Skip to content
Home » அக்பர் #22 – புதிய பாதை

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக இருந்ததால் இபாதத் கானா விவாதங்களில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

இபாதத் கானாவில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களைப்போல, அங்கே இரு வேறு மதத்தவர்கள் செய்திடும் தர்க்கமும் முக்கியமானது. தர்க்கத்தில் தங்கள் மதக் கோட்பாடுகள்தான் சரியானது என்பதை நிரூபிக்க இருதரப்பினரும் வார்த்தைப் போர்களில் ஈடுபடுவார்கள். அவற்றில் அக்பரை வெகுவாகக் கவர்ந்த ஒரு தர்க்கம் 1583ஆம் வருடம் அங்கே நடந்தது.

அக்பர் அழைப்பின் பேரில் ஹிரவிஜயா தலைமையில் 67 சமணத்துறவிகள் ஃபதேபூர் சிக்ரிக்கு வந்தனர். அவர்களின் சாந்தமான நடத்தையைப் பார்த்த உடனேயே அக்பருக்குப் பிடித்துவிட்டது. தான் கேட்ட தத்துவார்த்த ரீதியிலான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சமணக் கோட்பாடுகளை முன்வைத்து ஹிரவிஜயா தந்த விளக்கங்கள் ஒவ்வொன்றையும் மெச்சினார் அக்பர்.

தங்கள் விளக்கங்கள் வழியாக அக்பரைக் கவர்ந்திழுத்த சமணத் துறவிகளை அங்கிருந்த பிராமணப் பண்டிதர்கள் அடியோடு வெறுத்தார்கள். திடீரென ஒருநாள் அங்கிருந்த பண்டிதர்களில் ஒருவர், ‘சமணர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்’ என்று அக்பர் முன்பு குற்றம்சாட்டினார்.

சமணக் கோட்பாடுகளை முன்வைத்து இந்தக் குற்றச்சாட்டுக்கான பதிலை விரிவாக அளித்தார் விஜயசேனா என்ற சமணத்துறவி. சமணக் கோட்பாடுகளிலும் வேதங்களிலும் இருக்கும் ஒற்றுமைக்குரிய விசயங்களை மேற்கோள்காட்டிப் பேசினார் விஜயசேனா. தர்க்கத்தின் முடிவில் சமணத்துறவியின் வாதத்தை ஏற்றுக்கொண்டார் அக்பர்.

இதைத் தொடர்ந்து சமணத் துறவிகளின் கோரிக்கையின் பேரில் வருடத்தில் பன்னிரண்டு நாட்கள் மட்டும் உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதைத் தடை செய்தார் அக்பர். மேலும் குஜராத்திலிருந்த சமண கோவில்களுக்குத் தாராளமாக நிதி வழங்கினார்.

இதேகாலகட்டத்தில் சிவ வழிபாடு மேற்கொள்ளும் யோகிகளுடன் நெருங்கிப் பழகினார் அக்பர். தியானம், யோக நிலை, ரசவாதம், மந்திரத் தந்திரங்கள் குறித்த தன்னுடைய சந்தேகங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் அக்பர். சிவராத்திரி இரவில் யோகிகள் மேற்கொண்ட வழிபாட்டில் ஒருமுறை அவர் கலந்துகொண்டார்.

1582ஆம் வருடம் பார்சிகளின் புத்தாண்டான நவ்ரோஸை ஃபதேபூர் சிக்ரியில் 18 நாட்கள் விமர்சையாகக் கொண்டாடினார் அக்பர். நெருப்பை வழிபடும் முறையை அவர்களிடமிருந்துதான் அக்பர் கற்றுக்கொண்டார். இப்படி எந்த ஒரு வேறுபாடுமில்லாமல் அனைத்து மதங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். ஆனால் அவரது இந்த மனநிலையை கோவாவிலிருந்து வந்த இளம் கிறிஸ்தவப் பாதிரியார்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள்.

ஃபதேபூர் சிக்ரிக்கு வந்த புதிதில் எப்படியாவது அக்பரைக் கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. நேரடியாகத் தங்கள் விருப்பத்தை அக்பரிடம் சொல்லவில்லை என்றாலும் மறைமுகமாக அவரை மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

இளவயதில் ஆசாபாசங்களைத் துறந்துவிட்டு எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட பாதிரியார்களை அக்பருக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்தக் காரணத்துக்காகவே அவர்களைப் பெரிதும் மதித்தார் அக்பர். ஆனால் ஒருகட்டத்தில் அக்பரை எப்போதும் தங்கள் வழிக்குக் கொண்ட வர முடியாது என்பதை உணர்ந்த கிறிஸ்துவத் துறவிகள், ‘நாங்கள் கோவாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறோம்’ என்று அவரிடம் தெரிவித்தனர்.

