Skip to content
Home » அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென அவர் நினைத்தார். எனவே இதற்கான தகவல்களைச் சேகரிக்கத் தன் அத்தை குல்பதன் பேகம், ஹூமாயூனிடம் வேலை பார்த்த பயாஸித் பயத் என அப்போது முகலாய ராஜ்ஜியத்தில் 60 வயதைத் தாண்டி வாழ்ந்து வந்த பலரிடமும் பேசினார் அக்பர்.

அடுத்த சில வருடங்கள் அக்பர் குடும்பத்தினர், அவர்களின் தூரத்துச் சொந்தங்கள், முகலாய அரசில் பணியாற்றியவர்கள் எனப் பலரிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்து அவற்றைத் தொகுத்து எழுத ஆரம்பித்தார் அபுல் ஃபாசல். அவரது கடின உழைப்பின் முடிவில் மூன்று தொகுப்புகள் உருவாகின.

முதல் இரண்டு தொகுப்புகள் ‘அக்பர் நாமா’ என்று அழைக்கப்பட்டன. முதல் தொகுப்பில் தைமூரியர்களின் வரலாறு, பாபர், ஹூமாயூன் காலத்து நிகழ்வுகள், அக்பரின் பிறப்பு, வளர்ப்பு ஆகியவை தொகுக்கப்பட்டிருந்தன. இரண்டாவது தொகுப்பில் அக்பரின் வாழ்க்கை வரலாற்றுடன், அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் தொகுக்கப்பட்டன.

மூன்றாவது தொகுப்பு ‘ஐன்-இ-அக்பரி’ என்று அழைக்கப்பட்டது. இதில் முகலாய அரசு நிர்வாகம், இந்தியத் துணைக்கண்டத்தின் புவியியல், சமூகம், வேளாண்மை, மதம் ஆகியவை குறித்த பல விஷயங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

பாரசீக மொழியில் எழுதப்பட்டிருந்த இந்தத் தொகுப்புகளை மெருகேற்றும் விதமாக அக்பர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன. பஸ்வான், மன்சூர், மிஸ்கின், ராம்தாஸ், நாராயண், ஃபரூக் பெக் போன்ற முன்னணி ஓவியர்கள் பலரும் இதில் ஈடுபட்டனர். அரசவை, போர்க்களம், இயற்கைக் காட்சிகள் முதல், உடை, உணவு, இசைக்கருவிகள், தலைப்பாகை வரையிலான விசயங்கள்கூட நுணுக்கமான முறையில் தீட்டப்பட்டன.

இவ்வளவு மெனக்கெடலுடன் கூடிய ஒரு வரலாற்றுத் தொகுப்பு அந்தக் காலகட்டத்தில் உலகில் வேறு எங்குமே உருவாகியிருக்கவில்லை. காலங்களைக் கடந்தும் பெயர் சொல்லும் வரலாற்றுத் தொகுப்பாக இவை உருவானதில் அபுல் ஃபாசலின் உழைப்பு அபாரமானது. ஒவ்வொரு நாளும் தான் எழுதியவற்றை அந்நாளின் இறுதியில் அக்பரிடம் படித்துக் காட்டுவார் ஃபாசல். அதில் தேவைப்பட்ட இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளச் சொல்லுவார் அக்பர்.

அரசு நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டே இவ்வாறு தன் வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்த அக்பரிடமிருந்து அவரது சகாக்கள் ஒவ்வொருவராகப் பிரிய ஆரம்பித்தனர்.

0

1589ஆம் வருடம் அரசவை பாடகரான மியான் தான்சேன் மரணமடைந்தார். இத்தனை வருடங்களாக இசையால் தன்னை மகிழ்வித்த தான்சேனை, அதே இசை முழங்க வழியனுப்பி வைத்தார் அக்பர். இது நடந்து சில நாட்கள் கழித்துத் தன் குடும்பத்தினருடன் காஷ்மீருக்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். அக்பரின் மனம் அவரை நிலையாக ஓர் இடத்தில் இருக்கவிடவில்லை.

இத்தனை வருடகாலமாகத் தன்னைச் சுற்றி இருந்த நெருங்கிய நபர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தது மனதளவில் அவரைப் பாதித்தது. இதனால்தான் பீர்பாலின் மரணத்துக்குப் பிறகு ஃபதேபூர் சிக்ரிக்குச் செல்லாமல் லாகூரிலேயே இருந்துவிட்டார் அக்பர்.

ஆக்ரா-லாகூர் சாலையை அமைத்துக் கொடுத்த காசிம் கான், அக்பர் உத்தரவின் பெயரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி பஞ்சாப்-காஷ்மீர் சாலையை அமைத்தார். லாகூர்-பிம்பார்-பிர்பாஞ்சல் கணவாய் வழியாகப் பயணித்து ஜூன் மாதம் ஸ்ரீ நகரை அடைந்தார் அக்பர்.

மரக்கட்டைகளை உபயோகித்து அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகளைப் பார்த்துத் திகைத்துப்போனார்கள் முகலாயப் படையினர். நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகள், பனி மலைகள், குங்குமப்பூ தோட்டங்கள், பசுமை சூழ்ந்த ஏரிகள் என காஷ்மீரின் கொள்ளை அழகு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது.

மாதக்கணக்கில் அங்கே தங்கியிருந்து ஓய்வெடுக்க நினைத்தார் அக்பர். ஆனால் மழைக்காலம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் சில வாரங்களிலேயே அரை மனதுடன் காஷ்மீரிலிருந்து கிளம்பி காபூலுக்குப் பயணித்தார்.

அக்பர் காபூலுக்குச் சென்ற சில நாட்களிலேயே ஹமீதா பானு, குல்பதன் பேகம் உள்ளிட்ட அரச குடும்பத்து மூத்த பெண்கள் நகருக்கு வெளியே வந்துவிட்ட செய்தி அவருக்கு அனுப்பப்பட்டது. உடனடியாக அவர்களை வரவேற்கத் தன் மகன்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, பின்னாடியே அக்பரும் சென்றார். மேலும் அவர்களின் காபூல் வருகையைக் கொண்டாடும் விதமாக ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்தார் அக்பர்.

0

அரச குடும்பத்து மூத்த பெண்கள் மீது தான் வைத்திருந்த மரியாதைக்கு நிகராகத் தன் மகள்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் அக்பர். தன் மகன்களைவிட மகள்களைக் கண்ணும் கருத்துமாக அவர் பார்த்துக்கொண்டார். தனக்குப் பேத்திகள் பிறந்தபோதெல்லாம் பிரம்மாண்டமாக விழா நடத்தினார் அக்பர்.

இஸ்லாமிய மதச்சட்டங்கள்படி பலரும் ஆண் பிள்ளைகளைவிடப் பெண் பிள்ளைகளுக்குக் குறைவான சொத்துக்கள் வழங்குவதை வெளிப்படையாக விமர்சித்தார் அக்பர். பிறந்த இடத்தைவிட்டுவிட்டுப் புதிய இடத்துக்குச் சென்று தங்களின் மிச்ச வாழ்க்கையை அங்கேயே கழிக்கும் பெண்களின் நிலை கவலைக்குரியது. எனவே தந்தையின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்குத்தான் அதிகப் பங்கு சேர வேண்டும் என்று வாதிட்டார் அக்பர். இஸ்லாமியப் பெண்கள் மட்டுமல்லாமல் இந்துப் பெண்கள் மீதும் கரிசனம் கொண்டிருந்தார் அக்பர்.

பிகானீர் மகாராஜா ராய் சிங் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். போர்க்களமோ, முகலாய அரசவையோ, எங்கிருந்தாலும் தன் தலைமைப் பண்பைத் தீர்க்கமாக வெளிப்படுத்தக்கூடியவர். ராய் சிங்கின் மகள்களில் ஒருவர் கணவனை இழந்ததும், அக்பர் அவரது இருப்பிடத்துக்கே சென்று ஆறுதல் கூறினார். அத்துடன் ராய் சிங்கின் மகள் உடன்கட்டை ஏறக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

கணவனின் உடலை எரிக்க மூட்டிய தீயில் மனைவிகள் உயிருடன் இறங்கி தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்ளும் பழக்கம் உடன்கட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ராஜபுத்திரப் பெண்கள் பின்பற்றிவந்தார்கள். பல நேரங்களில் இதில் பெண்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றிவிடப்பட்டார்கள்.

உடன்கட்டை ஏறும் மனிதாபிமானமற்ற வழக்கத்தை அக்பர் ரசிக்கவில்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடை செய்தால் அதனால் பிரச்னைகள் கிளம்பும் என்பது அவருக்குத் தெரியும். இதற்கான மாற்று ஏற்பாட்டை யோசித்த அக்பர், விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதித்து உத்தரவு பிறப்பித்தார்.

கற்பு என்ற ஒற்றைச் சொல்லை முன்வைத்து இந்துக்களிடையே மறுமணங்கள் நடக்காமல் இருந்தது அக்பரை ஆச்சரியப்படுத்தியது. தைமூரியர்கள் வழக்கத்தில் கற்பை முன்வைத்து எந்தக் காலத்திலும் சிக்கல்கள் எழுந்ததில்லை. அதிலும் போர் நடக்கும் சமயங்களில் எதிரிகளால் சிறைபிடிக்கப்படும் பெண்கள், போர் முடிந்து மீட்கப்பட்டவுடன் மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள்.

பாபரின் அக்கா கன்ஸாடா பேகம் இதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. பாபருடனான போரில் வெற்றிபெற்ற சய்பானி கான் வலுக்கட்டாயமாக கன்ஸாடா பேகத்தைக் கவர்ந்து சென்றார். இதற்குப் பிறகு வேறொரு போரில் சய்பானி கானைத் தோற்கடித்த பாரசீக மன்னர் ஷா இஸ்மாயில், கன்ஸாடா பேகத்தை மீட்டு பாபரிடம் சேர்ப்பித்தார்.

இந்த நட்புறவு காரணமாகவே ஷேர் கானிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஹூமாயூன், தனக்கு உதவ யாருமே முன்வராத நிலையில், ஷா இஸ்மாயிலின் மகன் ஷா டமஸ்பிடம் உதவி கேட்டுப் பாரசீகத்துக்குச் சென்றார்.

அக்கா கன்ஸாடா பேகம் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பாபர், தனக்கு நிகரான மரியாதையையும், பட்டத்தையும் அவருக்கு அளித்தார். மேலும் மத்திய ஆசியாவை சய்பானிகான் ஆக்கிரமித்த பிறகு, அங்கிருந்த விவாகரத்தான, விதவையான, ஆதரவற்ற தைமூரியப் பெண்கள் பலருக்கும் காபூலில் தஞ்சமளித்தார் பாபர்.

பாபருக்குப் பிறகு, ஹூமாயூனும் அக்பரும் பாதுஷாக்களான பிறகும்கூட முகலாய அரசில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த முக்கியத்துவம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. அக்பருக்குப் பிறகான காலத்திலும் அது தொடர்ந்தது.

0

1589ஆம் வருடம் காபூலுக்கு வடக்கே இருந்த பெக்ராம் என்ற மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தார் அக்பர். நவம்பரில் தோடர் மால் இறந்துபோன செய்தி அக்பருக்குத் தெரிவிக்கப்பட்டது. தோடர் மாலின் இரங்கல் செய்தி அக்பரைச் சென்றடையும் முன்பே அவரது உடல் லாகூரில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பகவான் தாஸ் அதற்கு ஐந்து நாட்கள் கழித்து, உடல் உபாதைகளால் மரணமடைந்தார்.

இந்தியத் துணைக்கண்டம் குறித்த முழுத் தகவல்களையும் கைக்குள் வைத்துக்கொண்டு அதற்குத் தகுந்தபடி முகலாய வருவாய்த்துறையைச் சீரமைத்த தோடர்மாலின் பணி அளப்பரியது. மேலும் 27 வருடங்களாக கச்வாஹா ராஜபுத்திரர்களின் ஒட்டு மொத்த விசுவாசமும் அக்பருக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் பகவான் தாஸ். இந்த இருவரின் மறைவும் அக்பருக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

1590ஆம் வருடத்தின் தொடக்கத்தில் லாகூருக்குத் திரும்பினார் அக்பர். பகவான் தாஸின் மகன் மான் சிங் 5000 வகைமை எண் கொண்ட முகலாய அதிகாரியாகப் பதவி உயர்த்தப்பட்டார். முகலாய அரசில் அப்போது இதே அளவுக்கான வகைமை எண் பெற்றிருந்த மற்றொருவர் மிர்சா அஜீஸ் கொக்கா.

ஒரே நேரத்தில் முகலாய அதிகாரியாகவும், அமீரின் மகாராஜாவாகவும் இரண்டு பணிகளை மேற்கொண்டார் மான் சிங். ஆமீரில் மான் சிங் இல்லாத நேரங்களில் அவரது ராணி கனக்வதி அமீரின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். இது போலத்தான் பகவான் தாஸும், ராய் சிங்கும் பணியாற்றினார்கள்.

அக்பருக்குத் துணையாக நின்று முகலாய ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்துக்காகப் பாடுபட்ட யாருமே அக்பருக்கு எந்தக் காலத்திலும் பிரச்னை ஏற்படுத்தியது இல்லை. ஆனால் தன் இரத்தத்திலிருந்து உருவானவர்களால் ஒருகட்டத்தில் அக்பருக்குப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்தன.

(தொடரும்)

____________
படம்: பிருந்தாவனத்தில் தான்சென் மற்றும் அக்பருடன் ஹரிதாசர்

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *