1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச் சென்றதால், காபூலின் ஆட்சிப் பொறுப்பை அவரது சகோதரி பக்த் உன்-நிசா பேகத்திடம் அளித்தார் அக்பர்.
ஃபதேபூர் சிக்ரிக்கு அக்பர் கிளம்பியதும் காபூலுக்குத் திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பேற்றார் ஹக்கீம். ஆனால் அடுத்த ஒரு சில வருடங்களிலேயே அதீதக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி அவர் மரணமடைந்தார். ஹக்கீமின் மரணம் காபூலில் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து காபூலைக் கைப்பற்ற அருகிலிருந்த ஆப்கானியர்கள் முயற்சி செய்தார்கள்.
மேலும் முன்பு சாமர்கண்டில் பாபரைத் தோற்கடித்த சய்பானி கான் வழிவந்த அப்துல்லா கான் அப்போது மத்திய ஆசியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்த அப்துல்லா கான் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வந்து காபூலைக் கைப்பற்றக்கூடும் என்ற உளவுத் தகவல் அக்பருக்குக் கிடைத்தது.
இதேநேரத்தில் காபூலுக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இருந்த ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்து வந்த பஷ்டூன் யூசுப்சாய் பழங்குடியினரால் பஞ்சாப் மாகாணத்தின் எல்லைப்பகுதியில் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கின.
மிர்சா ஹக்கீம் மரணத்தைத் தொடர்ந்து வடமேற்கில் ஏற்பட்ட இத்தனை பிரச்சனைகளையும் முடிவுக்குக் கொண்டுவர ஃபதேபூர் சிக்ரியில் இருந்து கிளம்பினார் அக்பர். அவருடன் ஒட்டு மொத்த முகலாய அரசவையும் கிளம்பிச் சென்று லாகூரில் முகாமிட்டது.
லாகூர் கோட்டையில் இருந்தபடி, முதலில் யூசுப்சாய் பழங்குடியினரை வழிக்குக் கொண்டுவர பீர்பாலையும் ஜயின் கானையும் படையுடன் அனுப்பி வைத்தார் அக்பர். ஆனால் தாக்குதல் நடத்தும் முறை குறித்து முடிவெடுப்பதில் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக யூசுப்சாய்கள் பின்னிய வியூகத்தில் சிக்கி உயிரிழந்தார் பீர்பால். இந்த முற்றுகையில் கிட்டத்தட்ட 8000 முகலாய வீரர்கள் உயிரிழந்தனர்.
பீர்பால் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார் அக்பர். அடுத்த இரண்டு நாட்கள் உணவு உண்ணாமலும், அரசு அலுவல்களில் ஈடுபடாமலும் இருந்தார். எதேச்சையாக அப்போது லாகூருக்கு வந்த ஹமீதா பானு மனதளவில் நொறுங்கிப் போயிருந்த தன் மகனைத் தேற்றி ஆசுவாசப்படுத்தினார்.
1556ஆம் வருடம் 28 வயதில் முகலாய அரசில் வேலைக்குச் சேர்ந்தார் பீர்பால். இந்த முப்பது வருடங்களில் ஒருமுறைகூட அக்பரின் கோபத்தையோ, அவரிடமிருந்து திட்டுகளையோ பீர்பால் பெற்றதில்லை. இந்தப் பெருமை பீர்பாலைப்போல ஃபைசிக்கும், தான்சேனுக்கும் மட்டுமே இருந்தது.
அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு இருந்தது.
ஃபதேபூர் சிக்ரியில் கோட்டை உருவானபோது, அதில் பீர்பாலுக்காகப் பிரத்தியேகமான ஓர் அரண்மனையைக் கட்டிக்கொடுத்தார் அக்பர். பிரஜ் மொழியில் கைதேர்ந்த கவிஞராக இருந்த பீர்பாலுக்கு `கவி ராய்’ என்ற பட்டத்தை அக்பரே முன்வந்து வழங்கினார்.
பீர்பால் மீது அக்பர் கொண்டிருந்த அக்கறைக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
ஃபதேபூர் சிக்ரியில் ஒருமுறை யானைச் சண்டை நடந்துகொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்துக்கு அருகே வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த யானைகளில் ஒன்று திடீரென அருகே நின்றுகொண்டிருந்த பீர்பாலைத் தூக்கியது.
தூரத்தில் இருந்து இதைப் பார்த்துவிட்ட அக்பர் நொடிகூடத் தாமதிக்காமல் உடனடியாகக் குதிரையில் ஏறி அந்த யானைக்கு அருகே சென்று பீர்பாலை இறக்கிவிட ஆணையிட்டார். அக்பரின் உத்தரவுக்கு உடனே பணிந்து பீர்பாலை இறக்கிவிட்டது அந்த யானை. இதுபோல அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையே நடந்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் இருந்தன.
0
பீர்பால் இறந்துபோன துக்கத்திலிருந்து வெளிவரச் சில நாட்களை எடுத்துக்கொண்ட அக்பர், அதற்குத் தக்க பதிலடி கொடுக்க நினைத்தார். இதனால் லாகூரில் இருந்து கிளம்பி, பெஷாவருக்குக் கிழக்கில் சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த அட்டோக் கோட்டைக்குச் சென்று அவர் முகாமிட்டார்.
யூசுப்சாய்களை ஒடுக்க ஸ்வாட் பள்ளத்தாக்குக்குப் பகுதிக்குத் தோடர் மாலும், ஆப்கானியர்களைச் சமாளித்து காபூலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மான் சிங்கும் அனுப்பப்பட்டனர். மேலும் காசிம் கான் தலைமையில் 1 லட்சம் வீரர்களைக் கொண்ட பிரம்மாண்ட முகலாயப்படையை காஷ்மீரை ஆக்கிரமிக்க அனுப்பிவைத்தார் அக்பர். அட்டோக்கில் இருந்து பாரமுல்லா வழியாக காஷ்மீருக்குப் பயணப்பட்டது முகலாயப்படை.
காபூல், ஸ்வாட் பள்ளத்தாக்கு, காஷ்மீர் என வடமேற்குப் பகுதிகளில் அக்பர் இப்படி எடுத்துக்கொண்டிருந்த தீவிர நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைத்தது. மத்திய ஆசியாவிலிருந்து தூதரை அனுப்பிவைத்து அக்பரிடம் நட்பு பாராட்டும் முயற்சியில் இறங்கினார் அப்துல்லா கான். அது மட்டுமல்லாமல் தூதர் வழியாக அக்பரையும், அவரது உண்மையான பலத்தையும் தெரிந்துகொள்ள நினைத்தார்.
அப்துல்லா கானின் தூதரை மரியாதையோடு வரவேற்ற அக்பர், அவரைத் திருப்பி அனுப்பாமல் தன் அரசவையில் வைத்து உபசரித்தார். சில மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் கைப்பற்றப்பட்ட செய்தி, மான் சிங் ஆப்கானியர்களை வீழ்த்தி காபூலில் அமைதியை நிலைநாட்டிய செய்தி, தோடர் மால் யூசுப்சாய்களை வீழ்த்திய செய்தி ஆகியவற்றை அந்தத் தூதுவரிடம் தெரிவித்தார் அக்பர். பிறகு அப்துல்லா கானிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டு அந்தத் தூதர் மத்திய ஆசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
காபூலுக்கு வடக்கே இருந்த இந்து குஷ் மலைத்தொடர் இரு ராஜ்ஜியங்களுக்கும் இடையே எல்லையாக இருக்கும் என அப்துல்லா கானுக்கு அனுப்பிய கடிதத்தில் மிரட்டும் தொனியில் எழுதியிருந்தார் அக்பர். இது முழுக்க முழுக்க அக்பர் எடுத்த தன்னிச்சையான முடிவு. ஆனால் இதை மறுத்துப் படையெடுத்து வரும் நிலையில் அப்துல்லா கான் இல்லை.
அக்பரின் ஆளுமை குறித்தும், அவரது பலம் குறித்தும் தன் தூதர் குறிப்பிட்ட விசயங்கள் அப்துல்லா கானின் மனதை மாற்றின. இதனால் காபூலைக் கைப்பற்றும் திட்டத்தை அவர் முழுமையாகக் கைவிட்டார். இவ்வாறு வடமேற்கில் நடந்துகொண்டிருந்த பிரச்சனைகளை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு 1586ஆம் வருடம் அட்டோக் கோட்டையில் இருந்து கிளம்பி லாகூருக்குச் சென்றார் அக்பர்.
சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு ஃபதேபூர் சிக்ரிக்கு அக்பர் செல்வார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், லாகூரிலேயே அடுத்த 12 வருடங்கள் இருந்தார் அக்பர். ராவி நதிக்கரையில் அமைந்திருந்த லாகூர் அப்போது பரபரப்பான நகரமாக இருந்தது.
அக்பர் உத்தரவின் பேரில் அங்கிருந்த கோட்டை விரிவுபடுத்திக் கட்டப்பட்டது. நகரத்தின் பல இடங்களில் மாளிகைகள், தோட்டங்கள், மசூதிகள் போன்றவற்றைக் கட்டினார்கள் முகலாய அதிகாரிகள். வருடங்கள் செல்லச் செல்ல அக்பரின் மூத்த மகன் சலீமுக்கு மிகவும் பிடித்த இடமாகிப்போனது லாகூர்.
0
பதினேழு வயது சலீமுக்கு அப்போது திருமணம் முடிந்திருந்தது. தாய் மாமா பகவான் தாஸின் மகளும், அமீர் இளவரசியுமான மான் பாயை 1585ஆம் வருடம் மணந்துகொண்டார் சலீம். இந்து சடங்குகளுடன் ஆமீரில் கோலகலமாக நடந்த திருமணத்தில் மான் பாயின் பல்லக்கைச் சுமந்து சென்ற நபர்களில் அக்பரும் ஒருவர்.
ஆமீர் இளவரசி மட்டுமல்லாமல் மார்வார் ராணா உதய் சிங்கின் மகளையும் சலீமுக்கு மணமுடித்து வைத்தார் அக்பர். உதய் சிங் மகளின் பெயர் மணி பாய். ஆனால் மார்வார் தலைநகர் ஜோத்பூரில் இருந்து வந்ததால் அவர் ஜோத் பாய் அல்லது ஜோதா பாய் என்றும் அழைக்கப்பட்டார்.
சலீமின் தம்பிகள் முராத்துக்கும், தானியலுக்கும்கூட அடுத்தடுத்துத் திருமணங்கள் நடைபெற்றன. ராஜபுத்திரர்களைத் தாண்டி பாரசீகர்கள், துருக்கள் ஆகியோரிடமிருந்தும் தன் மகன்களுக்குப் பெண் எடுத்தார் அக்பர். ஆனால் தப்பித்தவறிக்கூட ஆப்கானியர்களிடம் இருந்து மட்டும் பெண் எடுக்கவில்லை.
1586ஆம் வருடம் ஏப்ரலில் சலீமுக்கும் மான் பாய்க்கும் பெண் குழந்தை பிறந்தது. பேத்தி பிறந்த நிகழ்வை மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அக்பர், அந்தக் குழந்தைக்கு சுல்தான்-உன்-நிசா பேகம் என்று பெயரிட்டார். அடுத்த வருடமே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மான் பாய். இந்தக் குழந்தைக்கு சுல்தான் குஸ்ரௌ எனப் பெயரிடப்பட்டது.
அன்றைய இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பெரிய ஆளுமையான அக்பரின் மூத்த மகனாக இருந்ததால், இயல்பாகவே சலீம் மீது எதிர்பார்ப்புகள் இருந்தன. இதற்கு மேல் சாதிக்க எதுவுமே இல்லை என்ற நிலையை அப்போது அடைந்திருந்தார் அக்பர். எனவே தந்தையை எந்த வகையில் சலீம் மிஞ்சப் போகிறார் என்று பலரும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். இது சலீமுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.
ஒவ்வொரு நாளும் சலீம் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பார்த்துப் பார்த்து அவருக்குக் கொடுத்தார் அக்பர். வேட்டையாடுவது, அரசு அலுவல்களைக் கவனிப்பது, ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது எனப் பம்பரமாக சுற்றித்திரிந்தார் சலீம். தனக்குப் பிறகு அரியணையேறப்போகும் சலீம் திறமைமிக்கவராக இருக்க வேண்டும் என்று அக்பர் நினைத்ததில் தவறு இல்லை. ஆனால் இத்தனை வருடங்கள் சிறுவனாகச் சுற்றித் திரிந்த சலீமுக்குத் திடீரெனப் பல பொறுப்புகளை அக்பர் கொடுத்தது அயற்சியை ஏற்படுத்தியது.
அயற்சியைச் சமாளிக்க மதுவையும், அபினையும் உபயோகிக்க ஆரம்பித்தார் சலீம். அவற்றை அளவோடு உபயோகித்திருந்தால் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. ஒருகட்டத்தில் அளவுக்கு மீறி உபயோகிக்க ஆரம்பித்ததால் சலீமின் உடல் நலம் பாதிப்படைய ஆரம்பித்தது.
நிலைமையைச் சமாளிக்க முடியாமல் சலீம் இவ்வாறு தடுமாறிக்கொண்டிருந்தபோது, தன் வாழ்நாளுக்குப் பிறகு பல நூறு வருடங்கள் கழித்தும்கூடப் பலரும் தன்னை நினைவுகூரும் வகையிலான ஒரு காரியத்தை லாகூரில் தொடங்கி வைத்தார் அக்பர்.
(தொடரும்)