Skip to content
Home » அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

conquest of gujarat

பாமணி ராஜ்ஜியம் உடைந்து அதில் இருந்து ஐந்து புதிய ராஜ்ஜியங்கள் உருவாகின. அன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்த விஜயநகரப் பேரரசை எதிர்க்க இந்த ஐந்து ராஜ்ஜியங்களும் கூட்டணி அமைத்தன. பொது எதிரியை முன்வைத்து அமைந்த அரசியல் கூட்டணியை உறுதிச் செய்யச் சில திருமணங்கள் நடைபெற்றன.

அப்படித்தான் அஹமத்நகர் சுல்தான் ஹூசைன் நிஜாம் ஷாவின் மகள் சந்த் பீவி, பிஜாப்பூர் சுல்தான் முதலாம் அடில் ஷாவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். சிறு வயது முதல் குதிரை ஏற்றத்தையும் போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் சந்த் பீவி. அடில் ஷா மரணமடைந்ததும் பிஜாப்பூர் அரியணையை முன்வைத்துப் பிரச்னைகள் கிளம்பின.

அப்போது தைரியமாக நின்று துரோகங்களைச் சமாளித்து, அடில் ஷாவின் மகன் இப்ராஹிம் அடில் ஷாவுக்கு அரியணையைப் பெற்றுக் கொடுத்தார். பிறகு தன் பிறந்த வீட்டுக்குத் திரும்பினார் சந்த் பீவி. புகுந்த வீட்டுக்கே அப்படி என்றால் பிறந்த வீட்டுப் பிரச்னையை லேசில் விட்டுவிடுவாரா என்ன? எந்தத் தயக்கமும் இன்றி முகலாயப் படைக்கு எதிராகக் களமிறங்கினார் சந்த் பீவி. கோல்கொண்டா, பிஜாப்பூர் ராஜ்ஜியங்களிடம் உதவி கேட்டனுப்பினார். இந்தத் தைரியத்துக்காகவே சந்த் பீவி, சந்த் சுல்தான் என்று அழைக்கப்பட்டார்.

முகலாயப் படைக்கும், அஹமத்நகர் படைக்கும் இடையே போர் நடந்தது. ஆனால் சந்த் பீவியின் வியூகங்களுக்கு எதிராக முகலாயப் படையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் இரு தரப்பும் சமாதானமாகப்போக முடிவு செய்யப்பட்டது. சந்த் பீவியின் ஆதரவைப் பெற்றிருந்த பகதூர் நிஜாம் ஷாவை முகலாய அரசுக்குக் கட்டுப்பட்ட புதிய அஹமத்நகர் சுல்தானாக அங்கீகரித்தார் முராத்.

லாகூரில் இருந்த அக்பர், விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கொதித்துப்போனார். சமாதானமாகப்போவது என்றால் தோல்விக்குச் சமம் என்று திட்டித்தீர்த்துவிட்டார். இந்த முடிவால் அக்பர் கோபப்படுவார் என்பது முன்பே தெரிந்ததால் முராத் லாகூருக்குத் திரும்பவில்லை. தக்காணப் பகுதியிலேயே இருந்துகொண்டு முழு நேரமும் குடியில் மூழ்கிப்போனார்.

1598ஆம் வருடத்தின் இறுதியில் ஒரு குளிரான இரவு நேரத்தில் படையுடன் லாகூரில் இருந்து கிளம்பிவந்து ஆக்ராவில் முகாமிட்டார் அக்பர். பல முறை தூதனுப்பியும் தக்காணப் பகுதியில் இருந்த முராத் லாகூருக்குத் திரும்பாததால் அவரைக் கூப்பிட்டு வர அபுல் ஃபாசலை அனுப்பினார்.

அஹமத்நகரில் வெற்றி கிடைக்கவில்லை என்பதுடன், தன் ஒன்பது வயது மகன் ருஸ்தம் மரணமடைந்ததும் முராத்தைப் பாதித்தது. தன் கவலைகளை மறக்க உணவே எடுத்துக்கொள்ளாமல், தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தார். தன்னைக் கூட்டிச் செல்ல அபுல் ஃபாசல் வந்துகொண்டிருக்கும் செய்தி முராத்துக்குக் கிடைத்தது. இதனால் முன்பு ஏற்பட்ட அவமானத்தை மறைக்க உடனடியாகப் படையை ஒருங்கிணைத்து அஹமத்நகர் கோட்டையைக் கைப்பற்றக் கிளம்பினார் முராத். ஆனால் பாதி வழியிலேயே தலைச்சுற்றிக் கீழே விழுந்து மரணமடைந்தார்.

முராத் மரணமடைந்த செய்தியை அக்பருக்கு அனுப்பினார் அபுல் ஃபாசல். மகனின் மரணச் செய்தியைக் கேட்டுக் கலங்கிய அக்பர், அதற்குத் துக்கம் அனுஷ்டித்தார். சில நாட்கள் கழித்து, டெல்லியில் இருந்த ஹூமாயூன் கல்லறைத் தோட்டத்தில் தன் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டார் முராத்.

0

இதைத் தொடர்ந்து அஹமத்நகர் படையெடுப்பை மேற்கொள்ள சலீமுக்கு உத்தரவிட்டார் அக்பர். ஆனால் அவரது உத்தரவுகளை சலீம் ஏற்கவில்லை. எனவே பலவித அறிவுரைகள் கூறி அஹமத்நகர் படையெடுப்புக்குத் தானியலை அனுப்பி வைத்தார் அக்பர். மேலும் பாதுஷாவுக்கான கருஞ்சிவப்புக் கூடாரத்தை உபயோகித்துக்கொள்ள அவர் தானியலுக்கு அனுமதி கொடுத்தார்.

தானியலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அடுத்து உடனடியாக அக்பரைச் சந்திக்க அரசவைக்கு வந்தார் சலீம். ஆனால் சலீமின் பொறுப்பற்ற நடத்தையால் ஆத்திரத்தில் இருந்த அக்பர், அவரைச் சந்திக்க மறுத்தார். எனவே பாட்டி ஹமீதா பானுவைச் சந்தித்தார் சலீம். ஹமீதா பானு அக்பரின் மனதைக் கரைத்தார்.

மனமிறங்கிய அக்பர் மேவாருடனான பிரச்னையைக் கவனிக்க சலீமை அஜ்மீருக்குப் போகச் சொன்னார். சரியெனத் தலை ஆட்டிவிட்டு அங்கிருந்து வேறு ஒரு தீர்மானத்துடன் கிளம்பினார் சலீம். மறுபுறம் ஆக்ராவிலிருந்து படையுடன் தக்காணத்துக்குக் கிளம்பிய தானியல் அங்கே செல்லாமல், தயக்கத்துடன் மால்வாவில் முகாமிட்டார்.

இது தானியலுக்கு அக்பர் கொடுத்த முதல் மிகப்பெரும் பொறுப்பு. இதைத் தன்னால் சரியாகச் செய்துமுடிக்க முடியுமா என்ற பதற்றம் தானியலின் தயக்கத்துக்குக் காரணமாக இருந்தது. தானியலின் மனநிலையைப் புரிந்து கொண்ட அக்பர், அவரை உற்சாகப்படுத்த மால்வாவுக்குச் சென்றார்.

அக்பர் அளித்த ஊக்கத்துக்கும் அறிவுரைக்கும் பிறகு, மால்வாவிலிருந்து கிளம்பினார் தானியல். அதே நேரம் முராத்தின் படையை ஒழுங்குபடுத்தி அனைத்துவித முன்னேற்பாடுகளுடன் அஹமத்நகர் கோட்டைக்கு வெளியே தயாராக இருந்தார் அபுல் ஃபாசல். முழு மூச்சுடன் முகலாயப்படை படையெடுத்து வருவது தெரிந்தவுடன் கோல்கொண்டா ராஜ்ஜியமும் பிஜாப்பூர் ராஜ்ஜியமும் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக அறிவித்தன.

இந்தச் சூழ்நிலையில் அஹமத்நகர் கோட்டைக்குள் சந்த் பீவிக்கு எதிராக ஒரு குழு செயல்பட ஆரம்பித்தது. இதைத் தெரிந்துகொண்ட சந்த் பீவி துரோகிகளைச் சந்திப்பதைவிட எதிரியிடம் பேசிப்பார்க்க நினைத்தார். எனவே அபுல் ஃபாசலுக்கு அவர் கடிதம் அனுப்பினார். தன் எதிரிகளை ஃபாசல் பார்த்துக்கொண்டால், நிஜாம் ஷாவை அக்பரிடம் சரணடைய வைப்பதாகக் கடிதத்தில் தெரிவித்திருந்தார் சந்த் பீவீ.

ஆனால் சந்த் பீவி ரகசியமாக அபுல் ஃபாசலுக்குக் கடிதம் அனுப்பிய செய்தி வெளியே கசிந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவரது எதிரிகள், சந்த் பீவி நமக்குத் துரோகம் செய்துவிட்டு முகலாயர்களுடன் கைகோர்த்துவிட்டார் என்று பொது மக்களிடம் தகவலைப் பரப்பினார்கள்.

இதனால் திடீரென்று எங்கிருந்தோ கிளம்பி வந்த கும்பல் ஒன்று சந்த் பீவியைக் கொடூரமாகக் கொலை செய்தது. இது நடந்த பிறகு தானியலும் அபுல் ஃபாசலும் இணைந்து அஹமத்நகர் கோட்டையைத் தாக்கினார்கள். நான்கு மாத முற்றுகைக்குப் பிறகு கோட்டை கைப்பற்றப்பட்டு, அஹமத்நகர் ராஜ்ஜியம் முகலாயச் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டது.

இந்தப் படையெடுப்புக்குப் பிறகு அபுல் ஃபாசல் 5000 வகைமை எண் கொண்ட முகலாய அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். தக்காணத்தில் முகலாயப்படைக்குக் கிடைத்த இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி, வருங்காலத்தில் அக்பரின் வழித்தோன்றல்கள் அங்கே வலுவாகக் காலூன்ற மிக முக்கியக் காரணமாக இருந்தது.

அஹமத்நகர் ராஜ்ஜியத்தின் சுதந்திரம் பறிபோனது கோல்கோண்டா சுல்தான் முகமது குலி குதுப் ஷாவைக் கலங்க வைத்தது. இருந்தாலும் அக்பரின் கவனம் அடுத்ததாகத் தன் மீது திரும்பிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இந்த வெற்றியைப் பாராட்டி அவருக்குக் கடிதம் எழுதினார் குதுப் ஷா.

தக்காணத்தில் அஹமத்நகருக்கு நிகராகப் பலம் பொருந்தியிருந்த கோல்கொண்டாவும், பிஜாப்பூரும் தன் ஆளுமையை ஏற்க வேண்டும் என நினைத்தார் அக்பர். ஆனால் உடனடியாக அதைச் செயல்படுத்த முடியாத வகையில் வேறொரு பிரச்சனை அவருக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்தது.

0

அக்பரைச் சந்தித்த பிறகு அஜ்மீருக்குச் சென்ற சலீம், அங்கிருந்து மேவாருக்குச் செல்லவில்லை. அஜ்மீரில் இருந்தபடித் தன் சகாக்களுடன் இணைந்து குடித்துக் குடித்தே நேரத்தைப் போக்கினார். 30 வயதே ஆகியிருந்தாலும் இந்தக் குடிப்பழக்கத்தால் அவர் இன்னும் வயதானவர்போலத் தெரிந்தார்.

சலீமின் கவலைக்கு அவரது மகன் குஸ்ரௌவும் ஒரு காரணம். ஏனென்றால் 14 வயதான குஸ்ரோவை 10,000 வகைமை எண் கொண்ட முகலாய அதிகாரியாக நியமித்திருந்தார் அக்பர். இந்த உயரிய கௌரவம் அதுவரை வேறு எந்த முகலாய அதிகாரிக்கும் கிடைத்ததில்லை. இதனால் எங்கே தன் மகன் தன் தந்தைக்கு அரசியல் வாரிசாகி விடுவானோ என்று உள்ளுக்குள் புழுங்கினார் சலீம்.

முதல் மகனாக எந்தக் குறையுமில்லாமல் சலீம் பிறந்ததால் தன் வேண்டுதலை நிறைவேற்ற ஆக்ராவில் இருந்து அஜ்மீருக்கு நடந்தே வந்திருக்கிறார் அக்பர். சிறு வயதில் தந்தை அக்பருடன் இதே அஜ்மீருக்குப் பல முறை வந்துள்ளார் சலீம். இன்று அதே அஜ்மீரில் இருந்தபடித் தந்தைக்கு எதிராக நடக்க முடிவெடுத்தார் சலீம். அக்பர் மால்வாவில் இருந்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சலீம், 1600ஆம் வருடத்தின் மத்தியில் ஆக்ராவிலிருந்த முகலாய அரசுக் கஜானாவைக் கைப்பற்ற அஜ்மீரிலிருந்து கிளம்பினார்.

படையுடன் சலீம் வந்துகொண்டிருக்கும் செய்தி கிடைத்ததும் நகருக்கு வெளியே வந்த ஹமீதா பானு அவரைத் தடுத்து நிறுத்திக் கேள்விகளால் துளைத்து எடுத்தார். பாட்டியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் அஜ்மீருக்குத் திரும்பினார் சலீம். ஆனால் சலீமின் மனம் அஜ்மீரில் நிலை கொள்ளவில்லை. எனவே இந்த முறை ஆஜ்மீரிலிருந்து கிளம்பி கிழக்குப் பகுதிக்குச் சென்றார்.

பீகாரிலிருந்த கஜானாவைக் கைப்பற்றிய கையோடு அலகாபாத் கோட்டையில் வைத்து, சலீம் ஷா என்ற பட்டத்துடன் தன்னைச் சுதந்திர ஆட்சியாளராக அவர் அறிவித்துக்கொண்டார். தனக்கென ஓர் அரியணை, அரசவை, அதிகாரிகள் எனத் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். இந்த நேரத்தில் சலீமுக்கு ஆதரவைத் தந்த முக்கியமான நபர்களில் ஒருவர் புந்தேலா ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த வீர் சிங் தேவ்.

அன்றைய புந்தேல்கண்ட் பகுதியில் இருந்த ஒர்ச்சா ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர் மதுகர் ஷா. ஜான்சிக்குத் தெற்கே பேட்வா நதிக்கரையில் அமைந்திருந்தது அவரது ஓர்ச்சா நகரம். இந்த மதுகர் ஷா அக்பரின் ஆரம்பக் காலத்திலேயே அவரது தலைமையை ஏற்றுக்கொண்டவர். 1592ஆம் வருடத்தில் மதுகர் ஷா மரணமடைந்த பிறகு, அவரது மூத்த மகன் ராம் ஷா புதிய மன்னரானார். ஆனால் ராம் ஷாவின் தம்பி வீர் சிங் தேவ் அண்ணனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.

ராம் ஷாவுக்கு அக்பரின் முழு ஆதரவு இருந்ததால், தன்னை வலுப்படுத்திக்கொள்ள சலீமின் ஆதரவைக் கேட்டார் வீர் சிங் தேவ். உடனடியாக வீர் சிங்குக்குத் தன் ஆதரவைத் தெரிவித்த சலீம் அதற்குக் கைமாறாக ஓர் உயிர்ப் பலி கேட்டார். இதனால் அக்பருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு நபரைக் கொலை செய்தார் வீர் சிங்.

(தொடரும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *