Skip to content
Home » அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’  கட்டிமுடிக்கப்பட்ட புதிதில் அங்கே இஸ்லாமிய மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமுக்குள் இருந்த சன்னி, ஷியா, மஹ்தாவி (சூஃபி வழி) பிரிவுகளைச் சேர்ந்த அறிஞர்களை விவாதத்துக்கு அழைத்தார் அக்பர்.

ஒவ்வொருவரும் தங்கள் பிரிவுகளின் பெருமைகளையும், எதிர் பிரிவினரின் பிழைகளையும் சுட்டிக்காட்டி விவாதித்தனர். 1579ஆம் வருடம் இஸ்லாமிய அறிஞர்களுடன், பார்சிகள், சமணர்கள், பிராமணர்கள், கிறிஸ்துவர்கள், தத்துவவாதிகள், யூதர்கள் என வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த பலரும் இபாதத் கானாவில் விவாதித்தனர்.

இந்த விவாதங்கள் வழியாக ஒவ்வொரு மதமும் மனிதனுக்கு உணர்த்த நினைத்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்பினார் அக்பர். இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றினாலும், பிற மதங்களும் அவற்றின் போதனைகளும் புனிதமானவை என்ற எண்ணம் அக்பரிடம் இருந்தது. இதற்கு உதாரணமாக கிறிஸ்தவப் பாதிரியார்கள்குழு கோவாவிலிருந்து ஃபதேபூர் சிக்ரிக்கு வருகை தந்தபோது நடந்த சம்பவத்தைக் கூறலாம்.

பாதிரியார்களில் ஒருவரான ரொடோல்ஃபோ ஆக்வாவிவா, பெல்ஜியமில் அச்சடிக்கப்பட்ட அழகிய ஓவியங்களுடன் கூடிய ஏழு பாகங்களைக் கொண்ட புத்தம் புதிய பைபிளை அக்பருக்குப் பரிசாகக் கொடுத்தார். தன் தலைப்பாகையைக் கழட்டி வைத்துவிட்டு, ஒவ்வொரு பாகத்தையும் பணிவாக வாங்கித் தன் தலையில் வைத்து ஒற்றிக்கொண்டு அவற்றில் முத்தமிட்டார் அக்பர்.

கிறிஸ்துவப் பாதிரியார்கள் இபாதத் கானா விவாதங்களில் கலந்துகொண்டார்கள். அதுபோக பைபிள் போதனைகள் குறித்து தனிப்பட்ட முறையில் அக்பரிடம் விளக்கினார்கள். போதனைகளை விரும்பிக்கேட்ட அக்பர், தனக்கு உடன்பாடில்லாத இடங்களில் தன் கருத்தை அவர்களிடம் பதிவு செய்தார்.

மதங்களை அறியும் முயற்சியில் இவ்வாறு அக்பர் ஈடுபட்டிருந்தபோது, ஷேக் முபாரக், அப்துல்லா சுல்தான்பூரி, அப்த் உன்-நபி போன்ற தலைமை உலேமாக்கள் அக்பரை இஸ்லாமின் பாதுஷாவாக அறிவித்தார்கள். இதன் அர்த்தம் அக்பர் இஸ்லாமியர்களின் மன்னர் என்பதல்ல. இனி முகலாய ராஜ்ஜியத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த விசயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் அக்பருடையது என்பதே அதன் அர்த்தம்.

இந்த அறிவிப்பின் வழியாக இத்தனை நாட்களாக அரசவை உலேமாக்களிடம் இருந்த அதிகாரம் அக்பரிடம் வழங்கப்பட்டது. ஏனென்றால் முகலாய ராஜ்ஜியத்தில் பொதுமக்கள், குறிப்பாக இந்துக்கள் செய்த சில சின்னஞ்சிறு தவறுகளை இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என்று கூறி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினார்கள் உலேமாக்கள்.

பொதுமக்களின் தவறுகளுக்கான தண்டனைகளை மதக்கண்ணோட்டத்தில் வழங்குவது தவறு என்று நினைத்தார் அக்பர். இதை உலேமாக்களிடம் சுட்டிக்காட்டியும், அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே முகலாய அரசவையின் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் தங்களிடமிருந்த அதிகாரத்தை அக்பருக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார்கள் உலேமாக்கள்.

உலேமாக்களுக்கு இதில் துளியும் விருப்பமில்லை என்பது அக்பருக்குத் தெரியும். தன்னை மீறி இந்த விசயத்தில் அவர்கள் எதுவும் செய்துவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். மேலும் அரசவையின் இந்த நடவடிக்கையை ராஜ்ஜியத்தின் பிற பகுதிகளில் இருந்த உலேமாக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் முகலாய பாதுஷாக்களின் பின்னணியை மறந்திருந்தார்கள்.

முகலாயர்கள் இஸ்லாமியர்கள்தான் அதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவர்கள் செங்கிஸ்கான் வழியில் வந்த தைமூரியர்கள். இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றி வந்தாலும், எதையும் கண்டிப்பான மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. இந்த விஷயத்தில் பாபர், ஹூமாயூனைவிட அக்பரின் கண்ணோட்டம் பரந்த நிலையில் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய அடையாளத்துக்குள் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் தன் மக்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவே அக்பர் விரும்பினார்.

இந்தக் காரணத்தால்தான் உலேமாக்களிடம் இருந்த அதிகாரம் பிடுங்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அப்துல்லா சுல்தான்பூரியும், அப்த் உன்-நபியும் அமைதியாக இல்லாததால், அவர்கள் இருவரும் இந்தியாவுக்குத் திரும்பக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுடன் மக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0

இந்தியத் துணைக்கண்டத்தில் மதங்களைத் தாண்டி அக்பர் செயல்பட்டுக் கொண்டிருந்த அதேநேரத்தில், பாரசீகத்தில் ஓர் அடக்குமுறை ஆட்சி உருவானது. இதனால் பாரசீக மக்கள் துன்பத்துக்கு உள்ளானார்கள். ஆனால் சமயோசிதமாகச் செயல்பட்ட சிலர் பாரசீகத்திலிருந்து கிளம்பி இந்தியாவுக்கு வந்தனர். அப்படி வந்தவர்களில் பலருக்கும் அவர்கள் திறமைகளுக்கு ஏற்ப முகலாய அரசில் வேலை கிடைத்தது.

இபாதத் கானா விவாதங்களைத் தொடங்கி வைத்து, மதத்தை முன்வைத்துத் தவறுகள் செய்த உலேமாக்களை வெளியேற்றி, அடைக்கலம் தேடி வந்த பாரசீக மக்களுக்குத் தஞ்சமளித்து, ஓர் ஆட்சியாளருக்கான இலக்கணத்துடன் அக்பர் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒருநாள் அக்பரின் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் பஞ்சாபின் சில பகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஒருமுறை தன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தார்.

மக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அந்த இரு உலேமாக்கள்தான் மிர்சா ஹக்கீமின் இந்தத் துணிச்சலுக்கான காரணம். திரும்பி வரக்கூடாது என்ற உத்தரவையும் மீறி அப்துல்லா சுல்தான்பூரியும், அப்த் உன்-நபியும் மக்கா பயணத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்கள். திரும்பிய கையோடு மிர்சா ஹக்கீமைப் புதிய பாதுஷாவாக அறிவித்தார்கள்.

உலேமாக்களின் அறிவிப்பு காபூலில் இருந்த 28 வயது மிர்சா ஹக்கீமை உற்சாகப்படுத்தியது. உடனே தன்னை பாபரின் உண்மையான வாரிசாக அறிவித்துக்கொண்டார். மேலும் அக்பரிடம் பணியாற்றி வந்த மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முகலாய அதிகாரிகளைத் தன் பக்கம் வந்துவிடுமாறு அறிவிப்பு வெளியிட்டார்.

ஹக்கீம் விசயத்தில் இதற்குமேல் பொறுமையுடன் இருக்க அக்பர் விரும்பவில்லை. முகலாய ஆட்சிப் பொறுப்பைத் தன் தாய் அமீதா பானு வசம் ஒப்படைத்துவிட்டு, 1581ஆம் வருடத்தின் தொடக்கத்தில் 50000 வீரர்களைக் கொண்ட படையுடன், 500 யானைகள் சகிதமாக அவர் காபூலுக்குக் கிளம்பினார். அக்பருடன் அவரது பன்னிரண்டு வயது மகன் சலீமும் சென்றார்.

டெல்லி, பானிபட் வழியாகக் காபூலுக்குப் பயணப்பட்டார் அக்பர். பிரம்மாண்டமான படையுடன் சென்றதால் தண்ணீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு கூடுமானவரை நதிகளுக்கு அருகே பயணம் நடைபெற்றது.

பயணத்தின் நடுநடுவே அக்பரைக் காண வந்த மக்கள் பலர் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் அவரிடம் கேட்டார்கள். அதிலும் சிலர் தங்களின் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து அவரிடம் ஆசி வாங்கினார்கள். அந்தக் காலகட்டத்தில் அக்பரை ஆற்றல் மிக்கவராகப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள் பொதுமக்கள்.

ஏனென்றால் அதுவரை அக்பர் தொட்டதெல்லாம் வெற்றியில் முடிந்தது. தோல்வி என்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாதவராக அவர் இருந்தார். சிக்கலான சூழ்நிலைகளிலும்கூட அக்பருக்குக் கிடைத்த அடுத்தடுத்த வெற்றிகளால் அவரிடம் மனித சக்தியை மீறிய ஆற்றல் இருப்பதாக முகலாய வீரர்கள் நம்ப ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அக்பர் அறிந்து வைத்திருந்தார். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அப்போது ஞானத்தின் தேடலில் இருந்தார் அக்பர். காபூல் செல்லும் வழியில் தான் சந்தித்த சூஃபி துறவிகளுடன் உணர்ச்சிபொங்க ஆன்மீக விவாதங்களில் ஈடுபட்டார். இது மட்டுமல்லாமல் பாதிரியார்களையும், பிராமணர்களையும் விவாதத்துக்காக காபூலுக்கு அழைத்துச் சென்றார்.

சில மாதப் பயணத்துக்குப் பிறகு, முகலாயப் படை காபூலைச் சென்றடைந்ததும் நகருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த ஹக்கீம் படையை நேரடியாகச் சந்தித்தது.

ஒருபக்கம் யானைகள் மீது உறுதியாக அமர்ந்திருந்த முகலாய வீரர்கள் கைத்துப்பாக்கிகளை வைத்து ஹக்கீம் படையைச் சிதறடித்தனர். மறுபக்கம் துல்லியமாக அம்பெய்திய முகலாய வீரர்களும், ஈட்டியையும் வாளையும் உபயோகித்த ராஜபுத்திர வீரர்களும், ஹக்கீமின் வீரர்களைத் துவம்சம் செய்தனர். முகலாயப்படையின் பலமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போர்க்களத்திலிருந்து தப்பியோடினார் ஹக்கீம்.

போர் முடிந்ததும் தான் சிறுவனாகச் சுற்றித் திரிந்த இடங்களிலெல்லாம் சாவகாசமாக வலம்வந்தார் அக்பர். பிறகு தன் தாத்தா பாபர் புதைக்கப்பட்ட தோட்டத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து காபூலின் ஆட்சியை ஹக்கீமின் சகோதரி பக்த் உன்-நிசா பேகத்திடம் அளித்தார் அக்பர். ஹக்கீமைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்ய வேண்டுமென முகலாய அதிகாரிகள் கூறியதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ‘நன்றியில்லாமல் நடந்துகொண்டிருந்தாலும் ஹக்கீம் என் தந்தை வழி வந்தவன், அவனை மன்னிப்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது’ என்றார் அக்பர்.

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ காபூல் பிராந்தியத்தைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் என்ன இருந்தாலும் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் என்பதால் ஹக்கீம் காபூலை ஆட்சிசெய்துவிட்டு போகட்டும் என்று நினைத்தார் அக்பர். அதனால்தான் முன்பு இதேபோல பிரச்சனை ஏற்பட்டபோது ஹக்கீமுக்கு எதிராக அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரிக்கை மட்டும் விடுத்தார்.

சில நாட்கள் காபூலில் இருந்துவிட்டுப் பிறகு ஃபதேபூர் சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். அப்போது அவருக்குச் சரி நிகர் சவாலாக எதிரிகள் இல்லாத நிலை இருந்தது. அசைக்க முடியாத ஓர் இடத்தை இத்தனை வருட உழைப்பில் அடைந்திருந்தார் அக்பர்.

அடுத்த சில வருடங்கள் ஒருசில சலசலப்புகள் தவிர்த்து முகலாய ராஜ்ஜியத்தில் பெரிதளவு அமைதி நிலவியது. அந்த அமைதிக்கு நடுவே ஒரு மாபெரும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தயாராகின.

(தொடரும்)

____________
படம்:  Akbar meeting the Jesuit missionaries Rodolfo Acquaviva and Francisco Henriques. Illustration to the Akbarnama by Nar Singh, c. 1605

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *