ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால் இந்துவான ஹேமூ, படிப்படியாகத் தன் திறமையால் முன்னேறி ஒரு கட்டத்தில் இஸ்லாம் ஷாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரானார்.
ஹேமூவைப்போல இஸ்லாம் ஷா அரசில் கோலோச்சிய மற்றொரு நபர் அடில் ஷா. இஸ்லாம் ஷாவின் ஒன்றுவிட்ட சகோதரரான அடில் ஷா ஆப்கானியர்கள் வலுவாக இருந்த பீகார் பகுதியை எந்தக் குறையுமில்லாமல் திறம்பட நிர்வகித்தார். இஸ்லாம் ஷாவின் அகால மரணம் அடில் ஷாவை டெல்லி அரியணை நோக்கித் திருப்பியது. ஆனால் அவரை முந்திக்கொண்டு டெல்லியைக் கைப்பற்றினார் ஹூமாயூன்.
டெல்லி கிடைக்கவில்லை என்றாலும் அடில் ஷாவுக்கு ஹேமூ கிடைத்தார். திறமைசாலியான ஹேமூவைத் தன் பக்கம் இழுத்து அவரை வைத்துத் தனக்கு ஒத்து வராத ஆப்கானிய முக்கியஸ்தர்களின் கதையை முடித்து, பீகாரில் தனி ராஜாங்கம் நடத்த ஆரம்பித்தார் அடில் ஷா.
1556ஆம் வருடம் வங்காளப் படையெடுப்பிலிருந்த அடில் ஷாவுக்கு ஹூமாயூன் இறந்துபோன செய்தி கிடைத்தது. மீண்டும் அமைந்த இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவறவிட விரும்பாத அடில் ஷா, பெரும்படை ஒன்றை ஹேமூ தலைமையில் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
ஆக்ராவைச் சுலபமாகக் கைப்பற்றி முன்னேறிய ஹேமூவை டெல்லிக்கு வெளியே துக்ளகாபாத்தில் சந்தித்தது தார்டி பெக் கான் தலைமையிலான முகலாயப் படை. ஒரே நாளில் அவர்களை வீழ்த்திவிட்டு `ராஜா ஹேமச்சந்திரா விக்ரமாதித்யா’ என்ற பட்டத்துடன் டெல்லியின் புதிய மன்னராகப் பதவியேற்றார் ஹேமூ.
இந்துவான ஹேமூ, அடில் ஷாவின் ஆப்கானியப் படையை வைத்துக்கொண்டு இப்படி மன்னராகப் பதவியேற்பதற்கு வாய்ப்பில்லை என்பது சில வரலாற்றாய்வாளர்களின் கருத்து. ஹேமூ மன்னரானதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் டெல்லியும் ஆக்ராவும் முகலாயர்களின் கையைவிட்டுப்போனது உண்மை.
விசயத்தைக் கேள்விப்பட்டதும் பஞ்சாபிலிருந்த முகலாயக் கூடாரம் கலகலத்துப்போனது. ஆனால் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருந்த பைரம் கான் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்காமல் பொறுமையாக இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு ஹேமூ பஞ்சாபை நோக்கி வரும் தகவல் கிடைத்ததும் மீண்டும் பரபரப்பானது முகலாயக் கூடாரம்.
உண்மையில் முகலாய வீரர்கள் பெரும்பாலானோருக்கு ஆப்கானியப் படையுடன் சண்டைபோட விருப்பமில்லை. ஹூமாயூனின் மரணம் தந்த அதிர்ச்சியைவிட டெல்லி பறிபோனது மனதளவில் அவர்களைச் சோர்வடைய வைத்திருந்தது. சிறுவனாக இருந்தாலும் அக்பரைப் புதிய பாதுஷாவாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர், ஆனால் முன் அனுபவமும் இல்லாத அக்பர் தலைமையில் போரிட்டு இறப்பதைவிட காபூலுக்குத் திரும்பிவிடலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.
முகலாய வீரர்களின் மனவோட்டத்தைப் பழுத்த அனுபவசாலியான பைரம் கான் புரிந்துகொண்டார், ஆனால் எதிரிக்குப் பயந்து பின்வாங்கிச் செல்வதில் அவருக்குத் துளியும் உடன்பாடில்லை. அதேநேரம் வீரர்களைக் கட்டாயப்படுத்திப் போரிட வைத்தால் அது தோல்விக்கு வழிவகுக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, வீரர்களை முழுமனதுடன் போரிட வைக்க ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார் பைரம் கான்.
பஞ்சாபுக்கும் டெல்லிக்கும் நடுவிலிருந்தது பானிபட். 1526ஆம் வருடம் இப்ராஹிம் லோதியின் ஆப்கானியப் படையை எதிர்த்து இந்தப் பானிபட் போர்க்களத்தில் பாபர் பெற்ற வெற்றிதான் இந்தியாவில் முகலாய ஆட்சி அமைவதற்கான முதற்காரணமாக இருந்தது. 25 வயது இளைஞனாக அன்று பானிபட் போரில் பங்கேற்றிருந்த பைரம் கான், இன்று ஹேமூ தலைமையிலான ஆப்கானியப் படையை அதே பானிபட்டில் வைத்துச் சந்திக்க முடிவெடுத்தார்.
இந்த முடிவின் மூலம் தங்களுக்குச் சாதகமான போர்க்களத்தில் ஆப்கானியர்களை எதிர்த்துப் போரிடும்போது, மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என ஒரு தோற்றத்தை முகலாய வீரர்களிடம் உருவாக்குவதே பைரம் கானின் திட்டம்.
உண்மையில் அப்போது வெற்றி யார் பக்கம் எனத் தீர்மானிக்க முடியாத நிலைதான் இருந்தது. அது பைரம் கானுக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றி அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவரைப் பொருத்தவரை எதிரிக்குப் புறமுதுகு காட்டாமல் போர் புரிய வேண்டும் அவ்வளவுதான். அதற்கேற்றபடி அவர் போட்ட திட்டம் உளவியல்ரீதியாக வீரர்களைத் தயார்படுத்த, பானிபட்டுக்குக் கிளம்பியது முகலாயப் படை.
1556ஆம் வருடம் நவம்பர் 5ஆம் தேதி ஆப்கானியப் படையும், முகலாயப் படையும் பானிபட் போர்க்களத்தில் சந்தித்துக்கொண்டன. பானிபட்டுக்குச் சென்றிருந்தாலும் அக்பரும் அவருக்குப் பாதுகாப்பாக பைரம் கானும் ஒரு சிறிய படையுடன் போர்க்களத்திலிருந்து விலகி இருந்து அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்த ஆப்கானியப் படையில் ஏறத்தாழ 1500 யானைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் கவசம் அணிவிக்கப்பட்டு இரு தந்தங்களிலும் கூரிய ஈட்டிகள் கட்டிவிடப்பட்டிருந்தன. இந்த யானைப் படைக்கு நடுவே தன் யானை ‘ஹவாய்’ மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் ஹேமூ.
போர் தொடங்கியதும் ஆப்கானிய யானைப்படை முகலாய குதிரைப் படையைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அதுவரை யானைகளை எதிர்த்துப் பழகிடாத குதிரைகள் பயத்தில் திமிர ஆரம்பித்தன. என்ன செய்தும் முகலாய வீரர்களால் அவற்றைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நேரம் செல்லச் செல்லப் போர்க்களத்தில் மரண ஓலங்களின் கூப்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என உணர்ந்து கொள்வதற்கு முன்பே சில முக்கியத் தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கான முகலாய வீரர்கள் இறந்து கிடந்தனர்.
அவ்வளவுதான், அனைத்தும் முடிந்துவிட்டது இனி ஒட்டு மொத்தமாக இந்தியாவைக் கைகழுவிவிட்டு காபூலுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான் என எஞ்சியிருந்த முகலாயப் படை நினைத்துக்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பாய்ந்து வந்த அம்பு ஒன்று ஹேமூவின் கண்ணைத் துளைத்தது.
அம்புத் தாக்குதலில் நிலை குலைந்துபோன ஹேமூ, தன் யானையின் மீதே மயங்கிச் சரிந்தார். படைத்தலைவனின் நிலையைப் பார்த்த ஆப்கானிய வீரர்கள் குழம்பிப்போய் நாலாப் பக்கமும் சிதற ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்தில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து இரண்டாம் பானிபட் போரில் வெற்றிபெற்றது முகலாயப் படை. அதிர்ஷ்டம் அன்று முகலாயர்கள் பக்கம் இருந்ததுதான் அவர்கள் வெற்றிக்கான காரணம் என்பதை இங்கு மறுப்பதற்கில்லை.
போர் முடிந்த கையோடு குற்றுயிரும் குலையுயிருமாக அக்பர் முன்பு நிறுத்தப்பட்டார் ஹேமூ. ஹேமூவைக் கொன்றுவிடுமாறு பைரம் கான் சொல்ல, `போரில் தோற்று ஏற்கெனவே செத்துக்கொண்டிருக்கும் எதிரியை நான் கொல்ல விரும்பவில்லை’ என்றார் அக்பர். இந்த விசயத்தில் அக்பருடன் விவாதிக்க விரும்பாத பைரம் கான், தன் வாளால் ஹேமூவின் தலையை வெட்டி வீழ்த்தினார்.
0
பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராகச் சென்ற அக்பர், பதினான்கு வயதில் முகலாயப் பாதுஷாவாக டெல்லிக்குத் திரும்பினார். அடுத்த சில நாட்கள் புதிய பாதுஷாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க அரசு முக்கியஸ்தர்கள், அண்டை ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள், வணிகர்கள், பொது மக்கள் எனப் பலரும் தீன் பனா கோட்டைக்கு வந்தவண்ணம் இருந்தனர்.
இளவயதில் ஆட்சிப்பொறுப்பேற்றுவிட்டு அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று அக்பரின் நடவடிக்கையைப் பலரும் ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அக்பரின் கவனமெல்லாம் அப்போது ஒரே ஒரு விசயத்தின் மீது மட்டுமே குவிந்திருந்தது, அதுதான் ‘யானை’.
சிறு வயதிலிருந்து விலங்குகள் மீது அக்பருக்கு இருந்த ஈடுபாடு பற்றித் தனியாகச் சொல்லத்தேவையில்லை. அதிலும் காபூலிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிறகு அவர் இங்கு பார்த்து வியந்த விலங்குகளின் பட்டியலில் யானையும் இருந்தது. ஆனால் யானைகளின் கம்பீரத்தையும் வீரியத்தையும் பானிபட் போர்க்களத்தில்தான் முதல் முறையாகப் பார்த்தார் அக்பர்.
எனவே டெல்லி திரும்பியதும் யானைகளை அடக்கி, அவற்றைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வதில் அவர் நேரத்தைச் செலவிட்டார். அடுத்த சில மாதங்கள் அக்பரைப் பார்க்க வந்த பலரும் வியர்வை சொட்டச் சொட்ட யானையுடன் மல்லுக்கட்டி அதன் மீதேறி அமர முயற்சி செய்துகொண்டிருந்த பதின்ம வயது இளைஞனைப் பார்த்து `இவரா பாதுஷா’ என்று வியந்தனர்.
முன்பு ஹூமாயூன் டெல்லியைக் கைப்பற்ற வந்தபோதும், கைப்பற்றிய பிறகும், நிலைமை சரியில்லாததால் முகலாய அரச குடும்பத்துப் பெண்கள் காபூலிலேயே இருந்துவிட்டனர். இப்போது அக்பர் டெல்லி திரும்பியதும் அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
1557ஆம் வருடத்தில் ஆப்கானியர்களின் அச்சுறுத்தல் முழுமையாக முடிவுக்கு வந்தது. ஹேமூவுடன் வந்த ஆப்கானியர்கள் பலர் போரில் தோற்ற கையோடு மீண்டும் பீகார் பகுதிக்குத் திரும்பிவிட்டனர். பீகார் ஆட்சியாளர் அடில் ஷா, வங்காள முற்றுகையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்தார். மற்றொரு ஆப்கானியரான சிக்கந்தர் ஷா, ஜம்மு பகுதியில் இருந்த மான்கோட் கோட்டையில் வைத்து அக்பரிடமே நேரடியாகச் சரணடைந்தார்.
சிக்கந்தர் ஷாவைச் சிறைபிடிக்க ஜம்முவில் அக்பர் முகாமிட்டிருந்த அதேவேளையில் முகலாய அரச குடும்பத்துப் பெண்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அக்பரின் தாய் அமீதா பானு பேகம், பெரியம்மா பெகா பேகம், ஹூமாயூனின் தங்கை குல்பதன் பேகம், அக்பரின் வளர்ப்புத்தாய் ஜிஜி அங்கா ஆகியோர் அக்பரைப் பாதுஷாவாகப் பார்த்துப் பூரித்துப்போனார்கள்.
குடும்பத்துடன் ஒன்றுசேர்ந்ததும் சில காலமாக முகலாய அரசுக்குள் புகைந்துகொண்டிருந்த பிரச்சனை ஒன்றைத் தீர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அக்பர். விசுவாசமும் அதிகாரமும் ஒன்றோடொன்று கலந்திருந்த அந்தப் பிரச்சனையை, நிதானமாகவும் தீர்க்கமாகவும் கையாண்டு இன்னமும் தான் சிறுவன் அல்ல, முகலாயர்களின் பாதுஷா எனப் பலருக்கும் ஆணித்தரமாக நிரூபித்தார் அக்பர்.
(தொடரும்)