1582ஆம் வருடம் ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தன் நாற்பதாவது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார் அக்பர். தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைத் திரவியங்கள், இரும்பு, செம்பு, துத்த நாகம், உப்பு, பால், நெய், ஏழு வகையான தானியங்கள், மருந்துகள் ஆகிய பன்னிரண்டு பொருட்கள் அக்பரின் எடைக்கு நிகராக அளக்கப்பட்டு மத வேறுபாடின்றி ஏழை எளிய மக்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன.
தன் மக்களின் நலனுக்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தினார் அக்பர். ஆலோசனையின் முடிவில் வெளியிடப்பட்ட உத்தரவுகளில், இனி பன்னிரண்டு வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்குத் திருமணம் செய்து வைக்கக்கூடாது என்ற உத்தரவு மிக முக்கியமானது.
மேலும் திருமணம் செய்யச் சிறுவர்களுக்கு 16 வயதும், சிறுமிகளுக்கு 14 வயதும் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளைக் கண்டிப்பான முறையில் நிறைவேற்ற அரசு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
நாற்பதாவது பிறந்தநாளுக்குப் பிறகு உதித்தெழும் சூரியனை வணங்குவது, எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு முன் விழுந்து கும்பிடுவது, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வது, ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவம் தவிர்ப்பது எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் புதிய பழக்கவழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பித்தார் அக்பர்.
கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் கடைநிலை முகலாய அதிகாரிகளிலிருந்து, சாமானிய மக்கள் வரை யார் வேண்டுமானாலும் அவரைச் சுலபமாகச் சந்தித்துப் பேச முடியும். தன்னிடம் பேச வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் இனிமையாகவும் அன்பாகவும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் அக்பர்.
தன் பொறுப்பாளரின் மகனைத் தன் மகனின் பொறுப்பாளராக நியமித்தார் அக்பர். அதாவது பைரம்கான் மகன் அப்துல் ரஹீம், அக்பர் மகன் சலீமின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். புதிய பொறுப்பு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அக்பருக்கு விருந்தளித்தார் அப்துல் ரஹீம்.
உலர் பழங்கள், குங்குமப்பூ, பெருங்காயம் ஆகியவை கலந்து செய்யப்பட்ட இறைச்சிப் பதார்த்தங்களை விருந்தில் விரும்பி உண்டார் அக்பர். மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்கு முகலாயர்கள் கொண்டுவந்த பெருங்காயம் அப்போது இந்தியச் சமையலறைகளில் அத்தியாவசியப் பொருளாக மாறியிருந்தது.
அப்துல் ரஹீமைப்போல் அக்பரால் கௌரவிக்கப்பட்ட மற்றொரு நபர் தோடர் மால். பல வருட உழைப்பில் முகலாய அரசின் வருவாய்த்துறையை அவர் சீரமைத்திருந்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசின் நிதிநிலைமை மோசமடையாத அளவுக்கு அதை வலுவாகக் கட்டமைத்ததுக்காக தோடர் மாலை முகலாய அரசின் திவானாக நியமித்தார் அக்பர்.
இவர்களைப்போல அப்போது உயர் பதவியில் இருந்த பீர்பால், ஃபைசி, மான் சிங், அபுல் ஃபாசல் போன்றோர் அக்பரின் கரத்தைப் பலமடங்கு பலப்படுத்தினார்கள். அக்பரின் தொடர் வெற்றிகளுக்கும், முகலாய ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்துக்கும் இவர்களின் உழைப்பும் திறமையும் மிகப்பெரும் பங்காற்றின.
உலேமாக்கள் ஏற்படுத்திய பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது காபூலுக்குப் படையெடுத்துச் சென்றார் அக்பர். அந்த நேரத்தில் அபுல் ஃபாசலும், தோடர் மாலும் ஃபதேபூர் சிக்ரியில் இருந்தபடி உலேமாக்கள் பிரச்சனையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.
ஒருபக்கம் அக்பர் கொடுக்கும் காரியங்கள் அனைத்தையும் பிசகு இன்றி செயல்படுத்தும் இவர்கள் ராஜவிசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தனர். மறுபக்கம் இவர்கள் மீது அசைக்க முடியாது அளவுக்கு மாபெரும் நம்பிக்கையை வைத்திருந்தார் அக்பர். இந்த விசுவாசமும் நம்பிக்கையும் ஒன்றோடொன்று இணைந்து முகலாய அரசின் வலுவான அடித்தளமாக இருந்தது. விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்குமான இந்த இணைப்புப் பாலத்தை வெகு சிரத்தையாக உருவாக்கியிருந்தார் அக்பர்.
பாபர், ஹூமாயூன் ஆகியோர் காலத்தில் முகலாய அரசின் மேல்மட்டப் பதவிகளில் ஏறத்தாழ 90 சதவிகிதம் துருக் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இந்த விகிதத்தைத் தன் ஆட்சிக்காலத்தில் மாற்றியமைத்தார் அக்பர். 1580களின் தொடக்கத்தில் முகலாய அரசில் பணியாற்றிய 272 அதிகாரிகளில் ராஜபுத்திரர்கள் 43 பேரும், பாரசீகர்கள் 47 பேரும், இந்திய இஸ்லாமியர்கள் 44 பேரும், துருக் இனத்தவர்கள் 67 பேரும், பிற வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் 71 பேரும் இருந்தனர்.
துருக் இனத்தைத் தாண்டி பிற இனத்தைச் சேர்ந்த பல திறமைசாலிகளை முகலாய அரசில் பணியமர்த்தினார் அக்பர். பிற இனத்தவர்களை முகலாய அரசில் சேர்த்ததற்குத் திறமை ஓர் அளவுகோலாக இருந்தாலும், இதற்கு மற்றொரு முக்கியக்காரணம் அதிகாரப்பரவல்.
அதிகாரம் ஒரே இனத்தவரிடம் குவிந்து கிடந்தால் அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை உஸ்பெக்கியர்கள் கலகத்தின்போது தெளிவாக உணர்ந்து கொண்டார் அக்பர். எனவே பிற இனத்தைச் சேர்ந்த திறமைசாலிகளுக்குப் பதவிகளைக் கொடுத்து அவர்கள் அனைவரின் விசுவாசத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
மேலும் மேல்மட்ட அமைச்சர்கள் முதல் கீழ்மட்ட வேலையாட்கள் வரை முகலாய அரசுப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த சம்பளம் அளவுக்கு உலகத்தில் அப்போது வேறு எந்த ராஜ்ஜியத்திலும் கொடுக்கப்படவில்லை. தங்கள் வாழ்க்கையைப் பல வழிகளிலும் வளப்படுத்திய அக்பருக்கு எதிராகக் கலகத்தில் இறங்க எந்த ஒரு முகலாய அதிகாரியும் துணியவில்லை.
இதையும் மீறி எங்கேயாவது தவறு நடந்து சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டால், அவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்ள அக்பரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியது உளவுத்துறை. முகலாய ராஜ்ஜியத்தில் எது எங்கு நடந்தாலும் அந்தத் தகவல்கள் அனைத்தும் உடனடியாக அக்பரை வந்தடையும் வண்ணம் படுவேகமாக உளவுத்துறை செயல்பட்டது. அண்டை ராஜ்ஜியங்களில் நடக்கும் முக்கியமான விசயங்களையும் ஒற்றறிந்து வந்தார்கள் முகலாய ஒற்றர்கள்.
மேலும் உலகின் பிற பகுதிகளில் நடக்கும் விசயங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார் அக்பர். மிக முக்கியமாகப் போர்கள் குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்வதில் அவர் அதீத ஆர்வத்துடன் இருந்தார். பிற போர்களில் பயன்படுத்தப்பட்ட உத்திகள், ஆயுதங்கள் குறித்த செய்திகள் கிடைத்ததும் அவற்றை இங்கே எப்படி உபயோகப்படுத்தலாம் என்று தன் அதிகாரிகளுடன் விவாதிப்பார் அக்பர்.
பாபர் இந்தியாவுக்குக் கொண்டுவந்த மத்திய ஆசியாவின் போர் தந்திர முறைகளை மெருகேற்றி, அவற்றை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் அக்பர். அதிலும் வெடிமருந்துகள் பயன்பாடு முகலாயப்படையின் வெற்றிகளில் பெரும் பங்காற்றியது.
கைத்துப்பாக்கிகள் மீது பெருங்காதல் கொண்டிருந்த அக்பர், அவற்றை யானைகள் மீதும், ஒட்டகங்கள் மீதும் வைத்துப் பயன்படுத்தும் முறையைச் செயல்படுத்தினார். தொழில்நுட்பங்களைக் காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தி உபயோகப்படுத்துவதில் அப்போது இருந்த மன்னர்களில் அக்பருக்கு நிகராக யாருமே இல்லை.
0
இவ்வாறு ஓர் ஆட்சியாளருக்கான கடமையாக அரசு நிர்வாகத்தில் முழுமையாக ஈடுபட்டு வந்தாலும், அரச குடும்பத்துப் பெண்களின் நலன்கள் மீது தனிக் கவனம் செலுத்தினார் அக்பர். அப்போது அவரது மனைவிகள் மட்டுமல்லாமல் கணவனை இழந்த பாபர், ஹூமாயூன் காலத்து அரச குடும்பத்துப் பெண்கள் பலரும் ஃபதேபூர் சிக்ரியில் வசித்து வந்தனர்.
இவர்களில் ஹூமாயூன் தங்கை குல்பதன் பேகமும், அக்பரின் தாய் அமீதா பேகமும் முக்கியமானவர்கள். இந்த மூத்த அரச குடும்பத்துப் பெண்களின் வார்த்தைகளுக்குப் பெரும் மதிப்பு கொடுத்த அக்பர், இவர்களது நிறைகுறைகளைக் கேட்கத் தனியாக நேரம் ஒதுக்கினார். இவர்களின் தனிப்பட்ட செலவுகளுக்காக வருமானம் கிடைக்கும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
1577ஆம் வருடம் அமீதா பேகம் தவிர்த்து இந்தப் பெண்கள் அனைவரும் சூரத் வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு மக்கா புனித யாத்திரைக்குச் செல்லத் தயாரானார்கள். அப்போது சூரத்துக்கு அருகே போர்த்துகீஸியர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சட்ட ஒழுங்கு நிலைமை கொஞ்சம் சரியில்லை. அரபிக் கடலில் பயணிக்கும்போது இந்தப் பெண்களின் பாதுகாப்புக்குப் போர்த்துகீஸியர்களால் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்று அக்பரே கொஞ்சம் யோசித்தார்.
ஆனால் எந்தப் பிரச்சனை குறித்து இவர்கள் துளியும் கவலைப்படவில்லை. குல்பதன் பேகம் தலைமையில் துணிச்சலாக மக்காவுக்குச் சென்ற இவர்கள், அங்கே அருகிலிருந்த வேறு சில புனித இடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டனர். அக்பர் கொடுத்தனுப்பிய நிதியை வைத்து மக்காவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஒரு விடுதியைக் கட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த ஏழை எளிய மக்களுக்குப் பலவிதங்களிலும் தானத்தை வாரி வழங்கினார்கள்.
மக்கா புனிதப்பயணத்தை முடித்துக்கொண்டு 1582ஆம் வருடம் இவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். குஜராத் வந்தவுடன் தாங்கள் திரும்பி வந்த செய்தியை அவர்கள் அக்பருக்கு அனுப்பினார்கள். அஜ்மீரில் வைத்து அவர்களை வரவேற்க இளவரசர் சலீமை அனுப்பினார் அக்பர். பிறகு அவர்கள் ஃபதேபூர் சிக்ரியை நெருங்கியதும், அக்பரே நேரடியாகச் சென்று நகருக்கு வெளியே அவர்களை வரவேற்றார்.
மூத்த அரச குடும்பத்துப் பெண்கள் இந்தியாவில் இல்லாத மூன்று வருடங்களில் இபாதத் கானா விவாதங்கள் மூலம் நிறைய விசயங்களைத் தெரிந்துகொண்டார் அக்பர். விவாதங்கள் மட்டுமல்லாமல் நடுநடுவே இரு வேறு மார்க்கங்களைச் சேர்ந்தவர்கள் அங்கே தர்க்கங்களிலும் ஈடுபட்டார்கள்.
இபாதத் கானா விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தபோது, இத்தனை வருடங்களாகத் தான் புரிந்துகொண்ட விசயங்களை வைத்துத் திடீரென்று எவரும் எதிர்பார்க்காத முடிவு ஒன்றை எடுத்தார் அக்பர்.
(தொடரும்)