இளம்வயதில் திருமணம் செய்துகொண்ட அக்பருக்கு வரிசையாகப் பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவற்றில் ஆண் பிள்ளைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோனார்கள். இந்தத் தொடர் மரணங்களால் கலங்கிப்போனார் அக்பர். 1568ஆம் வருடத்தின் இறுதியில் மீண்டும் கருவுற்றார் ஹர்க்கா பாய். ஆனால், இதற்கு அக்பரால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.
இந்த முறை ஆண் குழந்தை பிறந்து அது பிஞ்சிலேயே இறந்துவிட்டால் என்ன செய்வது எனக் கவலை கொண்டார். இதனால் நேராக அஜ்மீர் தர்காவுக்குச் சென்று, குழந்தை நன்றாகப் பிறந்தால் ஆக்ராவிலிருந்து நடந்து வருவதாக வேண்டிக்கொண்டார். மேலும் ஆக்ராவுக்கு அருகே சிக்ரி என்ற இடத்தில் வாழ்ந்து வந்த சூஃபி துறவி சலீமுதீன் சிஷ்டி குறித்துக் கேள்விப்பட்டார் அக்பர்.
உடலின் கீழ் பாகத்தை மட்டும் ஒரு வெள்ளை நிற அங்கியால் மறைத்துக்கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த சலீமுதீன் சிஷ்டி, தன்னை நாடி வரும் மக்களின் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். எனவே சிக்ரிக்குச் சென்று சலீமுதீன் சிஷ்டியிடம் தன் மனக்கவலையைக் கொட்டினார் அக்பர். இந்த முறை உனக்குப் பிறக்கும் மகனுக்கு எதுவும் ஆகாது என அக்பருக்கு வாக்கு கொடுத்தார் சலீமுதீன் சிஷ்டி.
சிக்ரியில் சலீமுதீன் சிஷ்டியின் இருப்பிடத்துக்கு அருகே சகலவித வசதிகளுடன் ஹர்க்கா பாய்க்கு வசிப்பிடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார் அக்பர். பிரசவம் முடியும் வரை அவரை அங்கேயே இருக்கச் செய்தார். ஆகஸ்ட் மாதம் 1569 அன்று தேக ஆரோக்கியத்துடன் மகனைப் பெற்றெடுத்தார் ஹர்க்கா பாய். சலீமுதீன் சிஷ்டியின் வாக்குப்படி பிறந்த மகனுக்கு சலீம் (முழுப்பெயர், நூர்-உத்-தீன் முகமது சலீம்) என்று பெயரிட்டார் அக்பர். அடுத்த சில நாட்கள் ஆக்ரா நகரமே விழாக்கோலம் பூண்டது.
1570ஆம் வருடத்தின் தொடக்கத்தில் தன் வேண்டுதலை நிறைவேற்ற ஆக்ராவிலிருந்து அஜ்மீருக்கு நடந்து சென்றார் அக்பர். பொன், பொருள், பணம் எனக் கணக்கு வழக்கில்லாமல் அஜ்மீர் தர்காவுக்கு அள்ளிக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அக்பர் உத்தரவின் பேரில் அஜ்மீரில் கோட்டை கட்டும் பணி தொடங்கியது.
அன்றைய இஸ்லாமிய மார்க்கத்துக்குள் உலேமாக்கள், சூஃபிக்கள் என இரு வேறு மதிக்கத்தக்கப் பிரிவினர் இருந்தனர். இதில் உலேமாக்கள் என்பவர்கள் இஸ்லாமிய மதக் குருமார்கள். இவர்கள் இஸ்லாமியப் புனித நூலான குரானிலும், இஸ்லாமிய மதச் சட்டமான ஷரியாவிலும் கரை கண்டவர்கள். அப்போது இருந்த இஸ்லாமிய அரசுகள் (முகலாய அரசு உட்பட) பலவற்றிலும் உயரிய பொறுப்பில் இருந்த உலேமாக்கள், மதக்கண்ணோட்டத்தில் எது சரி, எது தவறு என்பதை மன்னர்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியைச் செய்துவந்தனர்.
ஆனால் சூஃபிக்கள் இஸ்லாமியத் துறவிகள். இவர்களும் உலேமாக்களைப்போல அல்லாவைத் தனிப்பெரும் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் இவர்கள் குரான், ஹதீத் போன்ற இஸ்லாமிய மதப் போதனைகளுக்கும், ஷரியா சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாதவர்கள். பாடல், நடனம், இசை, தியானம், விரதம் போன்றவற்றின் வழியாகவும் இறைவனை அடையலாம் என்று இவர்கள் மக்களுக்கு வழிகாட்டினார்கள்.
இது மட்டுமல்லாமல் சூஃபி துறவிகள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். இவர்களின் ஆசிகள் மக்களின் குறைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்தன. இந்தச் சூஃபி துறவிகள் இறந்த பிறகு அவர்களைப் புதைத்த இடங்களுக்கு மேல் தர்காக்கள் கட்டப்பட்டன. அந்தத் தர்காக்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட மக்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்பேர்ப்பட்ட இடங்கள்தான் டெல்லியில் இருந்த நிஜாமுதீன் அவ்லியா தர்காவும், அஜ்மீரிலிருந்த மொய்னுதீன் சிஷ்டி தர்காவும்.
மேலும் அன்றைய இந்தியாவில் நாக்க்ஷபந்தி, சிஷ்டி, கத்ரியா, சுஹ்ரவர்தியா போன்ற பத்துக்கும் மேற்பட்ட சூஃபி பிரிவுகள் இருந்தன. அக்பர் தொடங்கி அவருக்குப் பின் அரியணையேறிய முகலாய பாதுஷாக்கள் பலரும் சிஷ்டி துறவிகளின் பரமப் பக்தர்கள் ஆனார்கள். இதற்கு முக்கியக் காரணம் பிற சூஃபி பிரிவினர் போலில்லாமல் சிஷ்டி துறவிகளிடம் இருந்த பரந்த மனப்பான்மை.
உதாரணத்துக்கு நாக்க்ஷபந்தி பிரிவைச் சேர்ந்த சூஃபி துறவிகள் இஸ்லாத்துக்கு எதிரானது என அவர்கள் கருதிய பிற மதத்தவர்களின் செயல்களைக் கண்டித்தனர், மேலும் அன்று இருந்த சில இஸ்லாமிய ராஜ்ஜியங்களில் அரசுப் பதவிகளை வகித்தனர்.
ஆனால் சிஷ்டி துறவிகள் ஆட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகி இருந்தனர். தங்களை நாடி வந்த பிற மதத்தவர்களிடம் எந்தப் பாகுபாடும் காட்டாமல் ஆசி வழங்கினார்கள். இறைவன் காட்டும் அன்பையும், கருணையையும் மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. அவை மத வித்தியாசங்களைத் தாண்டி அனைத்து மக்களுக்குமானது என்ற உயரிய எண்ணம் சிஷ்டிகளிடம் இருந்தது.
அப்போது துருக் சன்னிகளைத் தாண்டி, பாரசீக ஷியாக்களையும், இந்துக்களையும் அதிக அளவில் அரசுப் பணியில் சேர்க்க ஆரம்பித்திருந்தார் அக்பர். அதுபோக ராஜபுத்திரர்களுடன் நட்புறவைப் பேணத் திருமணத்தை ஒரு கருவியாக உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தார். எனவே மத சம்பந்தப்பட்ட விசயங்களில் அக்பரின் மனவோட்டத்துக்குச் சிஷ்டி துறவிகளின் எண்ணம் ஒத்துப்போனது. மேலும் சலீமுதீன் சிஷ்டியைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகு, சலீம், முராத், தானியல் என வரிசையாக மகன்கள் பிறந்து அனைவருமே ஆரோக்கியத்துடன் இருந்ததால் சிஷ்டி துறவிகளை மேலும் தீவிரமாகப் பின்பற்ற ஆரம்பித்தார் அக்பர்.
இந்தக் காலகட்டத்தில் மேலும் சில ராஜபுத்திரப் பெண்களை அக்பர் மணந்தார். ஆக்ரா கோட்டையின் அந்தப்புரத்தில் நுழைந்த அவர்கள் யாரும் மதம் மாறவில்லை. அவர்களின் மொழி, உணவுப் பழக்கம், உடை, வழிபாட்டு முறை என ராஜபுத்திர கலாச்சாரம் முழுவதையும் ஆக்ரா கோட்டைக்குக் கொண்டுவந்து தங்களின் பிறந்த வீடுகளில் இருந்ததைப் போலவே அங்கேயும் இருந்தனர். தீபாவளி, பஞ்சமி, ஹோலி, தசரா, ரக்ஷா பந்தன் போன்ற இந்துப் பண்டிகைகளை எந்தவிதச் சிக்கலுமின்றி அவர்கள் ஆக்ராவில் கொண்டாடினார்கள். அந்தக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் அக்பர் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்து மதம் சார்ந்த பல விசயங்களில் அக்பரின் பார்வை ஒருதலைப்பட்சமாக இல்லாமல் கொஞ்சம் விரிவாக இருந்ததற்கு, புதிதாக அமைந்த ராஜபுத்திரப் பந்தமும் ஒரு வகையில் காரணமாக இருந்தது. ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. ஏனென்றால் இயல்பாகவே அக்பரிடம் மதச் சகிப்புத்தன்மை மிகுந்து இருந்தது. அதற்கு எடுத்துக்காட்டாகத் தன் 21 வயதில் அக்பர் ஜிசியா வரியை ரத்து செய்ததைக் கூறலாம்.
மதத்தைப் பற்றி மட்டுமல்லாமல் எந்த ஒரு விசயமானாலும் இறுதி முடிவெடுக்கும் முன்பு பிறரது கருத்துகளைக் கேட்டுக்கொள்வார் அக்பர். ஆனால் யார் என்ன சொன்னாலும், முடிவு அவருடையதாக மட்டுமே இருக்கும். யார் முயற்சி செய்தாலும் அக்பரின் எண்ணங்களை அவ்வளவு சுலபமாகக் கட்டுப்படுத்திவிட முடியாது. மேலும் ஆன்மீக ரீதியிலான விசயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைத் தாண்டி, சொந்த அனுபவத்தின் வழியாகப் பல முறை உணர்ந்து கொண்டிருக்கிறார் அக்பர்.
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் சலீமை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த ஹர்க்கா பாய்க்குத் திடீரென ஏதோ பிரச்சனை ஏற்பட்டது. அந்தப் பிரச்சனை சரியாக இனிமேல் வெள்ளிக்கிழமை நாளில் வேட்டையாட மாட்டேன் என வேண்டிக்கொண்டார் அக்பர். அவரது வேண்டுதல் நிறைவேறியதால் அதன் பிறகு வெள்ளிக்கிழமை நாளில் வேட்டையாடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.
மேலும் விரதமிருக்கும் பழக்கத்தைத் தன் ராஜபுத்திர மனைவிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் அக்பர். அது மட்டுமல்லாமல் வருடங்கள் செல்லச் செல்ல அசைவ உணவுப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் குறைத்துக்கொண்டார். இப்படிச் சைவ உணவுப் பழக்கத்தை நோக்கி அக்பரை நகர்த்தியதன் பின்னணியில், அவரது ராஜபுத்திர மனைவிகள், யோகிகள், பீர்பால், தோடர் மால் எனப் பலரும் இருந்தனர். பாசிப்பருப்பு, அரிசி, நெய் என மூன்றையும் சரிக்குச் சமமான அளவில் கலந்து செய்யப்படும் கிச்சடி, அக்பர் விரும்பி உண்ணும் சைவ உணவுகளில் முக்கியமானது.
0
1571ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவிலிருந்து நிரந்தரமாக சிக்ரிக்குக் குடிபெயர்ந்தார் அக்பர். அங்கே முகலாய அரசு நிர்வாகத்தில் பல புதுமைகளைப் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக முன்பு அட்கா கானிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பு இப்போது தோடர் மாலிடம் கொடுக்கப்பட்டது.
அதாவது முகலாய ராஜ்ஜியத்தில் புதிய வரி வசூல் முறையைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பை தோடர் மாலிடம் ஒப்படைத்தார் அக்பர். இதனால் மாகாண வாரியாக விளைவிக்கப்படும் பயிர்கள், விளைநிலங்களின் எண்ணிக்கை, விளைச்சலின் அளவு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அடுத்த சில வருடங்கள் முகலாய ராஜ்ஜியம் முழுக்கப் பயணம் செய்தார் தோடர் மால்.
சிக்ரி வந்த கையோடு துரோகிகளைக் களையெடுக்க ஒரு புதிய படையெடுப்புக்குத் தயாரானார் அக்பர். இந்த முறை அவர் சென்ற பகுதியில் பல புதிய விசயங்களை முதல்முறையாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மேலும் இந்தப் படையெடுப்பின் ஒரு பகுதியாக அந்தக் காலகட்டத்தில் எவரும் செய்திடாத ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டினார் அக்பர்.
(தொடரும்)