1572ஆம் வருடம் மேவார் ராஜ்ஜியத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராணா பிரதாப். இவர் (இரண்டாம்) உதய் சிங்கின் மகன். மேவார் தவிர்த்து அந்தச் சமயம் ராஜஸ்தான் பகுதியிலிருந்த ஆமீர், பிகானீர், ஜெய்சல்மீர், புந்தி, சிரோஹி போன்ற ராஜபுத்திர ராஜ்ஜியங்கள் அக்பரின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டன.
ஆனால் எந்தக் காலத்திலும் அக்பர் தலைமையை ஏற்கமாட்டேன் என்று முரண்டு பிடித்தார் ராணா. இத்தனைக்கும் அக்பரின் தலைமையை ஏற்கவைப்பதற்காகச் சில பிரத்தியேகமான சலுகைகளுடன் மான் சிங், பகவான் தாஸ், தோடர் மால் ஆகியோர் ராணாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். ஆனால் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அந்தப் பேச்சுவார்த்தை பாதியில் முறிந்தது.
அக்பருடன் கூட்டணி அமைத்த பிற ராஜபுத்திர ராஜ்ஜியங்கள் மீது ராணாவுக்குக் கோபமிருந்தது. எனவே அவர்களிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். வடக்கு மேவாரில் இருந்த சித்தூர் கோட்டை முகலாயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், உதய்பூரைத் தலைமையாகக் கொண்ட தெற்கு மேவாரின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார் ராணா.
பெரும்பாலான பகையாளிகளை ஒரு கைபார்த்தபிறகு, 1576ஆம் வருடம் மேவாரை நோக்கித் திரும்பினார் அக்பர். ஆனால் இந்தமுறை முகலாயப் படையெடுப்பை மான் சிங் தலைமையில் அனுப்ப முடிவு செய்தார். ராஜபுத்திர ராஜ்ஜியங்கள் பலவும் அக்பரின் தலைமையை அப்போது ஏற்றுக்கொண்டிருந்தாலும், அதை முதலில் செய்தவர் கச்வாஹா ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த ஆமீரின் மகாராஜா பார்மால்.
மகாராஜா பார்மாலின் மகன் பகவான் தாஸும், பேரன் மான் சிங்கும் அக்பரின் நன்மதிப்பையும், முழுநம்பிக்கையையும் பெற்றிருந்தனர். அதன் வெளிப்பாடாக ஆக்ராவிலும், ஃபதேபூர் சிக்ரிலும் கோட்டைப் பாதுகாப்பில் கச்வாஹா ராஜபுத்திர வீரர்கள் அதிகளவில் ஈடுபடுத்தினார் அக்பர்.
அதேநம்பிக்கையின் காரணமாகவே ஏப்ரல் மாதவாக்கில் ஐயாயிரம் வீரர்களுடன் ராணா பிரதாபை எதிர்கொள்ள முகலாயப் படைக்குத் தலைமையேற்று மேவாருக்கு அனுப்பிவைக்கப்பட்டார் மான் சிங்.
அப்போது உதய்பூருக்கு வடக்கே பானாஸ் நதிக்கரையில் அமைந்திருந்த ஹல்திகாட்டி என்ற இடத்தில் இருந்தார் ராணா. முகலாயப் படையின் வருகையைக் கேள்விப்பட்ட அவர், அவசரகதியில் தன் படையைத் தயார்ப்படுத்தினார். ராணாவின் படையில் மேவார் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த வேட்டையில் சிறந்து விளங்கிய பில் பழங்குடியின வீரர்கள் அதிகளவில் இருந்தனர்.
முகலாய வீரர்கள் எந்தத் திசையில் இருந்து ஹல்திகாட்டிக்கு வருவார்கள் என்பது ராணாவுக்குத் தெரியும். எனவே அவர்களைத் தாக்குவதற்குத் தோதாக, எதிர்த்திசையில் இருந்த ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு குறுகலான இடைவெளிப் பகுதியில் தன் வீரர்களை நிறுத்த அவர் முடிவு செய்தார். ராணா தேர்ந்தெடுத்த பகுதியில் மேலிருந்து கீழாகப் பாறை இடுக்குகளிலும், மரப்பொந்துகளிலும் நிறைந்து கொண்டனர் மேவார் வீரர்கள்.
0
ஜூன் மாத வெயிலின் தாக்கத்தில் வறண்டு போயிருந்தது பானஸ் நதி. அதற்கு அருகே பீரங்கிகளை இழுத்துக்கொண்டு வடகிழக்கிலிருந்து ஹல்திகாட்டிக்கு வந்தது முகலாயப்படை. முகலாய வீரர்கள் காணக் கிடைத்ததும் முன்னேறி வந்து தாக்குதலை ஆரம்பித்தனர் ஹக்கீம் சூர் பதான் தலைமையிலான ராணாவின் குதிரைப்படை. அவர்களைச் சமாளிக்கும் விதமாக ராஜா ஜெகன்னாத் தலைமையிலான முகலாயப் குதிரைப்படையும் தாக்குதலில் இறங்கியது.
நதியும் மலைத்தொடரும் சந்தித்த ஹல்திகாட்டி பகுதி, மிகவும் கரடுமுரடாகவும் ஆங்காங்கே பள்ளங்களுமாக இருந்ததால் முகலாயப் குதிரைப்படை திணறியது. இதனால் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறியது ராணாவின் படை.
கொஞ்சம் தாமதித்திருந்தாலும் ராஜா ஜெகன்னாத் கொல்லப்பட்டிருப்பார் என்ற சூழ்நிலையில், போர் யானை மீது அமர்ந்திருந்த மான் சிங் யானைப் படையுடன் களமிறங்கினார். அதைப் பார்த்த ராணா உடனடியாகத் தன் யானைப் படையைக் களமிறக்க, அந்த இடமே களேபரமானது. வில்வித்தை வீரர்கள், காலாட்படை வீரர்கள் என்று இரு பக்கத்திலிருந்தும் ஒட்டு மொத்தப் படைகளும் களமிறங்கி மோத ஆரம்பித்தனர்.
நேரம் செல்லச் செல்ல இருதரப்பு வீரர்களையும் வெயிலின் தாக்கம் கடுமையாகச் சோதித்தது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கோர வெயிலில் அதுவரை சண்டைபோட்டிராத முகலாய வீரர்கள் அதிகம் பரிதவித்துப்போனார்கள். உடலிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த அளவுகடந்த வியர்வையும், அதை ஈடுகட்ட உடலுக்குத் தேவைப்பட்ட தண்ணீரும் அவர்களைச் சோர்வடைய வைத்தது.
கொஞ்சம் விட்டிருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும் என்ற சூழ்நிலையில் சமயோசிதமாகச் செயல்பட்டார் மிஹ்டார் கான் என்ற முகலாய அதிகாரி. முகலாயப் படைக்குப் பின்புறம் இருந்த அவர் திடீரெனத் தன்னிடம் இருந்த போர் முரசை அடித்துக்கொண்டே `பாதுஷா வந்துகொண்டிருக்கிறார்’ என்று முகலாய வீரர்களைப் பார்த்துக் கத்தினார். பாதுஷா வருகிறார் என்ற அறிவிப்பைக் கேட்டதும் திமிறி எழுந்தார்கள் முகலாய வீரர்கள். அவர்கள் உடம்புகளில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டதைப்போல வெறியுடன் களமாட ஆரம்பித்தனர்.
மிஹ்டார் கானின் அதே அறிவிப்பு ராணாவின் வீரர்களைச் சோர்வடைய வைத்தது. போர்க்களத்தில் காயங்களைப் பெற்று தீரத்துடன் போராடிக்கொண்டிருந்த தங்கள் ராணாவை அவர்கள் தப்பிச் செல்ல நிர்ப்பந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையில் அவருக்கும் அது சரியென்றுபட்டதால் உடனடியாகத் தப்பிச் சென்றார்.
மிஹ்டார் கான் அறிவித்ததுபோல அக்பர் அங்கே வரவில்லை. ஆனால் அறிவிப்பின் தாக்கம் சரியாக வேலை செய்து போரில் வெற்றி பெற்றது முகலாயப்படை. முகலாயப் படையைவிட ராணாவின் படைக்கு மூன்று மடங்கு அதிக உயிரிழப்பு நேர்ந்திருந்தது. அதேநேரம் தப்பிச் சென்ற ராணாவைப் பின்தொடர்ந்து சென்று கைதுசெய்ய எந்த ஒரு முயற்சியையும் மான் சிங் எடுக்கவில்லை.
மான் சிங்கின் இந்தச் செயலுக்காக அக்பர் அவரிடம் பாரா முகம் காட்டினாலும், சில மாதங்கள் கழித்து இயல்பானார். வருங்காலத்தில் தளபதியாக முன்னின்று முகலாயப்படையைப் பல போர்களில் வெற்றிகரமாக வழிநடத்தினார் மான் சிங். ஆனால் ஹல்திகாட்டி போருக்குப் பிறகு ராஜஸ்தான் பகுதியில் நடந்த எந்த ஒரு முற்றுகைக்கும் அக்பர் மான்சிங்கை அனுப்பவில்லை.
0
அடுத்த 20 வருடங்கள் முகலாயப் படையிடம் சிக்காமல் வெற்றிகரமாக அவர்களுக்குத் தண்ணி காட்டினார் ராணா. ஆனால் கோட்டையும், அரியணையும் இல்லாமல் பில் பழங்குடியினரின் உதவியுடன் அவர் ஆரவல்லி மலைத்தொடரில் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் தன்னைப் பிடிக்க வந்த முகலாயப் படைகள் மீது அவ்வப்போது கெரில்லா தாக்குதல்களை நடத்திச் சேதாரம் விளைவித்தார் ராணா.
ராணாவின் இந்த நடவடிக்கைகள் அவரது மேவார் மக்களை வெகுவாகப் பாதித்தது. ராணாவின் தந்தை உதய் சிங்கின் காலத்திலேயே சித்தூர் கோட்டையைக் கைப்பற்றியிருந்தார் அக்பர். இதனால் ராணா பிரதாப் அரியணையேறியதும் முதல் வேலையாகச் சித்தூரைச் சுற்றியிருந்த வளமான சமவெளிப் பகுதிகளில் காலங்காலமாக விவசாயம் செய்துகொண்டிருந்த விவசாயிகளை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி தெற்கு மேவாரிலிருந்த ஆரவல்லி மலைப்பகுதியில் குடியமர்த்தினார்.
முகலாயர்கள் படையெடுத்து வந்தால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் போகவே இப்படிச் செய்தார் ராணா. ஆனால் இந்த நடவடிக்கையால் மேவார் விவசாயிகள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வாறு மேவார் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த அதேவேளையில் பிற ராஜபுத்திர ராஜ்ஜியங்கள் அனைத்தும் செழிப்பாக இருந்தன.
அக்பர் பெரிதும் மதித்த ராஜபுத்திரர்களின் வீரம் ராணா பிரதாபிடம் நிறையவே இருந்தது. சிறு வயதிலிருந்து வீரத்துக்கும் தைரியத்துக்கும் பெயர்போன தன் மூதாதையர்கள் கதையைக் கேட்டு வளர்ந்த ராணா பிரதாப், அவர்களைப்போலவே தனது இறப்புக்குப் பிறகு நாட்டுப்புறவியல் கதைகள் வழியாக என்றும் அழியாத புகழைப் பெற்றார்.
தன் தலைமையை முன்வந்து ஏற்றுக்கொண்டவர்கள் பட்டியலில் ராஜபுத்திரர்கள் மீது அக்பருக்குத் தனி மரியாதை இருந்தது. ராஜபுத்திரர்களின் மதத்துக்கோ அல்லது அவர்கள் காலங்காலமாகப் பின்பற்றிவந்த பழக்கவழக்கங்களுக்கோ ஆபத்து விளைவிப்பவராக அக்பர் என்றுமே இருந்ததில்லை. சொல்லப்போனால் தன் ராஜபுத்திர மனைவிகள் நடத்திய மதச்சடங்குகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருந்த அக்பர், இந்து மதப் பழக்கவழக்கங்கள் சிலவற்றைத் தாமாக முன்வந்து கடைப்பிடிக்கவும் ஆரம்பித்திருந்தார்.
இவ்வாறு இந்து மதம் மீது இஸ்லாமுக்கு நிகரான நன்மதிப்பை வைத்திருந்த அக்பர், பிற மதக் கோட்பாடுகளையும், அறநெறிகளையும் தெரிந்துகொள்வதில் அளவுகடந்த ஆர்வத்துடன் இருந்தார். அப்படித்தான் 1578ஆம் வருடம் அக்பரின் அழைப்பின் பெயரில் ஃபதேபூர் சிக்ரிக்கு வந்திருந்த போர்த்துகீஸியப் பாதிரியார் ஜூலியன் ஃபெரேராவிடமிருந்து கிறிஸ்தவ மதம் குறித்துப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார் அக்பர்.
இதைத் தொடர்ந்து முகலாய அரசு சார்பில் தூதுக் குழு ஒன்றை அன்றைய போர்த்துகீஸிய பிரதேசமான கோவாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். பதிலுக்கு கோவாவிலிருந்து மூன்று இளம் பாதிரியார்கள் ஃபதேபூர் சிக்ரிக்கு வந்து அக்பரின் விருந்தினர்களாக ஓரிரு வருடங்கள் தங்கியிருந்தார்கள்.
இவ்வாறு புதிய சிந்தனைகள், எண்ணங்கள், கருத்துப் பரிமாற்றங்களை ஊக்குவித்த அக்பர், மதம் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதிலும் பேரார்வத்துடன் இருந்தார். இதற்காகவே ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’ என்றழைக்கப்பட்ட ஒரு பிரத்தியேகமான இடம் அக்பர் உத்தரவின் பெயரில் கட்டப்பட்டது.
இப்படி மத விவாதங்களில் ஈடுபடத் தொடங்கியிருந்த அக்பர், திடீரென ஒருநாள் யாருமே எதிர்பாராத வண்ணம் தடாலடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அதுவரை அவருக்கும் இஸ்லாமிய மதகுருக்களான உலேமாக்களுக்கும் இருந்த இடைவெளி மேலும் அதிகரித்து, ஒருகட்டத்தில் அது பங்காளிச் சண்டையில் போய்முடிந்தது.
(தொடரும்)
____________
படம்: ராணா பிரதாப்