‘இத்தனை நாட்கள் நீங்கள் என் அருகே இருந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. பிற மதத்தினரை ஒப்பிடும்போது உங்களிடம் இருந்து நான் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன்’ என்று புன்முறுவலுடன் கூறி, பாதுகாப்பு வசதிகளுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் அக்பர்.

கிறிஸ்தவர்கள், சமணர்கள், பார்சிகள், இந்துக்கள் என வெவ்வேறு மதப்பின்னணியைச் சேர்ந்தவர்களை இபாதத் கானா விவாதங்களில் அக்பர் ஈடுபடுத்தியதற்கு இஸ்லாமிய உலேமாக்களும் ஒரு முக்கியக் காரணம்.

இபாதத் கானாவில் முதலில் உலேமாக்களை மட்டுமே மத விவாதங்களில் ஈடுபடுத்தினார் அக்பர். ஆனால் இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் மீது உலேமாக்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. தங்கள் வாதங்களை நிரூபிக்கத் தவறான எடுத்துக்காட்டுகளை மேற்கோள்காட்டினார்கள். பக்குவமில்லாமல் அக்பர் முன்னாடியே சிறுவர்களைப்போலச் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

இவர்களின் இந்த நடவடிக்கைகள் அக்பரை முகம் சுளிக்க வைத்தன. மேலும் முகலாய அரசின் நிர்வாக முடிவுகளில் மூக்கை நுழைத்தது மட்டுமல்லாமல், தன் நடவடிக்கைகளையும் தொட்டத்துக்கெல்லாம் குற்றம் சொல்லிய உலேமாக்களை ஒரு கட்டத்தில் வெறுக்க ஆரம்பித்தார் அக்பர்.

அனைத்து மதங்கள் மீதும், அவற்றின் போதனைகள் மீதும் பெருமதிப்பு வைத்திருந்தார் அக்பர். ஆனால் உமாக்களைப்போலப் பிற மதத்தினரும் தங்கள் தரப்பை மட்டுமே நியாயப்படுத்திப் பேசியது அக்பரை யோசிக்க வைத்தது. இதனால் ஒருகட்டத்தில் அனைத்து மதக்கோட்பாடுகளும் ஒன்று உண்மையாக இருக்கவேண்டும் அல்லது மாயையாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

மேலும் இறைவனை மையமாக வைத்து, எந்த ஒரு மதச்சார்பும் இன்றிப் பல புதிய சிந்தனைகள் அந்தக் காலகட்டத்தில் உருவாகியிருந்தன. காசியைச் சேர்ந்த கபீர் எந்த ஒரு மதச்சார்பையும் எடுக்காமல், உருவமற்ற இறைவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் அவன் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதே உண்மையான பக்தி என்ற பரப்புரையில் ஈடுபட்டார். இதேபோல வஹ்தாத்-அல்-வுஜூத் (வேற்றுமையில் ஒற்றுமை) என்ற கருத்தை முன்வைத்து சூஃபி துறவிகளான சிஷ்டிகள் அனைத்து மதத்தவர்களையும் சமமாக நடத்தினார்கள்.

இப்படி மதச்சார்புடனும் மதச்சார்பின்றியும் பலவிதமான சிந்தனைகள் அப்போது இருந்தன. ஆனால் தன்னால் எவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள புரிந்துகொள்ள முடிந்ததோ அவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டார் அக்பர்.

அதிலும் இத்தனை வருடங்களாக மதங்களை முன் நிறுத்தி அவர் கேட்டுணர்ந்த விஷயங்களில் ‘நல்லிணக்கம்’ என்ற கருத்து அக்பரை அதிகமாகக் கவர்ந்தது. இதனாலேயே ஒருகட்டத்தில் மக்கள் தங்களின் தனிப்பட்ட மத அடையாளங்களைத் தாண்டி, நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுப்பெற ஆரம்பித்தது.

மேலும், தன் மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்களிடம் சகிப்புத்தன்மை இருக்க வேண்டுமென்று அக்பர் நினைத்தார். இந்தச் சகிப்புத்தன்மை நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும், நல்லிணக்கம் அமைதியைக் கொண்டு வரும். சாதாரண அமைதி அல்ல, ‘பரிபூரண அமைதி’. அதாவது ‘சுல்ஹி குல்!’

அந்த நேரத்தில் உண்மையாகவே முகலாயச் சாம்ராஜ்ஜியத்தில் அமைதி நிலவியது. குறிப்பாக முகலாய அரசுக்குள்! முகலாய அரசு அதிகாரிகள் மட்டத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவின. விருப்பு வெறுப்புகளைக் கடந்து கிட்டத்தட்ட அனைவருமே அக்பரின் மனோபாவத்துக்கு ஏற்றதுபோல் மாறியிருந்தார்கள்.

பைரம் கானும், மஹம் அங்காவும் இருந்தபோது முகலாய அரசுக்குள் நடந்து கொண்டிருந்த இனவாத அரசியல், அப்போது முற்றிலுமாக முடிவுக்கு வந்திருந்தது. துருக்கள், பாரசீகர்கள், ராஜபுத்திரர்கள், இந்திய இஸ்லாமியர்கள் என்று இன, மதப் பேதமின்றி அனைத்து அதிகாரிகளும் முகலாய ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் உழைத்தார்கள்.

முகலாய அரசுக்குள் அக்பர் கொண்டுவந்த இந்த மாற்றம் அவருக்குப் பின் அரியணையேறிய பாதுஷாக்களுக்குப் பெரிதும் உதவியது. அதிகார மட்டத்தில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருந்த அக்பர், இதுபோலத் தன் மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நினைத்தார்.

இதன் வெளிப்பாடாக, தங்கள் வாழ்க்கையில் ‘பரிபூரண அமைதி’ (சுல்ஹி குல்) நிலவுவதற்கு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை ‘தின்-இ-இலாஹி’ என்ற பெயரில் வெளியிட்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையை எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், நிதானத்துடன் வாழ இந்த நெறிமுறைகள் வழிகாட்டும் என்று அவர் அறிவித்தார்.

குருட்டுத்தனமாக இல்லாமல், இத்தனை வருடங்களாகப் பல தத்துவங்களையும் சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து, பகுத்தறிவுடன் சோதித்துப் பார்த்த பிறகே அவற்றை  தீன் இலாஹி என்ற பெயரில் நெறிமுறைகளாக வெளியிட்டார் அக்பர். மேலும், யார் வேண்டுமானாலும் தீன் இலாஹியைப் பின்பற்றலாம், பின்பற்றியாக வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அக்பர் அறிவித்தார்.

அக்பர் வெளியிட்ட இந்த தீன் இலாஹி நெறிமுறைகளுக்கு அவரது அதிகாரிகளிடமே சரியான வரவேற்பு இல்லை. சொல்லப்போனால் முகலாய உயரதிகாரிகள் மட்டத்தில் மொத்தமே பதினெட்டு நபர்கள்தான் தீன் இலாஹியைப் பின்பற்றினார்கள். அவர்களில் பீர்பால் மட்டும்தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர்களைத் தாண்டி அக்பரின் இந்தச் சோதனை முயற்சிக்கு வேறு யாருமே தயாராக இல்லை.

தீன் இலாஹியைப் பின்பற்ற விரும்பியவர்களுக்கு உறுதிமொழி வைபவம் நடந்தது. உறுதிமொழி ஏற்றவர்களுக்குச் சிறிய அளவிலான அக்பரின் ஓவியப்படம் தரப்பட்டது. ஆனால் இந்த உறுதிமொழி வைபவம் பல சர்ச்சைகளுக்கு வழிவகை செய்தது.

தீன் இலாஹி குறித்த அறிவிப்பு வெளியானதும் புதிய மதம் ஒன்றை அக்பர் நிறுவியுள்ளார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். உறுதிமொழி வைபவத்தில் அக்பரின் ஓவியப்படம் வழங்கப்பட்ட செய்தி பரவியதும், அக்பர் தன்னைக் கடவுளாக நினைத்துக்கொண்டார்போல என்று பலர் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அக்பரின் வளர்ப்புச் சகோதரர் மிர்சா அஜீஸ் கொக்கா, மக்காவுக்குச் செல்லும் வழியில் அக்பரைக் காட்டமாக விமர்சித்து அவருக்கு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார். ஆனால் மக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு தன் செயலுக்கு அக்பரிடம் மன்னிப்புக் கேட்டு, 1594ஆம் வருடம் அவரும் தீன் இலாஹியைப் பின்பற்றியது தனிக்கதை.

தீன் இலாஹியை முன்வைத்து சர்ச்சைகள் கிளம்பிய நேரத்தில் எதிர்பாராவிதமாக வடமேற்குப் பகுதியில் திடீரெனப் பிரச்சனை ஒன்று வெடித்தது. அந்தப் பிரச்சனை அக்பரின் உற்ற நண்பரைக் காவு வாங்கியது.

(தொடரும்)

படம்: அபுல் ஃபசல் ‘அக்பர்நாமா’வை பேரரசர் அக்பருக்கு வழங்கும் காட்சி (முகலாய சிற்றோவியம்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *