை நிறுத்த வைக்கும் சவாலான பணியினைக் கையாளுவதற்காகவே ஆங்கிலேய அரசால் கேப்டன் கேம்பெல் (Captain Campbell) என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு அந்தப் பகுதி மக்களுடன் இருந்த நேரடித் தொடர்பும், போர்க்கால அனுபவமும் இந்த நியமனத்திற்குக் காரணமாக அமைந்தது. 1837ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மெரியா பலிச் சடங்கிற்கு எதிரான முதல் போராட்டத்தை அவர் தொடங்கினார். இச்சடங்கானது கோண்டு மக்களின் இதயங்களில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது. எந்தப் பயனும் தராத இந்தக் கொடூரமான வழக்கத்தைக் கைவிடுமாறு அவர் அம்மக்களிடம் அமைதியான முறையில் பேசிப் புரியவைக்க முயன்றார். பயணத்தின்போது பாதுகாப்பிற்காக ‘செபந்திகள்’ (Sebundies) எனப்படும் ஒரு சிறிய படையை அழைத்துச் சென்றார். இவர்கள் மலை அடிவாரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். கடின உழைப்பாளிகள். கோண்டுகள் வசிக்கும் மலையின் காலநிலைக்குப் பழகியவர்கள். புலி மற்றும் சிறுத்தைகளைத் தனியாகத் தாக்கும் அளவுக்குத் துணிச்சலானவர்கள். இவர்களுக்கு ஜூகர் சிங் (போர்ச் சிங்கம்), ரன்னா சிங் (போரில் வலிமையானவன்), போகி சிங் (சிங்கத்தைவிட வேகமானவன்) போன்ற பட்டங்களை அவர் வழங்கியிருந்தார். இவர்களில் சிலருக்கு கோண்டு மொழியும் தெரிந்திருந்தது. இக்காரணிகளாலேயே கேம்பெல் கோண்டுகளைச் சமாளிக்க இவர்களைப் பயன்படுத்தினார்.

கோண்டுகளின் அண்டைய ஊரான மேல் கும்சூர் பகுதியின் செல்வாக்குமிக்க தலைவரான சாம் பிசோய் என்பவரை கேம்பெல் உதவியாக வைத்துக் கொண்டார். அவர் ஓர் இந்து என்பதால், கோண்டுகளின் மனிதப் பலி சடங்கில் அவருக்குத் தனிப்பட்ட ஈடுபாடு இல்லை. பிரிட்டிஷ் அரசுடன் கைகோர்ப்பதுதான் தனது அதிகாரத்திற்கு நல்லது என்பதை அவர் உணர்ந்திருந்தார். இவரை வைத்து கேம்பெல், அடிக்கடி கொண்டுகளிடம் ஆங்கில அரசின் முடிவை ஓரளவு அம்மக்கள் அறியுமாறு செய்தார்.

கோண்டு தலைவர்களையும் அவர்களின் உதவியாளர்களையும் போடியாகேரி என்ற மலைக்கோட்டையில் சந்திக்க கேம்பெல் அழைத்தார். சுமார் 3,000 கொண்ட் மக்கள் அங்கே திரண்டனர். ஒரு பெரிய மரத்தடியில் கேம்பெல் அமர்ந்திருக்க, தலைவர்கள் அரைவட்டமாக அமர்ந்திருந்தனர். இளைஞர்கள் சுற்றிலும் நின்று புகையிலை பிடித்துக் கொண்டிருந்தனர்.

‘நீங்கள் இப்போது ஒரு ராஜாவின் கீழ் இல்லை. பிரிட்டிஷ் அரசின் குடிமக்கள். அரசு உங்களைத் தன் குழந்தைகளாகப் பார்க்கிறது. ஒரு உயிரைப் பறித்தால், அதற்குப் பதிலாக மற்றொரு உயிர் தண்டனையாக எடுக்கப்படும் என்பதுதான் உங்கள் சட்டம் அல்லவா? இதுதான் உங்கள் உலகளாவிய விதியாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நீங்கள் பலி என்ற பெயரில் எடுக்கும் உயிர்களுக்கு மட்டும் தண்டனை கிடைக்காமல் இருப்பதில் என்ன நியாயம்? அதனால் இந்தச் சடங்கு இனி ஒருபோதும் அனுமதிக்கப்படாது’ என நாசூக்காக அவர்களை மிரட்டினார் கேம்பெல்.

‘ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களாகிய நாங்களும் அறியாமையால் மனிதப் பலி கொடுத்தோம். ஆனால், அந்த இருளிலிருந்து வெளியேறி, அந்தக் கொடூரமான வழக்கத்தை நிறுத்திய பிறகுதான் நாங்கள் அறிவுடனும் செழிப்புடனும் வாழ்கிறோம். சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்கள் மனிதப் பலி கொடுப்பதில்லை. இருப்பினும், அவர்கள் நல்ல விளைச்சலையும் ஆரோக்கியமான கால்நடைகளையும் கொண்டுள்ளனர். அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது? இப்போது நீங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குடிமக்கள். எனவே, சட்டத்திற்குப் புறம்பான இந்தச் செயலை நிறுத்த வேண்டும். உங்கள் மத நம்பிக்கையில் நான் தலையிடவில்லை. ஆனால் இந்த ஒரு கொடூரமான சடங்கை மட்டும் தடை செய்கிறேன்’ எனத் தன் தரப்பு முடிவை, ஆங்கில அரசின் உத்தரவாக அங்கே அறிவித்தார் கேம்பெல்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகும், பல கூச்சல்களுக்கிடையேவும், அந்தப் பழங்குடித் தலைவர்கள் மிக நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தனர். ’நாங்கள் காலம் காலமாக இதைச் செய்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் இதைக் கற்றுக்கொடுத்தார்கள். இதில் தவறு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், இப்போது நாங்கள் உங்கள் அரசாங்கத்தின் கீழ் இருப்பதால், உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம். ஒருவேளை பலியை நிறுத்திய பிறகு நிலம் விளையவில்லை என்றாலோ, நோய் பரவினாலோ அது எங்கள் தவறல்ல. நாங்கள் மனிதப் பலிக்குப் பதிலாக, சமவெளி மக்களைப்போல விலங்குகளைப் பலியிடத் தொடங்குகிறோம்’ என அறிவித்தனர். அன்று முதல் மெரியா வழக்கத்தினை நிரந்தரமாக ஆங்கில அரசாங்கம் தடை செய்தது. ஒரு காலத்தில் மனிதப் பலியிட்ட கோண்டு சமூகம், தற்போது சடங்கிற்காக விலங்கினங்களைப் பலியிட்டு வருகிறது.

கோண்டு பழங்குடியினரிடையே வழக்கத்திலிருந்த மனிதப் பலியிடல் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்ட பிறகு, எஞ்சியிருக்கும் ஒரே விஷயம் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒரேயொரு மெரியப் பலித் தூண் மட்டுமே.

மெரியப் பலித் தூண்

கேம்பெல்லின் உத்தரவிற்குப் பின்னும் ரகசியமாக ஆங்காங்கே இச்சடங்கு நடைபெற்று வந்தது. ஆனால் ஒருகட்டத்தில் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது. 1852இல்தான் இறுதியாக மெரியாப் பலி அளிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேல்ஸ் இளவரசி மேரி ஆஃப் டெக்கும், இளவரசர் ஐந்தாம் ஜார்ஜும் இந்தியா வந்தபோது 1906இல் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட கோண்டு பழங்குடியினர், சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மெரியாப் பலித் தூணைப் பார்த்தபோது பெரிதும் உணர்ச்சிவயப்பட்டுக் கண்கலங்கினர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *