Skip to content
Home » அக்பர் #17 – சொர்க்க நகரம்

அக்பர் #17 – சொர்க்க நகரம்

சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை, தோட்டங்கள், சந்தைகள் என ஒரு சிறு நகரமே அங்கு உருவானது. தன் குஜராத் வெற்றியைக் குறிக்கும்படி சிக்ரியில் கட்டப்பட்டு வந்த கோட்டை நகரத்துக்கு ஃபதேபூர் என்று பெயரிட்டார் அக்பர். கோட்டையின் பெயரும், இடத்தின் பெயரும் இணைந்து பின்னாளில் அந்தக் கோட்டை நகரம் ‘ஃபதேபூர் சிக்ரி’ என்றழைக்கப்பட்டது.

முன்பு டெல்லியில் இருந்த அக்பர் ஆக்ராவுக்குக் குடிபெயர்ந்ததும் அங்கிருந்த பதல்கர் கோட்டை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் அக்பர் விருப்பத்தின் பெயரில் புதிதாகக் கட்டப்பட்ட முதல் கோட்டை ஃபதேபூர் சிக்ரி. தைமூரிய, ராஜஸ்தானிய, குஜராத்தியக் கட்டடக்கலைகளின் முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவானது ஃபதேபூர் சிக்ரி.

ஃபதேபூர் சிக்ரியில் முதலில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்களில் ஜாமி மசூதியும் ஒன்று. இந்துக் கோவில்களின் வடிவமைப்பு அம்சங்கள் ஜாமி மசூதியில் உபயோகப்படுத்தப்பட்டன. சூஃபி துறவி சலீமுதீன் சிஷ்டி இறந்ததும் ஜாமி மசூதிக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டார். அக்பர் குஜராத் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ‘பூளந் தர்வாசா’ (வெற்றியின் நுழைவாயில்) என்ற பெயரில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 130 அடி நீளத்திலான நுழைவாயில் ஜாமி மசூதிக்கு வெளியே கட்டப்பட்டது.

ராஜஸ்தான் பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட மணற்கற்கள், பளிங்குக்கற்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் ஐந்து வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டது ஃபதேபூர் சிக்ரி. அங்கு அரச குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளுக்கும் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

கட்டுமானங்கள் முடிந்ததும் கோட்டையிலிருந்த கட்டடங்களின் உட்சுவர்களில் அக்பர் உத்தரவின் பெயரில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன. இந்த ஓவியங்களில் இருந்த இயற்கைக் காட்சிகள், தேவதைகள், விலங்குகள் போன்ற அனைத்தும் உயிருடன் இருப்பதைப்போல அவ்வளவு நேர்த்தியுடன் தீட்டப்பட்டிருந்தன.

இது மட்டுமல்லாமல் கோட்டையின் பொது இடங்கள் மல்லிகை, ரோஜா, சாமந்தி, துலிப் போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. மேலும் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற வகையிலான மலர்கள் கோட்டை முழுக்க ஆங்காங்கே குவளைகளில் வைக்கப்பட்டன.

அக்பரின் குஜராத் வெற்றிக்குப் பிறகு அவரைப் பாராட்ட ஃபதேபூருக்கு வந்தார் பெகா பேகம். தன் பெரியம்மாவின் வருகையைச் சிறப்பிக்க மாபெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார் அக்பர். காலப்போக்கில் சிறப்பு நாட்களிலும், விருந்தினர்களைக் கௌரவிக்கவும், வெற்றியைக் கொண்டாடவும் பிரம்மாண்ட விருந்தளிப்பது நடைமுறையானது.

தலைமை சமையல்காரர் உட்பட நூற்றுக்கணக்கான சமையல்காரர்கள், உணவை ருசிபார்ப்பவர்கள், வேலையாட்கள், கணக்காளர்கள், குமாஸ்தாக்கள் என அரண்மனைச் சமையல்களுக்காக ஒரு தனித் துறை முகலாய அரசில் செயல்பட்டது. சமைக்கப்போகும் உணவுப் பதார்த்தங்களுக்கு ஏற்ப அதில் எந்தெந்த மருத்துவக் குணம் கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட வேண்டுமென்ற பட்டியலை அக்பரின் தலைமை வைத்தியர் முதலிலேயே கொடுத்துவிடுவார்.

இறைச்சியில் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துச் சமைக்கப்பட்ட ‘டோபியாஸா’, இறைச்சியுடன் மசாலா பொருட்களைச் சேர்த்து நீண்ட நேரம் இளஞ்சூட்டில் சமைக்கப்பட்ட ‘டம்புக்ட்’ போன்றவை அன்றைய முகலாயச் சமையலறையில் தயாரான பிரத்யேக உணவுகள். அதிலும் முகலாய-ராஜபுத்திர உறவுகள் தொடங்கிய பிறகு பல்வேறு ராஜபுத்திர உணவுகள் முகலாய விருந்திலும், அக்பரின் உணவுப்பட்டியலிலும் இடம் பெற்றன. கோழி இறைச்சியில் சமைக்கப்பட்ட ‘முர்க் ஜமின்டோஸ்’ என்ற பதார்த்தம் முகலாய-ராஜபுத்திரச் சமையல் முறைகளின் இணைப்பில் உருவான உணவுகளில் மிக முக்கியமானது.

முகலாய உணவு முறையில் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் விலை உயர்ந்ததாக இருந்த முலாம்பழம், ஆப்பிள், செர்ரி, பேரிக்காய், அன்னாசி போன்ற பழங்களும், வால்நட், பாதாம் போன்ற உலர் பழங்களும் அரசுத் தோட்டங்களில் விளைவிக்கப்பட்டன.

மத்திய ஆசியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் வரவழைக்கப்பட்ட தோட்டக்கலை நிபுணர்கள் அரசுத் தோட்டங்களைச் சிறப்பாகப் பராமரித்தனர். இமய மலைத்தொடரிலிருந்து தருவிக்கப்பட்ட பனிக்கட்டிகள் இனிப்பு பதார்த்தங்களிலும், குளிர்பானங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன.

இயல்பாகவே உணவுப் பிரியராக இருந்த அக்பர் வருடங்கள் செல்லச் செல்லத் தன் உணவு முறையில் அதிகக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டார். அதிலும் பிற்காலத்தில் ஒரு நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே உணவு உண்பதை அவர் வழக்கமாக்கிக்கொண்டார். ஆனால் எப்போதும் தனக்கென விதிக்கும் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் பிறர் மீது அவர் திணித்ததில்லை.

0

1573ஆம் வருடத்தின் இறுதியில் நான்கு வயதான இளவரசன் சலீமுக்குக் கல்வி கற்பிக்க ஆசிரியரை நியமித்தார் அக்பர். இதே வயதில் தன்னுடைய கல்வியை அக்பர் புறந்தள்ளியிருந்தாலும் ஒரு தந்தையாகத் தன் மகனின் கல்வியைப் புறந்தள்ள அவர் விரும்பவில்லை. ஆசிரியர்களிடம் அடுத்த சில வருடங்கள் நன்கு கற்றுத் தேர்ந்த சலீம், பின்னாளில் பாரசீக மொழியில் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக உருவானான்.

முகலாய அரசில் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகளின் பிள்ளைகள், போரில் மரணமடைந்த அதிகாரிகளின் பிள்ளைகள் போன்றோரையும் கல்வி கற்க வைத்தார் அக்பர். ஒரு சிறுவனின் தனித்திறமையை அக்பர் கவனித்துவிட்டால், அது சார்ந்த பயிற்சியை அவனுக்குக் கொடுத்து அந்தச் சிறுவனுக்குள் இருக்கும் திறமையை மெருகேற்றுவதில் அவர் தனிக் கவனம் எடுத்துக் கொள்வார்.

1574ஆம் வருடத்தில் ‘மக்டப் கானா’ என்றழைக்கப்பட்ட மொழிபெயர்ப்புத் துறையை ஃபதேபூர் சிக்ரியில் தொடங்கினார் அக்பர். பஞ்சதந்திரம், ராஜதரங்கிணி போன்ற சமஸ்கிருத நூல்களும், அரேபிய மொழியில் இருந்த தகவல் களஞ்சியங்களும் பாரசீக மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டன. சாகடாய்-துருக்கிய மொழியில் எழுதப்பட்ட பாபரின் சுயசரிதையான பாபர் நாமாகூட பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

பாரசீக மொழிக்கு அக்பர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததற்குக் காரணம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆக்ரா பகுதியில் ப்ரஜ் போலி, அலகாபாத் பகுதியில் ஆவாதி, ராஜஸ்தான் பகுதியில் மார்வாரி, மேவாரி போன்ற பல வட்டார மொழிகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் பகுதிகளின் இணைப்பு மொழியாக இப்போது இருக்கும் ஹிந்தி அச்சமயம் உருவாகியிருக்கவில்லை.

அதேநேரம் அமைச்சர்கள் முதல் கீழ்நிலைப் பணியாளர்கள் வரை துருக்கியர்கள், பாரசீகர்கள், இந்திய இஸ்லாமியர்கள், உஸ்பெக்கியர்கள், ராஜபுத்திரர்கள், கயஸ்தாக்கள் என வெவ்வேறு பின்னணியைக் கொண்ட பலரும் முகலாய அரசில் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க ஓர் இணைப்பு மொழி அக்பருக்குத் தேவைப்பட்டது. அக்பரின் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தது பாரசீக மொழி.

கஜினி முகமது காலத்தில் இந்தியாவுக்கு வந்த பாரசீக மொழி, டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் அலுவல் மொழியானது. அப்போது வடக்கே காஷ்மீரிலிருந்து, தெற்கே தக்காணம் வரையிலும், மேற்கே சிந்து பகுதியிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் சராளமாகப் புழங்கியது பாரசீக மொழி. இதனால் முழுமையடைந்த பாரசீக மொழியை முகலாய அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக்கினார் அக்பர்.

மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஓவியங்களுக்கும் கொடுத்தார் அக்பர். ஓவியம் வரைவதற்கென ‘தஸ்வீர் கானா’ என்ற பெயரில் ஒரு தனிப் பணிமனையை அவர் உருவாக்கினார். அங்கே சிறு வயதிலிருந்து அக்பர் கேட்டு வியந்த பாரசீகக் கதைகளான ஹம்ஸா நாமா, டூட்டி நாமா போன்றவை ஓவியங்களாக உருவாகின.

இதன்மூலம் ஓவியங்களைத் தீட்ட ஹூமாயூன் உருவாக்கிய துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் அக்பர். மேலும் ஓவியங்கள் தீட்டும் பணியில் அவ்வப்போது அக்பரும் கலந்துகொண்டார். பாரசீக-துருக்கிய-இந்திய அம்சங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய ஓவியம் தீட்டும் பாணி அக்பர் காலத்தில் உருவானது. மெச்சத்தக்க ஓவியங்களுக்குப் பாராட்டுகளுடன், வெகுமதிகளையும் வாரி வழங்கினார் அக்பர்.

பஸ்வான், தஸ்வந்த், மிஸ்கின் போன்ற பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமையான ஓவியர்களாக அவர் உருவாக்கினார். ஒருகட்டத்தில் சுமார் 250 ஓவியர்கள் வரை தஸ்வீர் கானாவில் பணிபுரிந்தனர். இந்தப் பட்டியலில் சில பெண்களும் அடக்கம்.

இப்படியாக ஃபதேபூர் சிக்ரியில் பல புதிய முயற்சிகளை அக்பர் முன்னெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கிழக்குப் பகுதியில் உருவாகியிருந்த ஒரு பிரச்சனையைக் குறிப்பிட்டு ஜான்பூரிலிருந்து அக்பருக்கு விலாவாரியாகக் கடிதம் அனுப்பினார் அந்த மாகாணத்தின் ஆளுநர் முனிம் கான்.

பீகார் பகுதியை முன்பு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அடில் ஷா மரணமடைந்ததும் அங்கிருந்த ஆப்கானியர்களுக்குத் தலைவரானார் தாஜ்கான் கராணி. பீகாரையும் வங்காளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாஜ்கான், உஸ்பெக்கியர்கள் கலகத்தை அடக்க அக்பர் ஜான்பூருக்கு வந்தபோது அதில் தலையிடாமல் ஒதுங்கியிருந்தார்.

தாஜ்கானுக்குப் பிறகு பதவிக்கு வந்த சுலைமான் கராணி ஒருபடி மேலே சென்று அக்பரின் தலைமையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதனால் சில காலம் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவியது.

ஆனால் 1572ஆம் வருடம் சுலைமானுக்குப் பிறகு பதவிக்கு வந்த தவுத்கான் கராணி அக்பரின் தலைமையை ஏற்க மறுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் கிழக்குப் பகுதியில் இருந்த ஆப்கானியர்களை ஒருங்கிணைத்து தன் படையை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார் தவுத்கான். எனவே இந்தப் பிரச்சனை குறித்துத்தான் அக்பருக்குக் கடிதம் எழுதியிருந்தார் முனிம்கான்.

ஆப்கானியப் பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்த அக்பர், கிழக்குப் பகுதிக்குப் படையெடுத்துச் செல்லத் தயாரானார். ஆனால் எப்போதும் இல்லாதபடி இந்தப் படையெடுப்பை அவர் வித்தியாசமான முறையில் மேற்கொண்டார்.

(தொடரும்)

 

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *