Skip to content
Home » அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

1574ஆம் வருடம் ஜூன் மாதம் படைகளைத் தயார்ப்படுத்திய அக்பர், இந்தமுறை யமுனை நதியில் படகுச் சவாரி செய்து பீகார் படையெடுப்பை நடத்த முடிவுசெய்தார். அக்பருடன் உயரதிகாரிகளும், அரச குடும்பத்தினரும் படகுகளில் பயணப்பட்டனர். நதிக்கு அருகே தரைவழியாகப் பயணப்பட்டது முகலாயப் படை. இந்தப் படையெடுப்பில் கலந்துகொள்ள அக்பருக்குப் பிடித்த போர் யானைகள் பால் சுந்தரும், சமனும் அவற்றுக்கான படகுகளில் பயணப்பட்டன.

மிகப்பெரிய அளவில் இல்லையென்றாலும் ஒரு தேர்ந்த கடற்படையை உருவாக்கியிருந்தார் அக்பர். நதிகள், கடலோரங்களில் மட்டும் முகலாயக் கடற்படைப் படகுகள் செயல்பட்டதால் அவை அளவில் சிறியதாக இருந்தன. ஆனால் தேக்கு, சுந்தரி மரக்கட்டைகளில் செய்யப்பட்டிருந்ததால் அவை உறுதித்தன்மையுடன் இருந்தன.

ஆக்ராவிலிருந்து அக்பர் படகில் கிளம்பிய நேரம் மழைக்காலத்தின் தொடக்கமாக இருந்தது. எனவே மழையின் சீற்றம் அதிகரித்தபோதெல்லாம் பயணம் நிறுத்தப்பட்டது. அப்போது வேட்டையாடுவதிலும், கதை கேட்பதிலும் நேரத்தைச் செலவிட்டார் அக்பர். சில நேரங்களில் மழை பெய்தாலும் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.

யமுனை நதியில் பயணப்பட்டு ஓரிரு வாரங்களில் அலகாபாத்தை அடைந்தன முகலாயப் படகுகள். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவுக்குப் பெயர்போன நகரம் அலகாபாத். ஆசாபாசங்களைத் துறந்து, நீள தாடியுடன் நிர்வாணமாகத் திரியும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் அங்கே இருந்தனர். இந்தப் புராதன நகரம் அக்பருக்கு மிகவும் பிடித்துப்போனதால் பிற்காலத்தில் அவர் இங்கே ஒரு கோட்டையைக் கட்டினார்.

இமய மலைத்தொடரில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியானாலும் யமுனையும் கங்கையும் அலகாபாதில் ஒன்று சேர்ந்தன. இங்கு யமுனை நதி கங்கையில் கலந்ததால், அலகாபாதிலிருந்து கங்கை நதியில் பயணத்தைத் தொடர்ந்தன முகலாயப் படகுகள்.

அலகாபாத்தைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது கனமழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்து. எனவே காசியில் நங்கூரமிட்டன முகலாயப் படகுகள். மூன்று நாட்கள் கழித்து அக்பரின் குடும்பத்தினர் காசியிலிருந்து தரைவழியாக ஜான்பூருக்குச் சென்றனர். அதேநேரம் பாட்னா நோக்கி படகில் தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார் அக்பர்.

ஓரிரு நாட்களில் அக்பர் பாட்னாவை அடைந்தபோது அங்கே இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. அதேநேரம் தரைவழியாக வந்து சேர்ந்தது முகலாயப்படை. படகிலிருந்து இறங்கிய அக்பர், பட்டத்து யானைகளில் ஒன்றான முபாரக் மீது அமர்ந்து கங்கை நதியில் இறங்கினார்.

அக்பருக்குப் பின்னால் முகலாயப் படையிலிருந்த 500 யானைகளும் வரிசையாக நதியில் இறங்கின. ஒருபக்கம் இடி முழங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் அடை மழை அசராமல் பெய்துகொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாத அக்பர் பிரம்மாண்ட அணிவகுப்பை நடத்தி நதிக்கு அக்கரையில் இருந்த ஹாஜிபூருக்குச் சென்றார். அங்கே ஏற்கெனவே படையுடன் காத்திருந்தார் முனிம்கான்.

பாட்னாவில்தான் தவுத் கான் கராணி இருந்தார். ஆனால் ஹாஜிப்பூர் கோட்டையில் அவரது ஆயுதக் கிடங்கு இருந்ததால் முதலில் அது குறிவைக்கப்பட்டது. முற்றுகையின் முடிவில் சிக்கல் ஏதுமில்லாமல் ஹாஜிப்பூர் கோட்டையைக் கைப்பற்றியது முகலாயப்படை.

விசயத்தைக் கேள்விப்பட்ட தவுத் கான் அக்பருக்குச் சமாதானத் தூதை அனுப்பினார். ஆனால் அக்பர் அதை ஏற்க மறுக்கவே, பாட்னாவிலிருந்து தப்பிச் சென்றார் தவுத் கான். தவுத் கானிடம் முகலாயப் படையைவிட இரண்டு மடங்கு பெரிய படை இருந்தது. ஆனால் அக்பர் என்ற ஒற்றை நபருக்குப் பயந்து அவர் தப்பிச்சென்றார்.

ஏனென்றால் நடக்காத காரியம் ஒன்றை நடத்திக்காட்டியிருந்தார் அக்பர். மழைக்காலத்தில், அடிக்கடி இடியுடன் வானம் பொத்துக்கொண்டு பெய்யும் அடைமழை நேரத்தில் நதியில் படகுப் பயணம் மேற்கொண்டு அசாத்தியத் துணிச்சலோடு பீகாருக்கு வந்திருந்தார் அக்பர். அவரது இந்த உறுதித்தன்மை தவுத் கானைப் பின்வாங்க வைத்தது.

தவுத் கான் விட்டுச்சென்ற படை வீரர்கள், யானைகள், ஆயுதங்கள், போர்ப்படகுகள் அனைத்தும் அக்பர் வசமாகின. அவற்றை முனிம் கான் பொறுப்பில் ஒப்படைத்தார் அக்பர். தவுத் கானைப் பிடிக்க முனிம்கானுக்கு அறிவுறுத்திவிட்டு அவர் ஜான்பூருக்குச் சென்றார். அடுத்த ஒரு மாதம் தன் குடும்பத்தினருடன் ஜான்பூரில் ஓய்வெடுத்துவிட்டு ஆக்ராவுக்குத் திரும்பினார் அக்பர்.

வேட்டையாட, போர் புரிய, ஓய்வெடுக்க என அக்பர் எங்கே சென்றாலும் தன் மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று குடும்பத்தினர் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றார். இப்படிக் குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் பழக்கம் பாபர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்தது. பாபர் இந்தப் பழக்கத்தை மத்திய ஆசியாவிலிருந்து கொண்டு வந்திருந்தார்.

ஆக்ராவுக்குத் திரும்பியதும் சில நாட்கள் கழித்து டெல்லிக்குச் சென்று அங்கிருந்த சூஃபி துறவிகளின் தர்காக்களுக்கு யாத்திரை மேற்கொண்டார் அக்பர். அப்போது வங்காளப்பகுதி கைப்பற்றப்பட்டதாக முனிம்கான் அனுப்பிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அகமகிழ்ந்துபோன அக்பர், அங்கிருந்து கிளம்பி நேரடியாக அஜ்மீருக்குச் சென்று அங்கே தன் நன்றிகளைச் செலுத்தினார்.

தவுத் கானைத் துரத்திச் சென்ற முனிம் கான் துகாரோய் எனும் இடத்தில் வைத்து அவரைத் தோற்கடித்தார். அக்பருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதியளித்த தவுத் கான் ஒடிசா பகுதியின் ஆட்சியாளரானார். பீகாரும் வங்காளமும் முகலாயர்கள் வசமாகின. ஆனால் வங்காளத்தில் பரவிய பிளேக் நோய் தாக்கி 1575ஆம் வருடம் இறந்துபோனார் முனிம் கான்.

முனிம் கான் இறப்புக்குப் பிறகு வங்காளத்தைக் கைப்பற்றிக் கொண்டார் தவுத்கான். இதனால் கான் ஜஹான் தலைமையில் முகலாயப் படையை ஆக்ராவிலிருந்து அனுப்பினார் அக்பர். பீகாருக்கும் வங்காளத்துக்கும் நடுவில் இருந்த ராஜ்மஹாலில் வைத்து கங்கை கரையில் நடந்த போரில் கொல்லப்பட்டார் தவுத்கான். இதனால் பீகார்-வங்காளப் பகுதிகள் அடுத்த பல தசாப்தங்கள் முகலாயர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்தன.

0

உறுதியான மனோதிடம், மிரட்டலான படைகள், திறமையான அதிகாரிகள், சாமர்த்தியமான வியூகங்கள் என அக்பரின் வெற்றிகளுக்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் இவற்றுக்கு நிகராக வேறொரு முக்கியக் காரணமும் அவரது வெற்றிகளுக்குப் பெருந்துணையாக இருந்தது, அதுதான் தகவல் தொடர்பு.

ராஜ்ஜியத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கடிதங்களும் செய்திகளும் உடனுக்குடன் அவரை வந்தடையும் வண்ணம் ஒரு தகவல் தொடர்புத் துறையைக் கட்டமைத்து வைத்திருந்தார் அக்பர். இந்தத் துறையில் குதிரை ஏற்றத்திலும், ஓட்டத்திலும் அசகாயச் சூரர்களாக இருந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பணியாற்றினார்கள். இரவு, பகல், வெயில், மழை, குளிர், பனி என எதையும் பொருட்படுத்தாமல் கடிதங்களையும் செய்திகளையும் சம்பந்தப்பட்ட இடங்களில் எவ்வளவு சீக்கிரமாகச் சேர்க்க முடியுமோ அதைக் கச்சிதமாகச் செய்து முடித்தனர்.

உதாரணத்துக்கு அன்றைய வங்காளத்தின் தலைநகரான கௌர் ஆக்ராவிலிருந்து 1200 கி.மீ தொலைவில் இருந்தது. ஆனால் அங்கிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் பத்தே நாட்களில் ஆக்ராவை வந்தடையும் அளவுக்குச் சுறுசுறுப்பாகப் பணியாற்றினார்கள் தகவல் தொடர்பு வீரர்கள். இதனால் முகலாய ராஜ்ஜியத்தின் எந்த மூலையில் பிரச்சனை என்றாலும் அக்பரால் உடனுக்குடன் படைகளை அனுப்பி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

மேலும் புதுமையாக, ‘மான்சப்’ என்றழைக்கப்பட்ட அதிகாரிகளுக்கான தரவரிசை முறை அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி முகலாய அரசு அதிகாரிகள் அனைவரும் வகைப்படுத்தப்பட்டனர். அப்படி வகைப்படுத்தப்பட்ட அதிகாரிகளின் படிநிலையை வைத்து அவர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

உதாரணத்துக்கு, ஒரு முகலாய அதிகாரியின் வகைமை எண் 1000 என்றால் அவர் 1000 குதிரைகளைப் பராமரிக்க வேண்டும். அந்த அதிகாரியின் உழைப்பும், 1000 குதிரைகளைப் பராமரிப்பதற்கான செலவும் கணக்கிடப்பட்டு அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் படை வீரர்களும், போர்க் குதிரைகளும் ஒவ்வொரு ராஜ்ஜியத்தின் ஆகப் பெரும் சொத்தாக இருந்தன. ராஜ்ஜியங்களுக்கு இடையே அடிக்கடி போர் நடப்பது வாடிக்கையாக இருந்த காரணத்தால் குதிரைகளின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு முகலாய அதிகாரிக்கும் இப்படிப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

சில நேரங்களில் சம்பளத்துக்குப் பதிலாக முகலாய அதிகாரிகளுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஓரு முகலாய அதிகாரியின் சம்பளத்துக்கு நிகராக அவருக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து கிடைத்த வருமானம் இருக்கும். இப்படிச் சம்பளத்துக்குப் பதிலாக ஒதுக்கப்படும் விவசாய நிலங்கள் ‘ஜாகிர்’ என்றழைக்கப்பட்டன.

அதிகாரம் நீண்ட காலம் ஓரிடத்தில் குவிந்து கிடக்கக்கூடாது என்ற காரணத்தால் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஜாகிர் நிலங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. பதவியில் இருக்கும் ஓர் அதிகாரி இறந்துவிட்டால் அவருக்கு ஒதுக்கப்பட்ட ஜாகிர் நிலங்கள் மீண்டும் அரசு வசம் சென்றுவிடும் நடைமுறை அமலில் இருந்தது.

20 முதல் 400 வரையிலான வகைமை எண் அதிகாரிகள் அரசின் கீழ்நிலை பதவிகளில் இருந்தனர். 500 முதல் 2500 வகைமை எண் அதிகாரிகள் ஆமீர் என்றழைக்கப்பட்டனர். 2500க்கும் மேற்பட்ட வகைமை எண் அதிகாரிகள் அமீர்-இ-ஆஸம் என்றழைக்கப்பட்டனர். மான் சிங், முனிம் கான், பீர்பால், தோடர்மால் போன்ற உயர் பதவிகளில் இருந்தவர்கள் 5000 வகைமை எண் அதிகாரிகளாக இருந்தனர்.

முகலாய அரசில் இப்படி நிர்வாகப் புதுமைகளைப் புகுத்திய அக்பர் அன்றைய இந்தியத் துணைக் கண்டத்தின் சக்தி வாய்ந்த மன்னராக உருவாகியிருந்தார். வடக்கே காபூலிலிருந்து தெற்கே மால்வா வரையிலும், மேற்கே குஜராத்திலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலான பகுதிகள் அக்பரின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அக்பரின் ஆளுமையையும் வெற்றிகளையும் பார்த்த பல மன்னர்கள் தாமாக முன்வந்து அவரது தலைமையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் என்ன ஆனாலும் சரி அக்பரின் தலைமையை ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருந்தார். அவரது தாத்தாவும், தந்தையும் காட்டிய முகலாய எதிர்ப்பைத்தான் இவரும் மூன்றாவது தலைமுறையாக முன்னெடுத்துச் சென்றார்.

அக்பரை எதிர்த்த அந்த நபரைப் பணிய வைக்கும் முயற்சியில் மீண்டும் ஒருமுறை போர் முரசு கொட்டியது.

(தொடரும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *