1590ஆம் வருடத்தின் இறுதியில் தற்காலிகமாக ஃபதேபூர் சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். சிக்ரிக்குத் திரும்பிய சில வாரங்களிலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த சமயம் அவரது மகன்களுக்கிடையே உரசல்கள் ஆரம்பித்தன.
பகவான் தாஸின் மகளை சலீம் மணமுடித்ததுபோல, அஜீஸ் கொக்காவின் மகளை முராத்தும், அப்துல் ரஹீமின் மகளை தானியலும் மணமுடித்திருந்தனர். இந்தத் திருமண உறவுகள் மூலமாக அவர்களுக்குக் கிடைத்த அதிகாரம், அவர்களுக்குள் இருந்த இடைவெளியை அதிகரித்து பகைமையை வளர்த்தது. இதை அறிந்த அக்பர் இனி மகன்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்தார்.
லாகூர் ஆளுநராக சலீமும், மால்வா ஆளுராக முராத்தும், சில காலம் கழித்து அலகாபாத் ஆளுநராக தானியலும் நியமிக்கப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் தனக்கென ஓர் ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கினார் சலீம். மிர்சா ஹக்கீமின் அமைச்சர்கள் இருவர், ஆப்கானியரான ஷேக் ருக்னுதீன் ரொஹில்லா, நாக்ஷபந்தி சூஃபி துறவிகள் என அக்பருக்குப் பிடிக்காத நபர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டார் சலீம். இதற்கான காரணம் இவர்கள் அனைவருமே சலீமுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தனர்.
சலீமின் நான்கு வயது மகன் குஸ்ரௌவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அபுல் ஃபாசல் பணியமர்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து 1592ஆம் வருடம் சலீமுக்கும் ஜோத் பாய்க்கும் மகன் பிறந்தான். இந்தப் பேரனுக்கு மிர்சா குர்ரம் எனப் பெயரிட்டார் அக்பர். குர்ரமை வளர்க்கும் பொறுப்பு அக்பரின் முதல் மனைவி ருக்கயா பேகத்திடம் வழங்கப்பட்டது. ஒன்பது வயதில் அக்பரைத் திருமணம் செய்துகொண்ட ருக்கயா பேகத்துக்குக் குழந்தை கிடையாது. அவர் குர்ரமைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார்.
முதல் பேரன் குஸ்ரௌவைவிட அக்பருக்குப் பல மடங்கு நெருக்கமானான் குர்ரம். அந்தச் சிறிய வயதில் குர்ரம் வெளிப்படுத்திய பண்புகள் ஒவ்வொன்றும் அக்பரை மகிழ்ச்சி அடைய வைத்தன. குர்ரமை உன்னுடைய மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடவே முடியாது, அவன் தனித்துவமானவன் என்று அடிக்கடி சலீமிடம் சொல்லிக்கொண்டே இருப்பார் அக்பர். தன் மகன் மீது பாசம் காட்டும் அக்பர் தன்னிடம் மட்டும் ஏன் கெடுபிடியாக நடந்துகொள்கிறார் என்பது சலீமுக்குப் புரியவேயில்லை.
தான் சொல்லாமல் சலீமாகவே முன்வந்து பல விஷயங்களை முன்னெடுத்துச் செய்து தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்தார் அக்பர். அதிலும், கொடுத்த வேலைகளைத் தப்பும் தவறுமாகச் செய்த காரணத்தால் ஒன்றிரண்டு முறை பொதுவில் வைத்து சலீமைக் கடுமையாகத் திட்டினார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இடைவெளி உருவாக ஆரம்பித்தது.
குடும்பத்துக்குள், சகோதரர்களுக்கு இடையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் எனக் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் உருவாக ஆரம்பித்தன. சில மாதங்களிலேயே ஃபதேபூர் சிக்ரியில் இருந்து கிளம்பி மீண்டும் லாகூருக்குச் சென்றார் அக்பர். பிறகு அங்கிருந்தபடி அப்துல் ரஹீம் தலைமையில் படையை அனுப்பி சிந்து பகுதியைக் கைப்பற்றச் செய்தார்.
1594ஆம் வருடத்தில் சலீமின் ஏழு வயது மகன் குஸ்ரௌ 5000 வகைமை எண் கொண்ட முகலாய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் அவருக்கான காப்பாளராக மான் சிங் பணியமர்த்தப்பட்டார். சலீமின் மற்றொரு மகன் குர்ரம், முராத்தின் மகன் ருஸ்தம் எனத் தன் மகன்களைவிடப் பேரப்பிள்ளைகளையே அதிகம் விரும்புவதாக அரசவையில் வெளிப்படையாகவே அறிவித்தார் அக்பர்.
1590களின் தொடக்கத்தில் பீகார்-வங்காளப் பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார் மான் சிங். பிறகு அங்கிருந்து ஒரிசாவுக்கு நுழைந்து அதன் ஆப்கானிய ஆட்சியாளர்களை வீழ்த்தி முகலாய அரசுக்கு அடிபணிய வைத்தார். மான் சிங்கின் இந்தத் தொடர் வெற்றிகளால் முகலாய அரசில் அவரது செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
0
1597ஆம் வருடம் அக்பர் அழைப்பின் பெயரில் கோவாவிலிருந்து கிறிஸ்தவப் பாதிரியார்கள் குழு லாகூர் வந்தடைந்தது. ஏப்ரல் மாதம் அவர்களை அழைத்துக்கொண்டு மூத்த மகன் சலீம் சகிதமாக காஷ்மீருக்குப் பயணித்தார் அக்பர்.
ஆப்கான் மலைப்பகுதிகளிலிருந்து கிளம்பி வந்து ஸ்ரீ நகர் ஏரிகளில் தஞ்சமடைந்திருந்த பறவைகள், மல்பெரி மரங்களின் கீழ் வளர்ந்து செழித்திருந்த திராட்சைத் தோட்டங்கள், அறுவடைக்குத் தயாராகியிருந்த கோதுமைப் பயிர்கள் எனத் தாங்கள் பார்த்த ரம்மியமான காட்சிகள் அனைத்தையும் பற்றிக் குறிப்பு எழுதினார்கள் பாதிரியார்கள்.
சில மாதங்கள் அங்கே தங்கிவிட்டு கடும் குளிர்காலம் தொடங்குவதற்கு முன், நவம்பர் மாதம் லாகூருக்குத் திரும்பினார் அக்பர். டிசம்பர் மாதம் லாகூரில் இருந்த கிறிஸ்தவத் தேவாலயத்தில் வெகு விமர்சையாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள் பாதிரியார்கள். கோவாவிலிருந்து லாகூர் வந்ததுமே அக்பரின் ஒப்புதலைப் பெற்று லாகூரில் ஒரு தேவாலயத்தைக் கட்டிக்கொண்டார்கள் பாதிரியார்கள்.
குறுகிய மனப்பான்மையுடன் இருக்காமல், பிற மத குருமார்களுடன் நெருங்கிப் பழகுவதில் அக்பரை ஒத்த மனதுடையவர் சலீம். ஃபதேபூர் சிக்ரிக்கு வந்திருந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஆக்வாவிவாவிடம்தான் சிறுவயதில் கல்வி கற்றார் சலீம். இந்தக் கிறிஸ்தவப் பாதிரியார்களிடம் இருந்து பெற்ற குழந்தை இயேசு, மேரி மாதா ஓவியங்களைப் பொக்கிஷம்போல பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.
முகலாய அரசவைக்கு ஐரோப்பியர்கள் யார் வந்தாலும் சலீமுக்கு எனப் பிரத்தியேகமான கிறிஸ்தவ ஓவியங்களைக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் ஓவியத்தில் தேர்ந்த ஐரோப்பியர்களிடம் இருந்து அவர்களின் ஓவியக்கலையைக் கற்றுக்கொள்வதில் அலாதியான ஆர்வத்துடன் இருந்தார் சலீம்.
அக்பரிடம் பணியாற்றிய தலைசிறந்த ஓவியரான அப்த் அல்-சமத்தின் மகன் முகமது ஷரீஃபுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார் சலீம். இந்த ஷரீஃப், இரண்டு வாள்களைப் பிடித்துக் கொண்டு குதிரை மீது அமர்ந்திருந்த போர்வீரனை ஒரு நெல் மணியில் ஓவியம் தீட்டிய அபாரத் திறமை கொண்டவர். அஃகா ரிஸா, மிர்சா குலாம், முகமது ரிஸா எனப் பாரசீகத்திலிருந்து லாகூருக்கு வந்திருந்த திறமையான ஓவியர்கள் சிலருக்குப் புரவலராக இருந்தார்.
முராத்தும் தானியலும் மால்வா, அலகாபாத் எனத் தூரமான பகுதிகளுக்கு ஆளுநர்களாக அனுப்பப்பட்டதில் சலீமுக்கு பெரிய பங்கிருந்தது. தன் செல்வாக்கால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தந்தைக்கு அருகிலேயே இருந்தார் சலீம். சொல்லப்போனால் தம்பிகளைவிடப் பலவகையிலும் அக்பரைப்போலவே குணங்களைக் கொண்டிருந்தார் சலீம். ஆனாலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஒத்துப்போகவில்லை.
1595ஆம் வருடத்தில் காலை, இரவு எனக் காலநேரம் தெரியாமல் தன்னிலை மறந்து குடிக்கும் அளவுக்கு மதுப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தார் சலீம். ஒருகட்டத்தில் அளவுமீறிச் சென்ற குடிப்பழக்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சலீமுக்குக் கை நடுக்கம் ஏற்பட்டது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தாமதமாக உணர்ந்துகொண்ட சலீம், தலைமை வைத்தியர் ஹக்கீம் ஹூமாமை வரவழைத்தார்.
சலீமைச் சோதித்த ஹக்கீம் இதுபோல அடுத்த 6 மாதங்கள் தொடர்ந்து குடித்தால் அதன்பின் ஏற்படும் விளைவுகளைக் கடவுளால்கூட மாற்ற முடியாது என்று எச்சரித்தார். இதனால் குடிப்பழக்கத்தைக் கைவிட்டுவிட்டு அவ்வப்போது அபினை உட்கொள்ள ஆரம்பித்தார் சலீம்.
0
1347ஆம் வருடம் தொடங்கி மால்வாவுக்குத் தெற்கில் இருந்த தக்காணப் பகுதியை ஆட்சி செய்துவந்தது இஸ்லாமியப் பாமணி ராஜ்ஜியம். 1527ஆம் வருடம் பாமணி ராஜ்ஜியம் உடைந்து அஹமத்நகர், கோல்கொண்டா, பிஜாப்பூர், பெரார், பிடார் எனப் புதிதாக ஐந்து இஸ்லாமிய ராஜ்ஜியங்கள் உருவாகின. இந்த ஐந்து தக்காண ராஜ்ஜியங்களுக்கும், முகலாய சாம்ராஜ்ஜியத்துக்கும் நடுவே இருந்த காந்தேஷ் ராஜ்ஜியத்தை ஃபரூக்கி வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் ராஸா அலி கான் ஆட்சி செய்துவந்தார்.
இந்த ஐந்து தக்காண ராஜ்ஜியங்களில் மிகப்பெரியது அஹமத்நகர் ராஜ்ஜியம். அஹமத்நகரின் அரியணையை முன்வைத்து நடந்துவந்த பங்காளிச் சண்டையில் முகலாய உதவியைப் பெற்று அரியணையைக் கைப்பற்றினார் இரண்டாம் புர்ஹான் நிஜாம் ஷா. ஆனால் அரியணை கிடைத்ததும் அக்பருக்கு அடிபணிய மறுத்தார் அவர். 1595ஆம் வருடம் நடந்த ஒரு போரில் புர்ஹான் ஷா மரணமடைந்ததும், மீண்டும் அஹமத்நகரில் பிரச்னைகள் கிளம்பின.
அஹ்மத்நகர் அரியணையைக் கைப்பற்றப் போட்டியிட்ட ஒரு தரப்பு அக்பரிடம் உதவி கேட்டது. எனவே அப்போது குஜராத்தில் இருந்த முராத்தை அஹ்மத்நகருக்குப் போக உத்தரவிட்டார் அக்பர். இந்தப் படையெடுப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள முராத்துடன் அப்துல் ரஹீமும், காந்தேஷ் சுல்தான் ராஸா அலி கானும் சென்றனர்.
ஆனால் முராத்துக்கும் அப்துல் ரஹீமுக்கும் என்றைக்குமே ஒட்டுதல் இருந்ததில்லை. அப்துல் ரஹீம் முன்பு சலீமின் காப்பாளராக இருந்தவர். தன் தம்பி தானியலுக்குப் பெண் கொடுத்தவர் என்பதால் அவர் மீது முராத்துக்கு என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. இருந்தாலும் தந்தையின் உத்தரவை மீற முடியாது என்பதால் அவருடன் சென்றார் சலீம்.
அஹமத்நகர் படையெடுப்பில் அடுத்தடுத்த நகர்வுகளைச் சீக்கிரமாக மேற்கொள்ள நினைத்தார் முராத். ஆனால் அனுபவஸ்தரான அப்துல் ரஹீம், நிதானத்தைக் கடைபிடிக்கச் சொன்னார். இந்த முரண்பாடுகள் ஒரு வழியாக முடிவுக்குவந்து 1595 டிசம்பரில் அஹமத்நகர் கோட்டையைச் சுற்றி வளைத்தது முகலாயப்படை.
ஆனால் முகலாயப் படைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அஹமத்நகர் படை சுற்றிச் சுழன்றது. அதிலும் போர்க்கவசம் அணிந்துகொண்டு அஹமத்நகர் படைக்கு நடுவே யானை மீது அமர்ந்திருந்த நபர் ஒருவர் நாலாபக்கமும் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார். அவர் மறைந்த அஹமத்நகர் சுல்தான் ஹூசைன் நிஜாம் ஷாவின் மகள் சந்த் பீவி..!
(தொடரும்)
____________
படம்: பிருந்தாவனத்தில் தான்சென் மற்றும் அக்பருடன் ஹரிதாசர்